Tuesday, July 2, 2013

இலக்கிய சந்திப்பு - 13 - தந்த வட்டார வழக்கு சிந்தனைகள்



இலக்கிய சந்திப்பு 13க்கு போக என்னை உந்தித் தள்ளியது தென்றலில் வந்திருந்த ஒரு வாசகம். ’என்ன நடந்திருந்தாலும் சரி; எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்’ என்ற வசனம் தான் அது. அது மாட்டைத் துரத்திச் செல்லும் தடியைப் போல என்னைத் துரத்தி அங்கே அனுப்பி வைத்தது.

காரணம் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்ளும் இரண்டு பேர் தம்மால் வரமுடியாமையைத் தெரிவித்திருந்தது தான். ஒருவருக்கு மிகுந்த சுரம். மற்றவருக்கு நாடுகடந்த ஒரு பயணம்.

வழக்கமாக வருபவர்கள் 4. அல்லது 5 பேர் தான். அதிலும் இருவர் குறைந்தால்  என்ன செய்வது என்ற மனச் சோர்வு தான் அதற்குக் காரணம். இது ஒரு வித இலக்கியச் சோர்வும் கூட. அதற்கான சமூக அடிப்படைகள் தனியாக ஆராயத் தக்கவை.

அது போகட்டும், அங்கு போன போது தான் எனக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தன. ஒன்று நம் சக பதிவர் யாழ்புத்தர் வந்திருந்தார். மற்றவர் இன்னொரு சகபதிவரான மழை ஷிரயா அறிமுகப்படுத்தி விட்டுப் போயிருந்த சத்தியநாதன் அவர்களின் பிரசன்னம்.

நண்பர்களே! அதனால் தான் சொல்லுகிறேன் ‘ என்ன நேர்ந்திருந்தாலும் சரி; எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்’. எதிர்பாராத ஆச்சரியங்களால் நிறைந்து போயிருக்கிறது வாழ்வு! என் உற்சாகம் அனைத்தையும் மீட்டுத் தர இந்த இரண்டு பேரும் அன்றைக்குப் போதுமானவர்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி.

நிகழ்ச்சி பற்றிய தனிப்பதிவு தனியாக விரைவில் பிரசுரமாகும். இன்றய இந்தப் பதிவுக்கு வேறொரு காரனம் இருக்கிறது.சந்திப்பில் ஒரு சந்தர்ப்பத்தில் மதுரை வட்டார வழக்கு பற்றிய பேச்சு வந்தது. நண்பர். திரு. சத்திய நாதன் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ’தோழிமார் கதையை’ அவர் மனதில் அக்கவிதை அமர்ந்திருந்தவாறை அப்படியே பாடிக்காட்டிப் புலப்படுத்திப் பரவசப்படுத்தினார். அப்போது அங்கு ஜொலித்த இலக்கிய அழகை கவிப் பேரரசர் பார்த்திருந்தால் மனம் நெகிழ்ந்து போயிருப்பார்.

தன் வாழ்வை ; தான் வாழ்வதை அங்கு அவர் கண்டிருப்பார்.

பாடல் இது தான்; ஆனாலும் பார்த்து வாசிக்கும் பாடலுக்கும் அதை ஆழந்து அனுபவித்த ஒருவர் அதில் மூழ்கி சொல்லுகின்ற போது அதில் தொனிக்கும் அழகுக்கும் நிறைய வேறு பாடுண்டு. நிறைய! நிறைய!!

எனினும் பாடலைத் தருகிறேன். ஏற்கனவே இப்பாடலை என் 2010 செப்ரெம்பர் பதிவொன்றில் இட்டிருக்கிறேன். எனினும் மீண்டும் தருவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்க; நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!



எத்தனை அழகு! எத்தனை நயம்!! கிராமத்து வாசத்தை என்ன சொல்ல!! 

இதனை அவர் பாடிக்காட்டிய போது கடசியாக வந்த ஞானம் சஞ்சிகையில் வெளிவந்திருக்கும் ‘ கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள்’ என்ற திரு.கிருஷ்னானந்தன் எழுதி வரும் வட்டாரக் கதைகளுக்கு மனம் ஓடிப்போயிற்று. அதில் வந்திருந்த இரண்டு கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தான் இந்தப் பதிவு. கடந்த பதிவில் உங்களைச் சற்றே அருட்டி இருப்பேன். அதற்குச் சற்றுப் பிராயச் சித்தமாக இது இருக்கட்டுமே என்பது இன்னொரு காரணம்.

