Sunday, June 7, 2015

கிளி அமர்ந்து போன கிளை.....



மூன்று வார விடுமுறையில் போன என் கம்போடியா நாட்டு சினேகிதி ஒருத்தி நேற்றய தினம் வேலைக்குத் திரும்பி இருந்தாள்.பணக்கார வைர வியாபாரிகளான தாய் தந்தையருக்கு கடசி மகள். என் ஊனக் கண்களுக்கு அவள் அழகி. கம்போடியருக்கும் ஏனைய நாட்டு பின்புலத்தைக் கொண்டிருக்க்கும் அவுஸ்திரேலிய ஆண்களுக்கும் அவள் பேரழகி. வயது 40ஐ அண்மித்தாலும் 30 ற்கு மேல் சொல்ல முடியாத தேகமும் தோலும் கூந்தல் வனப்பும் கொண்ட பெண்.

தன் 16வது வயதில் 32 வயது ஆண்மகனை பெற்றோரின் வற்புறுத்தலில் மணந்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அறியாப் பருவத்தில் தாயாகி தன் 18 வது வயதில் சிட்னிக்கு குடும்பத்தோடு வந்திறங்கியவள். கணவனோடு பற்றற்ற வாழ்வு, அவுஸ்திரேலியா வழங்கிய சுதந்திரம், பெற்றோர் மீதான கோபம், இயல்பான அவள் இளமையும் அழகும், அனுபவமற்ற பருவம் என பல இத்யாதிகள் எல்லாம் சேர்த்து  அவளை குடும்பவாழ்வுக்கு வெளியே தள்ளியது.

அவள் எழுதப்படாத புதுக் கொப்பியைப் போல வீதியில் வந்து நின்ற போது அவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய எந்த சமயப் பண்பாட்டு வழிமுறைகளும் தெரிந்திருக்கவில்லை. பெற்றோர் அவளுக்கு அப்படி எதையும் கற்றுக் கொடுத்திருக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு சிறு மான்குட்டி காட்டில் இருந்து தவறி நகர்புற வீதிக்கு வந்து விட்டதைப் போல வந்து நின்றால் சவால்களுக்குக் கேட்கவா வேண்டும்?

நிறைய விழுந்தெழும்பி இருக்கிறாள் என்று தோன்றுகிறது. எவரோடும் சுமூகமான உறவு வைத்துக் கொள்ளத் தோன்றாது அவளுக்கு. என்றாலும் அவளுக்குப் பின்னால் சுற்றுவோர் தொகை இன்றும் அதிகம்.

அண்மைக்காலமாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறாள் போலத் தோன்றுகிறது. தன் குழந்தைப் பருவ நாட்களை என்னிடம் சொல்லி சிலாகிக்கும் போது அவள் கண்கள் குளமாகக் காண்பேன். பழங்களைக் கூடைகளில் எடுத்துக் கொண்டு தன் வீடு தாண்டி புத்த கோயில்களுக்குச் செல்லும் பாட்டிமார் தன்னைக் கூப்பிட்டு தனக்கு தந்து போகும் பழங்கள் அவள் நினைவில் இன்னும் புதுச் சுவையோடு இருக்கும். அப்படியான எதிர்பார்ப்பு எதுவும் இன்றி பாசத்தைப் பொழிந்த அம் மாதிரியான மக்களை அந்தப் பருவத்திற்குப் பின் தான் சந்திக்கவே இல்லை என்னும் போது பாவமாய் தோன்றும்.

இம் முறை விடுமுறையின் போது என்ன செய்தாய் என்று கேட்டேன். நிறைய பெளத்த மத விரிவுரைகளுக்குப் போனதாகச் சொன்னாள். மத நம்பிக்கைகளோ அனுஸ்டானங்களோ எதுவும் கைக்கொள்ளாத அவள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறிந்து கலந்துரையாடினாள்.

லீ ஆன் அது தான் அவள் பெயர். அவள் என்னோடு பகிர்ந்து கொண்ட கதை இது. (அவள் இதை கதையாகச் சொன்னாள். நான் அதை சுருக்கி பொருளாகத் தருகிறேன்.)

ஒரு மனிதன் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நான்கு விடயங்களைக் கைக்கொளள வேண்டுமாம்.

1. ஆரோக்கியமான உணவு.

2. சிறந்த நின்மதியான தூக்கம்.

3. நல்லதும் இரக்கமுள்ளதுமான உண்மையுள்ள இதயம்.

4. வியர்வை சிந்தும் உழைப்பு.

இன்றைக்கு என் மின்னஞ்சலைப் பார்த்த போது நல்ல தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் என் மதிப்பிற்குரிய பரா.சுந்தா என்னும் தாயார் அனுப்பி இருந்த மின்னஞ்சல் கிட்டியது. அதனை அப்படியே தர அதிகப்படியாகி விடும் என்பதால் சில விடயங்களை மட்டும் உங்களோடு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


1.Don Ritchie:



இவர் 50 வருடங்களாக சிட்னியின் நகர் புற கடல் கோட்டைக்கும் கடற்கரைக்கும் அருகே வசித்து வருகிறார். இது வரை சுமார் 160 தற்கொலை முயற்சியாளர்களை தடுத்து நிறுத்திக் காப்பாற்றி இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் ஆக ஒன்றே ஒன்று தான். அவர்களோடு சினேகமாக உரையாடியதும் அவர்களை ஒரு தேநீர் விருந்துக்காக வீட்டுக்கு அழைத்ததும் தான்.

