Wednesday, February 25, 2009

மனம்

ஆத்மா,உயிர், மனம், மனசாட்சி,எண்ணங்கள் இவைகள் எல்லாம் உடலில் எங்கிருக்கின்றன என்று கேட்டால் விடை தெரியவில்லை;ஆனால் உணர முடிகிறது என்று மட்டும் பதில் சொல்ல முடிகிறது.

இது பற்றி மெய்ஞானமும் விஞ்ஞானமும் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வந்திருக்கின்றன.அவரவருக்குரிய வகையில் பதில்களையும் சொல்லி வந்திருக்கின்றன.அவை முடிவடையா ஆராய்ச்சியாகவே இன்று வரை உள்ளன.கண்டவர் விண்டிலர்:விண்டவரோ கண்டிலர்.

ஆனால்,அதனை இலகுவாக விட்டுச் செல்ல முடியாத வகையில் அது மனிதனின் அக,புற வாழ்வில் கொண்டிருக்கும் பங்கு மிகப் பெரியது.மகிழ்ச்சி,துக்கம்,அன்பு,வெறுப்பு,கோபம் நேசம்,சஞ்சலம்,சோகம்,பாசம்,பூரிப்பு,பெருமை,நின்மதி போன்ற உணர்வுகளின் ஊற்று அங்கிருந்து தான் பிறப்பெடுக்கிறது.அவை விரும்பியோ விரும்பாமலோ மனிதனின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்ததைச் செலுத்துகின்றன.

கவிஞர்களும் அதைப் பற்றி பல விதங்களில் எழுதி வந்திருக்கிறார்கள்.என் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் என் தோழி - கவிஞையாக,சமூக சேவகியாக,பெண்ணின் உரிமைக் குரலாக, பல்கலைக் கழக விரிவுரையாளராக,தாயாக, மனைவியாக எனப் பல்வேறு வாழ்வியல் தளங்களில் இயங்கும் பாமதியின் இது வரை வெளி வராத கவிதை ஒன்று தன் மனதை இவ்வாறு கூறுகிறது.


தேவாங்கு

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.

தலைகீழாகத் தொங்கிக் கொண்டு
ஒரு தேவங்கு போல் அது
உன்னைப் பார்த்துச் சிரிக்கும்
அவர்களைப் பார்த்து வெறுக்கும்
வரையறைகளைத் தாண்டி
தாவித் திரிந்து
மேலும்கீழும் குதிக்கும்.

மெளனமானவர்களை எட்டிப் பார்க்கும்
இரைச்சல் போடுபவர்களைப் பார்த்து
தானும் கூச்சல் போடும்.

அது விரைந்து வரும்
பின்பு உறங்குவது போல்
கண் மூடி இருக்கும்

மறுபடியும் சில நொடிகளில்
எழுந்து தர தரவென அசைந்து போகும்
மொழி மறந்து போனதாய் பாசாங்கு செய்யும்

சோகமாய் அமர்ந்திருந்து
கனத்த மனத்துடன்
கண்ணீரை விழியில் தேக்கி வைக்கும்

தனக்கு உருவம் இல்லை என்று
மயக்கத்தில் இருக்கும்

உயரே உயரே குதித்து
திடீரென நிலத்தில் இறங்கி
குப்புறப் படுத்துக் கிடக்கும்

நான் என்ற ஒன்று
எங்கோ எனக்குள்
புதைந்து கிடக்கிறது.


(விரைவில் வெளிவர இருக்கும் அவரது கவிதைத் தொகுதியில் இருந்து)

நாமும் எம்மைப் பார்க்கத் தொடங்கும் போது பல வியப்பான அம்சங்கள் வெளிவரலாம்.எம்மை நாம் கண்டு கொள்ளும் ஆரம்பப் பாடம் அங்கிருந்து தான் ஆரம்பமாகிறதோ?


நம்முடய உருவத்தை நாம் பிடித்து ஒரு முறை பார்ப்போமா?

அடுத்த பதிவு "நான் என்ற நான்" பற்றி!

