Tuesday, April 26, 2011

பதிவொன்றின் பயணம்


1990ம் ஆண்டின் இறுதிப் பகுதி.

என் பல்கலைக் கழக வாழ்வின் இறுதியாண்டு.

நான்கு வருட கற்கை நெறி நாட்டின் போர் காரணமாக ஒரு வருடம் தள்ளிப் போய் இருந்தது.
சிறப்புத் துறையாக வரலாறை ஒரு பாடமாக எடுத்ததால் இறுதியாண்டில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.

சிறப்புத் துறையாய் வரலாறை எடுத்துக் கொண்டதே ஒரு தற்செயல் தான்.சில தற்செயல்கள் எப்படி சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையையே நிர்ணயித்து விடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சியாகவே எனக்கிருக்கிறது.

என் சிறு வயதுப் பிராயங்களில் படிப்பில் எனக்கு அத்தனை நாட்டம் இருந்திருக்கவில்லை.படிக்காமலே எடுத்த கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் (G.C.E.O/L) என், கற்பித்தலில் விசுவாசம் உள்ள ஆசிரியர்களால் - அதில் சிறப்பாகச் சுபத்திரா ரீச்சரைச் சொல்ல வேண்டும். வகுப்பறைகளில் கேட்ட கேள்வி ஞானத்தைக் கொண்டும் கொஞ்சம் கொஞ்சம் வற்புறுத்தலுக்காகப் படித்ததைக் கொண்டும் 8 பாடங்களில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் C தரத்துச் சித்தியினைப் பெற்றதன் விளைவாக ( தண்டனையாக இப்போது ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ வேண்டி வந்ததை என்னவென்பது?:))கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் (G.C.E.A/L)கலைப் பிரிவை பலரின் ஏளனத்தின் மத்தியிலும் தேர்ந்தெடுத்தேன்.
அக்காலங்களில் வர்த்தகப் பிரிவும் கணிதப் பிரிவும் விஞ்ஞானப் பிரிவுமே பிரபலமாய் இருந்தது.(இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்)

அதன் பின்பு தான் உண்மையில் கல்வி மீது நாட்டம் பிறந்தது.அதிபர் லோகசிங்கம் அவர்களின் முறையான கண்காணிப்பில்;ரியூசன் காச்சலே அண்டவிடாமல் காத்துக் கொண்டு எம்மை ஆகர்சித்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலில் பல்கலைக்கழக வாசம் முதல் தடவையிலேயே கிட்டியது.எங்கள் பாடசாலை வவுனியா மாவட்டத்தில் முதலாவது என்ற பெருமிதத்தை அது என் பாடசாலைக்கு வழங்கியிருந்தது.என் ஆசிரியர்களின் அன்றய பெருமிதம் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதது.

என்றென்றைக்கும் நான் என் ஆசிரியர்களுக்கும் என் பாடசாலைக்கும் கடமைப் பட்டவள்.

யாழ்பல்கலைக் கழகத்துக்குப் போன போது மீண்டும் பாடத்தெரிவு பற்றிய குழப்பம்.5 வயதில் கோயில் மண்டபத்தில் அரிசியில் எழுதிய அ நாவும் கோயில் பரீட்சயமும் ஆயுட் பரியந்தம் தொடரத் தக்கதே என்ற உண்மை புரிந்த போது அதனைத் தவிர்த்து வேறேதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆவல் எழுந்தது.

10ம் வகுப்பில் சமூகக்கல்வி கற்பித்த யோகி ரீச்சரின் அழகான கற்பித்தல் எனக்கு சமூகவியலின் பால் தீராத ஆவலை உண்டாக்கி இருந்து. ஆனாலும் உயர்தர வகுப்புக்கு நான் வந்த போது அவ்வாசிரியரின் இடமாற்றமும் புதிதாக ஒருவரும் நியமிக்கப் படாமையும் அப்பாடத்தை தொடர்ந்து எடுக்க முடியாமைக்கு ஒரு காரணமாயிற்று. ஆனாலும் அப்பாடம் பற்றிய ஆசை மனதோடு இருந்தது.

