Friday, February 19, 2010

சொற் பிரபஞ்சமும் எழுத்தாளனின் எழுத்தாளுமையும்


எப்போதும் ஒரு புத்தகம் படிக்கும் போது அப் புத்தகம் கொண்டிருக்கிற உள்ளடக்கத்தைக் காட்டிலும் தான் சொல்ல வந்த கருத்தை அவ் எழுத்தாளன் எந்த விதமாகத் தமிழைப் பயன்படுத்திச் சொன்னான் என்பதினை அறிவதில் ஆர்வம் எனக்கதிகம்.வசீகரத் தமிழ் நகைச்சுவைத் தமிழ், செந்தமிழ், இலகு தமிழ், மையக் கருத்தைச் சுற்றி சுற்றி வரும் தமிழ், நேரடியாக எந்த வித அலங்காரங்களுமற்று விடயத்துக்கு வரும் தமிழ்,அலங்கார வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும் தமிழ் ... என அவை எழுத்தாளருக்கு எழுத்தாளர் கைகளுக்கு ஏற்ப வேறு படும்.

இது விடயத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோட நாசுக்காக எழுதும் அ. முத்துலிங்கம் எனக்கு மிகப் பிடித்தமான ஓர் எழுத்தாளர்.மிக இயல்பாக பேசுவது போல எழுத வல்லவர் அவர்.புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்து தமிழுக்கு வளம் சேர்ப்பதில் பேராசிரியர் கா. சிவத் தம்பி வல்லவர்.மொழி விளையாடிச் செல்லும், வசப் படும் அவருக்கு.கிடுகு வேலிப் பாரம்பரியம்,வரலாற்றுப் பின் புலம்,போன்றவை இப்போதும் மனதில் நிற்பவை.பண்டித மணி. கணபதிப் பிள்ளை அவர்களின் எழுத்துப் பாங்கு வசீகரமாய் விளங்கும்.அவரது தமிழ் தேனில் நனைத்தெடுத்த இனிப்புப் பண்டம் போல விளங்கும்.மிக சுவை மிக்கது.சாரமும் கொண்டது.தமிழின் தித்திப்பை கையால் குழைத்துத் தீத்தும் கரம் அவரது.அனுபவத்தாலும் அறிவாலும் வயது மிக முதிர்ந்த ஒருவர் ஆதரவோடு ஒரு சிறு குழந்தையை வாழ்க்கைப் பயணம் நெடுகிலும் அழைத்துச் செல்வது போலிருக்கும் அவரது தமிழ்.

அழகான சொற்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்தது எனக்கு.சிவத்தம்பி அவர்கள் பாடம் நடத்தும் போது பாடத்தை விட்டு விட்டு சொற்களால் என் கொப்பியின் கடசிப் பக்கங்கள் நிரம்பும். அவை எல்லாம் புலப் பெயர்வோடு கைநழுவிப் போய் விட்டன என்றாலும் வைரமுத்துவின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கிய பின் மீண்டும் எழுத்தாளர்களின் மொழியாளுமை பற்றிய தேடல் ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது.அதன் பின் எப்போதோ அவவப்போது ஆங்காங்கே எழுதி வைத்த சொல் துண்டங்கள் எங்கே எனத் தேடி காணாமல் அலுத்திருந்த ஒரு பொழுதில் தற்செயலாகக் கிட்டிய கொப்பித் துண்டொன்றின் கடசிப் பக்கத்தில் எழுதப் பட்டிருந்த சில 'சூரியத் துண்டுகளை' ஒரு பதிவாக இங்கிடலாம் என்ற எண்ணத்தின் விளவு இது.

(எங்கு பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை)வண்னக் குஞ்சரம் கட்டிய தூரிகைக்கு தலைப் பாகை கட்டிய என் பேனாவின் வணக்கம்.

'தேவதைகள் செல்ல அஞ்சும் இடங்களுக்கெல்லாம்' உல்லாச யாத்திரை போக எஸ்போ அஞ்சுவதில்லை.(எஸ்போவின் எழுத்துப்பற்றி இ.பா)

இது ஒரு ரொமாண்டிக் கவிஞனின் சூரிய நமஸ்காரம்.(யாரோ ஒருவரது கவிதைக்கு எழுதப் பட்டிருந்த விமர்சனம்)

இலக்கிய ரசனை என்பது மொழியைத் தாண்டி உள் மனத்து அழகுணர்ச்சியின் அடையாளம்.கவிதை சொல் தீட்டும் ஓவியம்.உள் மனப் பயணம்.

சொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டியிருக்க வேண்டும்.பேனா முனையில் உறங்காது அவர் கண்கள் உட்கார்ந்திருக்கின்றன.

கட்டித்த தமிழ் / வித்துவ ஆரவாரம் / பாமர பவ்வியம் / தமிழ் நடை வல்லபம் / நியாயப் பிரழ்வு.