Wednesday, February 18, 2009

அனுபவம் ஒரு துளி

துளி ஒன்று


சென்றவார நடுப்பகுதி.அது ஒரு மழைக் கால நள்ளிரவை நெருங்கும் வேளை.வேலை முடித்து வந்து S.B.S தொலைக்காட்சியில் பிறமொழிப் படம் ஒன்றின் யதார்த்தமான கதைஓட்டத்தில் ஒன்றித்திருந்தேன்.வழக்கத்திற்கு மாறாக கைத் தொலைபேசி மெல்லக் குரல் கொடுத்தது.ஓர் அதிர்ச்சியான தகவல்.

எனது சகோதரி முன்னிரவு வேளை வேலை முடித்து வரும் போது ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார் என்பது தான் அந்தத் தகவல்.அவுஸ்திரேலிய செல்வந்தர்கள் வசிக்கும் வட சிட்னியின் பிரமாண்டமான தனியார் வைத்திய சாலையின் எலும்பு முறிவுப் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தாதியாக பல வருடங்கள் கடமையாற்றும் அக்கா அதே எலும்பு முறிவுப் பிரிவில் இப்போது நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தார்.

நள்ளிரவு ரக்ஸி பிடித்து ஆஸ்பத்திரியைச் சென்றடைந்த போது தகதகப்பான ஆஸ்பத்திரியின் பராமரிப்பிலும் முழு அளவிலான அதிர்ச்சியிலும் அவர் இருந்தார்.இருந்த போதும் அந்த வினாடித்துளிக்குள் ஓடிவந்த மக்களின் உதவிக் கரங்களின் இதமான மனிதத்திலும் அதன் மன அழகிலும்,அதன் சுறு சுறுசுறுப்பிலும் 3 நிமிடத்திற்குள் வந்துவிட்ட அம்புலன்ஸின் அதி தீவிரத்திலும் கொடுக்கப்பட்ட நம்பிக்கையிலும் பொலிசாரின் ஆதரவான கை கொடுத்தலிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தார்.

காரினுடய சேதத்தை அளவிட்ட வீதிப் போக்குவரத்து அதிகாரிகளும் பொலிசாரும் காரிற்குள் இருந்த காற்றுப் பையினுடய உதவியையும் அவசியத்தையும் பற்றி விதந்து பேசியதாகப் பின்னர் அறிந்து கொண்டேன்.

மிகுந்த கவனமும் பொறுப்புமுள்ள என் சகோதரிக்கு நடந்த இவ் விபத்தின் பின் தான் "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்பதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொண்டேன்."ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்" என்றும் இதைத்தான் சொன்னார்களோ!

பொதுவாக நான் தான் அவதானம் இன்றி கார் ஓடுவதாக என்னோடு வருபவர்கள் மிகவும் பயம் கொள்வது வழக்கம்.அதிலும் என்னுடயது 1992 ஆம் ஆண்டுக் கார் என்பதில் எனக்கு மகா பெருமை வேறு.எத்தனையோ பேர் எத்தனையோ முறை எத்தனையோ விதத்தில் காரை மாற்றும் படி தன்மையோடும் அக்கறையோடும் உள்ளார்ந்த நேசத்தோடும் அதன் உண்மையான அவசியம் குறித்தும் எனக்குக் கூறி விட்டார்கள்.

யாரும் இவ்வாறு கூறும் போது சினம் கொள்ளத்தக்க அளவுக்கு அதனுடனான என் உறவு இருக்கிறது.எனது முதலாவது கார், ரொக்கமாய்க் காசு கொடுத்து முழுக்க முழுக்க சொந்த விருப்பின் பேரில் வாங்கியது,பிடித்த மொடல்(!?),பின் சீட்டை மடித்து விட்டால் கிடைக்கும் ஒரு நீண்ட இடம்,இதுவரை தானாக பிரச்சினை எதுவும் தராத அதன் இயல்பு,கையிற்கும் அதற்கும் இடையிலான தனித்துவமான ஓர் புரிந்துணர்வு,அதன் லாவகம்.....இப்படிப் அது பிடித்துப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.MS1992 என்பது அதற்கு நான் கொடுத்திருக்கின்ற செல்லப் பெயர்.(நம்புங்கள் 1992ம் ஆண்டு car of the year ஆகத் தெரிவு செய்யப்பட்ட மொடல்.)Toyota seca.

இப்போது எனக்கு முன்னால் இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் AIR BAG இருக்கின்ற கார் ஒன்று நான் வாங்கித்தான் ஆக வேண்டுமா? எட்டு வருடங்களாக என்னை தினம் தினம் காவிச் செல்லும் அதனைப் பிரியவோ எனக்கு மனம் இல்லை. நான் என்ன செய்யட்டும்?

