Sunday, September 5, 2021

தமிழர் மான உணர்வு - ஓளவை வழி - 2 -

கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.8.21 அன்று SBS தமிழ் தேசிய வானொலியில் ஒலிபரப்பான  நம்மதமிழ் நிகழ்ச்சிக்காக எழுதிய ஆக்கம் இது. எடிட் செய்யப்பட்ட 7/8 நிமிட நிகழ்ச்சியைக் கேட்க கீழ்வரும் இணைப்பை அழுத்திக் கேட்கலாம்.


நம்ம தமிழ் - ஒளவையின் மான உணர்வு


எடிட் செய்யப்படாத எழுத்துருவில் அமைந்த பகுதி கீழே வருகிறது.

மானம் உள்ளவன் தமிழன் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொள்ளும் மரபொன்று எங்களிட்ட இருக்கு. அது உண்மைதானா எண்டு பாக்கிறது இண்டைக்கு எங்கட நோக்கம். 

சிவன் நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே எண்டு நக்கீரன் சிவனுக்கே சவால் விட்டார் எண்டும்; கண்ணகி பாண்டியமன்னனின்  வாயிலோனைப்பார்த்து 

வாயி லோயே வாயி லோயே 

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே! 

என்று அறக்கோபம் கொண்ட கண்ணகியும், யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யமனை அஞ்சோம் எண்டு இந்து சமயம் சார்ந்த தமிழ் தொண்டர்கள் நிமிர்ந்து நிண்டதையும் திருப்பாவை பாடிய ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம் எண்டு கண்ணனுக்கு உறுதி அளிக்கிறதையும் மாணிக்கவாசகர், ‘எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்! எண்டு கடவுளோட உரிமையோட கதைக்கிறதையும் பார்க்கேக்க அதெல்லாம் தமிழின்ர; தமிழன்ர ஒருவித வீர வசனம்; மான உணர்வின்ர; தான் நம்புற ஒண்டின் மீதான அதீத நம்பிக்கையின் வழி வந்த உரிமைக் குரல்; உறுதி மொழிகள்; வாழ்வியலின் மொழி எச்சங்கள் எண்டுதான் படுகுது. 

ஏனெண்டா இதின்ர தொடர்ச்சி பாரதியார் வரைக்கும் வந்திருக்கு. நரை கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்கு இரை யெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று  நினைத்தாயோ?" எண்டு அவரும் பராசக்தியை கோவத்தோட கேட்டிருக்கிறார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி வழியில் நடந்தான் மாவீரன்; என்றொரு பாட்டு ஈழத்தமிழ் வாயில இருந்தும் புறப்பட்டதும் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இப்பிடியான இந்த கோபங்களுக்கு; சூழுறையளுக்கு; மான ரோச குணங்களுக்கு; அடிப்படையாக இருந்தது அறம் சார்ந்த நியாயப் பாடுகள் தான். தான் கண்டு கொண்ட  உண்மை என்ற ஒன்றின் மீதான அதி தீவிர நம்பிக்கை; தனக்கு சரி எனப் பட்ட ஒன்றுக்காக உயிர், வாழ்வு, நட்பு எல்லாவற்றையும் துச்சமாக கருதும் ஒரு மனப்பாண்மை; அறமும் தர்மமும் உண்மையும் முன்னுக்கு நிக்குமெண்டால் கடவுளும் எனக்கு ஒரு தூசிதான். அவருக்கே நான் சவால் விடுவன். எண்ட ஒரு தார்மீக கோபம் தான் அது. 

தமிழுக்கு அப்பிடி ஒரு கம்பீரம். தமிழ்வாழ்வான அறமே அவனது அனைத்து செயல்களுக்குமான ஆழமான அடிப்படை.

கம்பனும் கூட, மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? எண்டு சோழ அரசனோடு கோவிக்கிறார்.

இப்பிடி ஒரு கோபம் சங்க காலத்து தமிழ் திராவிட பெண்ணான ஒளவைக்கும் வந்திருக்கு. ஒரு கொடை வள்ளலான அரசனோட அவளுக்கு கோபம். இத்தனைக்கும் அந்த அரசன் பாரி வள்ளல். கேட்பவர்களுக்கு இல்லையென சொல்லாது வாரி வளங்கும் வள்ளல் அவன். ஒளவையின் நட்பினனும் கூட. அதியமான் நெடுமான் அஞ்சி எண்ணுறது அவரின்ர பேர். ஒரு நாள் ஒளவை அதியமானை பாக்க வாறா. வாயில் காவலன் அவவ உள்ள போக விடாமல் மறிச்சுப் போட்டான். அது தான் அவவுக்கு கோபம். நடந்தது என்னவோ அவ்வளவு தான். கோபமும் மான உணர்வும் அவவுக்கு முன்னால வந்திட்டுது. 

இத ஒரு விதத்தில ஒரு வித ஞானச் செருக்கு எண்டும் சொல்லலாம். ஏனெண்டா காவலன் போக விடாமல் மறிச்சது தன்ர ஞானத்துக்கு மேல விழுந்த ஒரு இழுக்கு எண்டு அவ நினைச்சிட்டா. அது ஒரு  அறிவின்ர கனல். இந்தச் அறிவுச் செல்வத்தை தான் கம்பரும் ’அரசரோடென்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று கல்வித்தெய்வத்தை புகழ்ந்துரைப்பார். 

தன்ர அறிவுச்செல்வத்துக்கு வந்த இந்த அவமரியாதையை ஒளவையால பொறுக்க முடியேல்ல. தமிழரின்ர வாழ்க்கையை அறிய முடிகிற முதல் எழுத்திலக்கியமா இருக்கிற சங்ககால தமிழ் இலக்கியத்தில ஒரு பெண்ணா; புலவரா இருந்து கொண்டு அப்பிடி ஒரு ரோசமுள்ள பாட்ட அவ பாடி இருக்கிறா.

அவமானங்களைச் சகிக்க முடியாதவனா தமிழன் எப்பவுமே இருந்து வந்திருக்கிறான் என்ணுறதுக்கும் இந்தப்பாட்டு ஒரு சான்றுதான். 

அவ அப்ப பாடின பாட்டுத் தான் இது. புறநானூறு எண்ட சங்க இலக்கியத்தில வாற 206 வது….பாட்டு இது.


வாயி லோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்

5 பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!


கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?


அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.


பசியை விட மானம் பெரிசா இருந்திருக்கு அவவுக்கு. திறமைக்கு மதிப்புத் தராத இடத்தில இருக்க மாட்டன் எண்ட அறக் கோவம் இருந்திருக்கு அவவுக்கு.  தன்ர அறிவும் ஞானமும் ஒரு பெரும் தகுதியா தன்னோட இருக்கேக்க தனக்கு எங்க போனாலும் சோறு கிடைக்கும் எண்ட நம்பிக்கை அவவுக்கு இருந்திருக்கு. அது அறிவு கொடுத்த நம்பிக்கை; திறமை கொடுத்த நம்பிக்கை!!


 இந்தப் பாட்டில வாயில் காவலன பார்த்து, வாயிலோயே வாயிலோயே எண்டு கூப்பிட்டு வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை’ எண்டு சொல்லுறா. வரிசை எண்ட இந்தச் சொல்லு தகுதி தராதரம் பார்த்து எண்டு சங்க காலத்தில பொருள் கொள்ளப்பட்டிருக்கு. பரிசு தாரதா இருந்தா தகுதி தராதரம் பார்த்துத் தர வேணும். தானம் மாதிரிக் குடுக்கக் கூடாது எண்ணுறது அவவின்ர வாதம்.

பிறகு சொல்லுறா,

விரைவா ஓடுற குதிரையள வச்சிருக்கிற அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் பசியால் இறந்தார்கள் எண்டு சொல்லத்தக்க வறுமைப்பட்ட உலகமில்ல இது. அதால, என்ர யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் போகிறேன். மரம் வெட்டுற  தச்சனின்ர திறமை வாய்ந்த பிள்ளைகள் கோடாலியோட   காட்டுக்குப் போனால் விறகுகளா கிடைக்காது? அது போலத்தான் இந்த உலகம். நான் எங்க போனாலும் அங்கே எனக்கு சோறு கிடைக்காமல் போகாது. 

எண்டு சூழுரைச்சுப் போட்டு போற பாட்டு அது. அவவின்ர தமிழ் புலமை மேல அவவுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது எண்ணுறது மட்டுமில்ல; அதுக்கு ஒரு இழுக்கு வந்த சகிச்சுக் கொள்ள முடியாத தமிழ் மான உணர்வும் அதுக்குள்ள இருக்கு. அது தமிழ் கொடுத்த நம்பிக்கை. அரிவு கொடுத்த நம்பிக்கை. ஞானம் குடுத்த நம்பிக்கை.

எப்பேற்பட்ட தமிழன் வாழ்வு அது!! 

தமிழ் அதனை - தமிழ் வாழ்வைக் கைப்பற்றி நமக்கு பாதுகாப்பாக நம்மிடம் ஒப்படைச்சிருக்கு.

அது ஒளவை எண்ட திராவிடத் தமிழ் பெண்னின்ர குணாம்சமா தமிழன்ர மான ரோச உணர்வின்ர தொடக்க கால எச்சமா இந்த பாடலின் வழியாக நிரூபனமாகி இருக்கு.
Saturday, August 28, 2021

ஆத்திசூடிகள்

தமிழ் சில தகவல் - 1


ஒளவையார் அருளிச் செய்தது ஆத்திசூடி என்பது பலரும் அறிந்த விஷயம். அது,

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

 என்று அகர வரிசையில் 2,3, சொற்களில் வாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகும்.

பிறகு பாரதியார் புதிய ஆத்திசூடி என்று ஒன்று எழுதினார். அது,

அச்சம் தவிர்
 ஆண்மை தவறேல்
 இளைத்தல் இகழ்ச்சி
 ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
 ஊண் மிக விரும்பு
 எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை...

இவ்வாறாக தொடரும். காலத்தின் நிமித்தமாகவும் சொற்செறிவு, பொருள் அழகு, எளிமை, காலத்தின் தேவை, யாருக்கு பாடப்படுகிறது என்பது பொறுத்து அதன் பொருள் மாறுபட்டும், காலத்தின் தேவைக்குரியதாகவும் அமைந்திருப்பது வாசிக்கும் போது புலப்படும்.

கூடவே இந்த கவிப்புலவர்களின் சமூக கரிசனையும் .

பலருக்கும் தெரியாத இந்னொரு ஆத்திசூடியும் ஒன்று இருக்கிறது. அது பாரதி தாசன் இயற்றியது. அது இவ்வாறாகத் தொடர்கிறது.

அனைவரும் உறவினர்
ஆட்சியை பொதுமை செய்
இசை மொழி மேலதே
 ஈதல் இன்பம்.
 உடைமை பொதுவே
 ஊன்றுளம் ஊறும்
எழுது புதுநூல்
 ஏடு பெருக்கு
ஐந்தொழிற்கிறை நீ
ஒற்றுமை அமைதி
ஓவியம் பயில்
ஒளவியம் பெருநோய்

இவ்வாறாகத் தொடர்கிறது பாரதிதாசனின் ஆத்திசூடி.

ஆத்திசூடிகளும்......

நானாக இருந்தால் எப்படி எழுதக்கூடும் என்று நினைத்துப் பார்த்தேன். இன்றைக்கு இன்றய நிலையில் இது தான் என் ஆத்திசூடி.

அன்போடிரு
ஆசை தவிர்
இயன்றதைச் செய்
ஈதலே அறம்
உதவி புரி
ஊக்கம் கொள்
ஏற்றம் போற்று
ஐயம் வேண்டாம்
ஒன்றே இறைவன்
ஓடுக நதிபோல
ஒளடதம் அன்பே!

இனி எவரேனும் எழுதகூடின் அது எவ்வாறெனத் தொடர்தல் கூடும்.....?

உங்கள் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்று எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்! பெற்றுக் கொள்வதன் வழி கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம்.

Friday, July 30, 2021

மூலையில் ஒரு நாற்காலி

குளிர்காலத்தின் நடுவில் உட்காந்திருக்கிறோம்.

நாளுக்கு நாள் கொரோனாவின் பெருக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றயதினம் கட்டுப்பாடுகள் இன்னும் இறுகி 5 கி.மீ. ற்குள் மாத்திரம் தான் - அதிலும் அத்தியாவசியம் என்றால் மாத்திரம் தான் வீட்டினை விட்டு வெளியே வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்த அத்தியாவசியங்களும் கூட என்ன என்னத்திற்காக என்று பட்டியல் தரப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதங்களும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நகர்புறங்களில்; நாட்டுப் புறங்களில் இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக பொலிசாரோடு சேர்ந்து இராணுவமும் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

என் வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கிற பிரதேசங்கள் எல்லாம் கொரோனா தொற்றுகளும் பாதிப்புகளும் மிக அதிகரித்துப் போயிருப்பது இதுதான் முதல் தடவை.

சரி, மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கக் காலம் எம்மைப் பணித்திருக்கிறது. அதைமீறி செய்ய என்ன இருக்கிறது? 

எதுவுமில்லை.

என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏதேனும் புதிதாக இருக்கிறதா என்ற என் இணையத்தேடலில் டொக்டர் ஜேன் என்று ஒருவரைக் கண்டு கொண்டு அவரிடம் இருந்து கொஞ்சம் படித்துக் கொண்டேன். அதன் மூலையில் ஒரு சிறு குறிப்பு ஒன்று புத்தக வாசிப்பு குறித்து இருந்தது. 

அது இவ்வாறு சொல்கிறது.

இந்தப் புத்தகம் என் வீடு.
கதவு திறந்திருந்திருக்க
நான் உள்நுழைவேன்..
இங்கு நான் மகிழ்ந்திருக்க
சாளரங்கள் பல உண்டு.
என்னை விரும்பும் நண்பர்கள் 
ஆண்களும் பெண்களுமாய்
இங்கிருக்க, 
என் சிரிப்பை, அன்பை, காதலை,
அழகை, மகிழ்ச்சியைக் 
இங்கு நானும் கண்டெடுப்பேன்.

Sunday, July 4, 2021

The Universal Declaration Of Human Rights

 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘அகதிகள் வாரம்’ கொண்டாட்டப் பட்டது. (20.6.21 - 27.6.21) அது வந்தது தெரியாமலே போய் விட்டது. கவனத்தில் எடுக்கப் படாதவர்களாகவே அவர்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது  ஒரு சோகம். மேலும் அவர்கள் தமக்கான உரிமைகள் பற்றியும் கடமைகள் பற்றியும் தெரியாதவர்களாக அடங்கி ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள். கூச்ச சுபாவத்தோடு ஒருவித இயலாமை சூழ, பவ்வியமாக அவர்கள் மற்றவர்களோடு  நடந்து கொள்வதைக் காண மனசு துடிக்கிறது.

