Monday, October 29, 2018

சேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்

சேக்கிழாரின் காலம் கி.பி 12ம் நூற்ராண்டாகும். பெரியபுராணத்தின் ஆசிரியன். இந்து மதம் சார்ந்த தமிழ் புலமையாளன். தமிழும் சமயமும் கலந்து குழைத்து அவன் தந்த பக்திச் சுவை மிக்க தமிழ் பரவசம் தருவது.

பலரும் சமயம் என்றதும் அது குறிப்பிட்ட ஒரு சாராருக்கென ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்ட அச் சமயத்தவரோ சமயத்தைத் தாண்டி அதில் எதையும் பார்த்து விட்டால் அது ஆண்டவனுக்குச் செய்யும் பெரிய துரோகமென ஒரு விதமான ‘பார்க்க மறுக்கும்’ சோணம் கட்டிய குதிரை மனோ பாவத்தைக்  கொண்டிருக்கிறார்கள்.

அதனால் பக்தித் தமிழின் அழகியல் வெளியே அதிகம் வெளிவராமல் போய் விட்டது.

‘யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர் படோம்; ஏமாப்போம் பிணியறியோம்; இன்பமே எந் நாளும் துன்பமில்லை’ என்று பாடிய சமயக் கவிஞனின் தமிழின் ஏமாப்பு பாரதியின் ’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...’கவிதையில் இருந்து எவ்வகையில் குறைந்து போயிற்று?

’சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என்ற ஒரு சமயச் சித்தனின் ஏக்கத்தில் தான் எத்தனை அழகு! அந்தச் சித்தம் அழகியர் நம் விபுலானந்தரின் ‘உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது’ என்ற தேன் துளிக் குறிப்பில் இருந்து எவ்வகையில் தாழ்ந்து போயிற்று?

கொஞ்ச நாளைக்கு முன்னர் பார்த்து விட்டு அப்படியே ஆறப்போட்டு விட்ட அல்லது மனக் கிடங்கில் ஊறப்போட்டு வைத்திருந்த சேக்கிழானின் திருஞான சம்பந்தன் குறித்த புராண படலத்தில் இருந்து சில தமிழ் முத்துக்களை இன்று வெளியே கொண்டுவரலாம் என்று தோன்றியது.

அந்த மனுஷன் சம்பந்தனைப் பாடுமுன் அந்தாளின்ர நாட்டின்ர வளத்தை பாடுது. சோழர் காலத்தில நாட்டு வளத்தை வேறயும் கன புலவர்மார் பாடி ஒரு கரை கண்டிருக்கினம் தான். கம்பனைத் துக்கிப் பிடித்து கொண்டாடும் பலபேர் அத உருகி உருகிச் சொல்லுவினம். அதுகளைப்பற்றிச் சொல்லப் போனா சேக்கிழார் கைநழுவிப் போயிடுவார் எண்டதால அத இங்க தவிர்க்கிறன்.

சரி சேக்கிழார் எப்பிடி எண்டு நினைக்கிறீங்கள். சொல்லுறார் பாருங்கோ,

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆகுதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.

அங்க ஊர் இப்பிடி இருக்குது வீடுகள் எப்பிடி இருக்குது தெரியுமோ?

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.

சுற்றுப் புறம் எண்டா அது வேறொரு விதமாய் இருக்குது

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.

இப்பிடியான அழகியலோட ஒரு ஊர கற்பனை பண்ணிப் பார்க்கவே எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? இன்னும் அவர் கதைக்குள்ள வரயில்ல. சம்பந்தர் பிறக்கப் போற ஊர் தான் இது. இப்ப தெய்வத்தன்மை வாய்ந்த ஒருத்தர் பிறக்கப் போறார். அதைச் சொல்லுறதுக்காக

பாடல் எண் : 23
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆகுதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

பாடல் எண் : 24
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.

பாடல் எண் : 25
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.

பாடல் எண் : 26
அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.

இப்படியாகச் சம்பந்தர் பிறந்திட்டாராம்..என்ன ஒரு அழகு; என்ன ஒரு பாடல் வைப்பு! அதில் இசைந்து நிற்கும் ஒருவித ஒழுங்கு! தமிழில் இருந்து ஒழுகுது அழகு!!

அக்கம் பக்கமெல்லாம் இப்ப கொண்டாட்டமும் சந்தோஷமுமா இருக்கு. பாருங்கோ அது எப்பைடி இருக்கெண்டா

பாடல் எண் : 35
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.

பாடல் எண் : 36
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.

பாடல் எண் : 37
சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிறைப்பார்.

பாடல் எண் : 38
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.

இப்பிடியாகக் கொண்டாட்டம் அக்கம் பக்கமெல்லாம். ஊரோ செழிச்ச ஊர். ஒரு பிள்ள பிறந்து விட்டா ஊரே கொண்டாடி மகிழுது. சொந்தமும் பந்தமும் சந்தோஷமுமா ஒரு சிற்றூர் நம் முன் விரிகிறதில்லையா?

பல்லவர் காலத்து ஒரு சைவச் சிற்ரூரை சோழர்கால தமிழ் புலமையாளன் ஒருவன் இப்படியாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறான்.

Monday, October 22, 2018

இயலோடு இசை’ ந்த நடனம்


                  
கார்த்திகா கணேசரின் ஆடல் மாணவியரின் அரங்க நிகழ்வோடு கூடிய ஒரு சமூக கரிசனைக் குறிப்பு

உணவுக்கு ஒரு ருசி உண்டு. வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் கைப்பக்குவம், கோயில் சாப்பாடு, ஊரின் கோயில் மடத்தில் வழங்கும் சோறும் சாம்பாரும், ஐந்து நட்சத்திர கடைகளில் வழங்கும் சாப்பாடு, சாதாரண உணவகங்களின் உணவுகள் என அதில் பல ரகங்களும் ருசிகளும் உண்டு.

அது கலைகளுக்கும் பொருந்தும்.

சிட்னியில் வசந்தகாலம் வந்து விட்டால் கலை விருந்து களை கட்டும். ஆசிரியர்களின் தகுதிக்கும் திறமைக்கும் விசாலத்துக்கும் செல்வாக்குகளுக்கும் மாணவர்களின் தொகைக்கும் ஏற்ப அரங்கநிகழ்வுகள் விகசிக்கும்.

பொதுவாக சிறு குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடித்திரியும்; பருவ மங்கையர் அழகுற அலங்கரித்த படி நடமாடுவர்; மனையறம் கொண்ட நங்கையருக்கு அடுத்தவரோடு பேச ஆயிரம் விடயங்கள் இருக்கும்; இளந் தந்தைமார் பிள்ளைகளின் அரங்க நிகழ்வை சிறைப்பிடித்துவிட கமராக்கள் சகிதம் ஓடியாடி திரிவர். வயதான பல பேரன் பேத்திகள் வசதியாக முன்கூட்டியே வந்து உட்கார்ந்திருப்பர். உடலை அங்கே இருந்தி மனதை கைபேசி வழி உலவவிட்டு அமர்ந்திருக்கும் சில இளந்தலைமுறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலை காட்டும்.

இதில் கலையுணவு கொள்ள வருவோரை; கலை உணர்வோரை வடிகட்டிப் பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டி வரும். இது சொல்லக் கொஞ்சம் சங்கடம். என்றாலும் சொல்லியாக வேண்டும். சக நடன ஆசிரியர்கள் வந்திருக்க மாட்டார்கள்; அவர்களின் மாணவியர் கூட வந்திருந்தால் அது பாதகமாகவே பார்க்கப்படும். முகங்கோணக்கூடாது என வரும் பார்வையாளர் கூட மருந்துக்கும் தம் பிள்ளைகளை அழைத்து வந்திரார். அரங்கேற்றம் கண்ட மாணவியரோவெனில் அரங்கேற்றத்தோடு தம் பணி ஓய்ந்தது என நிகழ்வுகளுக்கு தலைகாட்டார்.

கல்விப்பாரம்பரியம் ஒன்றின் ஏகப்பிரதிநிதிகள் என பெருமை கொள்ளும் கலைக்கெனத் தம்மைச் சூடிக் கொடுத்த தமிழ்சுடர் கொடிகள் தம்மளவில் இப்படித்தான் இங்கு தன்னிறைவடைந்து விளங்குவர். பார்க்கவோ அறியவோ வரார்!

இது ஒரு பொதுவான சிட்னி மேடை அரங்கப் பின்னணி.
கலை தேடும்; ஆழம் அறியும்; ருசிக்கும்; ரசிக்கும் உள்ளங்கள் இல்லாத அரங்கங்கள் பலர் நிரம்பி இருந்தாலும் அநாதை போலவே எனக்குத் தோற்றமளிக்கும். நல்லதோர் வீணை நலங்கெட புழுதியில் இருப்பதைப்போல….புறக்குடத்தில் தண்ணீர் வார்ப்பதைப் போல...

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் நடனம் குறித்த அறிவெதுவும் இல்லா நான் கண் களி கூர நடனம் காணச் சென்றிருந்தேன்.
கார்த்திகா.கணேசரின் மாணவியரின் வருடாந்த நடன நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வென்ற்வேர்த்வில் றெட்கம் மண்டபத்தில் அரங்கேறியது.

சுற்றி கண்களைச் சுளற்றி பார்த்தேன். சபை நிரம்பி இருந்தது. அநேகமாக எல்லாம் வயதான முகங்கள்…அங்கு ஒரு தலைமுறையை முற்றிலுமாகக் காணவில்லை. இப்போதெல்லாம் தமிழர்களின் சமூக சபைகளில் ஒரு தலைமுறை முற்றிலுமாகக் காணாமல் போயிருக்கிறதை அவதானிக்க முடிகிறது. அவர்களை நாம் முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறோம். 

