Friday, April 22, 2016

அனுபவித்தல்.....
வாழ்க்கை......
வேலை, குடும்பம், உறவுகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டது.

அதற்கும் மேலே கொஞ்சம் போனால் வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் என்றும் சொல்லலாம்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்கள்......

50 சதத்திற்கு வாங்கிய வாழ்த்து அட்டை ஒன்று “ celebrate the precious gift of life " என்று எழுதி ஒரு கடற்கரையும் கரையில் ஒரு தேவதையும் வரையப்பட்டிருக்கக் கண்டேன்.

எங்களில் எத்தனை பேர் வாழ்க்கையை கொண்டாடுகிறோம்? அனுபவம் செய்கிறோம்?

துன்பச்சுவையையும் ஒரு அனுபவமாக உணர்கிறோம்? அவை தரும் படிப்பினைகளை பின் புலமாகக் கொண்டு  வாழ்வின் தார்ப்பரியங்களை புரிந்து கொள்கிறோம்?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்துக் கடக்கும் சின்னச் சின்ன விடயங்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவற்றில் பொதிந்து கிடக்கும் சந்தோஷ கணங்களை ஆகார்ஷிப்பதும் இல்லை. 


கடந்த வாரம் ஒரு வட இந்திய சினேகிதி ஒருத்தியின் மகனாரின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆடலும் பாடலும் சாப்பாடும் கொண்டாட்டமுமாய் ஒரு வாழ்வின் வரவை அவர்கள் கொண்டாடினார்கள்.

20.4.2016 அன்று காலை எடுத்ததாகத் தன் நாயினுடய படத்தை என் நண்பன் காட்டினான். இந் நாய் காலை நேர குளிர் காற்றை கண்மூடி அனுபவிப்பதைப் பார்த்தீர்களா? இந் நாய் - அதன் பெயர் Bear. நமக்கு வழங்குகின்ற பாடம் ஒன்று உண்டு. அது,

"Enjoy the simple things in life" 

Thursday, April 21, 2016

அங்க மொழியும் ஒரு பாடலும்பேசுகிற மொழியை விட உடல் மொழிக்கு அதிக பலம் உண்டு என்று மேலைத் தேயக் கலாசாரம் சொல்கிறது. அதன் ஆற்றல்  60% என உடல் மொழி வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.பேசுகிற சொல்லுக்கு அது 40% தத்தினைத் தான் ஒதுக்குகிறது.

இன்றைக்கு நான் ரசித்த பாடல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது. இந்தப் பாடல் மாட்டுக்கார வேலன் என்ற திரைப்படத்தில் கே.வீ. மகாதேவனின் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் எம்.ஜி.ஆர் இற்காகப் பாடி இருக்கிறார்.

பாடல்வரிகள் கண்ணதாசனுக்குச் சொந்தமானவை.

சொற்செட்டை விட்டுக் கொடுக்காத எளிமையான வரிகள்! ஒன்றை ஒன்று தூக்கிக் கொடுக்கும் சொற்களுக்கு நோகாத இசையமைப்பு!! சொற்களில் கரைந்து கரைந்து வரும் அபிநயமாகிப் போன குரல்.

எல்லாவற்றையும் விட பிடித்துப் போன ஒன்று என்னவென்றால் இந்தக் கவிஞன் என்ன மாதிரி காதல் வசப்பட்டிருக்கிற ஒரு பெண்ணின் உடல் மொழியை கவனித்திருக்கிறார் பாருங்கள்!!


