Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; என் சிற்றறிவுக்கு எட்டிய தீர்வு - 3 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 2 - பிரச்சினையை இனம் காணுதல்

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 1 - பிரச்சினையைக் கண்டறிதல்

( இந்தப் பதிவு முன் வந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாகும். அவற்றை வாசிப்பதற்கு மேலே உள்ள தலைப்பினை அழுத்தவும்: நன்றி ) 


புலம்பெயர்ந்து வாழும் சமூகம் ஒன்றில் நற்பண்பாட்டின் மூலக் கூறுகளை

சமயம் சொல்லத் தவறி விட்ட ஒன்றை;

பாடசாலைகள் தீர்த்து வைக்க முடியாத ஒன்றை;

குடும்பங்களால் தீர்வு காணப்பட முடியாத ஒன்றை;

சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது. எவ்வாறு அறக்கருத்துக்களை பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த வழிவகைகளில் சொல்லிக் கொடுக்கலாம்? 

அதற்குப் பல வழிவகைகள் இருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த வழிவகைகளில் ஒன்றை மட்டும் சில சான்றாதாரங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களையும் என்னோடு தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவை என் பார்வைப் புலத்தை விசாலிக்கப் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் சமூகமாக இந்திய இலங்கைத் தமிழர்கள் இணைந்து ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? 

இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும் இடமாக;

கலைகள் ( இசை, நடனம், வாத்திய கலைகள்) இலவசமாகக் கற்றுக் கொடுக்கப் படும் இடமாக;

இலக்கியம் அதன் சுவை அதன் பாடுபொருளை சுவையோடு சொல்லிக் கொடுக்கும் ஓர் இடமாக,

ஓரிடமும்; 

கூடவே அங்கு நம் பாரம்பரியப் பொருட்கள் - இன்று பாவனையில் இல்லாத பொருட்கள் - பார்வைக்கு வைக்கப்பட்டு - எத்தகைய ஒரு வாழ்வு முறையை நம் மூதாதையர் பின்பற்றினார்கள்; எப்பேற்பட்ட ஆழமான பண்பாட்டு வாழ்க்கைமுறை வேரில் இருந்து நாம் வந்திருக்கிறோம்; எப்படி எல்லாம் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை பார்க்கும் விதமாக ஒரு மியூசியமும் உள்ளதாக ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ - 

இதற்கு அவ் அவ் துறையில் துறைபோகிய சமூகசேவை மனப்பாண்மை கொண்ட குருமார் அவ் அவ் கலைகளை இலவசமாக பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சினேக மனப்பாண்மையோடு  கற்றுத்தர முன் வருவார்களாக இருந்தால் அது எத்தகையதான சமூகத்தை உருவாக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவே மனதுக்கு பூரண இதத்தைத் தருவதாக  இருக்கிறது!!

சுமார் 5,6 வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண, சமான்ய தோற்றம் கொண்ட ஒரு மனிதரை என் வேலை நாளொன்றில் சந்தித்தேன். கூச்ச சுபாவத்தோடு தயங்கித் தயங்கி என்னை அணுகினார். அவரின் பெயர் சிவசோதி. யாழ்ப்பானத்தில் உள்ள ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, கொட்டைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், போர் சூழலால் துரத்துண்டு தமிழ் நாட்டில் சிலகாலங்கள் வசித்து, அதன் பின்னால் சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர். இலங்கையில் இருந்த போது அச்சகத்தில் பணியாற்றியதாகக் கூறினார். அவர் கடந்த 17.12.21 அன்று தனது பிறந்ததினத்தைக் கொண்டாடியதோடு அவரின் கொண்டாட்டப் படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதனை உங்களோடும் அவசியம் பகிர்ந்து கொள்வேன்.