கதை 1 புழுகுப் போட்டி - 1

ஆண்டு தோறும் விஷேஷ தினங்களில் எங்கள் ஊர் இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளில் ஒரு முறை புழுகுப் போட்டி என்றொரு நிகழ்ச்சியையும் சேர்த்திருந்தார்கள். இந்தப் புழுகுப் போட்டியில் பங்கு பற்றிய ஒரு புழுகர் கதை சொல்லத் தொடங்கினார்.

நான் ஒரு நாள் காட்டுக்கருகாகப் போய்க் கொண்டிருக்கும் போது கரடி ஒன்று என்னைத் துரத்தத் தொடங்கியது. நான் ஓடி ஓடி முடியாத பட்சத்தில் ஒரு மரத்தில் ஏறி கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டேன். கரடி மரத்தின் கீழே வந்து என்னை அன்னாந்து பார்த்துக் கொண்டு நின்றது. பயத்தில் என் கை,கால்கள் நடுங்கத் தொடங்கின. தன் பாட்டில் சலம் போகத் தொடங்கி விட்டது. சலம் கயிறு போல கீழே போய்க் கொண்டிருக்க, கரடி திடீரெண என் சலத்தைப் பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தது.

கரடி எனக்குக் கிட்டே நெருங்கி விட்டது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் தம்மடக்கி சலத்தை அடக்கினேன்.கரடி தொம்மென தலை கீழாக விழுந்து செத்துப் போய் விட்டது.

புழுகுப்போட்டி கதை 2 :

ஒரு நாள் எனது நண்பன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தான். ஒரு குட்டையில் தண்ணீர் குடிக்க போய் நின்ற போது எதிரே குட்டையின் மறு பக்கத்தில் இவன் மேல் பாய்ந்து குதறிக் கொல்வதற்குத் தயாராக ஒரு வேங்கைப் புலி நிற்பதைக் கண்டான். இவனிடமோ துப்பாக்கி மட்டுமே தோளில் இருந்தது. தோட்டாக்கள் ஒரு தோற்பையில் சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தின் கீழ் இருந்தன. கொஞ்சம் அசைந்தாலும் உயிருக்கு ஆபத்து. இவனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.வெறும் துப்பாக்கியை புலியை நோக்கி தூக்கிக் காட்டினான். புலி பயந்து ஓடி விட்டது.

இன்னொரு நண்பன் வேறொரு நாள் இதே போலவே வேட்டைக்குச் சென்றான். இதே போலவே ஒரு வேங்கைப்புலி இவன் மேல் பாய்வதற்குத் தயாராக இருந்தது. இபோது துப்பாக்கி ஒரு மரத்தின் அடியில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. தோட்டாக்கள் மட்டும் இவனது சட்டைப்பையில் இருந்தன. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சற்று நகர்ந்து துப்பாக்கியை எடுக்கப் போனாலும் ஆபத்து. உடனே சட்டென்று ஞாபகம் வர சட்டைப்பையில் இருந்த தோட்டாக்களைத் தூக்கிக் காட்டினான். புலி பாய்ந்து ஓடி விட்டது.

எனது நண்பர்களைப் போலவே நானும்  ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். அதே குட்டை, அதே புலி. என்னிடம் இப்போது துப்பாக்கியும் இல்லை; தோட்டாவும் இல்லை.தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி சற்றுத் தூரத்தில் மரத்தினடியில் சாத்தப்பட்டிருந்தது. புலி என் மீது பாய்வதற்குத் தயாராகி விட்டது. துப்பாக்கி இருக்கும் இடத்துக்கு நான் நகர்ந்தால் ஆபத்து. அப்போது தான் திடீரென ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே விரைந்து செயற்பட்டேன்.

எனது சட்டைப்பைக்குள் இருந்த துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தையும் குறிபார்த்துச் சுடுவதில் நான் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சான்றிதழையும் புலிக்குத் தூக்கிக் காட்டினேன். புலி வீரிட்டுக் கத்திக் கொண்டு பாய்ந்தோடி விட்டது.