ஒருபக்கம் பாக்கிறா
ஒரு கண்ண சாய்க்கிறா
அவ உதட்டக் கடிச்சிக்கிட்டு மெதுவா(க)
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா  (2)

ஆடய திருத்திறா
அள்ளி அள்ளி சொருகிறா (2)

அர குற வார்த்த சொல்லி
பாதிய முழுங்குறா (2)

பின்னல முன்ன விட்டு
பின்னிப் பின்னி(க்) காட்டுறா

பின்னால தூக்கி விட்டு
கையால இழுக்குறா

பூப்போல காலெடுத்து
பூமிய அளக்குறா

பொட்டொண்டு துள்ளித் துள்ளி
சிட்டாகப் பறக்குறா

நிலையில கைய வச்சு
நிக்கிறா நிமிருறா(2)

நிறுத்தி மூச்சு விட்டு
நெஞ்சத் தாலாட்டுறா
நெஞ்சத் தாலாட்டுறா (ஒரு பக்கம்)

காலால நிலத்தில
கோலம் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே
கன்னத்தத் தேய்க்கிறா (2)

கண்கள மூடி மூடி
ஜாட கொஞ்சம் காட்டுறா
கறந்த பால நான் கொடுத்தா
கையத் தொட்டு வாங்குறா - என்
கையத் தொட்டு வாங்குறா

கை விரல் பட்டதிலே
பால் சொம்பு குலுங்குது
கைய இழுத்துக்கிட்டு
பாலோடு ஒதுங்குது

ஒன்னப் போல எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது (2)

ஒன் முகம் பாத்ததும் தான்
உண்மை எல்லாம் விளங்குது (ஒரு பக்கம்)


பார்க்கின்ற போதோ கேட்கின்ற போதோ ஒரு காதல் வயப்பட்ட பெண் நம்முன்னால் நிற்பது போல ஒரு பிரமை தோன்றுகிறதல்லவா? பாடலை இப்போது கேட்போம்.
Monday, April 11, 2016

கண்டறியாத கதைகள் - 4 - செம்பும் செம்பு வகைகளும்

செம்பு:

பித்தளை, சில்வர், ஈய உலோகங்களில் நீர் போன்ற திரவ பதார்த்தங்களை கொள்வதற்காக வீடும் வீடு சார்ந்த இடங்களுக்குள்ளும் தண்ணீர் கோல, குடிக்க, கழுவ பாவிக்கப்படும் ஒரு நாளாந்த சமையலறை புழங்கு பொருள் இதுவாகும். குசினிக்குள் தண்ணீர் வாளிக்குள் இப்பாத்திரம் சரிந்து மிதந்த படி இருக்கும். குடமெனில் அதன் வாய்ப்புறத்தில் ஒரு தலைப்பாகை போல நிமிர்ந்திருக்கும். குடத்தின் குழந்தை என்றும் இதைச் சொல்லலாம். குடத்தின் சாயலில் அளவில் சிறியது என்பதால்!

செம்பு என்ற பெயர் இக்கலத்துக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் செம்பு என்ற உலோகத்தால் ஆரம்பகாலத்தில் செய்யப்பட்டு புழங்கப்பட்ட பொருள் என்பதால் செம்பு என்ற பெயர் இக் கலத்துக்கு உரியதாக நிலைபெற்றிருக்கலாம். ’கம்மியர் செம்பு சொரி பானையில் மின்னி’ என்ற நற்றிணையின் 153 வது பாடல், ’கம்மியர்கள் செம்பினால் செய்கின்ற பானையைப் போல மிளிர்ந்து’ எனச் சொல்வதில் இருந்து இப்புழங்கு பொருள் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்து வந்ததையும் இதனைச் செய்கின்ற புலமையாளர்கள் இதனை ஒரு தொழிலாக செய்து வந்ததையும் அவர்கள் கம்மியர் என அழைக்கப்பட்டதையும் கூடவே உணரலாம்.

இதன் பயன்பாடு இன்றளவும் பிரபலமாக இருந்து வருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் பெளத்த, இஸ்லாமிய, கிறீஸ்தவ சமயப் பண்பாட்டைப் பின்பற்றும் மக்களிடையேயும் இச் செம்புக் கலம் தனக்குரிய ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது. தற்காலங்களில் நவீன இயந்திரசாதனங்களின் உதவி கொண்டு சற்றே வேறுபட்ட வடிவங்களிலும் இதன் தோற்றப்பாடு காணப்படுவதுண்டு.

