Sunday, May 31, 2020

மரத்தின் பாடல்


ஆதிக்குடி நான்.

என் நிறமூர்த்தத்தில் பதிந்திருக்கிறது
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கிளைபரப்பும் இலைகளில்
மண்ணின் சாறு கலந்திருக்க
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
காற்றுக்குக் கையசைக்கும்
விரல்களில் விழித்திருக்கிறது
அந்த விசித்திர உண்மை.

பூவின் வாசத்தை
குப்பிப் பூக்களில் அடைத்து வைத்து
தேனீக்களை விருந்துக்கழைக்கிறேன்
மனிதர்க்கு ஒழித்து தேனை
குருவிகளுக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.
பூப்பூத்து காய்காய்த்து
பழங்களைத் தின்னக் கொடுக்கையில்
பறவைகளுக்குத் தாயாகிறேன்.
அவைகள் விசிறிச் செல்லும் எச்சங்களில்
என் விருட்சங்களாகும் சூட்சுமம் ஒளிந்திருக்க
திமிர்த்து நிமிர்கிறேன்.
இதுவே நானெனெ நிமிர்ந்து நிற்கிறேன்.

வேறென்ன? யாதொன்றும் நானறியேன்
வேறொன்றும் யானறியேன்.
எனினும் ஏன்
வெட்டி வீழ்த்தினாய் என்னை?

முள்ளிவாய்க்காலில்
முடிந்து போன என் தேசமே......

பொறுத்திரு
சூட்சுமத்தின் இரகசியமென
நீருக்கும் விதைக்கும் நேரத்துக்கும்
நேரப்பட்டிருக்கிறது ஒரு  சந்திப்பு.
பறவை சுமந்த என் விருட்சம்
வீழ்ந்து பெருகும் அந் நாளில்
நான் ஒரு பெரும்
வினையெனவே எழுவேன்.
பெரும் வினையெனவே எழுவேன்

அப்போது என் மண்ணில் வேரூன்றி
சாறுறிஞ்சி மேலேறி
ஆகாயம் நோக்கி நிமிர்ந்து
பிரபஞ்சத்தின் இரகசியக் கோடுகள்
கலந்திருக்கும் அந்த
ஆதி வண்ணத்தின் சாயலில்
கையசைக்கும் இலை மீது
காற்றைப் பிடித்து எழுதுவேன்
வினையெனவே எழுந்தேனென்ற
அந்த ரகசிய  பாடல் ஒன்றை

அதன் பிறகு

பூத்துக் குலுங்குமென் வாழ்வு
மகரந்தங்கள் பிரிந்து பெருக.....

- யசோதா.பத்மநாதன் -
22.5.20.

( பதினொரு வருடங்களுக்கு முன் இம்மாதம் முள்ளிவாய்க்காலில் பெருகி ஓடிய  மரணங்களுக்கும் இழப்புகளுக்கும் இரத்தத்திற்கும் கண்ணீருக்கும்  ஓங்கி ஒலித்த ஒப்பாரிகளுக்கும் பெருமூச்சுக்களுக்குமாக......
அவற்றை நினைவுகளில் ஏந்தி...

Monday, May 18, 2020

பிரிவின் நிறம் செம்மஞ்சள்



பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
கயர்ப்பு நெல்லி சுவையதற்கு.

பச்சை மஞ்சள் சிவப்பு என
நிறம் மாறுகின்றன இலைகள்
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி.....

மஞ்சளில் இருந்து
சிவப்புக்கு நிறம் பெயரும்
இலையின் நுனியில்
அமர்ந்திருக்கிறது
பிரிவின் துயர் கெட்டியாக.

இலையின் நுனியில்
ஒரு காலத்தைப் போல
அமர்ந்திருக்கும்
கருப்பும் சிவப்புமென
வண்ணம் கொண்ட லேடி Bக்கோ
கசப்பினை பிளிந்து
தைல வாசனையை
காற்றில் பரப்புகிறது.

இடம்பெயர்கிறன
மனநிலைகள் மெல்லெனவே..
கற்றில் பரவும்
தைலவாசனை போலவே
பருவகாலத்தைப் பின்தள்ளி
மாற்றங்களை முன்னிறுத்தி
இலைபோல வெகு இயல்பாக....

ரேகையோரமாய் ஊர்ந்து
கிளைரேகையில் பரந்து
இலை மெல்ல
செம்மஞ்சள் ஆகும் தருணம்
ஆயிற்று அமைதியாய்
ஒரு விடுபடல் சம்பவம்

கயர்ப்பு நெல்லி சுவையை
உண்டு உயிர்க்கிறது
வாழ்வு.

