Monday, November 6, 2017

என் தேசத்தின் குரல்...

சுமார் 22 வருடங்களின் பின் தாயக மண்ணில் கால் மிதித்தேன்.....1995 யாழ்ப்பாணப் புலப்பெயர்வோடு பிரிந்த மண்......

இடையில் தான் எத்தனை மாற்றங்கள்.....
வாழ்க்கை புரட்டிப் போட்ட வண்ணங்கள் எத்தனை.....

எதனைச் சொல்வது எதனைச் சொல்லக் கூடாது என்று எதுவும் தெரியவில்லை....

என்னைச் சீராட்டி பாராட்டி வளர்த்த சொந்தங்கள் வயதாகி உடல் நலிந்து போனார்கள்... அவர்களைப் பார்க்க வேண்டும்....அப்போதெல்லாம் கால்சட்டை நழுவ நழுவ ஒரு கையால் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் திரிந்த என் ஒன்று விட்ட தம்பி மார் தங்கச்சி மார் எல்லாம் திருமணமாகி பிள்ளை குட்டிகளோடு..... புது மச்சாள் மார்... அவர்களைப் பார்க்க வேண்டும்....

டிஜிட்டல் உலகம் கொண்டுவந்து கொட்டிய குப்பைகளுக்கு அப்பால் நான் வாழ்ந்த வாழ்வியலை அதன் அத்தனை அழகுகளோடும் தரிசிக்க வேண்டும்.

எங்களூர் செம்பாட்டு மண், உண்டு தீர்த்த பழங்கள், ஓடித்திரிந்த இடங்கள், கோயில்கள்....

நான் திரிந்த மண்....நான் கொண்டாடிய நண்பர்கள்... நான் படித்த பள்ளி.... கண்டு அறிவூட்டிய விரிவுரையாளர்கள்....என்னோடு கூட வந்த ஒரு வாழ்வியல்.....

இவைகளைக் காண வேண்டும்.....

பார்த்தேன்; எல்லோரையும்... எல்லாவற்றையும்....

கூடவே போரினால் நலிந்து போயுள்ள ஒரு தேசத்தையும்....

வெளியே பார்க்க தேசம் புதுசாய் தான் இருக்கிறது. புதிதான வீதிகள்.... சிற்றூர் தோறும் கோபுரங்களோடு கோயில்கள்.... பூஞ்சோலைகளோடு புது மெருகு பெற்றுள்ள பாடசாலைகள்....மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள்....புதிது புதிதாக கல்யாண மண்டபங்கள்....

வீதி திருத்த வேலை தவிர்ந்த மற்றெல்லாம் வெளி நாட்டுக் காசுதான் போலும்...

ஆனால்,

வீதிகளில் தென்பகுதி சுற்றுலா வாகனங்கள் மூட்டை முடிச்சுகளுடன். கோயில் மணியோசை கேட்டு கூடுவார் அங்கெவரும் இல்லை; திருவிழாக்களில் சாமி காவ இளையோர் என எவரையும் காணோம். பொடி பொட்டை எண்டு இளைய முகம் எண்டு ஒண்டையும் காணயில்லை....ஆங்காங்கே சில முதிய முகங்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களாலும் இஸ்லாமிய சகோதரர்களாலும் நிறைந்திருக்கிறது. தற்போதய பேராசிரியர்கள் சிலர் நுனிப் புல் மேய்ந்து வரும் சம்பளத்தோடு திருப்தியுற்று தற்பெருமை மிக்க ஜம்பவான்களாக மிளிர்கிறார்கள். பழைய பேராசிரியர்கள் ஆதங்கத்தோடு ஆங்காங்கே ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்; மற்றும் சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், மற்றும் வேறு சிலர் தம் மன நலத்தை பேணும் நிமித்தம் அக்கறைகளை தம் குடும்பத்துக்குள்ளாகச் சுருக்கிக் கொண்டுள்ளார்கள். சில ஓய்வு பெற்ர பேராசிரியர்களைத் தவிர வேறு எங்கும் அர்த்தமுள்ள; சமூக நோக்கிலான உரையாடல்களை  கேட்கக் காணோம்...சொற்ப இளைஞர்கள் பிரக்ஞை பூர்வமாக இல்லாமலும் இல்லை...

தொழில் நுட்பம் கொண்டு வந்த மாற்றங்களின் செல்வாக்கும் நிணைவு கூரற்பாலது தான்.

வீதிகளில் இறங்கினால் நேரத்தோடு போய் நேரத்தோடு வந்து விடு என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அல்லது துணை ஒன்றை பலவந்தமாகத் திணித்து விடுகிறார்கள். ஒரு வீட்டுக்குச் செல்கிறேன் என்றால் சென்று விட்டேன் என்று இருந்த வீட்டுக்கு தொலைபேசியில் சொன்னால் தான் நின்மதி அடைகிறார்கள். வாள் வெட்டு நடக்கிறது என்று மிரட்டுகிறார்கள்...

என்றாலும் பொதுவாக பயமோ பதட்டமோ இன்றி மக்கள் அன்றாடக் கருமங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாமர சனங்கள் இன்னும் புறணிகளிலும் வேலிச் சண்டைகளிலும் சாதி பிரிவினைகளிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியே கிடக்கிறார்கள். இவைகளுக்கு எந்த விதத்திலும் போர் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.

சமையல்கட்டு வேலைகள் முடிந்த குடும்பப் பெண்கள் இரவுகளில் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்குள் மூழ்கிப் போய் விடுகிறார்கள்.

மண்ணின் ஆத்மா காயப்பட்டுப் போயிருப்பதாக; ஊமைக்காயம் கண்டிருப்பதைப் போல ஓருணர்வு...
...........................

இவை எல்லாவற்றுக்கும் மேலாய் என் தேசத்து ஊர் மண்ணில் கால் வைத்த நேரம் ஏற்பட்ட பரவசம் இருக்கிறதே... அதை எந்தச் சொல் கொண்டு நிரப்ப?
............................

வீட்டில் இறங்கியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு சாக்குக் கட்டில்.....
இப்போது கூகுள் இமேஜிலும் கிடைக்காத அந்தச் சாக்குக் கட்டில்....

( இனி பாவனைப் பொருள்களின் பட்டியலாகவும் பதிவுகளாகவும்  வருவன நீளும்...)

Thursday, September 14, 2017

தனிநாயகம் அடிகளார் ( 2.8.1913 – 1.9.1980 )

         
தமிழ் தூது, தமிழ் தேனீ, தமிழ் தென்றல் என்றெல்லாம் புகழப்படும் அடிகளார் உவேசா ஏட்டில் இருந்து அச்சுக்குக் கொண்டு வந்த தமிழை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றார் என்றும்; பனம்பாரனார் கூறிய ’வடவேங்கட தென்குமரியாயிடை தமிழ் கூறு நல்லுலகை’ சர்வ தேசம் என விரித்து வைத்தார் என்றும்; சோழ மன்னர்கள் செல்லத் தவறிய இடங்களுக்கெல்லாம் சென்று தமிழ் மணம் பரப்பினார் என்றும்; மேலை நாட்டுக்கும் கீழை நாட்டுக்கும் இடையே பாலத்தை அமைத்த கலைஞர் என்றும் அறியப்படுகிறார்.

உலக அரங்கில் தமிழுக்கென ஒரு உன்னத இருக்கையை தனி ஒருவராக ஏற்படுத்திக் கொடுத்த தனிநாயகம் அடிகளார் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி 13ம் ஆண்டு யாழ்ப்பாணத்து ஊர்காவற் துறையில் பிறந்தார். ஆங்கிலம், ஹிப்புரு, லத்தீன், இத்தாலியம், பிரெஞ், ஸ்பானிஷ், ஜேர்மன், போத்துக்கீஸ், ரஷ்ய, கிறீக், மலாய், சமஸ்கிருத, பாளி, சிங்களம் உட்பட 14க்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும், கேட்டு விளங்கவும் தெரிந்திருந்த அடிகளார் வத்திகான் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும்; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முதுகலை மானிப்பட்டமும் அத்தோடு முது இலக்கிய மானிப்பட்டமும் (M Lit) இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

 இந்திய வரலாறைப்பற்றி எழுதிய வரலாற்ராசிரியர்கள் சமஸ்கிருத, வட இந்திய வரலாற்றையே இந்திய வரலாறாகக் கொண்டிருந்த பார்வையை மாற்றி கங்கைக்கரையோடு நின்று விடாமல் காவேரிக்கரையில் இருந்து இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று முழக்கமிட்டதோடு உலகத்தின் 54 நாடுகள் வரை பயணம் செய்து அங்குள்ள பல்கலைக்கழகங்கள்,பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் தோன்றி தமிழ் மொழியின் பெருமையை; ஆழத்தை; அகலத்தை; ஒப்பற்ற அதன் வாழ்வியல் கருவூலங்களை உலகுக்குத் தெரியப்படுத்தினார்.

தமிழ் மொழி மூலமான ஆய்வுகள் ஆங்கிலத்திலும் நடத்தப்படுவதன் மூலம் உலகெங்கும் இருக்கற தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி உலகத்தரம் கொண்ட தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தினார். முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலும் 2ம் மாநாடு அறிஞர் அண்ணா தலைமையில் 1968ல் சென்னையிலும் நடந்தேறியது. அன்றிலிருந்து 2010இல் கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாடு வரை அடிகளாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே தமிழாய்வு முயற்சிகளும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையின் துறவியாக இருந்து அவராற்றிய சமய சார்பற்ற ஆராய்ச்சிப் பணிகள் உலகத் தமிழாய்வின் தந்தை என அவரைப் போற்றியது. 1964ல் டெல்லியில் நடந்த கீழைப்புல அறிஞர்கள் மாநாட்டில் உலகெலாம் இருந்து வந்த பேராளர்களை ஒருங்கிணைத்து ’அனைத்துலக தமிழாராய்ச்சிக் கழகத்தை’உருவாக்கினார். தமிழ் மொழி பழைமையானது; சங்க இலக்கியம் ஏற்றமுடையது, பக்தி இலக்கியம் மனதை உருக்கும் இயல்புடையது, சிலப்பதிகாரம் உலக இலக்கியத்தோடு ஒப்பிடத் தகுந்தது என்றெல்லாம் முழங்கியதோடு மட்டுமல்லாது, ஆங்கிலம் வாணிபத்தின் மொழி என்றும்; கிரேக்கம் இசையின் மொழி என்றும்; பிரெஞ் தூதின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும்; ஜேர்மன் தத்துவத்தின் மொழி என்றும்; இத்தாலி காதலின் மொழி என்றும்; தமிழ் பக்தியின் மொழி என்றும் கூறினார். அதனைச் சொல்லும் தகுதியையும் ஆறறலையும் அவ் அவ் மொழிகளின் மீதான அவரது மொழியறிவு அவருக்கு வழங்கியது இங்கு நினைவு கூரற்பாலது.

சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழி உரிமை தமிழுக்கே உண்டு என்றவர் அவர். அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்,  திருவருட்பா பனுவல்கள், பெரிய புரானம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள் வேறெந்த மொழியிலும் இல்லை என்று சொல்ல முடிந்தது. அவருக்கிருந்த பன்மொழிப் புலமை அதைச் சொல்லும் தகுதியை அவருக்கு ஈந்தது.

தமிழ் இலக்கியக் கழகம் எனற அமைப்பினை நிறுவி தமிழ் கல்ச்சர் என்ற ஆங்கில முத்திங்கள் ஆய்விதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். அதன் மூலம் உலகத் தமிழ் அறிஞர்களை ஒன்றிணைத்தார். மேலைத்தேயப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்ற இவ் ஆய்விதழ் பல்கலைக்கழக மட்ட தமிழ் அறிஞர்களை ஒன்றிணைக்க உதவியது. உலகத் தமிழ் அறிஞர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர்.

தமிழ் மீதான புலமை காணமாகவும் சிறந்த தொடர்பாடல் திறன், மொழியறிவு, பேச்சு வன்மை, நற்குண இயல்பு பின்னணியில் விளங்க, தமிழர்களின் பண்பாட்டை இலக்கியங்களில் இருந்து வரையறை செய்தும்; இலக்கியம், இலக்கணம், சாசனம், தொல்பொருள், சமய மரபு, கோயில் பண்பாடுகளில் இருந்து தமிழர் தம் வரலாற்று மூலங்களை எடுத்து உலகம் முழுவதிலும் அச் சம காலத்தில் இருந்த ஏனைய நாட்டுக் கல்விமுறைமைகளோடும் வாழ்க்கைத் தத்துவங்களோடும் அவற்றை ஒப்பீடு செய்தும், சிறந்த ஆய்வுப் புலமையோடு அவர் வெளிக்கொணர்ந்த கருவூலங்கள் தமிழியலின் சிந்தனை மரபின் தனித்துவத்தை உலக அரங்குகில் செவ்வனே அதன் சிறப்பைப் பறை சாற்றின.

சங்க காலத்துப் பாணர்களிடம் இருந்து துவங்கும் தமிழர் தம் புலமைத்துவ மரபு நடைமுறை வாழ்வில் இருந்தே உலகியல் வாழ்வை கற்பிதம் செய்தன என்றும்; மனிதனைத் தாண்டிய சக்திகளைக் கட்டமைக்காத வழியில் உருவான கற்பித்தல் மரபை தமிழ் இலக்கியத்தில் இருந்து கண்டுபிடித்து மேற்கோள்காட்டி ‘தமிழ் பண்பை’ ஏனைய சமகால மேலைத்தேய கலாசாரங்களோடு ஒப்பிட்டு அதன் தனித்துவத்தை உலகறியச் செய்தார்.

திராவிட எண்ணத்தின் தலைசிறந்த கருவூலமாக சைவசித்தாந்தத்தைக் கண்ட இந்த கத்தோலிக்கத் துறவி ( தமிழ் நாட்டிலே எத்தனையோ மேதாவிகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் தம்மாலியன்றவாறு அரும் பெரும் தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மொழி மூலமாக உலகுக்கு தொண்டு செய்த பெரியார்களுள் வள்ளுவர், இளங்கோ, சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  இப் பெரியார் யாவரும் தமது அரிய எண்ணக் கருத்துக்களை தமிழ் மொழி மூலம் உலகுக்களித்தனர். ஆனால் இவர்களைப் போன்ற கல்வியில் உயர்ந்த எத்தனையோ பல தமிழர்கள் தமிழ் நாட்டில் வழ்ந்தனர்.  அவர்களுள் ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜர் முதலியோர் முதன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் யாவரும் தமிழர். தமிழையே பேசினார்கள். எனினும் உயர்ந்த கருத்துக்கள் பொருந்திய நூல்களைத் தமிழில் எழுதாது வடமொழியில் எழுதி வைத்தனர். அதனால் வடமொழி செழிப்படைந்தது. ஆனால், அந் நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி எத்துணை சிறப்படைந்திருக்கும்? “ என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் பேராசிரியர் .க. கணபதிப்பிள்ளை (ஈழத்து வாழ்வும் வளமும், 2001,குமரன் புத்தக இல்லம்.’யாழோசை’ பக் 23)

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில் சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார். ( தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களையும் சுட்டிக் காட்டும் இவர், பாணர்களுக்கும் புலவர்களுக்கும் இடையில் காணப்பட்ட வேறுபாடுகளையும் எடுத்துக் காட்டுகிறார்.

( பாணன் தன் குடும்பத்துடனும் குழுவோடும் கூட்டாகச் செல்வான். புலவர் தனியே செல்வார். பாணன் தன் குழுவுடன் ஆடுவான், பாடுவான், நடனம் புரிவான், மகிழ்வூட்டுவான் இசைக்கருவிகளுடன் செல்வான். புலவன் அறிவு புகட்டுவான், அதிகாரம் பெற்றவன் போன்று அறிவுரை வழங்குவான். கூடவே கல்வி அறிவு கவியாற்றும் திறனில் சிறந்து விளங்குவான். பாணன் சமூகத்தின் குரலாய் ஒலிப்பான். புலவன் தன் சொந்தப் பேரில் செல்வான். அவனுடய பெரும்பாலான கவிதைகள் தன் சொந்த அனுபவங்களாக இருக்கும். பாணர்கள் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருப்பார்கள். புலவர்கள் அரண்மனையில் காணப்படுவார்கள். தன்னொத்த சக புலவரோடும் அறிஞர்களோடும் புலவர்கள்  சகவாசம் இருக்கும். பாணன் புகழ்ந்து பாடுவதிலும் வீர உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சி கொள்ளச் செய்யும் பாடல்களைப் பாடுவான். புலவர்கள் அரசரைப் புகழும் போதும் மனித ஒழுக்கத்தைச் சார்ந்த்தாக பொது நலம் சார்ந்த்தாக மனித ஒழுக்கம் சார்ந்ததாக அறநெறிக்குகந்ததையே பாடுவார்கள். பாணன் படைவீர்ர்களுக்கு உணர்ச்சியூட்ட போர்களத்தில் காணப்படுவான். புலவருக்கு போர்களத்தில் இடமில்லை. ஆனால் அமைதியின் தூதராக அரசனின் நண்பன் என்ற முறையில் தூது போவார்.  பாணன் என்ற சொல் இசை, நடனம், நாடகம், எனற பொருளைக் குறிக்கும் வேர்சொல்லில் இருந்து பிறந்தது. புலவர் என்ற சொல் பொது அறிவு, பகுத்தறிவு, கல்வி போன்ற பொருளைத்தருகிற வேர்சொல்லில் இருந்து பிறந்த்து. (நன்றி: தனிநாயகம் அடிகளார் அமுதன் அடிகள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)

பாணரிடம் இருந்து புலவரிடம் கைமாறிய திராவிடக் கல்வி காவிய காலத்தில் சமய ஆசிரியர்கள் வசமும் தத்துவ ஞானிகளிடமுமாக மாறுகிறது. எனினும் அவர்கள் தம்  மதம் சார்ந்த தத்துவங்களை / கொள்கைகளை தமிழ் மொழியின் மரபுகளில் இருந்து தவறாதவர்களாகவே வடித்தார்கள்.  மொழி மதத்தை உள்வாங்கி வளர அதுவே காரணமாயிற்று. சுருக்கமாகச் சொல்வதானால் தமிழ் என்ற பாத்திரத்திலேயே அவர்கள் தம் சமயக் கருத்துக்களையும் கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளையும்  மக்களுக்கு அளித்தார்கள் எனலாம்.

தமிழரின் ’யாதும் ஊரே என்ற உலகளாவிய தத்துவம் இப்படித்தான் பின்நாளில்  பல்வேறு சமயம் சார்ந்த காவியங்களிலும் சமய அற நூல்களிலும்  காப்புச் செய்யுளில் ‘உலகெலாம்’ எனத் தொடங்கியது. அதனாலேயே தமிழ் பக்தியின் மொழியாகப் பரினமித்தது. அதற்கு
அப்பன் நீ அம்மை நீ... என்ற தேவார பாணியில் வீரமாமுனிவர் இயற்றிய

“அறக்கடல் நீயே அருட்கடல் நீயே
அருங்கருணாகரன் நீயே
திறக்கடல் நீயே திருக்கடல் நீயே
திருந்துளம் ஒளிபட ஞான
திறக்கடல் நீயே நிகர் கடந் துலகில்
நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்
பெறக்கடல் நீயே; தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ; அனைத்தும் நீயன்றோ” (படலம் 6: 34)

 என்பதை அடிகளார் எடுத்துக் காட்டுகிறார்.

சான்றோருக்கு தமிழ் சமூகத்தில் இருந்த இடத்தை பறைசாற்றும் பாடல்கள் பல உள.’சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று தன் இளமைக்கு காரணம் சான்றோர்கள் வாழும் ஊரில் தான் இருப்பதை காரணம் காட்டும் சமான்யனையும் ‘சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்’ என்று குடும்பத்தில் அவரவர் கடனை சொன்னதிலும், ’அமிழ்தம் இயைவைதாயினும் இனிதென தமியர் உண்டலும் இலரே’ என்றும் புகழெனில் உயிரும் கொடுக்குவர் பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்றும் ’தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலும்  உண்மையானே’ என்றும்  (அகம் 55, புறம் 182, புறம் 69) தொல்காப்பியரின்

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்ரை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக எண்ணாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
என்றும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன் கண்படுமே” (புறம்)

கூறும் திராவிட சான்றோர் கொள்கை அவர் எடுத்துக் காட்டி இன்புற்று பெருமைப்படும் இடங்கள்.

ரோம சம்ராஜ்யத்தின் ஸ்ரொயிக் வாதிகளின்

“எல்லா மக்களின் நாடுகளும் என் தாய் நாடு - என்றைக்கும்
என் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு”

 என்பதோடும் ( செனிக்கா)

மார்க்கஸ் ஓளரோலியஸ் என்ற ரோமப் பேர்ரசர்

‘நான் பகுத்தறிவும் சூட்டுறவும் உடையவன்.
நான் அண்டோலைனஸ் என்பதால் உரோமுக்குரியவன்.
 நான் மனிதன் என்பதால் உலகுக்குரியவன்”

 என்றும் சொன்னதோடு  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் எனற தமிழ் திராவிட கொள்கையை ஒப்பிட்டு அவரவர் மொழியில் அதனை மொழிபெயர்த்துச் சொல்லி தமிழ் திராவிட பண்பாட்டை ஒப்பிட்டு உலகுக்குக் காட்டியவர் தனிநாயகம் அடிகள்.

அதே நேரம், இவ்வாறான ஒற்றுமைகள் இருந்த போதும் ஸ்டொயிக் வாதிகள் இலட்சிய மனிதர்கள் ஒருசிலர் என்றும்; அவர்கள் தத்தம் இல்லங்களில் தனிமையில் வாழ்ந்து வருவர் என்றும்; சொல்ல, சங்க  காலத்து மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சான்றோனாகுதல் கூடும் என்பது வலியுறுத்தப்படுவதையும்; எபிக்யூரஸ் வாதம் செல்வம் ஈட்டுதலையும் சிறின்பத்தையும் வலியுறுத்த, வள்ளுவன் களவியலையும் சிற்றின்பத்தையும் போற்றும் அதே நேரம், தமெக்கென வாழா பிறர்கென வாழும் தன்மையை வலியுறுத்துவதையும் ஒப்பிட்டு எடுத்துக் காட்டியும்; ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல் ரு;எக, அ ஒ) என்று சொல்லும் பிறர்கென வாழும் தன்மையையும் எடுத்துக் காட்டுகிறார். ரோமர்கள் தம்மவர் பெருமையை எழுத, வள்ளுவரோ உலகு தழுவி தமிழ், தமிழ் நாடு என்ற சொற்பதங்களை உபயோகிக்காமலும்  உச்சரிக்காமலும் எழுதியதையும் எடுத்துக் காட்டி தமிழ் பண்பாட்டை உலக நாடுகளுக்குஎடுத்துச் சென்றார்.

தமிழருடய நீதி நூல் தொகுதிகளும், நீதிக் கருத்துக்களும்,  உலகெங்கும் சென்றன. தமிழ் நாட்டு மலைகளில் விளையும் மிளகும், தமிழ் நாட்டுக் கடலில் விளையும் முத்தும், பவளமும் உலகம் விரும்பியது. தமிழ் நாட்டுக் காடுகள் யானைக் கொம்பும் தேக்கு மரமும் வழங்கின.  தமிழ் நாட்டு வயல்கள் நெல்லும் கரும்பும் உதவின. தமிழ் நாட்டு கனிய வளங்கள் வெள்ளியும் பொன்னும் மணிகளும் நல்கின.பெற்றமும் எருமையும் யாடும் தகரும் கரியும் பரியும் மான் முதலாய வனவிலங்குகள் எண்ணிறைந்தவையும் ஈந்த வனங்கள் எண்ணில. ஆதலால் தமிழன் திசைகள் எங்கும் சென்று தமிழ் நாட்டின் பெருமையை நிலை நாட்டினான்.சிரியா, மொசப்பத்தேமியா, எகிப்து, பாலஸ்தீன்,இத்தாலி, கிறீஸ், சீனம், கடாரம், சாவகம் முதலிய நாடுகள் தமிழ் நாட்டுப் பொருட்களைப் பெற்றுத் தளைத்தோங்கின.( தமிழ் தூது; சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு, பக்; 85) ( கூடவே சாகுந்தலத்தில் காளிதாசர் 4வது காட்சியில் சகுந்தலை தன்னைத்  தந்தையிடம் இருந்து பிரிக்கும் செயலானது மலையாள மலைத்தொடரில் சந்தன மரத்தில் படர்ந்துள்ள கொடியை அம்மரத்தில் இருந்து பிரிக்கும் செயல் போன்றது எனக் கூறல் காண்க. ( தமிழ் தூது பக். 51) சந்தன மரங்கள் செறிந்துள்ள மலையாள மலைத் தொடர்கள்....

 இயற்கையோடு வாழ்ந்த அவர் தம் வாழ்வையும் அவ் இயற்கையை பாடல்களில் புகுத்திய ஆற்றையும், வேப்பம் பூ இறால் மீன்களின் கண்களைப் போல இருக்கிறதென்றும்; கலைமானின் கொம்பு இரும்பு திரிந்தன்ன மாயிரு மருப்பு என்றும்;பாடினியின் சிவந்த மெல்லிய உள்ளங்கால் வேட்கையால் இளைப்புற்ற நாயினுடய நாக்கினை ஒத்திருக்கிறதென்றும்; நெல்லிக்கனி முயலின் கண்களுக்கும்; நாரையின் மூக்கு பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன கூர் வாய் என்றும்; மாலைப்பொழுது இயற்கை மகள் ஏற்றும் விளக்கு போல என்றும்; காந்தள் மலர் இதழ் குவிந்திருப்பது இறைவழிபாடு செய்யும் இனிய மகளிரின் குவிந்த கைபோல கவின் செய்கிறதென்றும்; சொல்லும் ஆற்றை; இயற்கையை நேசித்த மக்கள் தம் கவிப்பண்பை  உலகெங்கும் கொண்டு சென்று அறிமுகப்படுத்தினார்.

அவர் தம் வாழ்விடங்கள் பற்றிக் கூறும் போது இறையனார் அகப்பொருள் ஒரு இல்லத்தை இப்படி கூறுகறது என்பதை தன் தமிழ் தூது என்ற நூலில் ’தமிழரும் அவர் தம் கவின் கலைகளும்’ என்ற பகுதியில் இவ்வாறு குறிக்கிறார்.

’அவை அட்டில் ( சமையல் அறை) கொட்டகாரம் (நெல் முதலிய பண்டம் வைக்கும் அறை) பண்டக சாலை ( அணிகலன் முதலியன வைக்கும் மனையகத்துறுப்பு) கூடகாரம்( மேல் மாடம்) பள்ளியம்பலம் ( துயிலிடம்) உரிமையிடம் (அந்தப்புரம்) கூத்தப்பள்ளி ( அரண்மனை சார்ந்த நாடக அரங்கு) எனும் மனையகங்களும் செய்குன்றும் இளமரக்காவும் பூப்பந்தரும் விளையாடுமிடமும் எனும் இல் வரையகங்களுமாம்’

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன அவர் கண்டு கொண்டு உலகுக்கு கொண்டு சென்ற மேலும் சிலவான  தமிழின் பண்புநலம்.

சுமார் 54 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து அவ் அவ் நாடுகளில் மறைந்து கிடந்த தமிழ் பண்பாட்டை கண்டு பிடித்த 20ம் நூற்றாண்டு தமிழ் கொலம்பஸ் எனப் போற்றப்படும் இவர் தமிழின் அருமை பெருமைகளை உலகெங்கும் சொன்னதோடு தமிழ் உலகெங்கனும் பரந்து சிறந்த இடங்களில் இருந்து தமிழ் கருவூலங்களை தமிழ் கூறு நல்லுலகம் அறியச் செய்த பெருமையும் அவரையே சாரும்.

அச்சுவாகனம் ஏறிய உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் முதல் அச்சுவாகனம் ஏறிய சிறப்பு தமிழுக்கே உண்டு என்பதோடமையாது  1578ல் அச்சான தம்பிரான் வனக்கம் ஹெவார்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பதையும் 1579ல் வெளியான கொச்சி அம்பலக்காட்டில் வெளியிடப்பட்ட கிரிசித்தியானி வணக்கம் பிரான்ஸ் நூலகத்தில் இருப்பதையும் 1586ல் புன்னைக்காயலில் பதிப்பிக்கப்பட்ட அடியார் வரலாறு வத்திகான் நூலகத்தில் இருப்பதையும் கண்டுபிடித்து தமிழ் உலகுக்கு அறிவித்ததோடு தாய்லாந்து நாட்டில் அரச முடிசூட்டு வைபவத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படுவதையும் சுமாத்திராவில் உள்ள காரோபட்டக்கு இனத்தவரிடம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயர் வழக்கில் இருந்து வருவதையும் கூடவே தென்கிழக்காசியாவில் ஏற்பட்டிருந்த கலைப் பண்பாட்டு பரவல்களையும் தமிழுக்கு தெரியப்படுத்தியவராக அவர் இருந்தார்.

யப்பான் நாட்டில் 1590லும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 1593லும் ஸ்பானிஸ் மொழியிலான் அச்சுக்கலை 1584லும் ஆபிரிக்க மொழியில் 1624லும் ரஷ்யா நாட்டில் 1563லும் கிரேக்க நாட்டில் 1821லும் முதல் அச்சுப் பதிப்புத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் பற்றி வெளிவந்த நூல்களைப்பற்றிய குறிப்புகளை எல்லாம் தொகுத்து அவர்  மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றி இருந்த காலத்தில் மலேய பல்கலைக் கழக வெளியீடாக 122 பக்கங்களில் 1355 வெளிவந்த நூல் தமிழிய ஆய்வாளர்களுக்கான பொக்கிஷம் ஆகும்.

தமிழ் ஆய்வில் ஈடுபடுவோருக்கு பயந்தரவல்ல இந் நூலில் இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ், சுவீடன், ஹொலண்ட், ரஷ்யா, செக் குடியரசு, மலாய், வடமொழி, ஸ்லோவாக், இத்தாலியம், சுவிடீஸ்போத்துக்கீஸ்  மொழிகளில் இடம்பெற்ருள்ள தமிழ் இலக்கியம், மானுடவியல், தொன்மையியல், கலை, கல்வெட்டு இயல், சமூக வரலாறு, பண்பாடு, நாகரிகம், இலக்கியவரலாறு, திறனாய்வு, அகராதி, இலக்கணம், மொழியியல், ஒப்பியல், சமயமும் தத்துவமும், பயண நூல்கள், ஆய்வு நூல்கள் யாவும் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.

தனது மொழி, நாடு ,இனம் என்ற தளத்தில் வலுவோடு இயங்கிய அடிகளார் இலங்கையில் தமிழ் 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்டதை வெகுவாக எதிர்த்தார்.

அரசியலில் ஈடுபாடு எதுவும் கொண்டிராத இத்துறவி மக்கள் நலனிலும் மனித நேயத்திலும் தீராத பற்றுக் கொண்டிருந்தவர். ’பெரிதே உலகம்; பேணுனர் பலரே’ என்பதும்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்றும்;’ யாதும் ஊர்ரே யாவரும் கேளிர்’ எனற கொள்கையையும் கொண்டவர். அவர் உலகின் குடிமகனாக இருந்தவர்.

பெல்ஜியம் பிரெஞ், பிளமிங் ஆகிய இரு மொழிகளைப் பேசும் இனத்தாருக்கு ஒத்த உரிமை வழங்கி இருப்பதையும்; கனடா ஆங்கிலம், பிரெஞ் மொழிகளுக்கு சம உரிமை கொடுத்திருப்பதையும்; சுவிற்சிலாந்து பிரெஞ், ஜேர்மன், இத்தாலியம், ரோமன் மொழிகளை பேசும் 4 இனத்தவருக்கும் ஒத்த உரிமை வழங்கியதையும்; பின்லாந்து நாட்டு மக்கள் தொகையில் ஸ்வீடிஷ் மொழி பேசுவோர் 9%மேயானாலும் அம் மொழி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்குவதையும்; 1க்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்டுள்ள 30 மேற்பட்ட நாடுகள் அனைத்திலும் அந் நாடுகள் சகல மொழிகளுக்கும் ஒத்த உரிமைகளை வழங்கியிருக்க, இலங்கை மட்டும் இவ் உலகளாவிய சிந்தனையில் தனித்து நிற்க முனைவது ஏன் என்று கேட்கிறார் அடிகளார். இவற்றை எல்லாம்  சுட்டிக் காட்டி இரு மொழி இனத்தவரைக் கொண்ட இலங்கையிலும் அத்தகைய ஒருமைப்பாட்டுணர்வு வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்றார்.

இரு மொழிகளும் இலக்கணம், இடப்பெயர்கள், நாடகம், கட்டிடம், கலை, சிற்பம் முதலாய துறைகளில் பரஸ்பர பண்பாட்டுச் செல்வாக்கை கொண்டிருப்பதையும்; சட்டம், சாதியமைப்பு, சமுதாயக் கூறுகளிலும் உள்ள பொதுமைப்பண்பைச் சுட்டிக் காட்டினார். இலங்கையின் தென்பகுதியில் அமைந்துளள கதிர்காமம் இந்து, இஸ்லாம், மெளத்த மக்களின் புனித ஸ்தலமாய் காணப்படுதலையும்;  இலங்கையின் வடகோடியில் உள்ள நைனாதீவு பெளத்த, இந்து சமயத்தவரால் புனிதமாகப் போற்றப்படுவதையும் ஒப்பிட்டு, ஒரு சமயத்தைச் சார்ந்த மன்னன் மற்றய சமயம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு வழங்கிய சான்றுகளை சிங்கள அரசவையில் பிராமணர் பணிக்கமர்த்தப் பட்டதையும்; சிங்கள மன்னர்கள் தமிழ் இளவரசிகளை மணந்து கொண்டதையும் காட்டுகிறார். பெளத்த பள்ளிக் கூடங்களில் சிங்களம்,பாளி, வடமொழி, தமிழ் ஆகியன கற்பிக்கப்பட்டன. வீர சோழியம் என்ற தமிழ் இலக்கணத்தின் தாக்கம் ‘சிதத் சங்கரவ’ என்ற சிங்கள இலக்கண நூலில் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். இலங்கையில் பல தமிழர்கள் பெளத்தர்களாகவும் இருந்தனர். தமிழ் காப்பியமான மணிமேகலை தேராவாத பெளத்த சமய காப்பியம் என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

24 மணி நேரத்தில் சிங்களம் நாட்டின் அரச கரும மொழியாக ஆக்கப்படும் என்று பண்டார நாயக்காவும் அதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு தெரிவித்த போது ‘சிங்களமும் தமிழும் அரச கரும மொழியாக இருப்பதில் சிங்கள் மொழிக்கு எது வித இடையூறும் நேராது என்றும் சிங்களம் அரச கரும மொழியாக இருந்தாலும், தமிழையும் சிங்களத்தின் நிலை பாதிக்காமல் பயன் படுத்தலாம் என்றும் ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்னும் தலைப்பில் ஆங்கில நூலை வெளியிட்டு உலகுக்கு உண்மை நிலையைத் தெரியப்படுத்தியதுடன் பண்டார நாயக்காவையும் சந்தித்து உரையாடினார்.

அது ஏற்றுக் கொள்ளப்படாமையால் காலிமுகத்திடலில் நடந்த சத்தியாக்கிரகத்தில் அடிகளார் கலந்து கொண்டார் என்றும்; அதற்கு அப்போது பொலிஷ் அதிகாரியாகக் கடமையாற்றிய சிட்னி டீ சொய்சா என்ற பொலிஸ் அதிகாரி இவருக்குக் கண்காணிப்பாக இருந்து பாதுகாப்பை வழங்கி இருந்தார் என்றும் ஒரு வரலாற்றுச் செய்தி சொல்கிறது. (ஆசிரியம் 2011 ‘பண்பாட்டுப் பேரொளி தனிநாயகம்’)

 இவைகள் எல்லாவற்றையும் விளக்கி அரசு அலுவலர்கள் இரு மொழியையும் கற்றிருந்தால் இலங்கையில் எப்பகுதியிலும் எவரோடும் பணி புரியலாம் என்றும்; அப்போதய பிரதமராக விளங்கிய எஸ். டபிள்யூ. ஆர். டீ பண்டாரநாயக்காவுக்கு நேரில் சந்தித்து விளக்கினார் என்றும்; ஆனால் பண்டார நாயக்கா அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிடுகிறார். (Fathaer I will rather decide it on the point of sword’ – A.J. Willson, The Dedicated Patriotism of Father Thani Nayagam; Tamilaram P84) தமிழ் மொழி இலங்கையில் தன் அந்தஸ்தை இழந்து விடப்போகிறது என்று கவலைப்பட்ட அடிகள் தமிழ் பெளத்தத்துக்கு எதிரானதல்ல என்றும்; தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் உரைத்தார்.

 காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிரகத்திலும் அவர் பங்கு பற்றினார். அடிகளாரின் இறுதி இரங்கல் கூட்டத்தில்  (3.9.1980 யாழ் பேராய திரந்த வெளி அரங்கு) இரங்கல் கூட்டத்தில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் ‘நாமெல்லாம் சத்தியாக்கிரகம் செய்துகொண்டிருந்த போது 1000 கணக்கான காடையர்கள் கல்மாரி பொழிந்து கொண்டிருந்த வேளையிலே அந்தத் தாக்குதலுக்கூடாக ஒரு உருவம் துறவி உடையிலே எங்களை நோக்கி வந்துகொண்டிருந்த்து. எங்கள் மனம் 1 நிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் இந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்களோடு சேரப்போகிறேன் என்று வரக்கூடிய உளம் படைத்தவராக தைரியத்தோடு வந்த தனிநாயகம் அடிகளாரை நாம் என்றும் மறக்க இயலாது’ என்று குறிப்பிட்டார்.


மொழிக்காகவும் இனத்துக்காகவும் உழைத்த இந்தக் கத்தோலிக்கத் துறவி தன் 67வது வயதில் காலமான போது அறிஞர் அண்ணா’ உங்கள் சமயம் எது என்று கேட்டால் கிறீஸ்தவம் என்பார்; உங்கள் ஊர் எது என்று கேட்டால் யாழ்ப்பாணம் என்பார்; உங்கள் மொழி எது என்று கேட்டால் தமிழ் என்பார் அந்த தமிழ் உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும் என்று சொன்னார். ஐரோப்பியர்கள் “ A short dark man with a polish of a diplomat and the accent of an Oxford scholar என்றார்கள்.தனி நாயகமாக நின்று மொழிக்கும் இனத்துக்கும் அவற்றுற்கான உரிமைக்கும் குரல் கொடுத்த தனி நாயகம் இந்தத் தனிநாயகம்.

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&go=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D

http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&profile=default&search=%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&fulltext=Search

அவருடய மூல நூல்களில் ஒன்றே உலகம், தமிழ் தூது என்பனவும் மேலும்  இதழ்களில் வெளியாகிய மேலும் சில கட்டுரைகளும் மேல்வரும் நூலக இணையத் தள இணைப்பில் இலவசமாகத் தரவிறக்கிப் பெற முடிகிறது...

அவரால் பாவிக்கப் பட்ட நூல்களும் அவருடய நூல்கள் பலவும் கொழும்புத்துறை சவேரியர் குருத்துவக் கல்லூரியில் ‘ தனிநாயகம் Collections’ ஆக பாதுக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.  இன்றும் அவை இருக்கிறதா என்பது குறித்து அறிய முடியவில்லை.

நன்றி; இணைய நூலக இணையத்தளம் மற்றும் சிட்னி தமிழ் அறிவகம்.
1.தனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள் 1993
2.தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் - டாக்டர். வே. அந்தனிஜான் அழகரசன்.1984.

மேலதிக நன்றி எஸ்பிஎஸ் வானொலி.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/thamil-thadam-thani-nayagam?language=taஅதிலும் குறிப்பாக இவ்வாறான ஓராழுமையை அறியவும் சொல்லவும் வைத்த இவ் வானொலி நிர்வாக இயக்குனர் றைசெல் என அழைக்கப் பெறும் றேமண்ட் செல்வராஜ் இற்கு என் மனமார்ந்த நன்றி....Monday, August 7, 2017

வில்லிசை சின்னமணி ( 30.3.1936 - 4.2. 20015)

               
வில்லிசை என்பது தமிழருடய பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும்.

இக் கலை வடிவம் எவ்வாறு தோன்றிய தென்பதற்கு நாடோடிக் கதை ஒன்றுண்டு. முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் வேட்டையாடப் போன போது மான் ஒன்றை வேட்டையாடிய பின் அதன் குட்டியின் எதிர்காலம் குறித்து வருந்தினான் என்றும்; அதற்கு அமைச்சர் இறைவனை இசையால் மனமுருகிப் பாடினால் இச் செயலை அவன் மன்னித்து அருள் புரிவான் என்றும்; இசை ஒன்றுக்கே இறைவன் மயங்க வல்லவன் என்றும் கூற மன்னன் வில்லைத் தரையில் வைத்து அம்பால் அதனைத் தட்டி இசை எழுப்பினான் என்றும்; வில்லின் வளைந்த பகுதி தரையில் நிலையாக நிற்காத காரணத்தால் அதற்கு குடி தண்ணீர் கொண்டு சென்ற முட்டியை முட்டுக் கொடுத்து நிறுத்தினான் என்றும்; அதன் மீது தட்ட டும் டும் என்று நாதம் எழுந்ததென்றும்; அமைச்சர் அதற்கு தந்தனத்தோம் என பின் பாட்டுப் பாட அரசரோடு வந்த ஏனைய படையாட்கள் அதற்கு தலையாட்டி ஆமாம் போட இக் கலை வடிவம் பிறந்ததென்றும் ஒரு செவி வழிக் கதை கூறுகிறது.

தமிழரின் சிந்தனை மரபினதும் இசை மரபினதும் மூலக் கூறாகக் கொள்ளத்தக்க இவ் இசைக் கலை வடிவம் சலங்கைகள் கட்டப்பட்ட வில்லும் தடியும் குடமும் அத்தோடு உடுக்கை தாளம் போன்ற துணைக் கருவிகளாகளையும் கொண்டமைந்தது.

புராண இதிகாசக் கதைகளூடாக நடப்புக் கால சமூகப் பிரச்சினைகளை சொல்லும் இவ் இசை கலந்த வில்லுப் பாட்டு 7 வகையான உள்ளடக்கங்களைக் கொண்டது. முதற்பகுதி காப்பு. இதில் விக்கினங்கள் இன்றி நிகழ்வு நடக்க வேண்டி இறைவனை வேண்டுவது. அடுத்து வருவது வருபொருள் உரைத்தல். இது கருப்பொருள் பற்றிய விளக்கத்தை உரைக்கும். அடுத்து குருவணக்கமும் அதைத் தொடர்ந்து அவையடக்கமும் சொல்லப்படும். அதில் பிழை நேருமிடத்து பொறுத்தருள வேண்டும் என்பது எடுத்துரைக்கப் படும். அதைத் தொடர்ந்து நாட்டு வளம் சொல்லப்பட்ட பின் முக்கியமான கதைப் பகுதிக்கு வருவர். கதைப்பகுதியின் நிறைவில் எல்லோரும் நலம்பெற மங்கலம் பாடி நிகழ்வு நிறைவடையும். இது ஓர் எளிமையும் அழகியலும் சார்ந்த கலை வடிவமாகும்.

பாட்டிடையிட்ட பிரதான கதைப் பகுதியில் சம காலச் சமூகப் பிரச்சினை புராண இதிகாசக் கதைகளோடு தொடர்பு படுத்தி இசையிடை கொண்ட கதைப் பா வடிவமாக கற்பனையும் அழகியலும் சால்பும் நுட்பமான சமூகப் பார்வையும் புராண இதிகாசக் கதைப்பரீட்சயமும் கலந்ததாக பாட்டிடையிட்ட இசைக்கதையாக ராகம், இலேசான ஆட்டம், இசை, ஒத்தோதல் பண்புகளால் ரசிகர்களை வசீகரிக்கும்.

60களில் இலங்கைக்கு மாஸ்டர் சிவலிங்கம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட  இக்கலைவடிவம் திருப்பூங்குடி ஆறுமுகம், சிறிதேவி வில்லிசைக்குழு, உடப்பு சோமஸ்கந்தர் வில்லிசைக்குழு, சோக்கல்லோ சண்முகம் வில்லடிப் பாட்டிசைக்குழு, வானொலிக்கலைஞர் சற்சொரூபவதி நாதன், மற்றும் சுலோச்சனா போன்ற பெண் வில்லிசையாளர்கள் இத் துறைக்கு வந்த போதும் சின்னமணி வில்லிசைக்குழுவே இறுதி வரை கொடிகட்டிப் பறந்தது.  ஈழத் தமிழ் பகுதிகளில் இக் கலைவடிவம் அறியப்படவும் விரும்பப் படவும் வனப்பும் செல்வாக்கும் பெறவும் வில்லிசைச் சின்னமணி என பின்னாளில் அறியப்பட்ட க. ந. கணபதிப்பிள்ளை என்பாருக்கு முக்கியமான இடம் உண்டு. மார்ச் 30ம் திகதி 36ம் ஆண்டு பருத்தித்துறை மாதனை என்ற இட்த்தில் பிறந்த கணபதிப்பிள்ளை தமிழ் ஆசிரியராக்க் கடமையாற்றியவர்.

அவர் 1957ல் ஆசிரியராகக் கடமையாற்றிய போது தமிழக நாடக மேதைகள் டீ.கே.எஸ் சகோதரர்களோடு இணைந்து நாடக நிகழ்வுகளில் பங்குபற்றியதன் காரணமாக அவருக்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்னனுடன் தொடர்பு கிட்டியதன் காரணமாக நாடக உத்தி, வில்லிசை நுட்பங்களை அவரிடம் இருந்து கற்றுத் தேர்ந்து தன் குருவான கலைவாணரின் பெயரில் நாடக மன்றத்தை உருவாக்கி வில்லிசை என்ற கலை வடிவத்தை ஈழத்தமிழரின் பாரம்பரிய இசைக் கலை வடிவங்களுள் ஒன்றாக்கினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்று சொல்லும் அளவுக்கு அவர் இக்கலையில் பாண்டித்தியமும் புலமையும் அனுபவமும் பெற்றிருந்தார். சகலரும் ரசிக்கும் படியாக கதை சொல்லும் ஆற்றலும் புராண இதிகாச காப்பியங்களில் அவருக்கிருந்த பரீட்சயமும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து பல பல பட்டங்களை வாங்கிக் கொடுத்தன. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்ன்ன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலை ஞான சோதி, பல்கலை வேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், வில்லிசைத் திலகம், ஜன ரஞ்சக நாயகன், நவரசக் கலைஞன், வில்லிசைப் புலவர், கலா வினோதன் வில்லிசைப் பேரொளி, ஆகியவை அவற்றுள் சில. 1998இல் இலங்கை அரசின் கலா பூஷண விருதையும் 2003 இல் வட மாகாண ஆழுனர் விருதையும்  பெற்றவர் அவர்.
நடிப்பு இசை நடனம் தமிழ் சமயம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் கொண்டிருந்த இவர் ஹாமோர்னிய இசைக் கலைஞர் நல்லூர் சோம சுந்தரம், எஸ் ரீ அரசு ஆகியோரின் துணையுடனும் ஆசீர் வாதத்துடனும் 2.2. 68இல் தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய முற்றலில் பெருந்தொகையான மக்களின் முன்னிலையில் கலைவாணர் வில்லிசைக் குழு என்று தான் உருவாக்கிய வில்லிசைக் குழுவின் மூலமாக அரங்கேற்றம் கண்டார்

பல்கலைத் திறன் கொண்ட இவர் வில்லிசை நிகழ்வின் நடுவில் அமர்ந்து கதை சொல்லும் முறையும் நவரச பாவங்களை முகத்தில் காட்டும் பாவமும் கதையில் வரும் பாத்திரமாக மாறி அவர் நடிக்கும் திறனும் தமிழை அவர் உச்சரிக்கும் விதமும் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடும் வல்லமையும் சிந்தனைக்கு எழில் சேர்க்கும் நகைச்சுவையும் எதிர் பாரா வித்த்தில் உதிக்கும் கற்பனையும் இவரது வில்லிசைகளில் விரவி நின்ற போது மக்கள் அதனை வெகுவாக ரசித்தனர்.

மரபு வழியான கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்து கொண்டிருந்த திருவிழாக்களில் இவரால் தொடக்கப்பட்டு உருவாகி வளர்ந்த இவ் வில்லிசை வடிவம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இராமாயணம், பாரதம், கந்த புரானம் பெரிய புராணம், ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் தமிழ் இலக்கியப்பரப்பில் சிதறிக்கிடக்கும் பல்வேறு வரலாறுகளையும் பொறுக்கி எடுத்து தன் சமகால சமூக வாழ்க்கைக் கோலங்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தி வில்லிசையாக்கி அவர் தொடுத்த கலைக் கோலங்கள் மிகப் புகழ் பெற்றவை. வில்லிசை நிகழ்த்தும் போது அக் கதைப் பாத்திரமாகவே மாறிவிடும் அவர்  கலை இயல்பு அவருக்கு தன் நாட்டிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவீஸ் போன்ற நாடுகளிலும் பெரும் புகழை அவருக்கு ஈட்டித் தந்தது.

தனது 9வது வயதில் குழந்தைக் காத்தானாக காத்தவராயன் கூத்தில் நடித்ததோடு தொடங்கிய இவரின் கலையுலகப் பிரவேசம் தனது மாமனாரான நாட்டியக் கலைஞர் வி.கே. நல்லையாவிடம் நடனத்தையும் இசையையும் கற்றுக் கொண்டும் பெற்றோரிடம் தமிழ் புராண இதிகாச வரலாறுகளைக் கற்றுக் கொண்ட படியும் பாடசாலைப் படிப்பில் தமிழ் புலமை கொண்ட படியும் தொடர்ந்த்து. தன் சகோதரனான க.நா. நவரத்தினம் உடன் இணைந்து நடனம், காவடி, கரகம் முதலான கலைகளில் தேர்ச்சி பெற்றார்.

இசை நாடகத் துறையிலும் சிறந்த கலைஞராக அவர் விளங்கினார். இசை நுட்பம் நிறைந்த பாடல்களையும் பல வரலாறுகளை எடுத்துரைக்கும் நீண்ட வசனங்களை கொண்டமைந்த பாத்திரமான இயமனாக நடிப்பதிலும் புதிய இலக்கணங்களை ஏற்படுத்தினார். மேலும் நட்சத்திரத் தரகர், தோட்டி, சத்திய கீர்த்தி, போன்ற பாத்திரங்களிலும் தனித்துவமாக மிளிர்ந்தார். சுருதி சுத்தமாகக் காத்தவராயன் கூத்தை பாடி நடிக்கும் திறன் கொண்டவர்களில் இவரும் ஒருவர். வண்ணைக் கலைவாணர் மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட நாடகங்களான இன்பக்கனவு, திப்பு சுல்தான், வீரமைந்தன், சாம்ராஜ் அசோகன், சரியா தப்பா போன்ற நாடகங்களில் பங்கெடுத்தார்.  1962ல் அரிச்சந்திரா மயாணகாண்டத்தில் நான்கு வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். நாரதராகவும் நட்சத்திரராகவும் அயல் வீட்டுப் பிள்ளையில் ஒருவராகவும் சுடலையில் மேளம் அடிப்பவராகவும் ஒரே நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களை ஏற்றார். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் யமனாகவும் காத்தவராயன் கூத்தில் காத்தானாகவும் கிருஷ்னராக ஆரியமாலாவாக வண்ணார நல்லியாக, மந்தரையாக என பல்வேறு பாத்திரங்களையும் அநாயாசமாக செய்து காட்டினார். பாடும் திறனும் பாத்திரத்துக்கேற்ப பொருந்திப்போகும் நடிப்புக் கலையும் அவருக்கு கைவந்திருந்தது. பயிற்சியும் கற்பனா சக்தியும் அவற்றுக்கு முழுமையினைக் கொடுத்தது.

எனினும் அவர் வில்லிசைத்துறையையே தன் துறையாக்கிக் கொண்டார். தொடக்க காலத்தில் இலங்கையில் வில்லிசை நிகழ்த்தி வந்த திருப்புங்குடி ஆறுமுகம்  அவர்களின் வில்லைசை நிகழ்வில் நகைச்சுவைக் கலைஞராகவும் பக்கப்பாட்டுப் பாடுபவராகவும் உடுக்கைக் கலைஞராகவும் தன்னை பயிற்றுவித்துக் கொண்டவர்.

ஈழத்தில் தவிலுக்கு தட்சணாமூர்த்தி எவ்வாறு புகழப்படுகிறாரோ இசை நாடகத்திற்கு வைரமுத்து எவ்வாறு பேசப்படுகிறாரோ, அது போல வில்லிசைக்கு சின்னமணி புகழ்ந்து பேசப்படும் ஒருவர்.

வில்லிசைக்கான கருப்பொருள் கதைப் பொருள் பல்வேறு பட்டனவாக இருக்கும். துணைக்கதைகள், தொடர்கதைகள், கிளைக்கதைகள், பாரதம் இராமாயணம், இதிகாசங்கள், புராணங்கள், வரலாற்றுக் கதைகள், விசேட நாட்கள், கிறீஸ்தவக் கதைகள், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் நல்வழி என தமிழ் களஞ்சியத்தில் இருந்து கருப்பொருளை எடுத்துக் கொண்டு வில்லிசைக்குரிய கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு கதை சொல்லும் முறை, கதை விளக்கம், நகைச்சுவை பாடல்களின் ஏற்ற இறக்கம் சுருதி லயம் தாளம் பக்கவாத்தியம் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஆற்றுகைக்குரிய நேரகாலம் அறிந்து, பார்வையாளர் தரம் அறிந்து, ரசிகர்களைக் கட்டிப் போடும் புத்தி சாதுர்யத்துடன் எல்லோரையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திறமை கொண்டிருந்தார். நாடகத்துறை அனுபவம் அவருக்கு பாத்திரத்தோடு ஒன்றி வில்லிசையைக் கொண்டு செல்ல உதவியது.
2015 ஏப்பிரல் நான்காம் திகதி இவ்வுலகை அவர் நீத்த போது ஈழத்தமிழுக்கு வில்லிசை என்பது ‘ஈழத்தின் பாரம்பரிய இசைக்கலை வடிவம்’ என்ற பெருமையை உரித்தாக்கி விட்டுச் சென்றிருந்தார்.

அது ‘வில்லிசை சின்னமணி’

கண்ணகி என்ற தலைப்பிலான சின்னமணியின் வில்லிசையை கீழ்வரும் இந்த இணைப்பில் சென்று காணலாம்.

https://www.youtube.com/watch?v=ZX9_4xOM4VYவில்லிசை சின்னமணி அவர்களைப்பற்றி SBS வானொலியில் ‘தமிழ் தடம்’ நிகழ்ச்சியில்  6.8.17 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியினை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-villisai-chinnamani?language=ta

SBS வானொலிக்கும் இவ்வாறான தேடலை எனக்குள் ஏற்படுத்தி வானொலியில் அதற்கான இடத்தையும் தந்த SBS தமிழ் வானொலியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றேமண்ட். செல்வராஜ் அவர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றி.Wednesday, July 12, 2017

சைமன் காசிச் செட்டி (21.3.1807 - 5.11.1860)

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மதப் பரம்பலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களுள் சிங்கள பெளத்த சமயத்திற்கு அனகாரிக தர்மபாலாவும் இஸ்லாத்துக்கு முகம்மது காஸிம்  சித்திலெப்பை அவர்களும் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆறுமுகநாவலரும் விதந்து போற்றப்படுபவர்கள்.

அன்னிய ஆட்சிக்கும் மதமாற்றத்திற்கும் எதிராக விழிப்புணர்ச்சியும் மறுமலர்ச்சியும் சமூகத்தில் தோன்றியிருந்த இக்காலத்தில் / இக்காலத்தினை முத்துக்குமாரக் கவிராயர் ( 1780 - 1852 ) தன் கவிதையில் இப்படி வர்ணிக்கிறார்.

‘நல்வழி காட்டுவோம் உடுபுடவை சம்பளம்
நாளுநா ளுந்தருகுவோம்
நாஞ் சொல்வதைக்கேளும் என மருட்டிச் சேர்த்து
நானமுஞ் செய்து விட்டார்
மெல்ல மெல் லப்பின்னை வேலையிங் கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிறார்
வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி
விட்டபின் கணவன் வேலை
இல்லைநீ  போவென்றுதள்ளுவது போலுமே
இனி எம்மை எம்முறவினோர்
எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர் பூட்டி உழவுமறியோம்
அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு நரகினுக்கு
ஆளாகி மிக அழிந்தோம்
ஆபரா பரனே! கிறீஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே!

என்றும்,

வண்டியேன்? மஞ்சமேன்? கதிரையேன்? குதிரையேன்?
வாங்கு மெத்தைகள் சிவிகையேன்?
வட்டித்த கவிகையேன்? மல்லிகைச் செடிகளேன்?
வாழை கமுகுயர் தோட்டமேன்?
பெண்டிரேன்? பிள்ளையேன்? திரவியத் தோட்டமேன்?
பேணிவரு காணியினமேன்?
பேரின்ப ஞானவழி இதுகொலோ? யேசுவும்
பின்பற்று சீடருங்கைக்
கொண்டதோ இவையெலா மவர்நின்ற ஞானவழி
கூறிநற் புத்தி சொல்லிக்
குணமாக்க வல்லை இவர் பணமாக்க வந்தது
குறிப்பறிந் தும் வறுமையால்
அண்டினோம் உண்ணவும் உடுக்கவும் வாழவும்
அட்தற்குமங் கிடமில்லையே
ஆபரா பரனே! கிறீஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே.

என்றும்,


’மாசார் மலத்தை விடுத்துக் குதத்திடை
மண்ணிட்டு நீர் கொண்டு செளசஞ் செய்யாதவர்
தேசிக ராம்பரி சுத்தரு மாமினிச்
செப்புவதேதடி ஞானப் பெண்ணே’

என்று காலைக்கடன் முடித்ததும் கடதாசியால் துடைக்கும் வழக்கத்தைப் பரிகசித்து எழுந்த இவ்வாறான பாடல்கள் அக்கால கிறீஸ்தவ சமயத்துக்கெதிரான சுதேச சமயங்களின் மனநிலையைச்  சித்திரிக்கும்.

இவ்வாறான ஒரு சமூக சூழலில் இலங்கையின் மேற்குக் கரையோரப்பட்டினமாகவும் பேரூராகவும் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய புத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள கற்பிட்டியில் வர்த்தக வாணிப கொடுக்கல் வாங்கல்களில் முக்கியமாக ஈடுபட்டிருந்த செட்டிமார் பரம்பரையில் பிறந்தவர் சைமன் காசி.

இவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மதுரை மாவட்டங்களில் செட்டிமார்கள் என அழைக்கப்பட்ட வணிகப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் கடல்கடந்த வணிகதொடர்புகள் காரணமாக இப்பகுதிகளில் காலப்போக்கில் குடியேறி வாழ்ந்கிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இலங்கையின் மேற்குக் கரையோரப்பட்டணத்தில் தமிழ் மக்களது பரம்பல் பற்றி அதிக ஆராய்ச்சி நூல்கள் வெளிவராத போதும் அப்பகுதிகளில் நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதற்கு பல சான்றுகள் உள்ளன. சிலாபப் பகுதியில் அமைந்திருக்கும் முன்னீஸ்வர ஆலயம், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்படும் செப்பேடுகள், காணிபூமிகளின் உறுதிகள், ஊர்களின் பெயர்களான சிலாபம், உடப்பு, கருக்குப் பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச் சோலை, புளிச்சாங்குளம், மருதங்குளம்,கண்டல்குடா, பாலைக்குடா, பலைகத்துரை, முன்னக்கரை, நஞ்சுண்டான் கரை, குறிஞ்சாப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், பாலாவி, முந்தல்,நரைக்களி,மாம்புரி, பலகைத்துறை,தேத்தாப்பளை,தளுவை, எத்தாலை, பால்குடா, கண்டல்குடா, ஊரியாறு, தாத்தாவழி, போன்ற ஊர் பெயர்களும் காலத்துக்குக் காலம் இங்கிருந்து எழுந்த பிரபந்தங்கள், கும்மிப்பாடல்கள், கோலாட்டப்பாடல்கள், ஊஞ்சல் பாட்டுகள் மான்மீயப்பாடல்கள் மற்றும் நாடகம் சார்ந்த பாடல்களும் இங்கு தமிழ் புலவர்கள் வாழ்ந்ததையும் சொல்லும்.

இவர்கள் நடை உடை பாவனைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றில் வாழிடம் தொழில் சூழல் பழகும் சந்தர்ப்பங்கள் சார்ந்து ஏனைய தமிழரை விட வேறுபட்ட கலாசாரம் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள். வாணிபத் வர்த்தகத் தொடர்புகள் காரணமாக இவர்களுக்கு ஆங்கிலேயரோடு பழகுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக இருந்தமையால் சமயம் மொழி நடை உடை பாவனைகளிலும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களாக சிந்தனையில் சுதந்திரம் அடைந்தவர்களாகவும் இருந்தார்கள்.

இத்தகைய பின்னணியில் கத்தோலிக்கர்களான கப்பிரியேலுக்கும் மேரி. றொசைறோவுக்கும் மகனாகப் பிறந்தார் கப்பிரியேல்.சைமன். காசிச்செட்டி. தாய்மொழியான தமிழோடு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி, அரபு, போத்துக்கீசம், டச்சு,இலத்தீன்,கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்த காசிச்செட்டி தன் 17ம் வயதில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மொழிபெயர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.4 வருடத்தின் பின் மணியக்காரராகவும் அவரது 27ம் வயதில் மாவட்ட முதலியாராகவும் உயர்த்தப்பட்டார்.

ஒல்லாந்தருடய ஆட்சியின் கீழ் இருந்த இலங்கையின் கரையோரப்பகுதிகள் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தின் பின் இலங்கை நிர்வாக சேவையில் தேசாதிபதியால்  கற்பிட்டி நீதவானாகவும் கற்பிட்டி சிலாபம் மாவட்டங்களுக்கான மாவட்ட நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.

பெரும்பாண்மையினரான சிங்கள மக்களும் தமிழ், இஸ்லாமிய மக்களும் வாழும் இலங்கையில் நிர்வாக சேவையில் நியமிக்கப்பட்ட முதல் இலங்கையரும்; மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் எனர பெருமையும் சைமன் காசிச் செட்டி அவர்களையே சாரும்.

ஆங்கில மொழியையும் கத்தோலிக்க சமயத்தையும் தன் வாழ்வியல் நெறியாக வகுத்துக் கொண்ட காசிச் செட்டி மதங்களையும் மொழிகளையும் கடந்து சிந்தித்தவர்.ஏனைய மதங்களையும் சடங்கு சம்பிருதாயங்களையும் மதித்ததோடு அவற்றை ஆவணப்படுத்துவதிலும் அழியாத இடம் பெற்றிருக்கிறார்.

ஆங்கில மொழியில் அமைந்த அவரது ஆக்கங்கள் யாவும் தமிழ் மொழி பேசாத சகலரையும் சென்றடைந்தது.  தனது 27ம் வயதில் மாவட்ட முதலியாராக கடமையாற்றிய போது இலங்கை பற்றிய சகலவிதமான தகவல்கள், செய்திகள் யாவற்றையும் தொகுத்து இலங்கையின் பிரதம நீதியரசர் சேர்.சார்ல்ஸ். மார்ஷல் பிரபுவும் பிரதம படைத்தலைவர். சேர்.ஜோன். வில்சன் என்பாரும் மதிப்புரை வழங்க அவரால் வெளியிடப்பட்டநானாவித செய்தித்திரட்டாக அமைந்த  ‘Ceylon cassetter  சிலோன் கசற்றியர் பின் நாளில் வெளிவரும் ‘வர்த்தமானி’ பத்திரிகைக்கு முன்னோடியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்ரை எல்லாம் ஒன்று திரட்டி ‘இலங்கை சரித்திர சூசனம்’ என்ரொரு நூலை வெளியிட்டார். அது மாத்திரமன்றி தமிழ் மொழி சம்பந்தமாக ‘உதயாதித்தன்’ என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகை ஒன்றையும் இலங்கையில் கத்த்போலிக்க மதம் அபிவிருத்தி அடைந்த வரலாரையும் பழைய ஏற்பாட்டின் ஆதி ஆகமம் என்ர நூலினையும் யோசெப்புவாஸ் என்ற கத்தோலிக்க பெரியாரின் வரலாரையும் தமிழில் தந்தார்.

உலக வரைபடத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ள மிகச் சரியான அமைவிடம் பற்ரியும் அகலநெடுங்கோட்டில் அதன் அமைவிடம் நீளம், அகலம், சுற்ரளவு பரப்பலவு என்பவற்றை நவீன அளவுகருவிகள் எதுவும் இன்றி துல்லியமாகக் கணக்கிட்டு கணித்துச் சொன்ன பெருமை காசிச்செட்டியைச் சாரும். அதுமட்டுமல்லாது போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களின் போது அவர்களது கரையோரப்பிரதேசத்து நிர்வாக எல்லை பரப்பலவு 10,520 சதுரமைல் என்றும் கண்டி அரசனின் ஆள்புலப்பரப்பு 14,144 சதுரமைல் என்றும் கணித்துச் சொன்னவர் அவர்.

இருந்த போதும் Tamil Plutarch தமிழ் புளுட்டாக் என்னும் பெயரில் 1859ல் அவரால் வெளியிடப்பட்ட ‘புலவர் வரலாற்று நூல்’ பெரிதும் மதிக்கப்படும் நூலாக விளங்குகின்ரது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 189 புலவர்கள் மற்ரும் இலங்கையைச் சேர்ந்த 13 புலவர்களின் வரலாறு பட்டியலிடப்பட்டிருக்கிரது. இதுவே புலவர்களின் வரலாற்ரைச் சொல்ல எழுந்த முதல் நூலுமாகும். புளுட்டாக் என்பவர் கிரேக்க நாட்டிலே தோன்றிய பேரறிஞரும் போதகருமாவார். இவர் ரோமாபுரிப் புலவப் பெருமக்களோடு கொண்டிருந்த தொடர்பின் காரணமாக தன் காலத்தில் பெரும்புலவர்களாகத் திகழ்ந்த 46 பேரின் வரலாற்ரைத் தொகுத்து புளுட்டாக் என்ர தன் பெயரில் வெளியிட்டிருந்தார். இந் நூலினால் பெரிதும் கவரப்பட்டிருந்த காசிச்செட்டி அதே பாணியில் தமிழ் புலவர்களின் வரலாற்ரைத் தொகுத்து புளூட்டாக் என்ற பெயரில் வெளியிட்டமை தமிழுக்குக் கிட்டிய ஒரு புதிய செல்வமாகும். இதில் தமிழ்மொழியில் ஆக்கப்பட்ட நூல்களின் பெயர் பட்டியல், ஆக்கியோரின் பெயர்கள், நூல் கூறும் பொருள், ஆக்கப்பட்ட காலம் பற்றிய குறிப்புகளோடு ஒரு அகராதி அமைப்பில் வெளிவந்த முதல் நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை புராதனகாலத்தில் இருந்து ஒல்லாந்தர்காலம் வரை எழுதிய வரலாற்று நூல் சிறப்பு வாய்ந்தது. தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வு நூல்களும் அவர்கள் வரலாறு பாரம்பரியம் தொன்மை என்பன பற்றியும் கத்தோலிக்க சமய வரலாறுகள், அனுஸ்டானங்கள் பற்றியும் புத்தளப் பிரதேசத்தில் வாழும் முக்குவ குலத்தாருடய தோற்றம் வரலாறு இலங்கை முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் பாரம்பரியங்கள் எனத் தொடரும் அவரது வரலாற்றுப்பணி காசிகாண்டம், திருவாதவூரார் புராணத்து ஆறாம் சருக்கம், திருக்கோணேஸ்வரர் ஆலய வரலாறு போன்றவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து கொடுத்தவாறும் தொடர்ந்தது.

அவருடய அகராதிப்பணிகள் மேலும் கவனத்தைப் பெறும் ஒன்று. தமிழ் வரலாற்றில் 1861 மார்ச்சில் வெளிவந்த முதலாவது வைத்திய அகராதி என்ற பெருமையை காசிச் செட்டியில் மலையகராதிக்குரியது. அதில் 3500 சொற்கள் 69 பக்கங்களில் உள்ளடக்கப் பட்டுள்லன.பல திசைச் சொற்களும் கலைச் சொல்லாக்க முயற்சிகளும் அவரால் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு பல ‘முதலாவதுகளை’ அகராதி, வர்த்தமானி, அளவையியல், வரலாறு, சமயம், சமூகவியல் போன்ற இன்னோரன்ன துறைகளில் கண்ணியத்தோடும் பொறையோடும் எந்த வித இன சமய மொழிக் காழ்ப்புணச்சிகளும் இல்லாது  தனக்கு வசப்பட்ட மொழியில் சகல சமூகத்தவரும் புரிந்து கொள்ளத் தக்க வழியில் ஈழத் தமிழுக்கான வரலாற்று விழுமியங்களை எல்லாம்  எழுதி பத்திரப்படுத்தி விட்டு தன்  53வது வயதில் மரணித்த சைமன் காசிச் செட்டி அச் சமகால சமூக சூழலால் இன்றளவும் அதிகளவு வெளிச்சத்துக்கு வர முடியாதவராய்  மரணித்துப் போனார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதியதும் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்திருந்ததும் மேற்குக் கரையோரப் பட்டினம் அவர் வாழ்விடமாக இருந்ததும் சில காரணங்களாய் இருந்த போதும்....

அது கப்ரியேல். சைமன். காசிச்செட்டி.

இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 2 யூலை 2017இல் SBS வானொலியில் ஒலிபரப்பப் பட்டது. அதனை கேட்க விரும்பின் கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-gabriel-simon?language=ta

Friday, June 9, 2017

சுந்தா.சுந்தரலிங்கம் ( 5.11.1930 )

             
தேன் சுவை சொட்டும் பலாப்பழத்திற்கும் மதுரச் சுவை கொண்ட மாம்பழத்திற்கும் பெயர் போன இடம் ‘குழைக்காடு’ என வர்ணிக்கப் படும் சாவகச்சேரி.

இங்கு பிறந்த சுந்தாவுக்கு இவை இரண்டையும் ஒன்றாக்கி கொஞ்சம் கோயில் மணி ஓசையையும் சேர்த்துக் குழைத்த குரல்!
குரலில் தெளிவு,கம்பீரம், வசீகரம்,கனிவு இருந்த அதே நேரம், மொழிப்புலமை, சமயோசித புத்தி, சாதுர்யம், சூட்சுமம், என்பனவும் அதனோடு இயல்பாகக் கலந்திருந்தன.

ஒலிபரப்புக் கலை மீதான அபரிதமான ஈடுபாடும் கலைமனப்பாங்கும் மேலதிகமாய் அதனோடு  இணைந்து கொண்டது.
அதிலிருந்து முகிழ்ந்த குரல் ஆழுமை சுந்தா! காற்றிலே கலை நெய்த கலைஞர் அவர்!

அவர் ஓர் ஒலிபரப்பாளுமை மட்டுமல்ல; பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர், நடிகர், ஒப்பனைக் கலைஞர், மேடை நிர்வாகி, நிகழ்ச்சி முகாமையாளர், புகைப்படக் கலைஞர் என  பல்வேறு கலைகளின் உச்சங்களையும் தொட்டவர்! எனினும் எளிமையும் அடக்கமும் அன்பும் நட்பும் உதவும் மனப்பாங்கும் கொண்டவர் என இன்றும் நண்பர்களால் நினைவுகூரப்படுபவர்!

அவர் பிறந்தது சுதந்திரத்திற்கு முன்பான 5ம்திகதி..11ம் மாதம்.1930.
சுதந்திரத்தின் பின் தமிழ் புது நடை போட்ட காலம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முனைப்போடிருந்த பொழுது. பொழுது போக்குகளோ தொலைக்காட்சி சேவைகளோ அற்றிருந்த காலத்தில் வானொலி – Air Magazine – ஆக மிளிரத் தொடங்கிய காலச் சூழல். (பொருத்தம் இருக்கென்று நினைத்தால் இந்த இடத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் பற்றிய வரலாற்றைச் சொல்லும் இக் குரல் பதிவை இதற்குள் சேர்க்கலாம். 5&6; 0 -20/53 செக்கன்)
இங்கு வானொலி நாடக நடிகராக சேர்ந்த போது சுந்தாவுக்கு வயது 21.
பின்னர் செய்தி வாசிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நேர்முக வர்ணனையாளராக வளர்ந்தார். செய்தி வாசிப்புகளுக்கு வரும் ஆங்கில அறிக்கைகளை உடனடியாக மொழிபெயர்க்க வேண்டி இருந்தமை பின்நாளில் அவரை சமகால பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக்கியது.
இப்பதவி அவருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்புகளைப் பெற்றுத்தர பீபீசி அவரை பயன்படுத்தி பீபீசி சுந்தா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

செய்திவாசிப்பாளரே மரண அறிவித்தல்களையும் வாசிக்க வேண்டி இருந்ததால் தந்தி சேவையில் இருந்து ஆங்கிலத்தில் வரும் மரணச் செய்திகளை பெயரைக் கொண்டு அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்ப அதனை பிழையறச் சொல்வதில் அவரது சமயோசிதமும் சாதுர்யமும் துலங்கியது.
விவேக சக்கரம், பஞ்சபாணம்,செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணனைகள், கீர்த்தி மிக்க இசைத்தொகுப்பு நிகழ்ச்சிகள், விளம்பர வடிவங்கள் எல்லாம் அவரால் நிகழ்த்தப்பட்டவை.

ஆரம்பத்தில் வானொலி நாடக நடிகராக இருந்த காரணத்தால் பழக நேர்ந்த பல்வேறு நாடக/ இலக்கிய ஆழுமைகளின் நட்பும் அவரது வீட்டு மொட்டைமாடி நாடக ஒத்திகைக்கு ஏற்ற இடமாக இருந்ததும் ஒலிபரப்பு சேவைக்கு அப்பாலும் நாடக ஈடுபாடு வெளிப்படக் காரணமாயிற்று.
இதன் காரணமாக ஒன்றுகூடல்கள், தைப்பொங்கல்., தீபாவளி நாட்களில், விகடத் துணுக்குகளோடு ஸ்கிறிப்ட் இல்லாமலே திடீரென ஒரு கருவை மனதில் கொண்டு நாடகம் போடும் அளவுக்கு நாடகம் மீதான ஆர்வமும் விருப்பமும் ஆளுமையும் வளர்ந்திருந்தது.

இந் நாடக மீதான ஆர்வம் ஒப்பனைக்கலை, மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிர்வாகம் போன்றவற்றிலும் அவரின் திறமையை வளர்க்க உதவின.
அவை மேலும் வளர்ந்து அக் காலத்தில் மிக செலவான பொழுதுபோக்காகக் கருத்தப்பட்ட புகைப்படத் துறையின் பால் அவரை நகர்த்தின. அவரது புகைப்படங்கள் பல புத்தகங்கள், அட்டைப்படங்கள், கலண்டர்கள், சீடி முகப்புகளை அலங்கரித்தன.

இவ்வாறு அவரை ஒலிபரப்புத் துறை பல உச்சங்களுக்கு இட்டுச் சென்றாலும் அவருக்கு மிக பிரபலத்தையும் உலகார்ந்த புகழை ஈட்டிக் கொடுத்ததும் அப்பலோ விண்வெளிக்கலம் முதன் முதல் சந்திரனில் தரை இறங்கியபோது செய்யப்பட்ட நேர்முக வர்ணனையே! தமிழக, இலங்கை மக்களிடம் இருந்து வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த Lyndon  Johnson  தன் கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதமும் கையொப்பத்தோடு கூடிய புத்தக அன்பளிப்பும் தன் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய தருணம் என தன் மன ஓசையில் சுந்தா குறிப்பிடுகிறார்.
சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் கொடி கட்டிப்பறந்த சுந்தா சிந்திக்க வைத்தும், சினேகமாய் உறவாடியும் றேடியோ சிலோன் சுந்தா, அப்பலோ சுந்தா, பாளிமண்ட் சுந்தா, பீபீசி சுந்தா என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டார். புகழப்பட்டார்.

தன் இறுதிக் காலத்தைச் சிட்னியில் சக்கர நாற்காலியில் கழித்த சுந்தா இசையே தன்னை உயிர்ப்போடு உலாவ வைத்திருக்கிறது என்று கூறி தான் அடிக்கடி கேட்டு ரசித்து மகிழும் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும்
 “எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” அதாவது ’எங்கெல்லாம் பெரியோர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் எனது வணக்கம்’ என்ற பாடல் வரியை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார். அவருக்குத் தடம் நிகழ்வு சொல்வதும் அதுவே.

               “எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு”.

( யசோதா.பத்மநாதன் SBS இற்காக 21.1.17.)

கடந்த 4.6.2017 அன்று SBS வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க விரும்பின் கீழ்வரும் இணைப்பிற்கு செல்க)

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-sundha-sundharalingam?language=taSaturday, May 13, 2017

காவலூர். இராசதுரை (13.10.1931 – 14.10.2014)

         
="315" src="https://www.youtube.com/embed/-xm3v8JlNsk" frameborder="0" allowfullscreen>


மேலே இருப்பது காவலூர் ராசதுரையின் பொன்மணி திரைப்படம்.

டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட காவலூர் ராசதுரை யாழப்பாணத்தில் ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்னும் கிராமத்தில் 86 வருடங்களுக்கு முன் பிறந்தார்.

இது ஒரு செய்தி அல்ல. ஒரு துணிச்சலான காலடியின் புற அடையாளம்.
அந்த அடையாளம் ஈழத்தின் நவீன சிறுகதை இலக்கியத்தின் தோற்றத்தோடும் வளர்ச்சியோடும் இணைந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் வரிசைக் கதைக் கலைஞர் இவர்.

தன்னை முன்னிலைப்படுத்தாது அநேகர் பார்க்காத கலைப்பக்கங்களைப் தமிழுக்குப் புரட்டிக் காட்டியவர்.
தன்னை விளம்பரப்படுத்தாது விளம்பரமற்றிருந்த விளம்பரக் கலையை தமிழுக்கு விளம்பரப் படுத்தியவர்.
செம்பாட்டு மண்ணில் புரட்டி எடுத்த சமூகக் கருவால் துணிந்து பொன்மணி என்றொரு சலனச் சித்திரம் புனைந்து காட்டியவர்.
சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் போன்றவழிகளால் மாத்திரமன்றி வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரத்துறை போன்றவற்றினூடாகவும் சமூகத்திற்குச் செய்தி சொன்னவர்.
போரால் நிலை குலைந்து,புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகம், தன்னை நிலைநிறுத்த, யூத மக்களின் வரலாற்றை பாடமாக எடுத்துக் கொண்டு எழும்பச் சொல்லித் தந்தவர்.

அது காவலூர் ராசதுரை.

அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘குழந்தை ஒரு தெய்வம்’ தமிழகத்தின் சரஸ்வதி வெளியீடாக அவரின் 30வது வயதில் வெளிவந்தது. அதுவே அவருக்குக் கிடைத்த முதல் இலக்கிய அடையாளம். அதனைத் தொடர்ந்து அவரின் பல புத்தகங்கள் வெளியாகின.

வானொலியில் கலைக்கோலம், செய்தியின் பின்னணியில்,லிப்டன் லாவோஜி தேயிலைக்கான விளம்பர நிகழ்ச்சியில் ‘துப்பறியும் லாவோஜி என்ற வானொலி தொடர் நாடகம், மெலிபன் கவிக்குரல், இசைக்கோவை போன்றன அவரின் ஆழுமையை பறைசாற்றிய வானொலி நிகழ்ச்சிகள். எழுபதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்து கொண்ட இவர், கிராமவளம் நிகழ்ச்சி மூலம் யாழ்ப்பாணத்து கிராமங்களின் வளங்களை இலங்கை முழுவதுக்கும் எடுத்துக் காட்டியதோடு 'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சி மூலம் தரமான விமர்சனப்போக்கை உருவாக்கவும் விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை ஜனரஞ்சகப் படுத்தவும் செய்தார்.

நாடகத் துறையிலும்  இவரது படைப்புகள் நாடகமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.

இருந்த போதும், அவர் பரவலாக அறியப்படுவது அவரது’பொன்மணி’ என்ற திரைப்பட உருவாக்கத்தின் மூலமே. எழுபதுகளில் வீரகேசரியின் துணைப்பத்திரிகையான மிதத்திரனில் அவர் எழுதிய தொடர்கதையான ‘பொன்மணி எங்கே போனாள்’ என்ற நாவலை ஒரு நூலாக வெளியிடாமல் தனது மைத்துனரான முத்தையா ராஜசிங்கத்துடன் இணைந்து திரைப்படமாக வெளியிட்ட துணிச்சல் அவருக்குரியது!

படம் சொன்ன முக்கியமான விசயங்கள் தோல்வி கண்ட போதும், தென்னிந்தியத் வணிக திரைப்பட முயற்சிகளுக்கு இணையாக; தன் மண் சார்ந்த சமூகப்பிரக்ஞையோடும், உயர்மட்ட புத்தி ஜீவிகளின் கூட்டு முயற்சியோடும் எடுக்கப்பட்ட இத் திரைபடம் இலங்கைத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு துணிச்சலான முயற்சி. இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சியில் முதன் முதலில் சிங்கள, ஆங்கில உப தலைப்புகளோடு காட்டப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப்படம் என்ற சிறப்பைப் பெறுவதும் ‘பொன்மணி’ தான்.

ஈழத்து  நவீன  தமிழ் இலக்கிய   வளர்ச்சியில்   மட்டுமன்றி  வானொலி  -   தொலைக்காட்சி - சினிமா -  மேடை நாடகம் -  விளம்பரக்கலை - மொழிபெயர்ப்பு   முதலானவற்றிலும் கணிசமான பங்களிப்புகளை வழங்கியவர் காவலூரார்.

தமிழுக்கும், சமூகத்துக்கும், மறைவாக இருந்த, எழிலார்ந்த பக்கங்களை, அறிமுகப்படுத்தியும்; பரீட்சித்துக் காட்டியும்; தன்னை முன்னிலைப்படுத்தாது, நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி, துணிச்சலான முன்னுதாரணமாய் இருந்து காட்டி, தன் 83வது வயதில் சிட்னியில் விடைபெற்றுக் கொண்டவர் ராசதுரை.
அது ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்றான ஊர்காவற்துறையின் கரம்பன் கிராமம் ஈழத்தமிழுக்குத் தந்த ’பொன்மணி’ காவலூர் ராசதுரை..

        SBS இற்காக 13.1.17 எழுதியது. – யசோதா.பத்மநாதன்

7.5.2017 SBS வானிலியில் ஒலிபரப்பான தடம் நிகழ்ச்சியில் ஒலி வடிவில் கேட்க......

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-kavaloor-rasathurai?language=ta


Thursday, April 6, 2017

சுவாமி. விபுலானந்தர் - 17.3.1892 - 5.6.1947

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

என்ற மானுட உளச் செழுமையைப் பிரதி பலிக்கும் பாடலின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் நன்கறியப்பட்ட விபுலானந்தர் ஈழத்தின் மட்டக்களப்பு தந்த அபூர்வ மாணிக்கங்களில் ஒன்று.

காரைதீவில் 27.03.1892 அன்று பிறந்து கல்வித்தகுதிகள் பல பெற்றபின் இராமகிருஷ்ன மடத்தைச் சார்ந்து விபுலாநந்தர் என்ற துறவுப் பெயரினைப் பின்னாளில் பெற்ற மயில்வாகனன் வாழ்ந்த்து வெறும் 55 ஆண்டுகளே என்ற போதும் அவர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞராக வாழ்ந்திருந்தார்.

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, சிதம்பரம் அண்னாமலைப்பல்கலைக்கழகம், மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் முதல் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்தவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் வட/ தென் இந்தியாவில் குறிப்பாக ஐரோப்பிய இந்திய நாகரிக வேறுபாடு, இந்தியர் வெள்ளையர்/ ஆரியர் திராவிடர் /புதிய, பழைய இலக்கியம் / இந்து கிறீஸ்தவம் / முஸ்லீம் இந்து / உயர்ந்தவன் தாழ்ந்தவன் / சமய சார்பு சார்பின்மை/ துறவு உலக வாழ்வு என பல்வேறுபட்ட முரண்பட்ட சிந்தனைகள் கிளர்ச்சியடைந்திருந்த சமூக பண்பாட்டுச் சூழல் காணப்பட அதே நேரம் இலங்கையில் வகுப்பு வாத உணர்வுகள் தலைதூக்கி இலங்கை அரசியலில் சேர்.பொன். இராமநாதன், சேர். பொன்.அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் உதயமாகி இருந்தனர். இலங்கையில் தமிழர் சிங்களவர் பிரச்சினை அடையாளம் காணப்படத் தக்க அளவுக்கு வெளிப்பட ஆரம்பித்திருந்தது.

இத்தகைய ஒரு சமூகப் பின்னணியில் மரபு வழித் தமிழ்க்கல்வி, ஆங்கிலக் கல்வி,  விஞ்ஞான கணித அறிவு, வடமொழி அறிவு, இராமகிருஷ்ண மடத்தொடர்பு, ஆகியவற்றோடு , கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்த பன்மொழிப்புலமை கொண்டவராக விபுலானந்தர் விளங்கினார். பன்மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினையும் பரந்துபட்ட உலகப் பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது. அறிஞராக துறவியாக கலைஞராக என ஓர் அபூர்வ கலவையாக அவர் இருந்தார். அதனால் விஞ்ஞானத்தையும் தமிழையும் கணிதத்தையும் இணைக்க முடிந்தது. கலைச் சொல்லாக்கப் பேரவை மூலம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்த முடிந்தது. முத்தமிழையும் இணைத்து திறனாய்வு செய்ய முடிந்தது. எதிர்காலச் சமுதாயப் பார்வையோடு பாரதியாரையும் அவரின் பாடல்களையும் பிரபலப்படுத்த முடிந்தது. சேரிப்புறங்களில் பள்ளிகளை ஏற்படுத்த முடிந்தது.

தமிழிசை பற்றிய ஆராய்ச்சிகளும், நாடக மரபு  பற்றிய அவரது தமிழ், சமஸ்கிருத, ஆங்கில மரபு ஒப்புவமைகளும்,  உலகக் கலை இலக்கியங்களைத் தமிழுக்கும்  தமிழருக்கும் அறிமுகம் செய்ததும்,  தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய / அடையாளங்களை / அடையவேண்டிய வளர்ச்சியை உலக இலக்கிய தரத்தில்  ஒப்பு நோக்கி தர நிர்னயம் செய்ததும், அவர் எழுதிய பல சமய ஞான நூல்களும் அவருடய ஆழுமைப் பண்பு நலனையும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும்  பறைசாற்றுவன. அவருடய பங்களிப்புகள் யாவும் சமூகத்தை நிதானப்படுத்துவனவாக இருந்தன.

1929இல் வெளிவந்த ’மதங்க சூளாமணி’ என்ற அவரது நாடக இயல் பற்றிய நூல் தமிழரின் நாடகக் கலையை தமிழுக்கு கண்டெடுத்துக் கொடுத்த அரிய நூலாகும். அதில் தமிழ் விஞ்ஞான கணித ஆய்வுப்புலமையோடு அதனை சேக்‌ஷ்பியரின் நாடக இயலோடும் வடமொழி நாடக அம்சங்களோடும் ஒப்பிட்டு சகலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தமிழருக்கான நாடக மரபை தமிழுக்குக் கண்டெடுத்துக் கொடுத்திருந்தார் அவர். நாடக இயலைப் பயில்வோருக்கு இன்றும் அது ஒரு அத்திவாரப் பாடமாகும்.

இருந்த போதும் அவரது ‘யாழ் நூல்’ என்ற நூல் தமிழுக்கு அவர் அளித்து பெரும் பொக்கிஷமாகும். அது தமிழர் மத்தியில் இருந்து மறைந்து அழிந்து போயிருந்த யாழ் என்ற இசைக்கருவியை தமிழருக்கு மீண்டும் மீட்டெடுத்துக் கொடுத்த அரிய பெரும் ஆராய்ச்சி நூலாகும்.

” சரித்திர கால எல்லைக்கெட்டாத காலத்திலே, வில் யாழ்’ எனப் பெயரிய குழவியாய் உதித்து, மழலைச் சொல் பேசி, இடையர், இடைச்சியரை மகிழ்வித்து, ‘சீறியாழ்’ என்னும் பேதைப்பருவச் சிறுமியாகிப், பாணனொடும், பாடினியொடும் நாடெங்கும் திரிந்து, ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன்சொற்கூறிப், பின்பு’பேரியாழ்’ என்னும் பெயரொடு பெதும்பைப்பருவம் எய்தி, பாணரொடு சென்று, குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ் புலவரும், கொடை வள்ளல்களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரை பகர்ந்து, அதன் பின் மங்கைப்பருவமெய்தி, அப்பருவத்திற்கேற்ப, புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப்பருவம் வந்தெய்தலும், திருநீலகண்டப் பெரும் பாணரொடும் மதங்க சூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம் வந்து, தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தை உருக்கி, முத்தமிழ் விரகராற் பாராட்டப்பட்டு, அரிவைப்பருவம் வந்தெய்தலும் அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர் பாங்கியாகி, அவர்க்கேற்ற தலைவரை அவர் பாற் சேர்த்து, சீரும் சிறப்புமெய்தி நின்ற ‘யாழ்’ என்னும் மென்மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்”

என்று வருந்திய விபுலானந்தர் சுமார் 15 வருடங்களாக ஆராய்ந்து யாழ் நூல் என்ற அதி அற்புத ஆராய்ச்சி நூலை எழுதி, 6.6.1947இல் அரங்கேற்றி, யாழ் என்ற மரபிசைக்கருவியை மீட்டெடுத்து, தமிழ் நல் உலகுக்கு அளித்து விட்டு, அவர் அதற்கடுத்த மாதம் 19.7.1947இல் இவ் உலக வாழ்வை விட்டு மறைந்தார்.

முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்படும் விபுலானந்தரின் மறைவு நாளை இலங்கை அரசு தமிழ் மொழி தினமாகப் பிரகடனப்படுத்தியதோடு தபால் தலையும் வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் விபுலானந்தரின் ஞாபகார்த்தமாக 29.5.82இல் ஆரம்பிக்கப்பட்ட விபுலானந்தா இசைநடனக் கல்லூரி இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டு 4 வருட நுண்கலை மானி பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தர் தமிழ் உந்தித் தள்ளிய காலத்தின் விளைபொருள்.

சுவாமி விபுலானந்தர் பற்றிய ‘தமிழ் தடம்’ என்ற நிகழ்ச்சி SBS வானொலியில் 2.4.17 அன்று ஒலிபரப்பானது. அதன் ஒலி வடிவத்தை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-swami-vipulananda?language=ta

பின்னிணைப்பு:

அவருடய ஆங்கிலவாணி என்ற கட்டுரைப்பகுதி ஆங்கில கலைவளம் சிறந்தோங்கிய வரலாற்றைத் தமிழிலே தந்திருக்கிறது. அத் தமிழும் சொன்னவாறும் ஒரு பெரும் வரலாற்றைச் சில பக்கங்களில் அடக்கிய திறனும் வியந்து வியந்து மகிழத் தக்கதாக இருக்கிறது. ‘சித்தன்கொட்டில்’ என்ற வலைப்பூவில் கிட்டிய இவ் அரிய கட்டுரைக் கோவையை அதன் அழகு சாரம் கொள்ளளவு நிமித்தம் இங்கும் அதனை பதிவேற்ற விரும்பினேன்.

சித்தன் கொட்டிலுக்கு நன்றி.

http://www.kottil.com/2006/05/blog-post_22.html

....................................

ஆங்கில வாணி

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் „கவிவனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறோம்“ என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை


ஆங்கில வாணி

திருமலிந்தோங்கிய நிலவுலகத்தின் வடமேற்குக்கோடியிலே, பவளம் பொலிந்து விளங்கும் ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை ஆராயப்புகுமுன், அந்நாட்டு மக்களது வரன்முறையை ஒரு சிறிது அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நாற்றிசையினும் கடலினாற் சூழப்பட்ட பிரித்தானியா என்னும் தீவின் வடபாலிலே ஒருபகுதி, ஸ்காட்லாந்து எனப்படும். மேற்றிசையிலே ஒருபகுதி, உவேல்சு எனப்படும். இவ்விருபகுதியும் நீங்கலாக எஞ்சி நின்ற பெரும்பாகம் இங்கிலாந்து (அங்கிளத்தரை) எனப்படும். ‚அங்கிளர்’ என்னும் மொழிதிரிந்து ஆங்கிளர், ஆங்கிலர், இங்கிலீஷ் எனவாயிற்று. தெற்குக் கரையிலே சுண்ணக் கற்பாறைகள் மருவிக் கடலிலிருந்து நோக்குவோருக்கு கரை வெண்ணிறமாகத் தோற்றுதலின், ஆங்கில நாட்டுக்கு அல்பியன் (albion) வெண்ணிறத்தீவு, சுவேதத்துவீபம் என்னுங் கவிதைப் பெயருண்டு. மேறிசையிலே கடலுக்கப்புறத்திலே ஐர்லாந்து என்னும் தீவு உளது. இது பசும் புற்றரைகள் செறிந்திருத்தலின், மரகதத் துவீபம் எனும் கவிதைப் பெயர் பெற்றது.

மேற்குறித்த நான்கு தேசங்களிலும் வாழும் மக்கள் வெவ்வேறு இனத்தினர். ஸ்கொட்ஸ், உவெல்ஷ், இங்கிலீஷ், ஐரிஷ் என்னும் நான்கு இனத்தவரும் ஆதியிலே வழங்கிய மொழிகளும் நால்வேறு ஆவன. பூர்வத்தில் இவர்கள் கைக்கொண்ட சமயமும் வேறு. ஆங்கிலர் வருவதற்கு முன் பிரித்தானியாவின் கீழ் , தென் பாகங்களில் வாழ்ந்த மக்கள் பிரித்தன் என்னும் இனத்தினர். இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பின்றி நாகரிகம் குறைந்தவர்களாயிருந்தனர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே இத்தாலி தேசத்தின் தலைநகரமாகிய உரோமாபுரியானது பெரிய சரக்கரவர்த்திகளுக்குரிய இராசதானியாக விளங்கியது. இச் சக்கரவர்த்திகள் தங்கள் இயற்பெயரோடு சீசர் என்னும் விருதுப் பெயரினச் சார்த்தி ஆகஸ்தஸ் சீசர், திபேரியஸ் சீசர், கிளோடியஸ் சீசர் என்றித்தகைய பெயர்களைத் தாங்கினார்கள். சீசர் என்னும் பெயரினைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவர் யூலியஸ் சீசர் எனப் பெயரிய பராக்கிரமசாலி. இவர் உரோமாபுரிச் சேனைகளுக்குத் தளபதியாகச் சென்று பல நாடுகளை மேற்கொண்டு உரோமச் சக்கராதிபத்தியத்தின் எல்லையை அகலச் செய்தார். கிளோடியஸ் சீசர் காலத்திலே கி.பி. 43 ஆம் ஆண்டிலே, பிரித்தானியாவின் தென்கீழ்ப்பாகங்கள் உரோமரது ஆளுகைக்குட்பட்டன: வடபாலிலுள்ள கலிடோனியா எனப்படும் ஸ்கொட்லாந்தை உரோமர் கைப்பற்றவில்லை. நானூறு ஆண்டுகளுக்கு உரோமர் ஆங்கில நாட்டை ஆண்டனர். அக்காலத்திலே அவர்கள் அமைத்த பாதைகளும், பாலங்களும் இன்றும் இருக்கின்றன. உரோமச் சக்கராதிபத்தியம் நிலைகுலைந்த காரணத்தினாலே உரோமர் வெளியேறிய பின், வடபாலிலுள்ள ஸ்கொட்ஸ் தெற்கே வந்து ஆநிரைகளைக் கவர்ந்து பிரித்தானியரைச் சிலகாலம் துன்புறுத்தினர்.
ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஜெர்மனி, ஸ்கண்டிநேவியா (இக் காலத்து நோர்வே, சுவீடன்) நாடுகளிலிருந்து கடல் கடந்து சென்ற சாக்சனியரும், அங்கிளரும் பிரித்தானியாவின் கீழ்த்திசையிலே, சில பகுதிகளைப் பற்றி ஆளுகை புரிந்தனர். தேன்மார்க் நாட்டினராகிய தேனர் அவரை மேற்கொண்டு தம்மாணை செலுத்தினர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு நாடு பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு வந்து குடியேறினோர் பலருடைய கலப்பினாலே ஆங்கில மக்கள் தோன்றினர். வாடைக்காற்றுக்கஞ்சாது சிறு படகுகளிலே கடல்மீது சென்ற வைக்கிங்ஸ் என்னும் ஆங்கில முன்னோர் போர்த்தொழிற் பிரியராயிருந்தனர். பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த குறுநில மன்னரைப்போலப் பூர்வ ஆங்கிலரும் ஒருவரோடொருவர் போர்மலைந்து கொண்டிருந்தனர். சிறையாகப் பிடிக்கப்பட்டு உரோமாபுரியை அடைந்த ஆங்கில இளைஞர் சிலரைக் கண்ட கத்தோலிக்க கிறீஸ்தவ சமயத் தலைமைப் பீடாதிபதியாகிய பாப்பரசர் அவ்விளைஞர்கள் தோற்றப் பொலிவை நோக்கி வியந்து இவர்கள் ‚அங்கிள்ஸ்’ அல்ல ‚ஏஞ்ஜெல்ஸ்’ (வானவர்) எனக்கூறி ஆங்கில நாட்டிலே கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும்படி சில குருமாரை அனுப்பினர்.
கிறிஸ்தவ சமயம் புகுவதற்கு முற்பட்ட காலத்திலே, அங்கிள சக்ஸன் என்னும் பூர்வ ஆங்கிலத்திலே பெயவுல்வ் (Beowulf) எனப்பெரிய காப்பியமொன்று இயற்றப்பட்டது. இதன் பகுதிகள் இன்றும் இருக்கின்றன. கிறிஸ்து சமயம் புகுந்தபின் பழைய போர்த்தொழிலைக் கைவிட்டு மக்கள் கட்டுகடங்கி வாழத் தொடங்கினர். கவிகளும் சமய சம்பந்தமான நூல்களை ஆக்கினர். கேய்ட்மன்(Caedmon) கயின்வுல்வ்(Cynewulf) அல்பிரட் அரசர்(King Alfred) என்றின்னோர் ஆக்கிய நூல்கள் சமய சம்பந்தமானவை.

கி.பி. 1066 ஆம் ஆண்டிலே, பிராஞ்சு தேசத்தின் வடபாலிலுள்ள நோர்மாண்டி நாட்டுச் சிற்றரசனாகிய உவில்லியம் என்பான், ஆங்கில நாட்டின்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டு அந் நாட்டின் முடிமன்னனானான். இவனை உவில்லியம் –த-கொங்கரர்- ’வாகை சூடிய உவில்லிய மன்னன்’ எனச் சரித்திர நூலாசிரியர் கூறுவர். இம்மன்னனோடு நோர்மானிய, பிராஞ்சியர் அநேகர் ஆங்கில நாட்டிலே குடியேறினர். ஆங்கில மொழியும் நோர்மானிய பிரஞ்சுப்பதங்களை ஏற்று வழங்கத் தொடங்கியது. அதனாற் பாஷையானது வலமெய்தியது. ஆயினும் நாட்டிலே அரசியற் கலக்கமிருந்தமையின், பெரிய நூல்கள் தோன்றவில்லை. முந்நூறாண்டின் எல்லையிலே நோர்மான் பிராஞ்சியர் வேறுபாடின்றிக் கலந்து ஆங்கிலரோடு ஒன்றாயினர். நாட்டிலும் சமாதானம் நிலவியது.

கி.பி. 1340 முதல் 1400 வரையும் வாழ்ந்த சாசர் (Chaucer) என்னும் கவியை ஆங்கிலக் கவிதைவானின் உதயதாரகையென இலக்கிய வரன்முறை ஆசிரியர் கூறுவார். இவர் முதலிலே தோன்றிய காரணத்தினாலே பெருமையுற்றனரேயன்றிக் கவித்திறமையினால் அல்ல. பிராஞ்சிய செய்யுள் மரபினைப் பின்பற்றிப் புது யாப்புமுறைகளை வழங்கினார். கந்தர்பெரி எனப் பெயரிய ஆலயத்திற்கு யாத்திரை புரிந்த யாத்திரிகர்கள், வழியிலே ஒரு சத்திரத்தில் இறங்கி நிற்கும் போது தத்தமது யநுபவத்திலே கண்டறிந்த சரித்திரம் ஒவ்வொன்றைக் கூறுவதாக அமைத்துக் கந்தர்பெரிக் கதைகள் என்னும் காப்பியத்தையும் சில சிறு நூல்களையும் சாசர் வகுத்தார். சாசர் காலத்திலிருந்த ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த ஸ்பென்சர்(கி.பி. 1552-1599) என்னும் மகாகவி கவிஞர்க்குள் கவிஞர் எனப் போற்றப்பட்டார். இவரியற்றிய அரமடந்தையார் இராணி (Fairy Queen) என்னும் பெருங்காப்பியம் கவிநயம் நிறைந்தது, கற்பனையிலும் செஞ்சொல்லாட்சியிலும் நமது சீவகசிந்தாமணியை நிகர்த்தது. ஸ்பென்சர் காலத்திலே ஆங்கில நாட்டிலே அரசு புரிந்த எலிசபெத்து இராணி இல்வாழ்க்கையுட் புகாமல் , மணிமுடிசூடி நாட்டினைப் பரிபாலித்தலிலே முழுமனத்தையும் செலுத்தி வந்தாள். பாவாணர்களயும் சேனைத்தலைவர்களையும் பாராட்டி அவர்களுக்கு வேண்டுவன நல்கினாள். அதனாற் கவிதை வளம் எய்தியது.

மக்களுடைய சிந்தை விசாலிப்பதற்கு வேறு சில சரித்திர நிகழ்ச்சிகளும் ஏற்பட்டன. அவற்றைச் சுருக்கமாக் கூறுகின்றாம். எலிசபெத்து இராணியே ஸ்பென்சரது பெருங்கப்பியத்திற்குக் கவிதைத் தலைவி. எலிசபெத்தின் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையிலே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. இம்மன்னன் ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாக விவாகஞ் செய்து இராணியாக்குதல் கருதி, அவ்வாறு செய்தற்கு உத்தரவளிக்கும்படிக்குத் தனது சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரை வேண்டினான். கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையின் மணந்த மனைவியை நீக்குதல் மரபண்று ஆதலின், பாப்பரசர் உத்தரவளித்திலர். ஹென்றி மன்னன் அவரது ஆணைக்கு அடங்காது, ஆங்கில நாட்டின் தலைமையோடு அந்நாட்டு மக்களின் சமய நெறித் தலைமையையும் தானே தாங்குவதாக முற்பட்டுக் கத்தோலிக்க சமயத் தொடர்பினின்று நீங்கி, ஆங்கில திருச்சபையென ஒன்றினையேற்படுத்திச் சில சமய அத்தியஷர்களத் தன்வசப்படுத்தித் தன் கருத்தை நிறைவேற்றினான். இதனால், ஆங்கில நாட்டு மக்களின் சிந்தையிலே ஒரு புத்துணர்ச்சியேற்பட்டது.

ஐரோப்பியர், அமெரிக்காக் கண்டத்தினைக்கண்டு பிடித்தது மற்றொரு விசேஷ நிகழ்ச்சி. கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்னும் மீகாமன் ஸ்பானியா தேசத்து இராணியாகிய இசபெல்லாவின் பொருளுதவியைப் பெற்றுக்கொண்டு மேற்குக் கடலைக் கடந்து இந்தியாவுக்குச் செல்லும் ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கமாகச் சில பாய்க் கப்பல்களை அமைத்துக் கொண்டு புறப்பட்டான். அக்காலடத்தில் நமது பாரத நாடு பெருஞ் செல்வமுற்ற நாடாக விளங்கியது. நமது நாட்டு விளைபொருள்கள் அராபிக்கடல்,பாரசீகக்கடல், செங்கடல் வழியாகச் சென்று பின்பு தரைவழியாகவும், மத்தித்தரைக்கடல் வழியாகவும் இத்தாலி நாட்டுத் துறைமுகங்களை அடைந்தன. வேனிஸ் நகரம் சிறந்த வர்த்தக ஸ்தலமாக விளங்கியது. இந்தியாவில் இருந்து சென்ற பட்டுத்துணிகளும், பொன்னும், முத்தும், யானைத்தந்தமும், மிளகும்,சந்தனமும், இலவங்கப்பட்டையும் பிறவும் மேனாட்டு மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தன.

பூவுலகம் கோளவடிவமானது எனும் கருத்து மெனாட்டிலே பரவிய அக்காலத்திலே கிழக்கு நோக்கி இந்தியாவுக்குச் செல்ல ஒரு பாதை இருப்பதினாலே மேற்கு நோக்கிச் செல்லவும் ஒரு பாதை இருக்க வேண்டுமெனும் எண்ணம் கல்வியறிவுடையோர் சிந்தனையில் உலவியது. கொலம்பஸ் புறப்பட்டு இந்தியாவுக்குச் செல்லும் வழி காண்பதற்கு; ஆனால் கண்டு பிடித்தது அமெரிக்காக் கண்டத்தை. கி.பி. 1642 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே கொலம்பஸ் மத்திய அமெரிக்காவிலே சில தீவுகளை அடைந்தான். அக் காலத்திலே மத்திய அமெரிக்காவிலே மெக்சிக்கோ, பீரு என்னும் நாடுகள் சிறந்த நாகரிகம் அடைந்திருந்தன. மிகப் பழைய காலத்திலே,தமிழ் நாட்டு வணிகர் கிழக்கு நோக்கிக் கடல் கடந்து சென்று மத்திய அமெரிக்காவை அடைந்தனர் என்றும் அங்கு நிலவிய நாகரிகம் நமது நாகரிகத் தொடர்புடையதென்றும் அறிஞர் கருதுகின்றனர். சாமன் லால் என்னும் ஆசிரியர் எழுதிய இந்து அமெரிக்கா என்னும் நூலிலே பல் சான்றுகளோடு இவ்வுண்மை நிறுவப் பட்டிருக்கிறது. அஃது ஒரு பாலாக மேனாட்டாராகிய கொலம்பஸ் மீகாமன் அமெரிக்காவைக் கண்டு பிடித்த பின் ஸ்பானியா தேசத்து மக்கள் துப்பாக்கியோடு சென்று மத்திய அமெரிக்க மன்னரைத் தந்திரத்தாலும் துப்பாக்கி வன்மையாலும் சிறைப்படுத்தி அவர்கள் குவித்து வைத்த பொன்னைக் கவர்ந்து கொண்டு தம்மூர்க்கு வந்தனர். ஆங்கில நாட்டினராகிய கடற்கொள்ளைக்காரர் இடையில் நின்று அப்பொன்னின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு தம்மூர்க்குச் சென்றனர். அஃதன்றியும் எலிசபேத் இராணியின் அரசியலாற்றலினாலே ஆங்கில நாட்டுச் சைனியங்கள் சில போர்க்களங்களிலே ஸ்பானிய சேனைகளை வெற்றி கொண்டன. ஐரோப்பாவின் மேற்குக் கரையில் உளவாகிய போர்த்துக்கல், பிரான்சு, ஒல்லாந்து நாடுகள் கடல் வர்த்தகத்தினாலேயே பொருளீட்டினவெனினும், பொருளும் கடற்படையுந் திரட்டியவகையில் ஆங்கில நாடே முன்னணியில் நின்றது.

மேனாட்டார் அறிவு விசாலிப்பதற்குரிய மற்றொரு நிகழ்ச்சி அராபியா தேசத்திலே நிகழ்ந்தது. திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டில் இருந்த காலத்திலே அராபியா நாட்டு மக்கா மா நகரிலே முகம்மது நபி அவதரித்தார். நபியின் சிஷ்ஷிய பரம்பரையில் வந்தோர் மேற்கேயுள்ள பலநாடுகளிலே ஆணை செலுத்தி அரசு புரிந்ததோடு கூட அறிவொளி விளங்குமாறுஞ் செய்தார்கள். கிறிஸ்து நாதர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னே யவனபுரத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இயற்றிவைத்த அரிய கலைநூல்கள் அராபியர் வழியாக மேனாட்டிலே பரவி அறிவொளிபரப்பின. யவனவாணியின் செல்வப் புதல்வியருள் ஒருவராக ஆங்கில வாணி உதித்தாள்.
ஆண்டவன் ஒருவனேயாயினும் பற்பல நாட்டு மக்கள் அவனுக்குப் பற்பல திருநாமங்களைத் தந்து வழிபடுமாறு போலச் சொல்லின் கிழத்தியாகிய கலைவாணியும் பற்பல நாட்டு மொழிச்சார்பினாலே பற்பல உருவங்களை வகித்தாள். ஆதியிலே நான்முகக்கடவுளது நாவிலிருந்து வேதத்தையருளி, இடைக் காலத்திலே வேதவியாசரது நாவினின்று மகாபாரதத்தைத் தோற்றுவித்துக், காளிதாசனையுள்ளிட்ட உத்தமக் கவிகளது நாவிலே களிநடம் புரிந்தாள் ஆரியவாணி. இமயத்திற்கு வடபாலதாய் உத்தர குருவெனப் புராணங்கள் கூறும் போக பூமியையுள்ளிட்டதாய், நாற்பது கோடி மக்களுக்கு உறைவிடமாகிய சீனத்திலே தோன்றிய கவிவாணரது நாவினை இருப்பிடமாக்கிக்கொண்டாள் சீனவாணி. பண்டைக் காலத்திலே, யவனபுரத்தாரோடு போர் மலைந்தும் நட்புப் பூண்டும் மேற்றிசைக்கும் கீழ்த்திசைக்கும் நடு நாடாகி, அக்கினி தேவனை வழிபடுவோருக்கு உறைவிடமாகிப் பொலிந்த செல்வப் பாரசீகப் பழந்தேசத்து மக்கள் களிகூரும் வண்ணம் அந்நாட்டுப் புலவர் நாவினின்று கவிசுரந்தளித்தாள் பாரசீக வாணி. ஹோமார் என்னும் அந்தகக் கவியின் நாவிலிருந்து துரோயம் என்னும் ஈலிய நாட்டிலே நிகழ்ந்த போரினை விரித்துக் கூறும் ஈலிய காவியமும் அப்போர்க் களத்திலே சிறந்து விளங்கிய உலீசன் (Ulysses Odysses)என்னும் வீரனது நிகழ்ச்சிகளைக்கூறும் உலீச காவியமும் ஆகிய வீர காவியங்களை அளித்தும் , ஐய்க்கிலீஸ், அரிஸ்தொபனீஸ், இயூரிப்பிடீஸ், என்னும் நாடகக் கவிகள் வாயிலாக என்றும் புலராது யாணர் நாட் செல்கினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையவாக்ய அழகிய நாடகங்களை அளித்தும், பிண்டார் என்னும் கவிவானர், சஃபோ என்னுங் கவியரசி வாயிலாக அகப்பொருட்டுறை தழுவிய இசைப் பாடல்களைத் தோற்றுவித்தும் சோக்கிரதீஸ், பிளேத்தோ, அர்ஸ்தாத்தில் என்றித் தொடக்கத்த தத்துவஞானிகள் வாயிலாக உண்மைநூல், ஒழுக்கநூல்களைத் தோற்றுவித்தும் பண்டை யவன மொழிக்கு ஆக்கமளித்தாள் யவன வாணி. உரோமவாணி, இத்தாலியவாணி, ஜெர்மானிய வாணி,பிராஞ்சியவாணி யென்றின்னோரெல்லாம் யவனவாணியின் செல்வப் புதல்வியரேயாவர்.

கணிதம், சிற்பம், வைத்தியம், காவியம், தர்க்கம், தத்துவம் என்னும் அருங்கலைகளுக்கெல்லாம் தாயகம் யவனபுரமேயாகும். ஆதலினாலன்றோ, மேனாட்டுக் கலைக்கழகங்களிலே, யவனபுரத்து மொழியாகிய கிரேக்க மொழியும் உரோமருக்குரிய லத்தீன் மொழியும் பெரிதும் கற்கப்பட்டு வருகின்றன. எலிசபெத் இராணி காலத்திலே, அமெரிக்காக் கண்டத்துப் பொருட்செல்வமும் பழைய யவன புரத்துக் கலைச் செல்வமும் ஆங்கிலநாட்டுக்குரியவாயின. ஸ்பென்சர் என்னும் மகாகவி ‚அரசமடந்தையர் இராணி’ என்னும் பெருங்காப்பியத்தோடமையாது அழகு பொருந்திய சிறு காப்பியங்கள் பலவற்றையும் செய்தார். ”ஆயன் நாட்குறிப்பு“ என்பது அவற்றுள் ஒன்று. இது இயற்கை வனப்பினக் கூறுவது.

பலவகையிலும் ஆங்கில நாடு பொலிவுற்ற இக்காலத்திலே தான் செகசிற்பியார்(சேக்ஸ்பியர்) என்னும் சிறந்த நாடகக் கவி தோற்றினார். இவருடைய கவி வனப்பினை மதங்க சூளாமணி என்னும் நூலிலே சற்று விரிவாகக் கூறியிருக்கின்றாம். யூலியஸ் சீசர் என்னும் நாடகத்தின் ஒரு பகுதியின் பமொழிபெயர்ப்பை ஈங்குத் தருகின்றோம். இந் நாடகத் தலைவராகிய யூலியஸ் சீசர் பராக்கிரமசாலியென்றும் சேனைத் தலைவரென்றும் முன்னர்க் குறிப்பிடப்பட்டார். உரோமாபுரியில் வாழ்ந்த காஷிஸ் எனப் பெரிய சனத் தலைவனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறியஸ், டெகியஸ், சின்னாகிம்பர் என்பாரையும் நீதிமானும் யூலியசீசரது நண்பனுமாகிய மார்கஸ் புரூட்டஸையுந் தன்வயப்படுத்தி பங்குனித் திங்களில் நண்பகலில், அத்தாணி மண்டபத்தில், யூலியஸ் சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன். குறித்த தினத்திற்கு முன்னாளிரவில், விண்வீழ் கொள்ளிகளும், தூம கேதுக்களும் பலவகை உற்பாதங்களுந் தோன்றின. யூலியசீசரின் மனைவி கல்பூர்ணீயா தீக்கனாக் கண்டு அச்சமுறெழுந்து புறத்தே நிகழ்கின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலெழுந்திருந்து காலைப்பொழுது வந்ததும் கணவனது முன்னிலையை அடைந்து

பேரிரவில் நடந்ததெல்லாம் பீழையினை விளக்கப்
பேதலிக்கும் உளச் சிறியேன் பேசுகின்ற மொழிகள்
ஆருயிர்க்குத் தலைவ! நினதருட் செவியில் வீழ்க,
அகத்திடையின் றிருந்திடுக, அவைபுகுத லொழிக,
எனக்குறையிரந்து வேண்டி நின்றாள்.
அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத் (து)
ஆடவர்(க்) ஒரு மரணம். அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர்என் றறிந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூ டரைக் கண்டாற் புன்னகை செய் பவன்யான்.

இன்னலும் யானும் பிறந்த தொருதினத்தில் அறிவாய்
இளம் சிங்கக் குருளைகள் யாம்; யான் மூத்தோன் எனது
பின் வருவது இன்னல் எனப் பகை மன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
எனக் கூறினார்.

இத்தருணத்தில் டெசியஸ் என்பவன் வந்து அத்தாணி மண்டபத்திற் குழுமிருந்த முதியோர் சீசரை அழைத்து வருமபடி சொல்லியதாகத் தெரிவித்தான். சீசர் முதலிலே மறுத்துப் பின்பு இசைந்து உடன் போயினார். வழியிலே ஒரு சேவகன் ஒரு நிருபத்தைக் கொண்டு வந்து கொடுத்து இது சீசருடைய சுகத்தைக் கோரியது. இதனை உடனே படித்தருள வேண்டும் எனச் சீசர் கையிற் கொடுத்தனன். நல்லது நண்ப சனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபணங்களைப் படித்த பின்பு இதனைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கி நடந்தனர். அங்குச் சிம்பர் என்பவன் முற்பட்டு வந்து முழந்தாற்படியிட்டு நின்று மகோதாரிய மகா பிரபுவே ஏழையேனது விண்ணப்பத்திற்கிரங்கி சகோதரனை மன்னித்தருள வேண்டும் என வேண்டி நின்றனன். சீசர் அவனை நோக்கித்,

“தாழ்ந்து மென்மொழியுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக்கிரங்கிய வீணர்.
சூழ்ந்து செய்தன துடைத்துப் பின் சோர்வினையடைவார்
ஆழ்ந்து செய்வன செய்யும் யான் அவர்நெறி அணையேன்“

„அண்ணல் நீர்மையேன் பிழைசெயேன் அணுவளவேனும்
நானும் நீதியிற் பிரிந்திடேன் நானெனக் கதறிக்
கண்ணில் நீர் மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும்
எண்ணம் முற்றுறும் என்னனீ எண்ணுவதிழிவே“

எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ் புரூடஸ் சீசரை நோக்கி ’ஐய, நான் இச்சகம் பேசுவேனல்லேன், தேவரீரது திருக்கரத்தை முத்தமிட்டேன் . சிம்பரரின் விண்ணப்பத்திற்கிரங்கி அவரது சகோதரனை விடுதலை செய்தல் வேண்டும்.’ என்றனன். சமீபத்தில் நின்ற காசீயஸ் சீசரை நோக்கி, ‘மகிமை பொருந்திய சீசரே மன்னிக்க வேண்டும், உம்மிரு தாளினையும் பற்றினேன், சிம்பரின் சகோதரனை விடுவிக்க வேண்டும்“ என்றனன். சீசர் தம்மைச் சூழ்ந்து நின்று விண்னப்பித்தோரை நோக்கி,

இரங்குதிர் என்ன இரக்கும் நீர்மையர்
தமைப்பிறர் இரக்கிற் றையக்காட்டுனரே
நும்போல் வேனெனின் நும்மொழிக்கு இசைவேன்
வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும்
தற் சூழ்ந் தசையத் தானசைவின்றி நிலைபெறுதுருவன்
நிலைமை கண்டிரரே?
வான் மீன் அனையர் மாநில மாந்தர்
துருவன் அனையன் ஒருவனிங்குளலால்
அவந்தன் யான் என அறிகுவீர் புகன்ற
மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்
மலை வீழ்வெய்தினும் மனம்வீழ்விலேனே
எனக் கூறினார். இதனைக் கேட்ட புரூட்ஸ் ஆதியோர் சீசரது பெருமிதயுரையை தற்பெருமையுரையெனவெண்ணி உடைவாளயுருவி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினார்கள். ’நீயுமா புரூட்டஸ்’ என்னும் உரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர்.
ஆங்கில வாணி 11
கீழே இரண்டாவது பகுதி


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை

ஆங்கில வாணி-II


தொடர்ச்சி:

பிளூத்தாக் (Plutarch) எனப் பெயரிய யவனபுரத் தறிஞர் இயற்றிய வீரர்வாழ்க்கைச் சரிதங்கள் என்னும் நூலின் வழியாக அனேக சரித்திரங்களையும், ஆங்கிலநாட்டு மன்னர் சரித்திரங்கள் பலவற்றையும் செகசிற்பியர் நாடகமாக்கி உலகிற்கு அளித்தார். ஆங்கில மொழி உலகில் வழங்குங் காலம் வரையும் இப்பெருங்கவியின் பெயர் நின்று நிலவும். ஆங்கில நாடு பெருஞ் சிறப்புற்றிருந்த காலத்திலே தோன்றிய செகசிற்பியாரைப் போலத் தமிழ்நாட்டு மன்னர் கடல்கடந்து சென்று பல நாடுகளிலும் தமது வெற்றிக்கொடி நாட்டிய காலத்திலே தோன்றிய கம்பநாடர், உலகு புகழும் வனப்பு வாய்ந்த காப்பியத்தை வகுத்தளித்தார். வீரத்தையும், ஆண்மையையும் மக்கள் நேர்மையையும் சித்தரித்துக் காட்டும் வகையிலே இரு பெருங்கவிஞரும் ஒத்தபான்மையர்; இருவர் நாவிலும் நின்று கவிதை சுரந்தளித்தவள் ஒருத்தியன்றோ?

இக்காலத்திலே மில்தனார் எனப்பெரிய காப்பியக் கவியும் வாழ்ந்தார். யவனபுரத்துக் காவியங்களிலே நன்கு பயின்று, அவை தம்முட் பொதிந்த வனப்பு விளங்கச் செய்யுள் செய்தார். அவரியற்றிய பெருங்காப்பியம் ‚சுவர்க்க நீக்கம்’ எனப் பெயரியது. இதன் ஒருபகுதியினைத் தமிழ்ப்பெருங்கவி வெ.ப.சுப்பிரமணியமுதலியாரவர்கள் தமிழ் விருத்தச் செய்யுளில் மொழிபெயர்த்துள்ளார்கள்.

தேவாசுர யுத்தங்கூறுதலின் இந்நூல் கந்தபுராணம் போன்றது. வானுலகத்திலே ஆண்டவன் முன்னிலையிலிருந்த தேவர்களின் மூன்றின் ஒருபகுதியார் இறைவனாணைக்கு அமைந்து நடக்காத காரணத்தினாலே நரகராயினர். இவர்கள் தலைவனாகிய ஒளிவண்ணன் சாத்தானாயினான். இந்த எல்லையிலே, இறைவன் இம்மண்ணுலகையும் புல், பூண்டு, மரஞ்செடி, கொடி, பறவை, விலங்கு, மீன் எனும் இவற்றையும் படைத்து இறுதியிலே மன்பதைக்குத் தந்தை தாயாராகிய அத்தனையும், அவ்வையையும் படைத்து அவர் தம்மை ஏதேன் எனும் உவவனத்தில் இருத்தினார். இவ்வுவவனம் பேரழகுடையது. இதன் நடுவிலே கலை ஞானத்தருவிருந்தது. அதன் கனியை உண்ணவேண்டாமென்று ஆதித்தந்தை தாயாருக்கு ஆண்டவன் ஆணையிட்டிருந்தனர். சாத்தான் அவர்களை வஞ்சித்துக் கனியை உண்ணுமாறு செய்தனன். அக்குற்றத்திற்காக அத்தனும் அவ்வையும் பூலோக சுவர்க்கமாகிய உவவனத்திலுருந்து துரத்தப்பட்டனர். இதுவே காப்பியத்தின் கதை.
ஐந்தாம் பரிச்சேதத்தின் தொடக்கத்திற் சில அடிகளின் மொழி பெயர்ப்பினைத் தருகிறோம்.

நித்திலத்தை வாரி நிலத்தில் உகுத்தது போல்
காலைப் பரிதி கதிர் காலும் வேளையிலே,
உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்,
நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ் அத்தன்
இளங்காற் றிசையொலியும், இன்ப இலையொலியும்,
வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்,
பள்ளி யெளிச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்,
ஆரா உவகைதர, அன்பிதயத் துள்ளூரச்,
சீரார் இளமான், திருமகள் போல்வாள் அவ்வை,
காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்
வைகறையில் முன்னெழுவாள் மலர்ச் சயனம் விட்டகலாச்
செய்கையினை நோக்கி, அவள் செந்தா மரைவதனம்
ஏறச் சிவந்த இயல்பும், மலர் கூந்தல்
சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி,
எழிலார் மட நல்லார் இன்றுயிலுஞ் சீரிதே
என்னவுளத் தெண்ணி இளந்தென்றல் மென்மலர்மேற்
சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்,
„என்னா ருயிர்த் துணையே; ஈசன் எனக்களித்த
செல்வ நிதியே செழுந்துயில்நீத் தேயெழுவாய்,
புத்தமிழ்தே!, அன்பே புலரிப் பொழுதினிலே,
வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன் அருந்தும்
விந்தையினைக் காண்போம், விழிதுயில்நீத் தேயெழுவாய்,
வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தனகாண்“ என்றுரைத்தான்;
ஆங்கவளும் இன்றுயில்நீத் தன்பன் முகநோக்கி
„மேதகவு செம்மைநெறி மேவியஎன் னன்பரே!
காதலரே! நும்முகமும் காலை இளம்பொழுதும்
கண்டேன்; கவலையற்றேன்; கங்குற் பொழுதினிலே,
கனவோ நனவோ நான் கண்டதொரு காட்சியினை
விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்,
நாளின்பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்
துன்ப மறியாத் தொடக்கறியா வாழ்க்கை துய்த்தேன்;
கடந்த இரவிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்;
நின்குரல்போல் மென்குரலில், நித்திரையோ அவ்வையே!“
இனிய நிசிப் பொழுதில் எவ்விடத்தும் மோனநிலை.
வட்ட மதியம் உயர்வானின் றொளிகாலும்;
இருள்குவிந்த மென்னிழலால் எங்கெங்கும் எப்பொருளுங்
கண்ணுக் கினியகண்டாய், காரிகையே! வானுறையும்
விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்
கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ,’ ‚என்றுரைக்க
எழுந்தெங்கும் நோக்கினேன்; இன்குரலின் பின்சென்றேன்;
ஞானத் தருவிடத்தை நண்ணினேன், ஆங்கொருவன்
வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வான்;
“கண்ணுக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
உண்ணத் தெவிட்டா உணர்வமிழ்தச் செங்கனிகள்
எண்ணென் கலைஞான இன்கனிகள் தாங்கிநின்ற
செல்வ மரமே நின் செழுங்கிளைகள் பாரித்த
தீங்கனியை மானிடருந் தேவர்களும் உண்டிலர்காண்;
கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?
உண்பல்யான்“, என்றான் ஒரு கனியை வாய்மடுத்தான்;
ஆணை கடந்தசெயல் ஆதலினால் நான் அஞ்சி,
ஒருபால் ஒதுங்கினேன்: உரவோன்பின் னும்மொழிவான்,
“மானிடர் இத் தீங்கனியை மாந்துவரேல், வானுலக
இன்பம் பெறுவார்; எழிற்பாவாய் அவ்வையே!
இக்கனியை உண்ணுதியேல், எழிலார் அரமகளிர்
தோற்றப் பொலிவுடனே தூயஅறி வும்பெறுவாய்;
வானத் திவர்ந்து செல்லும் வல்லமையும் நீ பெறுவாய்
நாகநாட் டோர்தம் நலம்பெறுவாய்.“ என்று சொல்லி,
ஓர்கனியத் தந்தான் உயர் மணமுந் தீஞ்சுவையும்
புலன்வழியென் சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுதேன்
ககனத் தெழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்;
மேகமியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்,
மேதினியை நோக்கி வியந்தேன்; அவ்வெல்லையிலே
கந்தருவன் சென்றுவிட்டான்; கண்டுயின்றேன் காதலரே!
கனவீ தெனவறிந்தேன் கலக்கந் தெளிந்த “ தென்றாள்.

செகசிற்பியார் காலம் கி.பி. 1564 முதல் 1616 வரை ஆகும். மில்தனார் காலம் 1608 முதல் 1674 வரை ஆகும். டிறைடன் என்னும் அகலக் கவி 1631 முதல் 1700 வரையும் வாழ்ந்தார். பாப்பு என்னும் இலக்கணக் கவி 1688 முதல் 1744 வரை வாழ்ந்தார்Wednesday, March 8, 2017

அருள் வாக்கி அப்துல் காதிர் புலவர் (30.6.1866 – 23.9.1918)


இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தத்தம் சமூகத்துக்கு அரும்பணியாற்றியவர்கள் வரிசையில் பெளத்தத்திற்கு அநாரிக தர்மபாலாவும்,சைவத்துக்கு ஆறுமுகநாவலரும், இஸ்லாத்திற்கு சித்திலெப்பையும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சித்திலெப்பைக்குப் பிறகு இலங்கையின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அருளும் புலமையும் கீர்த்தியும் பெற்றவராக திகழ்பவர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். ஈழத்து கவிதை வளர்ச்சியில் இஸ்லாமியப் புலவர்களினதும், கவிஞர்களினதும் வரிசையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இருக்கிறார்.

தமிழகத்தின் திருப்பத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் பெற்றோர் மலையகக் கோப்பிப் பயிர்செய்கைக்காக ஆங்கிலேயர் ஆட்சியில் கண்டிக்குப் புலம் பெயர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

அப்துல் காதிர் கண்டி மாவட்டத்தில் உள்ள முன்னர் பட்டியகாமம் என அழைக்கப்பட்டு தற்போது போப்பிட்டி என்று அழைக்கப்படும் சிற்றூரில் 30.6.1866 இல் பிறந்தார். தந்தையின் பெயர் அல்லாப் பிள்ளை ராவுத்தர். தாயாரின் பெயர் கவ்யா உம்மா. இளமையில் அரபுப் பள்ளியில் திருக்குர்ரானும் தமிழ் பள்ளிக்கூடத்தில் தமிழும் திரினிற்றிக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றார்.

இவர் தன் 11வது வயதில் கண்டிக்கருகில் உள்ள குன்றுமலைப்பூங்காவில் உலாவி வரும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும்; அம் மயக்க நிலையில் பல அற்புத வியத்தகு காட்சிகளைத் தான் கண்டதாகவும் அது முதல் தன் நாவில் கவியூற்று பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இவரே தன் நண்பர்களிடம் கூறியதாக ஒரு செய்தி சொல்கிறது.

இவரது புலமையைக் கண்டு இவர் தந்தை இவரை தமிழகம் அனுப்பி மதுரகவி நாவலர். வித்துவ சிரோன்மணி மஹ்மூது முத்துவாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்க வழி செய்தார். அங்கிருந்து இவர் திரும்பும் போது மன வலிமையும் நினைவாற்றலும் அகத்தெளிவும் கொண்டவராகவும் ‘அட்டவதானி’ என்ற பெயர் பெற்றவராகவும் வீடு திரும்பினார்.

யாழ்ப்பாணத்தில் பாவலர்கள் கூடி இருந்த கவியரங்கச் சபையில் தன் 15 வது வயதில் கவி பாடப் போன போது அவர்கள் ஏளனச் சிரிப்போடு வாரும்; இரும்; படியும். அதாவது ’வாரும், இரும்படியும்’ என்றும் பொருள் கொள்ளத் தக்க சிலேடை வாக்கியத்தைச் சொல்லி ஏளனம் செய்த போது ‘நீர் தூர விருந்தே! துருத்தியை ஊதும். அதாவது தூர இருந்தே துருத்தியை ஊதும் என்றும் பொருள் கொள்ளத் தக்கதாக பதில் சொல்லி அருகமர்ந்தார் என்றும் இறுதியில் அவர்களே ’அருள்வாக்கி’ என்ற பட்டத்தை வழங்கி அவரைக் கெளரவித்தார்கள் என்றும் சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.

முப்பதுக்கு மேற்பட்ட அவரது ஆக்க இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக இருப்பது இஸ்லாமிய ஞான மார்க்கமே. பாராயணம் செய்வதிலும் தெளிவுரைகளைச் சுவை பட சொல்வதிலும் வல்லவராக இருந்த அவருக்கு 11க்கு மேற்பட்ட பட்டங்கள் கிட்டின. இவருடய பாராயணங்களும் பேருரைகளும் பாடல்களும் அருளும் இவரை தமிழகம் மட்டுமன்றி இலங்கையில் பல பாகங்களுக்கும் பயணங்களை ஏற்படுத்திக் கொடுத்தன. அவற்றின் மூலம் கெளரவங்களும் பொற்கிளியும் விருதுகளும் அவரை வந்தடைந்தன.

அவரின் புலமையையும் திறமையையும் அறிந்த அபிமானிகள் அவரை அணுகி அட்டவதானம் செய்து காட்டக் கோரிய போது இது என்ன சிறுபிள்ளைத்தனமான வேலை! நான் உங்களுக்கு ‘தீப சித்தி’ செய்து காட்டுகிறேன் என்று சொல்லி கண்டியில் உள்ள பகிரங்க மேடை ஒன்றில் 7 திரிகள் கூடிய குத்து விளக்கொன்றில் வெண்பா பாடி விளக்கெரியச் செய்தார் என்றும்; அது போல மேலுமொரு வெண்பா பாடி 7 தீபத்தையும் அணையச் செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. உண்மையிலேயே அவர் அருள்வாக்கியாகவே திகழ்ந்தார் என்றும்; பல நோய்களை குணமாக்கும் ஆற்றலையும் அருளையும் அவர் பெற்றிருந்தார் என்றும் ’பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது.

அவருடய படைப்புகளில் மிகவும் விதந்து பேசப்படுவது சந்தத் திருப்புகழ் ஆகும். அதனை ஒரு பிரார்த்தனைப் பேழை எனவும் அழைக்கலாம். அதில் இடம் பெறும் 100 கண்ணிகளில் ஒவ்வொன்றின் இறுதியிலும் பிரார்த்தனைச் சீர்கள் இடம்பெறுகின்றன. அதே நேரம் அவை அவருடய மார்க்கப் பற்றையும் இலக்கண மரபறிந்த திறமையையும் தமிழின் ஆழத்தையும் பறைசாற்றுவனவாகவும் அமைந்துள்ளன.

அதே நேரம் சித்தி லெப்பை அவர்களால் எழுதப்பட்ட ‘அஸ்றாருல் ஆலம்’ என்ற தத்துவ நூல் பெரும் கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளான போது  1911 இல் ‘தீட்சை பெறுபவன் தெரிய வேண்டியவை’ என்ற ஞான நூலினை வெளியிட்டு சித்திலெப்பையின் தத்துவ நூல் சரியே என நிறுவி சமூகத்தின் மத்தியில் அமைதியை ஏற்படுத்தி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கிய உலகில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் செய்த இலக்கியச் சித்து இது வரை வேறு யாராலும் செய்து காட்டப் படவில்லை. இஸ்லாமிய இலக்கிய உலகில் இருந்து ஏனைய சமூகத்தவரின் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நின்ற அருள் பெற்ற ஞானி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்.
இது அவரது சந்தத் திருப்புகழ் விருத்தம்

” திருவளர் ஞானம் மேவும்; செழும்பர கதியிற் சேர்க்கும்
குருபரன் அருளை ஊட்டும்; கோதிலா நிதி உண்டாக்கும்
கருவலர் முஹம்மதென்னக் கோன் கருணை உண்டாம் எந் நாளும்
தெருளமைந்து உயர்ந்த சந்தத் திருப்புகழ் படிப்போர்க்கன்றே”

    SBS இற்காக எழுத்துருவாக்கம்: யசோதா.பத்மநாதன். 19.11.16
இது அவருடய பிரார்த்தனைப் பாடல் ஒன்று.
 உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செய்கின்ற பிழைகளைச் சொல்லி அதனோடு குருவின் வழியில் இருந்து புரளாமல் தான் பேசுகின்ற மொழியாகிய தமிழ் மீது ஏதும் பிழைகள் ஏற்பட்டிருப்பின் அவைகளையும் பொருத்தருள வேண்டும் என்று கூறி அருள் வேண்டி இப்படி இறைஞ்சுகின்றது.

” இரு கணுறும் பிழை; இரு கைகளின் பிழை
இருதயவும் பிழை; இருங் காலால்
இனிது நடந்து செய் பிழைகள்
அருந் தவ மிடறு பெரும்பிழை உடன் வாயால்
வரு பொய் மறம் பகர் பிழை; பிற மங்கையர்
மயலுருகும் பிழை; அன்னை தாதை
மனமுழையும் படி வசை பகரும் பிழை
மதி பகரும் பெருமையரான
குருவும் மதின் சற கதவினை விடும் பிழை
குழகமுறுந்துணை; அவர் போல
கொடிது பகர்ந்திடு பிழைகள்; மறந்து செய்
குடிலணி வன் பகர் – தமிழ் மீது
சுரகி வரும் பிழை அற இனி இன்பக
துணை அருள் ஒன்றிட அருள்வீரே!”

(நன்றி: ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு , கொழும்பு 22,23,24, ஒக். 2002, சிறப்பு மலர்.'இறைவாக்குப் பெற்ற அருள் வாக்கி’; பாவலர் சாந்தி. முகைதீனின் கட்டுரையைத் தழுவியது.), மற்றும் இணையத்தளங்கள்.
விசேட நன்றி: noolaham.org

இந்தக் கட்டுரையில் சுருக்க வடிவம் SBS வானொலியில் 5.3.2017 அன்று ஒலிபரப்பானது. அதன் இணைப்பு கீழே;

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?language=taWednesday, March 1, 2017

சிரித்திரன் சுந்தர் – 3.3.1924 - 3.3.1996

       

”சமாதான காலத்திற்கும் யுத்தகாலத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சமாதான காலத்தில் பிரம்மன் செய்த விவசாயத்தை யுத்தகாலத்தில் யமன் அறுவடை செய்கிறான்.”

 இது சிரித்திரன் மகுடி பதில்கள் பகுதியில் வந்த கேள்வி பதில்.

ஆம். 3.3.1924 இல் பிறந்து அதே மாதம் அதே திகதியில் 1996ம் ஆண்டு தன் 72வது வயதில் மறைந்த சிவஞான சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட சிரித்திரன் சுந்தரும் சமாதான காலத்தின் யாழ்ப்பாணத்து விளைச்சலாய் பிறந்து யுத்தகால இடப்பெயர்வில் யமனால் அறுவடை செய்யப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்து வட தமிழ் கலாசாரத்தின் வரலாற்றுத் துண்டு.’

இலங்கையின் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை என்ற தனித்துவ ஆயுதத்தின் மூலம் தான் வாழ்ந்த சமூகத்தைச் நாசுக்காய் செழுமைப்படுத்தி வரலாற்றிற்கு ’சிரிச்ச தமிழை’ தந்து போன இந்த இலக்கிய ஆழுமை  பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்ட காரணத்தால் , 1995ம் ஆண்டு வலிகாம இடப்பெயர்வோடு விடைபெற்றுக் கொண்டது.

”செய்தொழில் தெய்வம்; சிரிப்பே சீவியம்” என்ற கொள்கையோடு சுமார் 28 ஆண்டுகள் வெளிவந்த சிரித்திரன் என்ற நகைச்சுவைப் பத்திரிகையின் ஆசிரியர் அவர். அன்றய சமூகத்துக்கு  தேவைப்பட்ட சமூக ஒழுங்கமைவை நகைச்சுவையில் தோய்த்து சுவைபடச் சொல்ல வல்ல பத்திரிகையாக அதனை அவர் நடத்திச் சென்றார். னையாண்டி, நக்கல், கிண்டல், பகிடி, கேலி, நகைச்சுவை போன்ற ஊடக வழியே அவர் கொண்டு சென்ற கருத்துக்கள் அன்றய தமிழ் சமூக நிலையை வித்தியாசமான கோணத்தில் உரியவரை நோகாமல் தாக்கும் தனித்துவ வல்லமையைக் கொண்டிருந்தது.

சிரிப்பென்ற ஆயுதத்தைக் கையிலெடுத்த பின் அவர் செய்த கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்களூடாக அவர் வெளியிட்ட கருத்துருவாக்கங்கள் அன்றய யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை நாசுக்காக சொன்ன வரலாற்று வடிவங்களாகும். அந்த மொழியில்லா கலைக்கோலங்கள் தான் அவர் சமூக விழுமிய நகர்வுக்காக தேர்ந்தெடுத்த போர் கருவிகள்.

கேலிச்சித்திரம், மகுடி பதில்கள், அகராதி, மிஸ்டர் & மிஸ்ஸிஸ் டாமோடிரன், மைனர் மச்சான், சவாரித் தம்பர், சின்னக்குட்டி, மெயில் வாகனத்தார் போன்ற குணச்சித்திரங்கள் ஒவ்வொரு சமூகப் பிரழ்வு குறித்தும் பிரக்ஞை கொண்ட அவர் ஞானக் கண்கள் பிறப்பித்த சமூகப் பாத்திரங்கள். அவர் பிறந்து வளர்ந்த சொந்தக் கிராமமான கரவெட்டியில்  சாதாரணமாகச் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்களே அவைகள் என அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அப் பாத்திரங்களுக்குக் கொடுத்த உருவங்களும் கருத்துருவாக்கங்களும் அவற்றூடே கலந்திருக்கும் ஹைக்கூ போன்ற நறுக்குத் தன்மை, வித்துவத்தனம், கருத்தாழம், கிண்டல்,முகத்தில் அறையும் கருத்து வேகம், சொல்வன்மை என்பன இன்றளவும் பேசப்படுவன.

தீப்பெட்டி என்ற சொல்லுக்கு அவர் ‘அகராதி’ தரும் விளக்கம்; நெருப்பு நித்திரை செய்யும் அறை என்பதாகும்.

அவரது மிஸ்டர் & மிஸிஸ் டாமோடிரன் ஆங்கில மோகத்தை; நாகரிக மேதாவித்தனத்தை; பணக்காரப் பகட்டை; தமிழின் மறக்கடிப்பை;  தேவையற்ற பாந்தாவைக் கிண்டல் செய்யும் காட்டூன் சித்திரங்களாகும். அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் ‘டாலிங்’ என்றே அழைத்துக் கொள்வர்.அதற்கு ஒரு மாதிரி இது.

மிஸ்ஸிஸ் டாமோடிரன்: நான் இம்முறை டமில்ல டீபாலிவாழ்ல்த்து கூறுகிறேன்.
மிஸ்டர் டாமோடிரன்: மிச்சங் நல்லது.
மிஸ்ஸீஸ் டாமோடிரன்: உங்கலுக்கு டீபாலிகல் வால்த்துக்களை தெரிவித்துக் கொல்லுகிறேன்.

ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம் அங்கத அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை ஊடாக சமூக யதார்த்தத்தைச் சித்திரித்தது. முதலில் மித்திரனிலும், பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் சித்திரம் 20ஆம் நூற்றாண்டு வாலிப உலகத்தை அதன் சிந்தனைப் புலங்களைப் படம் பிடித்துக் காட்டியது. சிறிமாவோ அம்மையார் காலத்தில் மக்கள் சீனிக்கு வரிசையில் நின்ற காலத்தில்  எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்."

அங்கதச் சுவையைத்  தன் வாகனமாக எடுத்தாண்டு சமூகத்தைத் அவர் தனித்துவமாகப் படம் பிடித்துக் காட்டிய போதும் தன் காட்டூன்களை அவர் காட்டூண்கள் என அழைப்பதை விரும்பவில்லை. அவற்றைக்’கருத்தூண்கள்’ என்றே அழைக்க விரும்புவதாக ஒரு தடவை கூறினார்.

இந்தக் கருத்தூண்கள் மூலம் ஈழத்தமிழ் சமூக இலக்கிய வளர்ச்சியில் தனக்கென தனியிடம் பதித்துக் கொண்ட சுந்தர், தன் மானசீகக் குருவாக தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஓவியர் மாலியையே குறிப்பிடுகிறார். ஒரு தடவை மாலி – கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் இலங்கை வந்த காலத்தில் சுந்தர் எனப் பின்நாளில் அறியப்பட்ட சிவஞானசுந்தரத்திற்கு வயது பத்து. பருத்தித்துறையில் சித்திவிநாயகர் பாடசாலையில் நடந்த கல்கி – மாலி வரவேற்புக்கூட்டத்தில்தான் அவர்களை முதன் முதலில் பார்த்ததாகவும்;  மாலி கையிலே ஒரு வெண்கட்டியை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்த கரும்பலகையில் அன்றைய அரசியல் தலைவர்களின் உருவங்களை கேலிச்சித்திரமாக வரைந்த காட்சி சிறுவன் சிவஞானசுந்தரத்தின் மனதில் ஆழப்பதிந்ததன் விளைவே இந்த விளையும் பயிருக்கு விழுந்த முதல் மழைத்துளி.

பின்னர் இலங்கையில் அஞ்சல் மாஅதிபராக அவரது தந்தை கடமையாற்றிய பொழுது இவரை இந்தியாவுக்கு கட்டிடக் கலை கற்பதற்கு அனுப்பி வைத்தார் என்றும் அவரோ தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார் என்றும்; அவ் ஆற்றலை தான் சார்ந்த சமூகத்துக்கு தன் கற்பனை வடிவங்களூடாக  தன் சமூகத்தைச் செழுமைப்படுத்த பயன் படுத்திக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பம்பாயில் சேர்.ஜெ.ஜெ.ஸ்கூல் ஒப் ஆட்ஸ் இல் பயின்ற போது   றாஜாராம் என்பவரிடம் உருவ ஓவிய வரைபிலும் சார்க்கோல் வரைபிலும் பயிற்சி பெற்று ”லோக்சத்த” என்ற மராட்டிய பத்திரிகையிலும் ஆங்கில பத்திரிகைகளான “பிளிட்ஸ்” “கொஞ்ச்” என்பவற்றிலும் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்  இந்து முஸ்லீம் கலவரங்களின் போதும் அரசியல் காட்டூண்களை வரைந்ள்ளார். பின் இலங்கையில் சுதந்திரன் – தினகரன் – வீரகேசரி – மித்திரன் மற்றும் சமசமாஜக்கட்சியின் சமசமாஜிஸ்ட் என்ற ஆங்கில இதழ் முதலானவற்றிலும் தமது கேலிச்சித்திரங்களின் மூலம் தமிழ் – ஆங்கில வாசகர்கள் மத்தியில் கவனிப்புக்குள்ளானார்.

ஒரு தடவை, ” எந்த இனத்தவரும் புரி்ந்து கொள்ளக் கூடிய கலைவடிவம் இது. பெரும்பான்மை இன ஆட்சி சிறுபான்மையின தமிழ்ப்பத்திரிகைகளில் வரும் கார்ட்டுன்களைப் புரிந்துவிடுமே என்ற அச்சத்தில் கார்ட்டுன் பிரசுரிப்பதை தமிழ்ப்பத்திரிகைகள் விரும்பவில்லை. முன்தோன்றிய மூத்த குடி – முத்தமிழ் உள்ள குடி என்று தமிழர்களாகிய நாம் எமக்கே புகழாரம் சூட்டி எம்மை நாமே வாயார வாழ்த்திப் பாடுகின்றோம். ஆனால் – இந்த மூத்த குடி சாதித்தது என்ன? ஓவிய உலகில் தமிழ் இனம் அனந்த சயனத்தில் இருக்கிறது. மலையாள மக்கள் ஒரு ரவிவர்மாவையும் வங்காள மக்கள் ஒரு நந்தலால் போஸையும் சிங்கள மக்கள் ஒரு ஜோர்ஜ் கீற்றையும் கலை உலகிற்கு ஈய்ந்தவர்களென்றால் தமிழர்களாகிய நாம் யாரை ஈய்ந்தோம். ஒருவரும் இல்லையென்றே நா கூசக் கூறும் நிலையில் இருக்கின்றோம்”. என்றார் அவர்.

சிவஞானசுந்தரம் நடத்திய சிரித்திரனின் முதலாவது இதழ் 1963 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் வெளியானது. பின்னர் 1971 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. வடக்கில் 1995 இன் போர்க்கால மாபெரும் இடப்பெயர்வு வரையில் வெளிவந்த சிரித்திரனின் முழு ஆயுள் காலத்தை 28 ஆண்டுகள் எனக்கருதலாம் என்றும் மொத்தம் 318 இதழ்கள் வெளிவந்தன என்றும் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் – என்ற சிரித்திரன் சுந்தரின் சுயசரிதை நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார்.

கீழே சில சிரித்திரன் பக்கங்கள் ஒரு மாதிரிக்காக...

1965ஆம் ஆண்டுக்குரிய சித்திரன் இதழைக்கூடwww.noolaham.org என்ற நூலக நிறுவனம் சேகரித்து வைத்திருக்கிறது. அங்கிருந்து மாதிரிக்குச் சில பக்கங்கள்.( நன்றி நூலகம்)

மேலதிகமாக சிரித்திரன் இதழ்களை வாசிக்க கீழ் வரும் இந்த இணைப்புக்குச் செல்லலாம்.
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_1965.11
போர் காலங்களில் தம் பாதுகாப்பு நிமித்தம் இராணுவ நிலைகளைத் தவிர்ப்பதற்காக வடபகுதி மக்கள் கிளாலி என்ற நீர் நிலையை கடந்து வன்னி நிலப்பரப்பை வந்தடைந்தார்கள். அது குறித்த கவிதை மேலே இருப்பது.


போர்க் காலங்களின் போது உலக நாடுகளுக்குச் சிதறி ஓடிய தமிழ் இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் தமக்கான துணையினை ஈழத்திலிருந்து வருவிக்க ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக திருமண சடங்குகள் சம்பிருதாயங்கள், சீதனம் வழங்குதல் போன்ற சம்பிருதாயங்கள் ஈழத்தமிழர் மத்தியில் பெரு மாற்றத்தினைச் சந்தித்தன. 

வெளிநாட்டுத்தமிழ் மாப்பிள்ளைகள் அந் நாட்டு வாழ்வியல் தாக்கங்களுக்கு உட்பட்டதோடு பண ரீதியாக வசதிகள் வாய்ப்புகளையும் தேடிக் கொண்டதால் சீதனம் என்ற கருத்துரு பின் தள்ளப்பட்டு அவ் இடத்தினை பெண்ணின் அழகு மற்றும் கல்வி, குண இயல்பு போன்றன முன்னிறுத்தப் பட, இறுக்கமான சமூகக் கட்டமைப்பும் தளர்ந்து பெண் தாலிக் கொடியோடு விமானம் ஏற ஆரம்பித்தனர். அதனை வெளிப்படுத்திய சிரித்திரன் அட்டைப் படம் கீழே இருப்பது.1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் அழிந்து போயின. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளாகி வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார்.

அவரது இதழியல் துறைச் சாதனைகளுக்கு அவரது மனைவியும் மிகுந்த பக்கத்துணையாக இருந்தார் என்றும்; அவரே சிரித்திரனின் முதல் வாசகியாகவும் ரசிகையாகவும் இருந்தார் என்றும்; பல இக்கட்டான காலங்களில் இவரின் மதியூகமான செயற்பாடுகள் பத்திரிகை தொடர்ந்து வர காரணமாக இருந்ததென்றும் கூறப்படுகிறது. இவரது கணவர் இறந்த மிகக் குறுகிய காலத்திலேயே அவரது மனைவியும் காலமானார் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

சிரித்திரன் பத்திரிகை நகைச்சுவை கேலிச்சித்திரம் முதலானவற்றினூடாக தன் சமூகத்தை சித்தரித்த அதே நேரம் பின்நாளில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததிலும் தன் தனித்துவமான முத்திரையைப் பதித்திருந்தது. காசி ஆனந்தனால் எழுதப்பட்ட இலட்சிய தாகம் கொண்ட “மாத்திரைக் கதைகள்”, குடாரப்பூர் சிவா என்பவரால் தொடராக எழுதப்பட்ட ‘நடுநிசி’ என்ற மர்ம நாவல், மாஸ்டர். சிவலிங்கம் எழுதிய சிறுவர் கதைகள், மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி", செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" போன்றவை இப்பத்திரிகையில் வெளி வந்து பின்னர் மிகப் பிரபலமாக விளங்கியவை பல் துறை களம் கொண்ட மொழிச் சித்திரங்களாகும்.

கூடவே தெளிவத்தை ஜோசெப்,அ. ந. கந்தசாமியின் கதைகள் ,அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், போன்றோரது கதைகளும் இங்கு பிரசுரமாகின. இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகப் படுத்திய பெருமையும் சிரித்திரனுக்குண்டு.

1.2.92ம் ஆண்டு பத்திரிகைத் துண்டு ஒன்று விக்கிரமசிங்க என்ற பெயரிலோ/ புனைபெயரிலோ சுந்தரைப் பற்றி எழுதிய அறிமுகக் குறிப்பு ‘எதிர்ப்பரசியல் வாதிகள் சிரித்திரனையும் சுந்தரையும் எவ்வாறு பார்த்தார்கள் என்பதைச் சொல்கிறது.  அது, சுந்தர் இலங்கையின் சாகித்திய விருதை மறுத்ததையும் மாவீர்ர் விருதைப் பெற்றதையும் நையாண்டி செய்த அதே நேரம் அது, ‘சுந்தரால் படைக்கப்பட்ட அனைத்துப் பாத்திரங்களும் இலங்கை வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களை விமர்சனத்துடன் படம் பிடித்துள்ளன. இந்தப் படைப்புகள் அனைத்தும் சமூகவியல் ஆய்வுக்கான பெறுமானங்களைக் கொண்டுள்ளன. குறும்பினை நாகரிகமாகவும்; சிந்தனைக்குரியதாகவும் ஆக்கியவர் இவர். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மகுடி பதில்கள் சூசகமாக பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒன்றாகும்.கேள்விப்பாம்புகளை ஆட்டிய இந்த மகுடி புதுப் புது சொற்களை உருவாகுவதிலும் வல்லாண்மையுடன் திகழ்ந்தது. சுவை மீட்டல், முரண்முறுவல், எண்ணத்தோகை, குறுமணி, செய்திச் சுண்டல், கதைத் தேன் ... என்பவை அவற்றுள் சில’ என கூறுகிறது.

இவ்வாறு மாற்றரசியல் விமர்சகராலும் பார்க்கப்பட்ட சிரித்திரன் சுந்தர் ஒரு தடவை மகுடி கேள்வியான
பாசத்துக்குரியவர் இறந்தால்... என்ற கேள்விக்கு,
 ‘காடாத்துவரை கண்ணீர் கொட்டும்
காடாத்தில் இருந்து 8 வரை கண்ணீர் சொட்டும்
8இலிருந்து அந்தியேட்டி வரை நினைவு தட்டும்
அம்மட்டும் தான் என்று பதில் தந்திருந்தார்.

அம்மட்டும் தானா சிரித்திரன் சுந்தர் என்று கேட்டால், இல்லை; அவர் ’குறிப்பிட்ட காலகட்டத்து நவீன ஈழத் தமிழ் இலக்கியத்தின் மீது நகைச்சுவை என்ற பேனாஆயுதத்தை கையிலேந்தியபடி ’சிரித்துக் கொண்டு நடந்த’  தனித்துவமான வரலாற்றுத் துண்டு’ என்பதே பொருந்தும்!

இத் தகவல்களின் சுருக்கமான வடிவம் மாசி மாதம் 5ம் திகதி SBS வானொலியில் ‘தமிழ் தடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. அதன் இணைப்பு கீழே;
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?language=ta


SBS இற்காக 11.11.16 அன்று எழுதியது. யசோதா.ப.