Wednesday, September 21, 2016

தாகூர்......ரவீந்திரநாத் தாகூர்....

ஒரு கலை வடிவம் - அது இலக்கியம், ஓவியம், நடனம், சிற்பம் என விரிகிறதே 64 ஆக! அவைகளில் எதுவாக இருந்தாலும் சரி அது அந் நாட்டுப் பண்பாட்டின் ஆத்மாவை; வேரை; ஆழ அகலத்தை அதன் பாரம்பரிய வழி வந்த உள்ளடக்கத்தை பிரதி பலிக்க வேண்டும்.

ஒரு மூன்றாம் கண்களுக்கு அதாவது அன்னியப் பண்பாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு முன்னால் படைக்கப் படுகின்ற ஒரு கலைப்படைப்பு அமானுஷமாக அப் படைப்பின் பண்பாடு தாங்கி வரும் விழுமியத்தை - அல்லது பண்பாட்டின் ஏதேனும் ஓரம்சத்தை - பண்பாட்டின் ஏதேனும் ஒரு  மூலக்கூறை அந்த மூன்றாம் கண்களின் ஆத்மானுபவத்திற்குக் கொண்டு சென்றிருக்க  வேண்டும்.

ஆஹா என்று அதைக் காண்கின்ற ஆத்மா உணர்ந்து வியக்க வேண்டும். அல்லது ஓ... என ஏங்க வேண்டும். அக் கலை அம்சம்  உலகில் பிறந்த எந்த ஒரு ஆத்மாவையும் பற்றி இழுத்து வந்து ‘இது தாம் நாம்’ என்று சொல்லும் ஓர்மத்தை; ( அது நன்றோ தீதோ - எந்த ஒரு அம்சம் பாடுபொருளாய் இருந்தாலும்);  வெளிப்படுத்தி நிற்கவேண்டும். தம் மண், பண்பாடு சார்ந்த சத்து இதுவென அது சொல்ல வேண்டும். அதுவே கலைப்படைப்பு என்பது என் அபிப்பிராயம்.

ஒரு கராட்டிக் கலை; குங்ஃபு கலை; அது - சண்டைக் கலையாய் இருந்த போதும் அதைப் பார்க்கிற கண்களுக்கு அந் நாட்டுப் பண்பாட்டின் விழுமியம் புரிந்து விடுகிறதே அது மாதிரி!

நேற்றய தினம் எனக்கு அப்படி ஒரு வங்காள மொழியின்  விழுமிய விஸ்தாரத்தை அறியும் வாய்ப்பு கிட்டியது. அது ரவீந்திரநாத் தாகூரின் கதைப்பாடல்கள் வடிவில் அமைந்த அவரின் பாடல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதனை து.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தமிழ் படுத்தி இருக்கிறார்.(கவிதையில் கதைகள்; வங்காளியில் இருந்து தமிழாக்கம்;சு.கிருஷ்ண மூர்த்தி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,ஏப்பிரல் 2014; பக் 80 -83) (புத்தகம் கிட்டிய இடம் Black town library)

தாகூர் என்ற பெயரை அறிந்திருந்த போதும் முதல் முதல் இப்போது தான் ‘அவரைப்’ படிக்கிறேன். அவரை மொழிபெயர்ப்பினூடாக உள்வாங்குகின்ற போது கவிதையின் ஆத்மா சேதமடையவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கவிதைகளை நுகரும் போது  தாகூரின் மொழிவீச்சு எத்தகைய பண்பைக் கொண்டிருந்திருக்கும் என்பதை உணர முடிகிறதெனினும்; தமிழ் மொழிக்கு  அப்படியே அதனை அதன் அத்தனை அழகும் கெடாமல் சொல்லக் கூடிய ஆற்றல் இருந்த போதும் ;அதை பெயர்த்தவருக்கு இன்னும் தமிழ் வசப்பட்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.