தோற்றோர் தம் தமிழ் அரிப்புகளுக்கு வடிகாலாக விமர்சனத்தைக் கொள்ளுதல்

விண்ணாணம்

இலக்கிய வித்துவ சேஷ்டைகள்

விண்ணாணம்/ வித்துவச் சாடல் / அவக்கேடு/ உண்மையின் தரிசனம்

ரொய்லட் பேப்பர் கலாசாரம்

இலக்கிய சல்லாபம்

அம்பையின் எழுத்தாளுமை ( எஸ்போவைப் பற்றியது)'அவர் எழுதிய எல்லாவற்றையும் அவற்றின் முன்னுரை,இடையுரை,பின்னுரை,புகழுரை,நுழைவாயில்,முன்னீடு, கோபுரவாசல்,திருக்கடைக் காப்பு,ஆச்சரியக் குறி,கேள்விக்குறி,இவற்றுடன் படிக்க முடிந்தது.'வளரிளமைப் பருவ அறிவற்ற அபிநயப் போக்கு, சாணக்கிய சாதனை,பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்து விடும் மரபுடைப்பு

(இந்திரன் என்பவர் எழுதியது)ஏராளமான நீதி விசாரணைகளும் தீர்ப்புகளும் நிரம்பிய இந்த சமூகத்தை விட்டகன்று குளிர்ந்த கல்லறைகளும் வேப்பமர நிழலின் காற்றும் அமைதியில் மனித வாழ்வின் அநித்தியத்தைப் பாடும் குயில்களும் நிரம்பிய சுடுகாட்டில் அமரும் போது தான் நாம் வாழ்வதின் அர்த்தம் என்ன? நல்லதும் கெட்டதுக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் என்ன? நாம் சவாலை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை காணலாம்.


உயிர் பெருக்குஅவனவன் ஆற்றலோடு அவனவன் நிமிர்வு.


அடுத்த பதிவில் சொல் பிரபஞ்சம் பற்றிய பதிவு தொடரும்....

4 comments:

  1. நேர‌ம் கிடைக்கும்பொழுது
    நீங்கள் சேரித்த சொற்களை
    எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

    நானும் இதே சாதியைச் சேர்ந்தவன்

    அன்புட‌ன்
    திக‌ழ்

    ReplyDelete
  2. தங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
    எழுத்துப் பிழைகளையும், இடைவெளிகளையும் செப்பனிடுக.
    தாங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எனக்கும் பிடித்தவர்கள்தான்.(வைரமுத்து தவிர)

    என் பதின்ம காலங்களில்...அம்பை, இ.பா, எஸ்.பொ, அ.மு
    என் இதயமூலைகளைத் துழாவியிருக்கிறார்கள்.

    அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை.
    இ.பா வின் மழை
    அ.மு வின் அக்கா.(இவை போதுமே உதாரணத்திற்கு)

    ஒன்றும் பெரிதாகப் படைக்காமல்..மற்றையோரை விமர்சிப்பது நியாயமில்லை ஆதலால்..நிறுத்துகிறேன்.

    வாசகனாய் வாழ்வதிலும் மகத்துவம் உண்டென்பதை உணர்கிறேன்.

    என்ன செய்வது தோழி ?
    நாட்டின் நிலை ...என்னை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியிருக்கிறது.

    எழுவேன்.
    பின்னர்
    எழுதுவேன்.
    அதுவரை,,வாசிப்பே என்னுலகம்.
    நன்றி.

    ReplyDelete
  3. நன்றி திகழ்.மகிழ்ச்சியும் கூடவே.நலமாக இருக்கிறீர்களா? அடிக்கடி வந்து போகக் கூடாதா?

    ReplyDelete
  4. நலமா சூர்யா? உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.எங்கு போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்?

    நீங்கள் சொன்ன விடயங்களைக் கவனத்தில் கொள்கிறேன்.வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம் வாசித்துப் பாருங்கள் சூர்யா.உங்களுக்குப் பிடிக்கும்.

    அம்பையின் 'என் வீட்டு மூலையில் ஒரு சமையலறை' மிக அருமையானதொரு சிறுகதை.'புது உலகம் எமை நோக்கி' என்ற ஒரு புத்தகத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் வாசித்த அனுபவம் அது.மிக அருமையானதொன்று.

    அ. முத்து லிங்கத்தின் கொம்புளானா, அடைப்புகள் சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள்.இரண்டும் இரண்டு விதமான அனுபவங்களைப் பேசுகிறது.அருமையான சிறுகதைகள்.

    ஓம். படைப்பாளன் 'உணவைப்' படைப்பவன். வாசகன் படைத்த உணவை உண்பவன்.அதனால் வாசகனாய் இருப்பதில் ஒரு சுகம். அனுபவிப்பவன் அவனே! இல்லையா?

    'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள; தோல்வி என்பது கற்றுக் கொள்ள!பாடங்களைப் பெற்றுக் கொண்டு நகர்வோம்.

    அடிக்கடி வாருங்கள் சூர்யா.

    ReplyDelete