Sunday, December 18, 2011

ஈழத்தமிழர் முதுசங்கள் - 2 - வானொலிகளின் வரலாறு

இலங்கை வானொலிக்கு அதிலும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்சேவை 2, மற்றும் வர்த்தக சேவைகளின் ஒலிபரப்புக்கு ஒரு சுவை மிகுந்த வரலாறு இருக்கிறது.தமிழின் உச்சரிப்புச் சுத்தமும் ஒலித் துல்லியமும் அனேகத் தமிழரை அதனோடு கட்டிப் போட்டிருந்தது.

அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.

அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும்  மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....

அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம்,

’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.

அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள், கோமாளிகள் என்றொரு ந கைச்சுவை நாடகம்( அதில் மரிக்காராக ராமதாஸ், அப்புக்குட்டியாக ராஜகோபால்,............செல்வசேகரன்,போன்றவர்கள் பங்கேற்றிருந்தார்கள். மூன்று இனத்தவரையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருந்த அந் நாடகம் அவர்களின் பேச்சு வழக்கையும் வாழ்க்கை முறையையும் நகைச்சுவையூடாக சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.)

இவை போன்றவை எல்லாம் நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்எபத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,
..............
...............
மனையிலே மக்கள் குறைவிலா கல்வி
மான்களாய் வளர வழியெதென்கிறாய்.

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழி புரிவான் கண்ணே!
...............
..................

சிறு தொகை தானே சேமிக்கின்றோம்
செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்
கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழிபுரிவான் கண்ணே!

பாடல் நினைவிருக்கிறதா?

இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........

இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!

அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.

இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.



வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.





அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.



இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் பூவேலைப்பாடுகள் செய்த விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.


இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.





இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.



என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.









அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.






கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.

























வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.

அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.





பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.



இனி வரும் காலங்களில் அவை எப்படியான வடிவங்களை எடுக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.

மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பிற் குறிப்பு;
ஈழத்து வழக்கில் முதுசம் என்பது ஆண் சந்ததி வழியாக கிடைக்கிற பரம்பரைச் சொத்து. சீதனம் என்பது பெண்வழியாகக் கிடைக்கிற பரம்பரைச் சொத்து.

படங்கள்; நன்றி; கூகுள்

Sunday, December 11, 2011

ஈழத்தமிழர் முதுசங்கள் - 1 - பாவனைப் பொருட்கள்.




அண்மையில் மாதேவி என்பவரின் வலைப் பூவுக்குப் போகக் கிட்டிற்று.மிக அரிதாகிக் கொண்டு போகும் ஈழத்தவரின் பாரம்பரியப் பொருட்களை கரிசனையோடு புகைப்படம் எடுத்து தன் வலைப்பூவில் பிரசுரித்திருந்தார்.

(http://maathevi.wordpress.com/)நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.

குறிப்பாக ஈழத்தில் போர் ஓய்ந்த பின் அங்கிருந்து வரும் செய்திகள் மகிழ்வூட்டுவனவாக இல்லை. அப்படியாக இருக்கின்ற போது இதனைப்போன்ற தகவல் சேகரிப்புகள் எதிர்கால சந்ததிக்கு மிகத் தேவையானவை.அது ஒரு காலத்தின் கட்டாயமுமாகும்.

என் சொந்தப் பாவனைக்கும் அது மிக உதவியாக இருக்கும் என்பதால் ஒரு சேகரிப்பு முயற்சியாகவும் இங்கே இவற்றை மீள பதிவு செய்து கொள்கிறேன்.


மிக்க நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.
இதனை அரிசி கிளையப் பயன்படுத்தியது ஒரு காலம்.அரிசிக்குள் இருக்கும் கற்களைக் களைய இது பயன் பட்டது.அரிசியைத் தண்னீர் ஊற்றிக் கழுவிய பின் ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக இதனை ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.

இப்போது கல்லில்லா அரிசியும் Rice cooker உம் வந்தபின் இதன் பயன்பாடு அருகி வருகிறது.



இது திரிகை.
தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.
இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?



கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.
தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.


உரல்!
மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.

இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.



அடுப்பு!
பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல்.
இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி!
பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்!
களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!



காம்புச் சத்தகம்!
இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்!
வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்!
சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை!
இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!
வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.தேநீர் கோப்பி போன்றவை ஊற்ரிவைக்கப் பயன் பட்டதாக அவரது குறிப்புச் சொல்கிறது.



இதுக்குப் பேர் விசிறி.
பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இவ்வாறு நன்னாரி வேர் மற்றும் மயில் இறகுகளாலான விசிறிகளும் வழக்கில் இருந்தன.

இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?




விசேட நன்றி;மாதேவி.

(http://maathevi.wordpress.com/)

Saturday, December 3, 2011

திவ்ய தேசம்


அது SWITZERLAND.

அந்த ஊரைப் பார்த்து வந்ததில் இருந்து அந்த அனுபவத்தை எழுத்தில் வடிக்கும் பிரயத்தனம் எதுவும் பலன் தரவில்லை.

அழகு,செழிப்பு,மலைகள்,ஏரி,பசுமை,மக்கள்,பொருட்கள்,வீடுகள்......

இது பற்றி எதுவும் நான் சொல்லப் போவதில்லை.அவை எழுத்துக்கும் புகைப்படக் கருவிக்கும் அகப்படாதவை.

ஆனால் அங்கத்திய கல்வி முறை பற்றி சொல்ல ஆவல்.

அது ஒரு கிராமத்துப் பாடசாலை.அங்கு கல்வி ஐந்தாம் வகுப்பு வரை.அப்போ மேலே படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு அவர்கள் 3மைல் சைக்கிள் ஓடி அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டும்.

இந்தப் பாடசாலையில் எத்தனை பிள்ளைகள் என்று நினைக்கிறீர்கள்? ஐந்து வகுப்பையும் சேர்த்து மொத்தம் 47 பிள்ளைகள். ஒரு அற்புத அழகு வாய்ந்த பெரிய மணிக்கூட்டை முகப்பில் கொண்ட கட்டிடம்.ஒரே ஒரு கட்டிடம்.ஒரு ஆசிரியர்.ஒரு நாய்,மேலும் ஒரு கிராமக் குழு. இவ்வளவும் தான் அந்தப் பாடசாலையின் சொத்து.

பாடசாலை இரண்டு நேரம். மதியம் எல்லா மாணவர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று மதிய போசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாடசாலைக்குச் செல்வர்.ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒவ்வொரு நேரம் பாடசாலை முடிவடையும். சீருடை எதுவுமில்லா சுதந்திரம்.

எல்லா மாணவர்களுக்கும் எல்லாப் பெற்றோரையும் அவர் தம் வீடுகளையும் நன்றாகத் தெரியும்.பாடசாலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்குச் செல்லும் போதும் தாம் நடந்து பாடசாலை விட்டு போகும் போதும் தாம் நடந்து போகும் பாதையோரம் இருக்கிற நண்பர் குடும்பத்தோடு கைகாட்டிய படியும் புன்னகைத்த படியும் டொச் மொழியில் வாழ்த்துக்களைப் பரிமாறிய படியும் போகும் இளம் குருத்துக்கள்!! அவர் தம் முகங்களில் தான் எத்தனை முக மலர்ச்சி, செழிப்பு,மகிழ்ச்சி!!

துன்பங்களின்,மனித விகாரங்களின் வாசனையே அறியா அழகுகள்!

அது ஒரு விவசாயக் கிராமமும் கூட!இயற்கையான நீரோடைகளும் சோளக் கொல்லைகளும் விளையாட்டு மைதானங்களும் மேச்சல் நிலங்களும், முயல், பன்றி,ஆடு முக்கியமாக மாட்டுப் பண்ணைகளும் நிறைவாக உள்ள தேசம்.பிரதேசம்.இதனைச் சுற்றி பாதுகாத்தபடி நீல மலைத் தொடர்கள்.

கிராமங்கள் தான் எத்தனை அழகு!! இன்னும் மாசு படா வசீகரம்,ரம்மியமாய் வீசும் தென்றல்,சுடாத சூரியன்,பச்சை புல் வெளி,வித விதமான உயிரினங்கள் அவரவர் சுதந்திரத்தோடு,தான் தோன்றியாய் வீதியோரம் பழமரங்கள்,அழகழகாய் பராமரிக்கப் படும் வீடுகளுக்குள் தேசவாழ்வு தந்த நிறைவோடு சினேகமாய் வாழ்ந்த பூரணத்தோடு புன்னகைக்கும் வயோதிப புன்னகைகள்,புத்துணர்ச்சியோடு புன்னகைக்கும் வெள்ளைக் குழந்தைகள்,.....

இயற்கை அன்னை தன் முழு எழிலையும் ஒரு வித கம்பீரத்தோடு வெளிப்படுத்திய இடம் இது.




பொழுது சாயும் நேரங்கள் பிள்ளைகளை இந்த இடமெங்கும் காணலாம்.வயோதிபர் தம்பதி சமேதரராய் நாய்களோடு உலாவருவர்.அப்போதுகளில் அவர்கள் பரிசளிக்கும் வயோதிபரின் நிறைவான harmonious புன் முறுவல் கோடி பெறும்!!அவர்களின் வீடுகள் பூங்கன்றுகளால் பொலிந்திருக்கும்.குழந்தைகள் ஓடிச் சென்று கொஞ்சிக் குலாவுவர்.முயல்களுக்கு புல் பறித்துக் கொடுப்பர்.ஆடுகளின் செவிகளைச் சற்றே நீவி விடுவர்.ஓடைகளில் குதித்து கும்மாளமிடுவர்.
இதற்கெல்லாம் அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.

