Saturday, August 1, 2020

நம்ம தமிழ் - 5 - புகழாப் புகழ்ச்சி அணி. ( நிந்தாஸ்துதி - 28.12.19 )

     


வறுமையும் புலமையுமாக ஒட்டிப்பிறந்த பிள்ளைகள் புலவர்கள். அவர்கள் எப்போதும் ஒருவித கனவுலகில் சஞ்சரிப்பவர்களாகவும் மிதமான கற்பனையிலேயே எப்போதும் உலாவுபவர்களாகவும் உழைப்புத் திறனில் அக்கறை அற்றிருப்பதாகவும் வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

அதிஸ்டவசமாக சில புலவர்கள் அரச ஆதரவோடு அரசவைப்புலவர்களாக வீற்றிருந்திருக்கிறார்கள். ஏனையவர்கள் பெரும்பாலும் பஞ்சத்திலும் பட்டினியிலும் இருந்த படி புரவலர்களைப் பாடி பரிசுபெற்று வாழ்க்கையை ஒருவாறாக ஓட்டியவர்களாகவே பெரும்பாலானோர் திகழ்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் ரோசத்திற்கும் தம் புலமை மீதான செருக்குக்கும் குறைச்சல் இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் காளமேகம். அவருக்கு தன் வாழ்க்கை மீது மட்டுமல்ல; கடவுளோடும் பிணக்குத் தான்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய்

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
அவர் இவருக்கும் மட்டும் பதிலடி கொடுக்கவில்லை; கடவுளுக்கும் அவர் அதைத் தான் செய்தார். நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து புகழாப்புகழ்ச்சி அணி வழியாக கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடம் பெற்றவை.  பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோஜிதமாக கிண்டல் செய்து பாடுவது நிந்தாஸ்துதி.தமிழில் அது புகழாப்புகழ்ச்சி!

தன் தரித்திர ஏழை வாழ்வை எவ்வாறு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கடவுளுடனான நிந்தித்து துதி செய்தபடி வாழ்வைஎப்படி எதிர் கொண்டார் என்பதையும் இன்று காண்போம்..

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவேகள் ளுண்டுபச்சை மிளகைக் கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம். (60)

இப்படியாக இருக்கிறது புலவர் வாழ்வு. அது மட்டுமல்லாமல் ஒருநாள் ஏன் தான் கடவுள் சந்நிதானத்துக்கு வந்தேன் என்று காரணமுரைக்கிறார்.

காவென்றுஞ் சிந்தாமணி யென்றுஞ் சொல்லி யென்கையில் அள்ளித்
தாவென்று கேட்கத் தரித்திரம் பின்னின்று தள்ளி யென்னைப்
போவென் றுரைக்கவு நாணமங்கே யென்ன போவதிங்கு
வாவென் றிழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே.

என்றபடிக்கு கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாம் இவர்கள் எல்லோருமே நோய்வாய் பட்ட குடும்பத்தவர்களாக இருக்கிறார்களே! இவர்கள் தங்கள் நோயையே எப்ப தீர்ப்பது என்று தெரியாமல் இருக்கிறார்களே! இவர்கள் எப்ப என் நோயைத் தீர்க்கப் போகிறார்கள்? என்றவர், இப்படியாக ஒரு போக்கிடமற்றவரே உமக்கேன் ராஜாங்கம் என்று இப்படியாகக் கேட்கிறார்.

நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சதமாங்
காளனேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராசாங்க மேன் .(65)

 என்னவோ எப்படியோ நீ இருந்திட்டுப் போ ஆனா என்னையும் கொஞ்சம் காப்பாத்துப்பா என்கிறார் இப்படியாக,

நீறாவாய் நெற்றிநெருப் பாவா யங்கமிரு
கூறாவாய் மேனிகொளுந் துவாய் – மாறாத
நட்டமாவாய் சொறுநஞ்சாவாய் நாயேனை
இட்டமாய் காப்பா யினி . (61 )

என்று கட்டளையிடுகிறார். ஆனால் கடவுளோ செவிசாய்க்கவில்லை. ஆற்றமை புலவருக்கு, பின்னும் அவர் பாடல் பிறக்கிறது,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிதே பார் .

என்று நையாண்டி பண்ணுகிறார். பின்னும்

அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை .

என்னவாமெனில், இவன் அப்பன் சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவன். இவன் தாய் பார்வதி மலையில் பிறந்த பேய்.இவன் அண்ணன் ஆனைமுகன் சப்பைக்காலன், பெரிய வயிற்றிறினை உடையவன் ஆறுமுகத்தானுக்கு நாம் எண்ணிப் பார்க்கும் பெருமைகள் இவை. மேலும் இந்தக் கடவுள் எங்க இனி நமக்கு உதவப்போகிறான் என்றவுடன் அடுத்த பாடல் இப்படியாகப் பிறக்கிறது,

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வற்றிருந்தக் கால் .(72)

காலனையும் காமனையும் காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் கொன்ற பழி போமோ?சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால் என்கிறார் செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது 

மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார்.சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார்.
திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் (செங்காடு என்னும் சுடுகாட்டில்) குடிகொண்டிருந்தால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா?

கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணெயுண்ட மாயனார் – எண்ணும்
சிரக்கொப் பரையேந்திச் செங்காட்டி லீசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று .(125)

கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் எண்ணும் சிரக் கொப்பரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்றுரைக்கிரார் வேறொரு இடத்தில்.

காளமேகப் புலவர் திருக்கண்ணபுரம் கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவை அடைத்துவிட்டனர். அவர்கள் கோயில் கதவை அடைத்ததற்குக் காரணம் இது என்று வேடிக்கையாகப் பாடிய பாடல் இது.

வெண்ணெய் உண்ட மாயன் மண்ணை உண்டான். செங்காடு என்னும் ஊரில் (சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்துத் தந்த ஊர்) ஈசன் தலைக்கொப்பரை (தலைமண்டைத் திருவோடு) ஏந்தி இரக்கப் (பிச்சை எடுக்கப்) புறப்பட்டார் என்றெல்லாம் வருந்திக் கோவில் கதவை அடைத்துவிட்டார்களாம். – இப்படி ஒரு தற்குறிப்பேற்ற அணி.

பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றிநம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாரா கேள் | வேளை யென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேல் ஆயிற்று என் தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளை இனி யார் சுமப்பார் என்னாளும் உன் கோயில் நாசந்தானே .(157)

கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்தாய். நாளைக்கு உன்னை யார் சும்பபார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும் என்பது இன்னொரு புகழாப்புகழ்ச்சி!

இந்த வறுமையும் புலமையும் அன்று மட்டுமா? இன்று அவை சினிமாப்பாடல்களிலும் படங்களிலும் மிளிரக் காண்கிறோம். திருவிளையாடல் திரைப்படத்துத் தருமியை நாம் பார்த்ததுண்டு தானே!


எனினும் இன்று நாம் கேட்க இருக்கும் தந்தை தாயிருந்தால்....என்று அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது .



https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..



https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

தந்தை தாய் இருந்தால்…


https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE

.............................................................

( சுருக்கமான வானொலி நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் இது! )

அணிகளின் வரிசையிலே இன்று நாம் காண இருப்பது ‘புகழாப்புகழ்ச்சி அணி’. 
புகழாப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?

புகழாப்புகழ்ச்சி அணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்று குறிப்பிடும் விடயத்தின் மேன்மையை புகழ்ந்து கூறுவதாகும். இதனை, ’பழிப்பது போலும் பான்மையின் மேன்மை  புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி’ என்று தண்டியலங்காரம் இலக்கணம் கூறுகிறது.--(தண்டியலங்காரம், 84)

இவ்வாறாகப் புகழாமல் புகழும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணிக்கு 
’போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம் - நீர்நாடன்
 தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம் செங்கண்மால்
  ஓரடிக்கீழ் வைத்த உலகு ’ 

என்று தண்டியலங்காரம் மேற்கோள் பாடல் ஒன்றை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது. 

இந்தப் பாடலின் சுருக்கமான பொருள் என்னவென்றால்,சோழன் வேலால் வென்றும், புகழால் போர்த்தும், புயத்தால் தாங்கியும் உலகத்தைக் காக்கின்றான். அவன் இவ்வளவு முயன்று தாங்கும் உலகு, திருமால் தன் ஒரு பாதத்தில் அடக்கிய உலகாகும். இது சோழனின் தன்மையைப் பழிப்பதுபோல் உள்ளது. எனினும் திருமாலுக்கு நிகராக உலகம் முழுவதும் காக்கிறான், என உண்மையில் சோழனைப் புகழ்தலே அதன் நோக்கமாகும். ஆதலின் இது புகழாப் புகழ்ச்சி எனப்படல் ஆயிற்று.

இது போன்ற இகழ்வது போல புகழ் பாடும் பாடல்களை பாடுவதில் அதாவது நிந்தாஸ்துதிகளுக்கு பேர் போன புலவர் காளமேகம். அவர் நினைத்தவுடனேயே பாடல் பாடவல்ல ஆசுகவியுமாவார்.

ஒருமுறை அதிமதுரக் கவிராயர் இவரைப் பார்த்து 
மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

என்று பேசி விட்டார். ஆசுகவியான காளமேகத்தார் சும்மா இருப்பாரா? அவர் உடனே 

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் 

என்றார். காளமேகம் என்பது மழையினை கொண்டிருக்கிற கார்மேகம் ஆகும்.
 அப்படிப்பட்டவர் கவி காளமேகம்!.

நிந்தாஸ்துதி மூலம் அதாவது நிந்தனை செய்வதன் மூலம் துதிசெய்து கடவுளோடு உறவாடும் ஒருவித நட்புறவோடு அவர் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. . பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோசிதமாக கிண்டல் செய்து மேன்மையினைக் கொண்டாடுவது அவர் பாணி.

ஒரு நாள் கடவுளிடம் வந்துவிட்டார். வந்தவர் இரந்தெதுவும் கேட்கவில்லை கடவுளைப் பார்க்கிறார்.,

பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார் .