பலர் தவறான வழிகளில் சூதாட்டம், மது, புகை பழக்கங்களுக்கும் ஆளாகிப் போயுள்ளனர். பெண்களும் தாய்மார்களும் தனிமையோடிருக்கிறார்கள். பலருக்கு வேலைக்குச் செல்லும் உரிமை இல்லை. வேலை செய்வதற்கான உரிமை உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. போதுமான வருமானம் இல்லாததால் குழந்தைகள் சரியாகக் கவனிக்கப் படாதவர்களாக வளர்க்கப் படுகிறதையும் ஆங்காங்கே காண முடிகிறது....

அரசாங்கம் கருணை காட்டாதவரை அவர்கள் திரிசங்கு சொர்க்கத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில் இருக்கிற தொழில் வழங்குனர்கள்; சமூகநிறுவனங்கள்; ஏதேனும் செய்யலாம்; செய்கிறார்கள் என்ற போதும் அது போதுமானதாக இல்லை. இதற்கென ஏதேனும் ஒரு பாரிய திட்டத்தை உருவாக்கி அமுல் படுத்த; தொழில் கொடுத்து அவர்களது வருமானத்தை ஊக்குவிக்க கொரோனா காலமும் விடுவதாக இல்லை......

அது நிற்க,

நான் தொழில் பார்க்கிற பாடசாலையில் நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புத்தகம் ஒன்று கிடைத்தது. அப் புத்தகம் என்னை மிகவும் வசீகரித்தது. அதன் தமிழாக்கம் இது.

நாங்கள் சுதந்திரமாகவும் எல்லோரைப்போலவும் பிறந்திருக்கிறோம்.

எங்கள் எல்லோருக்கும் சொந்த சிந்தனைகளும் எண்ணங்களும் உள்ளன.

நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டியவர்கள்.

எங்களுக்குள் என்ன வேறுபாடு இருக்கிற போதும்

இந்த உரிமை எல்லோருக்குமானது.


நாங்கள் வாழ உரித்துடையவர்கள்.

சுதந்திரமாகவும் பாதுகாப்பகவும் வாழ உரித்துடையவர்கள்.

எம்மை அடிமை கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

மற்றவரை அடிமை கொள்ள எமக்கும் உரிமை இல்லை.

எங்களை வருத்த எவருக்கும் உரிமை இல்லை.

சித்திரவதைக்கும் உரித்துக் கிடையாது.


சட்டம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தின் பாதுகாப்பு எல்லோருக்குமானது.

எல்லோரையும் அது சமனாகவும் சரியாகவும் காக்க வேண்டும்.

நாம் சரியாகக் காக்கப் படாதவிடத்து,

நாம் அனைவரும் சட்டத்தின் உதவியைக் கோரலாம்.

சரியான காரணம் இல்லாமல்,

யாரையும் சிறையிட உரிமை இல்லை.

எங்களை நாடுகடத்தவும் உரிமை இல்லை.

பரீட்சார்த்தங்கள் பகீரங்கமாக நிகழ்ந்த்தப்பட வேண்டும்.

அதில் மற்றவர்கள் தலையீடோ செல்வாக்கோ  இருத்தல் ஆகாது.

ஆதாரம் கிடைக்கும் வரை ஒருவரை குற்றவாளி எனக் கருத முடியாது.

நாம் குற்றம் இழைத்தோம் என்று குற்றம் சாட்டப்பட்டால்

இல்லை என்று நிரூபிக்க எமக்கு உரிமை உண்டு.


எங்கள் நற்பெயரர்க்கு களங்கம் விளைவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

எங்கள் வீட்டுக்குள் எங்கள் அனுமதி இன்றி நுழைய உரிமை கிடையாது.

உரிய காரணமின்றி, எங்கள் கடிதங்களை திறந்து பார்க்க, எங்களை; எங்கள் குடும்பத்தைத்  தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

எங்கள் எல்லோருக்கும் நம் நாட்டுக்குள் எங்கு போகவும்; விரும்பினால் வெளிநாட்டு போகவும் உரிமை உண்டு.

எங்கள் நாட்டில் நாம் சரியாக நடத்தப்படவில்லையானால் எங்கள் எல்லோருக்கும் வேறு நாட்டுக்குச் செல்ல உரிமை உண்டு.

நாங்கள் ஒரு நாட்டின் உரித்துக்குரிய பிரஜைகள்.

வளர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யவும் விரும்பினால் குடும்பத்தை உருவாக்கவும் உரிமை உண்டு.

அவர்கள் திருமணம் செய்யவும், பிரியவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமனாகும்.

சகல பிரஜைகளுக்கும் ஒரு பொருளை உடமையாக வைத்திருக்கவோ பகிர்ந்து கொள்ளவோ உரிமை உண்டு.

தகுந்த காரனமின்றி உங்களிடமிருந்து எவரும் அதனைப் பறிக்க முடியாது.

நமக்கு சரி என்று பட்ட சமயத்தை  நம்ப நமக்கு உரிமை உண்டு.

அது போல மாற விரும்பினால் மாறவும் நமக்கு உரிமை உண்டு.

நாங்கள் ஒன்றை  நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் நம் நண்பர்களைச் சந்திக்கவும் அமைதியாக ஒன்றிணைந்து நம் உரிமைகளை கோரவும் நமக்கு உரிமை உண்டு.

அது போல, எமக்கு விருப்பமில்லாத போது அதிலிருந்து விலகி இருக்கவும் நமக்கு உரிமை உண்டு.

நம் நாட்டு அரசகாரியங்களில் பங்கெடுக்க நமக்கு உரிமை உண்டு. வளர்ந்த ஒவ்வொருவருக்கும் தனக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் வீட்டில் வசிக்க உரிமை உண்டு.

வாழத்தேவையான பணம் வைத்திருக்கவும் உரிமை உண்டு.

இசை, கலை, புனைவு, விளையாட்டு இவை எல்லாம் எல்லோரும் மகிழ்வதற்கானது.

ஒவ்வொரு வளர்ந்தவருக்கும் தொழில் பார்க்கவும் அதற்கான சரியான சம்பளத்தைப் பெறவும் தொழிற்சங்கத்தில் இணையவும் உரிமை உண்டு.

வேலைக்குப் பின்னர் ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

நாங்கள் எல்லோரும் நல்வாழ்வுக்கு உரிமை உடையவர்கள்.

தாய்மார்கள்; பிள்ளைகள்; வயதானவர்; தொழிலற்றவர், மாற்றுத்திறனாளிகள், என்போருக்கும் அவரவர் தேவைகள் கவனிக்கப்படவும்  நல்லதொரு வாழ்க்கையை வாழவும் உரிமை உண்டு.

நம் எல்லோருக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. ஆரம்பக்கல்வி கட்டாயம் இலவசமாக இருக்க வேண்டும்

நாங்கள் எங்கள் திறமையை நன்றாக சீராக்கி சிறந்த வேலைவாய்ப்பைப் பெற தொழில் கல்வி வாய்ப்பு இருக்க வேண்டும்.

பெற்றோருக்கு எப்படி எதை தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க உரிமை உண்டு.

ஐ.நா. சபை பற்றியும் ஏனைய மக்கள் பற்றியும் மற்றவர்கள் உரிமைகள் கடமைகள் பற்றியும் மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்குப் பிடித்த வாழ்வை வாழ எமக்கு உரிமை உண்டு. அத்தோடு வாழ்ந்து அனுபவிக்கவும் கல்வியறிவு, விஞ்ஞானம் தொழில்நுட்பம் தரும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தவும் நமக்கு உரிமை உண்டு.

உரிமைகளையும் சுதந்திரத்தையும் நாம் நம் நாட்டிலும் உலகிலும் அனுபவிக்க நல்ல ஆட்சி நிலவ வேண்டும்.

எங்களுக்கு மற்றவர்களுடய உரிமையை; சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு.

யாரும் இந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் எங்களிடம் இருந்து  பறிக்க முடியாது.

நன்றி. சிறுவர்களுக்கான புத்தகம். - We are all born free.- 

Wednesday, June 2, 2021

ஒளவை குறித்து ஒரு பார்வை

 தமிழ் மரபில் ஒளவை

கடந்த ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இந்த ஒலிக்கீற்றைக் கேட்டு உங்கள் அபிப்பிராயங்கள்; விமர்சனங்களை எனக்குத் தெரியப்படுத்துவீர்களா? 

மேலே இருக்கிற ‘தமிழ் மரபில் ஒளவை’ என்ற தலைப்பை அழுத்தினால் நீங்கள் நேரடியாக SBS இன் தளத்திற்குச் செல்லலாம். அங்கு இதனைக் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுத்துமொழியிலேயே எழுதியும் பேசியும் வந்ததால் பேச்சு மொழியில் கூறிய இந்த விஷயங்களில் எனக்கான திருத்தங்களை உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஒரு கையளவு மக்களே இங்கு வருவதாக இருந்தாலும்; நானும் எனக்குத் தோன்றிய பொழுதுகளில் மட்டும் தான் இங்கு வந்து போனாலும்; எனக்கு நீங்கள் தானே எல்லாம்.

நம்புங்கள்! உங்களோடு எனக்கு ஓர் மானசீக அன்பு உண்டு....

நீங்கள் எப்பொழுதும் இங்கு வந்து போக வேணும்...

Monday, April 19, 2021

அன்றாட பாடங்கள்

 


தண்ணீர் சொல்லித் தருகிறது

நழுவிச் செல்வதெவ்வாறென


நெருப்பு அறிவுறுத்துகிறது

சுட்டெரித்தல் பற்றி


நிலம் தோண்டியும் பொறுமை காக்கும் பூமி

போதிக்கும் பாடம் 

நெருப்புக்கு எதிர்மாறு


காற்றோ, ஊதிப்பெருப்பித்தும்

வருடிக்கொடுத்தும்

நோகாமல் நகர்கிறது.


இறுதியாக,

எல்லாவற்றையும் 

பார்த்துக் கொண்டிருக்கும் 

ஆகாயத்தின் மீது தான்

கோபமாக சூரியனும்

குளிர்ச்சியாக சந்திரனும்

பவனி வருகிறது.


அன்றாட வாழ்வில்

படிக்கும் பாடங்கள் அநேகம்..


Sunday, April 18, 2021

மர்மங்கள்....பாலில் இருந்து நீரைப் பிரிக்கவும்

கடல் நீரில் இருந்து உப்பை பிரிக்கவும்

அறிந்தே பிறக்கின்றன

அன்னமும் பென்குவினும்.


பிறந்தவுடன் கடல் நோக்கி வரவும் 

பை நோக்கி நகரவும் 

சொல்லித் தரவில்லை யாரும் என்ற போதும்,

அறிந்து கொண்டுள்ளன

ஆமை, கங்காரு குட்டிகள்


ஐந்தறிவுக் குழந்தைகளுக்குச்

 சொல்லிக் கொடுத்தது யார்?

பிறந்தவுடன் எழும்பவும் 

தாய்மடி தேடி பால்பெறவும்?


ஆதாம் ஏவாள் காதலுக்கும் 

சேய் கொண்ட தாய்மைக்கும் 

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை யாரும்.


பழம் தந்து விதைபோட்டு வளரும் மரங்கள்

சொல்லித் தருகின்றன வாழ்வின் பாடல்களை!

பழம் தந்து வீழும் வாழையும்

விழுது விட்டு வாழும் விருட்சங்களும்

மெளன மொழியில் சொல்கின்றன

பூமியின் ரகசியங்களை!


முள்ளுள்ள றோஜா; வெள்ளைநிற பாரிஜாதம்

தண்ணீரோடு ஒட்டாமலே தண்ணீரில் வாழும் தாமரை

சொல்லும் பாடங்களும் படிக்க உகந்தன.


குழந்தை உயிரினங்கள் தவழும்

மடியிலெல்லாம்

உயிர்ப்பின்  புன்னகை நிறைந்து கிடக்கிறது.


கொன்று தின்னப் பணிக்கும் இங்கே தான்

தாய்மையின் உயிர்ப்பிலும் குழந்தைகள் பிறப்பிலும்

மறுபடி மறுபடி உயிர்க்கிறது உலகு.


சிப்பிக்குள் இருக்கிறது முத்து.

மண்ணுக்குள் இருக்கிறது வைரம்.

பெறத் தெரிந்த மனிதனுக்கு புரியவில்லை 

பிறப்பின் முன் பின்  மர்மங்கள் மட்டும்.


எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் இலைகளை எல்லாம்

கூட்டிப் பெருக்குகிறாள் சிறுமி.

எனினும்,

மீண்டும் மீண்டும் உதிர்கின்றன இலைகள்.


உலகப் பள்ளியில் அறிய உள்ளன

எண்ணற்ற இரகசியங்கள்....

Friday, April 16, 2021

பிரபஞ்சமும் மற்றும் ஓர் உண்மையும்

 

அண்மைக் காலமாக வாழ்க்கை குறித்த தத்துவார்த்த சிந்தனைகள் மனதில் உதித்த வண்ணமாக இருக்கின்றன.

மனம், அதில் உதிக்கும் எண்ணங்கள், அவை வாழ்க்கையை வழிநடத்தும் வலிமை - மற்றும் அதன் பின்னால் ஏதேனும் ஓர் சக்தி உண்டா என்பது குறித்தவையாக அவை இருக்கின்றன.

காலா காலமாக சமயங்களும் தத்துவவாதிகளும் பேசி வருபவை தான் அவை என்ற போதும்,  அந்த முன்னோரின் சித்தனைகள் எல்லாவற்றையும் சற்றே நகர்த்தி வைத்து விட்டு, சொந்த அனுபவத்தின் வழியே சில விஷயங்களை புரிந்து கொள்ள விரும்பும் முயற்சி இது.

 கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விஹாரங்கள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகியன  வழி நடத்தும் சடங்குகள் ஆசாரங்கள் சமர்ப்பனங்கள், பூசைகளுக்கு அப்பால் உலகப் பண்பாடு; சான்றோரின் தத்துவ சிந்தனைகள், விஞ்ஞான தத்துவங்கள், கலைஞர்களின் எண்ண ஓட்டங்கள் ஆகியன  நம்முடய அனுபவங்களோடு ஒத்துழைக்கிறதா என்று பார்க்கும் முயற்சியின் ஒரு சிறு பகுதியாகவும் இதை கொள்ளலாம்.

 தினமும் காரோடிச் சலித்து, செய்த வேலையையே நாள்தோறும் திருப்பி திருப்பி செய்து சலித்து, பணத்தேவைகளும் அதிகமில்லாத போது, எதற்கிந்த வேலையும்  அநாவசிய பணமும்? எதற்கிந்த அநாவசிய சிரமங்கள்? அதிலும் வயதான பெற்றோர் எனக்காகக் காத்திருக்கும் போது...என்று நினைத்த சில மாதங்களில்  என் மனதுக்குகந்த; வேலை ஒன்று என் இரு கைகளுள்ளும் தானாக வந்து வீழ்ந்தது! முயற்சி எதுவும் செய்யாமலே.... 

இது போல மேலும் பல எண்ணங்கள் எனக்கு அவ்வாறே ஈடேறுகின்றன.

 உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் சித்தித்திருக்கலாம்...