வஞ்சனை வாழ்க்கையின் வலிகள் எதுவுமற்ற உள்ளங்களின் குதூகலம்!!

நான் போயிருந்த நேரம் போகிற பாதைகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அப்பிள் மரங்களில் கொள்ளை கொள்ளையாய் பழங்கள்.செழித்த பச்சை இலை மரங்களுக்குள் சிவப்பு சிவப்பு பழங்கள்.மேலும் சில பச்சைப் பழங்கள்.பழுத்தும் கொட்டியும் பிஞ்டசும் பூவுமாய் ...அவை எக்கச்சக்கம்! அதனைச் சீண்டுவாரோ தேடுவாரோ இல்லை என்பது தான் என் ஒரே மன ஆதங்கம்.

பாடசாலையைப் பற்றிச் சொல்ல வந்து எங்கோ போய் விட்டேன்.அங்கு கற்கும் ஒவ்வொரு மேல் வகுப்பு (4,5ம்வகுப்பு) மாணவர்களுக்கும் கீழ்வகுப்பு மாணவர்களில் ஒருவரையோ இருவரையோ கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரால் வழங்கப் பட்டிருக்கும்.பொறுப்பு என்றால் அந்தச் சிறு வகுப்பு குழந்தைகள் தமக்கிடையே பிணக்குப் பட்டு நீதி தேவைப் பட்டால் அல்லது தம் தனிப்பட்ட பிரச்சினைகள் என்றால் விளையாட்டில் ஏதேனும் சண்டை நேர்ந்தால், படிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் ஆசிரியரிடம் போகத் தேவையில்லை. அவர்கள் தம் குறிப்பிட்ட சீனிய மாணவரிடம் சென்று தம் தேவைகளைச் சொல்லி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியிலும் இந்த நிலைமை அமுலில் இருக்கும்.அதாவது வெளியில் என்று சொல்லும் போது பொது அரங்க வெளிகளின் போது ஏனைய பாடசாலைகளோடு போட்டிக்குச் செல்லும் போது, மேலும் பாடசாலையால் விடுமுறை முகாம்களுக்குச் செல்லும் போது இது நடைமுறையில் இருக்கும்.

பாடசாலைக்கு ஒரு நாய் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதன் பெயர் லில்லி. பெண் பால் உயிரினம்.ஆசிரியர் வரும் போது அவவும் பாடசாலைக்கு வருவா. வகுபறை வாசல் புறம் காவல் இருப்பா.மாணவர்களோடு செல்லம் கொஞ்சுவா.அவவுக்கு உணவூட்ட மானவர்கள் தம் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் செல்வதும் அவ்வாறே!உணவு ஆசிரியருடய பொறுப்பு.

பாடசாலை முடிந்ததும் லில்லி தன் பாடசாலை உபாத்தியாயரோடு அவர் வீட்டுக்குச் செல்லும்.அவர் தான் அவவின் எஜமானன். விடுமுறை நாட்களில் லில்லியை தம் வீடுகளுக்குக் அழைத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு ஒரு பெரிய காத்திருப்புப் பட்டியல் உண்டு.அத்தனை பேருக்கும் அதில் அத்தனை ப்ரியம்.

அப்போ கல்வி, கற்பித்தல் எப்படி என்ற ஒரு வினா எழலாம்.அது இன்னொரு விதமான அழகு என்றே கூறலாம். தீவிர கல்வி முறை அங்கு நடைமுறையில் இல்லை. விளையாட்டு, கைவினை, மொழி, கணிதம்,கலை, பாடல்,இசைவாத்திய அறிமுகங்கள், முகாம்களுக்குச் சென்று தன் பாட்டில் சுயமாக வாழும் வழி வகைகளின் அறிமுகம், மனையியல்,அழகியல்,சமையல்,என இரு பாலாரும் கற்கவேண்டிய பாடத் திட்டங்களே அமுலில் உள்ளன.

தவணையில் ஒரு நாள் ஊர் சுத்தம் ஒரு பாடம். அதற்கு அவர்களுக்கு பாடசாலையில் ஒரு வாரம் பயிற்றுவித்தல் நடக்கும். பயிற்றுவித்தல் என்றால் வகுப்பு ரீதியாக மாணவர் குழுக்கள் பிரிக்கப் பட்டு அவரவர் பொறுப்புகள் அவ் அவவ் குழுக்களிடம் ஒப்புவிக்கப் படும்.ஒவ்வொரு கிராமத்து வீதியும் ஒவ்வொரு குழுக்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்.அவர்கள் அவ்வீதியில் இருக்கும் வீட்டுக் காரருக்கு கடிதங்கள் எழுதி - அதாவது இந்ந நாள் இந்ந திகதி இந்ந நேரத்துக்கும் இந்ந நேரத்துக்கும் இடையில் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். உங்கள் வீட்டில் தேவையற்ற பத்திரிகைகள், புத்தகங்கள் இருந்தால் அவற்றைக் கட்டி இந்ந திகதி உங்கள் வீட்டுக்கு வெளியே வைத்து விடுங்கள்.பாடசாலை மாணவர்களாகிய நாம் வந்து அவற்றை எடுத்துச் சென்று போட வேண்டிய பெரும் கழிவுக் கொள்கலனுக்குள் போட்டு விடுகிறோம் என்று எழுதப் பட்டிருக்கும்.

சொன்னவாறு அன்றைய திகதி அவர்கள் பாடசாலைக்குச் சென்று தம் குழுக்களோடு இணைந்து
அவர்கள் செல்லும் வீதியோரத்துக் குப்பைகளையும் மக்கள் வீடுகளின் வெளியே கட்டி வைத்திருக்கும் குப்பைகளையும் அகற்றுதல் தான் அன்றய நாள் பாடம். மாணவர்கள் மிக ஆர்வமாக இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.

வாழும் கலை,சகல உயிர்களையும் மதிக்கும் கலை,சமூகப் பொறுப்புணர்வு ஊட்டப் படும் முறை,சுத்தமான சூழலின் அவசியம்,நிறைய ஆர்வமூட்டும் இசை,பாடல், ஆடல், விளையாட்டுக்களும் கூடவே கொஞ்சமாய் பாடமும் - இது தான் அவர்கள் பாடசாலையில் கற்கும் கல்வி!

Isn't that nice?

பாலும் சொக்கிளேற்றும் மணிக்கூட்டோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பணக்கார நாடு!வளத்துக்கு குறைவேது அங்கு!!அதனால் தான் இத்தகைய கற்பித்தல் முறை போலும்!

அன்று தவணை ஒன்றின் முடிவு நாள்.மாலை நேரம்.அன்று பாடசாலையின் ஒன்று கூடல் நாளும் ஆகும்.பாட்டன் பாட்டி,பேரன் பேர்த்தி,குழந்தைகள்,பராமரிப்பாளர்கள், பரிசாரகர்கள்,அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள், காதல காதலியர், பழைய மாணவர் ... என்று ஒரே கூட்டம்.அந்தக் கிராமமே அங்கு திரண்டிருந்தது.

ஒரு பாடல் குழுவினரையும் அழைத்திருந்தார்கள்.அதனாலோ என்னவோ அது ஒரு கிராமக் கொண்டாட்டமாகவும் பரிமளித்திருந்தது.இம் மக்களுடய கொண்டாட்டம் என்பது இந்தப் பாடசாலையின் கொண்டாட்டம் தான்.எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் உறவாய் இருந்தனர்.மிக சரியான நேரத்துக்கு 5 நிமிடம் முன்னதாக எல்லோரும் அவரவர் இருக்கைகளில் வந்தமர பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

பல நிகழ்ச்சிகள் டொச்சில் நடந்தேறின. மக்கள் மிகப் பெரும் பாராட்டுக்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வழங்கிச் சிறப்பித்தனர்.இறுதியாக சீனிய மாணவர்களின் பாடல்.சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே.... என்ற ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடல் ஒன்றுண்டல்லவா? நினைவிருக்கிறதா? அந்தப் பாடலை ஆங்கிலத்திலும் டொச்சிலும் இம் மேல் வகுப்பு மாணவர்கள் தம் சொந்த இசை வாத்தியங்களோடு பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.



இது பிரபல மர்மப் பட மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்ஹாக் என்பவரின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாடல்

When I was just a little girl
I asked my mother what will I be
Will I be pretty will I be rich
Here's what she said to me

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows day after day
Here's what my sweetheart said

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be

Now I have children of my own
They ask their mother what will I be
Will I be handsome will I be rich
I tell them tenderly

Que Sera Sera
Whatever will be will be
The future's not ours to see
Que Sera Sera
What will be will be
Que Sera Sera
Category:
Music
Tags:
Doris Day Que Sera
License:
Standard YouTube License

கிராமம் ஒரு தாயாய் பெருமை கொண்டது!மக்கள் சொக்கிப் போயிருந்தனர்.பின்னர் எழுந்து நின்று கொடுத்த கரகோஷத்தோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் கூட்ட நெரிசலுக்குள் அப் பிள்ளைகள் துள்ளிக் குதித்தோடி தம் பாட்டிமார்களையும் தாத்தாமார்களையும் கண்டடைந்து கட்டி அணைத்துக் கொண்டது தான் இன்னும் மன நிறைவான காட்சியாகக் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது.

