Wednesday, September 24, 2014

பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்; தோழமைக்காக ஒரு பதிவு....




கொஞ்ச மாதங்களாய் சோர்வு. எழுத ஏதும் இல்லாதது போலவும்; மெளனமாக இருக்க வேண்டும் போலும் ஒரு நினைப்பு. எதனை முயன்றாலும் ஏதும் கைகூடுவதாக இல்லை. வேலைத்தலத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களா? அல்லது பண்பாடுகள் தரும் அதிர்ச்சிகளா? முகமூடிகளுக்கு அப்பால் கண்டுகொள்ளப்படுகிற விகார முகங்கள் தருகிற அதிர்ச்சிகளா?வாழ்க்கை பற்றிய தடுமாற்ற சிந்தனைகளா? எதுவென்று தெரியவில்லை.

இணையப்பக்கங்களுக்கும் அதிகம் வருவதில்லை. ’சுகமும் துக்கமும் வெளி இடங்களில் இல்லை. மற்றவர்களுடய குணக்கேடுகள் நம்மை எதுவும் செய்யாது’ என மகா பாரதத்தில் ஒரு வாசகம் வரும். அது போல, ’எதுவும் நேராதது மாதிரி நடந்து கொள்ளுங்கள். என்ன நேர்ந்திருந்தாலும் சரி’ என்றும் இணையத்தில் ஒரு அற்புத வாசகம் இருந்தது. இவை எல்லாம் ஏன் என்னை தூக்கி நிறுத்தப் போதுமானதாக இல்லை என்று தெரியவில்லை.

ஓர் அனுபவம் ஒன்று மெளனமாக சேகரிக்கப்படுகிறது என்பது மாத்திரம் புலனாகிறது. அது எத்தகைய அனுபவம் என்பதும் எத்தகைய பாடம் என்பதும் புரிந்து கொள்ளப்பட இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அது வரை இது ஓர் வலி மிகுந்த பயணம்.

சரி அது போகட்டும்..

ஏதோ ஒரு புள்ளியில் உயிர்ப்பினை உசுப்பி இயக்கத்தினைத் தொடங்க வேண்டும்.

நிலா அதற்கான ஆரம்பமாய் ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தா. மிக்க நன்றி நிலா. பறக்கவும் பறக்கும் நிமித்தமாகவும்  உங்கள் தொடர் பதிவின் அழைப்பினை நன்றியோடு  ஏற்று என் பதில்களைத் தந்திருக்கிறேன்.

...............................................

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நிச்சயமாக இருக்கப் போவதில்லை. :)

சொத்துக்கள் யாவும் சரியாக சரியானவர்களிடம் போக இருப்பதை உறுதி செய்து கொள்வதோடு என் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வேன்.

ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ கடந்த காலத்தில் தவறுகள் விட்டிருப்பதாக மனதுக்குத் தோன்றினால் அதற்கு ஏதேனும் பிராயச் சித்தம் செய்யலாமா என யோசிப்பேன். ( என்னால் மன்னிக்க முடியாத நபர்கள் என் கடந்த காலத்தில் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு மெளனமான புறக்கணித்தலின் மூலம் மிகக் கடுமையான தண்டனையையும் வழங்கி இருக்கிறேன்.)

மரணத்திற்கு மனதளவில் தயாரான நிலையில் இருப்பேன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு சமயமும் பண்பாடும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறைகளைப் போதிக்கின்றன. ஒரு பண்பாட்டுக்குச் சரியாக இருப்பது இன்னொரு பண்பாட்டுக்கும் சமயத்துக்கும் முரண்பாடாக இருக்கிறது.

உதாரனமாக தவறுகள் மன்னிக்கப்படும் என கிறீஸ்தவம் போதிக்கிறது. இந்து சமயம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயம் ‘கணக்கு’ வைக்கப்படும் என்று சொல்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நம் பண்பாடு போதிக்கிறது. ஒருவர் ஐவரை மணந்து கொள்ளலாம் என இஸ்லாம் போதிக்கிறது.

கணவனும் மனைவியும் தமக்குள் உண்மையாகவும் விசுவாசத்தோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும் என்பதை நம் பண்பாடு பொதுவாக ஒப்புக் கொள்கிறது. அவுஸ்திரேலியப் பண்பாடு திருமணத்துக்கு அப்பாலான ஆண்,பெண் உறவை ஆரோக்கியமானது என ஏற்றுக் கொள்ளுகிறது.

