Thursday, November 23, 2017

கண்டறியாத கதைகள் - 8 - சாக்குக் கட்டில்


இன்றய காலங்களில் இல்லாது ஒழிந்து போய் விட்டவற்றுள் ஒன்று இந்தச் சாக்குக் கட்டில். இதனைச் சாக்குக் கட்டில் என்றதற்கு காரணம் இந்த கட்டில் ஆரம்ப காலங்களில் சணல் என்ற பயிரில் இருந்து திரிக்கப் படும் நூலான சாக்கு என்ற பலமான ஆனால் மெல்லிய கயிறினால் பின்னப்படும் (பொருட்களைக் கட்டி வைக்கவும் ஏற்றிச் செல்லவும் பயன் படும் பெரிய பைகள் இவற்றினால் செய்யப்படுபவை.) நீளத் துணியினால் இவ் வகைக் கட்டில்கள் செய்யப்பட்டன. 

சணல் கயிற்றினால் பின்னப்படும் அத்தகைய நீளப்பின்னல் வகையான துணிகள் ஒரு ஆளைத் தாங்க வல்ல பலமும் காற்றோட்டத்துக் கேற்ற இடையிடையே துவாரங்களும் கொண்டது. சுவாத்தியத்துக் கேற்ரது.

அநேகமாக இவ்வகைக் கட்டில்கள் விவசாயப் பின்னணிகளைக் கொண்டமைந்த வீடுகளில் பிரபலமாகக் காணப்பட்டன. அதற்குக் காரணம் தோட்டங்களுக்குக் இரவுக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் ஒரு மரத்தின் கீழோ அல்லது தற்காலிகமாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிசையினுள்ளோ எடுத்துச் செல்லவும் வைக்கத் தக்கதுமாக இருக்கும் அதன் இயல்பான அம்சம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுடயதாக இருந்தது. இலகுவான பாரமற்ற தன்மை, இடத்தை பிடிக்காது ஓரமாக வைக்கத் தக்க அதன் பருமன், இலகுவாக எடுத்துச் செல்ல ஏதுவான அதன் இயல்பு என்பன மறு நாள் தம் வீடு நோக்கி கொண்டு வரும் வசதியை அவர்களுக்கு வழங்கியது.

தொழில் செய்து விட்டு வந்து வியர்வையோடும் களைப்போடும் படுக்க வரும் உழைப்பாளிகளுக்கு சணல் கயிற்றினால் பின்னப்பட்ட இவ்வகைக் கட்டில்கள் காற்றினை உட்செல்லவும் வெளிச்செல்லவும் வசதி படைத்திருந்ததால் மிகுந்த பயனுடயதாக இருந்தன. 

படம்: நன்றி; கூகுள் இமேஜ்

சாதாரண வீடுகளில் மாமர, வேப்ப மர நிழல்களிலும் இவ்வகைக் கட்டில்கள் இருந்ததுண்டு.

காலப்போக்கில் நாகரிக வளர்ச்சி சாக்கினை அழகில்லை என்றும்; நாகரிகம் இல்லை என்றும்; மலினமானது என்றும்; ஒதுக்கி விட, அந்த இடத்தை கன்வஸ் துணிகள் பெற்றன.

பெயர் மட்டும் அப்படியே நிலைத்திருக்க துணி மட்டும் மாறிய வரலாறு இவ்வாறு தான். மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது கன்வஸ் துணியினால் ஆன சாக்குக் கட்டிலே! 

காலப் போக்கில் இந்தச் சாக்குக் கட்டிலே இல்லாது போய் விட்டது. அந்த இடத்தை நிரப்ப வேறு மாற்று எதுவும் இல்லாது போய் விட்டது என்ற போதும் ‘சோம்பேறிக் கட்டில்’ என அழைக்கப்படும் Lazy chair / Easy chair பிடித்திருக்கிறது என்று ஒருவாறு சொல்லலாம். இந்த வகைக் கட்டில்கள் உலகெங்கும் ஓர்  அளவு பிரபலமானவை.

படம்; நன்றி; கூகுள் இமேஜ்

ஆனால் இந்தச் சாக்குக் கட்டில்கள் இலங்கையில் சிங்களத் தமிழ் சமூகங்களிடையே மிகப் பிரபலமாக புளக்கத்தில் இருந்து மறைந்து போயின.

இந்தப் புகைப்படம் கொழும்பில் உள்ள ஒரு தொடர்மாடிக்கட்டிடத்தின் கீழே அக் கட்டிடக் காவலாளி பாவிப்பதற்காக ஒரு ஒதுக்குப் புறத்தில் காணப்பட்டது. 