இனி எப்போதேனும் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தால் இந்தக் கிராமம், இந்தப் பாடசாலை, இந்த மானவர்கள் மேலும் மிக முக்கியமாக எழில் நிலாவைப் போல தோற்றம் தரும்,கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் முக மலர்ச்சியோடு ஆங்கில டொச் வடிவங்களில் ஆர்வத்தோடு உடனடியாகப் பாடிக்காட்டிய திவ்ய தேசத்தில் விளைந்த என் ஒன்பது வயது பெறாமகளும் அவளோடு கூட எல்லோரும்,எல்லாமும் நினைவுக்கு வரும்.

1957ம் ஆண்டு வெளியான ஆரவல்லி என்ற தமிழ் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். ஜிக்கியும் ராஜாவும் (?) பாடி இருந்தார்கள்.அது இப்பாடல்.



பெண்: சின்னப் பெண்ணான போதிலே!
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா
நீ சொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா - உன்
எண்ணம் போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னி என் ஆசைக் காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? - தோழி
நீ சொல் என்றேன்! (வெண்)

கண் ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல் நிலா! - என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்!

ஆண்: வெண்ணிலா! நிலா! - என்
கண்ணல்லவா கலா! - உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

மறக்க முடியாத சித்திரத்தை வரைந்து சென்றிருக்கிறது இந்த திவ்ய தேசம்.

Sunday, November 20, 2011

கடவுச் சீட்டு



15.09.2011 புதன் கிழமை.

பதினெட்டாம் திகதி சுவிற்சிலாந்து நாட்டில் வசிக்கும் என் சகோதரி வீட்டு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்கு நாம் போயாக வேண்டும்.கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே எங்களுடய விடுமுறைகள் எல்லாம் கவனத்துக்கு எடுக்கப் பட்டு குறிக்கப் பட்டிருந்த திகதி. விடுமுறையும் திட்டமிட்டு எடுக்கப் பட்டாகி விட்டது.

பிரச்சினை என்னவென்றால் என் தாயாருக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை 14ம் திகதி இரவு ஏழு மணிக்குத் தான் கிடைத்தது.15ம் திகதி கடவுச் சீட்டைப் பெற்று 16 ம் திகதி விமானப் பயணச் சீட்டைப் பெற்று அன்றே புறப்பட்டால் தான் நேர வேறுபாட்டை முறியடித்து சரியான நேரத்துக்கு நாம் அங்கு சென்று சேரலாம்.

ஏற்கனவே ஒரே நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கடவுச் சீட்டு எடுக்கும் நடைமுறை இங்கிருப்பதால் சற்றே ஆறுதல்.ஆனாலும் முன்னேற்பாடாய் என் நண்பி லோகாவின் கணவரும் என் நண்பனுமான ரொஷானின் சகோதரியான (கடவுச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்) ராஜியக்காவோடும் பேசி 15ம் திகதி காலை முதல் ஆளாய் அங்கு ஆஜரானோம்.

சொல்லி வைத்தது போலவே தேவைப் பட்ட படிவங்கள் மற்றும் பணம் எல்லாவற்றையும் ராஜியக்காவின் உதவியோடு கொடுக்க வேண்டிய அலுவலரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 10.30.

ராஜியக்கா அது கைக்கு வந்ததும் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொள்வதாகவும் உங்களுக்கு வேறு அலுவல்கள் இருந்தால் செய்யுமாறும் கூறினார். குறைந்த பட்சம் 3 மணித்தியாலங்களும் அதிக பட்சம் 8 மணித்தியாலங்களும் ஆகலாம் என்பது அவரது அனுமானமாக இருந்தது.

பாவம் என் தாயார். மிகுந்த எதிர்பார்போடும் இயலாமையோடும் இருந்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. காலையில் சாப்பிடாமல் வேறு வந்திருந்தார். மற்றும் அங்கிருந்து ஆகப் போவதும் எதுவும் இல்லை.வீட்டுக்கு வந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் போய் பெற்றுக் கொள்ளும் அளவிலும் நம் வீடு இருக்கவில்லை.அதனால் என் தாயாரை வீட்டுக்குச் செல்லுமாறும் நான் அழைப்பு வரும் வரை நகர் புறத்தில் நின்று விட்டு வருவதாகவும் ஏற்பாடாகி மைத்துணரோடு அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

இப்போது எனக்கு முன்னால் இருந்த பெருங் கேள்வி இந்த இடைப்பட்ட நேரத்தை எப்படிக் கழிப்பது என்பது தான்.இந்தக் கேள்வியோடு என் கையில் இருந்தது அம்மா ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்திருந்த சண்ட்விட்சுகளும் தேனீரும்.கையில் கொஞ்சக் காசும்.

பல வேலைகள் செய்வதற்காக வீட்டில் காத்த படி இருக்க, வெட்டியாய் சில பொழுதைச் city யில் கழிக்க நேர்ந்தமை ஒரு தவிர்க்க முடியா இருப்பாய் - முந்திக் கொண்டு நிற்கிற விதியில் இயல்பாய் - முன்னாடி புன்னகைத்தபடி!

City கடைகள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்தேன்.விலையும் வடிவங்களும் எனக்குத் தோதுப் படாதவை. கைத் தொலைபேசியைப் பார்த்தேன்.அது வேறு மெளனமாய் நல்ல பிள்ளையாய் இருந்தது. கையில் வேறு சாப்பாட்டுச் சுமை. பையைப் பார்த்ததும் பசித்தது.

இப்போது பல வருடங்களுக்கு முன்னர் நான் வேலைபார்த்த இடமும் அதற்குப் போவதற்காக நான் தினம் கடந்து போன பூங்காவும் நினைவுக்கு வந்தது.அழகும் நிழலும் குளிர்மையும் நிறைந்த அப் பூங்கா மிக அமைதியானது. அதிக தூரமும் இல்லை.அங்கு இருப்பதற்கான இருக்கைகளும் இருந்தன. நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கும் பழக்கமும் அம் மக்களுக்குக் கிடையாது.சாப்பிடுவதற்கும் புதினம் பார்ப்பதற்கும் இருப்பதற்கும் அதுவே இப்போதைக்குத் தோதான இடம்.

மற்றும் என் வேலைத் தலம் அதன் தற்போதய மாற்றங்கள் இவற்றையும் பார்க்கலாம். அதனால் அந்த இடம் நோக்கிப் பயணப் பட்டேன்.அப்போது மழை சாதுவாகத் தூறத் தொடங்கியிருந்தது.

பூங்காவை வந்து சேர்ந்த போது அங்கே தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! பூங்காவுக்கு குறுக்கே போன நடை பாதை இப்போது தார் வீதியாக மாறி இருந்தது. சைக்கிள் ஓடுவோர், நடந்து செல்வோர், தாய்சீ உடற்பயிற்சி செய்வோர், கவுன்சில் வாகனத்தோடு வந்திருந்து பென்ஞ்சுக்கு பெயிண்ட் அடிப்போர் எனக் களை கட்டியிருந்தது பூங்கா.

ஓரமாய் உட்காரப் பிடித்திருந்தது.மெல்லியதான தூறல் போய் இப்போது சற்றே சுடத் தக்கதாய் வெய்யில்.பச்சைப் புல் வெளி நடுவே மழை கொண்டு கழுவிவிடப் பட்ட கறுப்பு வீதிகள்,ஓங்கி உயர்ந்து கிளை பரப்பி நிற்கும் பெரு மரங்கள்.அவற்றில் சுதந்திரமாய் பேசிக் களித்த படி பெயர் தெரியாப் பல இனப் பறவைகள். மற்றும் புறாக்கள். இவற்றுக்கிடையே உரிமைப் பிரச்சினைகள், தனி நாட்டுக் கோரிக்கைகள் எதுவும் இருக்காதோ? வந்தால் அவற்றை அவைகள் எப்படித் தீர்த்துக் கொள்ளும்?

தெரியவில்லை.

ஆனாலும் இவற்றுக் கிடையே எதையோ தேடி ஆரவாரமாய் அவசர அவசரமாய் நடந்து செல்லும் மனிதர்கள்!

இந்த மனிதர்களிடம் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் வரலாறுகள், வாழ்க்கைப் பாடங்கள் ஒளிர்ந்திருக்க, - ஒழிந்திருக்கக் கூடும்! ஒருவர் முகம் மாதிரியாகவா இன்னொருவர் முகம் இருக்கிறது! சற்று நேரம் வேடிக்கை பார்த்திருக்கப் பிடித்திருந்தது.

கைத் தொலைபேசியைப் பார்த்தேன். அது இப்போதும் மெளனமாக இருந்தது.

உணவுப் பொதியை எடுத்து விரித்த போது எங்கிருந்தோ புறாக்கள் பல பறந்து வந்தன.அவற்றுக்குச் சில பாண் துண்டுகளைப் பிரியத்துடன் பிய்த்துப் போட்டேன். அவை மிகுந்த ஆர்வமாகவும் மிகப் பழக்கப் பட்ட பாங்கிலும் சாப்பிடத் தொடங்கிய போது அவற்றில் ஒரு புறாவைக் கவனித்தேன்.அதன் கால்கள் இரண்டும் பலமான நூல்களுக்குள் சிக்குண்டு இருந்தன.அதனால் கால்களை அகட்டி வைத்து சுதந்திரமாக நடமாட முடியவில்லை.அது மற்றய புறாக்களைப் போல நடந்து வந்து உணவைப் பெற்றுக் கொள்ள இயலாமையினால் சற்று அப்பாலே நின்ற படி சாப்பிட எத்தனித்துக் கொண்டிருந்தது.