அதன் உந்திய உயிர்ப்பில்
விருட்சத்தில் இருந்து
பிரிந்து உதிர்கிறது
இயல்பாக
செம்மஞ்சளேயான
இலையொன்றும்

உடலில் இருந்து உளம் ஒன்றும்...

நம்புங்கள்,
கயர்ப்பு நெல்லி சுவை கொண்ட
பிரிவின் நிறம் செம்மஞ்சள்.
செம்மஞ்சளேயாகும்.

- யசோதா.பத்மநாதன் -
18.5.20.

( வீதியில் சற்று முன்னர் பார்த்த செம்மஞ்சள் இலையொன்று தந்த கவிதை (?) இது )

Wednesday, May 6, 2020

வண்ணாத்திப் பூச்சி மனநிலைகள்....

இன்று ஒரு வண்ணாத்திப் பூச்சி மனநிலை.....
அது ஒரு மலரில் இல்லாமல் தத்தித் தத்தி பறந்து பறந்து வண்ண வண்ணப் பூக்களில் அதன் நிறங்களில் மயங்கி திரியும் ஒரு மனநிலை போல்வது அது....

தானே கொண்டிருக்கும் வண்ணங்களோடு வண்ணப் பூக்களில் அது குந்திக் குந்தி பறக்கும் இந்த பூலோகத்தில் தான் எத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன...

நல்ல காலநிலையும் தான் இன்றைக்கு...20களில் சூரியன். ஆனால் வின்ரர் காலத்து குளிர்மை காற்றில்....

இந்த தேசம் கங்காரு குவாலாக்களுக்கு மாத்திரமல்ல;
இந்த தேசம் றோசாப்பூக்களுக்குரிய தேசமும் தான்....

நின்மதியான தேசமும் கூட.

அரசாங்கம் தன் பிரஜைகளில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறது என்பதை இந்த கொரோனா வைரஸ் காலத்தில் நன்றாகவே உணர முடிந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய கவிஞர் Pansy Rose Napaljaree அவர்கள் எழுதி ஆழியாள் மொழிபெயர்த்த ‘கங்காரு’ என்ற தலைப்பிலான கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. மிகத் தற்செயல் நிகழ்ச்சியாகத் தான் இக்கவிதையை இன்று வாசிக்க நேர்ந்தது.

அக்கவிதை கங்காரு பற்றிச் சொன்னாலும், அது கங்காரு தேசத்திற்குரிய மக்களின் மனநிலைக்கும் பொருந்திப்போவது மொழிபெயர்ப்பில் சிதையாமல் வந்திருப்பது மொழிபெயர்ப்புச் சிறப்பும் தான்.

கங்காரு

சுணையிலிருந்து
நீர் மெல்ல சலசலத்து ஓடுகிறது
மலைகளின் அடிவாரத்தை நோக்கி.

சிவந்த மலர்கள் வளரும்
வாசனையை முகர்ந்த வண்ணம்
கிளையொன்றில் கூடி அமர்ந்திருக்கின்றன
பறவைகள்.

துள்ளித் திரிந்ததில் களைப்புற்ற கங்காரு
ஒரு நிழலில் கால்நீட்டிச் சாய்ந்து கிடக்கிறது
நீரின் சலசலப்பைக் கவனித்தபடி.
தண்ணீர் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகச் சந்தோஷமாய் இருக்கிறது அது
குறிவைத்து ஈட்டி எறிய மனிதர் எவரும்
அங்கில்லை.
ஏகாந்தத்தில்,
சிவந்த மலர்களின் மணத்தை மோந்து
அனுபவித்து மிதந்து
களைப்பு மிக மேவ
அது நித்திரைக்குப் போகிறது மெல்ல.

( நன்றி: கருநாவு; ஆழியாழ்;கன்பரா; 2013.மாற்று வெளியீடு )

சந்தேகமே இல்லை. இது நின்மதியான தேசம்.
பூக்கள் பூக்கும் பருவநிலை.

அதனால் தான் பூக்களும் இத்தனை அழகோ? அத்தனை வகையோ? அதனால் தான் அவுஸ்திரேலியாவை Garden country என்கிறார்களோ என்னவோ...