இது இவ்வாறிருக்க,

இந்த அநாவசியப் பணம் என்பது எம்மை தவறான பாதையில் வழிநடத்த வல்லதாகவும் இருக்கிறது. அது எம்மை ஆடம்பரம் நோக்கி நகர்த்துகிறது. காரணமில்லாமல் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறோம்; ஒரு ’ரொயோட்டா’ கொண்டு சென்று விடும் தூரத்தைத் தான் ஒரு ’ஓடி’ காரும் கொண்டு சென்று விடுகிறது என்பதை மறந்து விட்டு, அந்த போலிப் பாத்திரத்தை அன்னாந்து வியந்து  பார்க்க நிப்பந்திக்கப் படுகிறோம். இரண்டு பேர் கூடும் போது பேசப்படும் உபயோகமற்ற பேசுபொருளாக அது ஆகி விடுகிறது என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; வீடு பொருட்களால் நிறைகிறது. உதாசீனமும் கவனமின்மையும் வளர்கின்றன. ஒரு மமதை தன் ஆரவாரமின்றி பிறக்கிறது....தவறான பாதை ஒன்று நமக்கு செங்கம்பள வரவேற்பளிக்கிறது...

அளவுக்கதிகமான பணம் ஒரு சாபம். 

அதனை பாத்திரமறிந்து இட்டு விட வேண்டும்.

அது அங்கு உபயோகமாகுவதை காணும் போது மேலான மகிழ்ச்சியை தருகிறது என்பது அதிசயமான உண்மை.

கடனில்லா பெருவாழ்வும்; மனதுக்குகந்த சிறு தொழிலும்; நோய்கள் குடியேறா உடலும்; பூமிக்கு பாரமில்லா வாழ்வும்; கூட்டிப் பெருக்கி சுத்தமாக இருக்கும் ‘அகமும்’, பிடித்ததைச் செய்ய போதுமான நேரமும்; உண்மை அன்பினை; அக்கறையினை பகிரும் குடும்பமும் நட்பும் போதாதா என்ன? 

ஒரு கட்டத்தில் பணத்தை விட நேரமும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக செலவு செய்கிறோம் என்பதும் தான் முக்கியமானதாகப் போகிறது....

மனம் நிறைந்த பின்னால், வேண்டிய எல்லாம் கிடைத்த பின்னால், பிறப்பின் இரகசியங்கள் நோக்கியும் உன்னத கலைகள் வெளிப்படுத்தும் அக மலர்ச்சி குறித்தும் மனம் நாட்டம் கொள்கிறது. அமைதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நம்மை பூரணமாக ஆட்கொள்ளும் போது மனம் மேலான எண்ணங்களில் சஞ்சரிக்கிறது. மெளனம் பரிமளிக்கிறது. அது மண்ணோடும் விண்ணோடும் நம்மைப் பிணைக்கிறது. உலகமே உன்னதமான ஒன்றாகத் தோன்றுகிறது. பூக்களோடும் மரங்களோடும் காய் கனிகளோடும் கூட ஓர் உறவு சித்திக்கிறது. கால் தொடும் புல்லின் ஸ்பரிசம் அத்தனை உன்னதமாக இருக்கிறது.  பிரபஞ்சத்தின் மீதான அன்பு பெருகுகிறது. உலக உயிரினங்களே நமக்கு நம் உறவுகளாகத் தோன்றுகிறது......

இதன் வழியாக நான் சொல்ல வருவது என்னவென்றால்,

 நண்பர்களே! 

இந்த பிரபஞ்சத்துக்கு என்று ஒரு சக்தி உண்டு. மனதுக்கும் எண்ணங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் நெருக்கமான பிணைப்பு என்று ஒன்றும் அதற்குள் உண்டு.  அது நம் மனம் மற்றும் எண்ணங்களோடு நமக்கு தெரியாமலே தொடர்பு கொள்ளுகிறது; பரிபாஷிக்கிறது;  நட்புறவோடு இருக்கிறது; வேண்டியதை கருணையோடு  நல்குகிறது.

நம்புங்கள்!!

‘மனம் போல மாங்கல்யம்’ என்று சொல்கிறார்கள்.

மேலும்,

‘நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்று சொல்வதெல்லாம் பொய்யில்லை தோழர்களே! 

அது உண்மைதான். 

நாம் வெறும் ஆரவாரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகமோ புரிந்து கொள்ளப்பட வேண்டிய இரகசியங்களால் நிறைந்து போயுள்ளது.

......................................

ஒரு சிறு பின்னிணைப்பு;

அண்மைய பயணம் ஒன்றின் போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்த ’வேத மந்திரங்கள்’ என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன். 

வேதம், வேதம் என்று சொல்கிறார்களே; மந்திரம் என்று இன்றும் சன்னிதானத்தின் கர்ப்பக்கிருகத்தில், கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்ட குருமார்களால்  உச்சரிக்கப்படும் மாண்பு பெற்றிருக்கிறதே; தொன்மைபெற்ற வாழ்வு பற்றிய தத்துவ சிந்தனையின் கருவூலமாக அமைந்திருக்கிறதே; தேவபாஷை என்றழைக்கப்படும் செம்மொழியில் உச்சரிக்கப்படுகிறதே; அதில்  அப்படி என்னதான் சொல்லி இருக்கிறது என்று  அறிய விரும்பியது தான் வாங்கக் காரணம். 

படித்தேன்; எனினும் வேதங்களும் மந்திரங்களும் என்னை அதிகம் ஆகர்ஷிக்கவில்லை. பொதுவாக அவை ’நான் உனக்கு இதை தருகிறேன்; நீ எனக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மந்தைகளையும் தா’ என்று கேட்கும் பண்டமாற்று வியாபாரம் தான் அங்கு அதிகம் நிலவுகிறது. 

இதனை விட மேலானவையாக தமிழ் தேவாரங்களும் பாசுரங்களும் விளங்குகின்றன என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது. அவை கடவுள் என்ற ஓர் அம்சத்தை போற்றித் துதி பாடுகின்றன. தத்துவங்களை தள்ளி வைத்து விட்ட பின்னாலும் தமிழ்மொழி பக்தியின் மொழியாகப் பொங்கி பொங்கி வழிகிறதை படித்து படித்து பரவசிக்கலாம்.

இருந்த போதும், ரிக் வேதத்தில் 5;51;11ஆவதாக வரும் இந்த சற்று வித்தியாசமான பாடலை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ( வேத மந்திரங்கள், விளக்கம் ஆசுதோஷானந்தர், இராமகிருஷ்ணமடம், 10ம் பதிப்பு, மயிலாப்பூர், சென்னை,  டிசெம்பர் 2017, பக்.357 )

‘ஸ்வஸ்திநோ மிமீதாம் ஸூக்தம்’ என்ற ரிக் வேத பகுதி இது. அதன் தமிழாக்கம் என்னவென்றால், ‘சூரிய சந்திரர்கள் வானில் தடையின்றி சஞ்சரிப்பது போல் நாமும் மேலான பாதையில் பாதுகாப்பாகப் பயணம் செய்வோம். நமக்கு மேன்மேலும் உதவி செய்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், நம்மைத் தெரிந்து கொண்டு நினைத்துப் பார்ப்பவர்கள் ஆகியோருடன் இணைந்து செல்வோம்.’

( இதில் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படம்  Nan Tien என்ற சிட்னியில், சீனர்களால் பரிபாலிக்கப்படும் புத்தவிஹாரம் ஒன்றில் 10.4.21 அன்று எடுக்கப்பட்டது. புத்த விஹாரத்தினால் நடத்தப்பட்ட கண்காட்சியின் போது மூன்றாவது இடத்தைப் பெற்ற இக் கலைப்படைப்பு,  வயர்களால் பின்னப்பட்ட ’மரமும் வேரும்’ என்ற பெயரில் வெளிப்புறமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ) 

Tuesday, March 16, 2021

இன்றய மொழிபெயர்ப்புச் சூழலில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புகள்

அண்மையில் சமஸ்கிருதக் கவி காளிதாசரை படிக்கவேண்டும் என்றொரு விபரீத ஆசை ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டது. 

முன் ஒரு தடவை தனிநாயகம் அடிகளாரைப் படித்த போது அவர் சொல்லி இருந்த சாகுந்தலத்தின் ஒரு இடம் மறக்கவொண்ணாததாக அடிமனதில் அமர்ந்திருந்ததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். அது என்னவென்றால், சகுந்தலை தன் தந்தையாரைப் பிரிந்து போகிற காட்சி. அதனை விபரிக்க ஒரு உவமையை காளிதாசர் சொல்கிறார். மலபார்கரைகளில் (மலையாளக் கரைகளில் ) செழித்து நிற்கிற சந்தன மரத்தினைப் பற்றிப் படர்ந்திருக்கிற கொடியை அந்த மரத்தில் இருந்து பிரிப்பதைப் போல சகுந்தலை தந்தையை விட்டுப் பிரிந்து போகிறாளாம். 

இது காளிதாசர் உவமை வழி சொல்லும் அழகியல் சார்ந்த புலமை அழகு. இந்தப் புலவனின் அழகே இந்த உவமைகள் தானே! அதனைப் புரிந்து கொள்ளாத மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்  தன் புலமையைக் காட்டும் படியாக அதிலிருக்கிற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தன் கவிதைகளின் வழியாக நமக்குக் கதை சொல்லிக் கொண்டு போகிற ஒரு மொழிபெயர்ப்பை வாசித்தேன். மேலுமொருவரின் மொழிபெயர்ப்போ எனில் ‘சந்தன மரத்தில் இருந்து அதன் பட்டையை உரிப்பதைப் போல சகுந்தலை தந்தையைப் பிரிந்து போகிறாளாம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. 

இன்னும் எனக்கு மூலமொழியில் காளிதாசர் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றே தெரியவில்லை......

உண்மையில் ஒருவருடய ஆக்கத்தை மொழிபெயர்க்க முயல்பவர்கள் முதலில் நல்ல ரசிகர்களாக இருக்க வேண்டும். இரண்டாவது அப் படைப்பின் முக்கியத்துவத்தையும், அதன் அழகியலையும், சொல்ல வரும் கருத்தையும் அது எழுந்த கால பண்பாட்டு வாழ்க்கைச் சூழலையும் உள்வாங்கி இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் காலமெடுத்து அதனை அசை போட வேண்டும். அசைபோடுதல் என்று நான் சொல்வதன் தாற்பரியம் என்னவென்றால், அது எழுந்த பண்பாட்டு அரசியல் பொருளாதார சூழலை மட்டுமன்றி அந்த ஆசிரியனைப் பற்றியும்  படிக்க வேண்டும். அறிதல் வேண்டும். அந்தப் படைப்பின் ஆத்மாவைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான்  இரண்டு மொழிகளின் மீதான புலமை அவசியப்படும். 

மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய ஒரு செயல். முடிந்தால் மாத்திரமே செய்ய வேண்டிய ஒன்றும் கூட.  இதனைச் செய்வதால் யாருக்கு அல்லது எதற்கு என்னவிதமான பயன் அல்லது பலன் என்பதை நமக்கு நாமே ஒருதடவை கேள்வி கேட்டு நம்மை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மொழிபெயர்ப்பதற்கான தகுதிப்பாடு நமக்கு இருக்கிறதா என்பதையும் அதன் வழியே  ஒரு தடவை நமக்கு நாமே  உறுதிப்படுத்திக்  கொள்ளுதல் அவசியம்.

‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ புத்தகத்தை மொழிபெயர்த்த கண. முத்தையாவை ஒரு தடவை நினைத்துக் கொள்ளுகிறேன். ‘தன்னை அறியும் விஞ்ஞானம்’ புத்தகத்தை மொழிபெயர்த்த கே. ராமசுப்பிரமணியம் என்பாரை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் அதனை ஒரு தொண்டாக; சமூக பற்றுறுதியோடும் பொறுப்புணர்வோடும் ஒரு வித பக்தியோடும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் தார்ப்பரியத்தையும் அறிந்தவர்களாக அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு தவத்தைப் போல தமிழையும் மூல மொழிச் சிந்தனையையும்  வளம்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இன்றய காலங்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நேரடியாக ஒரு ஆக்கத்தைப் பார்த்துவிட்டு, அதனை அப்படியே மொழியாக்கம் செய்ய முனைகிறார்கள். ஆகையினால் அது உயிரற்ற உடலைப் போல ஆகி விடுகிறது. 

ஆகையினால், மொழிபெயர்ப்புகள் குறித்தும்; யார் அதனை மொழிபெயர்க்கிறார்கள் என்பது குறித்தும்; நாம் ஒரு சிறந்ததும் தெளிவானதுமான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம்.  இல்லையெனில் அது விபரீதமாகப் போய் விடும் ஆபத்து அதில் அதிகம் உண்டு. அது மூல மொழிக்கு நாம் செய்யும் மொழித்துரோகமெனினும் மிகையில்லை.

இந்த ஒரு அவதானச் சூழலில் இருந்து கொண்டுதான், மொழிபெயர்ப்புகளுக்குள் நுழைவது பாதுகாப்பானது. இப்போது விரிந்துகிடக்கிற பரவலான சகலருக்குமான வாய்ப்புச் சூழல்கள் எல்லோரையும் படைப்பாளியாக்கி விடுகிறது; பணமிருந்தால் புகழையும் பிரபலத்தையும் கூட அது கொடுத்து விடுகிறது. நண்பர்களைப் பலவாறாகப் அது பெருக வைக்கிறது. இலகுவாக சமூக வலைத்தளங்கள் அவைகளை ஊதிப் பெருப்பித்து வீங்கச் செய்து இன்னொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டும் சென்று விடுகிறது....

இப்போதைய ’வலை சூழ்’  வாழ்க்கைச் சூழல் அவ்வாறானது. ஆகையால் கவனமாய் ‘நடந்து செல்லுதல்’ அவசியம்.

அது நிற்க,

கடந்த சில மாதங்களின் முன் கனலி என்றொரு சிறந்த இணையப் பத்திரிகையில் கீழ்வரும் இந்த கீதா மதிவாணனின்  மொழிபெயர்ப்புக் கவிதையைப் படித்தேன்.


என் படகு பெரிதாய் எதிலோ மோதியுடைந்து 

ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்ட உணர்வு


ஆனால் எதுவும் நடக்கவில்லை

எதுவுமில்லை... நிசப்தம்... அலைகள்...


எதுவும் நடக்கவில்லையா?

அல்லது எல்லாமே நடந்து முடிந்துவிட்டதா?

இப்போது நாம் அமைதியாய் நின்றிருப்பது

அடுத்த பிறவியிலா?


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் என்பாரின் ( 1881 - 1958 ) இந்தக் கவிதையை ஆங்கில வழியில் இருந்து தமிழுக்கு ’கனலி’ யூடாக எடுத்து வந்த கீதாவின் கவிதை அது.  

( இதனைக் காண இங்கே கனலி அழுத்துங்கள் )

இந்தக் கவிதை வாழ்வுக்கும் இறப்புக்குமான ஓர் உயிரின் இடமாற்றத்தை ( Transformation ) எளிமையாக அறிவிக்கிறது என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.  

