Monday, May 9, 2011

என்னை வளர்த்த மண்ணும் பசளையும்


தொடர்ச்சி.....

மீண்டும் பல்கலைக் கழகத்து வாழ்க்கைக்கு வருகிறேன்.

சிறப்புத்துறைக்குள் சென்ற பின்னர் வீட்டில் நானே ஏக போக ராணியாக இருந்தேன். அவர்களுடய பெரிய அறை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாகங்களையும் நான் ஆக்கிரமித்தும் இருந்தேன்.அவர்கள் விறாந்தையில் போட்டிருக்கும் விருந்தினர்களுக்கான நாற்காலி என் பரீட்சைக் காலங்களில் வீட்டின் பின் புறத்து மாமர நிழலுக்கும் கிணற்றுக் கரையோரங்களுக்குமாக நகர்ந்த படி இருக்கும்.கதிரையில் உட்கார்ந்து விட்டு இரண்டு கைபிடிக்கும் குறுக்காக ஒரு அகன்ற பலகையைப் போட்டு விட்டு அதில் புத்தகத்தை வைத்துப் படிப்பது நல்ல வசதி.அமைதியான சூழல்,அன்பான தாய்,நல்ல சாப்பாடு,முழு சுதந்திரம்,பிரச்சினைகள் ஏதுமில்லாத மனம்! படிப்பதற்கு என்ன குறை?

இப்படியாக இருந்த வீட்டு சூழலில் படிப்பில் என்னோடு தோழிமாராக இருந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நீலா,தங்கேஸ்வரி,அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.(தற்போது லண்டனிலும் சுவீடனிலும் இருக்கிரார்கள்) அதில் நீலா பொதுப் பட்டப் படிப்பை தொடர்ந்தார். அநேகமாக 11-12 ஒரு விரிவுரை இருந்தால் அடுத்தது 2-3 ஆக இருக்கும்.இவர்கள் எல்லோரும் மதியம் சாப்பாட்டைக் கொண்டு நான் இருந்த வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக இருந்து உண்போம்.பின்னர் சின்னத் தூக்கம் பிறகு சிரம பரிகாரம் ஒப்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அடுத்த ஊர்வலம் போவோம்.

இப்படியாக இருந்த ஒரு நாளில் நீலாவின் அக்கா மீரா அறிமுகமானார். அவர் பல்கலைக் கழக நிதித்துறையில் கடமையாற்றி வந்தார்.உணவு உண்பதற்காக வந்த அவரோடு நாளடைவில் நான் மிக்க நெருக்கமானேன். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு ஒத்த ரசனை இருந்தது.அரசியலில் இருந்து சினிமா வரை நமக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் இறுதியில் ஒரு இணக்கப் புள்ளியில் வந்து நிற்போம்.

நான் கலைப் படங்கள் பற்றிப் பேசும் போது அவர் திருமறைக் கலா மன்றத்தின் கலைப் படைப்புகள் பற்றிப் பேசுவார்.நான் படித்த கிட்லர்,முசோலினி,அலக்சாண்டர்,காந்தி பற்றி - அவர்களுடய ஆளுமைகள் - நாட்டை என்ன உலகத்தையே புரட்டிப் போட்ட அவர்களின் அதீத இயல்புகள் பற்றிப் பேசும் போது, அவர் இந்திரா காந்தியின் ஆளுமை பற்றிப் பேசுவார்.நான் வைதீகத்தின் குறை நிறைகளைப் பேசும் போது அவர் கத்தோலிக்கத் தமிழர் பற்றிப் பேசுவார்.பல்கலைக்கழகக் கல்வியை தொடராத அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.

அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா என்று அந்நேரங்களில் நான் வியப்பதுண்டு.அருகில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் படியாக மிக மென்மையாகப் பேசுவார்.மெல்லிய புன்னகையோடு எந் நேரமும் காணப்படுவார்.அநேக நேரங்களில் அவருக்கு கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவார் என்று நான் நினைப்பதுண்டு.அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவே இல்லை.என் வாழ்வில் அறிவாலும் தோழமையாலும் குணங்களாலும் என்னைக் கொள்ளை கொண்டு போனவர் ஒருவர் உண்டென்றால் அது அவர் ஒருவரே.அதன் பின்னரும் அவருக்கு முன்னரும் அவருடயதைப் போன்ற ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லை.

அவர் கத்தோலிக்கர்.சைவத்தில் இருந்து தமிழைப் பிரித்து தமிழ் கத்தோலிக்கம் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியவர் அவர் தான்.பொட்டு வைப்பது, பொங்கல் விழாக்கள் இந்துப் பண்பாடல்ல தமிழர் பண்பாடு என்று கற்றுத்தந்தவர்.மதங்களுக்கு வெளியே நின்று மதங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்டவர்.திருமறைக்கலா மன்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நான் கார சாரமான விவாதங்களை நிகழ்த்துவேன்.நான் அதீத விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் புன்னகையோடும் நிதானத்தோடும் மாறாத குரலின் இனிமையோடும் எனக்கு பதில் தருவார்.இப்போது கண்டாலும்,’இப்பவும் அப்படியே தான் இருக்கிறீங்களா மீராக்கா?” என்று கேட்க ஆவல்.ஆனால்,1995ம் ஆண்டோடு தொடர்பு விட்டுப் போய் விட்டது.