உங்களது முதல் கார் அனுபவங்கள் எப்படி?



தேன் துளி ஒன்று;


சரி, அக்கா வீடு வந்தாயிற்று.மூன்று மாதங்களுக்கு கட்டிலில் தான் வாழ்வு நடத்தியாக வேண்டும்.நான் வேலை செய்கின்ற இடத்தைத் தாண்டி ஏலம் போடுகின்ற இடத்திற்கு காரும் போயாயிற்று.என்னுடய வேலைத்தலத்தில் இருந்து 15 நிமிட நேரத்தில் கார் ஏலம் போடும் இடம் இருந்ததால் காரிற்குள் இருக்கும் சொந்தப் பொருட்களை எடுத்து வருவதற்கு நான் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டேன்.அது தானே நியாயம்!எனக்கு அதில் ஒரு சிரமமும் இருக்கவில்லை.

மூளையைச் சோம்பேறியாக்கும் வழிகாட்டும் இயந்திரங்களில் விருப்பமற்ற நான் வழக்கம் போல் மூளையை இதிலேனும் பாவிக்க எண்ணி வழிகாட்டும் புத்தகத்தின் உதவியோடு இரண்டு வீதிகளைத் தவற விட்டு பின் தேடிக் கண்டுபிடித்து மழை நாளில் குடை எடுத்து வைக்காத என் கவனயீனத்துக்காக மழையைத் திட்டிக்கொண்டு( வழக்கம் போல்! கல்லில் நாம் காலை அடித்து விட்டு கல் அடித்து விட்டது என்று தானே கூறுவது வழக்கம் ) நிறுத்த இடம் கிடைக்காமல் தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு வழமை போல் வேலைக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது அந்த குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்தேன்.

இப்போது நான் சற்று சூடாக ஆரம்பித்திருந்தேன். காரணம் சரியாக வீதிகளைக் கண்டுபிடித்து என் வேலைக்குச் சரியான நேரத்திற்கு நான் போயாக வேண்டும்.வரவேற்பாளினி என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் தொலை பேசியில் ஒன்றித்திருந்தாள்.நேரமோ 15 நிமிடங்களுக்கு மேலாயிற்று.

எனக்குப் பின்னால் 80,85 வயது மதிக்கத்தக்க இரு வயோதிபர்களும் தம்முடய வாகனத்திற்குள் இருக்கின்ற பொருட்களை எடுக்க வந்து எனக்கருகில் காத்திருந்தனர்.மிக நிதானமாகவும் மழைக் குளிருக்கு ஏற்றதான ஆடைகளோடும் ஆளுக்கொரு பெரிய குடைகளோடும் கணவான்களைப் போலவும் அவர்கள் காட்சி தந்தார்கள்.அவர்களுக்குச் சற்று அப்பால் ஒரு வயோதிப மாதும் அவரது மகளைப் போன்ற தோற்றமுடய பெண்மணியும் நின்றிருந்தார்கள்.

நான் வேலைகான கோடைக்கால சீருடையில் மழையில் சற்றே நனைந்து கதிரை ஒன்றில் குடங்கி இருந்தேன்.புன்னகையோ சினேகமோ கொள்ள முடியவில்லை.என்னைச் சுற்றி ஒரு இறுக்கமான போர்வை கவிந்திருந்தது.யாரும் வரக்கானோம். நேரமோ போய்க் கொண்டிருந்தது.என் பொறுமை அதை விட விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. அக்கா முதல் நாளே வருவது பற்றிய விபரத்தையும் நேரத்தினையும் அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்தமையாலும் அவர்களது முகவரி, தொலைபேசி இலக்கங்களைத் தந்திருந்தமையாலும் வரவேற்பறையில் இருந்தபடி குறிப்பிட்ட தொலை பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள உடனே ஒரு இளைஞன் ஓடோடி வந்தான்.

