Saturday, January 30, 2010

கவிதாவின் கவிதைகள்


கென்ற வாரம் கவிதாவின் 'என் எதேன் தோட்டம்' என்ற கவிதை நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்கம் பரிசு வழங்கி இருக்கிறது என்ற செய்தி கிட்டிற்று.தமிழ் நாட்டில் அத்தகைய பரிசு வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்துப் பெண்ணுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவரது கவிதைகள் சிலவற்றை யுகமாயினி சஞ்சிகையில் முன்னர் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.வீரியமான சிந்தனை வீச்சுக்கள் கொண்ட கவிதைகள் அவை.உதாரணத்துக்கு அவரது இரண்டு கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சுயம் இழந்து வாழும் ஒரு பெண்ணைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்.

மூலைகள்

இது எனது வீடு
இந்த வீட்டின்
ஒவ்வொரு மூலையும் என்னுடையவை.
ஒவ்வொரு மூலையும் தனித்துவமானவை.

இதோ
இந்த மூலையில்
இரண்டு பாத்திரம்,நாலு கரண்டி
ஒரு அடுப்பு
எல்லாம் எனது.

எதிர் மூலையில்
எனக்கென்று வாங்கித் தந்த
பெரும் இயந்திரங்கள்
துணிகள் துவைக்கவும்
காயப் போடவும்.

ஒவ்வொரு அறையிலும்
பெரிய அலுமாரிகள்
காய்ந்ததை அடுக்கவென்று.

வலப் பக்கம்
இருக்கும் மூலையில் தான்
படுக்கையறை
படுக்கவும்...
கலைக்கவும்...

பின் விரிக்கவும்!

அதன் இடப்புறமும்
எனது மூலைதான்
ஒரு தொட்டில்
பால் போத்தல்கள்
பொம்மைகள்
அழுக்குத் துணிகள்

டீ.வி
மேசை
இருக்கைகள்.
அதன் மேல் எறியப் பட்ட
பொருட்கள்.

அடுக்கவும் துடைக்கவும்
சாப்பாட்டு மேசை.
தூசி தட்ட பலவித பொருட்கள்.

எல்லாம்
என்னுடையவை தாம்.

என் சுயவாழ்வு தவிர.



அவரது இன்னொரு கவிதை இப்படிப் பேசுகிறது.அக்கவிதையின் தலைப்பு

நான்,எனது மகள்

அவர்கள் இவர்கள் என்று
எல்லோருமாய்
உருவகித்த என்னில்

இப்போதெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறேன்

எங்கேயாவது மிச்சமிருக்கிறதா
நான்?

மிஞ்சிக் கிடக்கும்
என்னில் துளிர்விடும்
மகள்
நாளை தேட மாட்டாள்
அவளை

அவளுக்குரிய வட்டங்கள்
போடப்படும்
அவளது கைகளால்

காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு
அவளுக்குக் கொடுக்கவென்று!

நன்றி; யுகமாயினி இதழ் 17.

வாழ்த்துக்கள் கவிதா!

Monday, January 18, 2010

வைரமுத்துவின் தமிழ் சுவை


பொதுவாக ஒரு புத்தகம் படிக்கின்ற போது அதில் சொல்லப் பட்டிருக்கிற கருத்தில் தான் முழுக் கவனமும் குவிவது வழக்கம்.அதனைச் சொல்லும் மொழியை எழுத்தாளன் எவ்வளவு லாவகமாகக் கையாளுகிறான் என்பது வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தைப் படித்த போது தான் உணர முடிந்தது.பேராசிரியர் சிவத்தம்மியிடம் இருந்த தமிழ் வீச்சு ஒரு விதமான வீரியத்தோடும் கம்பீரத்தோடும் இருக்கும். புதிய சொல்லாக்கங்களைக் கொண்டு வருவதில் அவர் வல்லவர்.அப்போதெல்லாம் அவ்வாறான சொற்களை எழுதி வைத்துக் கொள்வது வழக்கம்.எஸ்.போ ஒரு பன்முகப் பார்வை என்ற புத்தகத்திலும் அவ்வாறான அழகிய சொற்கள் முத்துக்களாய் எங்கும் சிதறிக் கிடந்தன.

