Wednesday, September 10, 2014

மன வனம்

அண்மையில் குறிப்பிட்ட ஒரு காரணம் நிமித்தம் சூளாமணி என்ற காப்பியத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் சேடி நாட்டின் தலைநகரமான இரதனூபுரம் என்ற இடத்தை அரசாண்ட சேடி மன்னன் “மனோ வனம்” என்ற பூஞ்சோலைக்குக் குடும்பத்தோடு போன போன போது அச் சோலை அவனை வரவேற்ற பாங்கினை அது ஒரு இடத்தில் கீழ் கண்டவாறு சொல்லிக் கொண்டு செல்கிறது.


அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்


வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கிம னோவன நண்ணி னானே


வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்

கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே


மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்

கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே


புகழ் பாடிப் பூவிறைத்தல்

கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே


தென்றல் வீசுதல்

குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே


என்று பாடுகிறார் தோலாமொழித் தேவர்.


சாதாரண ஒரு நிலையில் இருந்திருந்தால் அவ் வர்ணனை வீச்சில்; தமிழின் அழகில்; அப்புலவனின் கற்பனை நயத்தில்; வந்த வேலையை மறந்து மனதைப் பறி கொடுத்திருப்பேன்.ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது ஒரு சொல் என்னை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது.


பாடல் அழகாய் இருந்த போதும் பாடலுக்குள் நுழைய முடியாமல் ஒரு பெருந் தடையை ஏற்படுத்தியது “மனோவனம்” என்ற சொல்.


முன்னரும் ஒரு பொழுது இப்படித்தான்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் வரும் “சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை” என்று அவர் பாடிய பக்தித் திறத்தில் தடக்குற்று அந்தச் சொல்லழகில் பலமாதங்கள் திளைப்புற்றுக் கிடந்தேன். இப்போது இந்த மனோ வனம்!


உண்மையில் இந்த மனம் என்பது ஒரு வனத்தைப் போல என்பது எவ்வளவு உண்மை? அங்கு தான் எத்தனை கொடிய விலங்குகள்,பயந்து ஒளிந்து கொள்ளும் சிறு பிராணிகள், முயல்களில் இருந்து முயல்களைக் கொன்று தின்னும் மிருகங்கள் வரை எத்தனை ஜாதி? எத்தனை வண்ணங்கள்? இயல்புகள்?தோற்றங்கள்?

கொடிகள், பூக்கள், மரங்கள், விருட்சங்கள், ஊர்வன, பறப்பன, வண்ணாத்திப் பூட்டிகள், மின்மினிகள், நறுமண மலர்கள்,பூச்சிகள், பழமரங்கள், மற்றும் குளிர்ச்சி பொருந்திய நீரோடைகள், மலை முகடுகள், மண்மேடுகள், சமதரைகள்,புல்வெளிகள்,மேலும் கூடுகள், குகைகள், சிலந்திகள், தேனீக்கள், தேன் கூடுகள்,தாவித் திரிவன,தங்கி இருப்பன,அப்பப்பா எத்தனை எத்தனை?...........


மனதை ஒரு வனமாக எண்ணி மனதுக்குள் உள் நுழைந்தேன். அதனை உலகம் பார்க்கப் புறப்பட்ட ஒரு உல்லாசப் பயணியைப் போல மூன்றாம் தரப் பிரஜையைப் போல ஆராய்ந்து பார்த்தேன். என் மன வனத்தை.