இப்போது அப் புறாவினை நோக்கிச் சில பாண் துண்டங்களை வீசினேன்.அதன் மீது ஒரு வித வாஞ்சையும் எதுவும் செய்ய முடியாத துன்பமுமாக ஒரு வித உணர்வு நிலைக்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருந்த போதும் அது அவசரமாகப் பாண் துண்டுகளைப் பற்றிக் கொள்வதை மனத் திருப்தியோடு கவனித்தேன்.

தவிர்க்க முடியாமல் எதன் மீதோ யார் மீதோ கோபம் வந்தது. மனிதர்கள் செய்கின்ற பாவங்களில் இந்த வாய் பேசாப் பிராணிகளின் மேல் - அப்பாவி உயிரினங்களின் மேல் அவர்கள் செய்கின்ற உதாசீனங்கள் உபத்திரவங்கள் சொல்லி மாளாதவை. சிறுவர்கள் எவரேனும் வளர்க்கின்ற ஆசையில் பிடித்துக் கட்டி வைத்து விட அது எப்படியோ தப்பித்து வந்திருக்கக் கூடுமோ? அப்பாவி உயிரினம் எப்படி மனிதர்களின் தான் தோன்றித் தனங்களினால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு விடுகின்றன! வண்ணாத்திப் பூச்சி பிடிப்பது. தும்பிகளுக்கு நூல் கட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது,பொன் வண்டு பிடித்து பெட்டியில் அடைப்பது,குருவிகளைப் பிடித்து கூட்டில் அடைப்பது…. இப்படிப் பல… இதில் என்ன இன்பம் இருக்கக் கூடும் அப்படி? இது ஒரு விதமான வக்கிர குணமல்லவா? மனிதக் குழந்தைகளிடம் எப்படி இப்படியான எண்ணங்கள் தொற்றிக் கொள்கின்றன எனத் தெரிவதில்லை.

இந்தப் நீல நிறப் பூமிப் பந்தில் வசிக்கின்ற உயிரினங்களுக்குள் மிகப் பயங்கரமான உயிரினம் ஆறு அறிவோடு இருக்கின்ற மனித மிருகம் தான்.இந்தப் பூமிப் பந்தை ஏன் ஏனைய உயிரினங்களோடு நாம் பகிர்ந்து கொள்ள மறுக்கிறோம்? - இதன் மீது தான் எத்தனை எதோச்சதிகாரம்! ஏகபோக உரிமை நமக்கு!!

இப்போது 2,3, புறாக்கள் நான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் வந்திருந்து உரிமையோடு பாண் துண்டுகளைக் கேட்டன.மேலும் சிலவற்றை அவற்றுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்த போது திடீரெனக் கால்கள் கட்டுண்ட புறா அந்த இருக்கை அருகே பறந்து வந்தது.அவை பறந்தோ பயந்தோ போய் விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். பாண் துண்டுகளைச் சற்று எட்டவாகப் போட்ட போது அவற்றை லாவகமாக அவை பெற்றுக் கொண்டன. சற்றே எனக்கருகாகப் போட்ட போது உரிமையோடு அருகில் வந்தன.

இப்போது கால்கள் கட்டுண்ட புறா எனக்கு மிக அருகில். கைகளில் பாணை வைத்து அதன் அருகில் நீட்டினேன். பயமோ தயக்கமோ அற்று அது அதனைப் பெற்றுக் கொண்டது. எனக்கு இன்னும் அதன் மீது ஆதூரம் கூடிற்று.அதன் கால்களின் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும் என்ற இயல்பான உத்துதல் மீதுர அதன் முதுகுப் புறமாகக் கைகளைக் கொண்டு சென்று அதனைப் மெதுவாகப் பற்றினேன்.

அது அதனை மிக எதிர்பார்த்ததைப் போல எந்த வித பதட்டமோ எதிர்ப்போ காட்டாது அப்படியே இருந்தது.என் கண்கள் பனிக்க அதனை ஆதரவோடு மனதோடு அணைத்துக் கொண்டேன். சாதுவான பறவையாய் எதிர்ப்பெதுவும் காட்டாது கட்டுண்டு அது இருந்தது.
உடனடியாக அதன் கால்களைப் பரிசீலித்தேன். அது நாட்பட்ட சிக்காக இருந்தது.அதன் கால் விரல்களை நூல் புண்னாக்கி இருந்தது. அது விரல்களை வலி நிமித்தம் அல்லது பயம் நிமித்தம் கால்களை மிகவும் சுருக்கி வைத்துக் கொண்டிந்தது.

இப்போது என் முன்னால் ஒரு பெரும் பொறுப்பு! கைகளில் அதன் விடுதலைக்கான எந்த விதமான ஆயுதங்களும் இல்லை.ஆனாலும் உடனடியாக இரண்டு கால்களுக்கும் இடையே இருந்த நூலினை பற்களால் அறுத்து விட்டேன்.இனி இதன் கால் விரல்களுக்குள் அகப்பட்டிருக்கும் நூலை கூரான ஆயுதம் ஏதேனும் கொண்டு அதன் கால்களுக்கு – விரல்களுக்கு எந்த விதமான பங்கமோ தீங்கோ நேர்ந்து விடாத படிக்கு மிக அவதானமாக நூலினை அப்புறப் படுத்தியாக வேண்டும். அதற்குரிய பொருட்கள் என்னிடம் இருந்தாலும் ஒரு கையால் அதனைப் பிடித்த படி மறுகையால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். யாரும் உதவினால் தான் உண்டு.

அவசர அவசரமாக தத்தம் அலுவல்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் இவர்களில் யார் இந்த உதவிக்கு வரக் கூடும்? சில நிமிடங்கள் காத்திருந்தேன். சிலர் கடந்து சென்றனர். சிலர் புதினமாய் என்னைப் பார்த்த படியும் சென்றனர். நான் ஒரு விசித்திர பிராணியாய் அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

சில நிமிடங்களின் பின்னர் ஒரு முக ஒப்பனைகள் அதிகம் செய்த ஒரு பெண்மணி வந்தார்.அவரிடம் விடயத்தைச் சொல்லி கத்தரிக் கோலைப் போல ஏதேனும் கூரான ஆயுதம் இருக்கிறதா எனக் கேட்டேன்.முதலில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல தன் கைப்பையைத் திறந்து பொருட்கள் ஒவ்வொன்றாய் வெளியே எடுக்க ஆரம்பித்தார்.

எனக்கு நம்பிக்கை வளர ஆரம்பித்தது.

பெண்களிடம் இருக்கின்ற கைப்பைக்குள் தான் எத்தனை எத்தனை பொருட்கள்!! எத்தனை எத்தனை தேவைகள்!! ஒவ்வொரு பெண்களிடமும் இருக்கின்ற கைப் பைகளையும் சோதித்தால் ஒவ்வொரு பெண்களினதும் சுபாவங்களும் குண இயல்புகளும் கூடத் தெரிய வரக் கூடும்.

அவர் இறுதியாகத் தன்னிடம் அவ்வாறு எதுவும் இல்லை எனக் கைவிரித்த போது சற்றே ஏமாற்றமாக இருந்தது. புறாவைப் பார்த்தேன் அது சாதுவாக கைகளுக்குள் அமைதியாகவும் இயல்பாகவும் இருந்தது. இப்போது அதனை ஏனோ கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அது பயந்து விடக் கூடாது என்பதால் சற்றே என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நாயோடு நடந்து வந்து கொண்டிருந்த மற்றுமொருவரை வழி மறித்தேன். அவரும் தன்னிடம் எதுவும் இல்லை எனக் கூறி வழி நடந்தார்.இனி சற்றே ஆறுதலாக நடந்து வரும் ஒருவருக்காக காத்திருக்க வேண்டியது தான்.

இப்போது முதலிலே போன பெண்மணி திரும்பி வந்தார்.விரைவாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு 5 நிமிட நடை தூரத்தில் பூக்கள் விற்கும் கடை ஒன்றிருப்பதாகவும் அவர்களிடம் பூக்களின் காம்புகளை வெட்டும் கூராயுதங்கள் இருக்கக் கூடும் எனவும் தன்னோடு வந்தால் வழி காட்டுவதாகவும் கூறினாள்.

எனக்கு அவள் வழி காட்டி விட்டு தன் பாதையில் அவள் திரும்பிச் சென்ற போது ஏனோ அவளைப் பிரிவது எனக்குக் கஸ்டமாக இருந்தது.

பூக்கடையை நெருங்கிய போது புன்னகையோ சினேகமோ அற்ற இறுகிப் போன அந்த முகங்கள் அப்போது தான் ஏதோ பிணக்குப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்லிய வண்ணமாக இருந்தது.யாருடய கஸ்ட காலமோ! வலிந்து ஒரு புன்னகையை வரவளைத்துக் கொண்டு ஆணைத் தாண்டி அப்பால் நின்ற பெண்மணியிடம் விடயத்தைச் சொன்னேன்.
அவள் தன் கணவனைப் போல இருந்த ஆணிடம் நூல்களை வெட்டி விடப் பணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.அந்த இறுகிப் போயிருந்த ஆண்மகனிடத்தே எந்த வித முக மாற்றங்களும் இல்லை.

