Tuesday, June 28, 2016

கண்டறியாத கதைகள் - 6 - கடுக்கண் -


தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.

தமிழிய மரபின் வாழ்வியல் அம்சங்களை உற்று நோக்கினால் தமிழின் நுட்பமும் வாழ்வியலின் நுட்பமும் சொற்களினாலும் நடைமுறையினாலும் விளங்கியிருக்கக் காணலாம். ஆண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்

பாலன் - 7 வயதுக்கு கீழ்
மீளி - 10 வயதுக்குக் கீழ்
மறவோன் - 14 வயதுக்குக் கீழ்
திறலோன் - 14 வயதுக்கு மேல்
காளை - 18 வயதுக்கு கீழ்
விடலை - 30 வயதுக்குக் கீழ்
முதுமகன் - 30 வயதுக்கு மேல்

என்றும்;

பெண் பிள்ளைகளின் பருவத்தை அவர்கள்,

பேதை - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை - 10 வயதுக்குக் கீழ்
மங்கை - 16 வயதிற்குக் கீழ்
மடந்தை -  25 வயதிற்குக் கீழ்
அரிவை - 30 வயதிற்குக் கீழ்
தெரிவை - 35 வயதிற்குக் கீழ்
பேரிளம் பெண் - 55 வயதிற்குக் கீழ்

எனவும் ஏழு ஏழு பருவங்களாகப் பிரித்திருந்தார்கள். அது போல அவர்கள் அணிகின்ற அணிகலன்களையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார்கள். ஆண்கள் அணியும் அணிகலன்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப் பட்டிருந்தன.

 ஆண்களின் அணிகலன்கள் : வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகவும்;

அது போல பெண்கள் அணியும் அணிகலன்களை உறுப்பு ரீதியாக வகைப்படுத்தி கீழ் வருமாறு பட்டியலிட்டிருக்கிறார்கள்,

.1. தலையணி : தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி : தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,  கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணி : கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. கை அணிகலன் : காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

5. கைவிரல் அணிகலன் : சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

6. கால் அணிகலன் : மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல்  அணிகலன் : கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

என்பவையே அவையாகும். இவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றியும் அவற்றின் தோற்றப் பொலிவுகள் பற்றியும் அநேக சான்றுகள் தமிழிய வரலாற்றிலே உள்ளன.  ஆனால் அவைகள் கடுக்கண் என்ற தலைப்பிற்கு அப்பால் செல்வதால் அதனை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

( இந்த தமிழர் அணிந்த பாரம்பரிய நகைகள் பற்றி அறிய விரும்புபவர்கள் மாதவி அணிந்த நகைகள் பற்றிய விபரத்தை சிலப்பதிகாரத்திலும் இலங்கையர் அணிந்த நகைகள் பற்றிய விபரங்களை பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப் படை என்ற நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த புத்தகத்திலும் காணலாம். ( http://akshayapaathram.blogspot.com.au/2014/03/blog-post_5692.html )

அவை நிற்க,

இந்துத் தமிழ் திருமணங்களின் போது மணமகனாகப் போகும் ஆண்மகனுக்கு இக் கடுக்கண் பூணும்  வைபவம் ஒரு சடங்காக அமைந்திருந்தது. மணமகனுக்கு தலைப்பாகை வைக்கும் சடங்குக்கு முன் கடுக்கண் பூணும் கிரியை நடக்கும். மணமகனை கிழக்கு முகமாக அமர்த்தி விநாயக வழிபாடு செய்து தேங்காய் உடைத்து இக் கடுக்கண் பூட்டு வைபவம் நடந்தது. அது மணமகனின் தாய்மானனால் நடாத்தி வைக்கப்பட்டது.

ஆனால் எப்போது காது குத்தும் வைபவம் நடைபெற்றது என்பது பற்றி அறிய முடியவில்லை.

அக்குபங்சர் என்ற சீன பாரம்பரிய மருத்துவமும் காது குத்துவது கண் பார்வையைப் பிரகாசமாக்கும் என நம்புகிறது. கூடவே காதுக்கும் ஒட்டுமொத்தமான உடல் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டென்றும்; அதனால் தான் காதின் உருவம் தாயின் வயிற்றில் இருக்கும் பூரண வளர்ச்சியடைந்த சிசு ஒன்றின் தோற்றத்தை ஒத்திருக்கிறதென்றும் அக்குபங்சர் மருத்துவம் கூறுகிறது.

பழங்காலத் தமிழ் ஆண்மகனார் ஒருவரது தோற்றம் தலையிலே குடுமியும் காதிலே கடுக்கண்ணும் நெற்றியிலே திருநீறும் மேல் உடல் சட்டை அணியாததாகவும் கீழ் உடல் வேட்டி அணிந்ததாகவும் இருந்திருக்கிறது.