என்று நையாண்டி பண்ணும் பாணியில் புகழ்கிறார்.. இறைவனாகிய பெருமாள் நல்லவர்; அவருடய திருநாளும் நல்லது. அந் நன் நாளில் அவர் பருந்து வாகனத்தில் பவனி வருகிற மேன்மையை நையாண்டியாக ‘நல்லதொரு நாளில் பெருமாளை பருந்து எடுத்துக் கொண்டு போகுது பார்’ என்று நிந்தித்து துதி செய்கிறார். பின்னும் 

’அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை’ . 

சிவபெருமான் பிச்சை எடுத்துண்ணும் பிட்சாடனராகத் திருவிளையாடல் புரிந்தவனல்லவா? அன்னை உமையவளோ நீலவண்ணம் கொண்டவள்; தாய்மாமனாகிய கிருஷ்ணனோ இளம்வயதில் ஆய்ப்பாடியில் வெண்ணெய் திருடி உண்டு விளையாடல்கள் புரிந்தவன்’ இந்தப் பெருமைகளை எல்லாம் சொல்லவந்தவர் அதனை நையாண்டி பாணியில் சொல்லி இருப்பது ரசிக்கத்தக்கதல்லவா?

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வந்திருந்தக் கால் .(72)

என்று செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது இப்படியாக மேலும் நிந்தாஸ்துதி செய்வது இலக்கிய உலகில் ’புகழாப்புகழ்ச்சி அணிக்கு’ மேலும் அழகு சேர்ப்பது. மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார். சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார். திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார். நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர் திருச்செங்காட்டங்குடியில் வந்து இருந்து விட்டால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா? என்பது பாடலின் பொருள். திருச்செங்காடங்குடியில் குடி இருக்கும் சிவனாரின் பெருமையினை புலவர் இவ்வாறாகக் காண்கிறார்.

https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா…..

’கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார் மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - என்னும் சிரக்கப் பரையேந்திச் செங்காட்டி லீசர் இரக்கப் புறப்பட்டா ரென்று’. (135) என்று வேறொரு பாடல் புகழாப்புகழ்ச்சி அணிக்கு அழகு சேர்க்கிறது.

திருச்செங்கோட்டிலே கோயில் கொண்டிருக்கும் ஈசனாகிய சிவபெருமான், மதிக்கத்தக்க தலையோடாகிய பிட்சாபாத்திரத்தை ஏந்தியவராகப் பிச்சை ஏற்று உண்பதற்குப் புறப்பட்டுவிட்டார்’ என்று அறிந்த கண்ணபுரத்துக் கோயிலார்கள், திருமாலும் சிவனைத் தொடர்ந்து போய்விடக் கூடாதே என்று பயந்து, திருக்கோயிற் கதவை அடைத்துத் தாழும் இட்டுவிட்டார்கள். அதனாலே, வெண்ணையுண்ட மாயனார், அது கிடையாமல் மண்ணைத் தின்பவரானார்! 
தாம் தரிசிக்கச் சென்றபோது திருக்கோயிற் கதவினைக் கோயிலார் அடைத்துத் தாழிடக் கண்டவர், இப்படிப் பாடி அவர்கள் செயலைப் பழித்தவாறாக பாடல் அமைந்த போதும் சிவன் உணவேதும் கிடையாமல், பிச்சை எடுக்கப் போய்விட்டான் எனப் பிட்சாடன் மூர்த்தத்தையும், வெண்ணை யுண்ட மாயன் மண்ணையுண்டான் எனத் திருமாலின் சிறப்பையும் பாடிய நயத்தினை அறிந்து இன்புறுக 

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி….


https://www.youtube.com/watch?v=XdPvopk3VrY 

. இனி, மேலுமொரு எடுத்துக் காட்டு பார்ப்போமா?
பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றி நம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

என்பது புலவரின் பாடல். கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் இப்போது 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்து விட்டாய். நாளைக்கு உன்னை யார் சுமப்பார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும். என்று நிந்தனையில் உரிமையோடு துதிக்கிறார் புலவர்.

எப்படி இருக்கிறது இந்த நிந்திப்பது போல துதி செய்யும் இந்தப் புகழாப்புகழ்ச்சி அணி? 

இனி நிந்தாஸ்துதி பாடல் ஒன்று.!

https://www.youtube.com/watch?v=qOcSdMHUI7Y

அருணாசாய்ராம் பாடும் இந்தப்பாடல் பாபநாசம் சிவன் இயற்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன எனினும் தஞ்சாவூர் கே.பொன்னையாபிள்ளை இயற்றியதாகவும்  சொல்லப்படுகிறது ..
 

தந்தை தாய் இருந்தால் என்று வசந்தகோகிலத்தில் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் பொன்னையாப் பிள்ளை இயற்றியது.…

https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE 

உருவாக்கம்: யசோதா.பத்மநாதன்.
19.3.2020.

3 comments:

  1. இதுவரை வாசித்திராத அருமையான தகவல்கள்

    ReplyDelete
  2. அப்படியா? மிக்க மகிழ்ச்சி ஞானசேகரன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு அழகு நடை

    ReplyDelete