அப்போது பல்கலைக் கழகத்தில் கலைப் பீட மாணவர்கள் பொருளாதாரத்தை சிறப்புப் பாடமாக எடுக்கும் காச்சல் ஒன்று நிலவியிருந்தமையால் என் சக தோழிகள் அதற்குள் சென்றார்கள். நான் புவியியலின் பால் கரிசனை காட்டினேன். என்றாலும் அது அடிப்படை தகைமை இல்லாததால் எடுக்க அனுமதி கிட்டவில்லை.ஆனாலும் அப்போது ஒரு வார காலம் விருப்பமான விரிவுரைகளுக்குச் சென்று பார்த்து பாட நெறியைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு நடைமுறை இருந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஓர் 1984ம் ஆண்டு ஒக்ரோபர் மழைக்காலம்.நான் தங்கியிருந்த அறைக்கப்பால் உள்ள அடுத்த வீட்டின் பின் புற அறையில் 4 மட்டக்களப்புப் பெண்கள் தங்கிக் கல்விகற்றுக் கொண்டிருந்தார்கள். ராகிங் பயத்தினால் நாங்கள் எல்லோரும் கூட்டாகவே சேர்ந்து வளாகத்துக்குள் செல்வது வழக்கம். அங்கிருந்த சக மாணவிகள் ஏஞ்சலா, கிரிசாந்தி,மற்றும் இருவருமாக போன ஒரு நாளில் சீனிய மாணவர்களின் ராகிங்கிற்குப் பயந்து ஓடி ஒதுங்கிய விரிவுரை வகுப்பு வரலாறு.

வரலாறு நன்கே பிடிபட, அந்த நாள் ஒரு காரணமாயிற்று. தற்செயலான சந்தர்ப்பங்கள் இப்படித்தான் அமைந்து விடுகிறது.எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாமல் துணிந்து வரலாறை ஒரு பாடமாக ஒரு இலக்குமற்று விருப்பம் ஒன்றே காரணமாய் எடுத்தேன்.

பின்னாளில் அதனைச் சிறப்புப் பாடமாக எடுக்கும் அளவுக்கு அதில் ஆர்வம் கூடியது. பெறுபேறும் நல்லவிதமாய் அமைந்திருந்தது.வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சொல்வது மாதிரி பாடமாக்கல்களோ ஞாபகம் வைத்திருக்க வேண்டிய இலக்கங்களோ இல்லாதது அதன் மீது நாட்டம் கொள்ள என்னை இன்னும் தூண்டியது.நாடுகளும் மக்களும் பண்பாடும் வாழ்வியலுமாக எல்லாம் சேர்ந்த ஒரு பார்சலாக வரலாறு இருந்தது என்பது தான் உண்மை.

நாங்கள் இருவர் ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். என் தோழி பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தாள். அவளது இன்னொரு தோழியும் (வாணி)அப்போது எங்கள் தோழியாக இருந்தாள். அவளும் பொருளாதாரத்தையே ஒரு பாடமாக எடுத்திருந்தாள். அதில் என் தோழி அப்பாடத்தில் சித்தியடையாததால் விரக்தியுற்று பல்கலைக் கழகத்தையே உதறி விட்டு ஆசிரியப் பணியில் புகுந்து கொண்டாள். மற்றய தோழி கனடா பயணமானாள். நான் சிறப்புத் துறை நோக்கி முன்னேறினேன்.

2 மொழி தெரிபவன் இரண்டு மனிதன் என்பார்கள்.ஏனென்றால் அவனுக்கு 2 விதமான வாழ்க்கை முறைகள் தெரியும்.2 விதமான உலகம் புரியும். ஆனால் வரலாறு படிப்பவனுக்கு நாடுகளின் எழுச்சியும் வீச்சியும் அதற்கான காரணங்களும் ஒவ்வொரு நாடுகளில் வாழ்க்கை முறை பண்பாடுகளும், அழகும் அவலட்சணமும் தெரியும்.

இந்த இடத்தில் - பல ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அனுபவத்தோடும் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.யாழ்ப்பாணத்து நிலம் வரண்ட நிலப்பரப்புக்குரியது.சுண்ணாம்புக் கற்கள் நிறைந்தது. ஆறு குளம் அற்றது.பிரயாசையான விவசாயம் இருக்கின்ற போதும், அதன் வாழ்க்கையும் பொருளாதாரமும் கல்வியையே மூலாதாரமாகக் கொண்டது.