அது அளவிலும் அழகிலும் தோற்றப்பாட்டிலும் அன்றாடப் பாவனைக்கு ஏற்றவாறான தனித்துவமான வடிவத்தில் இருப்பது அதன் சிறப்பு. வாயகன்று கை பிடிக்க லாவகமாய் கழுத்துப் புறம் ஒடுங்கி தண்ணீர் கொள்ள வாகாய் உடல் பகுதி அகன்று அடிப்புறம் வரும் போது ஒடுங்கி வைப்பதற்கு தோதாய் கீழ் புறம் தட்டையாக அது அமைந்திருக்கும்.

 வெளியிடங்களுக்குச் சென்று விட்டு தாம் குடியிருக்கும் வீடுகளுக்குச் செல்பவர்கள் கால்களைச் சுத்தமாகக் கழுவி விட்டு வீட்டுக்குள் செல்வது தமிழரின் மரபார்ந்த பழக்கமாகும். எப்போதும் வளவின் பிரதான வாசல் புறத்திற்கும் வீட்டு வாசலுக்கும் இடையில் வைக்கப்படுகின்ற தண்ணீர் வாளிக்குள் செம்பு கால்களைக் கழுவி வீட்டுக்குள் செல்பவர்களுக்காக தண்ணீர் வாளியோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

இதனோடு இணைந்த வகையில் நளன் தமயந்தி கதையை கூறி, வருங்கால சந்ததியினரை வயதானவர்கள் கீழ்கண்ட கதையூடாக வழி நடத்தினர். அதாவது, சனீஸ்வரன் நளனைப் பீடிக்க இடமும் தருணமும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு முறை நளன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கால்களைக் கழுவும் போது கால் புறத்தின் பின் புறத்தைச் சரியாகக் கழுவவில்லை என்றும்;பீடிக்கக் காத்திருந்த சனீஸ்வரன் கழுவப்படாத பிரதேசத்தில் இருந்து நளனைப் பற்றிக் கொண்டதாகவும்; அதனால் கடுமையான காலங்களை நளன் எதிர்கொள்ள நேரிட்டதாகவும் ; அதனால் வெளியே சென்று விட்டு வருகின்ற ஒவ்வொரு பொழுதுகளிலும் கால்களைச் சரியாகக் கழுவும் படியும் பெற்றோர் அடுத்த சந்ததிக்கு அறிவுறுத்துவது உண்டு. இவ்வாறு பண்பாடு சார்ந்த வாழ்க்கைமுறை ஒன்று அடுத்த சந்ததிக்கு மூத்தோர் வழிநடத்தல் ஊடாக கதையின் வழியாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர இன்னொரு ஆரோக்கியமான வழக்கமொன்று தமிழர் மத்தியில் உண்டு. அது காலையில் எழுந்தவுடன் ஒரு செம்பு நிறைய தண்ணீர் குடிக்கும் வழக்கமாகும். ஒரு செம்பு நிறையத் தண்ணீர் என்பது அவர்களது அளவீட்டின் ஒரு அம்சமாகவும் இருக்கிறது.  திருமகள் தமிழகராதி ஒரு செம்பின் நீர் கொண்ட அளவை 3 1/4( மூன்றேகால்) சேர் கொண்ட ஒரு முகத்தல் அளவு எனக் குறிப்பிடுகிறது. சிலர் இரவு படுக்கைக்குச் செல்லும் போதே ஒரு செம்பு நிறைய தண்ணீரை மொண்டு தம் தலைமாட்டுக்கு அருகில் வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வது வழக்கம்.