( நன்றி: ’ஞானம்’ -  கலை இலக்கிய சஞ்சிகை, ஜூன் 2013, கொழும்பு பக்;50 - 51)

இதனை எழுதுகின்ற போது இந்தியாவில் இருந்து பிரசுரமாகி வரும் யுகமாயினி சஞ்சிகையில் இவ்வாறான வட்டாரக் கதைகள் வாசித்த நினைவிருக்கிறது. அவற்றை புத்தகக் கடலுக்குள் சுழியோடிப் பிடிக்க வேண்டும். அவற்றை தனியாக வேறொரு தடவை பதிவிடுகிறேன்.

10 comments:

  1. மிகவும் அருமையாக சத்தியநாதன் அவர்கள் அதை பாடிக்காட்டினார் ,சத்தியநாதனுக்கு நன்றிகள்....பதிவுக்கும் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. புத்தன், நீங்களும் அங்கும் இங்கும் வந்து சிறப்புச் சேர்த்தீர்கள். எழுத்து மூலமாக மட்டும் அறிமுகமாயிருந்த ஒருவரைக் கண்டது ஒரு எதிர்பாராத சந்தோஷத்தைத் தந்து சென்றது.

      உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி புத்தன்.

      Delete
  2. புழுகுக் கதைகள் வயிறு புண்ணாகும் படி சிரிக்கச் செய்தது. பகிர்வுக்கு நன்றி தோழி.

    சிமிழின் அழகு சொக்க வைத்தது.

    தோழரின் மனச்சிமிழிலிருந்து
    வந்த வைரமுத்துவின் தோழிமார் கதை சிமினிழினின்று
    கசிந்த சுகந்தமாய் பரிமளித்தது.

    மாட்டைத் துரத்திச் செல்லும் தடியைப் போல //

    ரசித்தேன் தோழி.

    உங்க பதிவுகள் மிக ஆசுவாசம் தருவதாய். உலகின் எந்த மூலையில் சிதறுண்டிருந்திருந்தாலும் மனதளவில் வெகு நெருக்கமாக்கும் வல்லமை கொண்டதாய்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நிலா.

      ஒவ்வொரு தடவை இச் சந்திப்பு நிகழ்ச்சிக்குச் செல்லும் போதும் உங்களையும் கீதாவையும் நினைத்துக் கொள்வேன்.

      Delete
  3. என்ன நேர்ந்திருந்தாலும் சரி; எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்’. எதிர்பாராத ஆச்சரியங்களால் நிறைந்து போயிருக்கிறது வாழ்வு!//

    ஆஹா!

    ReplyDelete
    Replies
    1. ஓம். உண்மை தான் நிலா.

      அன்றய தினம் நிதிவருடக் கடசி நாள். அலுவலகம் போகவேண்டி இருந்தது. வேலையில் இருந்து 2 மணி நேர சம்பளமற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு வரும் போது இதெல்லாம் எனக்கு தேவையா என்ற ஒரு கேள்வி தான் என்னிடம் எஞ்சியிருந்தது.

      புத்தனும் சத்திய நாதனும் ஆம். அது தேவை தான் என்று ஆக்கி விட்டார்கள்.

      அவர்கள் விளம்பரத்தினால் அன்றி பதிவின் மூலம் அறிமுகமானவர்கள் என்பது அதன் தனித்துவமான சிறப்பு நிலா.

      Delete
  4. அழகான அருமையான பாடல்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தனபாலரே!

      பாடலைப் போல தமிழ்நாட்டு வட்டாரக் கதைகளும் நல்ல அருமையாக இருக்கும். அதில் சிலவற்றையேனும் கண்டு பிடித்து போட வேண்டும்.

      Delete
  5. புளுகு கதைகள் அருமை.

    வைரமுத்து கவிதை வைரம்...

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. குமாரை நினைத்தேன். இன்று வந்தீர்கள்.குறும்படங்கள் பற்றிய நினைவுகளோடு நீங்கள் இருப்பீர்கள்.

    நலமா குமார்?

    ReplyDelete