பழங்கால ஆலய ஆண்சிற்பங்கள் நகை அணிந்திருப்பதைக் காணலாம். 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தோடுடைய செவியன் என சிவனை விழித்துப் பாடியதும் இச் சந்தர்ப்பத்தில் மனம் கொள்ளத் தக்கது.

அது போல சிவனைக் குறித்த புராணக்கதை ஒன்று அசுவதரன், கம்பளதரன் என்ற இரண்டு கந்தர்வ இசை வல்லுனர்கள் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார்கள் என்றும்; சிவன் என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,  'நாங்கள் இசைக்கின்ற பாடல்களை நீங்கள்  எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என வரம் கேட்க, அது எவ்வாறு சாத்தியப்படும் என யோசித்த சிவன் அவர்கள் இருவரையும் காதணியாக மாற்றி தன் காதுகளிலே அணிந்து கொண்டாராம் என்றொரு புராணக் கதை கூறுகிறது.

இதிலிருந்து ஆண்கள் காதணி அணியும் வழக்கத்தை பழங்காலம் தொட்டுப் பேணி வந்திருக்கிறார்கள் என அறியலாம்.

தமிழகத்தில் ஆனைமலை என்ற பகுதியில் வாழும் முதுவர் குல பழங்குடி மக்களிடையே இன்றும் ஆண்கள் கடுக்கண் அணியும் வழக்கமும் தலைமுடியைக் கொண்டையாக முடியும் வழக்கமும் உருமாலை என்றொரு மாலையை தலையிலே அணிவதும் இன்றுவரை வழக்கமாக இருந்து வருகிறது.

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப்பாடல்களிலும் கடுக்கண் பற்றிய செய்திகள் உள்ளன. அந்தப் பாடல்கள் இவை தான்.

“சொல்லு சொலுன்னு மழைபெய்ய
துப்பெட்டி தண்ணி அலை மோத
சொகுசா வாராராம் நம்மய்யா கங்காணி
தோடு மின்னலைப் பாருங்கடி’’

“கலகலண்ணு மழை பெய்ய
கம்பளித் தண்ணி அலை மோத
காரியக்காரராம் நம்பய்யா கங்காணி
கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’

“கலகலன்னு மழைப் பொழிய
கன்னங்களிரண்டும் கிளி கூவ
காரியக்காரராம் வள்ளடியான்
கடுக்கண் மின்னலைப் பாருங்களே’’

”சொல்லு சொலுன்னு மழைப் பொழிய
துப்பட்டி தண்ணி அலை மோதே
சொகுசுக்காரராம் வள்ளடியான்
தோடு மின்னலைப் பாருங்களே’’

இந்தப் பாடல்கள் வள்ளடிக்காரர் ஆலயம் அமைந்துள்ள அக்கராப்பத்தனையைச் சேர்ந்த லெட்சுமி தோட்டத்தில் இன்றும் பாடப்படுகின்றன.

இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களை தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் இருந்தது) காதிலே காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும்; வாளி எனச் சொல்லச் சொல்லி அவர்களது உச்சரிப்பைக் கொண்டும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் அதன் ஒரு நீட்சியாகவே தமிழ் ஆண்கள் காதில் துவாரமிடுவதையும் கடுக்கண் அணிவதையும் காலப்போக்கில் நிறுத்தத் தலைப்பட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.

அதனை ஒத்தவாறாக தமிழகத்தில் காணப்பட்ட சாதி ஒடுக்குமுறையின் ஓரம்சமாக அங்குள்ள தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தோர் கொத்தடிமைகளாக கீழ் வரும் செய்யல்களைச் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அவையாவன,

(பொதுக்!) கிணற்றில் நீர் எடுக்க தடை,
சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை,
குளங்களில் குளிக்க தடை,
தெருக்களை பயன்படுத்த தடை,
மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை,
மீசைவிடத்தடை,
தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை,
செருப்பு அணிய தடை,
குடுமி, கடுக்கண் போட தடை,
ரயில் பயணிக்க தடை,
பேருந்து, ரயில் இருக்க தடை,
பாடசாலையில் படிக்க தடை,
கோவில் பயன்படுத்த தடை,
பொது நிறுவனங்களில் உட்புக தடை,
மருத்துவ வசதி தடை,
வேற்று உழைப்பு வழிமுறை தடை,

இவ்வாறான தடைகள் கடுக்கண்ணின் முக்கியத்துவத்தையும் பயன் பாட்டையும் வர வர மங்கச் செய்து விட்டன என்றே கூற வேண்டும்.

எனினும் இன்றய காலங்களில் அதன் பயன்பாடு பிரபலமாக மீண்டும் புழக்கத்திற்கு வந்திருப்பதைக் காணலாம். அது நாகரிகமாகவும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தம்மை இனம் பிரித்துக் காட்டும் ஒரு அடையாளமாகவும் இப்போது ஆண்கள் காது குத்துவதும் கடுக்கண் அணிவதும் காணப்படுகிறது.