சிவசோதி ஐயா தன் மனைவியோடு

சிவசோதி ஐயா தன் பேரப்பிள்ளைகளோடு

அவரைப் பற்றி நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன் வாழ்நாளில் சேகரித்த சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். ஊரை விட்டுப் புலம் பெயரும் போதும்; பின்நாளில் தமிழ் நாட்டை விட்டுப் புலம் பெயரும் போதும்; அவர் தன்னோடு கொண்டுவந்த பொருட்கள் என்னவென்றால் பழங்கால முத்திரைகள், நாணயங்கள், முதல்நாள் தபால் உறைகள், அரசால் வெளியிடப்பட்ட நாட்டுத்தலைவர்கள் குறித்த சிற்றேடுகள் போன்றவை தான்.



அரிதாக அச்சிடப்பட்ட 1 ரூபாய் தாள் 1963.6.5.
1 ரூபாய் தாளின் பின் புறம்


1974ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்து இன்று காணமுடியாத 10 ரூபாய் நோட்டு


அந்த 10 ரூபாய் நோட்டின் பின் புறம்

சுமார் 1974ம் ஆண்டளவில் புழக்கத்தில் இருந்த 2 ரூபாய் தாள்

2 ரூபாய் தாளின் பின் புறம்


பின்நாளில் வந்த 10 ரூபாய் நாணயம்



இவைகள் எல்லாம் பண்பாட்டின் கருவூலங்கள்; இன்று பார்வைக்குக் கிடைக்கப் பெறாதவை; அவைகளின் சில ஒளிப்படங்களைய் உங்கள்  பார்வைக்காகத் தருகிறேன். இது போல பல கலைப்பொக்கிஷங்கள் அவரிடம் உள்ளன.

இந்த இந்திய நாணயங்களைப் பாருங்கள்.



இந்த இந்திய நாணயங்களில் 5ம் ஜோர்ஜ் மன்னர் காலம், 1 பைசா, 1 அனா,2,3,5 பைசாக்கள், கால் அனா,1/2 ரூபா நாணயங்கள் இதில் பார்வைக்கு உள்ளன. இவை போல பல உள்ளன. ( எனக்கு இந்த பைசா, அனா, ரூபாய்களுக்கான வேறுபாடுகள் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்.) 
இவைகளோடு கூடவே புராதன தலைவர்களின் தபால் தலைகள், 1st day cover என்று சொல்லப்படும் தலைவர்களின் படம் பொறித்த தபால் உறைகள் மற்றும் அவர்களைப்பற்றி தபாலகம் வெளியிட்டுள்ள சுருக்கப் பதிவுகள் என்று ஏரளமான வரலாற்றுக் குறிப்புகள் சிவசோதி ஐயா வழியாக என் வசம் தற்போது உள்ளன.

அவை சரியான இடத்தில் வாழ்நாள் பூராக சேகரித்து அதனைப் பொக்கிஷமாகக் காத்து வந்த சிவசோதி ஐயா அவர்களின் பெயரோடு நம் எதிர்கால சந்ததிக்குப் போய் சேர வேண்டும் என்பது என் அவா. ஒரு பெரும் கனவு. 

காலங்கள் கடக்கின்றன. வருடம் ஒன்று போக வயதும் ஒன்று கூடுகிறது. மலையில் ஏறிய காலம் கடந்து, நாம் இப்போது மலையில் இருந்து இறங்கும் வாழ்க்கைக் காலத்தில் இருக்கிறோம். இருக்கும் போது பிடித்தவற்றைச் செய்து விட வேண்டும் என்றும்; அதனை காலம் தாழ்த்தாது இப்போதே செய்து விட வேண்டும் என்றும் நுணுயிர் கிருமிகளும் வாழ்க்கைப் பாடங்களும்; வாழ்வியல்புகளும் நமக்கு உணர்த்திய வண்ணமாக உள்ளன. நாம் அதனை உதாசீனம் செய்து விடக் கூடாது என்று எஞ்சி இருக்கும் வாழ்க்கை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது...

 நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதாலோ என்னவோ இவைகளின் சொந்தக்காரர் இவற்றை மகிழ்வோடு என்னிடம் தந்து வைத்திருக்கிறார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் பூதம் பொக்கிஷத்தைப் காப்பதைப் போல இவற்றைக் காத்து, காத்து வருகிறேன்.