( இது போன்றதான கருவை கொண்டதான ஓர் அவுஸ்திரேலிய சிறுகதை ‘ A long wait' இனை கடந்த வருடம் SBS வானொலி மொழிபெயர்த்து ஒலிபரப்பாக்கியது. அதனை சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள் மொழிபெயர்த்து, தன் குரலில், புலமையோடு தருவதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி கேட்கலாம். A long wait  இவைகள் எல்லாம் ஒரு இறப்பின் போதான உயிரின் இடமாற்றத்தை சிந்திக்கும் செயல் நுட்பங்கள். )

ஆனால் அண்மையில் கீதாவின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வேறு சில புது கதைகளைப் பார்த்த பின்னால் மொழிபெயர்ப்புலகில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் இக் கவிதை கச்சிதமாகப் பொருந்திப் போவது போல தோன்றுகிறது.

மிக இலகுவாகவும் எளிமையாகவும் வியக்கத்தக்க வகையிலும் நடந்து முடிந்து விடுகிறது அந்த லாவகம் மிக்க transformation. 

அவரின் மொழிபெயர்ப்பு கதைகளையோ கவிதைகளையோ படித்து முடித்து விட்ட பின்னால் இரண்டு விடயங்கள் மனதில் கூடாரம் போட்டு தங்கியும் தேங்கியும் விடுகின்றன. லாவகமாக அதே நேரம் ஒரு வித எளிமையோடும் ஒரு செயலைச் செய்து முடித்து விட்ட கைவண்ணம் என்பது ஒன்று. மற்றயது தெரிவு செய்த பொருளும் அது வெளிப்படுத்தும் காட்சிப் படிமமும் என்பது மற்றொன்று.

கனலியில் வெளி வந்திருக்கும் கீதாவின் மற்றொரு மொழிபெயர்ப்புக் கவிதை இது.

’ஒரு றோஜாவைப் போல 

ஒவ்வொரு இதழாய் பிய்த்தேன் உன்னை

உள்ளிருக்கும் உன் ஆண்மாவைக் கண்ணுற

என்னால் அதைப் பார்க்கவே இயலவில்லை.


ஆனாலும் சூழ்பரப்பு யாவிலும் எங்கெங்கும்

நிலத்தின் கடலின் நீள்எல்லை வரையிலும்

ஏன் அந்த முடிவிலியிலும் கூட வியாபகம் கொண்டிருந்தது

அளப்பரியதும் உயிர்ப்புமான ஒரு பரிமளம்’


இப்படியாகத் தான் இறுதியாக ஒரு ’பரிமளம்’ அவரின் கைவண்ணத்தில் பிரகாசிக்கிறது. நிஜமாகவே!

கடுமையான வித்துவச் சொற்களைக் கையாளாமலே மிக நேர்த்தியாகவும் நளினமாகவும் அதே நேரம் வசீகரமாகவும் மொழியைக் கையாளும் கலை கைவரப் பெற்றவர் கீதா. உதாரணமாக ‘மேக்வாரியின் நண்பன்’ என்றொரு கதை. மதுச்சாலை உரையாடல்களைக் கொண்டமைந்த, நட்பின் உயர்வை பேசும் அற்புதமான ஒரு கதை. அதில் ஒரு காட்சி விரிகிறது.  ஒரு குடிகாரன் மேசையருகில் வந்து நிற்பதை விபரிக்கும் இடம் அது. ‘.....அந்த மகா மோசமான ஜென்மம் தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் அமைதி காத்தான். அவனது கைகள் மேசையின் விளிம்பை இறுக்கிப் பிடித்திருந்தன. விறைப்பாய் நின்ற கைகளுக்கிடையே தலை தொங்க, அழுக்குத் தரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  பிறகு தலையை நிமிர்த்தி மெல்லிய குரலில் பேசினான்....’ (பக் 147)

சண்டைக்குத் தயாராகும் அந்தக் குடிகார நண்பனை விபரிக்கும் இடம் இது. ‘.......அவன் கடையின் பின்புறம் சென்று, கையிலிருந்த கண்ணாடிக் குவளையை வீசி எறிந்தான். தொப்பியைத் தூக்கி எறிந்தான். கால்சராயை இடுப்புவாரில் இறுக்கிப் பிடித்தான். அது கணுக்காலுக்கு மேலே துக்கிக் கொண்டு நின்றது. மேற்சட்டையின் கைகளை மடித்து விட்டான்......’ (பக். 151)

ஓர் ஆரம்ப கால அவுஸ்திரேலிய ஆங்கில மொழியிலமைந்த ஒரு கதையாடலை; அதன் காட்சிப் படிமங்களை மிக எளிய தமிழில், புரியும் படியான கொச்சையற்ற அழகு மொழியில் பிடித்துவரும் லாவகமும்,காட்சி விபரிப்பும் ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை எடுத்து வரும் ஆற்றலும்  கீதாவின் மிகப்பெரிய பலம். 

புதர் காடு, ஓடைக்கரை, மது விடுதி,ரோமக்கத்தரிப்பு நிலையம், தனிமைத் தருணங்கள், போக்கிரிப்பயல், அரைமனம், சகாயவிலை,கொட்டகை, விலவண்டி, தீவனப் பயிர்.... இவ்வாறாக பெருகி வரும் சொற்களுக்கான மூல மொழியாடல் என்னவிதமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதனை தமிழுக்கு மடைதிருப்ப எத்தனை பிரயத்தனங்களை அவர் மேற்கொண்டிருக்கக் கூடும்? எனினும் எத்தனை அநாயாசமாக அதனை இலகு தமிழுக்கு திருப்பி விடுகிறார் என்பது ஆச்சரியம்.

கீதாவின் மொழிபெயர்ப்பினூடாக ஹென்றியை அறிய முயல்கின்ற போது அவருடய பெரும்பாலான கதைகள் ஒரு மனித சுபாவத்தை ஒரு காட்சிப் பின்னணியில் மிகத் துல்லியமாக எடுத்துரைப்பனவாக அமைகின்றன. புறத்தோற்றத்தினாலன்றி கதாபாத்திரங்கள்  அவர்களின் அன்றாட குண இயல்புகள் வழியாகவே ஹென்றியால் கட்டமைக்கப்படுகிறார்கள். உன்னிப்பாக மனித சுபாவத்தை கவனித்து, தன் கதையில் இயல்பாக நடமாட விடும் ஹென்றியின் உச்சபட்ச திறமை கீதாவின் கைவண்ணத்திலும் சிதைவின்றி வந்திருக்கிறது.  பிறைட்டனின் மைத்துணி, பொறுப்பிலி, மேக்வாரியின் நண்பன், ஆசிரியர் செய்த பிழை, சமையல்காரரின் நாய், அவள் பேசவில்லை, ஒற்றைச்சக்கரவண்டி, சீனத்தவனின் ஆவி, மந்தை ஓட்டியின் மனைவி போன்ற கதைகள் ஒவ்வொரு மனிதர்களையும் துல்லியமான காட்சிப்புனைவுகளாக மனித உருவங்களுக்கு அவரவர் தனித்துவமான குணங்களூடாக உயிர் கொடுத்த பாத்திர வார்ப்புகளாக நம் கண்முன்னே உலா வருகிறார்கள். அவர்கள் வேறு மொழி பண்பாட்டு சிந்தனைச் சூழலில் இருப்பவர்களாக இருக்கின்ற போதும்.....அது மொழியை லாவகமாகக் கையாளத்தெரிந்ததால் வந்த விளைவென்றே எனக்குத் தோன்றுகிறது.

 ஹென்றியின் இந்த ஆழுமைப் புலத்தை நன்கு விளங்கிக் கொண்டவராக கீதாவும் இருந்திருக்கிறார் என்பதுவும் அதன் பலத்தை; சிறப்பை தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு அதனை அவர் ரசித்து, விதந்து தன் அநாயாசமான மொழிவீச்சின் வழியாக அந்த குணங்கள் நிரம்பிய உருவங்களை எம் கண்முன்னே உலவ விடுகிறார் என்பதும் கீதாவின் மொழிபெயர்ப்புகளை நாமும் ரசிக்க  இன்னொரு முக்கிய காரணம்.. அது ஒரு பொறுப்புணர்வின் பாற்பட்டது. மூல ஆசிரியனுக்கும் கொடுக்கும் உயர்வான மரியாதை அது!

கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுப்பை படித்த நாளில் இருந்து நான் அவரின் மீது மதிப்பு கொண்ட ரசிகையாகி விட்டேன். அதற்கு அவரது இந்த பொறுப்பு மிக்கதான குண இயல்பே முக்கிய காரணம். 

குணம் என்று இங்கே நான் முக்கியமாகச் சொல்ல வருவது என்னவென்றால் மொழிமீது அவர் கொண்டிருக்கிற விசுவாசம்; மூல படைப்பாளியின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றுறுதியும் ஒருவிதமான விசுவாசம் கலந்த அன்பும் பொறுப்புணர்வும், அதனை தமிழுக்கு தர அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கு அவர் கொடுக்கும் நேரமும் உழைப்பும். ஓர் ஆலயம் தன் பிரசாதத்தை பக்தர்களுக்குக் கொடுப்பதைப் போல ஒருவித பவித்திர உனர்வோடு அதனை தமிழ் இலக்கிய உலகில் அவர் சமர்ப்பிக்கும் அந்தப் பாங்கு....

‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பில் மேலும் சில புதிய சிறுகதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. அத்தனையும் முத்து முத்தான சிறுகதைகள். ஆரம்ப கால அவுஸ்திரேலியர்களின் வாழ்வை; பாடுகளை; உணர்வுச் சித்திரங்களாக்கி ஹென்றி லோஷன் உலவவிட; அதற்கு எந்தவிதமான பாதிப்பும் நேர்ந்து விடாதவாறு பக்குவமாக அதனை அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அதனைத் தமிழுக்குத் தந்து தமிழுக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கீதா.

இருந்த போதும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பை முதற்பதிப்பில் வந்த அதே அளவு கதைகளோடு தந்து விட்டு,  இன்னுமொரு மொழிபெயர்ப்புத் தொகுதியை இதில் பிரத்தியேகமாக இனைக்கப்பட்டுள்ள 7 கதைகளோடு, மேலும் சில கதைகளையும் மொழிபெயர்த்து இன்னொரு புத்தகமாகத் தந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற புத்தகத் தலைப்பு ஹென்றி லோஷனின் ஒரு சிறுகதையின் தலைப்பாக இருந்திருக்கிறது. அதனால்  கீதா அந்தத் தலைப்பை இந்தப் புத்தகத்துக்கு வைத்திருக்கக் கூடும். ஆனால், அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் மொழிபெயர்ப்புகள் என்பதை இந்தத் தலைப்பு எந்த விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; ஹென்றி லொஷன் சிறுகதைகள் என்று அடைப்புக் குறிக்குள் அது இடம்பெற்றிருக்கிற போதும்.... மாறாக, ஹென்றி லோஷன் சிறுகதைகள்  என்று பொதுவாகத் தலைப்பிட்டிருந்தால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

இருந்த போதும், ஹென்றிலோஷனையும் ஆரம்பகாலகட்ட அவுஸ்திரேலிய வாழ்வியலை நமக்கு மிக இலகுவாக அறியத்தந்தமைக்கும் கீதாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதை விட, என் ஆத்மார்த்தமான நன்றியறிதலைச் சொல்லவே நான் பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஏனென்றால் அவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கு அதன் ஆரம்பகால பங்களிப்பாளராக தன் கடமையை செவ்வனே செய்து நிலையாக தன் இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். 

அவரிடம் இருந்து மேன்மேலும் பல அவுஸ்திரேலிய இலக்கியப் படைப்பாளிகளின் இலக்கியச் செல்வங்கள் அவரின் வழியாகத் தமிழை அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை.

இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன்னர் ‘கனலி’ இணையப் பத்திரிகையில் அவரால் மொழிபெயர்க்கப் பட்ட இந்தக் கவிதையோடு விடைபெறுதல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

( முழு நிலவு வானை வியாபித்து, ஒளியால் பரிபாலித்த படி, பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் குளிர்மை மிக்க திவ்ய ஒளி உலகை ஒளியால் குளிப்பாட்டுகிறது. அதனை ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் தன்மொழியில் தர, அதை கீதா தமிழுக்குத் தருகிறார், இப்படியாக....)


கதவு திறந்திருக்கிறது

சில்வண்டு ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது

நீ நிர்வாணமாகத்தான் வலம் வரப் போகிறாயா 

அவ் வயல்களினூடே?


அழிவில்லாத நீர் போல

எல்லாவற்றினுள்ளும் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாய்

நீ நிர்வானமாகத் தான் திரியப் போகிறாயா 

அக் காற்றினில்?


துளசிச் செடி தூங்கவில்லை

எறும்பு சுறுசுறுப்பாய் இயங்குகிறது

நீ நிர்வானமாகத்தான் உலவப் போகிறாயா

வீட்டில்?

Saturday, February 20, 2021

அந்த நீல மாபிள் கண்களும் அவலச் சுவையும் நம் தத்துவப் பரிஹாரங்களும்....

 நேற்றய தினம் உருகி நின்ற நீல மாபிள்கள் இரண்டைக் கண்டேன். 

அது பிங்லேடி அப்பிளின் மேல் பதிந்து நின்ற இரு நீலக் கண்கள். 

ஆறுவயதுக் குழந்தைக்குரியவை. தனியே விடப்பட்டதன் அச்ச உணர்வை கொண்டிருந்த உணர்ச்சிக் குவியலென அவை....உணர்வுக் குவளையென அந்தக் கண்கள்....உருகி நின்ற நீல மாபிள்கள்...கண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த நீல டொல்பின்கள்.......அதற்குள் ஊடாடி நின்ற மருட்சி! அது ஒரு மான்குட்டியின் மருட்சி!  

அவளை சமாதானம் செய்ய ஒரு ஸ்டிக்கர் போதுமாக இருந்தது. என்றாலும் அந்தக் கண்களை; அது கொண்டிருந்த உணர்ச்சிகளை மறக்க முடியவில்லை; அது துன்பத்தின் பாற்பட்டதல்ல; அது ஒரு அவல, பய உணர்வின் வெளிப்பாடு. என்ன செய்யப் போகிறேன் என்று எதுவுமே தெரியாது நிற்கதியாய் நிற்கும் நிலை. ஒரு பரிதவிப்பு நிலை.

 போரில் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.... 

போர் ஒன்றை எந்த ஒரு உயிரினமும் இனிப் பார்க்காதிருக்க இந்தப் பிரபஞ்சம்  அருள்பாலிக்க வேண்டும்! 

...........................

இதனைப் பார்த்த போது அண்மையில் படித்த சமஸ்கிருதப் பெண் ஒருத்தி நினைவுக்கு வந்தாள். அவள் அன்பு கொண்டிருந்த தலைவன் பரத்தையிடம் போய் விட்டு வருகிறான். அவன் எங்கு போய் வந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். போகிறவனை அவள் என்ன செய்துவிட முடியும்? 

