Monday, May 18, 2020

பிரிவின் நிறம் செம்மஞ்சள்



பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
கயர்ப்பு நெல்லி சுவையதற்கு.

பச்சை மஞ்சள் சிவப்பு என
நிறம் மாறுகின்றன இலைகள்
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி.....

மஞ்சளில் இருந்து
சிவப்புக்கு நிறம் பெயரும்
இலையின் நுனியில்
அமர்ந்திருக்கிறது
பிரிவின் துயர் கெட்டியாக.

இலையின் நுனியில்
ஒரு காலத்தைப் போல
அமர்ந்திருக்கும்
கருப்பும் சிவப்புமென
வண்ணம் கொண்ட லேடி Bக்கோ
கசப்பினை பிளிந்து
தைல வாசனையை
காற்றில் பரப்புகிறது.

இடம்பெயர்கிறன
மனநிலைகள் மெல்லெனவே..
கற்றில் பரவும்
தைலவாசனை போலவே
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி
இலைபோல வெகு இயல்பாக....

ரேகையோரமாய் ஊர்ந்து
கிளைரேகையில் பரந்து
இலை மெல்ல
செம்மஞ்சள் ஆகும் தருணம்
ஆயிற்று அமைதியாய்
ஒரு விடுபடல் சம்பவம்

கயர்ப்பு நெல்லி சுவையை
உண்டு உயிர்க்கிறது
வாழ்வு.

அதன் உந்திய உயிர்ப்பில்
விருட்சத்தில் இருந்து
பிரிந்து உதிர்கிறது
இயல்பாக
செம்மஞ்சளேயான
இலையொன்றும்

உடலில் இருந்து உளம் ஒன்றும்...

நம்புங்கள்,
கயர்ப்பு நெல்லி சுவை கொண்ட
பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
செம்மஞ்சளேயாகும்.

- யசோதா.பத்மநாதன் -
18.5.20.

( வீதியில் சற்று முன்னர் பார்த்த செம்மஞ்சள் இலையொன்று தந்த கவிதை (?) இது )

4 comments:

  1. அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ....மனித வாழ்க்கை..

    ReplyDelete
  2. புத்தன்,
    என் முதல் ரசிகர் நீங்கள். அதை மறக்கமாட்டேன் நான்.

    இதனை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு மிகுந்த மனத்திடமும் போதுமான அளவு கருணையும் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
    நன்றி அந்த நல்ல உள்ளத்திற்கு! :)

    ReplyDelete
  3. கயர்ப்பு நெல்லி சுவையை உண்டு
    உயிர்க்கிறது வாழ்வு.
    நல்லதோர் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      Delete