அதனால் தானோ என்னவோ பணவருவாயையும் மதிப்பையும் ஒருங்கே தரக் கூடிய டொக்டர், எஜ்சினியர், எக்கவுண்டன் போன்ற பதவிகளைத் தரும் கல்வித்துறைகள் மிகுந்த பிரபலமாக விளங்கின. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடம் போதிய வாய்ப்புகள் வளங்கள் இல்லாமையும் இதற்கு இன்னொரு காரணமே. ஆனாலும் இயல்பான நாட்டம்,திறமை இல்லாமல் பல மாணவர்கள் அப்பாடங்களுக்குள் சென்று வீணே தம் எதிர்காலத்தைப் பாழடிக்கின்றனர்.

கலைத் துறை சார்ந்து எல்லோரிடமும் ஓர் ஏளனப் பார்வையே இருந்த போதிலும்;அப்படியான நிலைமைகளை நானும் பல தடவை எதிர் கொண்ட போதிலும்; என்னை அது எதுவும் பாதிக்க வில்லை. காரணம் எனக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்ததாலும் அதில் இருந்த நாட்டத்தின் நிமித்தமும் எதுவும் எதற்கும் குறைவில்லை என்ற என் தனி மனித சித்தாந்தமும் அதற்கு மிகவும் கை கொடுத்தன. எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு வீட்டில் இருந்த சுதந்திரத்தையும் கட்டாயமாக இங்கு சொல்லியாக வேண்டும்.இப்படியாக எனக்கு அதில் இருந்த ஈடு பாட்டின் காரணமாகத் துணிந்து அப்பாடத்தை எடுத்தது பின்னாளில் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்பதை இங்கு சொல்லித் தானாக வேண்டும்.

பின் நாளில் சிட்னிக்கு வரும் வரை உயர்வான இடத்தையே அத்துறை எனக்குத் தந்திருந்தது.

வீணான பகட்டுக்கும் பெயருக்கும் ஏன் நம் சமூகம் ஆட்படுகின்றது என்பதும்;அதற்கு ஏன் பயந்து சாகிறது என்பதும் கேள்வி கேட்கப் பட வேண்டிய விடயங்கள் ஆகும்.எத்தனையோ மாணவர்களின் எதிர் காலம் அதனால் மண்னாகிப் போயிருக்கிறது.என் மைத்துணன் ஒருவன் இத்தகையவர்களில் ஒருவன்.

சரி அது போகட்டும்.

இது வரலாறு எழுத வந்த வரலாறு.

வரலாறு படித்ததால் இது ஒரு சிக்கல்.எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென்று தெரியவில்லை.சுருக்கமாய் எதையும் சொல்ல முடிவதில்லை:)சுருக்கமாய் சொன்னால் ஏதோ பிஸ்னஸ் ரோக் மாதிரி ஒரு திருப்தி வருவதில்லை.

இது ’தற்செயல்கள்’ எப்படி வாழ்வை சில வேளைகளில் நிர்ணயித்து விடுகிறது என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணமே.

மிகுதியை அடுத்த வாரம் தொடர்கிறேன்.

இது நான் சொல்ல வந்த விடயம் ஒன்றுக்கான பின்னணியே!

தொடரும்....

Monday, April 18, 2011

கை படாத பழத் துண்டு


அண்மையில் அவுஸ்திரேலியப் பார்ட்டி ஒன்றுக்குப் போனேன்.

வெளி நாட்டினரின் பார்ட்டிகளைப் பற்றி தனியாகவே ஒரு பதிவெழுதலாம்.இது அதைப் பற்றியதல்ல வெனினும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு நீங்கள் இடம் தர வேண்டும்.

அவுஸ்திரேலியர்களுடய பார்ட்டிகளுக்குப் போனால் அங்கே வைக்கப் பட்டிருக்கின்ற உணவு வகைகளும் அலங்காரங்களும் தனியொரு விதமாக இருக்கும்.ஒரு பக்கம் பேக் செய்யப் பட்ட உணவு வகைகள் இருக்கும். அதன் அடுத்த கட்டமாக சண்ட்விட்ச்சுகள் அழகாக வெட்டப் பட்டு அடுக்கப் பட்டிருக்கும். அதனைத் தாண்டி வர, பேக் செய்யப் பட்ட உப்பு பிஸ்கட்டுகளும் டிப் என்று சொல்லப் படுகின்ற வகையறாக்களும் சீஸ் கட்டிகளும் இருக்கும். அதனையும் தாண்டி வந்தால் பழவகைகள் அழகாக தோலோடு கைபாடாது நறுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

