Monday, September 26, 2016

நடனக் கலைஞன் சேரன்.....

உண்மைக்கு அதன் இயல்பே அழகு!

திறமைக்கு அலங்காரங்களும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் தோற்றத்தை இனம் பிரித்துக் காட்டும் அங்க வஸ்திரங்களும் தேவை இல்லை.

நேற்றய தினம் ( 25.9.2016) சேரனின் நாட்டிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

சேரன் - லண்டனில் பிறந்து சிட்னியில் கால்பதித்திருக்கும் இளந்தமிழன். இந்தியாவில் .....தம்பதியினரிடம் முறையாக நாட்டியம் பயின்றிருப்பவர். வருடம் ஒரு முறை மாத்திரம் நாட்டிய நிகழ்வு செய்பவர். அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில் மாற்றுத் திறனாளிகளாகி இருக்கும் உயிர்கள் நிமிர்ந்து மரியாதையோடு தாமாக இயங்க உதவியளித்து வரும் ’patch work' அமைப்புக்குக் கையளிப்பவர்.

எந்த ஒரு உன்னத படைப்பும் உடனே எந்த வித தாக்கத்தையும் தராது. அதன் ஏதோ ஒன்று ஆத்மாவில் சுவறி நாளாக நாளாக மெல்ல மெல்ல தன் குறிப்பிட்ட ஓரம்சத்தை நம்மில் வெளியிட்ட வண்ணம் இருக்கும்.

கடந்த வருடம் பரா மசாலா நிகழ்வில் இந்திய ‘கதக்’ கலைஞர் ஒருவரின் கதக் நடனத்தை முதன் முதலில் பார்த்தேன். உண்மைக்கு அலங்காரங்கள் தேவை இல்லை. அதன் இயல்பே அதன் அழகு என்பதை முதம் முதல் கலையூடாக புரிந்து கொண்டது அன்றைக்குத் தான்.

எந்த ஒரு அலங்காரங்களும் இல்லாத முழு வெள்ளை ஆடை. அங்கங்களை இனம்பிரித்துக் காட்டும் எந்த இயல்பும் அதில் இல்லை. உதட்டின் சிவப்பு சாயமும் உச்சம் தலையில் நெற்றிப்பட்டமும் தான் அலங்காரங்கள். சுமார் 1.30 மணி நேரம் அச் சிறு ஆனால் கச்சித நவீன அரங்கில் அவர் தனியாகவே ஆடினார். எந்த ஒரு உரையாடல் அறிமுகமும் கொடுக்காமல் அவர் முகத்தில் காட்டிய முகபாவங்களூடாக அன்பின் வலிமையை நேரடியாக அவர் பார்ப்பவர் ஆத்மாவில் பாய்ச்சி விட்டுச் சென்றது உயிருள்ளவரை என்னோடு இருக்கும். அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் வெள்ளைக் காரருக்கு. எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது ஒரு நெகிழ்வூட்டிய நிகழ்வு!!

அதற்குப் பிறகு அதைப் போல ஒன்றை என் ஆத்மா அனுபவம் செய்தது நேற்றைக்கு!!

என் தமிழுக்கு போதாமை இருக்கிறது என்று இதை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாகவே என் மீது பரிவிரக்கம் கொள்கிறேன். மணலை அரித்து அரித்து தேவை அற்றவற்றை வெளியேற்றிய பிறகு தேங்கி நிற்கும் வைரக் கற்களைப் போல புற வயங்களில் நடந்த எல்லாம் வடிந்து போய் தேங்கி நிற்கும் கருக் கற்களை மாத்திரம் குறிப்பாக எடுத்துச் சொல்வதே இப்போதைக்கு இயலுமானதாக இருக்கிறது.

1. விநாயக வணக்கம்! விநாயகர் எழுந்து வந்து விட்டார். அவர் வந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கும்.

2. நாட்டியத்தின் அடிப்படை அழகு! அலாரிப்பு

3. நவரசம்! சொந்தக் கலை படைப்பில் விளைந்த நவரச மணிகள்.