இதனால் என்ன பயன்? இவை எல்லாம் சமூகத்துக்குப் பயன்படும் போது தானே அது எல்லோருக்கும் பயனுடயதாகும்!!

கூடவே என்னிடமும் சில மூதாதையர் பயன் படுத்திய பொருட்களை பெரும் முயற்சி எடுத்து தாயகம் போன ஒரு விடுமுறை நாளில் உருக்குப் பட்டறைகளில் இருந்து மீட்டெடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். 

இவைகளையும் கூட உங்கள் பார்வைக்கு தருகிறேன்.












இவைகள் எல்லாவற்றையும் கூடவே ஒவ்வொரு ஈழ, தமிழகத் தமிழர்களும் ஊருக்குப் போய் வரும் போது கண்டெடுத்து வரும் அரும் பொக்கிஷங்களையும் ஓரிடத்தில் - அதாவது இந்த - தமிழர் கலாசார இல்லத்தில் - பார்வைக்கு வைத்து, மாணவர்களின் பார்வைக்கு வைத்தால் அது சமூகத்தில் கலைவழி கற்றலினாலும் பார்வை வழி புரிதலினாலும் அறிதலின் வழி ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வராதா?

அதற்கு நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?

இந்தப் புது வருடத்தில் அதற்கு ஒரு வழி கிட்டாதா?

......................

எல்லோருக்கும் இன்னும் இரு நாளில் மலர இருக்கின்ற 2022 புதுவருட நல்வாழ்த்துக்கள்!

காலம் காயங்களை ஆற்றி எல்லோருக்கும் நல்வழி காட்டட்டும்!

மனிதம் மலரட்டும்!!

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; இனம் காணல் - 2 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையை கண்டறிதல் - 1 -

( முதல் பகுதியை வாசிக்க மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.)

சரி, அப்படி என்றால் அதனை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க என்னதான் செய்ய வேண்டும்? 

நாம் பாடசாலைகளை நிறுவி இருக்கிறோம்; கோயில்களைக் கட்டி இருக்கிறோம்; நடை, உடை பாவனைகள், உணவு முறைகள், பண்டிகைகள் எல்லாவற்றையும் முடிந்தவரை பின்பற்றுகிறோம். இனி என்னதான் செய்வது என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

குடும்ப அலகில் இருக்கும் நாம்  ஒரு குடும்பச் சூழலில் ஒரு முக்கியமான வேலை ஒன்றைச் செய்ய நாம் தவறிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

அது, அறத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பது தான். 

அறத்தோடு நின்ற வாழ்க்கை நமது. சங்க காலத்து காதல் வாழ்வில் இருந்தே நமக்கு அதற்கான ஆழ வேர்கள் விரவி விருட்சமாகி நம் பண்பாட்டில் தளைத்து நிற்கிறது. இன்றய தமிழில் எளிமையாகச் சொல்வதாக இருந்தால் ‘மனச்சாட்சியோடு இருத்தல்’, மனிதத்தன்மையோடிருத்தல்  என்று இலகுவாக அதனைத் தெளிவு படுத்தி விடலாம். 

இதனை தமிழ் பாடசாலைகள் கற்றுக் கொடுக்கவில்லை; கோயில்கள் கற்றுக் கொடுக்கவில்லை; பண்டிகைகளோ கொண்டாட்டங்களோ கற்றுக் கொடுக்கவில்லை; கூடவே குடும்பங்களும் அதனைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இது கற்றுக் கொடுத்து வருவதா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம்; இங்கு அதனை நாம் கற்றுக் கொடுத்துத் தான் ஆகவேண்டும். ஆங்கிலப் பாடசாலைகளில் அதன் கல்வி முறைகளில் தனி மனித சுதந்திரம்; தனிமனித சிந்தனை; முயற்சி அதன் வழி பெறப்படும் வெற்றி என்பது முதன்மைப் படுத்தப் படுமிடத்து; இல்லங்களில் பணத்தின் வழி பொருட்கள் நிறைந்து அன்பு பற்றாக்குறையாகிப் போகுமிடத்து; இரு பண்பாட்டுக்குள் வாழும் ஒரு குழந்தை அறத்தைக் கற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சுயநலம் மேலோங்கும் சாத்தியம் தானே அநேகம்....விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது; சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது; ஒரு பொருளின் அருமை புரியாது; அன்பு என்பதன் வலிமையும் அதன் தார்ப்பரியமும் புரிந்து கொள்ளப்படாததாக ஆகி போயிருக்க தன்னை மையப்படுத்தியதாக ஒரு குழந்தை வளரத்தானே சாத்தியம் அதிகம்...