அதிலும் பழ வகையறாக்கள் நிறம்,பழக்குடும்பம்,சுவை,என்று வகை பிரிக்கப் பட்டு பெரிய வாயகன்ற தட்டில் வைக்கப் பட்டிருக்கும்.உதாரணமாக றொக்மிலன், வோட்டர் மிலன்,ஹணிமிலன் ஒரு வகை.வாழைப்பழம், மண்டரின், திராட்சை போன்ற விதையற்ற - அப்படியே நாமாக உரித்துச் சாப்பிடக் கூடிய பழ வகைகள் இன்னொரு வகை.தோடம் பழம் தனியொரு வகை.இவ்வாறு அவைகளும் பிரிக்கப் பட்டிருக்கும்.

அதனையும் தாண்டிப் போக,உணவுக்குப் பின்பான இனிப்பு வர்க்கங்கள் கொலு வீற்றிருக்கும்.பிளேற்றுகள், கப்புகள், கத்திகள்,கரண்டிகள்,முள்ளுக் கரண்டிகள் அவையவற்றுக்குரிய இடங்களில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கும்.

சம்பெயின்,திராட்சைரசம்,மதுரசம்,பழரசம்,தண்ணீர் இவை இருக்கிற இடம் தனியாக.

அவரவர் தனக்குத் தனக்குப் பிடித்தவற்றை தமக்குத் தேவையான நேரங்களில் எடுத்த படி தத்தமக்குப் பிடித்த இடங்களில் உட்கார்வர்.அண்மையில் சென்ற பார்ட்டி ஒன்றில் மேற்கூறிய வண்ணமாக உணவுப் பொருட்கள் இடம் பிடித்திருக்க, மென்மையான ஒளியில், வண்ணமான கலவையில்,ஒரே ரசனை கொண்ட பல்லின மக்களை கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது.

அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளும் தனித்தன்மை மிக்கதே!அவரவருக்கு செளகரிகமான ஆடைகள்.அவரவருக்குப் பிடித்த படி அவரவர்.நீளக் கூந்தல் கொண்ட ஆண்,ஆணைப் போல தலைமயிரை வெட்டிக் கொண்ட பெண்,நீல,மண்ணிற,பச்சை, கறுப்புக் கண்களைக் கொண்டோர், கறுப்பு, றோசாவர்ணம், மஞ்சள், மண்ணிற மனிதர்கள்.

இந்த வேறுபாடுகள் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர்களுக்குள்ளாக ஒளிர்ந்த படி இருக்கும் தனித்தன்மைகளே அங்கு பிரதானமாய்; பிடித்தமானதாய்;பிரகாசமானதாய்;சுதந்திரம் மிக்கதாய் ....அவையே அங்கு ஒளிரக் கண்டேன்.அவர்களைச் சுற்றி அவ்விடயங்களைக் கேட்கும்,பகிரும் ஆர்வத்தோடு சிலர். அது அழகானதொரு தனி வேறுலகம்.

கலைகளை நேசிக்கும் கலைஞர்கள்....
பெண்களை நேசிக்கும் பெண்கள்....
ஆண்களை நேசிக்கும் ஆண்கள்......
சுதந்திரத்தை நேசிப்போர்.....
இயற்கையை ரசிப்பவர்......
தன்னைத் தேடித்திரிவோர்.......
சேவையில் சுகம் காண்போர்.....
மிருகங்களின் உரிமைக்காகப் போராடுவோர்...
மனிதமே மகத்தானது என்போர்....
ஆத்மீகத்தில் விடை கண்டவர்கள்...
இவற்றில் எல்லாம் கடவுளைக் காண்போர்...
புத்திஜீவிகள், பத்திரிகையாளர் என நீண்ட பட்டியல் அது.

இப்படியாக அது ஒரு சுவையான பழக் கலவை.

இங்கு நான் போனேன் என்பதற்காகவே காலாசாரத்தின் காவலர்கள் என்னோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டனர்.அதனால் அதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.

