Monday, March 18, 2013

கல்கி “நடை”

அன்ன நடை, சிங்க நடை, கம்பீர நடை, நளின நடை, மெது நடை, விரைவு நடை என நடைகள் பலவிதம்.

அட, நான் சொல்வது வசனநடை.

சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மூலமாக நம்மை காவியகாலத்துக்குள் வாழ வைத்த பெருமை கல்கியைச் சாரும். எம்மை நூற்றாண்டு தாண்டி பின் நோக்கிக் கூட்டிச் சென்ற நடை அது! கல்கியின் இந்தக் காவிய நடையை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், தெரியாத ஒரு நடையும் அவரிடம் இருந்தது. அதனை நான் சொல்வதை விட அதனை அப்படியே தந்தால் தான் நல்லது.

ஜனவரி 1954ல் அவர் இலங்கைக்கு வந்து திரும்பிய பின் ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாவது அத்தியாயம் இது.

கல்கிநடை!

 இலங்கையில் ஒரு வாரம்


தமிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது; என் இரத்தத்தில் கொதித்துக் கொண்டிருந்தது; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகி விட்டது. “ எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெருவெள்ளம் முதலிய உற்பதங்களாக உருவெடுப்பேன்!” என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத்திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினாலேயே அங்கெல்லாம் மேற்கூறிய உற்பதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன? ஆனால் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை: அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி விட வில்லை. அந்த ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான் என் முன்னால் தென்பட்டன.

ஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனப் பதவிக்குத் தேர்தலுக்கு நிற்கவேண்டும். அல்லது குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும்! இது ஒரு வழி!

ஆனால், இந்த வழியில் சிறிது புகுந்து பார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலைபோல குறுக்கிட்டது. இந்த வழியில் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகு தூரம் முன்னேறி என்னைப் போன்றவர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில் பொய், புளுகு, போர்ஜரி,கள்ளக் கையெழுத்து, கள்ள மார்க்கட்டு, லஞ்சம், சிபாரிசு - ஆகிய மகானுபவர்கள் தான். அடிப்படையில் காங்கிரஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதிலிருந்தே அத்தகையோர் விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய ஆகாஸ சூரர்களுக்கு முன்னால் நாம் எங்கே? ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத் தான் நான் தேட வேண்டியதாயிற்று.

அந்த இரண்டாவது வழி, தமிழ் நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலைபோகிற பிரச்சினையாயிருப்பது உணவுப் பிரச்சினை: அதாவது உணவு இல்லாத பிரச்சினை. உணவு இல்லாத கேடு காரணமாக சில ஸ்திரீகள் குழந்தைகளை விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக் கூட விலைகூறி விற்று விடுவதாகச் செய்திகள் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்றால் வாங்கிக் கொள்ளுகிறவர்கள் அக் குழந்தைகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வாரகாலமாவது வெளிநாட்டுக்குச் சென்று விட்டு வந்தால் அந்த வரையில் உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா? இப்படியே ஒவ்வொருவரும் செய்தால்  அதாவது வெளிநாட்டுக்குப் போய் ஒரு வார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷீ மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா? நாம் திரும்பி வரும் போது ஸ்ரீ ரோச் விக்ரோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா?

எனவே, வெளி நாட்டுக்குப் போவதன் மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித்தேன். எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக். ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத்தேன்.”உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார்: உடனே ஒரு ஸுபர் போர்ட் பம்மர் விமானம் அனுப்பவும்” என்று. “விலாசத்தார் அகப்படவில்லை” என்று தந்தி திரும்பி வந்து விட்டது! அடுத்த படியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, “பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்குக் கடன் தருவதாகச் சொல்லுகிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக்கிறார்களா?  அல்லது “அழுகிய  வாழைப்பழத்தை மாடுகூடத் தின்னாவிட்டால்  புரோகிதருக்குத் தானம் கொடுத்து விடு!” என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்லுகிறார்களா?

இதை நேரில் தெரிந்து கொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமூகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன். ( நாம் இங்கே ‘விஜயம் செய்தல்’ என்று சொல்வதை நமது யாழ்ப்பாணச் சகோதரர்கள் சமூகம் கொடுத்தல் என்று சொல்லுகிறார்கள்) இலங்கை போவதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.