அனேகமாக எல்லா வீடுகளும் பூந்தோட்டத்தைக் கொண்டு இருக்கிறன. அரசாங்கம் எப்படி மக்களைப் பராமரிக்கிறதோ அது மாதிரி மக்களும் பூந்தோட்டங்களை  மினைக்கெட்டு ஒரு வித அக்கறையோடு; ஆசையோடு பராமரிக்கிறார்கள். அது ஒரு கொண்டாட்ட மனநிலையை அவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறது.

பூ லோகம் இது......
எத்தனை நிறம்.....
எத்தனை வகை....
என்ன ஒரு வாசம்....

சுமார் இரு ( 8.6.2018)  வருடங்களின் முன் நான் தற்செயலாய் நடந்து போன ஒரு பாதையோரத்து வீடொன்றில் பூத்திருந்த றோசாப்பூவை பல காலமாக என் what app ல் Profile Picture ராக வைத்திருந்தேன். அத்தனை கொள்ளை அழகு அந்தப் பூ. இன்றுவரை போனில் memory  கூடி பலவற்றை அழிக்க வேண்டி வந்தாலும் அழிக்காமல் வைத்திருக்கும் அற்புத மலர் அது.

பாதையோரத்து றோசா  8.6.2018
அற்புதமான; அபூர்வ சிருஷ்டி.

பின்பொரு போது அவ்வழியே போன போது அந்த மலர் இருந்த வீட்டையும் செடியையும் காணமுடியாமை ஒரு வித வருத்தத்தையும் பூவை படமாக வைத்திருப்பதில் ஒரு வித மகிழ்ச்சியையும் கலந்தனுபவிக்க நேரிட்டது.

கடந்த இந்த வருட தொடக்கத்தில் Flower Power என்ற பூங்கன்றுகள் மற்றும் பூந்தோட்டம் சம்பந்தமான பொருட்கள் விற்கின்ற கடைக்குப் போன போது, இந்தப் பூவின் ஞாபகார்த்தமாக ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ கணக்காக கிட்டத்தட்ட அது மாதிரியான சாயல் கொண்ட றோசாப் பூங்கன்று ஒன்றை வாங்கி வந்து வைத்திருக்கிறேன். அது வஞ்சகம் இல்லாமல் அழகாகவே பூக்கிறது. என்றாலும் அது மாதிரி வருமா... என்றொரு ஏக்கம் எனக்குள்ளே எப்போதும் இருந்த வண்ணமே இருக்கிறது. பாவம் என் வீட்டு றோசாவுக்கு இப்படி நான் துரோகம் இழைக்கலாகாது தான் எனினும் நான் என்செய்ய? பாழும் மனசு கேக்குதில்லையே....
என்வீட்டு றோசா 23.2.2020


இப்போதெல்லாம் அந்தப் பாதையால் நடந்து போகக் கூடிய தூரத்தில் வேலை அமைந்து போனது ஒரு தற்செயலான ஆசீர்வாதம்; அந்தப் பூ, தங்களுக்கான தேவதைகளிடம் கேட்டுக் கொண்ட விண்ணப்பமோ என்னவோ...

மனித அவசரங்கள் கடைசி நிமிடத்தில் காரில் போய் தொலைக்கவேண்டிய சந்தர்ப்பத்தையே எனக்கு - எனக்கு திட்டமிடும் பாக்கியம் அளிக்கப் படாத சாபத்தால் - எப்பொழுதுமே வாய்த்து விடுகிறது.

இப்படி எத்தனை சந்தர்ப்பங்களை தவற விடுகிறோம் வாழ்க்கையில்....

பத்து நிமிடம் நடக்கிற; புதிய காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் உடல் நிறைய ஏந்திக்கொள்ளுகிற; ஓர் புதிய உற்சாக மனநிலையைத் தருகிற; பூமியை வாகனத்தால் அசுத்தப் படுத்தாத; - தவற விடப்படக் கூடாத தருணங்கள்...

இன்று அந்த அதிஷ்டம் வாய்த்தது;

இன்றய சூரியன் புன்சிரிப்பு நிறைந்த குளிர் புன்னகையோடு வெளிவந்ததாலும் - முதல் சொன்னது போல ஒரு வண்ணாத்திப் பூச்சி மனநிலையை சில கவிதைகள் எனக்கு அளித்து, எனக்குள் இருந்த சிறுமியை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி விட்டதாலும், நடந்து போய் வருவதாக ஒரு தீர்மானம்.

மீண்டும் அதே பாதைவழி.

