Tuesday, April 5, 2011

தத்துவ விசாரம்


கடந்த வாரம் ஒஸ்ரிய நாட்டுத் தோழியோடு வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது.பேச்சு பலவாறு நீண்டு பிறகு பிறப்பு இறப்பில் வந்து நின்றது.கைகளை விரித்து ’ஏன் இங்கு பிறந்திருக்கிறோம்; எங்கு பிறகு போகப் போகிறோம்? எனக்குத் தெரியாது’ என்று அவள் சொன்ன கணத்தில் துள்ளி விழுந்த பந்து இது.

இரண்டு உள்ளங் கைகளையும் கரைப் புறமாக மேல் நோக்கி விரித்து மேல் நோக்கி கண்களை உயர்த்திச் சொன்ன அந்தப் பொழுது அது மனதில் பல கேள்விகளை அது எழுப்பிச் சென்றது.

விடைகள் காணமுடியாத கேள்விகள் தான் அவை.எனினும்,நோக்கமற்று இலக்குகளற்று வாழ்வது; முடிவினை நோக்கி பாதை வகுக்காது, ஏன் என்ற தெளிவில்லாது வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது எவ்வளவு கடினம்!

ஆனாலும் பலரும் அவ்வாறே வாழ்கிறார்கள்.பெரும்பாலான பலர் பெற்றோரின் மதத்தைப் பின்பற்றியதான ஒரு நம்பிக்கையை, கேள்வி எதுவும் கேட்காமலே ஏற்றுக் கொள்கின்றனர்.

எனக்கென்னவோ மனம் ஏற்றுக் கொள்ளத் தக்க ஏதோ ஒரு நம்பிக்கை வேண்டி இருக்கிறது.

ஆனாலும் பலரும் நம்புவது போல் கடவுள் என்றொருவர் இருக்கிறார்.நம்மைப் படைத்தவர் அவரே. இறந்த பின் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவோம் என்பதை எல்லாம் என் பகுத்தறிவு நம்பவில்லை.

மதங்கள் எல்லாம் இடை இடையே தோன்றி சில நம்பிக்கைகள் முன் வைக்கின்றன.அவை சிறப்பான சட்டதிட்டங்களை அமுல் படுத்துகின்றன என்பது கூட உண்மை தான்.ஆனால்,அவைகள் மக்களை ஒழுங்கு படுத்த வந்தவை என்பதற்கப்பால் அவை மீது எனக்கதிகம் ஈடு பாடில்லை.

தான் தோன்றி மதமாக இருக்கும் இந்துமதம் மக்களின் நம்பிக்கையின் வளர்ச்சி என்ற அடிப்படையில் பார்த்தால் அவை இயற்கையை வழிபட்டிருக்கின்றன.

இது பற்றி மட்டும் சிந்தித்த புத்த பகவானின் தத்துவம் கர்மம் என்ற ஒன்றை வற்புறுத்துகிறது.

மதங்களற்ற மக்களின் நம்பிக்கை என்று பார்த்தால் சங்க காலத்து ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் நீரினூடே தன் பாட்டுக்குப் போகும் ஓடம் போல வாழ்வைக் கண்டு தெளிந்து வாழ்க்கையில் ஒரு சமரசத்தைக் காண்கிறது.

அதனாலோ என்னவோ,என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும், மனதின் உள்ளூர நாம் இங்கு பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் நோக்கி நாம் நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு உள்ளூர எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

அது போலவே ஆண்மா,அது உடலுக்குள் எங்கோ தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்;கர்மாக்களால் அது தன் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும்;அது ஒரு போதும் அழியாத ஆற்றல் வாய்ந்தது என்பதும்;தன் கர்ம பலனுக்கேற்ப மீண்டும் பிறப்பெடுக்கிறது என்பதும் என் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கிற விஷயம்.

பல சந்தர்ப்பங்களில் சிலவற்றுக்கான தீர்வுகள் தானாகக் கிட்டி இருக்கின்றன. பிறகு நடக்கப் போவதைக் கனவுகள் மிகத் துல்லியமாகத் தெரிவித்திருக்கின்றன.உருவமில்லாத ஏதோ ஒன்று உள்ளே இருந்து தானாகச் சிந்தித்து மூளையை எவ்வித எத்தனங்களுமின்றி அமைதிப் படுத்தியிருக்கிறது.

இவை மேற்கண்டவற்றை உறுதிப் படுத்த எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன.

இறந்தவர்களுக்கும் எனக்குமான சில அனுபவங்களும்(பயந்து விடாதீர்கள்:), மற்றும் ஏனைய சிலரின் கூற்றுக்களும் மேலும் அதனை உறுதிப் படுத்துகின்றன.

உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றனவா?

தவிரவும், இந்த இயற்கையின் காற்றினை நாம் உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்கும் வரை,தண்ணீரையும் நெருப்பையும் ஆகாயத்து முகில்களையும் பூமியில் எப்போதும் கால் பதித்துக் கொண்டிருப்பதையும் விட்டுவிட்டு நாம் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இல்லை என்ற விடை இருக்கும் வரை, எமக்கும் இயற்கைக்குமான கட்டுக்கு விடை ஒன்று இருக்க வேண்டும். அவை இல்லாமல் நாம் வாழத்தான் முடியுமா? அதனால் அந்த பிரபஞ்சத்தின் சக்தியோடு நாம் பிரிக்கமுடியாதபடி பந்தப்பட்டிருக்கிறோம் என்பதும்;அந்த இயற்கையே - அதன் ஆற்றலே - கடவுள் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஏன் இந்த தத்துவ விசாரம் என்றொரு கேள்வியை பலரும் என்னோடு எழுப்புவதுண்டு. எனக்கென்னவோ இது பற்றிய தெளிவில்லாமல் வாழ்க்கையை வடிவமைப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.....


உங்களுக்கு எப்படி? உங்கள் நம்பிக்கைகள் என்ன?

2 comments:

  1. வணக்கம் தோழர்,
    மரணம் பற்றிய சிந்தனை தேவையான அளவுக்கு இன்னும் நவீன மற்றும் பின் நவீனத் தமிழில் வராது போனது மிகவும் நட்டமே. அந்த வகையில் உங்களது பதிவு மிகவும் அற்புதம். நாம் கூட " மரணத்தைக் கொண்டாடுவோம்" என்று ஒரு பதிவு வைத்திருக்கிறேன். அனால் இவை போதாது. இன்னும் நிறைய வர வேண்டும்.

    மரண பயமற்ற வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கையாகும்.

    ReplyDelete
  2. எவ்வளவு அழகாக அதனைச் சொல்லி விட்டீர்கள் எட்வின்!

    ‘மரண பயமற்ற வாழ்க்கை தான் முழுமையான வாழ்க்கையாகும்.’

    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete