Wednesday, August 7, 2019

கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்கோ...




வாழ்க்கையில் கனமான கணங்களைக் கடந்து போக - கொஞ்சமாக றிலாக்ஸ் செய்து கொள்ள - அன்றாட வேலை தவிர்ந்த, ஏதேனும் ஒன்று நமக்கு அன்றாடம் தேவைப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
நண்பர்கள்...
சினிமா...
இசை...
விளையாட்டு...
குழந்தைகள்...
இணையம்...
முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள்...

மேலும் வைன், பியர் வகையறாக்களும் மேலும் புகைத்தல், மதுபான நுகர்வும் இதற்குள் அடங்குமா என்று தெரியவில்லை...


இவ்வாறாக வளர்ந்து செல்லும் பட்டியலில் உங்கள் அம்சம் என்னவாக இருக்கிறது?

என் அக்காளுக்கு பூந்தோட்டம்.
என் தங்கைக்கு அவள் வளர்க்கும் நாய்குட்டி
என் பிரிய தோழிக்கு வீட்டுத் தோட்டம்...

எனக்கு?

எனக்கு என்னவாக இருக்கும் என்று யோசித்த போது புத்தகங்கள் இலகுவாக வந்து என்னோடு செல்லம் கொஞ்சிக்கொண்டு என்னைச் சொல், என்னைச் சொல் என்கின்றன.

என்றாலும் ஒரு பெற்றோருக்கான கண்டிப்போடு ’கனமான’ உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களுக்கு அந்த அன்பளிப்பை கொடுக்க மறுத்து, அது ஆனந்த விகடன் மாதிரியான சிறு வணிக சஞ்சிகைக்களுக்கானது அந்த இடம் என்று கண்டிப்பாகச் சொல்லி, ‘பெரியவர்களை’ அகற்றி, கொஞ்சம் தூரம் நிற்கச் சொல்லி, குழந்தைகளைப் போன்ற இச் சிறு சஞ்சிகைகளை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனந்த விகடன்.

அது ஒரு கனமில்லாத சுவாரிசஸம்...

இதற்கும் எனக்குமான பரீட்சயம் பலவருடங்கள் கொண்டது. விகடன் வீட்டுக்கு வாராந்த விருந்தாளி. இங்கும் கூட. (ஊரில் இருந்த போது கலைமகள்.) முன்னர் விகடனில்  மதன் என்றொருவர் மிக அற்புதமாக கார்ட்டூன் வரைவார். அப்போதெல்லாம் அவருடய கேள்வி பதில்கள் தான் நான் முதலில் விரும்பிப் படிப்பது. இப்போது எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. அந்த அற்புதமான திறமைசாலியை விகடன் தொப் என்று போட்டு விட்டதில் எனக்கு இன்று வரை வருத்தமுண்டு. ஏன் கோபமும் தான்.

இப்போதெல்லாம் அதில் அரசியலும் சினிமாவும் அதிக இடத்தைப் பிடித்து விடுகிறது. கூடவே புத்தி மதிகளைப் போல அமைந்து விடும் கட்டுரைகளும் எனக்கு பிடிக்கிறதில்லை.  கூடவே கவிதைகளும்... எனக்கு சற்றேனும் உவப்பானவைகளாக இல்லை. ஏதோ புரியாத சொல்லடுக்குகளைக் கொண்டு மணல் வீடு போல அனேக கவிதைகள் அமைந்து விடுகின்றன.

இதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் தெரிவியுங்கள். எனக்குள்ளே மீண்டும் நான் என்னை மீள் வாசிப்புச் செய்து கொள்ளுகிறேன். அதனால், அவைகளைத் தவிர்ந்து, வரும் ஒரே ஒரு சிறுகதையும் மற்றும் சில துணுக்குகளும், வலைப்பேச்சும் பார்த்து விடுவதோடு இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் பார்ப்பது தீர்ந்து போய் விடுகிறது.

‘கனமாக’ வரும் / வந்த வேள்பாரி மற்றும் இப்போது வந்து கொண்டிருக்கும் இறையுதிர் காடு போன்றவை பயனுடைத்து எனினும் நான் அவைகளை ஆனந்த விகடனில் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் இப்போது கடைசி சில மாதங்களாக அதில் சில சுவாரிசங்கள் கூடி இருக்கின்றன. வாசகர் கேள்வி பதில் அந்த மாதிரியானது. அவற்றில் சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. (நன்றி ஆனந்த விகடன்; 31.7.19; பக். 70 - 71.)

கேள்வி: உங்கள் மொபைலுக்கு காரணத்தோடு பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க?

1. மாயவலை - வட்ஸப், பேஸ்புக், டுவிட்டர் எனத் தொடங்கும் இதனூடான பயணம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, கடசியில் வலையில் சிக்கிய மானாக நம்மை ஆக்கி விடுவதால்... - லக்ஷ்மணன். திருநெல் வேலி.

2. குரங்குக் குட்டி - குட்டியை விட்டுத் தாய் இருக்காது. தாயை விட்டு குட்டி இருக்காது. அது போல நாம் செல்லை வைத்திருப்பதால் இந்தப் பெயரை வைத்துக் கொள்லலாம். - சரவன்கவி.

3. உலகத்தையே செல்போனில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் பெட் நேம் ‘இரண்டாம் உலகம்’ - குப்புசாமி, சங்கரபுரம்.

4. மற்றவர்களுடன் நம்மை இணைப்பதால் டார்’லிங்’ - ஷிவாஸ்

5.’ஆளவந்தான்’ - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மொபைல் என்பதால். - தரணிஷிராஜ்.

6. ‘கறையான்’ - நேரத்தை அரிப்பதால்.- மணி-

7.ருவிட்டர் அதிகம் பார்ப்பதால் செல்லமாய் ’ருவிட்டி’ னு பெயரிடுவேன். - முருகானந்தி.

8.’சனியன் சகடை’ இது இல்லேன்னா வாழ்க்கையில் உருப்பட்டு இருப்பேனோ என்னமோ...- கார்த்தி.-

9.ஷேக்’கிளார் - சம்சாரத்துக்கிட்ட இருந்து கால் வரும் போதெல்லாம் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்படுவதால்...! - லெக்ஸ்வெனி.

10. இடது பக்க பாக்கட்டில் தான் எப்போதும் செல்போனை வைத்திருப்பேன். இதயத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் ‘லப் டப்.’  -வைரச் சந்திரன்-

11. ஆந்தை மாதிரி நைட்டில முழிச்சுக்கிட்டு ஆன்லனில பிஸியா இருக்கிறதால ‘பிஸிராந்தை’.- புது வண்டி ரவீந்திரன்.

நான் என்ன பேர் வைப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன் பதில் இன்னும் அவ்வளவு இலகுவாகத் தெரியவில்லை. யோசிக்கிறேன்.

அது சரி, நீங்கள் என்ன பேர் வைப்பீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்....

இதில் வந்த இன்னுமொரு கேள்வி.

உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?

1.’முற்றும்’. - அரியாஸ். சேலம்.

2.’சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’? - கார்த்திகா.

3.’ஹையோ.. ஹையோ...
என் வாழ்க்கையின் நேசமணி மொமெண்ட்ஸ்’.-விக்கி-

4.’இந்த வாழ்க்கைய... அப்படியே வரலாறா... எழுதிட்டாலும்’...! - மாதொருபாகன் -

5.’இதெல்லாம் எங்க உருப்படப் போகுது’? - பாகம் 1.- ராமுவேல்-

6.90’s kid! -ரமேஷ். ஷா.

7.’படித்தவுடன் கிழித்து விடவும்’ - மனோ. பிரான்ஸிஸ்.

8.’ஒண்ணுஞ் சொல்லுறதுக்கில்ல’ - வைகை சுரேஷ்.

வேலைத்தலத்தில் என் மியன்மியார் நாட்டு தோழி ஒருத்தியிடம் உணவு இடைவேளையின் போதான உரையாடலில், ‘போனுக்கு நீ என்ன பேர் வைப்பாய் என்று கேட்டேன். அவள் சொன்னாள்,

'It is part of my body - actually my Head.- We don't need to save any think in our brain any more. All are saved in this device, சற்று நேரத்தின் பின் புன்னகையோடு சொன்னாள், For my husband, that is his 2nd wife.

நான் என்ன சொல்லக் கூடும்....? யோசிக்கிறேன்...

நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்......


4 comments:

  1. விகடன் - நெய்வேலியில் இருந்த வரையாவது படித்தேன். தலைநகர் வந்த பிறகு இங்கே படிப்பது ரொம்பவே குறைவு - கடந்த சில வருடங்களாக பார்க்கவே இல்லை.

    கேள்வி பதில் - ஸ்வாரஸ்யம். ஒரு கேள்விக்கு எப்படியெல்லாம் பதில் சொல்ல முடிகிறது - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. ஆமால்ல!...
    இவைகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் வெங்கட்?

    போனுக்கு நான் ‘என் சமர்த்து’ என்று சொல்லலாம் என்று யோசித்தேன். பிறகு பார்க்கும் போது ஸ்மார்ட் போன் என்பதன் தமிழ் வடிவம் அது போலத்தானே என்று அதனைத் தவிர்த்து விட்டேன்.
    ’என் அம்புலன்ஸ்’ என்று அதனை நான் சொல்லலாம் போல இருக்கு.

    வாழ்க்கை.... இன்னும் யோசிக்க இருக்கு.:)
    வருகைக்கும் பகிர்வுக்கும் என் மகிழ்வான நன்றிகள்.

    ReplyDelete
  3. My phone is my 'Indrapuri'...a fantasy world that I enter on and off and at will :)

    ReplyDelete
  4. ஓ...:) இந்திரபுரி....:))
    ஆஹா...வெளிச்சங்களும் வண்ண ஜாலங்களுமாய் அழகான உலகமாய் தான் இருக்கும் போல....

    நன்றி; உங்கள் எண்ணத்தை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு....
    பாருங்களேன்! ஒவ்வொருவருக்கும் எப்படி எப்படி எல்லாம் phone காட்சி கொடுக்கிறதென்று...:)

    ReplyDelete