கொலை பஞ்சமா பாதகம் என போதிக்கப்படும் அதே வேளை ஒருவர் ஒரு மனிதனை காரணம் கருதியோ கருதாமலோ கொலை செய்தால் அதற்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இதனையே இராணுவம் செய்தால் / மனித உயிர்களைக் கொன்றால் விருதுகளும் சன்மானங்களும் கொடுக்கப்படுகின்றன.

இவை பற்றியும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இறப்புக்குப் பின் என்ன நடக்கும்? யாரோ ஒருவர் போட்டு வைத்த இந்தப் பண்பாடுகளும் சமயமும் எம்மை மானசீகமாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறதா? இந்த இலட்டுமணக்கோடுகள் யாரால் எப்போது என்ன நோக்கத்துக்காகப் போடப்பட்டன என்பது பற்றி எல்லாம் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பண்பாடுகளும் சமயங்களும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? எங்கள் வாழ்க்கையை எப்படி நாங்கள் வடிவமைத்திருப்போம்?


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சஞ்சிகை ஒன்றில் படித்த விடயம் ஒன்று.

காதலிக்கும் மனைவிக்குமான வேறுபாடுகளை அது இவ்வாறு பட்டியலிடுகிறது.

* பேச ஒரு விடயமும் இல்லாவிட்டாலும் கூட பேசிக்கொண்டே இருந்தால் அது அது காதலன் காதலி.
ஒன்றுமே இல்லாத விடயத்தை பொழுதுக்கும் பேசிக்கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* எங்கேயாவது போகும் போது சமமாக நடந்து போனால் அது காதலன் காதலி.
எங்கேயாவது போகும் போது ஆண் முன்னாலும் பெண் பின்னாலும் அல்லது பெண் முன்னாலும் ஆண் பின்னாலும் நடந்து போய் கொண்டிருந்தால் அது கனவன் மனைவி.

* பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால் காதலன் காதலி.
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை என்றால் அது கணவன் மனைவி.

* பெண்ணின் வருகைக்காக ஆண் காத்துக்கொண்டிருந்தால் காதலன் காதலி. இந்தக் கிரகம் புடிச்சவன் இன்னும் வீட்டுக்கு வரலியே என ஆணுக்காய் பெண் காத்துக்கிட்டிருந்தா கணவன் மனைவி.

*பெண்னும் ஆணும் ஒருவருக்கொருவர் மிஸ் கோல் விட்டுக்கிட்டா காதலன் காதலி. பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர் அழைக்கும் கோலை மிஸ் கோல் ஆக்கினா கனவன் மனைவி.

*உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் புகழ்ந்து கிட்டா காதலன் காதலி. உன்னால தான் எல்லாமே என ஒருவருக்கொருவர் திட்டிக்கிட்டா கனவன் மனைவி.

(நன்றி: 3.3.13 குங்குமம்)


4.. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

வெளியே போய் வருதல், கடைச்சாப்பாடு, ஏகாந்தம்; மற்றும் தூக்கம்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

இரண்டு மாடுகள் சேர்ந்து ஓட்டுகின்ற வண்டி இந்த வாழ்க்கை என்பதால் திருமணம் என்ற பந்தம் பற்றிய தெளிவான புரிதல் முதலில் வேண்டும்.அதிலும் குறிப்பாக அன்னிய நாடுகளில் அது மிக முக்கியம். திருமணம் என்ற சொல்லின் மூலம் அவர்கள் எதற்குக் கட்டுப்படுகிறார்கள் எதற்குக் கட்டுப்படவில்லை என்பது பற்றிய அறிதல் அவசியம். பிறகு சக ’மாடு’:) பற்றிய குறை நிறைகளை அறிந்து தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிலே விட்டுக் கொடுக்கலாம் எதிலே விட்டுக் கொடுக்க முடியாது என்பது பற்றி தன்னைத் தானும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அவை பற்றி இருவரும் கலந்தாலோசித்துக் கொள்ளுதலும் அவசியம்.
.
மற்றம்படி அவரவர் வாழ்க்கை அவரவரது. சொல்ல என்ன இருக்கிறது? ஏதேனும் பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்பேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

அவனவன் (மனிதர்கள்) (போர்)அடிச்சுக் கொள்ளட்டும். எல்லாம் அவனவன் உண்டாக்கியது தானே! அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் வாய் பேசா ஜீவன்களை அதன் பாட்டில் விட்டு விடுங்கள். அதற்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால் செய்ய ஆவல்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பெரும்பாலும் புத்தகங்களிடம்; சில வேளைகளில் தெரிவு செய்யப்பட்ட நண்பர்களிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அதை எனக்குச் சொன்னவரிடம் இருந்து நூலைப்பிடித்து மூலத்தைக் கண்டுபிடித்து நேரடியாக விடயத்தைக் கேட்பேன். நிலைமைக்கேற்ற படியான தண்டனையும் வழங்கப்படும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எதுவும் நிரந்தரமில்லை நண்பரே! மாற்றம் ஒன்றே மாறாதது, வருகின்ற போதே போகின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே! எல்லாம் கொஞ்சக்காலம்.Let it go!