1. கொழும்பு தமிழ் சங்கத்தார் தங்களுடய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொளள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை ‘ஒழுங்கு செய்து’ தருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

2.தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ் திருவிழாவை இலங்கையில் நடத்தவேண்டும் என்ற அழைப்பை ஒப்புக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் இலங்கையில் தமிழ் விழாவை நடத்துவதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகளை ‘ஒழுங்கு செய்து’ விட்டு வரும்படி ஸ்ரீ பெரியசாமித் தூரனையும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. பதினொரு வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்றாலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவறாமல் சொல்லி வந்தேன். அது என்னவென்றால் “உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டுமென்றால் யாழ்ப்பானத்திலே தான் காணவேண்டும்” என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனால், சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடிமருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்றாக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவமாடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பானத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்.

இப்படியாகப் பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லி வந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி  விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிறோம். பன்னிரெண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால்  பதிவு செய்த பத்திரம் கூடக் ‘காலாவதி” ஆகிவிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.அப்படியிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்? மறுபடியும் ஒருதடவை போய் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப்பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனால் தமிழ் கூட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லக் கூடாதென்றால் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது?

எனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ‘சமூகம்’ அளித்து விட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

இலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வது என்பது சமான்யமான காரியமல்ல.’பாஸ்போர்ட்’ வாங்க வேண்டும்: ’விஸா’ வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக் காலத்தில் இலங்கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத்தமிழர்களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடங்களில் குத்திக் கொள்ள வேண்டும்: காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும்.

அம்மை ஊசி என்னை அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டுவிட்டது. ஆனால் காலரா ஊசி குத்திக் கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை ரெலிபோனில் அழைத்து ‘சுரம் வந்திருக்கிறது!’ என்றேன். ‘சும்மா வரட்டும்; பறவாயில்லை: எனக்கு பரபரபாயிருக்கிறதே! என்றேன். ‘ஆப்டித்தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூட புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர் - பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆனால் ஒரு நாளில் அது போய் விடும்!’ என்றார் டாக்டர்.

“ அப்படியா செய்தி? இருக்கட்டும்! இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியது தான்!” என்று முடிவு செய்தேன்.

ஆனால், காலரா ஊசியினால் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப்பற்றி பழிவாங்கும் எண்னத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.

சுரத்துடன் அறையில் படுத்திருந்த போது வெளியே யாரோ சிலர் வந்தார்கள். “கல்கி இருக்கிறாரா?” என்று விசாரித்தது என்காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை  “இருக்கிறார்; ஆனால் அவருக்கு காலரா இனாகுலேஷன்...” என்று சொல்வதற்குள், வந்தவர்கள், சரி, சரி! பிற்பாடு வந்து பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததே இல்லை! “காலரா” என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள்!

இதையெல்லாம்ம் இங்கே விபரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951ம் வருஷம் ஏப்பிரல் மாதத்தில் தமிழ் நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கைக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும் திருவாரூரிலும் கோயம்புத்தூரிலும் நடந்தது போன்ற மாபெரும் தமிழ் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அந்த விழாவுக்கு போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதிகளுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமாயிருக்கும்.


Monday, March 11, 2013

கலாசாரக் கலப்புகள்

இன்றய வேலை நேர இடைவேளையில் வாசிக்கக் கொண்டுபோன ஆனந்தவிகடனில் ராஜு முருகனின் ஆக்கத்தில் வந்திருந்தது ஒரு வாசகம். 

மனைவிக்கும் கணவனுக்குமான புரிதலை ஒரு வீணை திருத்தும் ஒருவரின் வாயிலிருந்து வருவதாக அந்த வாசகம் அமைந்திருந்தது. (ஆ.வி.6.3.13.பக்:90) அது இது தான். ”.....இது ஒரு அண்டஸ்டாண்டிங். ...பெருமாளுக்கும் நமக்கும் இருக்கிற மாதிரி......” 

உனக்கு தெரியும் ’நான் ‘ஆர் என்று. அந்தரங்க ஒழிவு மறைவு அகத்திலும் புறத்திலும் இல்லாத  ஒரு இயல்பாய் இருப்பதற்கான ‘இருக்கும்’  வசதி! இந்த ’இடத்தைப்’ பெற்றுக் கொள்ளும் வரைதான் புது மணத்தம்பதிகளிடையே முரன்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அந்த முரன்பாடுகள் கூட ஒருவித  இருப்புக்கான நகர்ச்சி தான். அதன் பின்,அது ஒரு தனித்துவமான அந்தரங்கப் புரிதல்! நிறையையும் குறைகளையும் பரஸ்பரம் கண்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு வாழ்க்கைப் பாதைக்கு எனக்கு என்றென்றைக்கும் நீ தான் என்று வாழும் ஒரு பந்தம்.( இதனை எழுதுகின்ற போது ஓர் இணையத்தளத்தில் “எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்” என்று ’சின்ன மடுமாதா... குருசுமரத்தடியில்....’ என்ற தலைப்பில் ப.வீ. ஸ்ரீரங்கன் எழுதி இருந்த மென்மையில் ஊறிய அவரின் ஆத்மானுபவ வரி நினைவில் நிழலாடிப் போகிறது.)


