Tuesday, August 20, 2013

இலக்கியச் சந்திப்பு - 15 -


சூரியன் இதமான சூட்டோடு வெளியே வருகிறான். தென்றல் இதமாக வருடிச் செல்கிறது.மரங்கள் துளிர்விடுகின்றன. சிட்னியின் அழகு பூக்களாய் மலர்கிறது. ஆம் வசந்தகாலம் ஆரம்பமாகிறது.

இலக்கியங்கள் இயற்கையை பேசியிருக்கின்ற அழகை நாம் சங்ககாலத்தில் இருந்தே காணலாம்.’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே” என்று கொல்லையில் பூத்த பூவைக் கோவித்துக் கொண்ட போர்காலப் பெண்ணை  நாம் இன்றும் நம்மோடு பொருத்திப் பார்க்கலாம். பக்தியைப் பேசுகின்ற போதிலும் கூட ”மாசில் வீணையும்; மாலை மதியமும்; வீசு தென்றலும்; வீங்கிளவேனிலும்; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே; ஈசன் எந்தை” - என்றே பாடக் கண்டோம். ஈழத்தின் மகாகவி,’ நகர் புற நாகரிகத்தில் இருந்த படி தன் ஊரழகின் ஏக்கத்தை ‘ இந்நாளெல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்;முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும் ‘கொல்’லெனச் சிரிச்சுக்கொண்டிருக்குங்கள்’ என்பார். இன்றய நவீன காலத்தில் இயற்கையின் அழகை வியக்கின்ற இசைப்பாடல்கள்  அதிகம். கவிஞர் வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்றும்;ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயம் என்றும் அதிசயிப்பார்.

இந்த அதிசயங்களை நாம் காணவேண்டாமா? 

இம்மாத இலக்கிய சந்திப்பு - 15 - வசந்த கால ஆரம்பத்தைக் குறிக்கு முகமாகவும்; நமக்கு மிக அண்மையில் இருக்கும் ஓர்பன் உயிரியல் பூங்காவில் தற்போது "The Cherry Blossom Festival" நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தாலும்  இம்மாத சந்திப்பை கடந்த மாதம் தீர்மானித்த படி இயற்கையைச் சந்திக்கும் ஒரு நிகழ்வாக நிகழ்த்த எண்ணியுள்ளோம். 

இலக்கிய நெஞ்சங்கள் இயற்கையுடனான உங்கள் உறவு பற்றிய எண்ணங்களையும் இலக்கிய சிந்தனைகளையும் இயற்கையோடு உறவாடியபடி நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

8 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இலக்கியச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி கலந்த மகிழ்ச்சி நண்பர்களே!

    ReplyDelete
  4. இலக்கியமும் இயற்கையும் சுழலும் அச்சின் மையம் ஒன்றுதானே! வசந்தகாலத் துவக்கம் கொண்டாட்டத்துக்கு உரியது. தேடித் தேடித் தேன் பருகும் தங்கள் ஊரின் இலக்கியச் சந்திப்புகள் எமக்கற்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன தோழி.அவை பற்றியான தங்கள் பதிவுகள் அவ்வேக்கம் போக்குவதாயும்.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி நிலா.

    இங்கு இப்போது பூக்களின் மாதம்.செரிப்பூக்கள் இலைகள் ஏதுமற்று பூக்களாய் மாத்திரம் பூத்திருக்கின்றன.இந் நாட்டு சுவாத்தியம் பூக்களுக்கு மிக வாய்ப்பானவை. அந் நாட்டுக் கவிஞர்கள் முல்லையையும் பொன்னொச்சியையும் பாடினார்களே அவர்கள் இங்கு இப்பூக்களைக் கண்டிருந்தால் என்ற ஏக்கத்தையும் கற்பனையையும் தவிர்க்க முடியவில்லை.

    கூடவே உங்களையும் கீதமஞ்சரியையும்.

    வாழ்க்கை அத்தனை கொடுப்பனைக்குரியதாக இல்லை. :)

    நன்றி நிலா.

    ReplyDelete
  6. இலக்கியச் சந்திப்பின் தேனெடுத்து வந்து எங்களுக்குப் பருகத்தரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன் நானும். பக்கத்திலிருந்தும் பங்கெடுக்கவியலா என் நிலையைக் குறித்து எனக்கும் ஏக்கமே. என்னை இங்கே நினைவுகூர்ந்தமைக்கு நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  7. வரும் வரும். ஒரு நாள் நீங்களும் வருவீர்கள்.அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன்.

    அடடா, இது தான் கீதாவா? எம் இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பானுவைப் போலவே இருக்கிறீர்கள். :)

    ReplyDelete
  8. / அந்த பிஸ்கட் டின்னை எத்துணை தொலைநோக்கோடு பத்திரப் படுத்தி இருக்கீங்க!!/
    என் இந்த மேசையில் என் கண் படும் தூரத்தில் தான் அது இருக்கிறது. நாணயங்கள் சேகரித்து வைக்கும் ஒன்றாகவும் அது இப்போது பயன் படுகிறது.

    அண்மையில் 1988ன் ஆண்டு அவுஸ்திரேலிய அரசு 1788ம் ஆண்டு கலகம் பற்றிய ஞாபகார்த்தமாக வெளியிட்ட 6 பகுதி கொண்ட முத்திரை வரிசையைத் தற்செயலாகப் பார்சல் ஒன்றில் பார்த்தேன்.

    ஆரம்பத்தில் பிரித்தானியர் வருவதும் இந் நாட்டு பழங்குடிமக்கள் கங்காரோடு தரையில் இருந்து பார்ப்பதுமாக தொடங்கிய அந்த முத்திரை வரிசை இறுதியாக வெள்ளைக் கொக்குகளோடு பிரித்தானியர் தரையில் நிற்க இந் நாட்டு மக்கள் வள்லத்தில் ஏறிப் போவதைப் போல சித்திரிக்கப்பட்டிருந்த வரலாற்றுக் காட்சி மனதை உருக்குவதாகவும் உண்மை ஒன்றைத் தெளிவாகச் சித்திரிப்பதாகவும் இருந்தது.

    இந் நாட்டில் மண் பறிக்கப்பட்ட வரலாறைச் சொல்ல இம் முத்திரைத்தொகுதி ஒன்று போதும்.

    என்னவாக இருப்பினும் துணிந்து இதனை வெளியிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கத்தை இதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.

    முத்திரைகளின் வரலாற்றுப் பெறுமதி அத்தகையது நிலா!

    நன்றிப்பா. வந்ததற்கும் சொன்னதற்கும்.

    ReplyDelete