தாகூரின் மொழி நடை வள்ளலாரினதைப் போல; தேசியவிநாயகம் பிள்ளையினதைப் போல, மறைமலை அடிகளினதைப் போலானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மொழிபெயர்த்தவர் அத்தகைய மொழி அழகை பெயர்த்து வரவில்லை. அது எனக்கு பெரிய குறையாகவும்; கோபத்தைத் தருவதாகவும் இருந்தது. ஒரு மாபெரும் கவிஞனை; நோபல் பரிசு பெற்ற விற்பன்னனை; தன் மொழிக்கு அழைத்து வரும் போது அதற்கான தகுதியும் திறமையும் கொண்டு வருபவருக்கு இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்று அதைச் செய்யக் கூடாது. இரு மொழிகளிலும் ஆளுமையும், இலக்கிய அறிவும், மொழிப்புலமையும், தார்மீகப் பொறுப்பும், ஈடுபாடும் இருக்க வேண்டியதோடு அதில் திளைத்துத் திளைத்து தான் பெற்ற இன்பத்தை; அனுபவத்தை அதன் ஆத்ம சங்கீதத்திற்கு பழுது வரா வண்னம் தமிழைக் குழைத்து குழைத்து திருத்தி திருத்தி தமிழால் எழிலாக்கி அதைத் தரவேண்டும். அதற்கு அதைச் செய்பவருக்கு மேற்கூறியவற்றோடு ரசனை உணர்வு கொண்ட மனத் தகுதியும் வாய்க்க வேண்டும். இவைகள் மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள். வியாபாரம் ஆகி விட்டது சூழலும் வாழ்வும். நம் பாரதியை வேறொரு மொழி இப்படி சந்திக்கிழுத்துக் கொண்டு போனால் எமக்கு என்னமாய் கோபம் வரும்!வண்ணாத்துப் பூச்சியை கயிறுகட்டி யாரும் இழுத்து வருவதுண்டோ?

ஒரு இறகின் வருடலைப் போல; கழுவி விட்டுப் போன கடற்கரை மணலில் மெல்ல வந்து கால் நனைத்துப் போகும் கரையோர நீர் போல; அந்தக் கவிதைகளுக்கு இயல்புண்டு. சட்டென வந்து கரங்களில் குந்தி விட்டுப் போகும் வண்ணாத்துப் பூச்சியின் பாஷை அது! ஆனால் அது இயற்கையின் செல்லச் சீண்டல் அல்ல; மாறாக சிந்தனைக்குத் தரும் ஒரு தேன் துளி!அவைகள் கவிதைகள் அல்ல; பாடல்கள்! சங்கீதம்!!. மனதுக்கு இதம் தரும் ; சிந்தனையில் மெத்தெனப் படியும் ; ஆத்மாவை வருடும் பாடல்கள் அவை!

சரி அது நிற்க, மொழிபெயர்க்கப் பட்ட பாடலில் உள்ள ஆத்மாவை - கருவை எடுத்துக் கொண்டு எவ்வாறு இப்பெருங் கவிஞன் தாகூர் அதைத் தந்திருக்கக் கூடும் என்ற உணர்ந்து சில சொல் மாற்றங்கள் செய்து அதன் ஒரு கவிதையை பகிர ஆவல். (”கவிதையில் கதைகள்” என்று சொன்ன தலைப்பை ”கதைப் பாடல்கள்” என்று சொல்லலாம் என்பது போல) ஆனால் அதற்கு முன் திரு கிருஷ்ணமூர்த்தி கொணர்ந்த கவிதைப் பாடலை அப்படியே தருகிறேன்..

பழைய வேலைக்காரன்

பூதம் மாதிரி அவனுருவம், புத்தியிலும் மிக மட்டம்.
பொருளேதும் தொலைந்தால் வீட்டுக்காரி சொல்வாள்,
‘திருடன் கேஷ்டாவின் வேலை தான்.’
நானெப்போதும் திட்டிக் கொண்டிருப்பேன்
எதுவும் அவன் காதில் விழாது.
பணத்தை விட அதிகம் பிரம்படி பெறுவான்
அப்படியும் அவனுக்குப் புத்தி வராது
தேவைக்காக மீண்டும் அழைப்பேன்
கேஷ்டா, கேஷ்டா என்று கூவுவேன்
என் தொண்டை காய்ந்தாலும் வர மாட்டான்
ஊர் பூராவும் தேடுவேன் அவனை
மூன்று கொடுத்தால் ஒன்று தான் இருக்கும்
மீதி இரண்டும் எங்கே என்றறியான்
ஒன்றைக் கொடுத்தால் கண நேரத்தில்
மூன்றாய் உடைத்துக் கொண்டு வருவான்
எங்கே ஆனாலும் எவ் வேளையிலும்
உறக்கம் அவனுக்கு வரப் பிரசாதம்
கழுதை, முட்டாள், உதவாக்கரை
என்று நான் அவனை உரக்கத் திட்டினால்
கதவருகே நின்று கொண்டு சிரிப்பான்
அவனைப் பார்க்க எனக்கு எரிச்சல் மூளும்
எனினும் அவனை துறக்க மனமில்லை
மிகவும் பழைய சேவகன் கேஷ்டா.

