Tuesday, May 3, 2022

சுடலை ஞானம்

 



அண்மையில் என் தந்தையை நான் இழந்தேன். 

அது என் முதல் இழப்பு. இந்த இரண்டரை மாதமும் எனக்குள் ஒரு தத்துவ விசாரம். எது உண்மை? எது வாழ்வு? ஏன் நாம் இங்கு? இவ்வாறான கேள்விகள் குடைந்த வண்ணமாகவே உள்ளது. பதில் கண்டறிய முடியா கேள்விகள். ஞானிகள் கூட தத்தம் சமய தத்துவங்களை ஒட்டியே பதில்களைத் தந்திருக்கிறார்கள். அது மேலும் குழப்பங்களைத் தருவதாகவே இருக்கிறது.

இந்து தத்துவஞானிகள் உலகவாழ்வை வெறுத்தவிதமாகவே பாடி கடவுளை அடைதலை இலட்சியமாகக் கூறிப் போயிருக்கிறார்கள். உண்மையில் வாழ்க்கை என்பது வெறுத்து ஒதுக்கத் தக்க ஒன்றுதானா? பட்டினத்தாரின் இந்தப்பாடல் அவர் வாழ்க்கையை எவ்வளவு சலிப்போடு எதிர்கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும்.

‘அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ?

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ?

என்செய்வேன் கச்சியேகம்பனே!’ 

என்று பாடுகிறார். இன்று அவர் இருந்திருந்தால் இங்கு உளநல மருத்துவ சிகிச்சைக்கு அவரை அனுப்பி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. வாழ்க்கையைச் சலித்து ஒதுக்கியவர்களின் பாடல் தொகுப்பின் வழியாகவே இந்து தத்துவஞானத்தில் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். 

எனக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த உலகம் எத்தனை அழகு? அனுபவிக்கவும் மகிழ்ந்து குலாவவும் எத்தனை எத்தனை உண்டு? 

சரி, அப்படி ஆண்டவனின் நிழலை அடைவதே இலட்சியம் என்றிருந்தாலும் அங்கு போனதன் பிறகு செய்ய என்ன இருக்கிறது? அந்த வாழ்வு சலித்து விடாதா? 

பிறப்பதும்; இன்பத்தையோ துன்பத்தையோ இல்லையேல் இவை இரண்டையுமோ அனுபவித்தல் தானே உயிர்ப்பு! அது தானே வாழ்வு என்று கொண்டாடத் தகுந்தது? இதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்? 

தனு (உடம்பு), கரண ( மனம்), புவன (உலகு), போக ( அனுபவிப்பு) வழி ஆண்மாக்கள் பிறப்பெடுக்கின்றன என இந்து தத்துவம் சொல்கிறது.

சரி, ஆண்மா என்பது யாது? என்று கேட்டால்,

ஆண்மா என்பது நித்தியமாய், வியாபகமாய் அறிவுடய பொருளாய், பாசத்தை உடையதாய், சார்ந்ததன் வண்ணமாய், சரீரம் தோறும் வெவ்வேறாய், வினைகளை செய்து வினைப்பயனை அனுபவிப்பதாய், சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாய் தனக்கு ஒரு தலைவனை உடையதாய் இருப்பது என்று விளக்கம் கிடைக்கிறது.

அது இயங்க ஒரு தூல சரீரம் தேவைப்படுகிறது என்று அது மேலும் சொல்கிறது.

அப்படி என்றால் தூல சரீரம் எனப்படுவது யாது?

ஐம்பூதங்களால் ஆன உடம்பு என்று அதற்கொரு சுருக்க விடை இருக்கிறது.

 அதற்குள் சூக்கும சரீரம் என்று ஒன்றும் உண்டாம். அதனை விரித்துப் பார்த்தால், அது சப்தம், பரிசம், ரூபம், கந்தம் என்னும் காரண தன்மாத்திரைகள் ஐந்தையும்; மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தகரணம் மூன்றுமாகிய இந்த எட்டு உறுப்புகளாலும் ஆக்கப்பட்டு ஆண்மாக்கள் தோறும் வெவ்வேறாய் அவ் ஆண்மாக்கள் போகத்தை அனுபவிப்பதற்கு கருவியாய்; ஆயுள் முடிவில் உடம்பை விட்டு மற்றோர் உடம்பை எடுப்பதற்கு ஏதுவாய் இருக்கிற அரு உடம்பு. என்று விளக்கம் அளிக்கிறது,

இது ஏழுவகைப் பிறப்புகளை எடுக்கிறதாம்.

 அவை தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதிலும் நாலு விதமான தோற்றப்பாடுகள் உள்ளனவாம். 

அண்டசம் - முட்டையில் தோன்றுவன

சுவேதசம் - வியர்வையில் தோன்றுவன (?)

உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன.

சராயுசம் - கருப்பையில் தோன்றுவன.

எப்படி ஆண்மாக்கள் பிறந்து இறந்து உழலும்?

அது நல்வினை தீவினை என்னும் இருவினைக்கீடாக நாலுவகை தோற்றத்தையும் ஏழு வகை பிறப்பையும் 84 நூறாயிர யோனிபேதத்தையும் உடையவர்களாய் பிறந்துழலுமாம்.

இப்படி ஆறுமுகநாவலரின் சைவ வினாவிடை கூறுகிறது.

நாலடியார்,

‘நின்றன நின்றன நில்லா என்றுணர்ந்து அறத்தைச் செய்’ என்றும்

’இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் எனாது’ யமன் விரைவில் வரப்போகிறான் என்று எண்ணி அறத்தை உடனே செய் என்றும் நாலடியார் அறிவுறுத்துகிறது. 

இதனை எழுதுகிற போது அதிகம் பிரபலமாகாத பாரதியாரின் ’ஞானரதம்’ நினைவுக்கு வருகிறது. அருமையான புத்தகம் அது. அவர் கற்பனையில் ; கனவில் ரதமேறி மறு உலகங்களுக்கு பயணமாகிறார். அங்கு காணும் காட்சிகளை விபரிப்பதாக அவ் உரையாடல் தொடரும். அதில் ஓரிடம் வரும். பர்வதகுமாரியிடம் கேட்கிறார். இப்படி தினமும் இன்பம் சுகித்துக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு சலிப்பு வருவதில்லையா என்பார். அதற்கு அவள் நீங்களும் தான் தினமும் சோறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே! உங்களுக்கு அதில் எப்போதாவது சலிப்புத் தட்டுவதுண்டா? என்று கேட்பார்.

அது நிற்க,

என்னுடய இந்த தத்துவசாரத்தில் எனக்கு குழப்பமே மிஞ்சியது. இதனை வாசிக்கும் உங்கள் எவருக்கேனும் ஏதேனும் தெரிந்தால் என்னோடு உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். என் சிற்றறிவு கீழ்கண்டவாறு ஒரு முடிவுக்கு வந்து அமைதி கொண்டது. :)

நான் என்பது யார்?

உடலா? முகமா? செய்யும் தொழிலா? உயிரா? ஆண்மாவா? பெயரா? நடத்தையா? குடும்பமா?

எதுவுமில்லை. 

’போன’ பின்னும் மக்கள் மனதில் விட்டுச் செல்லும் நினைவுகள் மட்டும் தான் நாம்.

சரி, சரி இந்தப் பதிவும் தான். ( இங்கு பதிவேற்றப்படுவதும் எப்போதும் நித்தியமாய் இங்கேயே இருக்குமாமே....)