அண்மையில் வாசிக்கக் கிடைத்த வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்திலும் அக்கதையை விட அதனைச் சொல்லும் வைரமுத்துவின் தமிழையே அதிகம் ரசித்தேன். ஒரு இதிகாசம் என்பதற்கான சகல தாற்பரியங்களையும் கொண்டிருக்கிறது அது.பெரும் மக்களைக் கொண்ட பூமிப் பரப்பு, பல கதை மாந்தர்,எக்காலத்துக்கும் பொருந்தத் தக்கனவாய் சிதறிக் கிடக்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,வசீகரமான கதைப்பாங்கு,...என ஒரு உலகத்தையே கண்முன் கொண்டு வருகிறார்.

இப்பதிவில் நான் ரசித்த சில வைரமுத்துவின் தமிழ் சுவையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1)மனம் புண்பட ஒருவன் பேசி விட்டுப் போனான் என்பதை,
'உள்காயம் படுகிற மாதிரி அவன் அடித்து விட்டுப் போனான்'

2)பொதுவாக மழை பெய்து விட்டுப் போன பின் வானம் தெளிவாக இருக்கும். அதன் பின் வருகின்ற மஞ்சள் வெய்யில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.ஒருவரின் மனம் தெளிவாக இருந்தது என்பதை சொல்ல வைரமுத்து இவ் உவமையை அழகாகப் பயன் படுத்தி இருக்கிறார்.இயற்கையை உற்று நோக்கி சிலாகிக்கும் ஒருவரால் அச் சொல்லின் தாற்பரியத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.
'மழை அடிந்த வானம் தெளிவாக இருந்தது மாதிரி'என்பது அச் சொல்லடி.

3)ஒரு முதியவர் தளர்ந்து போய் நடந்து போனார் என்பதை
'அவர் தன் உடம்பையும் உசுரையும் கைத் தடிக்கு மாற்றி ஓசை இல்லாமல் ஊர்ந்தார்' என்கிறார்.

4)இன்னொரு இடத்தில்'உள்ளீடில்லாத சட்டை ஒன்று நடந்து போவது மாதிரி'என்று ஒரு உவமை சொல்கிறார்.

5) கற்பனையில் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று சோகிக்கிற தன்மை ஒன்று மனித வர்க்கத்தில் இருக்கிறது.அதனை அவர் 'கற்பனா சோகம்' என்கிறார்.அழகான ஒரு சொற் பிரயோகம்.

6)ஒரு பெண் பிறந்த வீடு வந்து புகுந்த வீட்டு சோகம் சொல்கிறாள். அதற்கு அவர் 'கண்ணீரில் வார்த்தைகளைக் கரைத்தாள்' என்கிறார்.

7) பாமர மக்கள்; கடும் உழைப்பாளிகள். அவர்கள் படுக்கைக்குப் போனால் அயர்ந்து உறங்குவார்கள். அதனை ஒரு வசனத்தில் கூறுகிறார்.'அவர்கள் மூச்சு விடும் பிணங்களாய் தூங்குகிறார்கள்'

8) ஒரு பெண் விதியின் கோரப் பிடிக்குள் அகப் பட்டு நொந்து போகிறாள். அதனை அவர்,'ஆடத் தெரியாத ஒருத்தியின் கையில் அடிக்கடி தவறி விழும் சொட்டாங்கல்லாய் தப்பும் தவறுமாய் அவளை ஆடி விட்டது காலம்'( அது கொக்கான் வெட்டு விளையாட்டு என்பது என் அனுமானம்)

9)ஒருவன் விரசமான வார்த்தைகளைப் பேசினான் என்பதை,'எச்சிலை வார்த்தையில் ஒழுக விட்டு'என்கிறார்.

இப்படி இன்னும் பல இருக்கின்றன சுருக்கம் கருதி இதனை இப்போது நிறுத்துகிறேன்.

*****************************

மேலும் சில மரபுத் தொடர்களையும் ஆங்கங்கே சொல்லிச் செல்கிறார்.

* எப்போதுமே ஞாபகப் படுத்தினால் தான் காயம் வலிக்கும்.

*உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா.

*சில பேர் தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். பல பேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளையே பெறுகிறார்கள்.

