Wednesday, June 12, 2019

வன ருசி

டபோ வுக்குப் போயிருந்தேன்.

மிருகக் காட்சி சாலைகள் குறித்தும் அங்கு அடைத்து வைத்திருக்கும் விலங்குகள் குறித்தும் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. கூடவே சுதந்திரமாக அலைந்து திரியும் விலங்குகளை அடைத்து வைத்திருப்பதற்கு நான் பணம் அளிக்கக் கூடாது என்ற ஒரு வித கறார் மனநிலையும் அதற்குள் எனக்கிருக்கத் தான் செய்தது.

நாய்களைத் தமக்கேற்றாற்போல் வசதியாக்க அதன் ஆண்மையை வேரோடு பிடுங்கி விடும் ‘இரக்க மனிதர்கள்’ குறித்து நன்றாகவே நானறிந்ததும் இம் மனநிலைக்கு ஓர் காரணம்.

இருந்த போதும் டபோவுக்கும் போவதும் அங்குள்ள மிருகக் காட்சிச் சாலையைப் பார்ப்பதும் ஏகோபித்த அபிப்பிராயமாக இருந்ததால் மறுப்புச் சொல்ல இயலாததாயிற்று.

அங்கு சென்றதன் பின்பு ஒரு வனம் சுமந்திருக்கும் இரகசியங்கள் குறித்து ஒரு சிறு ருசி கிடைத்தது.

வனருசி.

ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்த காண்டாமிருகம், ஒட்டகச் சிவிங்கி, சீட்டா புலி, கம்பீரமான சிங்கம், வரிக்குதிரை, யானை, மாட்டுக்கும் ஆட்டுக்கும் இடைப்பட்ட வகையிலான வகைவகையான விலங்கினங்கள், மானுக்கும் மரைக்கும் இடையில் அகப்பட்ட வித விதமான கொம்புகளைக் கொண்டுள்ள செம்மை நிறம் கொண்ட விலங்கினங்கள், குன்று போலும் பெருத்திருந்த ஆமை, ஒரு குழந்தையின் குதூகல மனநிலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த இரண்டுகாலில் எட்டிப் பார்க்கும் பூனை போல தோற்றமும் துறு துறு இயல்பும் கொண்டிருந்த ஒருவித பிராணி மற்றும் அவுஸ்திரேலிய விலங்கினங்கள் என சுமார் 5 கிலோ மீற்றர் சுற்றாடலில் அவை பெரும் நிலப்பரப்பில் சுதந்திரமாக விடப்பட்டிருக்கின்றன.

அவை வனத்தின் சிறு ருசியினை தந்திருந்தது.

ஆபிரிக்கா -

ஆபிரிக்கக் காடுகள், அதன் மக்கள் பற்றிய ஒரு பூதாகரமான விளக்கத்தைக் கண்டு கொள்ளவும் இந்த டபோ சிற்றி உதவியது.

மனித உயிரினம் பரிநாம வளர்ச்சி அடையாதிருந்திருப்பின் நாமும் அவைகளோடு நாளாந்த உணவுக்கும் இனப்பெருக்கத்துக்குமாகவே வாழ்ந்து நம் வாழ்வை முடித்துக் கொண்டிருப்போம்.

புள்ளிகள், நிறங்கள், உருவங்கள், மொழிகள், உணவுகள், வாழிடங்கள் என வெவ்வேறு விதமாய் அமைந்து கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வில் மனித உயிரினம் எத்தனை சிறிது!

அது போக, இந்த வனம் எத்தனை வாழ்வுகளை; வாழ்வின் வகைகளை; அதற்குள்ளும் ஒரு ஒழுங்கினைக் கொண்டிருக்கிறது. ஒன்றிலே ஒன்று தங்கி வாழ்ந்து, ஒன்றுக்காக ஒன்று வாழ்ந்து, இறுதியில் எருவாகி அம்மண்ணுக்கே உணவாகி அழிகின்றன!

இது ஒரு பெருத்த வாழ்வின் இரகசியம் ஒன்றை தனக்குள்ளே பொதித்து வைத்திருக்கிறது.

ஒரு மரத்தினைப் போல!
இலை உதிர்கால மரத்தின் வனப்பும் அது சொல்லும் பாடமும் போல!!

இந்த இலைஉதிர்கால மரங்களில் தான் எத்தனை வண்ண ஜாலம்!

பச்சைப் புல்வெளிகள் தரையிலே படர்ந்திருக்க; முகிலுக்குள்ளே ஒழித்துபிடித்து விளையாடிய படி வெளியே வரும் சூரியக் கதிர்கள், நீல நிற ஆகாயம் மேலே விரிந்திருக்க;  இடையிலே மஞ்சளில் ஆரம்பித்து ஒரேஞ், சிவப்பு, மரூண் என நிற நிறமாய் விரிந்து அதன் வடிவங்களிலும் தோற்றங்களிலும் பல்வேறு தோற்றப்பாடுகளைக் காட்டி, இறுதியிலே காய்ந்து மண்ணிறமாகி தரையிலே உதிர்ந்து, தான் பிறந்த மண்ணுக்கே உரமாகி போகும் அதன் பாதை சொல்லும் பாடம் என்ன?

மக்களுக்கு அது உணர்த்தும் தத்துவம் யாது?

ஒரு வனத்தினைப் போல,
ஒரு மரத்தினைப் போல,

மக்களுக்குப் பொருள் சொல்வார் யாருளர்?

ஒரு வனத்தின் ருசி தரும் வாழ்க்கைப்பாடம் அதன் தத்துவார்த்த பின்னணியில் எத்துணை மலர்ச்சியானது!!

இலையுதிர்கால டபோ,
உனக்கு நன்றி.