காலை எழுந்தவுடன் பல் துலக்கு முன்னர் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் குடிப்பதால் உடலின் உள் அங்கங்கள் யாவும் சுத்தமடைவதோடு நரம்பு மண்டலங்கள் தூண்டப்பட்டு கழிவுகள் யாவும் வெளியகற்றப் படுகின்றன. பல உள்ளார்ந்த நோய்கள் இயற்கையான முறையிலே குணமடைகின்றன என்பது அவர்களது நம்பிக்கை. (இக் காலை நேர செம்பு நிறைந்த தண்ணீரை ‘உஷை பானம்’ என அழைத்தனர் என ஒரு குறிப்புச் சொல்கிறது. (உஷை என்ற பெண் தெய்வம் அதிகாலைக்குரிய தெய்வமாக வேதங்கள் போற்றுகின்றன). தமிழரின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுள்வேத மருத்துவ முறையும் யோகாசனம் போன்ற பயிற்சி முறைகளும் கூட இத்தகைய முறையினை பரிந்துரைக்கின்றன.

தேரையர் என்ற முனி சிரேஷ்டர் அருளிச் செய்த “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற வைத்திய சாஸ்திர நூல் செம்புக் கலத்தின் குணவிஷேஷம் பற்றியும் காலை நேரம் விழித்தவுடன் சுத்த ஜலம் அருந்தலின் சிறப்புப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. அதாவது,

‘செம்புக் கலத்தில் உண்ண தேகா ரோக்கியமாம்
பம்பிரத்த தோடம் பறக்குங்கா – நம்புவியி
லண்ணியிடுங் காந்தி யணங்கே விழியொளியாம்
புண்ணியமு நண்னும் புகல்’

செம்புக் கலத்தில் உண்ண சரீர செளக்கியமும் தேஜசும் கண்ணுக்கு ஒளியும் கிடைப்பதோடு ரத்த பித்த ரோகங்கள் விலகும் என்கிறது அப்பாடல்.(பாடல் 1361)
அது போல விழித்தவுடன் சுத்த ஜலம் அருந்தலின் சிறப்பை 1310 வது பாடல் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

”தூங்கி விழித்தவுடன் சுத்தோதக மருந்தி
லோங்கி நின்ற பித்தமொழிவதன்றித் – தேங்கு
மல மூத்திரந் தங்கா வாதியுத்தந்
தலமாத் திரமுலவுந தான”

அதாவது. ”நித்திரை செய்து விழித்தவுடன் சுத்தோதகமென்னும் நீராகாரம் அல்லது நல்ல சலம் இதுகளில் ஏதேனும் ஒன்றை பிரமானமாகப் பருகில் பைத்திய தோஷம் விலகும், அன்றியும் மலஜல பந்தங்களும் நீங்கும். வாத முதலிய மூன்று தோஷங்களும் தத்தம் நிலைகளில் சஞ்சரிக்கும்” எனச் சொல்கிறது.

இந்தக் காலை நேரப் பழக்க வழக்கங்கள் என்ற வகையில் சிலர் தண்ணீர் குடித்த பின் காலைக் கடன் கழிக்கச் செல்வதும் சிலர் கறுப்புத்தேநீர் குடித்த பின் செல்வதும் வேறு சிலர் சுருட்டுக் குடித்த பின் கழிவறைக்குச் செல்வதுமாகத் தம் உடலை புரிந்து வைத்திருக்கிறார்கள். சிலர் பத்திரிகையோடு போவதுமுண்டு. அவர்கள் தம் நாள் ஒன்றை அவரவருக்கு இலகுவான முறைகளில் தம் உள் உறுப்புக்களை விளங்கிக் கொண்ட வகைகளில் வகுத்துக் கொண்டிருப்பதையும் சொல்ல வேண்டும். தம் உள்ளார்ந்த உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்யும் முதல் கருமமாக இவ்வாறான வழக்கங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

நிற்க, வீட்டுக்குள் வருகின்ற விருந்தாளிகள் தண்ணீர் கேட்கின்ற பொழுதுகளில் இவ் ஏதனத்தினுள் தண்ணீர் கொடுப்பது ஒரு மரியாதையான செய்முறை என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் உண்டு. அத்தோடு குறிப்பாக இந்துக்கள் விரதகாலங்களில் சைவ போசனம் உண்ணும் போது, அதிலும்  வாழையிலையில் சோறு உண்ணும் போது இடது கைப்பக்கத்தில் தண்ணீர் செம்பு வைத்துக் கொள்வர்.