இவற்றுக்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? சமூகமாக நாம் இணைந்து இதற்கு என்ன செய்யலாம் என்பது இன்று நமக்கு முன்னால் உள்ள சவால்.

பண்பாட்டின் வேர்களை இன்னும் ஆழமாகச் சொல்ல கல்விச்சாலைகளை விட வேறென்ன வழிவகைகள் உள்ளன? கவர்ச்சியாக; விரும்பும் படியாக; அவர்களின் ஆர்வத்தை ஊட்டும் படியாக;  பார்வைப் புலன் வழியாக பார்த்து; ஸ்பரிசித்து; உணர்ந்து பார்த்து, இளம் சமூகத்துக்கு ஒரு கருத்தினைக் கொண்டு செல்ல இருக்கும் வேறு வழி வகைகள் எனென்ன?

இது தான் நமக்கு முன்னால் இன்று நமக்குள்ள கேள்வி.

தொடரும்.....

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையைக் கண்டறிதல் - 1 -

 வருடம் ஒன்று நிறைவடையப் போகிறது. 2021 போய் 2022 வர இருக்கிறது.

கடந்த இருவருடங்கள் கொரோனா பேரிடர் பல வாழ்க்கைத் தத்துவங்களை நமக்குச் சொல்லி வருகிறது.  நாடுகள் ஒற்றுமையாக இணைந்து இந்த வைரஸைத் துரத்தினாலொழிய அதனை இப்போதைக்கு இல்லாது செய்ய முடியாது என்பதை அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் ஆழும் அரசுகளுக்கும் அது அடித்து அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனை செவிசாய்க்க எந்த வல்லரசு நாடுகளும் தயாராக இல்லை. ஆபிரிக்காவின் அழுகுரலை; தமக்கு முதலாவது தடுப்பூசியே போதுமான அளவு கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதன் ஈனக்குரலை யாரும் செவிமடுப்பதாக இல்லை. நாமோ போதுமான அளவு தடுப்பு ஊசியினை போட்டுவிட்டுக், கையிருப்பிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது ஊசிக்கும் நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் வளங்களைச் சுரண்டி எடுத்து வந்து விட்டு அவர்களை ஏழைகளாக வைத்திருந்தபடியே அவர்கள் மீது எந்த இரக்கமோ மனசாட்சியோ இல்லாது ஒதுக்கி வைத்திருக்கிறது முதலாம் உலக நாடுகள்; இன்று வரை.  அவர்கள் மீதான குறைந்த பட்ச இரக்கத்தை; மனிதாபிமானத்தை; நீதியை தர மறுக்கிறது அது!  

போதாததற்கு மூன்றாவது ’ஒமிக்குரோன்’ வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லி அவர்களுடனான போக்குவரத்து தொடர்புகளை முற்றாகத் துண்டிக்கிறது ஏனைய நாடுகள்.... பாவம் ஆபிரிக்கா....நாங்கள் எப்போது இயற்கையிடம் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்... எப்போது சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்று ஒற்றுமையாக எல்லோரையும் அரவணைத்துப் போகப் போகிறோம்... தெரியவில்லை.