அங்கு வெட்டி வைக்கப் பட்டிருந்த பழக்கலவையில் இருந்த அழகு என்னவென்றால் அவை கைபடாது வெட்டி வைக்கப் பட்டிருந்தமை தான்.அந்தப் பென்னாம் பெரிய விதைகள் இல்லாத றொக் மிலன் பாதியாகக் கீறப் பட்டு அது மேலும் நீளவாட்டாகக் கீறப்பட்டு பின்னர் அது குறுக்குத் துண்டுகளாக தோலோடு வெட்டி வைக்கப் பட்டிருந்தது.சிவப்பும் பச்சையும் கலந்த அதன் வண்ணம் மேலும் வெளிச்சத்தில் பிரகாசிக்க,அந்தக் கைபடாத தன்மை அதற்கொரு வசீகரத்தை அளித்துக் கொண்டிருந்தது.

நாம் கூட அதில் பழப்பக்கத்தை கை வைக்காமலே தோலினைப் பிடித்த படி உண்டு களிக்க முடியும்.

அதன் சுவை தனி.முள் இல்லா றோஜா மாதிரி இது கைபடாக் கனி.:)

நம்முடைய பார்ட்டிகள்;அதில் நாம் பேசும் விடயங்கள்;ஆடைகளில்,ஆபரணங்களில் நாம் காட்டும் அதீதம்,பணம், தொழில்,அந்தஸ்து இவற்றைச் சுற்றியதான சூழல்,உணவுகளில் வழிந்து நிற்கும் எண்ணை,அதில் நாம் சேர்க்கும் மசாலா வகையறாக்கள்,மூன்று வீடு வரை பரவும் சாப்பாட்டு மணம்-இவை பற்றி நான் பேசவில்லை.சும்மா நினைவுக்கு வந்தது அவ்வளவு தான்.:)அதனால் என்னோடு யாரும் கோவிக்க வேண்டாம்.

அந்தக் கைபாடாமல் வெட்டப் பட்ட பழம் போல ஒரு பாடலை இன்று உங்களோடு பகிர ஆசை.

புறநானூறு - பாடல் 57. பாடிய புலவன்; காவிரிப்பூம் பட்டிணத்து காரிக் கண்ணனார்.

பாடப் பெற்றவர்;பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன்.

“வல்லார் ஆயினும்,வல்லுனர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என் எனின்
நீயே,பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு

இறங்கு கதிர்க் களனி நின் இளையரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு;நின்

நெடுநல் யானைக்குக் கந்து ஆற் றாவே!”

சொல் விளக்கம்;

வல்லார்- கல்வித்திறம் அற்றவர், வல்லுனர்-திறன் உடையவர்கள்,மாயோன் - திருமால்,மாறன் - பாண்டியன் நன்மாறன்,இறங்கு கதிர் - முற்றிச் சாய்ந்த நெற்கதிர்,இளையர் - வீரர், நைக்க - அழிக்க,ஒன்னார் - பகைவர், செகுத்தல் - கொல்லுதல், கடிமரம் - காவல் மரம்,தடிதல் - அழித்தல்,ஓம்பு - தவிர், கந்து - கட்டுத் தறி.

சாரம்;

இப் புலவன் அயல் நாட்டுப் புலவன். பாண்டிய மன்னன் தன் தாய் நாட்டின் மீது படையெடுக்கப் போகிறான் என்ற செய்து காதில் வந்து விழுகிறது.புலவனுக்குத் தெரியும் பாண்டியனின் படைபலம்,மற்றும் வீரம். போர் ஒன்று வந்தால் நாடு என்னவாகும் என்பதையும் ஏழைப் புலவன் நன்கறிவான்.

தன் நாட்டில் இருந்து இன் நாட்டுக்கு கால் நடையாக வருகிறான் புலவன்.வந்து மன்னனைக் காண்கிறான். கண்டு இவ்வாறு உரைக்கிறான்.

வல்லவர்களும் சரி எளியவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள். மாயோனை ஒத்த புகழுக்குரிய,அவ்வாறு உரைக்கத் தக்க சிறப்புடையவன் நீ.உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது.