இப்படியான புரிதல்கள் ஏனோ சில தம்பதிகளிடத்தே நிகழாமலும்; சில குடும்பங்களுக்குக் கிட்டாமலும் போய் விடுகின்றன. வெளிநாடுகளில் அது இன்னும் இயல்பாகி விடுகிறது. 

பெண்களையும் ஆண்களையும் தமிழ் சமூகம் திருமணத்துக்கு தயாராக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என்னிடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கனவுகளோடு இருக்கிற: கனவுகளோடும் கற்பனைகளோடும் மட்டும் இருக்கிற  இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சங்கடங்களும் ஆளுமை முரண்பாடுகளும் கூட திருமணத்தில் இருக்கிறது என்ற உண்மை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். 

ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வல்லமையை ; விட்டுக் கொடுத்தலின் வெற்றியைப் பற்றி எல்லாம் கூடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனியே பட்டமும் பதவியும் பணமும் சந்தோஷமும் குதூகலமும் தான் வாழ்வென ஒரு மேம்போக்கான எண்ணத்தோடு வாழ வருபவர்களால் குறிப்பாக வெளிநாட்டு வாழ்வில் அவை தெரியப்படுத்தப் படுவதே இல்லை.


நேற்றய தினம் என் வேலைத் தோழி ஒருத்தியின் வீடு குடிபுகுதல் விழா. தெரிந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கு மாத்திரமான அழைப்பிதழ் என்று வருந்தி வருந்தி அழைத்திருந்தாள். அவள் வியற்நாமியப் பெண்.

அப்படி அவள் என்னை அழைத்ததற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான விவாகரத்துப் பெற்றுக் கொண்டு தனித்து வாழ்ந்து கொண்டிருந்த அவளோடு இப்போது இணைந்து வாழ்வது எம்மோடு வேலை செய்யும் ஒரு தமிழ் இளைஞன். அவ் இளைஞனும் திருமணமாகிய சொற்ப வருடங்களுள் விவாக ரத்துப் பெற்றுக் கொண்டவன் தான்.


அவர்கள் இப்போது வீடு வாங்கி குடிபுந்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் "Living together." இங்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற்பட்ட சேர்ந்து வாழும் உறவு. அது அவுதிரேலிய சட்ட திட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும்; சொத்துக்களைச் சேர்ந்து வாங்கவும் சட்டம் அவர்களை அனுமதிக்கிறது. விரும்பிய நேரம் பிரிந்தும் செல்லலாம். அதற்கு அவர்களைச் சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. நீதிமன்றம் ஏறி இறங்கத் தேவை இல்லை. திருமணம் ஆகி விட்டதே என்பதற்காக சேர்ந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.அன்பும் பிணைப்புமே அவர்களை இணைத்து வைத்திருக்கிறதே தவிர, சட்டமும் சமூகமும் அல்ல.  நட்பும் புரிந்துணர்வும் சார்ந்த ஒன்றாக இருக்கும் இந்த உறவுஅது. 

விரும்பாத இடத்து வலிகள் எதுவும் இன்றியே பிரிந்து போகவும் அனுமதிக்கிறது அது. கணவன் மனைவி என்ற சட்ட ரீதியான உறவு மாதிரி இது தேவையற்ற மனக்கிலேசங்களைத் தருவதில்லை: பிடித்திருக்கிறதா இணைந்திருக்கிறோம்: பிடிக்கவில்லையா நண்பர்களாகவே பிரிந்து விடுகிறோம்: அதற்கு தயாரான மனநிலையிலேயே எப்போதும் இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் அன்போடும் உண்மையோடும் நட்போடும் உண்மையான அக்கறையோடும் வாழ்கிறோம் என்கிறார்கள்.