சரி, நாம் இதற்கு என்ன செய்யலாம்? அதுவும் தெரியவில்லை...கிடைத்திருக்கிற இந்த வீட்டில் சும்மா இருக்கிற தன்மை அடுத்த வருடமும் நீடிக்கப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

இந்த lockdawn காலப்பகுதி கொஞ்சம் படிப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் எதிர்கால பார்வை நோக்கி என்னைத் திருப்பியது.

இது ஒரு பின்னணி.... இனி விடயத்துக்கு வருகிறேன்,

.......................

சிலப்பதிகாரத்தில் ஓரிடம்,

கண்ணகி பாண்டியன் வாயிலில் வீராவேசத்தோடும் கோபம் நிறைந்த துக்கத்தோடும் அறச் சீற்றத்தோடும் வாசலுக்கு வருகிறாள். காவலன் அவளை மறித்து நீ யார் என்று கேட்கிறான். அதற்கு அவள்,

’தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று சொல்லி விட்டு,

’எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார்என் பதியே’ 

என்று ஆரம்பிக்கிறாள். எது என் நாடு; எது என் தாயகம் என்பது அவள் சொல்லும் முதல் கூறு. அதிலும் ஓர் அடைமொழி வைக்கிறாள். எத்தகையது என் நாடு தெரியுமா? அழும் மாட்டுக்கும் நீதி வளங்கிய அறம் கொண்ட நாடு அது என்கிறாள்.அதன் பிறகு தான்,

’அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி’

என்கிறாள். அதாவது, அந்த ஊரில் உள்ள பெருங்குடிமக்களான வணிகனான மாசாத்துவானின் மகனை மணந்து ஊழ்வினை துரத்தியதால் உன் நகருக்கு வந்து சிலம்பை விற்கப் போனதால் கொலைக்களப்பட்ட கோவலனின் மனைவி நான் என்கிறாள்.

இந்தத் தன்மை தமிழ் மொழிப் பண்பாட்டில் மட்டுமல்லாது சமஸ்கிருத மொழிப் பண்பாட்டிலும் இடம்பெற்றே வந்திருக்கிறது. பிராமணப் புதல்வனான அறிவில் சிறந்த கவி புனையும் ஆற்றலும் நடிப்பு வல்லமையும் கொண்ட அஷ்வகோஷ் என்பான்  பிரபா என்கிற கிரேக்கப் பெண்ணைக் காதலித்து, கிரேக்க நாடக உத்திகளை பிராகிருத மொழிக்கு ( சமஸ்கிருதத்திற்கு முற்பட்ட மொழி வழக்கு) கொண்டுவந்து இந்தியாவின் முதல் நாடக ஆசிரியனாக வரலாற்றில் புகழப்படும் (ஊர்வசி வியோகம்’ என்பது பிராகிருத சமஸ்கிருத கலப்போடு எழுதப்பட்ட முதல் நாடகம்) அஷ்வகோஷ் பிராமணீய தத்துவங்களை எல்லாம் கற்றுத்தேர்ந்து அதன் சாதி குறித்த  பாதகங்களை உணர்ந்து பின்நாளில் புத்த தத்துவங்களால் கவரப்பட்டு பெளத்தனான, அறிவாற்றல் மிக்கவனான  அஷ்வகோஷ் தன் சிருஷ்டிகளில் எல்லாம் முடிவில் தன் கையொப்பத்தை இடும் போது, “ சாகேதத்தைச் சேர்ந்த, ஆர்ய சுவர்ணாட்சியின் புதல்வன் அஷ்வகோஷ் எழுதியது” என்று எழுதி தன் பெயரோடு கூட தான் பிறந்த சாகேதத்திற்கும் பெற்றெடுத்த தாய் சுவர்னாட்சிக்கும் சிரஞ்சீவித்தன்மையை ஏற்படுத்திவிட்டான் என்று கூறப்படுகிறது. (வொல்காவில் இருந்து கங்கை வரை - பக் 318 - 345 )

இந்தியப் பெரும் பரப்பில் வரலாற்றால் அறியப்படும் இவர்கள் இரண்டு பேரும் இரு பெரும் பண்பாடுகளின் முகவர்கள். அதாவது கண்ணகியும் அஷ்வகோஷும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் தாம் பிறந்த நாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

தாயகம்; நாம் பிறந்த பொன்னாடு என்பதற்கு அத்துணை மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் வரலாற்றினால் அறியப்படும் அளவுக்கு மனித மனங்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

அதற்கு புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடி வந்திருக்கும் நாம் என்ன விதிவிலக்குகளா என்ன!!