GREEN FORD என்றபடி எனக்கொரு பச்சை நிற பாதுகாப்பங்கியை தந்து விட்டு NAVY BMW என்றபடி அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பங்கியைக் கொடுத்து தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூறி முன் சென்றான்.அவசராவசரமாக நான் பின்தொடர அவர்கள் இருவரும் என் பின்னே வந்தனர்.நீண்ட பாதை வழியே அடிபட்ட வாகனங்கள் இயந்திரத்தால் நசிபடத் தயார் நிலையில் கிட்டத்தட்ட ஒரு மைதான அளவுப் பரப்பில் நின்றிருந்தன.

ஏதோ ஒரு விபரிக்க முடியாத சோகம் - ஒரு மயாணத்திற்குச் சென்றததைப் போல - இறப்பை எதிர் பார்த்துக் காத்திருக்கும் நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றதைப் போல - ஏதோ ஒவ்வொரு வாகனங்களும் என்னைப் பார்த்து அழுவதைப் போல - பாவனையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட அனாதைகளைப் போல -அந்த இடம் சோகத்தைச் சுமந்திருந்தது.ஒவ்வொரு வாகனத்தின் பின்னாலும் சொல்வதற்கு அவலம் நிறைந்த சோகக் கதை ஒன்று இருந்தது.கேட்கத்தான் ஒருவரும் இருக்க வில்லை.இடத்தைச் சென்றடைந்ததும் (இரு வாகனங்களும் ஒரே இடத்தில் தான் நின்றன)காரணம் இன்றிக் கண்ணீர் வந்தது.

மனதை அடக்கிய படி பொருட்களை விரைவாக எடுத்துக் கொண்டு மீண்டுவிட நினைத்தேன்.அடுத்த காரைப் பார்க்க மனசு வரவில்லை.அவர்கள் இருவரும் மிக நிதானமாக கையுறைகளைப் போட்டு தம் பொருட்களை எடுத்து தாம் கொண்டு வந்த சிறு பையிற்குள் போட்டு விட்டு, கையுறைகளைக் களற்றியவாறு நன்றாக சுற்றித் தம் காறை ஒரு நோட்டம் விட்டு என் பக்கக் காரையும் பார்த்தார்கள்.

சினேகமாயும் ஆறுதலாயும் ஒரு புன்னகையை அவர்கள் எனக்குத் தந்த போது, நான் ஒரு நீண்ட கறுப்புப் பைக்குள் பொருட்களை நிறைத்துக் கொண்டிருந்தேன்.பின்னர் அவர்கள் நின்றிருந்த இளைஞனிடம் அவன் அழைத்து வந்த கருணைக்கு நன்றி கூறினார்கள்.பின் நிதானமாக என்னைப் பின் தொடர்ந்தார்கள்.

வெளியே வந்தாயிற்று. நான் என் பாதுகாப்பங்கியைக் களற்றிக் கொடுத்து விட்டுப் போகத் தயாரானேன்.அவ்விரு முதியவரில் ஒருவர் அருகில் நின்ற பெண்மணிகளுக்கு இவ்வாறு சொன்னார்." நாம் போய் பொருட்களை எடுத்து வந்து விட்டோம் நீங்கள் போய் பார்ப்பது அவ்வளவு உசிதம் இல்லை: வாருங்கள் வீட்டுக்குப் போவோம்".தோழமையோடும் ஆதரவோடும் அந்த மூதாட்டியின் தோள்களில் கை போட்டு ஆதரவாக நடத்திய படி குடை பிடித்துச் சென்ற அந்த முதியவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

தேன் துளியாய் ஒரு "வாழ்வு" நடந்து போய்க் கொண்டிருந்தது.

இப்பொழுது மீண்டும் எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

Tuesday, February 10, 2009

அழிவின் விளிம்பில்.....!

உள் நோக்கி ஒரு பார்வை,

இயற்கை ஒரு நியதிக்குட்பட்டு இயங்கி வருகிறதென்பதும்,பிரபஞ்சத்தின் இரகசியம் ஆத்மாவால் கண்டறியப்பட வேண்டியதென்பதும்,இயற்கைத்தாயின் சீற்றத்திற்கு நவீன விஞ்ஞானத்தாலும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் கடந்த காலங்கள் எமக்கு உணர்த்தும் பாடங்கள் ஆகும்.