10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகங்கள் படிப்பேன், வீட்டை ஒழுங்கு படுத்துவேன், இணையத்தில் ஏதேனும் நோண்டுவேன், ரீவி பார்ப்பேன்.


1.தோழமையின் உன்னதம்?

மனதோடு பேசக்கிடைப்பது.

2.தோழமையின் உன்மத்தம்?

பருவ வயது.

3.நட்பின் உரிமைக்கு எல்லை எது?
அபிப்பிராயம் மட்டும் சொல்லலாம். வாழ்க்கையும் அதன் முடிவுகளும் அவரவரது.அபிப்பிராயம் சொல்வது வரை தான் எல்லை.

உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தால் உதவி. மீனக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடுப்பது மாதிரியான உதவி. அவரை அவர் மாதிரி வாழ விடுவதைப் போல அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போல ஓர் உதவி வேறு உண்டா?

4.நட்பு வட்டத்தில் யாரெல்லாம் இருக்கக் கூடும்?
எவரும். வயது, பால், நிறம், இனம், மதம், மொழி கிடையாது.

5.மனம் தகிக்கும் ஒரு சினேகிதியின் மரணம்?
இது வரை நிகழ்ந்ததில்லை.

என் வேலைத்தலத்து சினேகிதன் (Ray) யின் அகால மரணம் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்ற பாடத்தை எனக்குச் சொல்லிப் போனது. (சுடலை ஞானம் என்பது அது தான் போலும்!)

6.நிறம் மங்கிய நட்பூ?

பால்ய காலத்து சினேகிதங்கள். பள்ளிக் கால நட்புகள்.

7.மனம் மாறிய நட்பூ?

நான் தான் மாறி இருக்கிறேன்.

அடிப்படையான சில விடயங்களில் தெளிவான உறுதியான நிலைப்பாடுகள் என்னிடம் உண்டு. நான் போட்டு வைத்திருக்கிற  வாழ்க்கையின் சட்ட திட்ட நியதிகளுக்குள் அவர்கள் இருந்தால் மாத்திரமே எனக்கு நட்பு சாத்தியப்படுகிறது. நட்பாக இருந்தாலும் கூட அடிப்படையான சில விடயங்களில் ஒன்றுபட்டால் மாத்திரமே நட்பு சாத்தியமாகும் எனக்கு.

குறை நிறைகளோடு நட்பை ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்கு மனம் இன்னும் விசாலமடையவில்லை.

8.மணம் குன்றா நட்பூ?

புத்தகங்கள்! எப்போதும்!

9.தினம் தினம் நினைவில் ஒளிரும் தோழமைகள்?

தினம் தினம் நினைக்கின்ற வகையில் எதுவும் இல்லை.

10.நிஜம்மாவே இத்தனை பேரையும் தினம்தினம் நினைக்கறீங்களா?!

:)

14 comments:

  1. அருமையான கேள்விகளும்
    அழகான பதில்களும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் மகேந்திரன்.

      உடனடியாக வந்து மனதுக்கு உற்சாகம் தந்து போனீர்கள். மிக்க வந்தனம்.

      இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் தருவீர்கள் மகேந்திரன்? அறிய ஆவல்.

      Delete
  2. கொஞ்சம் அவசரகதியாய் எழுதியிருப்பது போல் எனக்குத் தோன்றினாலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அத்தனையும் உண்மையாய் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து வந்திருக்கின்றன என்பது வாசித்தாலே புலப்படுகிறது. எத்தனை வலிகளைக் கடந்து இந்நிலைக்கு வந்திருப்பீர்கள், இதிலிருந்தும் மீண்டு வாருங்கள் மணிமேகலா. உங்கள் துள்ளலான பேச்சும் துடிப்பான எழுத்தும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன் தோழி.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி கீதா.