கண்டது 2.10.17. புகைப்படம் எடுத்தது 26.10.17. இடம் கொழும்பு, வெள்ளவத்தை.
புகைப்படம்; யசோதா.பத்மநாதன்.

Wednesday, November 22, 2017

கண்டறியாத கதைகள் - 7 - கைத் தையல் கலை ( Hand Embroidery)


தையலூசி கீறும் காட்சி...


 ஒரு காலத்தில் கைகளினால் தையல் ஊசி கொண்டு பலவித வடிவங்களை தலையணை உறை, மேசைச்சீலை கதிரைச் சீலை போன்றவற்றுக்குப் போட்டு அழகு படுத்தினார்கள். ( art of embroidery ) இன்றய காலங்களில் பலவித உருவ வேலைப்பாடுகளோடு துணிகள் வருவதாலும் தையல் இயந்திரம் அந்த வேலையை துரித கதியில் செய்து முடித்து விடுவதாலும் பெயின்ரிங் அதன் கலைப்பக்கத்தைக் களவாடிக்கொண்டு விட்டதாலும் மக்களிடம் நேரமின்மை காரணமாகவும் தையல் ஊசி கொண்டு பல வண்ண களி நூல்களால் தைக்கும் வழக்கம் இல்லாதொழிந்து போகிறது.

என் சிறிய தாயார் - இந்துவன்ரி - ஒரு காலத்தில் சிறந்த தையல்காரியாக இருந்தார். அவர் கன்னிப் பருவத்தில் இருந்த போது நான் 6,7,8 வயதாக இருந்த அந்தக் காலத்தில் அவ வசித்த வீட்டு சைட் அறை தையலுக்கெனவே 8 இலாச்சிகள் கொண்ட மேசையோடும் நல்ல ஒரு சிங்கர் தையல் இயந்திரத்தோடும் அமைந்திருந்தது. இந்துவன்ரி சுமார் 6 மாதங்கள் கைத்தையல் பழகி இருந்தார். நான் களவாக சென்று ஆராய்ந்து பார்த்து மகிழ்ந்தது நல்ல ஞாபகம். ஒரு தகரப் பெட்டியில் கையால தைக்கத் தக்க சகல அழகியல் அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த தொகுப்பை அவர் அப்போது வைத்திருந்தார்.

 சிறுவயதிலேயே அவற்றைப் பார்த்து இவைகள் எல்லாம் இப்படி எல்லாம் தையலூசியினால் சாதிக்க முடியுமா என்று பார்த்துப் பார்த்து வியந்ததுண்டு. அதனை நானும் ஜிம்மி என்றொரு அழகிய நாயும் மட்டுமே அறிவோம். இவர்கள் யாருக்கும் தெரியாமலே அதனை நான் பார்த்து ரசித்து வியந்து பிறகு அதனை அப்படியே இருந்த படி வைத்து விட்டு போயிருக்கிறேன். இவர்கள் எவரேனும் அறிந்தால் முதுகுத் தோல் பிய்ந்திருக்கும்.

சுமார் 60 / 70 வகைகள் இருக்கக் கூடும் ....

இப்போது இது ஏன் நினைவுக்கு வந்ததென்றால் நான் வவுனியாவுக்கு என் சின்னம்மா வீட்டுக்குப் போயிருந்த போது கதிரைகளுக்கு கதிரைச் சீலைகள் போடப்பட்டிருந்தன. பின்னல் கதிரைகள் வேறு.... இவைகளை இங்கு (சிட்னியில்) காணமுடியுமா என்ன? இங்கு எல்லாமும் சொகுசு மெத்தைக் கதிரைகள். புதைந்து போய் விடுவோம்.. :) ( நான் கடந்த கால நினைவுகளில் சொக்கி போனேன்) அதற்கு பெயின்றால் பூ கீறப்பட்டிருந்தது. ஏன் அன்ரி இப்ப தைக்கிறதில்லையோ என்று கேட்டேன். ஆர் பிள்ளை இப்ப தைக்கினம்... மினைக்கெட்ட வேலை என்றா.  நான் போட்டுத் தரட்டோ எண்டு கேட்டன். சந்தோஷமா துணி வாங்கித் தந்தா. இப்ப ஒரு வெறி மாதிரி தையல் வேலை செய்து கொண்டிருக்கிறன்.
தையலூசிகள் பல திணுசுகளில்
தையலூசியில் நூல் கோர்க்கும் உத்தி...