இன்னும் மீள முடியவில்லை.:)


அங்கிருக்கிற ஒரு வினோத பிராணி இது வரை எங்கும் நான் கண்டறியாதது.:) அது மிக வினோதமாயும் சமயா சமயத்தில் பயமூட்டும் விதமாயும் (மற்றவர்களுக்கும்) தோற்றம் காட்டுகிறது.அது சில சந்தர்ப்பங்களில் நல்ல பிராணியைப் போலவும் தோற்றமளிக்கிறது.தேவை ஏற்படுகின்ற போது எங்கிருந்தோ கூரான கொம்புகள் மேல் கிளம்புகின்றன.அது தன்னை ஒரு கம்பீர பிராணியாய் தோற்றம் காட்டிய படி சுயம் தாக்கப் பட்டு விட்டதைப் போல பிடரி சிலிர்க்க எழுந்து நிற்கிறது.அது பூனையைப் போல மிருதுவானதாகவும் அதே சமயம் பாம்பினுடய விஷத்தைக் கொண்டிருப்பது போலவும் தெரிகிறது.


அது என் மனோ வனத்தில் மட்டும் தான் வசிக்கிற பிராணியோ தெரியவில்லை.அச்சத்தையும் ஆதூரத்தையும் ஒருங்கே கொண்ட அபூர்வ பிராணி அது.


வினோதமான இந்தப் பிராணியை தமிழில் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்!


பாற்கடலுக்குத் தானே தெரியும் மந்தர மலையில் ஆழம்!:)


மனோவனம்..........


6 comments:

  1. ப‌ழ‌ந்த‌மிழில‌க்கிய‌த்தில் தேடித்தேடித் தேன் ப‌ருகி, அதை எம‌க்கும் உரித்தாக்குகிறீர்க‌ள் தோழி! ம‌னோவ‌ன‌த்துள் புகுந்து தேட‌லைத் துவ‌ங்கியாச்சு நானும். என்ன‌வொரு அற்புத‌மான‌ உள்ளொளிப் ப‌ய‌ண‌ம்! இருட்டிருக்கும் இட‌மெல்லாம் புல‌ப்ப‌டுகிற‌து. வெளிச்ச‌த்தை விரித்துக்கொள்ளும் அவா எழுகிற‌து. வ‌ன‌த்துள் அசைந்தாடும் ப‌சும‌ர‌ங்க‌ளும், அவ‌ற்றில் வ‌சிக்கும் புள்ளின‌ங்க‌ளும், அவ‌ற்றின் வ‌சீக‌ர‌ வாய்மொழிக‌ளும், கீழே ந‌ட‌மாடிய‌ப‌டி, இளைப்பாறிய‌ப‌டி, புத‌ருக்குள் ஒளிந்த‌ப‌டி இருக்கும் மிருக‌ங்க‌ளும், வ‌ன‌வாசிக‌ளும் என‌ எங்கோ ம‌ன‌ம் ப‌ற‌க்கிற‌து... ஆஹா! தோலாமொழித் தேவ‌ரை நிற்க‌ வைத்து வ‌ண‌ங்க‌ வேணும்

    ReplyDelete
  2. பாற்கடலுக்குத் தானே தெரியும் மந்தர மலையில் ஆழம்!:)

    ம‌ன‌ங்க‌வ‌ர் சொல்லாட‌ல். ச‌பாஷ்!

    ReplyDelete
  3. நிலா,பல சந்தர்ப்பங்களில் நானும் நீங்களும் ஒரு மையப் புள்ளியில் மிகச் சரியாகச் சந்தித்துக் கொள்வோம் இல்லையா?

    அது நிறைவான ஒரு மகிழ்ச்சியைத் தருவது.மிக அபூர்வமாகக் கிட்டுவது.

    மனம் மலர்கிறது.:)

    ReplyDelete
  4. மிக்க நன்றி கீதா. அவசியம் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  6. வாய்ப்புக்கு மிக்க நன்றி கூகிள்சிறி.

    எழுதுவதில் ஏதேனும் ஒன்று யாருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் படும் என்ற நினைப்பு எனக்கு வருகின்ற போது நிச்சயமாக கூகுள்சிறியை நினைவில் கொள்கிறேன்.

    என்னைக் கண்டடைந்து வந்ததில் பெரு மகிழ்ச்சி எனக்கு!

    ReplyDelete