இந்த கண்ணுக்குப் புலப்படாத நீதியை கடவுள் என்று இந்து மதம் சுட்டும்.எல்லா மதங்களும் அன்பையே விதைக்கின்றன.அவை எல்லாம் நல்வழியையே புகட்டுகின்றன.வாழும் வழிகளை வகுத்துத் தந்தன.எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டென்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.விஞ்ஞானம் முடிவடைகின்ற இடத்தில் மெய்ஞானம் ஆரம்பமாகும் என்பார்கள்.இவற்றை உணரத் தான் எமக்கு நேரம் இருக்கவில்லை.

இன்று நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்கள் இயற்கையோடு நாம் பேணிக்கொள்ள மறுத்த தோழமை இன்மையினதும் புறக்கணிப்பினதும் நேரடிப் பின் விளைவுகளே.விஞ்ஞானம் என்ற பெயரிலும் தொழில் நுட்பம் என்ற பெயரிலும் வாழ்க்கை வசதிகளுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தை நல்ல பண்புகளுக்கு நாம் கொடுக்கத் தவறினோம். அன்பு,இரக்கம்,அகிம்சை,சமத்துவம்,பொதுநோக்கு அழிந்து சுயநலம், ஆணவம் ஆகியவற்றை ஆட்சி செய்ய அனுமதித்தோம்.

அதன் விளைவுகளே இன்றய உள்நாட்டுப் போர்.மனிதனால் மனிதனை மனிதனாக மதிக்க முடியவில்லை.இனத்தால்,மதத்தால்,மொழியால்,பிரதேசத்தால்,நிறத்தால்,அந்தஸ்தால் மனிதர்கள் பிளவு பட்டுப் போயினர்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமன் பாடில்லை,சுயநலமும் ஆதிக்க மனப்பாண்மையும் மனிதத் தலைவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டன.மனச்சாட்சியை மறந்த மனிதன் தனது தேவைக்காக எதுவும் செய்யத் தலைப்பட்டு விட்டான்.

மேலும் நாங்கள்,பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், கணணியை கண்டான் காகிதம் மறந்தான் என்றெல்லாம் பெருமைப் படலாம் தான். கூடவே, ஆயுதம் கண்டான் அழிவுகள் செய்தான்,ஆணவம் கொண்டான் ஆட்களைக் கொன்றான், உண்மைகள் மறந்து அழிந்தே போனான் என்பதினையும் கூடவே சேர்ப்போம்.

சுனாமிக் காலத்தில் பூமி தன் அச்சில் இருந்து .3 அளவு விலகி இருக்கிறது என்று செய்திகள் தெரிவித்த போது, கடலுக்கடியில் பல மைல்கள் நீளத்திற்கு பாரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது என்று கணிப்புகள் தெரிவிக்கப்பட்ட போது,இரண்டு வருடங்களுக்கு முன் 2012ல் உலக அழிவு வர இருக்கிறது என்று ஆவணப் படம் ஒன்றில் சொல்லப் பட்ட போது உதடு மீறாத புன்னகையோடு அவற்றைப் புறக்கணித்தவர்களுக்குள் நானும் ஒருத்தி தான்.

இயற்கையை - அதன் நியதியைக் - கவனிக்க மனிதன் மறுத்து விட்டான்.அதன் இயக்கம்,நிரந்தரமற்ற மனித வாழ்வின் இரகசியம் பற்றி எவருக்கும் அக்கறை இருக்கவில்லை.இயற்கையின் வளங்களை இரக்கமின்றி அழித்தோம்.மரங்களை கொன்றொழித்தோம்.இரசாயணங்களால் காற்றை மாசு படுத்தினோம்,யுத்த தளபாடங்களால் பூமியை நஞ்சாக்கினோம் அற்ப எண்ணை வளங்களைப் பெற அந்நாட்டுக் குடிகளை ஆயிரமாயிரமாய் கொன்று குவித்தது இன்னொரு அரசு.மதம், நிறம், இனம், மொழி, நாடு என்று இறந்த மக்கள் தொகை தான் எத்தனை!