அது என்னவென்றால்,பிறருடைய நாட்டை நீ கவருகின்ற போது (நீ என்னவோ அதனைச் செய்யத் தான் போகிறாய்,அதனால்)உன் வீரர்கள் முற்றித் தலை சாய்த்துக் கிடக்கும் நெற்கதிர்கள், மற்றும் வயல் வெளிகளை அழித்துக் கொள்ளையடிப்பதாயின் கொள்ளையிடுக;அந்த நலம் விளைகின்ற பெரிய ஊரை நெருப்பிட்டு அழிக்க விரும்பினால் அதனையும் செய்க;நீயும் உன் வீரர்களும் உங்கள் ஒளி பொருந்திய நெடிய வேலால் போர் வீரர்களைச் சாய்ப்பினும் சாய்க்க;

ஆனால்,அந்தக் காவல் மரத்தை மட்டும் ஒன்றும் செய்து விடாதே! அது உன்னுடய யானையைக் கட்டுவதற்குக் கூட பலமில்லாதது மன்னவா!


இப் புலவனின் தாய்நாட்டின் மீதான பாசம் என்னை அலைக்கழித்த படியே இருக்கிறது.

உங்களுக்கு எப்படி?

Monday, April 11, 2011

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!


புறநானூறு படித்தேன்.

அதன் மூலமும் தெளிவுரையும் மூலம் சிதைவுறாதபடி அதனை தமிழுக்கு வழங்கி இருக்கிறார் வ.த. சுப்பிரமணியம் அவர்கள்.

முன்னரெல்லாம் யார் யாரோ எல்லாம் படித்துத் தம் ரசனைக்கேற்ப அவற்றை அடையாளம் கண்டு ‘தம்முடய சமையலாக’அதைத் தந்த போது இதுவல்லவோ சுவை என்று மகிழ்ந்திருக்கிறேன்.

அண்மையில் மு.க.வின் சங்கத்தமிழ் படித்த போது அதன் மூலத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அது தூண்டியது.(இதற்காக யாரும் என்னோடு சண்டைக்கு வந்து விட வேண்டாம்.:)

நம்ப முடிகிறதா? அவுஸ்திரேலிய கவுன்சில் நூலகத்தில் தமிழுக்கென்று ஒதுக்கப் பட்டிருக்கிறது ஒரு பகுதி. அங்கு இருக்கிறது ‘புறநானூறு மூலமும் தெளிவுரையும்’.

ஒரு புது வாழ்க்கைக்குள் காலடி வைத்ததைப் போல உணர்கிறேன்.

உங்கள் எவருக்கேனும் இலக்கியத்தின் பால் ஈடுபாடு இருக்குமானால் முதலில் வெற்றிடமாக வெறும் தாளாக இருக்கும் உள்ளத்துக்குள் முதலில் மூல நூலை படித்து முதலில் உங்கள் சமையலைச் செய்யுங்கள்.அதன் மூலத்தின் சுவை உங்களால் முதலில் ஆக்கப் பெறட்டும். வேறு ஆன்றோர்களின் சிந்தனை புகுவதற்கு முதல் மூலத்தை நாம் படித்து நம் சிந்தனையை சுயமாய் மொழிபெயர்த்து வளம்படுத்திக் கொள்ள வேண்டியது முதலில் முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏனெனில் உங்கள் கண்களால் மூலத்தைப் பார்த்து உணர்வதைப் போல மற்றவர் கண்களால் அதனைக் கண்டுணர்ந்திருக்க முடியாது. மேலும்,உங்களுக்குப் பிடித்திருக்கின்ற ஒன்று மற்றவருக்கு பிடிக்காது போயிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?

ஒரு முறை றீடேர்ஸ் டைஜஸ்ட் டில் படித்த ஒரு சம்பவம் இது.ஒரு குழந்தை 3,4, வயதானவள். சற்று தள்ளி உள்ள பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போவது வழக்கம்.ஒரு நாள் அவள் விளையாடப் போய் சற்று நேரத்துக்கப்பால் மழை வரும் அறிகுறி. சட்டென இருண்டு மின்னலும் இடியுமாக ஊர் பெரு மழை ஒன்றுக்குத் தயாராகி விட்டது.

தாயாருக்கு குழந்தை பற்றிய எண்ணம் எழ,அவசர அவசரமாகக் காரோடு குழந்தை போன வீட்டுக்கு ஓடிப் போனாள்.மகளோ பாதித் தூரம் வந்து கொண்டிருந்தாள். மின்னலும் இடியும் இருட்டுமாக இருந்த அத்தருணம் அக்குழந்தையோ சற்றும் பயமின்றி மின்னல் எறிக்கும் போதெல்லாம் நடப்பதை நிறுத்தி புன்னகைத்து விட்டு மின்னல் மறைந்ததும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிட்ருந்தாள்.