அநேகர் இதில் தண்ணீர் குடிக்கும் போது வாயிலே செம்பின் வாய் புறத்தை வைக்காது தலையை அன்னாந்து செம்பினை சற்றே மேலே உயர்த்தி தண்ணீரை பாத்திரத்தில் உதடுகள் முட்டாத படிக்கு நேரே வாய்க்குள்ளே ஊற்றுவர்.

நாட்டார் பாடல்களிலும் கிராமிய நடனங்களிலும் கூட செம்பு என்ற பாத்திரம் தன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. செம்பு நடனம் என்பது பிரபலம் வாய்ந்த  கிராமிய நடனங்களில் ஒன்று. இந்திய குச்சுப்புடி நடனத்தின் சாயலில் தலையில் செம்பினை வைத்து அது விழாதவாறு இலாவகமாகப் பாடலுக்கேற்ப இளம் பெண்கள் நடனமாடுவது இதன் சிறப்பு. இந்தியாவில் கரகாட்டம் என்ற நடனவகையில் செம்பு பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

செம்பு என்ற பாத்திரத்தின் பயன்பாடு வீட்டு விஷேஷங்களிலும் சுப,அசுப தின சைவ பாரம்பரிய நிகழ்வுகளின் பொழுதும் குறிப்பாக சிவாச்சாரியார்கள் வந்து வீடுகளில் செய்யும் கிரியைகளின் போதும் குறிப்பாகத் திருமண வைபவங்கள், துடக்குக் கழிவுகள், சுபதினக் கொண்டாட்டங்கள், அசுப தினங்களிலும் தீர்த்தம் (சுத்தமான / புனிதமான தண்ணீர் ) வைக்கும் ஒரு கலமாகவும் இது விளங்குகிறது.

தண்ணீரின் பயன் பாட்டையும் இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையினையும் தனித்துவமான தோற்றப்பாடுகளைக் கொண்ட உலோகத்தெரிவோடு கூடிய பாத்திர வகைகளையும் பயன் படுத்தி வந்த தமிழர் பண்பாட்டில் தவிர்க்க முடியாத படிக்கு இப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பாவனைக்கு வந்திருப்பதைக் காணலாம்.

கிணற்றில் இருந்து கொண்டு வந்து வாளி நிறைய தண்ணீரோடும் அதற்குள் மிதந்து கொண்டிருக்கும் செம்போடும் இருக்கும் வீட்டின் முன்புறங்களில் வருவோர் யாவரும் கால்களை முன்னும் பின்னுமாய் நன்றாகக் கழுவி வீட்டுக்குள் வருவதும்; வெய்யிலுக்குள் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குச் தாகம் தீர செம்பு நிறையக் குளிர் நீர் கொடுப்பதும் பாவனையாளர்கள் பாத்திரத்தில் வாய் முட்டாத படிக்கு அன்னாந்து அத் தண்ணீரைக் குடிப்பதும்; பாத்திர வார்ப்பின் லட்சணமும் அதன் உலோகப் பெறுமதியும் இயற்கைக்கும் சுத்தத்திற்கும் செம்புக்கும் தமிழர் கொடுத்த இடத்தைச் சொல்லும்.

வெளி நாடுகளிலோ எனில் செம்பு என்ற பாத்திரமும் அது சார்ந்த வாழ்வியல் கோலங்களும் முற்றாக இல்லாது போன நிலையில் அன்றாடப் பாவனைக்கு பிளாஸ்டிக் சாதனங்களும் குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் நிறைந்திருக்கும் குளிர் பானங்களும் தண்ணீரின் இடத்தையும் செம்பின் தனித்துவத்தையும் இடம் மாற்றி வைத்திருக்கின்றன. வாழ்க்கை முறை ஒன்றினையும் கூடவே. இயற்கையோடு அவர்களுக்கு நேரடியாக எந்தப் பிணைப்பும் இல்லாது போய் விட்டது.