மாருளை என்ற பெண் கவிஞை ஒருத்தி வட மொழி இலக்கியத்தில் பதித்தது அது. ஒருவித நிர்க்கதியோடு அவனை எதிர்கொள்கிறாள் பெண். மனசெல்லாம் பாரத்தோடு அவள் நிற்கிறாள். முட்டி வழிகிறது வருத்தம். ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல அவன் கேட்கிறான். ஏன் மெலிந்து போயிருக்கிறாய்? அவள் சமாதானம் சொல்கிறாள். நான் அப்படித்தானே! மேலும் அவன் தொடர்கிறான்... ஏன் அழுக்காக உன்னைக் கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? அவள் வீட்டுவேலை என்று மழுப்புகிறாள். உனக்கு என் நினைவு இருக்கிறதா என்று மேலும் அவன் கேட்கிறான். அவ்வளவு தான்!  இல்லை, இல்லை என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கிவிட்டாளாம்.

இந்த நிர்க்கதி நிலை பின்னர் கண்ணீரை கொண்டுவருகிறது. நம் திராவிடப் பெண்கள் அழுதிருக்கிறார்கள். காதலுக்காக; கடந்து போனவர்களுக்காக; போரில் மாண்டவர்களுக்காக அவர்கள் அழுதிருக்கிறார்கள். அதன் உச்ச பட்சமாக இறந்தவர்களை; வீர நாயகர்களை தெய்வாம்சத்துக்கு உயர்த்தி அவர்களை நடுகற்களாக வழிபட்டிருக்கிறார்கள். ஆனாலும், காதலையும் போரையும் தாண்டிய ஒன்றை அவர்கள் கற்பனை பண்ணவில்லை. மிக யதார்த்தமாக வாழ்க்கையை எதிர்கொண்டு ‘அனுபவித்து’ வாழ்ந்திருக்கிறார்கள். 

வாழ்க்கை குறித்த தத்துவார்த்தம் தொனிக்கும் பாடல்களிலும் கூட இந்த வாழ்க்கை தற்காலிகமானது ஆற்றில் விழுந்துவிட்ட இலை ஒன்று ஆற்றின் ஓட்டத்துக்கு ஏற்ப ஓடுவது போன்றது தான் நம் வாழ்க்கை என்றவாறாகவே வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார்கள். உண்பது நாழி உடுப்பது இரண்டே தான் என்று தேவையை வரையறுத்து வைத்திருந்தார்கள். அதனால் பேதமற்ற எளிய வாழ்வு சித்தித்திருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் வருத்தங்களுக்கு மாற்று கருத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

மாறாக சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு அப்பாலான கடவுள் சித்தாந்தம் ஒன்றை கற்பனை செய்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்டது. அதனால் வரும் துன்பங்களுக்கு விதியே காரணம் என அது ஆறுதல் கொண்டது. 

நம்முடய எண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன நம் வாழ்க்கை பற்றிய பார்வையை; வாழ்க்கையை  எப்படி எல்லாம் மாற்றியமைக்க வல்லதாக இருக்கிறது என்பது ஒரு அதிசய விஞ்ஞானம்; 

விஞ்ஞிகை என்ற பெண் விதியின் வலிமையைப் பற்றி சொல்லும் ஸ்லோகம் ஒன்றில் ’துன்பமாகிய பொல்லினால் (தண்டம்) மனதுக்கு அடிக்குமேல் அடி கொடுத்து அதனை மண்ணைப் போல பிசைந்து அதனை உருட்டிப் பிடித்து ஓயாமல் சுளன்றுகொண்டிருக்கும் சிந்தை (எண்ணம்) என்ற சக்கரத்தில் வைத்து பெரிய குயவன் ஒருவனைப் போல இந்த விதி என்னைச் சுளற்றுகிறதம்மா; நான் என்ன செய்வேன்? என்று வருந்துகிறாள்.( இவளுடய காலம் 7ம் நூற்றாண்டு என்று அறிய முடிகிறது. மேலும் இவள் இரண்டாம் புலிகேசியின் புதல்வனான சந்திராதித்தியனின் மனைவி என்றும் தெரிகிறது)

சுபத்திரை என்ற பெண் கவிஞை விதியை - அது நல்லவர்களையே வாட்டுகிறது என்பதை பாலுக்கு உவமை சொல்லிப் பாடுகிறாள். பால் அதன் தரம், சிறப்பு என்பவற்றுக்காக பசுவில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டது; பிறகு அதனைக் காய்ச்சி அதன் இனிமை எடுக்கப் பட்டது; அதன் பிறகு கடைந்து அதன் சாரமாகிய வெண்னையும் எடுக்கப் பட்டது; இவ்வாறெல்லாம் அபகரிக்கப் படுவதற்கு பாலின் சுவை, தரம், தன்மை அன்றோ காரணமாகி விட்டது என்கிறாள் அவள்.

இந்த விதி குறித்து சரஸ்வதி என்ற பெண் கவிஞை காணும் காட்சி சற்று வித்தியாசமானது. அவள், தாளையை பார்த்து சொல்கிறாள். ‘தாளையே உன் இலைகள் வாளைப் போல கூர்மையுடன் இருக்கின்றன. உன்னிடம் தேனே இல்லை; உன் பூவிலுள்ள மகரந்தப் பொடிகளோ காற்றில் கலந்து கண்ணை உறுத்துவனவாக உள்ளன. ஆனாலும் உன்னை நாடி வண்டுகள் வருகின்றன. உன் பூவின் மணம் என்ற ஒன்று எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறதே என்கிறாள்.

லக்ஷ்மி என்ற பெண் தன் சுலோகத்தில் விதியை இப்படியாகக் காண்கிறாள். பலர் விஷய தானங்களோடு அறிவுடையவர்களாக இருந்தாலும் அதிஷ்டமும் அபிமானமும் சிலருக்கே கிட்டுகிறது என்பதை கண்ட அவள், ‘காடுகளில் புது மலர்கள் எல்லாவற்றிலும் விழுந்து புரளும் வண்டு கந்தபலி என்ற பூவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை; அதற்கு என்ன மணமும் குணமுமா இல்லை? அழகுக்கு என்ன குறைச்சல்? ஆனாலும் வண்டுகள் ஏன் முகர்வதில்லை? இது தான் விதிச் செயலோ என்று கேட்கிறாள்.

நம் இலக்கியப் பெண்கள் எல்லாரும் முத்துமுத்தாக கண்ணீர் விடுவார்கள். பிறகு  அவர்கள் இறந்தவர்களை பாட்டிலும் நடுகல்லிலும் வைத்தார்கள். யதார்த்த வாழ்க்கையினை அதன் இயல்போடு அப்படியே ஏற்றுக் கொண்டு  வாழ்ந்தார்கள். உண்மையும் இயல்பும் இயற்கையும் காதலும் போரும் சமத்துவமுமான வாழ்வு அது. 

இல்லாத ஒன்றை அவர்கள் காணாததால் தன்னம்பிக்கை அங்கு நிறைந்திருந்தது. காத்லித்தவன் கைவிட்டதற்கு அவர்கள் விதியைச் சரனடையவில்லை. மாறாக காதலனைக் காணாமல் அவனைத்தேடிப் புறப்பட்ட வெள்ளிவீதியாரையே நாம் இலக்கியத்தில் காண்கிறோம்.அந்தக் கவிஞை விதியை குற்றம் சாட்டவில்லை; இல்லாத அல்லது தெரியாத தெய்வீக அம்சத்தில் அவள் பழி போடவில்லை; அவள் தன்னை விட்டு விட்டுப் போனவனை குறுந்தொகையில் தேடுகிறாள் இப்படி,


நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  (குறு;130)

நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா? அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு!

அவள் திராவிட பெண்! 

அவர்களுடய அழுகை வீரத்துக்காக விளைந்த ஆனந்த அழுகையாக இருந்திருக்கிறது. அல்லது காதலுக்காக அழுத பிரிவுத்துயரால் விளைந்திருக்கிறது. கீழே வரும் பாடல் வீரமரபில் வந்த தலைமயிர் நரைத்த கிழவியின் ஆனந்தக் கண்ணீர் வகை சார்ந்தது.

புறம் 277 இல்

மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெழுத்திருப்பது போல நரைத்த கூந்தலைக் கொண்டிருக்கும் பெண் தன் மகன் போர்களத்தில் யானையைக் கொன்று தானும் மாண்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அவனைப்பெற்றதிலும் பார்க்க மகிழ்கிறாள். ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கிறாள். இருந்தாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர். அது எப்படி இருக்கிறதென்றால் மழைத்தண்ணீர் மூங்கில் இலையில் இருந்து துளித்துளியாய் விழுவதைப் போல இருக்கிறதாம். ( மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல்.....)

'பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 

பிறங்கு இரும் முன்னீர் வெறு மணலாக

புறங்காலின் போக இறைப்பேன் முயலின்

அறம் பனையாகலும் உண்டு’

நல்லந்துவனாரின் இந்த பாடல் அடிகள் (144)

அலை எழுந்து பொங்கும் பெருங் கடலே என்னைப் பேணாமல் என்னை விட்டு விட்டுப் போனவனைத் தேடிப் போக எனக்கு கொஞ்சம் வழிவிட்டுத் தாருங்கள். அப்படி நீங்கள் எனக்கு வழி விடவில்லையானால் என் புறங்காலால் இந்த நீர் முழுவதையும் இறைத்து உன்னை வெற்று மணலாக்கி விடுவேன். இது இயலுமா என்றால் இயலும். என் முயற்சிக்கு நல்லறம் துணை நிற்கும். எனவே என்னால் அது இயலும் ‘ என்று தன்னம்பிக்கை மிளிர பாடும் இந்தப் பாடல் திராவிட சிந்தனையின் ஒரு முத்து எனிலும் பொருந்தும். 

அது கடவுள் மீதோ விதியின் மீதோ பழி போடவில்லை. சரியாக நடந்தால் அந்த அறமே அதைக் காக்கும். என்னால் வென்றுவிடமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது அப் பாடல். ‘நன்றும் தீதும் பிரர் தர வாரா என்ற பண்பாட்டின் வழி அது!

கலித்தொகையின் பிறிதொருபாடலில் காதலனைப் பிடித்து தராவிட்டால் நிலவிலே இருக்கிற முயலை நாயிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிற தோழியை நல்லந்துவனார் இப்படிக் காட்டுகிறார். அந்தப் பாடல் இது.

‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயலால்

எம்கேள்! இதனகத்து உள்வழி காட்டீமோ?

காட்டீ யாயின் கதநாய் கொளுவவேன்

வேட்டுவர் உள்வழி செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீரா யெனின் (144)

தலைவி தலைவனைத் தேடிச் சலித்துப் போய் விடுகிறார். இந்த பரந்த உலகில் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உலகம் முழுவதையும் உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலவிடம் கேட்கிறாள்; இங்க பார்! நிலவு! உன்னட்ட இருக்கிற முயல் இங்க முயலாகத் தான் தெரியுது. ( நிலவில் இருக்கிற களங்கத்தை இவள் முயலாகக் காண்கிறாள். நாம் ஒரு பாட்டி கால்நீட்டி இருக்கிறாள் என்று கதை சொல்கிறோம் இல்லையா; அதுமாதிரி) முயலே! என் தலைவன் எங்க இருக்கிறான் எண்று எனக்குச் சொல்லிவிடு. இல்லையென்றால் உன்மீது சினம் கொண்டு நாயை ஏவி விடுவேன்.அல்லது வேடர்களிடம்  உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன். நான் இப்ப மூளை (மதி) கலங்கிப் போய் இருக்கிறேன். இப்ப என் துயரத்தை நீ தீர்த்து வைக்கவில்லை  என்றால் சந்திரனோட ( மதியோட) உன்னையும் சேர்த்து பிடிக்கச் சொல்லி பாம்பையும் ஏவி விடுவன் எண்டு எச்சரிக்கிறாள்.

தன்னம்பிக்கையும் வெளிப்படை உணர்வும் கொண்ட வசீகரமான கம்பீரமான தமிழ் திராவிடப் பெண்கள் இவர்கள்!

நம்மிடம் இந்த ஆரிய மத நம்பிக்கைகள் ஊடுருவாமல் இருந்திருந்தால் நம் நம்பிக்கைகள் வேறொரு பாதையில் போயிருக்கும் என்றே தோன்றுகிறது.

நேற்றய தினம் Eda என்ற சிறுமியின்  நீல மாபிள் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரும் அது என்னைக் கண்டதும் சிதறி விழுந்த அதன் உடைவும்  எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்து விட்டுப் போயிருக்கிறது.....

எடாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, February 13, 2021

ஆரிய, திராவிட சிந்தனை மரபு

 நாலே நாலு விஷயம் தான். 

ஆதித் திராவிடத் தமிழர்களின் வாழ்க்கை முறை ஆரிய பண்பாட்டுச் செல்வாக்கிற்கு முன்னால் எப்படியாக இருந்தது என்பதை 4 சிறு உபதலைப்பின் கீழ் காணுதல் இந்தக் கட்டுரையில் நோக்கம்.

1. நாளாந்த வாழ்க்கை

2. இயற்கையை போற்றிய வாழ்வும் ஜீவகாருண்யமும்

3.கல்வியும் அறிவு சகலருக்குமானதாக இருந்தமை

4.உழவுக்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தமை.

இதற்குள்ளே நிற்கவேண்டும் என்று எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டாயிற்று; மேலும் தகவல்களைத் தேடாமல் மனம் குறித்துக் கொண்ட விடயங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களை நேரடியாக இங்கு  எழுத்தில் பதித்து விட வேண்டும் என்றும் தோன்றிற்று.

அண்மையில் பரிபாடல் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட ஒரு பாடல் வரி தான் இந்த எண்ணப் பதிவுக்குக் காரணம். அது,

‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புவீர்யீ! கேண்மின் சிறந்தது;

காதற்காமம் காமத்துச் சிறந்தது; 

விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;

புலத்தலிற் சிறந்தது கற்பே......’

என்றவாறாக விரிந்து பெருகும் பாடல் அது! 

1. அது சொல்லும் பொருள் என்னவென்றால் ’நான்குவேதங்களையும் விரித்துரைத்து அவற்றின் புகழை எல்லாம் உலகுக்கு விளக்குகிற, வாய்பேச்சில் வல்லவர்களான வடமொழிப் புலவர்களே! சிறந்த ஒன்றைக் கூறுகிறோம்;  கேளுங்கள்! ‘காதலோடு மனமொத்துக் கூடிப் பெறுகிற இன்பமே காம இன்பங்களுக்குள் சிறந்தது. பிற பெண்களிடம் சென்றுவிட்டு ஊடலினால் பெறும் இன்பம் உண்மையில் இன்பம் அன்று; தம் கணவர் தம்மைவிட்டு அகன்றதை அறியாதவரான இல்லத் தலைவியர்களை வருத்தும் தவறினைச் செய்யாத;  தள்ளுவதற்கு இயலாத அகப்பொருள் பண்பாட்டின் இலக்கணத்தோடு அமைந்த தண்மை பொருந்திய தமிழ் பண்பாட்டின் வழியிலே வந்த மக்கள் வாழும் பரம்குன்றம் இது’ என்றவாறு பொருள் கொள்ளத்தக்கதாக அப்பாடல் அமைந்துள்ளது.