*கல்யானம் என்பது இன்னோர் உயிரின், மனசு - உடம்பு - வயிறு மூன்றையும் திருப்தி செய்வது.

*மழைக்கு ஒதுங்கப் போய் கிணற்றுக்குள் விழுந்த கதையாக.

*பிறந்த போது குளிப்பாட்டுவது ஜீவாத்மாக்களுக்குத் தெரிவதில்லை; இறந்த பிறகு குளிப்பாட்டுவது பரமாத்மாக்களுக்குத் தெரிவதில்லை.

*பால் திரையத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரிவதில்லை.

*விளக்குமாறக் கட்டி வைக்கவும் ஒரு கத்தாளை நார் இல்லாமலா போய் விடும்?

*சுடு காட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறக்கச் சத்தம் போட்டு பாடிக்கொண்டு போவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர் குறையை அசை போடுகிறது மனிதக் கூட்டம்.

*ஓட்டையா இருக்கிறதெல்லாம் நாதஸ்வரமாகாது;ஒட்டடையா இருக்கிறதெல்லாம் துணியாகாது.

*பூமியும் காலமும் சுத்திற சுத்தில மனுசக் கூட்டம் எங்கெங்க இடம் மாறி விழுமுன்னு யாருக்கும் தெரியாது.

*வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத் தான்.மழைத் துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் துயரம் துயரம் தான்.

இதனை எழுதிய போது ஒரு பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.

"பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்கு போட உப்பு இல்லை என்பார்க்கும்
முள் குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக் தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே"

*ரெண்டு விதமான சாவு இருக்கு மனுசனுக்கு. ரத்தமும் சதையும் எலும்புமா கிடக்கிற இந்த உடம்புக்கு நேருதே - அது ரெண்டாஞ் சாவு. உடம்பு சாகு முன்னே மனசு செத்துப் போகுது பாருங்க - அது தான் முதல் சாவு.

மனுசன் செத்தாலும் சாகலாம்; மனசு செத்திரக் கூடாது.


வைரமுத்துவின் வைர வரிகள் அவை.

Wednesday, January 13, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்; 14.01.10



இயற்கை தான் மனிதனின் ஆசான்.தன் இருப்பு, அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகம் தோறும் யுகம் தோறும் அது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.புத்தி உள்ளவன் புரிந்து கொள்கிறான்.வலி உள்ளவன் அறிந்து கொள்கிறான்.

மனிதனின் படைப்பென்று பூமியில் ஏதுமில்லை.மனிதன் வெறும் கண்டு பிடிப்பாளனே தவிர படைப்பாளனல்லன்.அப்படிப் பார்த்தால் மொழி ஒன்று தான் மனிதனின் படைப்பு.மொழி கூட ஒலியின் வரி வடிவம் தான்.ஒலி மனிதனின் படைப்பல்ல;கண்டு பிடிப்புத் தான்.

- வைரமுத்து. கள்ளிக் காட்டு இதிகாசம்.-

புதிய நூற்றாண்டின் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்வதாகப் பெருமை கொள்ளும் மானிட சமூகம் இன்று இடம் பெறும் புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு, கடும் வெப்பம், கடும் குளிர்,சுனாமி,காட்டுத் தீ போனற இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்ய முடிந்தது?வரு முன் அறிந்து கொண்டதே தவிர குறைந்த பட்சம் மழை எங்கு பொழிய வேண்டும் என்பதையாவது தீர்மானிக்க முடிந்ததா?மேற்கூறிய இயற்கை அனர்த்தங்களை இல்லாது செய்ய முடிந்ததா?

அதனாலேயே இயற்கையை வழி பட்டது நம் இனம்.இயற்கையே இறைவனானது இந்திய இந்துத் தமிழ் பண்பாட்டில் தான். இந்து மத வேதங்களும் உபநிடதங்களும் அதனை தெய்வீகத்தோடு போற்றுகிறது.
இயற்கையோடும்
நன்றி உணர்வோடும் ஒப்புரவோடும் வாழ்ந்த பண்பாடு சூரியனைக் கொண்டாடியது.

அது தான் தைத் திருநாள்.

தைத்திருநாள் வாழ்த்துக்கள்!