பாதை எங்கிலும் பல வகை மலர்கூட்டம்.

என்ன ஆச்சரியம்! எதிர்பாராத விதமாக அந்த மலர்செடி வளர்ந்து மீண்டும் பூத்திருந்தது. அந்த வீட்டுக்காரர் முன்னர் அதனைக் கத்தரித்து விட்டிருக்க வேண்டும். புதிதாகத் துளிர்விட்டு இந்த இலையுதிர்கால பருவநிலையில் செழித்து வளர்ந்திருந்தது அச்செடி.

அவைகளை மீண்டும் மனசாலும் கமறாவாலும் கைப்பற்றிக் கொண்டு வந்த இந்த நாளை இங்கு பதிவு செய்து விடும் ஒரு எளிய பிரயத்தனம் தான் இது!





அதே பாதையோரத்து றோசாச் செடி பூத்தமலர் 6.5.2020


வேறென்ன எனக்குள் இருக்கும் உசுப்பி விடப்பட்ட சிறுமியின் சின்னப் புன்னகையும் தான்.

மலரைக் கண்டடைந்ததில் அதன் செடித்தாய்க்கு ஹலோ சொன்னதில் தொடங்கி இருக்கிறது இன்றய காலை....

Tuesday, May 5, 2020

உள்ளார உள்ளார; உல்லாலா உல்லாலா........


ஒரு மயிர் கொட்டியைக் கண்டால்
அதை வாழ விடுங்கள்
அதற்கும் இருக்கிறது
புத்தம் புதிதாய் ஒரு
வண்ணாத்திப் பூச்சி வாழ்க்கை

மொட்டுக்களையும் ஏன் பறிக்கிறீர்கள்?
 நிற மூர்த்தங்களையும்
வாசத்தின் கூறுகளையும் கொண்டு
குவலயத்துக்கான அழகை அது
கருத்தரித்துக் கொண்டிருக்கிறது
 தெரியாதா?

மண்புழுவைக் கண்டால்
அருவருப்பானேன்?
உங்கள் மண்ணை அது
ஊதியமில்லாமல் உழுகிறதே
புரிவதே இல்லையா?

கரப்பானைக் கண்டால்
காத தூரம் ஓடுவானேன்?
உங்களை ஒரு போதுமது
கடித்து விடுவதில்லையே!

முதியோரக் கண்டால்
புன்னகைக்காமல் போவதேன்?
உங்கள் எதிர்காலம் அங்கே
கைகுலுக்குவதை
நீங்கள் காண்பதேயில்லையா?

கடைசியாக ஒன்று,
யாரோ பயிர் செய்த
மாணிக்க வாசகங்களை
இலவசமாய் அறுவடை செய்து போகிறீர்களே
ஒரு கொமண்ட் போட்டுவிட்டுப் போகலாகாதா?

யசோதா.பத்மநாதன்
5.5.2020. மதியம். 1.00 மணி.  :)

( சற்றுமுன் கடைத்தெருவுக்குப் போன போது தன்னந்தனியாக ஒரு மசுக்குட்டி நான் போன பாதையை ; இப்பதான் ஒரு அரை மணி நேரம் முன்பு கடந்தது. அது தான் இந்தக் கவிதையை ( ? ) எனக்குள் விதைத்து விட்டுப் போனது. பாவம் ; சன நெருக்கடியான தெருவில் தப்பிச்சுதோ தெரியாது....)

( மேலும், ஒரு நல்ல கவிதை வாசிப்பவரையும் எழுதத் தூண்டும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். கடந்த சில நாட்களாக சில கவிதைகளோடு எனக்கும் சகவாசம். அது எங்கு போனாலும் என்னோடு கூடவே வருகிறது. எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை அது தட்டி எழுப்பி விட்டது. அதன் விளைவு தான் இது எல்லாம்....அவரை உங்களுக்கு தகுந்தபடி அறிமுகப்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அது வரை இந்தக் கத்துக்குட்டித் தனங்களை எல்லாம் நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். :))

Saturday, May 2, 2020

கொரோனாவை நினைத்த படி...



கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு....

குர் குர் சத்தங்கள்...
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்...
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்...
குறு குறு பார்வைகள்...
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்...
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்...

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு...
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை...
தாயாகும் தந்தைமை...
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து....
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து....
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து...
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து
இன்னும் இன்னும்....
....................

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல....

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு....

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையைப்
பார்த்த சலிப்பு...

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்
2.5.2020.