மண்ணின் ஒரு சிறு துணிக்கையேனும் படாத சப்பாத்துக் கால்களோடு வீட்டுக்கு வந்து கால் துடைப்பத்தில் சப்பாத்தைத் துடைத்து கம்பளத்தரையில் கால் பதித்து வியர்க்காத உடலுக்குக் குசினிக்குள் இருக்கும் குளிர் சாதனப்பெட்டி திறந்து குளிர் பானம் அருந்தும் மேலைத்தேய வாழ்வு முறையோடு இவ் இயற்கை சார்ந்த பணச் செலவற்றதும் எளிமையானதும் ஆரோக்கியமானதும் அழகுணர்வு சார்ந்ததுமான வாழ்வு முறை பயன்பாடற்றும் பொருத்தமற்றும் போய் விட்டது.

இச் செம்பின் பின்னால் விழுமியம் சார்ந்த ஆரோக்கிய வாழ்வு ஒன்று மறைந்து நிற்கிறது.

செம்பு இனம் / வகை சார்ந்தவை:
பூட்டுச் செம்பு:

 இறுக்கமாகப் பூட்டிப் பாவிக்கக் கூடியதாக இருந்ததால் பூட்டுச் செம்பெனவும் தூக்கும் கைப்பிடியைக் கொண்டு செம்பு வகையினைச் சார்ந்திருந்ததால் தூக்குச் செம்பெனவும் அழைக்கப் பட்டது.

இதனை பாரதத் தென்னகப் பண்பாட்டுக்குரியோர் கூஜா என அழைப்பர் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பித்தளையினால் ஆன செம்பு இனத்தைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும்
7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.

தற்போது பலருடய சமையலறைப் பறன்களில் (பறன் – பழைய பொருட்கள் கட்டி வைக்கும் இடம்) தூங்கிக் கொண்டிருக்கும் இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போதயைப் போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.

பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் கச்சிதமான அழகியல் சார்ந்த தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.


அதே நேரம் தீர்த்தச் செம்பு, பன்னீர் செம்பு போன்றனவும் சுப அசுப தினங்களின் போது இன்றளவும் வீடுகளில் புழக்கத்தில் உள்ள செம்பு வகை சார்ந்த பாவனைப் பொருட்களாகும்.
தீர்த்தச் செம்பு:

பன்னீர்ச் செம்பு:


உசாத்துணை:
• பதார்த்தகுண சிந்தாமணி மூலமும் – உரையும்; திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை,1932
• நற்றிணை மூலமும் உரையும்:

செம்பின் சாரம்:
• கலைநுட்பம், செய்திறன், வடிவமைப்பு, நாளாந்த வாழ்வில் அதன் இடம்
• உலோக பாவனை
• பண்பாட்டு வாழ்க்கைமுறை கதைகளூடாக அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படல்
• ஆரோக்கிய முறைமைகள் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கப் பட்ட பாங்கு
• நாளாந்த வழக்குகள் மற்றும் நுண்கலைகளில் செம்பு.

அரும்பத விளக்கம்:
ஏதனம்: பாத்திரம், கலம்: பாத்திரம், கோல: அள்ள, புழக்கம்: பாவனை, தோதாய்: பொருத்தமாய், வாகாய்: இலாவகமாய் குசினி: சமையலறை,


பிற்குறிப்பு: 15.12.2017

செம்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
1.செம்பு உலோகம்
2.செம்பு என்ற பெயரோடு இருக்கும் ஒரு வகைப் பாத்திரம்.