எனினும் ஆரம்ப காலத்தில் ஆண்கள் பாரம்பரியமாக அணிந்த கடுக்கண்ணிற்கும் நவீன யுக ஆண்கள் அணியும் கடுக்கண்ணிற்கும் பெண்கள் அணியும் தோட்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு காணப்பட்டது என்பது பற்றிச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

இருந்த போதும் கடுக்கண் என அழைக்கப்படும் பாரம்பரிய அணிகலன் தோட்டில் இருந்து சற்று வேறுபட்ட விதமாக முன்புறத் தோட்டையும் பின் புறத்தில் அமைந்திருக்கும் சுரையையும் இணைக்கும் விதமாக கீழ் சோணையோடு ஒட்டிய விதமாக ஒரு வளையம் இடம்பெறுவது உண்டென்பதுவும் அதுவே பெண்கள் அணியும் தோட்டிற்கும் ஆண்கள் அணியும் கடுக்கண்ணிற்கும் இடையே காணப்படும் பிரதான வேறுபாடெனவும் நம்பப் படுகிறது.

ஆனால் இன்றய ஆண்கள் அவ்வாறானதாக மாத்திரமன்றி தோடு போன்ற அமைப்பில் இருக்கும் அணிகலன்களையும் இன்று அணிவதைப் பெரும் பாலும் காணலாம்.

இதற்கு மேலைத்தேய ஆண்களும் விதிவிலக்கல்ல.

( அண்மையில் என் மச்சாள் மாலினியிடம் கேட்டு கொழும்பில் இருக்கிற நகைக்கடை ஒன்றில் இருந்து பெறப்பட்ட கடுக்கண்ணின் புகைப்படங்கள் தான் ஆரம்பத்தில் இருப்பது. அவருக்கு என் நன்றி)

6 comments:

 1. [quote]இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களை தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் இருந்தது) காதிலே காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும்; வாளி எனச் சொல்லச் சொல்லி அவர்களது உச்சரிப்பைக் கொண்டும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் அதன் ஒரு நீட்சியாகவே தமிழ் ஆண்கள் காதில் துவாரமிடுவதையும் கடுக்கண் அணிவதையும் காலப்போக்கில் நிறுத்தத் தலைப்பட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.[quote]
  1958 க்கு பலவருடங்களுக்கு முதலே நாகரீகம் காரணமாக ஆண்கள் கடுக்கண் அணிவது இல்லாமல் போயிருக்கும் என்பது எனது கருத்து....1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் , பொழுது எனக்கும் உந்த வாளி அனுபவம் ஏற்பட்டது.பக்கத்திலிருந்த சிங்கள சகோதரி சரியாக சொன்னபடியால் தப்பி பிழைத்தேன்....கடுக்கண் பதிவுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. //1958 க்கு பலவருடங்களுக்கு முதலே நாகரீகம் காரணமாக ஆண்கள் கடுக்கண் அணிவது இல்லாமல் போயிருக்கும் என்பது எனது கருத்து// இருக்கலாம் புத்தன்.இதே காலப் பகுதியில் இந்தியாவில் இந்த மரபு வழக்கொழிந்து போயிருந்தது என்றே நம்புகிறேன்.எனினும் பிராமணர்கள் இந்த மரபைப் பேணி வந்திருக்கக் கூடும் - கூடவே இலங்கையிலும்...

   ‘வாளி’ அனுபவம் அதனை வாசித்த போது சற்றுப் புதுமையாக இருந்தது.அந்தச் சொல்லில் அப்படி என்ன விஷேஷம்? அறிய ஆவலுடையேன்.

   வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புத்தன்.

   Delete
 2. அருமையான பதிவு


  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
 3. வருகிறேன்; வருகிறேன்....

  ReplyDelete
 4. [quote]வாளி’ அனுபவம் அதனை வாசித்த போது சற்றுப் புதுமையாக இருந்தது.அந்தச் சொல்லில் அப்படி என்ன விஷேஷம்? அறிய ஆவலுடையேன்.[quote]

  சிங்களத்தில் "வாளியை"பால்தியா என்று சொல்லவேண்டுமாம் ஆனால் என்னை மாதிரி அறைகுறை சிங்களம் தெரிந்தவையள் வால்தியா சொல்லுவினம் என்பது காடையருக்கு தெரியும்....அதாவது உச்சரிப்பை வைத்து கண்டுபிடிப்பினம்.....

  ReplyDelete
 5. ஆ... அப்பிடியோ?
  இது ஒரு புதிய விடயம் எனக்கு.
  வந்து விளக்கம் தந்தமைக்கு நன்றி புத்தன்.

  ReplyDelete