மனிதன் மனிதனைக் கொல்வது போக, இயற்கையின் கோப தாண்டவம் இப்போது ஆரம்பமாகி விட்டது.அதற்குப் பதில் சொல்லும் காலம் நெருங்கி வந்து விட்டது. குண்டு வெடிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புப் போக,கடல் பொங்கி எழுந்து இலட்சோபலட்சம் மக்களைக் கொண்டு சென்றது. சூறாவளி வந்து சூறையாடிச் சென்றது,சென்ற ஆண்டு ஒலிம்பிக்கின் முன் சீனாவில் நிலநடுக்கத்தால் ஆயிரமாயிரம் மக்கள் மாண்டு போயினர்.பெரும் பாலானோர் குழந்தைகள் என்பது தான் அதில் இன்னும் கவலை தரும் செய்தி(ஒரு குழந்தைக் கொள்கையைக் கொண்ட நாடு சீனா).எரிமலைகளோ பொங்கி வழியத் தயாராக இருக்கின்றன.

இப்போது அவுஸ்திரேலியக் கண்டத்திலேயே ஒரு மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு,அதே நாட்களில் அருகிலிருக்கும் அடுத்த மானிலத்தில் வரலாறு இது வரை காணாத வெப்பம்! காடுகள் தீப் பற்றி எரிகின்றன.மனித வலுவையும் நவீன சாதனங்களையும் மீறிக் கட்டுக்கடங்காது பற்றி எரிகிறது தீ.இறந்தோர் எண்ணிக்கை இரண்டு நாட்களில் மட்டும் 174,பாடசாலை ஒன்று முழுவதுமாகத் தீக்குள், பிள்ளைகள் எத்தனை என்பதைக் கண்டறிய முடியவிலை!ஊர் ஒன்று எரிந்து முழுவதுமாக நாசமாகியிருக்கிறது.இன்னும் போக முடியாதவாறு பற்றி எரிகிறது தீ,நவீன தொழில் நுட்பங்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை,எவராலும்.

அடுத்த மாநிலத்தில் வெள்ளத்தோடு வந்த முதளை 5 வயதுக் குழந்தையை முழுதாகச் சாப்பிட்டு விட்டது,வீதிகளில் வள்ளத்தில் போகிறார்கள் மக்கள்.இவ்வாறு அடிக்கடி நடக்கப் போகிறது என்று அறிவுறுத்துகிறது அவுஸ்திரேலிய அரசு.

நாட்டின் தலைவர்கள் தலமைத்துவப் பண்பு, தூர நோக்கு,மக்கள் நலன் என்பவற்றை மறந்து மேலதிக்கம்,விவேகமற்ற தந்திர பரிபாலனம்,அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றுள் ஆட்பட்டுப் போயினர்.முன்நாள் அமெரிக்கத் தலைவர் ஜோஜ்புஷ் உம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிபர் ஜொன்ஹெவேட்டும் பூகோளம் வெப்பமடைதல் பற்றி எந்த வித அக்கறையும் கொள்ளாது தம் விவேகமற்ற வெளி நாட்டுக் கொள்கைகளில் முனைப்போடு இருந்ததை உலகம் அறியும்.

பூகோளம் வெப்பமடைவதால் துருவப் பிரதேசத்துப் பனி உருகி கடல் மட்டம் உயரப் போகிறது என்றொரு செய்தி!

இன்று உலகம் எதிர் கொள்ளும் இன்னொரு சவால் உலகப் பொருளாதாரத்தின் சரிவு!

இப்போது உலகமே ஒரு பிரமாண்டமான அணுகுண்டாக அல்லவா உருமாறி இருக்கிறது.வல்லரசுகள் தயாரித்து வைத்திருக்கும் அணுகுண்டுகள் போதாதா பூகோளம் வெடித்துச் சிதற!

மது, புகை, போதைவஸ்து, எயிட்ஸ்,கான்சர் என அழிவோர் இன்னொருபுறம்.கற்பழிப்பு,கொலை, காணாமல் போவோர்,சிறையில் சித்திரவதைப் படுவோர் என்று ஒரு புறம்.வறுமை,தொற்று நோய்,அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பின்மை இவைகளால் இறப்போர் இன்னொருபக்கம்.

தாயகத்தில் இருந்து வரும் செய்திகளும் உலகின் பாராமுகமும் இஸ்லாமிய தேசத்தில் நடக்கும் போர் அக்கிரமங்களும் இன்னும் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.நாளாந்தம் மக்கள் செத்து மடிகிறார்கள்.கேட்போர் இன்றி மக்கள் நாலு புறமும் சுற்றி வளைக்கப்பட்டு குண்டு மாரி பொழிகிறார்கள்.போதாதென்று கட்டு நாயக்கா விமான நிலயத்தில் தப்பி ஓட நின்ற தமிழ் இளைஞர்கள் இரகசியப் புலனாய்வுப் படையினரால் கைது செய்து கொண்டு போகப் படுகிறார்கள்.சித்திரவதைகளை நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றது.

