Sunday, February 26, 2012

Monday, February 6, 2012

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?


அண்மையில் என் சிங்கை நகர் தோழி ஒருத்தி பாடல் இணைப்பொன்றோடு மின் தபால் ஒன்றனுப்பி இருந்தாள்.முதன் முதல் அப்பாடலை நான் கேட்டது அன்றுதான்.தமிழையும் அதன் பண்பாட்டையும் கொலை செய்திருந்த அப்பாடல் நவீன உலகம் எங்கு நிற்கிறது என்பதற்கான ஆதாரமாகவும் இருந்தது.

அதிலிருந்து நான் அறிந்து கொண்டது ஒன்றுதான். நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள்; நிறைய நிறைய வாய்ப்புகள்.நன்மையும் தீமையும் மேடும் பள்ளங்களுமாக சாதக பாதக பண்புகளோடு கெட்டுப் போகவும் நல்லாய் வரவும் நம்முன்னால் நிறைய நிறைய வாய்ப்புகள்!ஒரு வார இறுதி வந்தால் மலிந்து கிடக்கின்றன கொண்டாட்டங்கள்; மற்றும் விருந்துபசாரங்கள்.

தொழில்களும் அவை தரும் வாய்ப்புகளும் கூட அப்படித்தான்.

நேரத்தையும் நம் தேவையையும் சரியாக ஒழுங்கு படுத்தாவிட்டால் இவ் வாய்ப்புகள் நம்மைத் தின்று சக்கையாக்கித் துப்பி விடுகின்றன.நம்முடய தேவையும் இலக்கும் இந் நவீன உலகில் சரியாகச் செப்பனிடப்பட்டு வரையறுக்கப் படாவிட்டால் இந்த காட்டுவெள்ளம் நம்மை அள்ளிப் போய் விடும் அபாயம் இருக்கிறது.அதை விட தொழில் நுட்ப வசதிகள் பெருகி 24 மணி நேரங்களையும் அவை வேறு பங்கு போட்டுக் கொள்கின்றன.

அண்மைக் காலமாகப் பெருகி வரும் முகப்புப் புத்தகத்தின் பரவல் ஒரு சுனாமியைப் போல மக்களைச் சுவீகரித்துச் சென்றிருக்கிறது.இணையம் பாவிப்போரில் சுமார் 40% மானவர்கள் இம் முகப்புப் புத்தகப் பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக அண்மைக்காலத் தகவல் ஒன்று கூறுகிறது.தங்களைப் பின்பற்றச் சொல்லி தொலைக்காட்சி நிறுவனங்களும் அடிக்கடி விளம்பரங்களை ஒளிபரப்புகிறண.

நானும் அது பற்றிய அனுபவங்கள் அற்றிருந்த ஒரு சில வருடங்களின் முன் சும்மா ஒரு பக்கத்தைத் திறந்து வைத்திருந்தேன்.ஆனாலும் அங்கு நான் செல்லாமல் விட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதிலிருக்கும் உண்மையற்ற தன்மை; ஒரு பொழுது போக்கு தன்மையைத் தாண்டிய எதுவும் அங்கில்லாதிருந்தமை;கலாசார சீரழிவின் மொத்தத்தையும் அங்கு கண்டமை.....இப்படிப் பல.ஆனால் இன்று வரை நண்பராகும் வேண்டுகோளோடு வருகின்ற விண்னப்பங்கள் நட்பு என்பதும் அதன் விழுமியங்களும் எத்தனை கேலிக் கூத்தாகப் போய் விட்டது என்பதையே எனக்குணர்த்துவதாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் எத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் தான் எத்தனை பெருமையும் பெருமிதமும் கொள்கிறார்கள்.இதில் எத்தனை பேர் உண்மையானவர்கள்? எத்தனை பேரை இவர்கள் கண்டு பழகி அறிந்திருத்தல் கூடும்? இத்தனை போலித் தன்மைகளோடும் இருக்கும் இதற்கு மக்கள் ஏன் இத்தனை வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.அருகில் உயிரோடு இருக்கும் நண்பரோடு பேச நேரமற்று முகப்புப் புத்தகத்தில் இருக்கும் யாரோ ஒருவரோடு நேரம் செலவளிக்கிறார்கள்.

