Sunday, July 26, 2020

நம்ம தமிழ் - 3 - சிலேடை அணி. 22.3.2020



சிலேடை அமைப்பில் வந்த சினிமா பாடல் இது!



 கி.வா.ஜெகன்நாதன் சிலேடைப் பேச்சுக்குப் பிரபலமானவர். அவர் ஒரு தடவை ஈழத்தின் வடபால் உள்ள பருத்தித் துறை என்ற ஊருக்குப் பேசப் போயிருந்தார். அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த புலவர் ஒருவர். தாம் இயற்றிய நூல் ஒன்றை இவரிடம் அளிக்க இவர் உடனே, ’இடத்திற்கேற்ற கொடை என்றாராம். எப்படி என்று புலவர் கேட்க, பருத்தித் துறையில் நூல் கிடைப்பது பொருத்தம் தானே என்றாராம்.

சிலேடை என்பது என்னவென்றால், ’ஒருவகைச் சொற்தொடர் பல பொருள் பெற்றி தெரிதர வருவது சிலேடை’ என்று தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் வரைவிலக்கணம் சொல்கிறது.

அத்திக்காய் காய் காய் என்ற சினிமாப்பாடலில் வரும் காயும்  பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் என்பதில் வரும் தேனும் இன்றும் எல்லோருக்கும் தெரியக் கூடிய - சொல்லக்கூடிய சினிமாச் சிலேடைகள்.
இந்த சிலேடை உத்தியை முதலில் பயன்படுத்தியதில் கம்பன் முன்நிற்கிறார். ‘அஞ்சிலே’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு ஐம்பெரும் பூதங்களை ஒரு பாட்டுக்குளேயே பொதித்து வைத்த வல்லாள கவிஞன் அவன். பாலகாண்டம் ஆற்றுப் படலத்தில் வரும், அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் -  என்ற பாடலிலே அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவையாய் அமைந்திருக்கக் காணலாம்.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும். அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரை அதாவது கடலைத் தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- (ஐம்பூதங்களிலே ஒன்றாகிய ஆகாய மார்க்கமாக இலங்கைக்குப் பறந்து, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅதாவது ஐம்பூதங்களில் ஒன்றாகிய பூமி தேவியின் மகளான சீதையை கண்டு என அர்த்தப்படுகிறது. கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது. இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருளாகும். இதிலே ஐம்பூதங்களாகிய நீர் நெருப்பு பூமி, காற்று ஆகாயம் ஆகிய ஐந்தும் வருமாறு பாடல் அமைந்திருப்பது விஷேஷம்.
இந்த 'அணி'யில் 'புகுந்து விளையாடிய' புலவன்;  சிலேடை மன்னன் காளமேகப் புலவரைப் பற்றி எல்லோரும் கேள்விபட்டிருக்கிறோம். கடவுளையே நையாண்டியும் கேலியும் செய்து அவன் பாடிய பாடல்கள் இலக்கிய உலகில் பெரும் பிரபலம் பெற்வை. அவை பற்றிப் பின்னர் காண்போம். அவர் சிலேடையிலும் வலு விண்ணன்.

அவருடய சிலேடைப் பாடல்கள்  பல உள்ளன. அதில் இது ஒன்று.
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதேசங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார் . (99)

சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது. சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன. ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது. சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது. பித்தா! (சிவனே) உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார். என்பது இப்பாடலின் பொருள்.

இவ்வாறு எக்கச் சக்கமான பாடல்கள் இலக்கியத்திலே உள்ளன. தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சிலேடைகள் அவ்வப்போது இயல்பாக வந்து விழும். அப்படி வந்த ஒரு சம்பவம் இது.
ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை  வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மறைந்திருந்த மற்றொரு பொருள். வந்த புலவர் என்ன லேசுப்பட்டவரா? அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.
இனி இக்காலத்தில் வந்த ஒரு சிலேடைப் பாடலைப் பார்ப்போமா? இது பிள்ளையாரையும் கனனியையும் வைத்துப் பாடிய சிலேடை. எங்கே எப்படி புரிகிறதா பாருங்கள்?

தட்டில் மெதுபண்டம் ஏற்பதால் தரணியைச்
சட்டென்(று) எலியோடு சுற்றுவதால் - மட்டில்லாப்
பாரதத்தில் மேன்மையுற்றுப் பாரோர் வினைக்குதவும்
வாரண மாம்கணினி காண்.

இங்குள்ள பல சொற்கள் விநாயகருக்கும் கணினிக்கும் ஒருங்கே பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளன.

முதலில், கணபதியைக் கூறும் விதத்தைப் பார்ப்போம். அவர், அன்பர்கள் தட்டில் படைக்கும் மிருதுவான கொழுக்கட்டைப் பண்டத்தை விரும்பி ஏற்பார்; தம் வாகனமான எலியில் (மூஞ்சூறு) ஏறி உலகெலாம் விரைவில் சுற்றுவார்; அளவிட இயலாத பெரிய நூலான மகாபாரதத்தை (வியாசர் சொல்லிவர, தாம் தம் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு) எழுதிப் புகழ் பெற்றவர்; உலகத்தோர் வினைகள் இடையூறின்றி நடக்க உதவிபுரிபவர் என்பது ஒரு பொருள்.

இப்போது பாடலைக் கணினியின் பெருமையைக் கூறுவதாகப் பார்த்தால் அது, குறுந்தகட்டில் உள்ள மென்பண்டத்தை ஏற்கும்; `மவுஸ்` என்னும் எலிப் பொறியோடு இணையம் வழியாக உலகைச் சுற்றிவரும்; கணினித்துறையில் அளவிட இயலா ஆற்றலுடையவர்களைக் கொண்ட இந்தியாவில் அது மேல்நிலை எய்தும்; வீட்டிலும், அலுவலிலும் நாம் செய்யும் பணிகளுக்கு உதவும்.

இன்றும் சிலேடைகள் தமிழின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகவே விளங்குகின்றனபெண்ணையும் நதியையும் ஒப்பிட்டுப் பாடும் இந்த வைரமுத்துவின் பாடலும் ஒருவகை சிலேடை தான் இல்லையா?

அந்த - மானை /அந்தமானைப் பாருங்கள் அழகு என்று ஒரு சொல்லில் இரண்டு அர்த்தத்தை தந்த 1978இல் வெளிவந்த அந்தமான்காதலி திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி ஜேசுதாசும் வாணிஜெயராமும் பாடிய பாடலைப் போல சலங்கை ஒலியில் வரும் ’தகிட ததிமி தகிட ததிமி தந்தானா; இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா; இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா; நினைத்ததை எழுதிட மறக்குது என் பேனா என்ற இந்தப்பாடலும் சிலேடை வழி வந்ததே
. தகிட ததிமி….


.....................................................................................

யசோதா.பத்மநாதன்.
27.12.19.

No comments:

Post a Comment