4.சிவதாண்டவ  ஸ்தோத்திரம் - தொன்மை சமயத்தின் வலிமை!! பண்பாட்டின் விழுமிய வேர்! மந்திர வலிமை...

5. ஆஞ்சநேய கெளத்துவம் - ஆஞ்ச நேய குண இயல்புகள் வெளிப்பட்ட ஒரு மனித உயிர்! ஆதன் குணங்களை வெளிப்படுத்தி ஒரு இலட்சிய மனிதனின் குண அழகு வெளிப்பட்ட அற்புதம்!!

6. பாடம் - பாரதியார் பாடல் - ஆசை முகம் மறந்து போச்சே... திறமைக்குக் - அதன் வலிமைக்கு - சேரன் கொடுத்த இடம்! கொடுத்த மேடை!! கொடுத்த நேரத் துளிகள். குரல் இசையை என்னவென்று சொல்வது...அதில் குழைந்து குழைந்து வந்த உணர்வினை உயிர் சித்திரம் எனலாமோ என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, குரலுக்கே அங்கு முதலிடம் கொடுத்து  நடனம் பின்னணியில் அமைந்ததை என்னவென்று சொல்வேன்?

பாரதி வரி ஒன்று இப்படிச் சொல்லும்,
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
காசி நகர் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்
....”

இந்தக் கலைஞன் சேரன் அதை நிகழ்த்திக் காட்டினான் அரங்கில்...! சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்களை பரிசளித்து மகிழ்ந்தது நடனம். துலங்கி மிளிர்ந்திற்று ஓர் அறிவெழில் சுடர்! திறமையை தூக்கி நிறுத்தி பெருமை கொண்டது நடனம்!!

ஆண்மா அனுபவித்தது  ஒரு கவளம் அளவு தமிழம்!

7. சுவருக்குள்ளே....! இது தான் சேரன்.... கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற கைங்கரியம் அது!! முதலில் ஒரு வெள்ளைத் திரையில் நிழல் நடனம்! திரை மேலே செல்ல விரிகிறது மேடை. தெரிகிறது மேடை. செவ்வக எல்லை! எல்லைக்குள்ளே நடக்கிறது நடனம். எல்லைக்குள்ளே நின்றவாறு வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறது கால். சில வேளை கை...போகின்ற பொழுதுகளில் ஆச்சரியமாக அவலமாக ஏன் என்ற கேள்வியோடு பார்க்கிறது மற்றய நடனம். அவ்வப்போது எல்லையை வருடிப் பார்க்கிறது உள்ளம் / மனம்....அந்த விளிம்போடு அதன் இயல்போடு நிறையக் கேள்விகள் அதற்கு.  விளிம்பிலே தொங்கிய வாறும் கீழே போயும் மேலே போயும் எட்டி எட்டிப் பார்த்தும் பயந்த வாறும் ’வெளிப்புறத்தை’ ருசி பார்க்கிறது கொஞ்சம். பிறகு முழுவதுமாக செவ்வகத்துக்குள்ளே சரணடைகிறது. செவ்வக விளிம்பில் ஏறி நின்று புரிகிறது நெடும் சாகசம். அது சிலிர்க்க வைக்கும் சாகசம். (சமூகத்தை வியக்கும் சேரனின் கலை மிளிர்கிறது; சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது அதில்.)   ஒரு கட்டத்தில் முழுவதுமாக வெளியே வந்து விடுகிறது. கொஞ்சமாய் நடனமாடவும் செய்கிறது. பிறகும் விரும்பியும் விரும்பாமலும் செவ்வகத்துக்குள்ளே சென்று நடனமாடி முடிகிறது.

மீண்டும் வெள்ளைத் திரை கீழே இறங்குகின்றது. நிழல் நடனம் நடக்கிறது. திரை மூடப் படுகிறது.

