Monday, March 31, 2014

ஈழத்தின் கிழக்குத் தமிழ் பற்றும் வடக்குத் தமிழ் பற்றும்

ஈழத்துத் தமிழ் கவிஞர்கள் இருவரின் தமிழ் பற்றிய பாடல்கள்


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

-காசிஆனந்தன்-

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா.
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை.
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்
காயும கிழங்குகளை தின்று மகிழ்வேன்.

மாடமிதிலை நகர் வீதிவருவேன் – இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்.
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து – அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்.
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா – என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா – கவிக்
கள்ளைக் குடித்தவெறி யேறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை.
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

ஈழத்து, யாழ்பாணத்து, மாவிட்டபுரம் பாவலர் க.சச்சிதானந்தன்




3 comments:

  1. கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது கவிதை வீறு கொண்ட தமிழால் நெஞ்சத்தில் உரமேற்றுகிறது என்றால் பாவலர் க.சச்சிதானந்தன் அவர்களது கவிதையோ தமிழின் இலக்கியச்சுவைமாந்தித் தள்ளாடச் செய்கிறது. நுகரத் தந்தமைக்கு மிக்க நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  2. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு கீதா.தாமதத்துக்கு என்னை மன்னியுங்கள்.

    ReplyDelete
  3. "கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்

    கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும்

    வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்

    வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்

    பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும்

    பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்

    ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும்

    ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்"

    ReplyDelete