    நீங்கள் சொன்னது சரி. இப்போது உடனடியாக எழுதி பதிவிட்டது தான்.

    எல்லாம் கடந்து போகும் தோழி!

    வருவேன்.

    இந்த ஞாயிறு நான் வேலைக்குப் போகாமல் நிற்கிறேன். நம் இலக்கிய சந்திப்பிற்காக. வருவீர்கள் தானே?

    மிக்க நன்றி கீதா. உங்கள் உடனடியான கருத்துக்கும். உண்மையில் இவை எல்லாம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது.

    ReplyDelete
  4. அட்சயபாத்திரமாய் அள்ளி வழங்கிய
    பதில்கள் ரசிக்கவைத்தன..

    ReplyDelete
  5. சந்தோஷம் செந்தாமரைத் தோழி.

    சரி பிழைகளையும் சொல்லுங்களேன். என்னை நான் பார்த்துக் கொள்ள கொஞ்சமேனும் அது உதவும்.

    என்றாலும் கரிசனையோடு வந்து கருத்தைப் பகிர்ந்து போன தோழமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. சோர்ந்த மனசை தூக்கிப் பிடிக்க கடுகளவில் என் பங்குமிருக்கிறதா! எழுந்து நிற்க வேண்டுமென்ற முனைப்பும் விழைவும் உங்களிடம் பெருமளவு இருந்ததே முதற்காரணம் தோழி.

    முதற்கேள்வி பதிலில் தங்களை வதைக்கும் மனச்சோர்வு பீறிடுகிறது. இரண்டாவது பதிலோ பல விடயங்களில் நம் சிந்தைப் போக்கை புரட்டிப் போடுகிறது.

    காதலன் காதலிக்கும் கணவன் மனைவிக்கும் உண்டான வேறுபாட்டின் கணிப்பு வாய் விட்டு சிரிக்கச் செய்தது.

    ஒரு சிநேகிதனின் மரணம் கூட படிப்பினையும் முன்னெச்சரிக்கையும் தருவதாய் இருக்கிறது!

    மணம் குன்றா நட்புக்கான பதில் வெகு சிறப்பு.

    தட்டிக் கொடுத்தலும் தாங்கிப் பிடித்தலுமாக நட்பின் ஓட்டம்!!

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி நிலா.

    உங்களுடய பதிலுரையோடு இந்தப் பதிவு நிறைவு பெற்று விட்டது.

    காதலன் காதலி / கனவன் மனைவி வேறு பாடு பற்றி எழுதிக் கொண்டிருந்த போது தென்கச்சியார் சொன்ன ஒரு விடயமும் ஞாபகத்திற்கு வந்தது. உங்களோடு இந்த சந்தர்ப்பத்தில் அதை பகிர்ந்து கொள்ளலாம்.

    ஒரு கைக்குழந்தைக்கு முன்னால் கிலுகிலுப்பையை கிலுக்கினால் அது சிரிக்கிறது. அதையே ஒரு 80 வயதுத் தாத்தாக்கு முன்னால் கிலுக்கினால் அவருக்கு என்னமாய் கோபம் வருகிறது? எப்பிடி இருந்த தாத்தா எப்படி ஆயிட்டார் பாத்தீங்களா? என்று கேட்டார்.

    வாழ்க்கை நம்மை அப்படி வடிவமைத்து விடுகிறது இல்லையா நிலா? :)

    ReplyDelete
  8. எதார்த்தமான பதில்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... குமார்!

      மிக்க மகிழ்ச்சி நண்பனே!

      Delete
  9. மகிழ்வு.

    தாத்தாவுக்கும் பல்லில்லாததால் குழந்தையிடம் ஆட்டியது போல் ஆட்ட, அவரோ தன்னை பகடி செய்வதாய் எண்ணி விடுகிறார்:)))

    மேலும், இரண்டாம் குழந்தைப் பருவத்தில் யாருமே குழந்தைக்கான கபடறியா மனம் இன்றி, கடந்து வந்த பாதையின் நெருடல்களை மட்டுமே சுமந்து தம் கண்ணோட்டங்களை பிழைபட கொண்டுவிடுகின்றனர், பலசமயம்.

    ReplyDelete
  10. சரியாகச் சொன்னீங்க நிலா!

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  11. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய ஒரு பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி.....தொடர்ந்து பதிவிடுங்கள்..நன்றிகள்

    ReplyDelete
  12. சந்தோஷம் புத்தன்.

    எப்பிடி இருக்கிறீங்கள்? :)

    ReplyDelete