வழிப் போக்கர் சிலர் பூக்களைப் பார்ப்பதும் விலை பேசுவதும் சிலவற்றை வாங்குவதுமாகப் போய்க் கொண்டிருந்தனர். இந்த ஆண்மகன் ஒரு வித அசட்டையீனத்தோடு சில இடத்து மெளனமாகவும் சிலருக்கு மாத்திரம் ஓரிரண்டு சொற்களை உதிர்ப்பவனாகவும் காணப்பட்டான். பூக்களை விற்பவன் கொஞ்சம் புன்னகைக்கக் கூடாதா எனத் தோன்றிற்று.

பொருத்தமற்ற சில இணைப்புகள் ஏன் நடக்கின்றன?

இப்போது அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்காது அருகிலிருந்த உயரமான முக்காலி மீது கால்களை நிலத்தில் ஊன்றி உட்கார்ந்தான். புறாவைக் கொண்டு முன்னே வரப் பணித்தான். பவ்வியமாக முன்னே சென்று குழந்தைக்கு ஊசி போட வைத்தியத் தாதி முன்னே நிற்கும் தாயைப் போல அப்போது என் நிலைமை இருந்தது. மூக்குக் கண்ணாடியைப் போட்ட வண்ணம் மிக அவதானமாக அதன் விரல்களையும் கால்களையும் பரிசீலித்தான்.உள்ளே சென்று சில கூரான ஆயுதங்களை எடுத்து வந்தான்.

ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்குக் இருக்கக் கூடிய அத்தனை குணாம்சங்களோடும் செய்நேர்த்தியோடும் அவற்றுக்குச் சற்றும் குறையாத கவனத்தோடும் மிகச் சுத்தமாய் முழு நூல்களையும் அவன் அப்புறப் படுத்தி இருந்த போது முழுவதுமாக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகி இருந்தன.

புறா ஓரிரு தடவைகள் கால்களை இழுத்துக் கொண்டதைத் தவிர முழுவதுமாக ஒத்துழைத்தது.

அது வரை அந்தப் பெண்மணி வெளியே வரவில்லை.இவனும் வந்த எந்த ஒரு வியாபார விசாரணைகளுக்கும் பதிலளிக்கவோ வியாபாரம் செய்யவோ இல்லை.100% முழுமையான கருத்தொருமைப் பாட்டோடு அவன் அதனைச் செய்து முடித்து விட்டு தலை நிமிர்ந்த போது புறா தன் கால்களை சில தடவைகள் சுருக்கி சுருக்கி விரித்தது.

அதுவே அவனுக்கான விலை நிர்ணயிக்க முடியாத பரிசென நான் நினைத்துக் கொண்டேன்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாத திண்டாத்ததிற்கும் தள்ளாட்டத்துக்கும் நடுவே இந்தப் புறா உன்னை ஒரு போதும் மறக்காது நண்பனே! உன் நாட்கள் இனியவையாகட்டும் எனச் சொன்ன போது அவன் உள்ளே போயிருந்தான்.

நான் மிகுந்த பெருமிதத்தோடு திரும்பி அதனுடய நண்பர் குளாத்தோடு சேர்க்கச் சென்ற போது அது தன்னை விடுவிக்கக் கோரி கைகளுக்குள் அது செய்த புரளி இருக்கிறதே! அது என்னை மிகுந்த ஆச்சரியப் படுத்தியது.

மரத்தடி சென்று கைகளை அகல விரித்தேன். அது சுதந்திரமாகப் பறந்து போனது.

வாழ்க்கையில் பல மறக்க முடியாத தருணங்களைப் பெருமிதங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.ஆனால் இதனைப் போன்ற ஒரு பெருமிதத்தை இதற்கு முன் நான் ஒரு போதும் அடைந்ததில்லை.

ஒரு புறாவின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன் என்பதும்; எப்படியோ அதன் நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்பதும்;அதற்குரிய சுதந்திரத்தை அதற்கு என்னால் கொடுக்க இயலுமாக இருந்தது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஏதோ ஒரு வாழ்க்கையின் ரகசியம் புரிந்தது போலவும் இருந்தது.

சற்று நேரத்தில் கடவுச் சீட்டைப் பெற்றுத் தொடரூந்தில் பயணிக்கையில் சொர்க்கத்துக்கான கடவுச் சீட்டையே உண்மையில் நான் பெற்றிருந்தேன்.

Tuesday, August 23, 2011

பெண்ணம்சம்


இன்று சற்றே வேலைத் தலைவலி.ஏதாவது ஒரு மாற்றுத் தேவை.வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அதனை மறக்க மது,புகைத்தலைப் போல போதையைத் தரும் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள் புகுந்து கொண்டேன்.

அவற்றை வாசித்து முடித்த பின் அதனை இங்கு பகிராமல்,பதியாமல் இருக்க முடியவில்லை.

கைக்குக் கிட்டிய இன்றய பத்திரிகை ஞாயிறு தினக்குரல்.இலங்கையில் இருந்து வெளிவருவது.மறு நாளே இங்கு வாசிக்கக் கிட்டுவது.அதில் அ.முத்துலிங்கம் அவர்களுடய ஆக்கம் ஒன்று கண்ணில் பட்டது.(21.08.2011.பக் 31 பனுவல்)அது இப்படி ஆரம்பிக்கிறது.

”எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் கச்சிதத்தோடும் நேர்த்தியோடும் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும்.இவர்கள் வேலை செய்யும் போது பாடிக்கொண்டே செய்வார்கள்.அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை அது.பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் போலவே இருக்கும்.அதில் ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்”

தொடர்ந்து அவற்றுக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.எஸ்.ராமகிருஸ்னனின் துயில் என்ற நாவலில் வரும் ஓரிடம்.‘என்னை ஞாபகம் வச்சிருக்கிற ஆளு கூட இருக்காங்களா’ என்று கேட்கும் பெண்பாத்திர வார்ப்புப் பற்றி கூறி, அந்த ஆதங்கத்தில் அவளுடய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரே வசனத்தில் கொண்டு வந்திருப்பார் ஆசிரியர் என்று வியந்திருந்தார் அதில்.

அது போல குறுந்தொகையில் இருந்தும் ஒரு காட்சியைக் கூறியிருந்தார்.தலைவி தோழியிடம் சொல்கிறாள்.’பார் என் நிலைமையை.அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்து விட்டுப் போய் விட்டார்.நான் இப்படி ஆகி விட்டேன்.யானை முறித்த கிளையைப் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறேன்.மரக்கிளை முன்பு போல இல்லை.முறிந்து நிலத்திலும் விழவில்லை.அது போல நானும் பாதி உயிரோடு அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்’(குறுந்தொகை - 112) என்று சொல்வதை கச்சிதமான விளக்கத்துக்கு உதாரணமாகக் காட்டியிருந்தார்.

அது போல வீரியத்தோடு மனதில் இறங்கும் ஒரு உணர்வின் இயல்பைச் சொல்ல அவர் எடுத்தாண்ட உதாரணத்தை அப்படியே தருகிறேன்.’சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதிய ,’For the love of Shakespeare' என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது.நண்பர் தன்னுடய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது....அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும் போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும்.Tempest நாடகத்தில் ஓரிடம்.புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்து விட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான்.அவளால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி அடைகிறாள்.your tail,sir,would cure deafness' ’உங்களுடய கதை,ஐயா!செவிட்டுத் தன்மையைக் குணமாக்கும்’ என்ன ஒரு சொல்லாட்சி என்று வியக்கிறார்.

எல்லாவற்றிலுமே நேர்த்தியையும் அழகையும் காணும் அ. முத்துலிங்கம் அவர்கள் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கு நியதியின் பிரகாரமே இயங்குகின்றது என்பார்.பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான் என்பது அவரது ஆதங்கமாக இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் Liverpool என்ற இடத்திற்குச் பரிசுச் சேலைகள் சில வாங்கச் சென்றிருந்தேன். அநேக இந்தியப் புடவைக் கடைகள் அங்கு இருக்கின்றன.மேலைத்தேய நாகரிகங்களோடு போட்டி போடும் நவீன ரகப் புடவைகள் அங்கு ஏராளம்.உயர் விலைகள்,பட்டு ரகம்,அண்மைய வெளியீடு,வசீகர நிறம் என்று அநேகம் இருந்தாலும் மிகக் குறைந்த விலையில் இருக்கும் பருத்திச் சேலைகளின் மீதான மோகம் என்னை விட்டு அகன்று போகும் பாடாய் இல்லை.இது ஒரு நோயைப் போல என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது.’இங்க எல்லாரும் நல்ல கிறாண்டா நல்ல பட்டுச் சீலையள் தான் உடுத்திறது.சும்மா ஒரு கொட்டன் சீலையை எடுத்துக் கொண்டு வராதைங்கோ’ என்று என் தங்கை ஏற்கனவே என்னை எச்சரித்தும் விட்டிருந்தாள்.