காலமாற்றத்துக்குள்ளாகி எண்ணிம (டிஜிட்டல்) உலகில் அறிவினாலும் போரினாலும் இன்னபிற காரணங்களாலும் புதிய நாட்டொன்றுக்கு வந்திருக்கிற நாம், அடுத்த இரண்டு சந்ததிகளை புதிய தாயகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிற நாம், நம் தாயக சிந்தனையை அதன் பண்பாடு பாரம்பரிய நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை எப்படி அடுத்த சந்ததிக்கு கொடுக்கலாம் என்பது பெரும் சவாலாகி வரும் இந் நாட்களில்; பிள்ளைகள் பல புதிய பண்பாட்டு மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ள ஏனையவர்களோடு பழகும் வாய்ப்பும் கலப்பு மணங்களும் கூடிவரும் இந் நாளில், இதெல்லாம் தேவையா என்று கேட்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான். தேவையா தேவை இல்லையா என்ற கேள்விக்கப்பால் இருவேறு பண்பாட்டுக்குள் திருமணம் வழியாக இணையும் உள்ளங்கள் எந்த இடத்தில் தம் சமநிலை புள்ளியை வைத்திருக்கப் போகிறார்கள் என்பது திருமணத்துக்குப் பின்பான சவால்களுக்கப்பால் இவர்கள் கண்டடைய வேண்டி இருக்கிற மேலதிக சவால்.

இதனைச் சவால் என்று பார்க்காமல் அது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற தனி வாய்ப்பு என்றும் கருதலாம். அவர்களின் முன்னே ஒரு பிரச்சினையைத் தீர்க்க இரு பண்பாடு சொல்லிக் கொடுத்த  வழிமுறைகள் முன்னால் இருக்கின்றன. அது ஒரு பெரிய வரப் பிரசாதம் தான்.

ஆனால், அதனைத் தெரிவதற்கு அவ்வப் பண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்தப் புதிய பண்பாட்டுக்குள்ளும் நாம் நிலை பெற்று நிமிருவதற்கிடையில் எண்ணிமப்புரட்சி நடந்து தொழில்நுட்பமும் நம்மை கட்டுப்படுத்தி வரும் சூழலில் இந்த புதிய சந்ததியினரின்  நிலை என்ன?

அதற்கு நாம் எத்தகைய வழிகாட்டுதல்களை வழிகளை அவர்களுக்குக் காட்டி இருக்கிறோம் என்பது தான் நமக்கு முன்னால் இருக்கின்ற பெரும் கேள்வி. ஆம் கோயில்கள் கட்டி இருக்கிறோம், மொழிப் பாடசாலைகளை உருவாக்கி இருக்கிறோம், அறிவகம் உண்டு, சமூக வானொலிகள் உண்டு, பண்பாடு சொல்லிக் கொடுத்த உணவு, உடை, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் சில பல குறை நிறைகளோடு. அது மட்டும் அவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளப் போதுமா?

இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தோற்றங்களின் வழியாக; பார்வைப் புலன்களின் வழியாகவே பலவற்றையும் உள்வாங்குகிறார்கள். கற்றுக் கொடுத்தலும் மொழியும் அவர்களை சலிப்படையச் செய்வனவாக உள்ளன. பொதுவாகவே விரைவாக ஒன்றில் சலிப்படைந்து விடுகிற தன்மை இளைய சந்ததியிடம் பரவலாகக் காணப்படுகிறது. 