பாலூட்டி சீராட்டி வளர்த்த எம் பிள்ளைகள்!

அழிவின் விழிம்பில் உலகம்!

Sunday, February 1, 2009

அடையாளம்

ஒவ்வருவரும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் தனித்துவமானவர்கள் என்பதையும் 3-5 வயதுக்குரிய குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நான் யார்

நீ நீதான்
மிகச்சரியாக உன்னைப் போல்
எவருமிலர் இவ்வுலகில்.

இது பற்றி நீ
சிந்தித்ததுண்டா?
நிறம், கண். கூந்தலெனவும்.....
முகவடிவு, மூக்கு, வாயெனவும்....
.........
நீளும் உன் தனித்துவம்.

ஒத்த இரட்டையர் போல் எனவும்
அம்மா, அப்பா போல் எனவும்
சில வேளை நீ இருப்பதுண்டு.

ஆழ்ந்து பார்த்தால் ஆழம் தெரியும்.
வேறு பாட்டின் வகைகள் புரியும்.

உனக்கு மட்டுமேயான பெயர்
உனதேயான குரல்
உனக்கு மட்டுமே உரித்தான
சிந்தனைகள்...யுக்திகள்...
........
பிடித்தவை....பிடிக்காதவை....
எனவும் அவை நீளும்.

நிறங்கள்...ஆடைகள்...
உணவுகள்...சுவாரிசங்கள்...
மேலும் உன் நண்பர்கள்...
எனவும் பெருகும் உன் அடையாளங்கள்.

உன் சிறப்புகள் எனவும்
விரியும் சில...
விளையாட்டு? கணணி?கணக்கு?
ஓவியம்? இசை? கலை?
........
........

மூளையும் ஐம்புலன்களும்
உதவியதால்
உருவானவன் நீ

தனித்துவமானவன்.

உலகின் விஷேஷ ஷிருஷ்டி.

உமா ஷக்தி குழந்தைகள் பற்றிய சிறப்பான ஒரு கட்டுரையை தன் இனையத்தளத்தில் தந்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய மக்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன்.

ஈழத்தின் போர் அவலங்களும், அதன் தொடர்ச்சியாக முத்துக்குமாரனின் தீக்குளிப்பும் தமிழ் மனங்களை மாளாத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்ற தருணம் இது.வலைத்தளங்களும் வானொலிகளும் வெளி நாடுகளும் தொலை பேசிகளும் இன்னும் அதனை உணர்வு பூர்வமாக இயங்கச் செய்து கொண்டிருக்கிறன.தொலை நகல்கள், கடிதங்கள், ஊர்வலங்கல், உண்ணாவிரதங்கள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் என நகர்கிறது நான் உட்பட நம்மவர் வாழ்வு.

நாம் உணர்வு நிலையில் இருந்து அறிவு நிலைக்கு உயர வேண்டிய வேளை இது.உயிரின் மதிப்பு உணரப்பட வேண்டும்.அதன் சிறப்பும் மதிப்பும் நமக்கேனும் தெரிய வேண்டும்.அவர் எவராய் இருந்தாலும் பாதுகாக்கப் படவேண்டும்.இனியும் இப்படி ஒரு உயிரிழப்பு வேண்டாம் எங்களுக்கு.உணர்வுகளையும் அழுத்தங்களையும் வெளிப்படுத்த வேறு வழிகளைச் சிந்திப்போம்.

மரம் என்ற தலைப்பில் ஒரு சின்னக் கவிதை எங்கோ பார்த்தேன்.


மரம்

வெட்டப்பட்ட பிறகே
உணர்த்துகிறது
அதன் இருப்பை.

முத்துக் குமரனின் மரணம் குறித்த நினைவுகளும் கூடவே வருகிறது.கவிதையைப் போல கையாலாகாத நிலை ஒன்றே எஞ்சியுள்ளது எம்மிடமும்.

அவருக்கு இந்த வலைப்பூவின் கண்ணீர் அஞ்சலி.
இனியும் வேண்டாம் இப்படி ஒரு மரணம்.