நாம் வேலை செய்கிற பகுதி வேறாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நிகழும் போதெல்லாம் சில தமிழ் சொற்களைக் இப் பெண் என்னிடம் இருந்து கேட்டறிந்து கொள்வாள். தமிழ் பெண்கள் நீளக் கூந்தல் வைத்திருக்கிறார்கள் என்று தானும் நீளக் கூந்தல் வளர்க்கத் தொடங்கி விட்டாள். விதவிதமான சமையல் செய்து அசத்துவாள். வீட்டு உள்ளக அலங்காரங்களில் மிகுந்த சிரத்தை எடுத்து இணையங்களிலும் கடைகளிலும் தேடி தன் அடையாளம் தெரியும் படியாக அலங்கரிப்பாள்.


வாழ்க்கை சந்தர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: வாய்ப்புகள் எங்கனும் கொட்டிக் கிடக்கிறது. காலமோ மிகச் சொற்பமாக இருக்கிறது. வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழவே எல்லோரும் பிரியப்படுகிறார்கள்.அது ஒரு விதமான ஓட்டப் போட்டி மாதிரி. சேர்ந்து ஓட முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். அல்லது அவர்களின் ஓட்டவேகத்தோடு ஓடுபவர்களோடு துணை சேர்ந்து கொள்கிறார்கள். மெல்ல ஓடுகிற தமிழ்பெண்ணைத் தோற்றுப் போனவளாகச் சமூகம் காண்பது தான் ஒரு சோகம்.

இந்த வியற்நாமியப் பெண் ஒரு தமிழ் ஆணின் விருப்பங்களை அப்படிப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தாளா அல்லது அவளது இயல்பே அது தானா என்று தெரியவில்லை. அவள் அதி அற்புதமாக தன் துணையைப் புரிந்து கொள்ள ; அன்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் அல்லது அத்தகைய அன்போடு இருக்கிறாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அத்தனை பட்சத்தோடும் அக்கறையோடும் அன்றைக்கும் அவள் நடந்து கொண்டாள். ’அன்பே’ என அவள் தமிழில் அவனை அழைப்பது அவன் மீதான அவளின் அன்பின் வெளிப்பாடெனவே எனக்குத் தோன்றுகிறது. என்னை அவள் தன் வீட்டுக்கு அழைக்கும் போது ’நீங்கள் வந்தால் ..............மிகுந்த சந்தோஷைப்படுவார்.’ அதற்காகவேனும் வாருங்கள் என்று அழைத்திருந்தாள்.( வேலையில் இருவரும் வேறு வேறு தளங்களில் வேலை செய்கிறார்கள்)


அங்கு நான் போன போது தாமதமாகி விட்டது. பல உணவுகள் பலராலும் பகிரப்பட்டு விட்டன. அங்கு, அவள் வீட்டில், எடுத்த உணவுப் பொருட்களையும் வீட்டின் வடிவமைப்பையுமே இங்கு காண்கிறீர்கள். (இணையத்தளங்களில் தனிப்பட்டவர்களின் படங்களைப் பிரசுரிப்பதில் எனக்குச் சம்மதமில்லாததால் வீட்டின் முழுப்பரிமானங்களோடும் இருக்கின்ற அவர்களுடய பல  படங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன)

இந்தப் பதிவில் நான்கவதாக இருக்கிற படம் ஸ்பிறிங் றோல் என அழைக்கப் படுகிறது.சோறினை சமைத்து அதனை மாவாக அரைத்து தட்டையான பேப்பர்களாகச் செய்து பக்குவப்படுத்தி காயவைத்து சீனக் கடைகளில் விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த வட்டப் பேப்பரை சுடு நீரில் போட்டவுடன் அது வெந்து மென்மையான துணிபோலாகி விடுகிறது. அதற்குள் றால், கரட், வெங்காயத்தாள், மற்றும் பிற மரக்கறிகளை நீள வாக்கில் வெட்டி நடுவில் வைத்து உருட்டி ஒட்டி விடுகிறார்கள். அதனை சோசில் தொட்டு சாப்பிடுகிறார்கள். செய்ய இலகுவானது: சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. வயிற்றை இலகுவில் நிரப்பி விடத்தக்கதும் கூட. நேரமும் கனக்க எடுக்காது. நாம் விருந்தினர் வந்தால் பஜ்ஜி,வடை, பகோடா என்று செய்வது போல இவர்கள் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு இதனைச் செய்து கொடுக்கிறார்கள்.