மேலே விபரிக்கப் பட்டவையாவும் செம்பு என்ற பாத்திரத்தைப் பற்றியது. ஆனால் பதார்த்த குண சிந்தாமணி விபரிக்கின்ற பாடல் செம்பு என்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பாத்திரம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சிட்னிக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் செம்பு என்ற உலோகத்தினால் ஆன பாத்திரங்கள் மற்றும் அண்மையில் தாயகம் சென்ற போது இணுவில் பகுதியில் குடியிருக்கும் எனதன்புக்குரிய ஸ்ரீ அக்கா வீட்டில் பாவனைக்கு வைத்திருந்த செம்பு உலோகத்தினாலான குடிநீர் கொள்கலன் போன்றன செம்பு உலோகத்தின் பாவனையையும் சிறப்பையும் குறிப்பாக பழந்தமிழரில் இருந்து இன்றுவரை அறிந்து வைத்திருக்கும் புழக்க இயல்புக்கு சான்றாகலாம். 


செம்புக் கலத்தில் தண்ணீர் திருகணி மீது அமர்ந்திருக்க; அதன் மேலே அன்னாந்து குடிக்கத் தக்க ஈழத்தமிழரின் கண்டுபிடிப்பான மூக்குப் பேணி அமர்ந்திருப்பதைப் படத்தில் காண்க.


கீழ் வரும் இவ் ஒளிப்படம் 17.10.2017 அன்று பழம் பொருட்கள் மீதும் அவற்றின் பாவனைகள் மீதும் அதீத ஈடுபாடு கொண்டிருக்கும், வாழும் மரபு என்ற இணையத்தளத்துக்குச் சொந்தக்காறியும்; யாழ் பல்கலைக்கழக நூலகராக விளங்குபவரும்; தன் வீடு நிறைய தன் பிள்ளைச் செல்வங்களாக இத்தகைய பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பவருமான  யாழ்ப்பாண பிரதேசத்தில் இருக்கும் இணுவில் என்ற இடத்தில் வசிப்பவருமான ஸ்ரீகாந்த லக்ஷ்மி என அழைக்கப் பெறும் ஸ்ரீ அக்கா வீட்டில் எடுத்தது. 

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.

Thursday, April 7, 2016

கண்டறியாத கதைகள் - 3 - புலிப்பல் பதக்கம்

ஆண்களின் கழுத்தினை அலங்கரிக்கும் புலியினுடய பல்லினை பதக்கமாகக் கொண்டிருக்கும் அணிகலன் இதுவாகும்.

தமிழ் பண்பாட்டு மரபில் வீரமும் காதலும் விதந்து போற்றப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கியவரலாறு எடுத்துரைக்கும்.போரில் வெற்றி கண்டு வந்த இளைஞர்களைப் பெண்கள் விரும்பி மணம் செய்து கொண்டார்கள்.

ஆண்களும் தம்மை வீர வழி வந்ததைக் காட்டும் ஒரு மரபாகவே புலிப்பல் பதித்த ஆபரணங்களை அணிய ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் ஆண்கள் வீரக் கழல், வீரக்கண்டை, சதங்கை, அரையணி,அரை நாண், பவள வடம்,தொடி, கங்கணம்,வீரவளை, கடகம், மோதிரம்,கொலுசு, காப்பு, பதக்கம்,வகுவலயம், கழுத்தணி,வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகிய அணிகலன்களை அணிந்தனர் என அறிய முடிகிறது. (மேற்கோள்:தமிழ் நாட்டு அனிகலன்: சாத்தான் குளம்,அ. இராகவன்)