வீட்டுக்காரி காளியாகிக் கத்துவாள்
இனிப்பொறுக்க முடியாது என்னால்
வீட்டில் நீங்களே இருந்து கொள்ளுங்கள்
கேஷ்டாவைக் கூட வைத்துக் கொண்டு
அவன் யாருக்கும் அடங்குவதில்லை
துணிமணி பாத்திரம் உணவுப் பொருள்கள்
போகுமிடம் தெரியவில்லை
பணம் மட்டும் போகிறது தண்ணீராய்
கடைக்கு அனுப்பினால்
நாள் முழுதும் ஆளைக் காணோம்
கேஷ்டாவைத் தவிர வேறொரு சேவகன்
கிடைக்க மாட்டானா முயற்சி செய்தால்?
கடுஞ்சினம் கொண்டு நானும் சென்று
அவன் குடுமியைப் பிடித்து இழுத்து வந்து
‘தடியா, உனக்கினி வேலை இல்லை
தொலைந்து போ உடனே’ என்பேன்
தயங்கித் தயங்கியவாறு போவான்
‘சனியன் ஒழிந்தது என்றே நினைப்பேன்.
மறுநாள் நான் கண் விழிக்கும் போது
கையில் ஹூக்காவுடன் முன்னே நிற்பான்
அவனது முகம் மலர்ந்தே இருக்கும்
வருத்தத்தின் நிழல் கூட இராது
விரட்டினாலும் போக மாட்டான்
என் பழைய வேலைக்காரன்

அந்த ஆண்டு சிறிது உபரிப்பணம் கிடைத்தது
நான் செய்து வந்த தரகுத் தொழிலில்
முடிவு செய்தேன் அப்பணத்தில்
பிருந்தாவனத்திற்கு யாத்திரை செய்ய
மனைவியும் கூட வர ஆசைப்பட்டாள்
நான் அவளுக்கு விளக்கிச் சொன்னேன்
அவள் வந்தால் அதிக செலவு
என் புண்ணியத்தில் பாதி அவளுக்கு
பயணத்திற்கான பொருள்கள் சேர்த்து
மூட்டை முடிச்சுகள் கட்டி வைத்து
கைவளையல்கள் ஒலிக்க
மனைவி சொன்னாள் அழுது கொண்டு
‘வெளியூரில் கேஷ்டாவோடு
நீங்கள் கஷ்டப்படுவீர்கள் மிகவும்’
ஐயோ கேஷ்டா வேண்டாம்
நிவாரண் வரட்டும் என்றேன்
ரயில் வண்டி விரைந்து சென்றது
வர்த்தமான் நிலையத்தில் பார்க்கிறேன்
கேஷ்டா அமைதியே உருவாக
ஹூக்கா எடுத்து வருகிறான் எனக்கு
அவனை எவ்வளவு கடிந்து கொண்டாலும்
பழைய சேவகனைக்கண்டு மகிழ்ச்சி தான் எனக்கு
பிருந்தாவனம் போய் இறங்கினேன்
வலமும் இடமும் முன்னும் பின்னும்
பண்டாக்கள் வந்து சூழ்ந்து கொண்டார்
தாங்க முடியாமல் தொந்தரவு செய்தார்
ஆறு ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து
ஒரு வீடு அமர்த்திக் கொண்டோம்
இனி சுகமாய் கழியும் போது
கவலை இல்லை என்று நினைத்தேன்