அந்தக் கத்தோலிக்க திருமறைக்கலாமன்றம் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியலையும் உளவியலையும் பக்க பலமாகக் கொண்டு இந்துத் தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கத்தோலிக்கத் தமிழ் பண்பாட்டை நிறுவியது.அதற்கு அவர்கள் அரங்காற்றுக் கலையை ஊடகமாகப் பயன் படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்து விடுதலை அரசியலின் பின்னணியில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அரங்காற்றுக் கலை மிக்க வீரியத்தோடு வெளிப்பட்டு நின்றிருந்தது.

கத்தோலிக்கக் குருமார்களால் சமூகத்தை விளங்கிக் கொண்டு வெளிவந்த ‘நான்’என்ற உளவியல் சஞ்சிகை அவர்கள் எவ்வளவு வல்லமை பொருந்தியவர்கள் என்பதற்கும் தூரதிருஷ்டி நோக்கோடு செயற்பட்டார்கள் என்பதற்கும் நல்லதொரு சாட்சி.அதே நேரம் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் சைவர்களை விட அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக அக் குருமார்கள் விளங்கினார்கள்.

அது நிற்க,

இவ்வாறாகச் சிந்தனைச் சுவாரிசங்களோடும் நாட்டின் அரசியல் பிரச்சினைகளோடும் நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன.அப்போது ’திசை’ என்றொரு வாரப் பத்திரிகை மிக அமைதியான முறையில் மிகக் கனதியான பக்கங்களோடும் புதிய சிந்தனைகளோடும் புதிய பார்வைகளோடும் வெளி வந்து கொண்டிருந்தது.

ஒருவாறாக நான் பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தை அடைந்தேன்.அப்போது ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை இறுதி வருடத் தேர்வுக்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.அதற்கு எதனைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்ற கேள்வியோடு நான் இருந்த வேளை திசை பத்திரிகையில் ஒரு மூலையில் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குச் செய்தி இடம் பெற்றிருந்தது.எனது ஆய்வுக்கான தலைப்பு கிட்டியது இப்படித்தான்.

ஒரு பதிவொன்றின் பிறப்பு இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

அது இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நேரம்.மூன்று மாதத்துக்குள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு இருந்தது.நான் பரீட்சையை முடித்த கையோடு ஆய்வுக்காக நீர்கொழும்பு பயணமானேன்.தலைநகர் கொழும்பில் இருந்து நீர் கொழும்பு பஸ் எடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டு
மீண்டும் கொழும்பு வருவதாக என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. அது உடனடியாக வந்து உங்களது’தற்காலிக உதவி விரிவுரையாளர்’பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தக்வலைத் தந்தது.

இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த, மறுநாள் ரயிலில் வவுனியா வந்து பின் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனக்குக் கிட்டிய முதல் மாதச் சம்பளத்தில் அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் செலவை யும் பார்த்துக் கொண்டேன்.

இவ்வாறு பிறப்பெடுத்தது தான் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற என் பதிவு!

தொடரும்.....

7 comments:

  1. அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா//
    மீராக்கா எமக்கும் நேசமாகி விட்டார்.
    தாங்கள் கடந்த பாதை அறிய நேர்கையில் வியப்பும் நெருக்கமும் அதிகரிக்கிறது தோழி.

    ReplyDelete
  2. நிலா,அண்மைக்காலமாக என் வலைப்பூவுக்குள் ஒருவர் அத்து மீறிப் பிரவேசித்துக் கொண்டிருக்கிறார்.உங்கள் அழகான பின்னூட்டம் அந்த நபரால் அழிக்கப் பட்டு விட்டது.

    அத்தனை ஆசை இந்த வலைப்பூவில்!:)

    சில மனிதர்கள் பூமிக்குப் பாரமாக ஏனோ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    விரைவில் இவற்றை சரி செய்கிறேன்.

    அதுவரை நண்பர்கள் என்னை மன்னிக்கட்டும்!

    ReplyDelete
  3. அதிசயமாக இருக்கிறது நிலா!

    உங்கள் பின்னூட்டம் மீண்டும் வந்திருக்கிறது!!

    நன்றியைச் சமர்ப்பிப்போம்!

    ReplyDelete
  4. அன்பின் தோழி... சில‌ நாட்க‌ளாக‌ ப்ளாக‌ரிலும், கூகுள் ட்ராஸ்லேட்ட‌ரிலும் ஏதேதோ சிக்க‌ல்க‌ள். இர‌ண்டொரு நாள் எதையும் ப‌திய‌ முடியாம‌ல் இருந்த‌து. தானாக‌ ச‌ரியான‌து. தொழில்நுட்ப‌த் த‌ள‌த்தில் ஏதோ பெரிய‌ கோளாறு போல‌. க‌வ‌லை வேண்டாம். ந‌ம் சூழ‌ல் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எதையும் ஐய‌க்க‌ண்ணோடு பார்க்க‌ வைக்கும். எல்லாம் ச‌ரியாகும்... வ‌ழ‌மைபோல‌ காத்திருத்த‌ல் தான் சுல‌ப‌வ‌ழி.

    ReplyDelete
  5. இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த,//
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அது வேறு இது வேறென்றே எனக்குத் தோன்றுகிறது நிலா.பிரச்சினை இதற்குள் மட்டுமில்லை. என் கூகுள் தபால்களுக்கும் இது தான் நிலை!

    பார்ப்போம்!

    ReplyDelete
  7. என் புதிய தோழியே வருக!

    கடினமான ஒரு காலப் பகுதியில் என்னோடு இணைந்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.மனதுக்குள் ஒரு இனிய குளிர்ச்சி.

    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் என் அன்பார்ந்த நன்றி.

    ReplyDelete