இந்தப் பாடல் கிளப்பிய சிந்தனைதான் இந்த ஆரிய திராவிட சிந்தனை மரபின் வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் காணும் ஆர்வத்தைத் தூண்டியது. 

சங்க காலமாகிய கிபி 1 - 3 நூற்றாண்டுகளுக்குள்ளேயே வட இந்திய ஆரிய சமஸ்கிருத பண்பாட்டு வாழ்க்கைமுறை, தத்துவார்த்த சிந்தனைகள் எல்லாம் தென் இந்தியா எங்கும் புகுந்து மக்களால் பின்பற்றப்படும் வாழ்க்கைமுறையில் ஒன்றாகி விட்டது.

அதனால் ஆதித் திராவிட பண்பாடு அதாவது சுத்த தமிழ் பண்பாடு எது ஆரியப் பண்பாடு எது என்பது குறித்துப் பார்ப்பது, நம் மூலத்தை அறிந்து; நம் மூல வேர் எது? நம் சிந்தனை மரபு எத்தகையது என்ற தெளிவினை பெற அது உதவும்.

திராவிட வாழ்க்கைமுறையில் சாதிப்பாகுபாடுகள்; இனப் பாகுபாடுகள்; ஆண்பெண் பேதம் எதுவுமில்லாததாக அது விளங்கியமைக்கு சங்க காலப் பாடல்கள் சாட்சி. அதனைப் பாடியவர்கள் பல்வேறு தொழிலைப் புரிந்தவர்களாக இருந்தார்கள்; பெண்பாற்புலவர்களும் இருந்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்தார்கள். வாழ்வு பற்றி அறிவார்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அதனால் ’பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்ந்தல் அதனிலும் இலமே’ என்று அடக்கத்தோடு வாழ்ந்தார்கள். யாண்டு பலவாக என்ற சங்கப்பாடல் ’கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று பெருமை கொள்ளும் படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். ‘உண்பது நாழி; உடுப்பவை இரண்டே’ என்று எளிமை வாழ்வை அதன் அடிப்படை தேவைகளை சொன்னது தமிழ் அறம்.

இதே காலப்பகுதியில் உள்ளே புகுந்த ஆரியப் பண்பாட்டின் செல்வாக்குகள் ஆங்காங்கே ஒலிப்பதை சங்கப் பாடல்களிலேயே காணலாம். அவர்கள் வர்ண பாகுபாட்டை கொண்டு வந்தார்கள். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக பிறக்கிறான் என்றார்கள்.  படிப்பும் அறிவும் பிறப்பால் உயர்ந்தவனாகப் பிறக்கும் ஒருவனுக்கே உரியது என்றார்கள்.இப்படியாகப் பின்நாளில் தமிழரின் மேன்மை பொருந்திய  வாழ்க்கை ஒன்று சாதியால் பிளவு பட்டது. அது நம் ஆதி வாழ்வு அல்ல; அது நம் வாழ்வில் புகுந்த ஒன்று.

2. ஆதித் திராவிட தமிழன் இயற்கையை ஆராதித்து இயற்கையை தன் வாழ்வின் ஒரு கூறாகவே கண்டான். அதற்கும் சங்கப் பாடல்களே சாட்சி. ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்று முல்லையோடு கோவிக்கும் தலைவியும்; புன்னைமரத்தடியில் என்னைச் சந்திக்காதே காதலா! அது மரமல்ல என் தங்கை  என்று காதலனுக்கு சொல்லும் காதலியும்; நாம் சந்தித்ததற்கு நாரை மட்டும் தான் சாட்சி என்று நாரையை சாட்சிக்கழைக்கும் தலைவியையும் கொண்டதாக அமைந்தது தமிழ் திராவிட காதல் வாழ்வியல். முற்றத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது அணில்கள் கொண்டாட்டமாக ஓடித்திரியும் என்பதை கண்டு பாடலில் அதனை வைத்ததால் அணிலாடும் முன்றிலார் என்று ஒரு புலவர் பெயர் கொண்டது தமிழ் திராவிட பண்பாட்டின் அழகியல். மாறாக ஆரியப் பண்பாடு உயிரினங்களை ஆகுதி ஆக்கி அக்கினியில் போடப் பணித்தது. கடவுளை மகிழ்விக்க யாகங்கள் பிறந்தன. அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் மாத்திரம் உயரிய உரிமைகளை அது வழங்கியது.

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆதித் திராவிடத் தமிழ் பண்பாடு சகல உயிர்களையும் தன்னைப் போலவே பிறரையும் பிற உயிரினங்களையும் மட்டுமல்ல இயற்கை வளங்களையும் மரங்களையும் கூட நேசிக்கும் அறத்தை கொண்டு விளங்கியது.

ஜீவன்கள் மீதான அவர்களின் காருண்யம் எத்தகைய மேன்மை பெற்றதாக விளங்கியதென்பதற்கு புறநானூறில் வரும் கோவூர் கிளாரின் 46வது பாடல் சாட்சி.(நீயே, புறவின் அல்லல்...)  இரவு நேரம் கடற்கரை மணலில் நண்டுகள் ஓடித்திரியும். அவைகளில் தேர்சக்கரம் மிதிபடாமல் வர வேண்டி இருப்பதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று தலைவிக்கு ஆறுதல் சொல்லும் நற்றிணைத் தலைவியும் (பெய்யாது வைகிய கோதை...11) ; தேரில் வேகமாக வரும் போது எழும் மணி ஓசை வண்டுகளின் காதலை தடுத்து நிறுத்தி விடுமோ என்று எண்ணி மணிகளின் நாக்குகளை அசையாமல் இறுகக் கட்டி விட்டு மெதுவாக வருவதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று சொல்லும் அகநானூற்றுத் தோழியும் ( முல்லை வைந்நுனை தோன்ற...4) அழகியல் சார்ந்த தமிழரின் வாழ்வியல் சாட்சிகள்,.

3. திராவிட சிந்தனை மரபில் கல்வி. அது எல்லோருக்குமானதாக இருந்தது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று சொல்லும் புறப்பாடல் (183) ஒன்று முடியும் போது ‘நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’ என்று முடியும்.

இப்பாடல் நேரடியாகவே ஆரியத்தோடு அறிவால் முரண்பட்டு ஆதித்திராவிட வாழ்வின் மகத்துவத்தை வீரியத்தோடு சொல்லக் காணலாம். ஆரிய பண்பாடு பிறப்பாலே தான் ஒருவனுக்கு கல்வி என்ற போது; இல்லை, அது நீங்கள் சொல்லும் பிராமண, சத்ரிய, வைசிய,சூத்திர வர்ணத்துள்ளும் ஒருவன் கற்றால் அவன் மேற்பாலுக்கு வரலாம் என்று ஒரு எதிர்ப்புக் குரலாக இங்கு ஒலிக்கக் காணலாம். இதனை பின்னாளில் வள்ளுவரும் சிறப்பாகச் சொல்லுவார். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்பொருளை காண்’ என்றவர் வள்ளுவர்.

வள்ளுவரும் புத்தரும் ஆரியத்துக்கெதிராக தொடுத்த போர் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. குறிப்பாக வள்ளுவர் அதனை வெகு சமர்த்தாகச் செய்திருக்கிறார். புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர், ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’  ( குறள் -259) என்கிறார்.  இவைகளை விரித்துச் சென்றால் முன்னர் சொன்னது போல் கட்டுரை வேறு பாதையில் திசைமாறிவிடும் என்பதால் அதனை இந்த இடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

4.உழவுத் தொழில்; பிராமணரும் அரசரும் பிறப்பால் முதல் இரண்டு இடத்தையும் பெற மூன்றாவது இடத்தை வணிகர்கள் கைப்பற்ற வாழ்க்கைக்கு ஆதார சுருதியினர் பின் தள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை ஆரிய சித்தாந்தம்  கற்பிக்க உழவுத்தொலைச் சிறப்பித்து; ’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்றுரைக்கிறார் வள்ளுவர்; ஆரியம் எல்லாம் தெய்வத்தாலே நிர்ணயிக்கப் பட்டது என்று சொல்ல வள்ளுவன்’ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என்கிறார். ஆரிய தர்மத்தை நிறுவிய மனு பிறப்பாலே தான் ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்று சொல்ல புறநானூறு (18) நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று உழவனையும் உழவையும் முன்னிலைப் படுத்துகிறது. பிறப்பால் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை வள்ளுவன் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறான்.

இந்த நமக்கே நமக்குச் சொந்தமான; ஆதித் தமிழ் திராவிட வாழ்க்கையை மீட்டெடுத்தால் நம் வாழ்வு எத்தனை அர்த்தமுடையதாக இருக்கும் இல்லையா?

Thursday, January 21, 2021

தன்மை நவிற்சி அணி - 12 - ( 27.12.2020)

 SBS அரச வானொலியில் கடந்த வருடம் மாதம் ஒருதடவை ஒலிபரப்பாகி வந்த நம்ம தமிழ் - அணிகள் அறிமுகம் - நிகழ்ச்சியில் கடந்த டிசெம்பர் மாதம் நிகழ்ந்த இறுதி நிகழ்ச்சி இது. கீழ்வரும் link ஐ அழுத்துவதன் மூலம் அதன் ஒலிபரப்பை கேட்கலாம்.

sbs வானொலியில் தன்மை நவிற்சி அணி

அப்படிக் கேட்க விரும்பாதவர்கள் விரும்பினால் கீழே உள்ள  எழுத்துவடிவத்தை வாசிக்கலாம்.

......................................

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…..https://www.youtube.com/watch?v=g5rxdBRSik8

இப்பாடலை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம் இல்லையா? இந்தப் பாடலுக்கும் நிகழ்ச்சியில் பேச இருக்கும் தன்மை நவிற்சி அணிக்கும்  என்ன சம்பந்தம்? 

ஒரு சம்பந்தம் இருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்வது தன்மை நவிற்சி அணி. அதாவது, எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு அதன் இயல்புத்தன்மை மாறாதவாறு பாடப்படுவன தன்மைநவிற்சி அணியின் ஆகும்.

‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்

சொல்முறை தொடுப்பது தன்மையாகும்’ 

என்பது தண்டியாசிரியர் இவ்வணிக்குத் தரும் விளக்கமாகும். பொருளின் இயல்பை நேரில் பார்த்தது போல தோன்றுமாறு உள்ளதை உள்ளபடி விளங்கச் சொல்வது இவ் அணியில் சிறப்பான இயல்பு.

இப்போது இவ்வணியில் வெளிவந்த சில சினிமாப்பாடல்களைக் கேட்போமா?

1.இன்னும் கொஞ்சநேரம் இருந்தாத்தான் என்ன…


https://www.youtube.com/watch?v=I8UrKhurkuk

2.கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி….


https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4

3.உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு..


https://www.youtube.com/watch?v=wqSYBDggWis

4. கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு...

https://www.youtube.com/watch?v=Cj2XKo7zodA

5. ஊர்வசி ஊர்வசி….(4.20 -4.40)

https://www.youtube.com/watch?v=2lRX7zNSgX4

இப்பாடல்களில் எல்லாம் கவிஞர் தான் சொல்லவரும் கருத்தை எந்த விதமான மேற்கோள்களும் இல்லாமல் இருப்பதை இருந்தவாறாக காட்டியிருக்கும் பாங்கு எளிமையான இந்த அணிக்கு சில சினிமாப்பாடல் உதாரணங்கள்.

பொருளணியிலே தண்டியாசிரியர் குறிப்பிடும் இந்த தன்மை நவிற்சி அணியிலே பொருள் நவிற்சி அணி, குண நவிற்சி அணி, இன நவிற்சி அணி, தொழில் நவிற்சி அணி என விரிவான சில உட்கட்டமைப்புகளும் உள்ளன. 

பொருள் நவிற்சி அணி என்பது ஒரு பொருளின் புறத்தோற்றத்தில் தெரியும் தன்மையை விபரிப்பது. அதாவது வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தை அதன் இயல்பு மாறாது சொல்லுதல் பொருள்நவிற்சி அணியாகும். 

உதாரணமாக சிவனின் புற உருவத்தை கூறும் 

நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்

நூலணிந்த மார்பன் நுதல்விழியன்.... என்ற இப்பாடல் அடிகள் அதற்கு

ஓர் உதாரணமாகும்.


பொட்டுவைத்த முகமோ….

https://www.youtube.com/watch?v=Wem89JUffyE

குணத்தன்மையணி என்பது ஒரு பொருளினுடய உள் இயல்பினை விளக்குவதாகும். உதாரணமாக, உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்து, நுரையும் தள்ள, விழி நீர்அரும்பத், தன்மறந்தாள்…என்று வரும் பாடலடியில் ஒருவருடய குண இயல்பு - உள்ளார்ந்த குணாம்சம் ஒன்று உள்ளவாறு சொல்லப்படுகிறதல்லவா? அது குணத்தன்மையணியாகும். இந்த சினிமாப்பாடல் அதற்கு சொல்லக்கூடிய ஒரு நவீன உதாரணம். 

.குமாரி என் நெஞ்சு விம்மி பம்மி நிக்குது குமாரி…

https://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U&lc=UgjIubfiFAFzm3gCoAEC

அடுத்தது இனத்தன்மையணி. இனத்தன்மை என்பது தனக்கேயான இனத்தின் இயல்பை விளக்குவது. உதாரணமாக பாம்பு ஒன்றின் இயல்பை இப்படியாக ஒருபாடல் விளக்குகிறது.

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்

துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்

ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்

பாகத்தான் சாத்தும் பணி.

இதில் பாம்பு இனத்தினுடய இயல்பு விபரிக்கப்படுகிறது. அதாவது, ஒழுங்குற அமைந்த கோடுகள் கொண்ட வயிற்றினை உடையன.நஞ்சு நிறைந்ததால் கரிய கழுத்தை உடையன.விரிந்த படத்தில் பிறையை ஒத்த புள்ளிகளை பெற்ரவை.மேலும், இரண்டாகப் பிளவுபட்ட நாக்கை உடையன. நஞ்சை பிற உயிர்கள் மீது செலுத்தவல்ல நுண்ணிய துளைகொண்ட பற்களைக் கொண்டவை என்பது இப்பாடலின் பொருளாகும்

  பெண் இனத்தினுடய இயல்பை வேடிக்கையாக விபரிக்கும் இந்த சினிமாப்பாடலும் கூட அதற்கு ஒரு உதாரணம் தான்.

பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே….( 1.25 - 3.03)…


https://www.youtube.com/watch?v=_VLmEIsvVHE

தொழில் தன்மையணி என்பது தொழிலைப் பேசுவது.

சூழ்ந்து மூரன்றணவி வாசம் துதைந்தாடித்

தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் – 

என்ற இந்தப் பாடலடியில் வண்டினுடய தொழில் சொல்லப்படுகிறது. விவசாயத் தொழிலின் மேன்மையை சொல்லும் இப்பாடல் அதற்கு இன்னொரு உதாரணம்.