’ஓடுக!ஊரோடுமாறு’என்று என் பாடசாலைப் பிரிவின் போது என் ஓட்டோகிறாவ்பில் என் பள்ளித் தோழி ஒருத்தி எழுதி இருந்தது இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

அத்தனை களைப்பு! வாழ்க்கைமீது!! :)

’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’என்று ராஜு முருகன் எழுதிய வரி ஒன்று வந்து போகிறது மனதில்.(ஆனந்த விகடன்;24.08.2011; ப்க்;63 -66)

சரி, அதை விட்டு விடயத்துக்கு வருவோம்.கடையில்,வழமை போலவே வாங்க வேண்டயவற்றை எல்லாம் வாங்கி விட்டு எனக்கே எனக்காக ஆரம்பத்திலேயே என் கண்ணில் பட்டும் புறந்தள்ளிக் கொண்டிருந்த சேலையை மீண்டும் எடுத்து வாங்குவதா விடுவதா என்ற தீர்மானத்துக்கு வர முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தேன்.மெல்லிய உடல்வாகு உள்ளவர்களுக்கே பருத்திப் புடவை அழகு என்பது தற்போதய என் சமாதானத் தீர்மானம். அதுவே என்னை வாங்கும் ஆசையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த குஜராத்திப் பெண்ணொருத்தி - அந்தக் கடைப் பெண்மணி - அண்மையிலேயே அவள் இந் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் - அருகில் வந்தாள்.அதில் ஒரு சிநேகம் இருந்தது. எனக்கும் பருத்திச் சேலைகள் மிகவும் பிடிக்கும் என்றாள். அதில் உடனடியாகவே என்னை மீறிய ஒரு நெருக்கமான இதத்தை உணர முடிந்தது.

எனக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தச் சேலையில் ஒரு கண் இருக்கிறது என்று விட்டு ஏன் வாங்கத் தயக்கம் என்று கேட்டாள். நான் காரணத்தைச் சொன்ன போது புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.எத்தனை எத்தனை பட்டுச் சேலைகள் வாங்கினாலும் ஒரு பருத்திச் சேலையை உடுத்தி அதன் எளிய இயல்பில் நடந்து போகும் சுகம் இருக்கே! அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.அது நீ குண்டம்மா என்பதையும் கடந்தது.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.

அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்!

’...சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை!’என்றொரு ஆறாம் நூற்றாண்டுப் பக்திப் பாசுரம் பேசும்.ஆறாம் நூற்றாண்டுத் தமிழின் வீரியம் அது!

சித்தம் அழகியர்!!

இந்தப் பெண்னையும் எனக்கு அப்படித்தான் பார்க்கத் தோன்றியது.

இந்தக் குணாம்சத்தினால் தான் பாரதத்துப் பெண்கள் அத்தனை அழகோ?



Monday, August 22, 2011

இளந்தமிழன்

என் சின்னஞ் சிறிய உலகத்தில் என்னைக் காண வரும் தோழமையுள்ள நண்பர்களே!

எல்லோரும் நலம் தானே? உங்களோடு பேச உரிமையோடு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக என் வலைப்பூவுக்குள் அநேக குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. நண்பர்களுடய பின்னூட்டங்கள் காணாமல் போவதும் எழுதும் போது அலைக்கழிவுகள் நிகழ்வதும் எழுதி முடிகின்ற கட்டத்தில் அவை முழுவதுமாக இல்லாது போய் விடுவதும் அவற்றை மீளக் கட்டியெழுப்புவதுமாக அது மிகச் சிரமமான காரியமாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட எரிச்சலூட்டுகின்ற விடயம் என் நண்பர்களுடய பின்னூட்டங்கள் எனக்குத் தெரியாமலே களவாடப் படுவதோ அபகரிக்கப் படுவதோ தான்.

நான் ஒரு போதும் என் நண்பர்களுடய அல்லது இங்கு வரும் எவருடயதும் - அது சாதகமானதோ பாதகமானதோ வருகின்ற எந்தப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்காமல் விடுவதேயில்லை என்பதை என் பக்கம் வரும் உறவுகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்வார்களாக!

இங்கு மட்டும் என்றில்லை. என் மின் தபாலுக்கும் இதே நிலை தான்.என் தபால் முகவரியில் இருந்து எனக்கே தபால் வருகிறது. இப்படி மேலும் எத்தனை பேருக்குப் போகிறது என்பதையும் நானறியேன்.

எத்தனையோ தரம் கணணி விற்பன்னர்களைக் கண்டும் கணணியை மாற்றியும் சேவை வழங்குனரை மாற்றியும் கடவுச் சொல்லை மாற்றியும் பார்த்தாயிற்று.

பலவிதமான நோயாளிகளையும் கூட நாம் சகித்தும் கடந்தும் செல்லவேண்டி இருக்கிறது இந்தக் கணணி உலகத்தில்!

அதனால் சில மாதங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை நிறுத்தி வைத்திருக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் புதிதாக ஒரு மின் தபால் முகவரி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறேன்.தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சொல்ல ஏதேனும் இருந்தால் அந்த முகவரியில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.முகவரி; may22nd11@gmail.com

நன்றி.

அது நிற்க!

.....................................................................................


என் தமிழ் பாடசாலை மானவர்களின் அனுபவங்களை அவர்களின் ஆற்றலை வளர்க்கும் முகமாக அவர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற பெயரில் அவர்களுக்கான வலைப் பூ ஒன்றைத் தனிப்பட்ட முறையில் அமைத்திருக்கிறேன்.அது என் வலைப்பூவின் அருகில் இருக்கின்ற ’சுவைக்க....’ என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.தயவு கூர்ந்து இங்கு வருகின்ற யாரும் கூடவே நேரமும் இருந்தால் அங்கும் சென்று,என் மானவர்களின் ஆக்கங்களைப் பார்த்து, அவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தை தூண்ட முன்வருமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, August 8, 2011

புலமையும் நட்பும்



அது ஒரு காலம்!

புலமையும் நட்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்!!மகாகவி,நீலாவாணன்,முருகையன்,நுஃமான்...என்று நீண்டு செல்லும் புலமையும் நட்பும் கொண்ட பாரம்பரியம் அது.

ஓலை என்ற சிறு சஞ்சிகையில் (ஜூன் 2003) வந்திருக்கின்ற பல ஆக்கங்கள் இதுவரை கண்டெடுக்கப் படாத பல புதிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது.இரவல் புத்தகம் ; கொடுக்கவேண்டி இருப்பதால் பிடித்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியும் பகிர்ந்து கொள்ள வேண்டியும் அவற்றில் ஒன்றைத் தருகிறேன்.

”.....
இந் நாள் எல்லாம் எங்கள் வீட்டுப்
பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்!
முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்
‘கொல்’லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள்’
அல்லவோ?....” - என்றும்

”....பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூறாதோ? - என்றும்
....”

”நல்லவர்களுக்கிது தான் நாடு - பொய்
நாகரிகத்துக்கப்பால் ஓடு!
முல்லை நாடு! பக்கத்தில்
மூன்றறைகளோடு சிறு வீடு போதும்! எடு ஏடு!!”

என்றும் தன் ஊரைப் பாடிய மகாகவிக்கும் இன்று இலங்கையின் வானொலி உலகில் பிரபலமாக இருக்கும் எழில் வேந்தனின் தந்தையார் நீலாவாணன் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பொன்றைப் பற்றி ’ஓலை’ஜூன் 2003 இதழில் எழில் வேந்தன் எழுதி இருக்கிறார். அதில் நீலாவாணன் தன் டயறியில் எழுதி இருந்த இது வரை வெளிவந்திராத கவிதை ஒன்றை அதில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

புலமையும் நட்பும் நடைபோடும் அக் கவிதையையும் அதற்கு எழில் வேந்தன் கொடுத்திருக்கின்ற குறிப்பையும் கீழே தருகிறேன்.

“மகாகவியின் மரணச் செய்தி வானொலியில் வந்த போது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.செய்தியைக் கேட்டதும் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்தார்.மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டுமென எத்தனையோ முயற்சிகள் செய்தும் முடியாது போய் விட்டது.அப்போது ஜே.வீ.பி.கிளர்ச்சி முடிந்து நாடு பழைய படி வழமைக்குத் திரும்பாத நேரம்.நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது.எப்படியோ ஓடித் திரிந்து கூடிய விரைவில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விமானத்தில் நாம் யாழ்ப்பாணம் போனோம்.எங்களது முதலாவது விமானப் பயணமும் என் தந்தையாரின் ஒரே ஒரு விமானப் பயணமும் அது தான்......

மாமா இறந்து கிட்டத் தட்ட 3 தசாப்தங்கள்.அண்மையில் அப்பாவின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது அவரது பழைய டயறிகளையும் ஆராய்ந்தோம்.அப்போது மகாகவி மாமாவின் மரணச் செய்தி கேட்டு அப்பா எழுதி இருந்த கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது.அது பற்றி அம்மா உட்பட யாருக்குமே அது வரை தெரியாதிருந்தது.அந்தக் கவிதை இது தான்” - எழில் வேந்தன் -

இதயம் இருந்ததடா! எண்ணங்கள் பொங்கின
இதயம் இருந்துமென்ன ஏக்கம் பிறந்துமென்ன
இறக்கை இரண்டிருக்கவில்லையடா என்னிடத்தில்
இறக்கை இரண்டிருந்தால்...
எப்படியோ கண்டிருப்பேன்
இந் நேரம் வந்திருப்பேன் எப்படியும் கண்டிருப்பேன்

இதயம் இருந்ததடா!
இறக்கை இருக்கவில்லை

வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்
ஊனுருகி, உள்ளம் உருகி, விழி பெருகி
நானழவும் நண்பர் நமரழவும் நாடழவும்
வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்!

இதயம் இருந்ததடா
இறக்கை இருக்கவில்லை!

‘புள்ளி அளவிலொரு பூச்சி’மடிந்த கதை
சொல்லி அழுகின்ற சோக நிறை செய்தியல்ல!
அன்னியர்தம் ஆட்சி அருங் ‘கோடை’ வேக்காட்டின்
பின்னணியில்,இந்நாட்டு மன்னவர்கள் தம்முடைய
காதலும் பண்பும் கலையும் தமிழ் வாழ்வும்
சாதலைக் கண்டு சலிப்புற்ற செய்தியல்ல!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்.

முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை
அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி
படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்
பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்

‘சேரன் பிறந்த செருக்கடா என்னுடய
பேரன்பா’ என்ற பெருமை மிகு செய்தியல்ல
‘நாளை கடிதம் எழுதுகிறேன் இங்கு புதுச்
சோழனும் தாயும் சுகம்’என்ற செய்தியல்ல.

உண்ட செயல் நின்ற உதிரம் உறைந்ததடா
கண்கள் துயரக் கனியைப் பிளிந்தன ஆ...
என்னவாம் அந்த இழவறையும் வானொலியில்
உண்மையா? உன்னை உலகம் இழந்ததுவா!

என்னருமை நண்பா இறுதியாய் உன் மனையில்
உன்னை நான் கண்டு உரையாடி உண்கையில்
தென்னிலங்கை போகிறேன் தேடியங்கும் வாருங்கள்
சொன்னாய்; அதிலிருந்த சூக்குமத்தை நானறியேன்

மூன்று திங்கள் ஆகவில்லை மூச்சு நின்றதென்கின்றார்
நானெந்த வாறிதனை நம்பிடுவேன் நண்பா ஓ....
ஏனிந்த வாறு எமை ஏமாற்றிப் போயினை யோ!
வானத்தன் ஆனான் மகாகவி என்றந்த
வானத் தொலியாகி வந்ததடா கேட்டிருந்தேன்.

பாண்டியனுக்கென்ன பகர்ந்தாய் இனியாளை
வேண்டும் வரையளவும் விட்டுப் பிரிந்தாயோ?
சேரன் ஒளைவை சோழனுக்கு செப்பியது தானெதுவோ?

வாரம் முடிவோ இவ் வையப் பெருவாழ்வு?

Tuesday, August 2, 2011

தபாலட்டைக் கவிதைகள்


கொழும்பு தமிழ் சங்கத்தில் இருந்து பிரசுரமாகும் ’ஓலை’ என்ற மாதாந்த மடல் ஒன்றை (ஜூன் 2003)காவலூர்.ராசதுரை ஐயாவிடம் சென்ற போது காணக்கிடைத்தது.வீட்டு உடையுடன் அவசரத்துக்கு ஓடிப் போய் புத்தகம் கேட்கிற அளவில் ஒரு கலைஞன் - அதுவும் வெளிநாட்டில்- இருக்கக் கிடைத்திருப்பது ஒர் அலாதியான ஆத்மானுபவம்.

பேச முடியாத நிலையும்; வயோதிபமும் தள்ளாட்டமும் இருந்த போதும்; முகத்தில் பூத்த புன் முறுவலும் புத்தகங்களை எடுத்துத் தரும் முக மலர்ச்சியும் என்னை மிகப் பெருமளவு நேரம் சஞ்சலத்துக்குள்ளாக்கின.

சென்ற நூற்றாண்டின் மனித இயல்பு!

மனைவியாரின் விசனங்களும் எந்தக் கலைஞர்களும் அவரை வந்து பார்த்தோ தொலைபேசியிலோ நலம் விசாரிப்பதில்லை என்ற ஆதங்கம் கலந்த மனத்தாங்கலும் 54 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்ததன் உண்மையான நேசத்தை எனக்கு உணர்த்துவதாயிருந்தது.

புலம் பெயர்ந்த நாட்டில் அது ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவம்.

நான் சென்று பார்க்கவோ உதவவோ முடியாத குற்ற உணர்வும் வாழ்வியல் ஓட்டம் சொல்லும் இயலாமையும் இரட்டைக் கலாசாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் இரண்டாம் தலை முறையினரின் வாழ்வியல் அனுபவம்.

இரண்டும் ஒரு முறை சந்தித்து மீண்டன.

அதன் அதிர்வுகள் கவலையின் அலைகளாய்; இயலாமையின் அலைவுகளாய் சுற்றாடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்; இரு தலைமுறையிடமும். இருந்தது.

*** *** ***

அவரிடம் தான் இந்தச் சஞ்சிகையைக் காணக்கிடைத்தது.

அதில் அரிதாக இது வரை வெளிவந்திராத மகாகவியின் தபாலட்டைக் கவிதைகள் சிலவற்றைக் காணக்கிடைத்தது.அதிலிருந்ததை அப்படியே தருகிறேன்.

”தபாலட்டைகளில் சிறு சிறு கவிதைகளாகவே கடிதங்களை அனுப்புவதில் மகாகவி, முருகையன்,நீலாவாணன்,நுஃமான்,போன்றோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை ஒரு சுவாரிஷமான செய்தியாகும்.தபால் அட்டைகளில் தான் எழுதி அனுப்பிய சிறு கவிதைகளை - சுவை மிக்க வெண்பாக்களை - மகாகவி நாட்குறிப்பு ஒன்றில் பிரதி பண்னி வைத்திருந்தார்.அந் நாட்குறிப்பில் இருந்து சில வெண்பாக்களை இங்கே தருகிறோம்.வெண்பாக்களோடு உள்ள குறிப்புக்களும் மகாகவியினுடயவை.” என்ற விபரங்களோடு தபாலட்டைக் கவிதைகளை அது பிரசுரித்திருக்கிறது.

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூடச் சித்தரிப்பனவாக அவை இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

*** *** *** *** ***

Monday, July 25, 2011

நற்றிணையில் ஒரு காட்சி



சங்க இலக்கியங்கள் கலப்பற்ற தனித்தமிழில் காதலையும் போரையும் இயற்கையோடிணைந்த வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லி நிற்பவை.அவை எட்டுத் தொகை பத்துப்பாடு நூல்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன.அந்த எட்டுத் தொகை நூல்கள் பற்றி ஒரு பாடல் இப்படிச் சொல்லும்.

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை’

அந்த எட்டுத் தொகை நூல்களில் ஒன்று நற்றிணை.இது பல புலவர்களாலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப் பட்டது.இதிலுள்ள 400 பாடல்களிலும் 234வது பாடலிலும் 385 சில பகுதிகள் கிட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.இது முழுவதும் காதல் உணர்வைச் சொல்கிறது.

அதில் வரும் 22வது பாடல் இது.குறிஞ்சி மலைப் பகுதியைச் சேர்ந்தவன் அவன்.விடலைப் பருவத்து இளைஞன் அவன்.கீழைப் புறத்து யுவதி ஒருத்தியைக் காதலிக்கிறான். திருமணம் செய்யத் தீர்மானிக்கிறான் அவ்விளைஞன்.தோழி மூலமாகச் செய்தி சொல்லி விடுகிறான் அவன்.பெற்றோரின் சம்மதத்தைப் பெற வருகிறான் என்ற செய்தி தலைவியை வந்தடைகிறது.

தோழி சொல்கிறாள்.தோழியைத் தயார் படுத்துகிறாள்.எப்படி அச்சத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டுகிறாள் என்று பாருங்கள்.அவள் சொல்லும் போது அவனின் குறிஞ்சி நாட்டு வளத்தை சொல்லும் பாங்கைப் பாருங்கள்.அதற்கூடாக விரிகின்ற காட்சி எவ்வளவு அழகாகாய் இருக்கின்றது என்பதைக் காணுங்கள்.

தோழி, ஊர்புறத்தே நெற்கதிர் முற்றுகின்ற வேளையில் அருகில் இருக்கின்ற ஆறு, குளம், நீரேரி எல்லாம் வரண்டு நீருக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் போதினில் ஒரு நள்ளிரவுப் பொழுதொன்றில் இடி மின்னலோடு மழை பொழிந்தால் எவ்வாறு இருக்கும் சொல்?அது போல உன் காதலன் பொருத்தமான ஒரு வேளையான - பருவம் கனிந்து நிற்கின்ற தருணமான இப்போது உன்னைத் திருமனம் செய்து கொள்வதற்காக வரப் போகிறான்.

அவனுடய - அவன் வாழ்கின்ற குறிஞ்சி நிலம் எப்படியானது என்று தெரியுமா உனக்கு?அங்கே திணை பயிர் செய்யப் பட்டிருக்கின்றது.அந்தத் தோட்டங்களைத் திணைப் புலத்துப் பெண்கள் காவல் காக்கிறார்கள்.அக்காவலையும் மீறி சில புத்திசாலிக் குரங்குகள் அதற்குள்ளே புகுந்து விடுகின்றன. அவை திணை விளைந்து நிற்கின்ற பருவம் மிக்க திணைப் பயிர்களைக் கவனமாக நோட்டம் விடுகின்றன.அதில் இளமையாக இன்னும் முற்ற காலம் இருக்கின்ற திணைக் கதிர்களை விட்டு விட்டு நல்ல பருவமான முதிர்ந்த கதிர்களை மிக அவதானமாகத் தெரிவு செய்து அவற்றைத் தம் கைகள் நிறையப் பறித்துக் கொள்கின்றன.

அவை அவற்றை உடனேயே வாய்க்குள் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.மழை கார் இருட்டானாலும் கொப்பிழக்கப் பாயாத புத்திசாலி மந்திகள் அவை.திணைக் கதிர்களில் இருந்த திணைத் தானியத்தைக் கை நிறயை கொண்டு விட்டது தான் தாமதம்.கொப்பிழக்காமல் அவதானமாக திணைப் புலத்துக் காவல் மங்கையரின் கண்களுக்கு எட்டி விடாமல் பாய்ந்து வருகின்றன.அவதானமாக அதே நேரம் விரைவாகவும் லாவகமாகவும் புலத்துக் காவல் பெண்டிரின் கண்கலுக்குள் தட்டுப் படாமல் தப்புகின்றன. அவை அத்தனையும் பெண்குரங்குகள்.