எனக்கு மிகப்பிடித்திருந்தது அதற்கடுத்ததாக இருந்தது தான் . கரும்புத்துண்டை நடுவில் வைத்து றால் சுவை கொண்ட தசைக் கலவையால் அதனைச் சுற்றி உருட்டி பொரித்து கொடுக்கிறார்கள்.கரும்பின் சுவை றாலிலும் றாலின் சுவை கரும்பிலும் ஊறி அது ஒரு அதிசய சுவையாக இருந்தது. புதினமான ஒரு சாப்பாடு. 


ஏனைய பல உணவுகளையும் பான வகைகளையும் படமெடுப்பது அநாகரிகமாகப் பட்டதால் எடுக்கவில்லை. கீழே இருக்கின்ற படம் அவர்களின் முன் பக்க புல் வெளியில் இருக்கும் செம்மறியாடும் குட்டியும். சீமேந்தில் செய்தது.


கீழே இருக்கும் இந்தப் படம் அவள் வீட்டுப் படிக்கட்டின் மூலையில் அமைந்திருக்கிறது.

கீழே இருக்கும் சூரியனோடு இருக்கிற இந்தப் படம் அவளின் வீட்டின் வரவேற்பறையின் ஒரு பக்க சுவர்.

நாம் எல்லாம் சாமியை தனியான அறையில் வைத்து விட்டு சாமியறை அல்லது பெரியறை என்று பெயரும் இட்டு ஆசாரமாக இருப்போம். அவர்களோ இறந்த அன்புகுரியவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி பூக்களும் வைத்து விட்டுத், தாம் வணங்கும் புத்தரை வீட்டு வரவேற்பறையில் பெரும் இடம் ஒன்று கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனைத்தான் முதல் இரண்டு படங்களிலும் காண்கிறீர்கள்.


HAPPY HARMONY DAY! 
21.03.2013
Sunday, March 3, 2013

Bower Bird

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணாத்திப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
பதினாறு வயதானால் பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்


ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை நினைக்க வைத்தது உலகின் சுறுசுப்பான உயிரினங்கள் பற்றிய சிறு குறிப்பொன்று.மனிதர்கள் சுசுறுப்பானவர்கள் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. உண்மையில் மனிதர்களை விட சுறுசுறுப்பில் மிஞ்சியவர்களாக தேனீக்கள்,பென்குயின்கள்,மண்புழு,கறையான்,Cleaner Wrasse என்ற ஒருவகை மீனினம்,Bower Bird என்ற ஒரு பறவை இனம், ஆபிரிக்கக் காட்டுநாய், பெண்சிங்கம், நீர் நாய், எறும்பு எனப்பட்டியலிடுகிறது அந்தக் குறிப்பு.என்னை ஆச்சரியப்பட வைத்தது Bower Bird என்ற பறவை. சுறுசுறுப்பில் இது ஆறாம் இடத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இன விருத்திக்காக; முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக கூடு கட்டுவது தானே பறவைகளின் இயல்பு.  ஆனால் இந்தப் பறவை தன்னுடய சந்தோஷத்திற்காகக் கூடு கட்டுகிறதாம். அழகிய முறையில் கலாரசனையோடு அது தன் வீட்டை  வடிவமைக்கிறதாம். அதுவும் வழக்கமாகப் பறவைகள் கூடு கட்டப் பயன்படுத்தும் குச்சிகள் தும்புகளால் அல்லாமல் நிறமுள்ள கூழாங்கற்கள், பூக்கள், வளவளப்பான சிப்பிகள், மரத்துண்டுகள், சின்னச் சின்ன வண்ணமான பொருட்களால் தன் கூட்டை தனித்துவமான முறையில் வடிவமைக்கிறதாம். எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தனித்துவமாகத் தெரியத்தக்க விதத்தில் கண்களை ஈர்க்கும் வகையில் அது தன் வீட்டை இணக்கிக் கொள்கிறது என்று அக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


அதிசயம் என்னவென்றால் அது பாடுபட்டு கலாரசனையோடு வீட்டை இணக்கி விட்டு அதன் அழகில், ரசனையில் மயங்கி அதற்கு முன்னால் நின்று ஒரு ஆட்டம் போடுமாம். அந்த ஆட்டத்தில் மயங்கி பெண்பறவை இந்த ஆண்பறவையைத் தேடி  வந்து சேர்ந்து கொள்ளுமாம்!

’கலைஞக் குருவி’ போலும்! ரசிகை சோடி சேர்ந்து கொள்கிறது!

அதிசயமாக இல்லை?