விவசாயி… விவசாயி… 0.39 – 1.15.

https://www.youtube.com/watch?v=bewqv9G6YX0

உள்ளதை உள்ளவாறாக விபரித்த இந்த தன்மைநவிற்சி அணியோடு நிறைவுக்கு வரும் அணிகள் குறித்த இந் நிகழ்ச்சியினை நிறைவு செய்யும் முன்பாக இதுவரை காலமும் இந் நிகழ்ச்சிக்கான நேரத்தையும் சுதந்திரத்தையும் பல்வேறு விதங்களில் உதவியையும் ஒத்தாசையையும் தந்து நிகழ்ச்சியினை மெருகு படுத்தி குரல் வெற்றிடங்களைச் சொல்லுக்குச் சொல் சரிபார்த்து பாடல்களை தோதான இடங்களில் இணைத்து அதனை நிறைவான நிகழ்ச்சியாக்கி நேயர்களுக்கு வழங்கியதில் எஸ்பிஏஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் றைசெல் அவர்களுக்கு ஒரு பாரிய பங்குண்டு. அவருடய உழைப்புக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த  அவருடய தொழில் நிபுணத்துவத்துக்கும் நம்மதமிழ் ஊடாக என் மனமார்ந்த நன்றி 

இந் நிகழ்ச்சியை இதுவரைக் கேட்ட எஸ்பிஏஸ் நேயர்கள் அனைவருக்கும் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன். 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்....

https://www.youtube.com/watch?v=1LrOTWoh7vsFriday, January 15, 2021

தமிழர் அறம் குறித்த சிந்தனைகள்

 தமிழர்; தமிழ்; அவற்றின் பெருமை; வாழ்வு எல்லாம் அதன் தொன்மையிலும் போற்றுதலிலும் இல்லை; மாறாக அது சொல்லிச் சென்ற பொருளிலேயும் அதனை நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதிலேயுமே  தங்கி உள்ளது என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி’ என்று சொல்வதெல்லாம்   எத்தனை பேதமை? - வீண் பெருமை!

அண்மையில் அறம் குறித்த சிந்தனை மேலெழுந்த போது தமிழ் அறம் குறித்து  இலக்கியங்களில் குறித்து வைத்த சிந்தனைகள் தமிழின் மேன்மையினை இன்னொரு தளத்துக்கு உயர்த்துவதாகப் பட்டது. இலக்கிய வழி நெடுகிலும்; கடந்து வந்த தமிழ் பாதை எங்கினும்; அது, வாசம் வீசும் வண்ணம் தமிழ் பாதையின் இரு மருங்கிலும் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்ததைக் காண வாய்த்தது.

அது உலகு தழுவிய எல்லோரையும் சமனாகப் பேணும் பாண்மையில் எல்லோரையும் சகோதர வாஞ்சையோடு அணைத்துக் கொண்ட பாவனையில் பூத்திருந்தது. அடடா அதன் வாசனையில் தான் எத்தனை, எத்தனை சுகந்தம்!  தமிழனின் அறிவின் விசாலத்துக்கும் சிறப்புக்கும் மன மேன்மைக்கும் அதுவல்லவோ எடுத்துக் காட்டு!.Hormony ஐ அனுபவம் செய்யும் ஒரு வாழ்வியலை தமிழ், இப் பூஉலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது போலவும்.....

முதலாம் நூற்றாண்டுத் தமிழன் அதனை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றான். இப்படிச் சொல்ல எத்தனை பெரிய உயர்வான பண்பும் மேன்மையும் அறிவு விசாலமும் பக்குவமும் தேவைப்பட்டிருக்கும். அப்பாடல் மொத்தமுமே அழகு தான். ஒரு வாழ்க்கையைப் பக்குவமாய் வாழ வேண்டிய அத்தனை வாழ்க்கைச் செல்வங்களும் மொத்தமாய் அந்தப் பாடலில் அமைந்திருக்கிறது. அடக்கத்தையும் உண்மைச் செல்வத்தையும் வாழ்வின் இயல்பையும் வாழும் வழியையும் கூறும் அப்பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைத் தருவதே இல்லை.

   யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
 ( கணியன் பூங்குன்றனார்.)

இதனைச் சொல்லும் இச் சந்தர்ப்பத்தில் பிசிராந்தையாரை மறந்து கடந்து போக முடியுமா? அவர் சொல்லும் நரை இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழும் வழியை எத்தனை தரம் வாசித்தாலும் மனம் கடந்து போகத் தயங்கவே செய்யும்.

     ‘’யாண்டு பலவாக நரையில ஆகுதல்
   யாங்காகியர் என வினவுதிராயின்
   மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
   யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
  சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’’

  ’ சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல’ (புறம் - 31) எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அவரவருக்கு உரித்தாக விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக ஆற்றுதலே அறம் என சங்க காலம் போற்றியதை புறம் 312 பட்டியலிட்டுள்ளது. கொடையறம் அரச இயல்பாக மலர்ந்திருந்ததைக் கடை 7 வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் விபரிக்கக் காண்பது ஒன்றும் தற்செயல் அல்லவே! ‘வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்; நடு நள் யாமத்து பகலும் துஞ்சாது கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் தான்  என்று நக்கீரர் சொல்வது வாழ்வை முழுமையாக பார்த்து பிளிந்து தந்த அறச் சாரமல்லவா? 

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில், சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார் தனிநாயகம் அடிகள் (தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களும் சமூகத்தில் கல்விப்புலமையோடு திகழ்ந்திருக்கிறார்கள்.

எத்தகைய சமத்துவ சமூகமாக; கல்வி அறிவு பெற்ற, பெரும் சமூக வாழ்வை இந்த சங்க மக்கள் வாழ்ந்திருத்தல் கூடும்!  ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” என்று சொல்லும் பரிபாடல் வாழ்க்கையின் மான்பு அத்தனையையும் அப்பாடலுக்குள் அடக்கி அறவழியினை அறைகூவி விட்டது.

மேலும், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும்  ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ என்றும் வாழும் வழியை அறத்தோடு வாழ்ந்து காட்ட தமிழ் வள்ளுவன் தந்த வாய்ப்பாடு திருக்குறளாகும். சமகாலத்தில் நாகரிகத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்படும் கிரேக்க, ரோம நாகரிகங்களில் தனி மனித; தம் நாட்டுப் பெருமை குறித்து பெருமிதப்பட்டுக் கொண்ட சமுதாய வாழ்வு நிலவிய போது; இங்கோ வள்ளுவன் தமிழ், தமிழ் நாடு என்று கருதாமல் முழு உலகுக்குமான சிந்தனையோடு அவன் சிந்தனை மிளிரக் காணலாம். இங்கு மனித சமுதாயத்தை - உலக மனித குலத்தை மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் தன்னுடய உயிரைப்போன்ற சமத்துவத்தோடு மதித்து வாழ வழி காட்டியதாக தமிழ் சிந்தனை மரபு ஊற்றெடுக்கிறது. உலகு, உலகம்,  வையகம்,  உயிர்கள், உயிர்க்கு, மன்னுயிர், பல்லுயிர்  போன்றனவே வள்ளுவன் பாவித்த மேலும் சில சொற்பதங்களாகும்.

 அறம் என்றால் நல்வினை என்பது பொருளாகும். நல்லவற்றைச் செய்வதும் தீயவற்றைக் களைவதும் என அதற்கு மேலும் பொருள் விரிக்கலாம். உயிர்கள் மீதான இரக்கம் என்பதை அதன் மையப் பொருளெனவும் கொள்ளலாம்.

அறம் என்பது பிறப்போடும் குடிப் பண்போடும் சேர்ந்தே வருவது என்பதை ஒளவை ’கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்று சொல்வதில் இருந்து அறிகிறோம். ஒரு தடவை நற்பண்பு மிக்க செல்வர் ஒருவர் இல்லத்திற்கு புலவர் ஒருவர் சென்றாராம். அவர்களது குழந்தை நடைவண்டியில் நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. புலவரைக் கண்டதும் குழந்தை நடைவண்டியை தள்ளியபடி மெதுவாக நடந்து வந்து, தன் நடை வண்டியை மகிழ்ச்சியோடு புலவருக்கும் கொடுத்ததாம். உடனே புலவர் மனம் நெகிழ்ந்து,’ நடை கற்கு முன் கொடை கற்றாயே’ என்று பாடி உருகினார். கொடையும் தயையும் பிறவிக்குணம் என்பது இத்தால் அறியப் படுகிறதல்லவா? பிறப்பில் இருந்தே அறவாழ்வு தொடங்கி விடுகிறது என்பது தெரிகிறதல்லவா?

தமிழர் தம் வாழ்வின் சகல துறைகளிலும்  அறமே மையமாக நின்று செயற்பட்டுக்கொண்டிருந்தது.. இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. எல்லாவற்றிலும் அறம் விளங்க வேண்டும் என விரும்பியவன் தமிழன். வள்ளுவனின் காலம் அறநெறிக்காலம் எனவே வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அறம் தமிழன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மேலோங்கி இருந்தது. அறத்தின் வழி பொருளும் பொருளின் வழி இன்பமும் ஈட்டற்பாலன என்பதால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் உள்ளே வைத்து எக்காலத்துக்கும் எல்லோருக்கும் - உலகத்தில் வாழும் சகலருக்கும் பொருந்தும் வண்ணம் வாழ்க்கை நெறியை படைத்தார் வள்ளுவன்.

அறம் என்பது சிந்தனை, பேச்சு, செயல்பாடு ஆகிய  மூன்றினாலும்  செய்யப்படுவதாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பினும் மனம் என்ற ஒன்றைக் கொண்டிருப்பதால் மனிதன் என அழைக்கப்படும் மனிதனின் மனமே - அது கொண்டிருக்கும் நினைவும் சிந்தனையுமே  அறத்தின் மிக இன்றியமையாத அடிப்படை  எனப் புரிந்து கொண்டிருந்தது தமிழ் சிந்தனை மரபின் ஆரம்ப காலம். அதனால் தான் வள்ளுவர் அதனை   ‘மனத்துக்கண் மாசில னாதல்’  (குறள் 34) மனதிலே முதலில் குற்றமற்ற சிந்தனைகள் உள்ளவனாக இரு என அறத்தை வலியுறுத்துகிறார்.

இளங்கோ அடிகள் அரச குலத்தில் பிறந்து, தனக்கு அரசுரிமை கிடைக்கும் என்று சோதிடன் சொன்ன சொல்லினை ஏற்க மறுத்து, அதனை தம்பியாகிய நான் தரியேன் அது அண்ணனுக்கே உரியது என தனக்கான தர்மத்தின் - மனசாட்சியின் - அறத்தின் வழி நின்று, உறுதி கூறி, அதற்கான தகுதியை தன் அண்ணனுக்குரியதென கொடுத்து, எழுது கோலைத் தூக்கி, தமிழ் இலக்கியத்தை தூக்கி நிறுத்திய துறவியாக இலக்கியத்தில் நிலைத்திருப்பவர். அவர் அறத்தை வாழ்ந்து காட்டிய செம்மல்.  அவர் சொல்லும் சிலப்பதிகார காவியத்தில் அவர் அரசியல் அறம் பற்றி உரைக்கிறார்.’அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்’ என்பது சிலப்பதிகாரத்தின் சுருக்க தர்க்க  வசனமாகும்.

பின் வந்த மணிமேகலை பசித்துயர் போக்குவதைத் தன் தலையாய அறமாகப் போற்றியது. (மணி 13) ஆதரவற்றோரைப் பேணுவது அதன் அறச் சாரமாகும். சமணமும் கிறீஸ்தவமும் அறமென எழுத்தறிவித்தலை கையிலெடுத்த காரணத்தால் இத்தனை கல்விச் செழுமையை தமிழ் இன்றைக்குக் கொண்டிருக்கிறது. இவர்கள் மொழி அறிவித்தலையும் அவற்றைப் பேணிக் கொடுத்தலையும் தலையாய அறமாக போற்றினர்.

காணுகின்ற அத்தனையிலும் கடவுளைக் கண்டு கொண்டவன் தமிழன். இயற்கையில் இருக்கிற எல்லாமே கடவுளின் அம்சம் எனக் கொண்டதனால் இயற்கையினையும் சகல உயிர்களையும் கடவுளாகக் காணவும் மதிக்கவும் போற்றவும் செய்தான்.

‘தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மைநீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்த நீ!
வேதத்துமறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ!
அனைத்தும் நீ! அனைத்தின் உட்பொருளும் நீ!
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை!
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பிலை! பிறப்பித்தோர் இலையே!

என்று சொல்லும் பரி பாடல் அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. மேலும், கடவுள் அம்சம் எங்கெங்கெல்லாம் சார்ந்திருக்கிறதென்பதை கீழ்வரும் பரிபாடல் புலப்படுத்துவது சங்ககாலத்தமிழனின் உலகை இறை சார்ந்து பார்க்கும் சினேகபாவத்துக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு.

‘ நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;
நின், தண்மையும் சாயலும் திங்களுள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள;
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
நின் தோற்றமும் அகலமும் நீரிலுள;
நின், உடுவமும் ஒலியும் ஆகாயத்துள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்திலுள;
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏம மார்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்’

இயற்கையின் அம்சங்கள் யாவையும் இறையின் அம்சமாகக் காணும் மனிதன் அவைகளை எத்தனை பவித்திரத்தோடும் மரியாதையோடும் பேணி இருப்பான் என்பதையும் கூடவே உணரமுடிகிறதல்லவா? அதனால் தான் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்றது திருமந்திரம். 

வீடுகள் திண்ணைகளோடு பொலிய, படலைகளில் ஆவுரோஞ்சிக் கற்கள் முளைத்திருக்க, முற்றங்கள் கோலங்களால் வடிவு பெற்றதும் கூட இந்த அறச் சிந்தனையின் விளைவு தானே? சூரியனுக்கு நன்றி சொல்லவும் மாடுகளை தெய்வமென போற்றவும் தெரிந்து கொண்டது கூட அதன் விளைவு தானே? இதே நேரம் மேலைத்தேயம் கேற்றினைப் பூட்டி நாயை காவலுக்கு வைத்திருந்தது என்பது எத்தனை பெரிய சிந்தனை முரண் இல்லையா?

பெண்ணின் நிலை குறித்து ‘அன்னாந்து ஏந்தியவனமுலை தளரினும்’ என்று தோழி தலைவனைக் கண்டு என் தோழியை நீ எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பாடியபோதிலும் சரி; பின்நாளில் பாரதி தாசன் தன் ’குடும்பவிளக்கு’ பகுதியில் முதியோர் காதல் பற்றிப் பேசும் போது சொன்ன

‘ புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்பதொன்றே”

இங்கெல்லாம் அன்பும் அறமுமே மேலோங்கி இருக்கக் காண்கிறோம்.