அவை எங்கே பாய்ந்தோடி வருகின்றன தெரியுமா? அவைகளுடய அனுபவம் இல்லாத உறவினர் கூட்டம் திணைப் புலத்துக்கப்பால் பசியோடு இப் பெண்குரங்குக்காகக் காவல் இருக்கின்றன.காரனம் காவல் உள்ள திணைப்புலத்துக்குப் போய் பாதுகாப்பாய் வருவதென்பதற்கு அனுபவமும் அறிவும் சமயோசிதமும் அவசியமல்லவா? அதனால் இப்பெண் குரங்கு அனுபவமற்ற தன் உறவுக் கூட்டத்தைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறது. அங்கு தான் இது கை நிறைந்த முதிர்ந்து உண்ணத் தயாராக இருக்கும் திணைகதிர் தானியங்களைக் கை நிறைய உருவி எடுத்துக் கொண்டு விரைகிறது.

குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும் தன் உறவுக் கூட்டத்தினராகிய அவர்களை அழைத்துக் கொண்டு இன்னும் பாதுகாப்பான மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இடம் இன்னும் பாதுகாப்பானது என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னால் கூட்டமாக இருக்கும் தன் உறவுக்கூட்டத்துக்கு முன்னால் தன் உள்ளங்கைகளை விரிக்கிறது.சுற்றிவர உறவுக்கூட்டம்.ஆவலும் பசியுமாய் அமர்ந்திருக்கின்றன.தன் உள்ளங்கையில் அவற்றை வைத்துக் தானியங்கள் வேறாவதற்காகக் கசக்குகிறது அக்கதிர்களை.பின் கசடுகளை நீக்கி எல்லோருக்கும் பங்கிடுகிறது.அவற்றை எல்லாருமாகச் சேர்ந்து வாய்க்குள் போட்டுக் குதப்புகின்றன. அதனால் உட்குழிந்த கன்னங்கள் ஊதி விட்டன.எல்லோருமாக பாதுகாப்புப் புறத்தில் இருந்து வாய்நிறைய திணைத் தானியத்தைப் போட்டு பொக்குபொக்கு என்று உட்புறமாகக் குழிந்திருந்த கன்னங்கள் வெளிப்புறமாக தள்ளி இருக்க அவற்றை ஆசையோடு அவை உண்கின்றன.

அந்த நேரம் மலைப் புறத்தே முகில் கூட்டம்.மழை மெல்லத் தூறல் போடுகிறது. ஆனால் அவை அவற்றைக் கவனித்ததாயோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை. அவைகளின் முதுகுப் புறமாக மழைத் தூரல் போடுவதையும் பொருட்படுத்தாமல் அவை திணைத் தானியத்தை உண்கின்றன.

இந்தக் காட்சி எப்படி இருக்கின்றது தெரியுமா? தைத்திங்களில் நோன்பு நோற்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி ஈர உடை உடலோடு ஒட்டி இருக்க நீர் துளிகள் சொட்டுச் சொட்டாக கொட்ட கோயில் பிரசாதத்தை பக்தி சிரத்தையோடும் பவ்வியத்தோடும் உண்பது போல இருக்கிறது.

இப்படியான காட்சிகளைத் தினம் காணக் கூடிய ஒரு நிலப்பகுதியைச் சேர்ந்த ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் தோழி.சிற்றறிவுடய உயிரினங்களும் புத்திசாலித்தனமும் சமயோசிதப் புத்தியுமாக எல்லோருமாகக் கலந்து ஒற்றுமையாக கூடி வாழும் ஊர் அது என்பதும்;நெறிமுறை தவறாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவனையே நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் அவள்.தோழியைத் தயார்படுத்துகிறாள் இவ்வாறு.அந்த நற்றிணைப் பாடல் இது தான்.


"கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம்கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே'' - (நற்றிணை - 22)

இந்த ஊர்க்காட்சியைப் பார்க்கும் போது குற்றாலக் குறவஞ்சி கூறும் தன் மலைவளக் காட்சி நினைவுக்கு வந்து போகிறது. அதுவும் குறிஞ்சிப் புறம். மலையும் மலைசார்ந்த இடம்.அங்கிருக்கும் வானரங்கள் எப்படி இருக்கின்றன தெரியுமா?

‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’.

இன்றய சினிமாவில் மலையாளக் கரையோரம் தமிழ் பாடிச் செல்கிறது குருவி.

Tuesday, July 12, 2011

எழுத்தாளர்;முருக பூபதி



என் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய எழுத்தாளர்.லெ.முருகபூபதி அவர்களுக்கு நாளை 13.07.2011 அன்று அறுபதாவது பிறந்த தினம்.

என்னைப் பல வழிகளிலும் ஊக்குவித்து, கட்டுரைகளை வலிந்து என்னிடம் இருந்து வரவழைத்து,சொந்தச் செலவில் புத்தகங்கள் அனுப்பி, எழுத்தாளர் விழாக்களிலும் என்னை மேடையேற்றி,வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் இந்தப் பெருந்தகைக்கே முழுப் பொறுப்பும் உண்டு.

வாஞ்சையும் எளிமையும் இலக்கிய ஓர்மமும் தன்னலம் கருதா இனிய சுபாவமும் மானுட தர்மமும் நிரம்பப் பெற்றவர்.சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் புத்தக வெளியீடுகளும் அநேகம்.மிகப் பெரிதும் கூட.அதற்காக அவர் ஏற்றுக் கொண்ட; சந்தித்த சவால்கள் பல. அனைத்து விமர்சனங்களையும் உள்குத்துக்களையும் புறங்கையால் ஒதுக்கி விட்டு தான் போகும் வழியில் சளைக்காது நடை போடும் அவர் இலட்சியவாதிகளுக்கும் துயர் கொண்ட நெஞ்சங்களுக்கும் முன் மாதிரி.

இனிய உபசரிப்பிலும் மகிழ்வான மனோபாவத்தாலும் இரக்க சிந்தையாலும் அவர் பலரின் உள்ளங்களில் நிறைந்து வாழ்பவர்.இனியும் வாழ்வார்.அவரின் பிறந்த தினத்தின் போது அவர் சகல வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் சகல வளங்களோடும் வாழ்ந்து இலக்கிய உலகுக்கு - அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய புலம்பெயர் இலக்கிய உலகுக்கு இன்னும் பல
சேவைகளை ஆற்றி மகிழ்ந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூபதி அண்ணா!



வாழி நீ பல்லாண்டு

இனிய மனிதா! பூபதி அண்ணா!
எழுத்துலகில் எனை ஏற்றி
பெற்றுவிட்ட தாயவள் போல் பூரித்து
இன்கதவம் திறந்து இனிதாய் உபசரித்து
புலம் பெயர்ந்த புதுச் செடிக்கு
புலமையொடு நல்ல நீரூற்றி
வாஞ்சையொடு வளர்த்து வரும் வள்ளலே!
வளமோடு நீ வாழி!

எத்தனை துன்பம்?எத்தனை சோதனை?
எத்தனை நிந்தனை? அத்தனையும் மனித குணம்.
அத்தனையும் உந்தனது ஓர்மத்தால்
வியத்தகு நல்ல தீரத்தால்
சிறந்த உந்தன் உழைப்பதனால்
நெஞ்சு நிகர்த்த ஞான நெருப்பதனால்
விலக்கி ஒழித்து வாழ்ந்திட்டாய்.
வானில் விளக்காய் ஒளிர்ந்திட்டாய்
இந் நன் நாளில் வாழ்த்துகிறேன் நீ வாழி!

கேட்டவுடன் புத்தகங்கள் தபால்களோடு வந்து சேரும்
நா நுனியில் விபரங்கள் தொலைபேசியில் கிட்டி விடும்
அன்பான விசாரிப்புகள்;எளிமையான குண இயல்பு
மற்றோரை மதிக்கும் மான்பு மிகு நல்ல குணம்
எல்லோர்க்கும் உதவு குணம் அமைந்திட்ட மாமனிதா!
(உனக்கு நான்)நன்றி சொல்ல நாவேது? நவிலுகிறேன் நல்வாழ்த்து!

உறுதியாய் சொல்லுகிறேன் ஒன்று மட்டும் உற்றுக் கேள்!
புத்திலக்கியச் செடியாம் புலத்திலக்கியச் செடிக்கு
அன்னிய மண்ணதனில் எழுத்தாளர் விழாக் கூட்டி
இலக்கியப் பசளையோடு கலைகளும் புத்தகப் பதியங்களும்
பாங்குடனே போட்டதனால் பற்றை,புதர்க்காட்டிடையும்
அந்தோ பார்! தமிழ் தளிர்!! துளிர்த்ததென்றால்,
பெருமகனே! பூபதியே!! அது உன்னாலே! உன்னாலே!!
அதனாலும் வாழ்த்துகிறேன்; மனையாளொடும்
மக்களொடும்; நீ விரும்பும் நூல்களோடும்
நீடூழி நீ வாழ்க!!

Friday, July 8, 2011

லெமூரியாக் கண்டம்



கடல்கோள் (சுனாமி) கொண்டதாகச் சொல்லப் படும் லெமூரியாக் கண்டம் இவ்வாறான வடிவத்தில் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.(விபரம் எங்கிருந்து பெறப்பட்டதெனத் தெரியவில்லை)