தாய்க்கு அது புரியாத புதிராக இருக்க, அவளை சென்றடைந்ததும் ‘ஏன் மகளே மின்னலுக்குச் சிரித்தாய் ?’என்று கேட்ட்டாள்.

மகள் பதிலளித்தாள்.”கடவுள் போட்டோ எடுக்கும் போது நான் மகிழ்ச்சியாகப் புன்னகைக்கத் தானே வேண்டும்?”

இப்படி நம்மால் சிந்திக்க முடியுமா? ஒரு குழந்தையால் மட்டுமே அது சாத்தியம். இல்லையா?

இது இலக்கிய நூல்களைப் படிப்பதற்கும் பொருத்தமானதே!

புறநானூறில் 91வது பாடலை ஒளவை பாடி இருக்கிறார்.

மிகப் புகழ் பெற்ற பாடல் தான். தெரிந்த கதையும் கூடத் தான். என்றாலும் அதனைப் பார்த்ததும் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்து சாகா வரம் பெற்ற நெல்லிக் கனியை அதன் உண்மையச் சொல்லாது (சொன்னால் வாங்க மறுத்து விடுவாள் என்றஞ்சி)நெல்லிக்கனி வழங்கியமைக்காக அந்த அன்பில் மனம் நெகிழ்ந்து பாடுகிறாள் ஒளவை.பாடல் இதுவே,

“.............
நீலமணி மிடற்று ஒருவன் போல,
மன்னுக பெரும நீயே! தொல் நிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து சக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!” (6-11)

அதன் பொருள்; பழமை விளங்கும் மலைச் சரிவில் உள்ள புதர்களுக்கிடையில் சிறிய இலையுடைய நெல்லி மரத்தில் இருந்து அரிய முயற்சி செய்து பெற்ற இனிய கனியை நீ அருந்த வேண்டும் என்று கருதாது, அதன் பயனும் இன்னதென்று வெளியே தெரியுமாறு உரைக்காது, நின் மனதில் இருத்தி, சாதல் நீங்க வேண்டும் என்று எமக்குக் கொடுத்தனையே! பால் போன்ற வெண்மையான பிறச் சந்திரனைத் தலையில் சூடி நீல கண்டத்தை உடைய தனிப்பெருஞ் சிறப்புடைய சிவபிரான் போன்று இந் நிலத்தில் நீ ஒளிர்க!

புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்படியான ஒரு நேசமும் நட்பும் இருந்திருக்கிறது பாருங்கள்!!

எத்தகைய ஒரு நெகிழ்ச்சியான ஆசீர்வாதம் இது!!!

Tuesday, April 5, 2011

தத்துவ விசாரம்


கடந்த வாரம் ஒஸ்ரிய நாட்டுத் தோழியோடு வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது.பேச்சு பலவாறு நீண்டு பிறகு பிறப்பு இறப்பில் வந்து நின்றது.கைகளை விரித்து ’ஏன் இங்கு பிறந்திருக்கிறோம்; எங்கு பிறகு போகப் போகிறோம்? எனக்குத் தெரியாது’ என்று அவள் சொன்ன கணத்தில் துள்ளி விழுந்த பந்து இது.

இரண்டு உள்ளங் கைகளையும் கரைப் புறமாக மேல் நோக்கி விரித்து மேல் நோக்கி கண்களை உயர்த்திச் சொன்ன அந்தப் பொழுது அது மனதில் பல கேள்விகளை அது எழுப்பிச் சென்றது.

விடைகள் காணமுடியாத கேள்விகள் தான் அவை.எனினும்,நோக்கமற்று இலக்குகளற்று வாழ்வது; முடிவினை நோக்கி பாதை வகுக்காது, ஏன் என்ற தெளிவில்லாது வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது எவ்வளவு கடினம்!

ஆனாலும் பலரும் அவ்வாறே வாழ்கிறார்கள்.பெரும்பாலான பலர் பெற்றோரின் மதத்தைப் பின்பற்றியதான ஒரு நம்பிக்கையை, கேள்வி எதுவும் கேட்காமலே ஏற்றுக் கொள்கின்றனர்.

எனக்கென்னவோ மனம் ஏற்றுக் கொள்ளத் தக்க ஏதோ ஒரு நம்பிக்கை வேண்டி இருக்கிறது.