இலக்கிய வரலாற்றில் புலிப்பல் 

ஆரம்ப காலத்தில் கழுத்தில் அணியும் அணிகளை எல்லாம் தாலி எனவே அழைத்தனர்.அச்சுத்தாலி, முளைத் தாலி,புலிப்பல் தாலி,ஐம்படைத்தாலி என அவை பெயர் பெற்றிருந்தன. ( இவ் ஐம்படைத்தாலியில் சங்கு,சக்கரம், வில், வேல், வாள் ஆகியவற்றின் உருவங்கள் இருந்தன. அவை அன்றும் குழந்தைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டன. இன்று அவை பஞ்சாயுதமாக குழந்தைகளுக்கு அணிவிக்கப்படுவது நோக்கத்தக்கது.) 
அகநானூற்றின் 54வது பாடல்”பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பி மணித்தாலி” எனக்குறிக்கும் வரியில் இருந்து  சிறார்கள் தம் கழுத்தைச் சுற்றி புலிப்பல் கோர்த்த  ஆபரண்த்தை அணிந்தது பற்றி அறியமுடிகிறது. 
பொன்னால் ஆக்கப் பட்ட இதில் புலிப்பல் கோர்க்கப்பட்டது .அதன் காரணத்தால் இது புலிப்பல் தாலி என அழைக்கப்பட்டது. 

குழந்தைகளின் கழுத்தில் புலிப்பல் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிவித்தால் அது அவர்களைக் கண்ணூறினின்றும் காக்கும் என அவர்கள் நம்பியதைப் புறநானூற்றின் 374 வது பாடலின் 9வது வரி சொல்லி நிற்கிறது.”புலிப்பல் தாலி புன் தலைச் சிறார்” என வரும் வரி அதனை உறுதிப்படுத்துகிறது.(மேற்கோள்: செம்மொழித் தமிழ் இலக்கியம் உணர்த்தும் மக்களின் வாழ்க்கை முறைகள் பகுதி 2: முனைவர். சி. சேதுராமன்,இணைப்பேராசிரியர், தமிழ்துறை,மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை)

சிலப்பதிகாரத்தில் தெய்வ சக்தி கொண்ட சாலினி என்பவளை கொற்றவை போல அலங்காரம் செய்த போது எயினர் இன மக்கள் புலிப்பல் தாலி அணிவித்ததாக ஓரிடம் வருகிறது.அது கொற்றவையின் அணியில் ஒன்றெனச் சொல்லப்பட்டதால் புலிப்பல் தாலி ஒரு வீரத்தின் சின்னமெனக் கருதப்பட்டதாகக் கொள்ள இடமுண்டு. 

மேலும் சிலப்பதிக்காரம் “மறங்கொள் வரிப்புலி வாய் பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி  நிரை பூட்டி ..” (சிலப்பதிகாரம் 12,27, வரி 28) அதாவது அஞ்சாத வலிமையுடய புலியின் வாயைப் பிளந்து பெற்ற வெண்பற்களை ஒழுங்கான மாலையாகக் கோர்த்த புலிப்பல் தாலி  என வருவதில் இருந்து புலிப்பல் தாலியின் பின்னணியில் இருந்த வீரத்தை ஒருவாறு கண்டு தெளியலாம்.

திருத்தொண்டர் புராணம் ”இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவுகோத்து”  - எனச் சொல்வதில் இருந்து தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து தன் வீரத்தின் சின்னமாக ஆண் அதனைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான் என்பதை அறிய முடிகிறது. அதனை அவர்கள் புலிப்பல் தாலி என அழைத்தார்கள்.

தன் வீரியத்தைத்; தன் ஆற்றலை; வீரபராக்கிரமத்தை; கன்னிப் பெண்ணுக்கு  நிரூபித்து பெண்ணெடுத்த மரபு வழி வந்த தமிழின் அழகு அது! அதன் எச்சமாக இன்று மிஞ்சி இருப்பது இந்தப் புலிப்பல் பதக்கம் ஒன்று தான்.

புலிப்பல் பதக்கம் அணிதல் இன்று வரைத் தொடர்கிறது. புலிப் பல்லிற்குத் தங்கத்தினால் பூண் போட்டு அழகுக்காகக் கற்களும் பதிக்கப்பட்டு நீண்ட சங்கிலியில் அதைத் தொங்க விட்டு அதனை இன்று வரை ஆண்கள் பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் அதன் மரபு வழியான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்றய சந்ததியினர் குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் அறியாதவர்களாக வளருதல் வருந்தத் தக்கதன்றோ?