அதன் பின் வந்த இந்து சமயக் கோட்பாடுகளிலும் ‘தென்னாடுடய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றே பாடக் காண்கிறோம். ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்றே அவர்கள் இறைவனைத் துதிக்கிறார்கள். ’அன்பே சிவம்’ என்பதே இந்து சமயத்தின் சாரம். பாடல் வழியான பிரார்த்தனைகள் முடிந்த பின் உலக முழுமையும் வளம் பெற வேண்டி பாடும் புராணத்திலும்’ வான்முகில் வளாது பெய்க! மலிவளம் சுரக்க! மன்னன் கோல் முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! என்றே சொல்லச் கேட்கிறோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று வையகம் என்று மேன்மை பெற பாடும் வண்ணங்கள் யாவும் தமிழுக்கும் அதன் சிந்தனை மரபுக்கும் செழுமை சேர்ப்பன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுவும், ’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் இரங்கும் போதும், தமிழ் மானுடமே உயிர்க்கிறதல்லவா? உயிர் மேல் கொண்ட அன்பின் செழுமையை அறத்தின் அழகை சொல்லாமல் இருக்க முடியுமா?

இத்தகைய காலப்பகுதிகளில் மேலைத்தேயங்கள் குறிப்பாக கிரேக்க ரோம பேரரசுகள் தனிமனித பெருமை; தன் நாடு குறித்த பெருமிதம்; உடற்பலம்; சிற்றின்ப நுகர்ச்சி; தனிமனித சுதந்திரம் இவைகளை மேல் நிறுத்த தமிழ் பேசு நல்லுலகமோ தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல்) என்று வலியுறுத்தல் காண்கிறோம்.ரோமர்கள் தம்மைப்பற்றிய பெருமையில் நிமிர்ந்து நிற்க, தமிழோ உலகு தழுவிய அறச் சிந்தனையில் உயர்ந்து நின்றது.

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன தமிழின் பண்பு நலம் என்பார் தனிநாயகம் அடிகளார்

பின் நாளில் கூட வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பாரதி கேட்பது கூட தமிழுக்கோ தமிழனுக்கோ அல்ல. மாநிலத்துக்கே அல்லவா? காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றவன் அல்லவா அவன்?! ‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்’ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ ஆகியவற்றை கனவு கண்டவன். அவற்றினை மேலான அறமாக வரிந்து கொண்டவன் பாரதி. அதர்மங்களுக்கெதிரான போர் கொடியை பெண்களுக்காகவும் நாட்டுக்காகவும் தூக்கிச் சொற்போர் செய்தவன்.அறம் குறித்த மேற்கோள்கள்கள்:


அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க்.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். -ஸெனீக்கா.

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். -ஜான் டிரைடன்.

அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. -லியோ டால்ஸ்டாய்.

அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். -பழமொழி.

பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.-ஸ்வீடன் பர்க்.

ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது. -மாரிஸ் மாட்டர்லிங்க்.

எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. -ஜான் ரஸ்கின்.

என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். -பர்க்.

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.-பாஸ்கல்.

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். -ஸெயின்ட் அகஸ்டைன்.

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரிக்கா விட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. -பென்தம்.

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். -ஜார்ஜ் எலியட்.

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். -எமர்ஸன்.

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். - ஜான் மார்லி.


Wednesday, January 6, 2021

மடக்கு அணி - 11 - ( 29.11.2020 )

 கடந்த இரு மாதங்களுக்கு முன் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் ஒலி வடிவத்தை கீழ் வரும் link இல் அழுத்திக் கேட்கலாம்.

 SBS வானொலியில் மடக்கு அணி


                           மடக்கு 16.6.20

இலக்கியங்களில் அழகுணர்ச்சியை சொற்களைக் கொண்டே அமைத்து அதனை பொருள் நயமும் ஓசைநயமும் விளங்குமாறு செய்தனர் தமிழர். செய்யுளில் சொற்களின் அமைப்பு, அதன் வைப்புமுறை, சொற்களைக் கொண்டு பொருள் கொள்ளும் முறை என்று நுட்பமாக அவற்றுக்கு இலக்கணங்களும் அவர்கள் வகுத்துள்ளார்கள். அவை சொல்லணி, பொருளணி என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவன.

அந்தவகையில் வரும் சொல்லணிகளான எதுகை, மோனை, சிலேடை, பின்வருநிலை,மடக்கு, அந்தாதி என்பவற்றுள் ஒன்று இந்த மடக்கு என்பதாகும். சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வரு நிலை அணி என்ற இந்த மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான சில வித்தியாசங்கள் உள்ளன.

சிலேடை என்பது ஒரு சொல்லே செய்யுளில் வரும் போது இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளக் கூடியது. உதாரணமாக ’சென்னை வரவேற்கிறது’ என்பதை ’சென்னை வர வேர்க்கிறது’  என்று சொல்லலாம். அதாவது இங்கு ஒரு வசனத்திலேயே இரு பொருளும் அமைந்திருக்கும்.

ஆனால் மடக்கில் அடுத்ததடவை அதேசொல் வரும் போது அது வேறொரு பொருளைத் தருவதாக இருக்கும். அதாவது மடக்கில் வரும் சொல் மறுதடவை வரும் போது அதே சொல் வேறொரு பொருளைக் குறிப்பதாக வருவது. அப்படியென்றால் பின்வருநிலையணியில் அது எப்படி வருகிறது?  பின்வரு நிலைஅணியில் ஒரே சொல் அடுத்தடுத்த இடத்தில் வரும் போதும் தனித்தனியாகவும் கூட அது ஒரே அர்த்தத்தையே கொண்டிருக்கும்.

உதாரனமாக 200 வது திருக்குறளை எடுத்துக் கொண்டால் அது

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.’ (குறள் எண் - 200)

அதில் சொல் என்ற சொல் பல இடங்களில் வந்தாலும் அது சொல் என்ற ஒரு அர்த்தத்திலேயே வருகுதல் காண்க. இதுவே பின்வருநிலை அணியாகும்.

வடமொழியில் மடக்கு என்பதை யமகம் என்று அழைப்பார்கள். சொற்களை எழுத்தெழுத்தாகப் பிரித்தும் கூட்டியும் முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளக்கூடியதாக அமையப்பெறும் சொல்லணிகளிலே அழகு வாய்ந்தது மடக்கு. புலமைக்கும் மொழிஆழுமைக்கும் சொல்விளையாட்டுக்கும் வழிவிட்டுக் கொடுப்பது மடக்கு.

மடக்குஎன்றால்என்ன?

மடக்குஎன்பது ’எழுத்துக்களது தொகுதி பிறஎழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறுவேறு பொருளை விளைவிப்பது மடக்கு என்னும் அலங்காரமாகும்’ என்று தண்டியலங்காரம் அதற்கு விளக்கம்கூறுகிறது. அதாவது ஓர்எழுத்து அல்லது ஒருசொல் மீண்டும்மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் வருமாறு அமைத்தல் மடக்குஆகும்.

ஊதாஊதாஊதாப்பூ…https://www.youtube.com/watch?v=IbyWiib5ZxQ

ஆனாலும் சிலேடைக்கும் மடக்குக்கும் பின்வருநிலைஅணிக்கும் என்று மூன்று சொல்லணிகளுக்கும் இடையில் நுட்பமான வித்தியாசம் உள்ளது.

’அரவம்அரவம்அறியுமா’ என்றவசனத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் முதலாவது அரவம் பாம்பையும் இரண்டாவது அரவம் என்றசொல் சத்தத்தையும் குறிப்பதாக ஒருவசனத்தில் ஒரேசொல் இருவேறுஅர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளதல்லவா? அதுதான்மடக்கு. 

இப்போதுமடக்குவகையில்அமைந்தபாடல்ஒன்றுகேட்போமா?

ஆடவரெலாம்ஆடவரலாம்....

https://www.youtube.com/watch?v=w5DjkjH8qME

ஆடவரெலாம்ஆடவரலாம்என்பதில்வரும்ஆடவரெலாம்என்பதுஇருவேறுஇடங்களிலும்இருவேறுபொருள் தாங்கிவருவதைக்கண்டீர்களா?

மடக்கணியில் இலக்கியவகை சார்ந்த பாடல்கள் அனேகம் உள்ளன. 

திருக்குறள்,கம்பராமாயணம்தொடக்கம்பக்திப்பாடல்கள் ஈறாக அநேகபாடல்கள் இந்தமடக்கணி வகையில் உருவாகி வந்துள்ளன. இராமாயனத்தில் அமைந்துள்ள பாடல் ஒன்று இது.

'வண்டலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டலம் புகம் நீங்கிய வெண்புனல், 

விண்டலம் புக நீள் மரம் வீழ்ந்ததே." (32). 

இந்தப் பாடலில் வண்டலம்’ என்பது முதல் இரண்டு அடிகளிலும் விண்டலம்பு என்பது ஈற்று இரண்டடிகளிலும், பாடலடிகள்  மடங்கி வந்துள்ளன. இப்பாடலைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்: 

 'வண்டு அலம்புநல் ஆற்றின் மராமரம், 

வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; 

விண்டு அலம்பு கம்.நீங்கிய, வெண் புனல் 

விண்கலம் புக நீள் மரம் வீழ்ந்தவே' 

அதாவது, அனுமன் எறிந்த மரங்களுள், வழிப் பாதையிலிருந்து மரங்கள் சில வண்டல் நீர் பொருந்திய ஆற்றில் விழுந்தன. அனுமன் உயரே தூக்கியெறிந்த நீண்ட மரங்கள் விண்ணிலே புக விண்னகத்திலே ஒடுகின்ற நீர் சிதறி அகலும்படி ஆகாய கங்கையில் வீழ்ந்தன.’ என்பது அதன் பொருளாகும்.

கவி காள மேகத்தாரின் பாடல் ஒன்று மடக்கணியில் இப்படியாக அமையப்பெற்றுள்ளது.

’வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்

கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை

அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி

அடிப்பது மத்தாலே அழ!’

இதிலே மூன்றாம் அடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பது (காலின் அடிப்பகுதியால்) அடிப்பதும் அத்தாலே என்றும்; இறுதியடியில் வரும் அடிப்பதுமத்தாலே என்பதில் அடிப்பது( தயிர்கடையும்) மத்தாலே என்றும் வருதல் காண்க.

1889ம்ஆண்டில் ஈழத்திலுள்ள.கொல்லங்கலட்டி என்றஇடத்தைச் சேர்ந்த பூ. பொன்னம்பலப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட மாவையமகஅந்தாதி ஒன்று மாவைக் கந்தனை துதிசெய்வதாக மடக்கணியில் இப்படியாக வருகிறது.

’வானில வானிலவும் பொழின்மாவையின் மாணருள்செய்

வானில வானிலயம் புகுந்தேத்தல் செய்வாய் மலர்க்கோ

வானிலவானிலமால் குளிர்நீரெரி வன்னி சல 

வானிலவானிலயப் பொருளா மவன் மன்னடியே’

அதாவது

வானத்திலுள்ள மதிமண்டலத்தின் கண் அவாவி நிற்கும் சோலை சூழ்ந்த மாவைப்பதியின்கண் மிக்க திருவருளைச் செய்பவனாகிய முருகனுடய இடமாகிய கோயிலின் உள்ளேசென்று அவன்திருவடிகளை ஏத்துவாயாக. தாமரைமலரினல் இருக்கும் இறைவனாகிய பிரமதேவனது சத்தியலோகம் உட்பட நிலமும் பெரிய குளிர்ந்தநீரும் எரிகின்றதீயும் அலைகின்ற காற்றும் ஆகாயமும் அவனுடய பெருமையுற்ற திருவடியில் ஒடுங்கும் பொருள்களாகும்’ என்பதுஅப்பாடலின் உள்ளே அமைந்திருக்கும் கருத்தாகும்.

கந்தாநீஒருமலைவாசி.....https://www.youtube.com/watch?v=UIMvJH9LL30

3.49 – 6.55   

மடக்கணியில் பல இலக்கியப் பாடல்கள் உள்ளன. உதாரணமாக மருத்துவநூல் ஒன்றில் அமையப் பெற்றிருக்கும் மடக்குஅணிஒன்றை இப்போது காண்போம்.

பத்தியத்தை நோயை யனுபானத்தை லங்கணத்தைப்

பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் - பத்தியத்தை

யேகமாயார்த்தாலு மேறாச்செவிபோல

யேகமாயார்த்தாலு மெய்''20

இந்தவெண்பாவில், பத்தியத்தை என்னுஞ்சொல் மூன்றுஇடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ்சொல் இரண்டிடங்களில் அமைந்திருக்கிறது.

முதலாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பிணிநீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப்பிரிந்து, பத்தியமுறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச்சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐஎனப்பிரிந்து, பத்துவிதமான இசைக்கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமையப் பெற்றிருக்கிறது.

ஏகமாயார்த்தாலும் என்பது, ஒருமுகமாக முழங்குகின்றபோது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப்பிரிந்து பார்த்தால் போய்விட, கெட்டு, ஆரவாரம்செய்து என்னும்பொருளில் மாறிமாறி நின்று பொருளமைக்கும்.

இந்தப்பாடலின் பொருள்என்னவென்றால் பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்கவேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணைமருந்தான அனுபானத்தையும், நோய்நீங்கத்துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மாமியாரைப்போல நோயாளி பத்தியமுறைகளை ஏற்றக்கொள்ளவும்.  பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின்போது சொல்லுகின்ற சொல் காதில் நுழையாததைப்போல இருந்தால், நோய்கள் ஆரவாரம்செய்துகொண்டு உடலைக் கெட்டுப் போய்விடச்செய்யும் என்பதால், பத்தியம்முக்கியம்என்பதைஉணர்க’ என்னும் பொருளை இது உரைக்கிறது.

வித்துவத் திறமைக்கு களம் அமைத்துத்தரும் இத்தகைய பாடல்கள் உடைத்துப் பொருள்அறியவேண்டியவை.

இன்றய காலங்களில் சினிமாக்களிலும் இந்த அணியினை புகுத்தி சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. 

கொஞ்சும் கிளி பாட வச்சான்...


https://www.youtube.com/watch?time_continue=182&v=VnmD2j3bEng&feature=emb_logo

2.40 – 3.00 

இப்போது ஒலித்த இப் பாடல் வரிகளில் மடக்கின் எழில் கொஞ்சுகிறது அல்லவா? .மடக்குஅணியின் அழகை வெளிப்படுத்தும் பல பாடலகள் கொண்ட கதம்பத்துடன் விடைபெறுகிறது இன்றய நம்மதமிழ்.

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை....

https://www.youtube.com/watch?v=FvRlKreWTX4&lc=UghmL7M5AUy2zngCoAEC

1.40 – 2.00 


 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...


https://www.youtube.com/watch?v=tXU1r0OVf3g

(8.05 – 8.22 )


உதய கீதம் பாடுவேன்.....

https://www.youtube.com/watch?v=Om3lOwdgxcw

(2.04 – 2.10 )  


திருமண மலர்கள் தருவாயா....

https://www.youtube.com/watch?v=528O3U7qMco