ஆனாலும் பலரும் நம்புவது போல் கடவுள் என்றொருவர் இருக்கிறார்.நம்மைப் படைத்தவர் அவரே. இறந்த பின் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவோம் என்பதை எல்லாம் என் பகுத்தறிவு நம்பவில்லை.

மதங்கள் எல்லாம் இடை இடையே தோன்றி சில நம்பிக்கைகள் முன் வைக்கின்றன.அவை சிறப்பான சட்டதிட்டங்களை அமுல் படுத்துகின்றன என்பது கூட உண்மை தான்.ஆனால்,அவைகள் மக்களை ஒழுங்கு படுத்த வந்தவை என்பதற்கப்பால் அவை மீது எனக்கதிகம் ஈடு பாடில்லை.

தான் தோன்றி மதமாக இருக்கும் இந்துமதம் மக்களின் நம்பிக்கையின் வளர்ச்சி என்ற அடிப்படையில் பார்த்தால் அவை இயற்கையை வழிபட்டிருக்கின்றன.

இது பற்றி மட்டும் சிந்தித்த புத்த பகவானின் தத்துவம் கர்மம் என்ற ஒன்றை வற்புறுத்துகிறது.

மதங்களற்ற மக்களின் நம்பிக்கை என்று பார்த்தால் சங்க காலத்து ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் நீரினூடே தன் பாட்டுக்குப் போகும் ஓடம் போல வாழ்வைக் கண்டு தெளிந்து வாழ்க்கையில் ஒரு சமரசத்தைக் காண்கிறது.

அதனாலோ என்னவோ,என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும், மனதின் உள்ளூர நாம் இங்கு பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் நோக்கி நாம் நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு உள்ளூர எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

அது போலவே ஆண்மா,அது உடலுக்குள் எங்கோ தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்;கர்மாக்களால் அது தன் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும்;அது ஒரு போதும் அழியாத ஆற்றல் வாய்ந்தது என்பதும்;தன் கர்ம பலனுக்கேற்ப மீண்டும் பிறப்பெடுக்கிறது என்பதும் என் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கிற விஷயம்.

பல சந்தர்ப்பங்களில் சிலவற்றுக்கான தீர்வுகள் தானாகக் கிட்டி இருக்கின்றன. பிறகு நடக்கப் போவதைக் கனவுகள் மிகத் துல்லியமாகத் தெரிவித்திருக்கின்றன.உருவமில்லாத ஏதோ ஒன்று உள்ளே இருந்து தானாகச் சிந்தித்து மூளையை எவ்வித எத்தனங்களுமின்றி அமைதிப் படுத்தியிருக்கிறது.

இவை மேற்கண்டவற்றை உறுதிப் படுத்த எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன.

இறந்தவர்களுக்கும் எனக்குமான சில அனுபவங்களும்(பயந்து விடாதீர்கள்:), மற்றும் ஏனைய சிலரின் கூற்றுக்களும் மேலும் அதனை உறுதிப் படுத்துகின்றன.

உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றனவா?

தவிரவும், இந்த இயற்கையின் காற்றினை நாம் உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்கும் வரை,தண்ணீரையும் நெருப்பையும் ஆகாயத்து முகில்களையும் பூமியில் எப்போதும் கால் பதித்துக் கொண்டிருப்பதையும் விட்டுவிட்டு நாம் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இல்லை என்ற விடை இருக்கும் வரை, எமக்கும் இயற்கைக்குமான கட்டுக்கு விடை ஒன்று இருக்க வேண்டும். அவை இல்லாமல் நாம் வாழத்தான் முடியுமா? அதனால் அந்த பிரபஞ்சத்தின் சக்தியோடு நாம் பிரிக்கமுடியாதபடி பந்தப்பட்டிருக்கிறோம் என்பதும்;அந்த இயற்கையே - அதன் ஆற்றலே - கடவுள் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஏன் இந்த தத்துவ விசாரம் என்றொரு கேள்வியை பலரும் என்னோடு எழுப்புவதுண்டு. எனக்கென்னவோ இது பற்றிய தெளிவில்லாமல் வாழ்க்கையை வடிவமைப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.....


உங்களுக்கு எப்படி? உங்கள் நம்பிக்கைகள் என்ன?