அழகிய நூல் வெட்டும் கத்தரிக்கோல்


பலவண்ண களிநூல்கள்

பல வண்ண பட்டு, பருத்தி நூல்கள்


ஒரே நேரம். கமராவின் தொழில் நுட்பம் காட்டும் நிற வேறுபாடு...மஞ்சளால் நிறையாத பூக்கள்...


மஞ்சள் நிறம் சேர்த்ததும்....
பெல்ஜியம் நாட்டு மினுங்கும் நூலினால் தைத்தது. கமறா அதன் வண்ணத்தை சரியாகக் காட்டவில்லை... 

அது ஒரு கலை. அது உங்களை மகிழ்ச்சிப் படுத்தும்; மன அழுத்தங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். அது ஒரு உருவாக்கத் திறன். ஆனால் அதன் நுட்பங்கள் எதனையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.வாய்ப்புக் கிட்டவில்லை. என்றாலும் இந்தக் கலையையும் அழிந்து போகும் நம் பாரம்பரியங்களுள் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

கூகுள் இமேஜினுள் பல திணுசுகளில் வடிவங்கள், புற உருவப்படங்கள் எல்லாம் கொட்டிக் கிடக்கின்றன. கூடவே சர்வதேச நாடுகளில் இருந்து பலரும் தைத்த அழகிய வடிவங்களும் உருவ வேலைப்பாடுகளும் நிறையப் பார்க்கக் கிட்டுகின்றன...அங்கிருந்து பெற்ற வடிவங்களில் தான் இவை உருப்பெற்றன.இவைகள் கடந்த இரு வாரங்களில் தைத்தவை. (1.11.17 - 11.11.17க்குள்) தைத்தவை...

இன்றுள்ள பிள்ளைகளுக்குத் தையலூசி தானும் தெரிய வராமல் போகும் ஆபத்தே அதிகம்.....

உலகு அத்தனை வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது;
........................................

பிற்சேர்க்கை...( 23.11.17. ) (நன்றி; கூகுள் இமேஜ் )

ஒரு சர்வதேச நாடொன்றின்  சீமாட்டி தையலூசியினால் செய்த கைவண்ணங்கள்........

நிறத் தெரிவு...
அம்மா எங்கப்பா...

தத்ரூபம்.....
ஏமாற்றமோ...

பொறுமையின் அழகிய வடிவமும் கூட...

அட்சர சுத்தமான வேலை....

என்ன யோசினை...ஜோடிப்பறவைகள்

தனிமை ஏனோ...குஞ்சுகள்...

காத்திருப்பு...

முள் செடியில் அமர்ந்திருக்கும் அழகிய கண்ணே...

Monday, November 6, 2017

என் தேசத்தின் குரல்...

சுமார் 22 வருடங்களின் பின் தாயக மண்ணில் கால் மிதித்தேன்.....1995 யாழ்ப்பாணப் புலப்பெயர்வோடு பிரிந்த மண்......

இடையில் தான் எத்தனை மாற்றங்கள்.....
வாழ்க்கை புரட்டிப் போட்ட வண்ணங்கள் எத்தனை.....

எதனைச் சொல்வது எதனைச் சொல்லக் கூடாது என்று எதுவும் தெரியவில்லை....

என்னைச் சீராட்டி பாராட்டி வளர்த்த சொந்தங்கள் வயதாகி உடல் நலிந்து போனார்கள்... அவர்களைப் பார்க்க வேண்டும்....அப்போதெல்லாம் கால்சட்டை நழுவ நழுவ ஒரு கையால் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் திரிந்த என் ஒன்று விட்ட தம்பி மார் தங்கச்சி மார் எல்லாம் திருமணமாகி பிள்ளை குட்டிகளோடு..... புது மச்சாள் மார்... அவர்களைப் பார்க்க வேண்டும்....

டிஜிட்டல் உலகம் கொண்டுவந்து கொட்டிய குப்பைகளுக்கு அப்பால் நான் வாழ்ந்த வாழ்வியலை அதன் அத்தனை அழகுகளோடும் தரிசிக்க வேண்டும்.

எங்களூர் செம்பாட்டு மண், உண்டு தீர்த்த பழங்கள், ஓடித்திரிந்த இடங்கள், கோயில்கள்....

நான் திரிந்த மண்....நான் கொண்டாடிய நண்பர்கள்... நான் படித்த பள்ளி.... கண்டு அறிவூட்டிய விரிவுரையாளர்கள்....என்னோடு கூட வந்த ஒரு வாழ்வியல்.....

இவைகளைக் காண வேண்டும்.....

பார்த்தேன்; எல்லோரையும்... எல்லாவற்றையும்....