வெளிநாட்டில் வாழும் சமூகத்தை; உள்ளூர இருக்கும் அதன் இயல்பை; திரை மறைவாக நடக்கும்  அதன் தடுமாற்றங்களை இதை விட அற்புதமாய் யார் காட்டி இருக்கக் கூடும்!! இது தான் கலை!! இது தான் கலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுதல் என்பது. இது தான் கலைஞத்துவம்!  உண்மை திறமையோடு கலந்து  கலையோடு சங்கமித்த காட்சி!! சமூக அக்கறையோடு சமூகத்தை சித்திரமாய் மனதில் பதித்த சாதனை! அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் தற்காலம்!!

இது தான் அனுபவம் செய்தலுக்கான இலட்சணம்!! இலக்கணம்!!

8. மங்களம். ஐம்பூதங்களுக்கும் வணக்கம்.

அழகு என்பது தோற்றத்திலும்; அலங்காரங்களிலும்; நிறங்களின் ஆர்ப்பாட்டங்களிலும்; அங்க அவயவங்களிலும் அல்ல; அழகு என்பது திறமை! அழகு என்பது அறிவு! அழகு என்பது திறமை எங்கெங்கு இருக்கிறதோ அவ்வவற்றைப் போற்றுதல்; அவ்வற்றுக்கு உகந்த இடம் அளித்தல் - இந்த நிகழ்வு முழுவதிலும்  ஆத்மாவாக நின்ற பொருள் இது தான். மக்களுக்கு சேரன் கொண்டு சென்ற கருத்து இவைதான். கலை வாகனத்தில் இக்கருத்து ஆவாகனம் செய்யப் பட்டிருந்தது!!

ஆத்மாவை ஆசுவாசம் செய்த கலை வெளிப்பாடு!!

ஆடை அலங்காரம் மிகஎளிமையான ஆனால் மிக மரியாதையான மரியாதை ஏற்படும் படியான வடிவமைப்பு! விரசத்துக்கும் கவர்ச்சிக்கும் நளினத்திற்கும் இடம் முற்றிலுமாக மறுக்கப் பட்டு அந்த இடம்  மரியாதை; உயர்ந்த பட்ச மதிப்பு என்பனவற்றால்  நிரம்பி இருந்தன.

கண்கள் பார்க்க வேண்டியதை அறிவின்; திறமையின் பால் திருப்பிய கைவண்ணம் அது!! - ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பால் திறமையைக் கண்டன கண்கள்!! திறமை ஒன்றையே கண்டன கண்கள்!!

அது பார்வையாளர்களை அவர்கள் பார்க்க வேண்டிய திசையை; கோணத்தை நோக்கித் திருப்பியதில் சேரன் கண்ட வெற்றி!

பின்னணி இசைக்கு மேடையில் அவர் கொடுத்த இடம். திறமைக்கு அவர் நடனக் கலை மண்டி இட்ட இடம் அது!

சேரன் நீ உயர்ந்த மனிதன் அப்பா!

கலையை இன்னொரு தளத்துக்கு உயர்த்தினாய் நீ!

கலைஞன் என்பவன் யார் என்று சொன்னாய் நீ!!

எளிய ஆத்மாக்களுக்கு ஒரு பெரும் பொக்கிஷத்தைப் பரிசளித்தாய்!!

உன் உயரத்துக்கு நம்மை இழுத்து வந்து இச் சிறிய ஆத்மாவுக்கு உயர்வளித்தாய்!! ஆத்மாவை ஆசுவாசித்தாய் அப்பனே!!

நீ வாழி!! நின் கலை நீடு வாழி!!



8 comments:

  1. சிறந்த அறிமுகம்
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே. அறிமுகம் என்பதை விட என் மனப் பதிவு என்பதே பொருந்தும். ஆண்மாவை நடனம் ஆசுவாசப் படுத்திக் வருடிச் சென்றதைப் போல ஓருணர்வு!

    கலைகள் வண்ணமயமாக்குகின்றன வாழ்வை!