ஆகாய கங்கை தாகத்துக்கு உதவக் கூடுமோ?

எல்லோருக்கும் இருக்கின்ற 24 மணி நேரத்தை எப்படி நாம் திட்டமிடப் போகிறோம் வாழ்ந்து பார்க்கப் போகிறோம் என்பதை - எதை நோக்கிய பயணம் நமது? என்ற இலக்கை கண்டு கொண்டு அதற்கேற்ப வாழ்வைத் திட்டமிடுவது எத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அண்மையில் 17.10.2011 அன்றய குக்குமம் வார இதழ் ஒன்று கைக்கிட்டியது.ஐபொட்,ஐபாட் ஐபோன்,அப்பிள் கொம்பியூட்டரைக் கண்டுபிடித்த காலம் சென்ற ஸ்டீவ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 2005ம் ஆண்டு நிகழ்த்திய உரையை அது பிரசுரித்திருந்தது.

தன் வாழ்க்கையை ஒரு ரொனிக்காக அங்குள்ள இளம் சந்ததிக்கு அவர் கொடுத்திருந்தார்.எனக்கென்னவோ அவர் கண்டு பிடித்த தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாவற்ரையும் விட அவரது இந்த உரை மனிதர்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறதாகத் தோன்றுகிறது.

அது சற்றே அகன்ற கட்டுரை. தனியான ஒரு பதிவுக்கே அது ஏற்றது.பின்னொரு சந்தர்ப்பத்தில் அதனைத் தனியாகவே பதிவேற்றலாம்.என்றாலும் அவர் சொன்ன ஒரு கூற்றைச் சொல்லி இப்பதிவை முடிக்கலாம் என்று தோன்றுகிறது.

“...கண்னாடி முன்னின்று இன்றுதான் என் வாழ்வின் கடசித்தினம் என்று தீர்மானமானால் இன்று நான் செய்யும் இதே வேலையைத் தான் அப்போதும் செய்வேனா என்று கேட்டுக் கொள்வேன். ‘இல்லை’என்ற பதில் வந்தால் நான் மாற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக உணர்வேன்.....”

இது நாம் எல்லோரும் கேட்கவேண்டிய கேள்வியும் கூடத் தான்.

சின்ன சின்னதாய் சில வார்த்தைப் பூக்களை குங்குமம்,குமுதம் போன்ற வார சஞ்சிகைகளில் பார்த்தேன்.உங்களுக்கும் பிடிக்கலாம் என்பதற்காக!

பகை

சிநேகமாய் சிரிக்கும்
குழந்தையைப் பார்க்கும் போது
மறந்தே போகிறது
அதன் குடும்பத்தோடு
எனக்கிருந்த பகை! - ஏ.மூர்த்தி -


அழகு

கோலத்தை விடவும்
கூடுதல் அழகு!
அதனை மிதிப்பதைத் தவிர்த்து
ஒதுங்கி நடைபோடும்
குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் - வி.சிவசங்கர் -


தூது

அடுத்த வீட்டுக்காரனுடன்
தீராத சண்டை.
சமாதானம் பேச
சுவரைத் தாண்டிப் போய்
பூத்திருக்கிறது றோஜா. - ஜி.விஜயலக்‌ஷ்மி -


காலம் கழிதல்

இரவின் நிசப்தத்தை
மெலிதான ஒலியில்
கலைத்துக் கொண்டிருந்த
கடிகாரத்தில் இருந்து
டொக் டொக் என்று
சொட்டிக் கொண்டே இருந்தது காலம். -எஸ்.வி.வேணுகோபாலன்.-