கூடவே போரினால் நலிந்து போயுள்ள ஒரு தேசத்தையும்....

வெளியே பார்க்க தேசம் புதுசாய் தான் இருக்கிறது. புதிதான வீதிகள்.... சிற்றூர் தோறும் கோபுரங்களோடு கோயில்கள்.... பூஞ்சோலைகளோடு புது மெருகு பெற்றுள்ள பாடசாலைகள்....மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள்....புதிது புதிதாக கல்யாண மண்டபங்கள்....

வீதி திருத்த வேலை தவிர்ந்த மற்றெல்லாம் வெளி நாட்டுக் காசுதான் போலும்...

ஆனால்,

வீதிகளில் தென்பகுதி சுற்றுலா வாகனங்கள் மூட்டை முடிச்சுகளுடன். கோயில் மணியோசை கேட்டு கூடுவார் அங்கெவரும் இல்லை; திருவிழாக்களில் சாமி காவ இளையோர் என எவரையும் காணோம். பொடி பொட்டை எண்டு இளைய முகம் எண்டு ஒண்டையும் காணயில்லை....ஆங்காங்கே சில முதிய முகங்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களாலும் இஸ்லாமிய சகோதரர்களாலும் நிறைந்திருக்கிறது. தற்போதய பேராசிரியர்கள் சிலர் நுனிப் புல் மேய்ந்து வரும் சம்பளத்தோடு திருப்தியுற்று தற்பெருமை மிக்க ஜம்பவான்களாக மிளிர்கிறார்கள். பழைய பேராசிரியர்கள் ஆதங்கத்தோடு ஆங்காங்கே ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்; மற்றும் சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், மற்றும் வேறு சிலர் தம் மன நலத்தை பேணும் நிமித்தம் அக்கறைகளை தம் குடும்பத்துக்குள்ளாகச் சுருக்கிக் கொண்டுள்ளார்கள். சில ஓய்வு பெற்ர பேராசிரியர்களைத் தவிர வேறு எங்கும் அர்த்தமுள்ள; சமூக நோக்கிலான உரையாடல்களை  கேட்கக் காணோம்...சொற்ப இளைஞர்கள் பிரக்ஞை பூர்வமாக இல்லாமலும் இல்லை...

தொழில் நுட்பம் கொண்டு வந்த மாற்றங்களின் செல்வாக்கும் நிணைவு கூரற்பாலது தான்.

வீதிகளில் இறங்கினால் நேரத்தோடு போய் நேரத்தோடு வந்து விடு என்று எச்சரிக்கை செய்கிறார்கள். அல்லது துணை ஒன்றை பலவந்தமாகத் திணித்து விடுகிறார்கள். ஒரு வீட்டுக்குச் செல்கிறேன் என்றால் சென்று விட்டேன் என்று இருந்த வீட்டுக்கு தொலைபேசியில் சொன்னால் தான் நின்மதி அடைகிறார்கள். வாள் வெட்டு நடக்கிறது என்று மிரட்டுகிறார்கள்...

என்றாலும் பொதுவாக பயமோ பதட்டமோ இன்றி மக்கள் அன்றாடக் கருமங்களைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாமர சனங்கள் இன்னும் புறணிகளிலும் வேலிச் சண்டைகளிலும் சாதி பிரிவினைகளிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கியே கிடக்கிறார்கள். இவைகளுக்கு எந்த விதத்திலும் போர் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.

சமையல்கட்டு வேலைகள் முடிந்த குடும்பப் பெண்கள் இரவுகளில் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்குள் மூழ்கிப் போய் விடுகிறார்கள்.

குழந்தைகள் குழந்தைமையை இழந்து இளம் தாய்மாரின் கல்விக் கரிசனையில் கரைந்து போயுள்ளனர்.

மண்ணின் ஆத்மா காயப்பட்டுப் போயிருப்பதாக; ஊமைக்காயம் கண்டிருப்பதைப் போல ஓருணர்வு...
...........................

இவை எல்லாவற்றுக்கும் மேலாய் என் தேசத்து ஊர் மண்ணில் கால் வைத்த நேரம் ஏற்பட்ட பரவசம் இருக்கிறதே... அதை எந்தச் சொல் கொண்டு நிரப்ப?
............................

வீட்டில் இறங்கியவுடன் என் கண்ணில் பட்டது ஒரு சாக்குக் கட்டில்.....
இப்போது கூகுள் இமேஜிலும் கிடைக்காத அந்தச் சாக்குக் கட்டில்....

( இனி பாவனைப் பொருள்களின் பட்டியலாகவும் பதிவுகளாகவும்  வருவன நீளும்...)