    ReplyDelete
  3. [quote]அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில்[quote]சேரனின் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று பல வருடங்களாக தொடர்ந்து நடத்திகொண்டிருக்கின்றார்.

    ReplyDelete
  4. வாழ்வு - கலை - பணி மூன்றும் ஒன்றேயான வாழ்க்கை!!

    இலட்சிய வாழ்வு!! சிலருக்குத் தான் வாய்க்கும் அப்படி!அதனால் தான் அந் நிகழ்வுக்கும் அப்படி ஒரு தாற்பரியம்!! அன்றய மன்றில் அளிக்கப் பட்ட தொகை 41,000 சொச்சம். (செலவுகள் நீங்கலாக)கண்பார்வை இழந்த இவர்களுக்காகப் பணி செய்யும் உமா அதனைப் பெற்றுக் கொண்டார்.

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக மனதில் உள்ளதை அப்படியே பதிவாக்கியிருக்கிறீர்கள்... அருமை.

    ReplyDelete
  6. போதல்லப்பா! திருப்தியா இல்ல.

    ReplyDelete
  7. என்ன அழகான அனுபவப் பகிர்வு.. நீங்கள் குறிப்பிட்ட அந்த கதக் நடனத்தை நானும் நீங்களுமாகத்தான் பார்த்தோம். அந்த அனுபவத்தை மிஞ்சும் மற்றொரு அனுபவத்தை இதுவரை எனக்கு வாய்க்கவில்லை.. தவமியற்றல் மாதிரியானதொரு அற்புத அனுபவம்.. உங்களுக்கு அதற்கு நிகராகவோ.. அதை விஞ்சக்கூடியதாகவோ மற்றொரு நடன அனுபவம் காண வாய்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தோழி.
    நடனக்கலைஞர் சேரன் குறித்த தகவல்களும் அவர் ஆடிய நடனங்களின் வகைப்படுத்தல்களும் அவை குறித்த விவரிப்புகளும் வியக்கவைக்கின்றன. சுவருக்குள்ளே.. நடனம் குறித்த உங்கள் விவரிப்பு.. அற்புதம்.. பார்வையால் உள்வாங்கி.. உள்ளத்தால் ஒன்றி… எழுத்தால் வெளிப்படுத்திய பாங்கு அற்புதம்.. நடனக்காட்சியை நேரிலே காணாவிடினும் உங்கள் எழுத்து இந்நடனம் இப்படிதான் இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பனையில் கொண்டுநிறுத்தி களிக்கச் செய்கிறது.
    பாரம்பரியமும் கலாச்சாரமும் போற்றும்… பழம்பெருமை பேசும் கலைப்படைப்புகள் ஒருபுறம் சிறப்பெனில்.. காலத்துக்கேற்றாற்போல் பழமையோடு புதுமையும் கலந்து கலையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்லும்… மற்றும் எதிலும் ரசனைமாறுபாடு கொண்ட இன்றைய தலைமுறையைத் தன்னகத்தே ஈர்த்துவைத்துக்கொள்ளும் சூட்சுமம் இப்படியான புதுமைப்படைப்புகளால்தான் சாத்தியம். இளம் நடனக்கலைஞர் சேரனுக்கு அந்த சூட்சுமம் தெரிந்திருப்பதால் தனக்குக் கிடைத்த மேடையை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
    அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளின்றித் தடுமாறும் உங்கள் தமிழ் சொல்கிறது கலைஞனின் சிறப்பை.. அவருக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் சிறப்புகள் பெருகட்டும்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி கீதா. அன்றய நாள் உங்களை நான் மிகவும் மிஸ் பண்ணினேன். வீடு ரொம்ப தூரமாய் போயிட்டுப்பா.

    என்றாலும் வருகிற பரா மசாலாவுக்குக் கட்டாயம் போவோம் ஒன்றாய். வருகிற மார்ச்சில் என்றறிந்தேன்.

    ReplyDelete