ஆனால், கோபிகை எங்கே, வனமாலை எங்கே?
வன மாலை அணிந்த கண்ணன் எங்கே?
எங்கே முடிவுற்ற வசந்த காலம்?
எனக்கு வைசூரி கண்டது
என் கூட்டாளிகள் எல்லோரும்
வீட்டில் இருந்து மறைந்தார் கனவு போல்
நான் தனியனாகி விட்டேன்
என் உடம்பெல்லாம் ரணமாயிற்று
மெலிந்த குரலில் இரவும் பகலும்
கேஷ்டாவை அருகழைத்து உரைத்தேன்
‘இவ்வளவு காலங்கழித்து
வெளியூர் வந்து சாகப் போகிறேன்’
அவனைப் பார்த்து என் நெஞ்சு நிறைந்தது
அவன் எனக்கொரு செல்வம் போல
இரவும் பகலும் என்னுடன் இருந்தான்
கேஷ்டா, என் பழைய சேவகன்

குடிக்க நீர் கொடுப்பான் குசலம் கேட்பான்
என் கையை எடுத்து தன் தலை மேல் வைப்பான்
அமைதியாய் நிற்பான் உறக்கமின்றி
உணவை முற்றும் ஒதுக்கி விட்டான்
அடிக்கடி சொல்வான், ’ஐயா
நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்
திரும்புவீர் நீங்கள் பத்திரமாக
எசமானி அம்மாளைப் பார்ப்பீர் திண்ணம்’

நான் நோய் தீர்ந்து எழுந்தேன்
காச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது
என்னை வருத்திய நோய் தன்னை
தானே ஏற்றுக் கொண்டான் போலும்!
இரண்டு நாள் நினைவின்றிக் கிடந்தான்
நாடி இறங்கத் தொடங்கி விட்டது
இது காறும் அவனை விரட்டி வந்தேன்
இப்போது அவனே விலகிக் கொண்டான்
பல நாள் பிறகு திரும்பினேன் வீடு
புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு
ஆனால் என்கூட இல்லை இன்று
என் நெடுநாள் தோழன், பழைய சேவகன்!
(புரதன் ப்ருத்ய)

பாரதியாரும் சேவகனைப் பாடியிருக்கிறார்.  எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ..... என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

அப்பாடலையும் இங்கு தரவே விருப்பம். ஆனால் அது மிக நீண்ட பாடல். பல வரிகளை நறுக்கி விட்டு சினிமாவில் அது வேறு விதமாய் ஒலிக்கும். அவசரப்படுபவர்கள் யூரியூப்பில் கேழுங்கள். முடிந்தவர்கள் பாரதி பாடல்களில் முழு வரிகளையும் முகருங்கள். வாசத்தில் திளையுங்கள்.

அவற்றை அனுபவம் செய்வீர்களாக!

அனுபவம் செய்தல் என்பது காணும் அனுபவத்தில் இருந்து வேறு பட்டது. உடல் சார்ந்த புலன்களின் இருந்து உயர்ந்து ஆத்மா அதை உணர்வது. அது கண் என்ற பாதையூடாக ஆத்மாவுக்குக் அவ் உணர்வை பணிவோடு ஏந்தி வந்து கொடுக்கும்.  இனி அது எங்கேயும் போகாது அங்கேயே ஒன்றாகி விடும். நிலையாக! உங்களோடு கூடவே வரும். எப்போதும்! அது பின்னர் உங்கள் அன்றாட வாழ்வில் பிரதி பலிக்க ஆரம்பிக்கும். தோற்றத்தைக் கூட சில வேளைகளில் மாற்றி அமைத்து விடும். கூடவே ஆத்மாவோடு பயணம் செய்யும் அது பிறவிகள் தோறும் பிறவிகள் தோறும் கூட ; கூட வரும்.....

இப்போது இரண்டு சேவகர்களினதும் ‘அழகு’ தெரிகிறதா? இரு  இனத்தினுடய துமான பண்பாட்டின் சாயல் இக்கவிதைகளில் புலப்படுகிறதா?

அறிய ஆவல்..... 

2 comments:

  1. நல்ல கவிதை...
    தாகூர் பற்றிச் சொல்லி பின் கவிதைக்குள் பயணிக்க வைத்த கட்டுரை...

    ReplyDelete
  2. அவரது ஒவ்வொரு கவிதைகளும் வைரக் கற்கள் குமார். கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். கருத்துச் சொன்னமைக்கும் நன்றி குமார்.

    நேற்ரய தினம் ஒரு நடன நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கு கிடைத்தது இன்னொரு கைவண்ணம்.

    வாழ்க்கை வண்ணமயமாய் இருக்கிறது குமார்:)

    ReplyDelete