2. Lillian Weber:



99 வயதுடய இந்த மூதாட்டிக்கு வாழ்க்கையில் ஒரு இலக்கு இருக்கிறது. தன்னுடய 100 வது வயதிற்குள் 100 குழந்தைகளுக்கான உடைகளைத் தன் கை பட தனித்தனியானதும் நுட்பமானதுமான வேலைப்பாடுகளுடன்  தைத்து ஆபிரிக்கப் பெண் குழந்தைகளுக்கு அனுப்ப வேண்டும். அதனை அணிகின்ற குழந்தை தன்னை ஒரு இளவரசியைப் போல உணர வேண்டும் என்பது அவரது இலக்காக இருப்பதால் ஒவ்வொரு ஆடையையும் தயாரிக்கும் போதும் தனித்துவமும் நுட்பமான அழகியல் வேலைப்பாடுகளுக்காகவும் அதிக நேரம் செலவு செய்கிறார்.

3. Anthony Cymerys



82 வயதுடய இவர் ஒரு முன்னாள்  முடி திருத்துனர். ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு கதிரையையும் முடி திருத்தும் கருவிகளையும் கொண்டு பூங்காவில் அமர்ந்து வீடற்று வீதியில் வாழ்வோருக்கும் பிச்சைக் காரர்களுக்கும்  இலவசமாக முடித் திருத்தமும் , முகச் சவரமும் செய்து விடுகிறார்.

4. Chiune Sugihara



ஜப்பானியரான இவர் 6000ற்கு மேற்பட்ட யூத இன மக்களைக் காப்பாற்றியவர். இரண்டாம் உலகப் போரின் போது அவர் செய்ததெல்லாம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் நாட்டை விட்டு தப்பி ஓடும் படியான பயண ரசீதுகளை (Travel document ) யூத மக்களுக்கு வழங்கி தப்பி ஓடச் செய்தது தான். அந்த இடம் கைப்பற்றப் பட்டு வெளியேற வேண்டி வந்த போது  பல பயண ரசீதுகளை வெளியே வீதியில் வீசி எறிந்து கொண்டே சென்றார் என்று சாட்சிகள் சொல்லுகின்றன.

5. Bai.Fangli:



சீன ரிச்சோ(?) ஓட்டுனரான (Pedicap Driver ) 74 வயதுடய இவர் ஓய்வு பெற்றுக் கொண்டு தன் கிராமத்துக்குப் போன போது அக்கிராமத்துச் சிறுவர்கள் வறுமையின் நிமித்தமாக பாடசாலைக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்வதைக் கண்டார். அதனால் மீண்டும் நகருக்குத் திரும்பி தன் வேலையை மீட்டுக் கொண்ட இவர் 300 ஏழைச் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லும் செலவை ஏற்றுக் கொண்டார். பாடசாலைச் செலவுக்கான பணம் முழுவதையும் கட்டி முடித்த பின் தன் 90வது வயதில் முறைப்படி வேலையில் இருந்து ஓய்வு பெற்றுத் தன் கிராமத்துக்குத் திரும்பினார்.


இப்படி பல இருக்கின்றன. பதிவின் நீட்சி கருதி அவற்றை நீக்கி விட்டேன்.

சிறு வயதில் நேரம் உண்டு. சக்தி உண்டு. பணம் இல்லை.
மத்திய வயதில் சக்தி உண்டு. பணம் உண்டு. நேரம் இல்லை.
முதிய வயதில் பணம் உண்டு. நேரம் உண்டு. சக்தி இல்லை.


கிளி அமர்ந்து போன கிளைகளைப் போலானோம் என அங்கலாய்க்கும் முதியவர்கள் இது போல ஏதேனும் செய்யலாமே.....


6 comments:

  1. மனம் இருந்தால் இடம் உண்டு ....அந்த மனம் கோடியில் ஒருத்தருக்குத்தான் வருகின்றது போலும்....அதுதான் இன்னும் வறுமை பல நாடுகளில் ஆட்சி செய்கிறது

    ReplyDelete
  2. இவை எல்லாம் சாத்தியமாகக் கூடிய; நினைத்தால் செய்து விடக்கூடிய விடயங்கள் தானே புத்தன்?

    நீங்கள் சொன்ன மாதிரி மனம் உண்டானால் இடம் உண்டு.

    வாழ்வதற்கு ஒரு நோக்கத்தை; வாழ்வதற்கு ஒரு அர்த்தத்தைக் கண்டு கொள்ளும் செயல் பாடு.

    வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி புத்தன்.

    ReplyDelete
  3. ஆஹா..! அருமை. அந்த ஐவரும் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள். அழகான பதிவு

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி செந்தில்.

    உங்கள் இனிய வருகைக்கும் கூடவே!

    ReplyDelete
  5. வாசித்து மலைத்தேன். எவ்வளவு பாசிடிவான விஷயங்களை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளீர்கள்... இந்தப் பதிவை வாசித்தபின் உள்ளத்துள் கிளர்ந்தெழும் நம்பிக்கைக் கீற்று உணர்த்துகிறது எழுத்தின் வலிமையை. நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  6. /இந்தப் பதிவை வாசித்தபின் உள்ளத்துள் கிளர்ந்தெழும் நம்பிக்கைக் கீற்று உணர்த்துகிறது எழுத்தின் வலிமையை. /

    உண்மையாகவா?! இதை விட வேறென்ன ஆனந்தம் வேண்டும் கீதா. மெத்த சந்தோஷம்.

    ReplyDelete