நாம் சந்ததியினர் ஒன்றினைப் பெறக் கடினமாகப் போராட வேண்டி இருந்தது. அதன் காரனமாகவோ என்னவோ அதன் பின்னால் கிடைக்கும் அந்தப் பொருள் அருமையானதாக போற்றத்தகுந்ததாக இருந்தது அன்று.ஆனால்  இன்றோ முயற்சி எதுவும் செய்யாமல் விரைவாகவே வேண்டியதை பெற்றுவிடும் வாய்ப்பு வந்து விட்டதால் அதன் அருமை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகி விரைவில் சலிப்படையச் செய்து விடும் ஒன்றாக மாறி விடுகிறது போலும்! 

இங்கு இருக்கிற சொகுசான வாழ்வு; கடின உழைப்பு என்பதை; சிக்கனம் என்பதை கற்றுக் கொடுக்கவில்லை. அன்பு, பற்று, பாசம், அக்கறை என்பதை காட்ட பண்பாடு கற்றுத்தரவில்லை. ‘ஒருவருக்காக நிற்றல்’ என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது. பாசம் பணத்தால் நிறுக்கப் படுகிறது. அறம் என்பது பற்றிய புரிதல்கள் இல்லாதே போயின. சுயநலம், பணபலம் இவைகளால் பெறுமதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழின் மூல சொத்தே ‘அறம்’ தான் இல்லையா?

இவைகளை நாம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

 ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? என்று  ஒருசாரார் கேட்கக் கூடும். வாழ்க்கை முறை மாறினாலும் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் மனித ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒன்று தான்.இரத்தமும் வியர்வையும் ஒன்றுதான் என்று சொல்வார்களே அது மாதிரி.  இழப்புகள், விபத்துகள், துன்பங்கள், இன்பங்கள், நோய்கள், பிறப்புகள், இறப்புகள் எல்லாம் எல்லோருக்கும் ஒன்று தானே!

இவைகளை எதிர்கொள்ளும் அணுக்க வழிமுறைகளை ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு விதமாக  கற்றுக் கொடுக்கின்றன. ஒரு தமிழன் பிரச்சினை ஒன்றை அறத்தின் வழியாக அணுகுகின்றான். ஒரு மேலைத்தேய பண்பாட்டினன் தன்னம்பிக்கையின் வழியாக அணுகுகிறான். மத்திய தேசத்தவன் மத நம்பிக்கையின் வழியாக ஆறுதலை கண்டடைகிறான். ஆசிய நாட்டவன் விடாத முயற்சி, பயிற்சி மற்றும் வேறொன்றில் மனதைச் செலுத்துதல் வழியாக சம்பவத்தை மறக்க முயல்கிறான்.

இவ்வாறாகப் பண்பாடுகள் சொல்லிக் கொடுக்கும் மூலோபாயங்கள் வேறு வேறானவை. அவைகளை - குறைந்த பட்சம் நம் பண்பாடு நமக்குச் சொல்லிக் கொடுத்த அணுகு முறைகளை அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோமல்லவா? 

எப்படி இதனைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

ஓர் இளங்குடும்பம் - அவளது கணவனை அவளின் நெருங்கிய தோழி சுவீகரித்துக் கொண்டு சென்று விட்டதோடு மட்டுமன்றி அவளின் வீட்டுக்கருகிலேயே தலை நிமிர்ந்து வாழவும் செய்வதை அண்மையில் கண்கூடாகக் கண்டேன்.

புற்றுநோய் வந்துவிட்ட இரண்டு பிள்ளைகளின் தாயொருத்தியை அப்படியே விட்டு விட்டு தன் பள்ளிக் காலக் காதலியை முகப்புப் புத்தகத்தில் கண்டுபிடித்து அவளோடு உலகம் சுற்ற போன ஒரு கணவனை என் வேலைத்தலத்தில் கண்டேன்.

இவ்வாறெல்லாம் செய்யத் துணிவதற்கு எது காரணமாயிற்று என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

பண்பாடு பற்றிய அறிதலில் ஏற்பட்ட வெற்றிடம்.

அந்த வெற்றிடம் ஒன்றே தான்! 

தொடரும்......