புலம்பெயர் மண்ணில் தமிழ் இனத்தின் எதிர்காலம் குறித்தும்; கலைகளின் நிலைபேறு குறித்தும்; அடுத்த சந்ததிக்கு ‘தமிழத்தை’ ஊட்டும் ஆக்க செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய இடம் இது. எங்கோ ஒரு தவறு நேர்கிறது….நடுத்தர வயதுகளில் இருக்கும் பலரும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் நிர்வாக அலகுகளையும் விரிவாக்கம் செய்து அடுத்த சந்ததியை உள்வாங்கி அவர்களுடய ஆதங்கங்களையும் அபிப்பிராயங்களையும் கேட்டுணர்ந்து, அவர்களுடய ஆற்றல்களை மதித்து அவர்களிடம் நம்பிக்கை கொள்ளாதிருக்கும் வரையில்; அவர்களிடம் அதிகாரங்களைக் கையளிக்காதிருக்கும் வரையில்; நமக்கு வளர்ச்சி இல்லை; அது பூச்சியமாகவே இருக்கும் என்று மனம் உணர, நடன நிகழ்வுக்கான திரை விலகியது.

பொதுவாக எனக்கு நடனம் என்பது கண்ணுக்கு இதமான காட்சி. சிலவேளைகளில் அது கருத்துக்கும் களிப்பூட்டும். அது குறித்த ஞானம் எனக்கு அவ்வளவு தான். ஈழத்தமிழ் சமூகத்தில் நடனத்துக்கான இடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவினதாகத் தானே இருந்து வந்திருக்கிறது! புலம்பெயர்ந்த பின் தான் அது ஒரு கலை எனவும் பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்க விழுமியங்களோடு கூடிய வேரும் விழுதும் அதற்குண்டு என்றும் அறிய நேர்கிறது…..

அந்தச் ’சலங்கையின் ஓசைக்கு’ நாம் செவிகொடுக்க வேண்டும் என்பதை இந்த நடன நிகழ்வு எனக்கு வலியுறுத்தியது. அது பட்டு வந்த துன்பங்கள்; இழப்புகள்; சாபங்கள்; உருமாற்றங்கள், எழில்மைகள், பெருமைகள், இழுக்குகள், அழகியல், மேன்மைகள் எல்லாம் அதன் அத்தனை அர்த்தங்களோடும் விழுமியங்களோடும் ஆழ அகல தார்ப்பரியங்களோடும் பொது மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். தூசுபட்டு ஒளிமழுங்கி வெறும் ஆடை அணிகளும் பெண்களின் அங்கலாவன்யங்களும் தான் நடனம் என்ற மாயை களையப்பட்டு, அதன் விஸ்தீரணமும் பரப்பளவும் பிள்ளைகளுக்கும் சபைக்கும் சமூகத்துக்கும் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு நிகழ்வை அன்று நான் கண்டேன். பெருமையும் பெருமிதமும் கொண்டேன். என் இனம்; என் மொழி என்பதற்கு இணையாக என் கலை என பெருமைகொள்ள வைத்தது அந்த எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்வு.

நிகழ்வுகள் யாவும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அவைகள் ஆடிக்காட்டப்படு முன்னால் அந் நிகழ்வு குறித்த குறிப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லப்பட்டதால் இன்னும் உன்னிப்பாகவும் இயல்பாகவும் நடனத்தோடு ஒன்றிப்போக முடிந்தது. ஓடித்திரியும் சிறு குழந்தைகள் அங்கில்லை; படமெடுப்பதில் மும்மரமாகவும் அதே நேரம் மற்றவரை மறைத்துத் திரியும் தலைகள் அங்கு தென்படவில்லை என்பதும் ஒரு பெரிய ஆறுதல். சாவதானமாக நிகழ்ச்சியை ரசிக்க முடிந்தமைக்கு இவைகளும் ஒரு காரணம் தான்.

முதலாவதாக இடம்பெற்றது அலாரிப்பு. அலாரிப்பு என்பது மலர்தல் எனப் பொருள்படும் என்றும்; ஆடுபவர் தன்னை மலராக கொண்டு தன் நடனத்தை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் பாங்கில் மலர்வது அது என்றும்; தன் குருவுக்கும் இறைவனுக்கும் சபைக்கும் வணக்கம் செலுத்தும் பாங்கில் அமைவதால் பரத நாட்டியக்கச்சேரிகளில் முதலாவதாக அது இடம்பெறும் என்றும் அறிந்ததில் மனம் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டது. ‘அன்றலர்ந்த செந்தாமரை போல மலர்ந்த இராமனின் முகம்’ கூடவே வந்து போனது. ஆடல் மகள் தன்னை மலராக்கி ஆண்டவனுக்கு தன் ஆடலை அர்ப்பணம் ஆக்கினாள்.

அடுத்ததாக இடம்பெற்றது ஜதீஸ்வரம். இது ஸ்வரங்களும் ஜதிகளுமென களைகட்டிய நடனவகையைச் சார்ந்திருந்தது. இதில் இசைகுறித்த என் ஞான சூனியத்தை என்னவென்பது? தமிழ் பாரம்பரியத்தின் இசையையும் நடனத்தையும் ரசிக்க ஞானம் தேவை என்பது இங்கு எனக்கு விளங்கிற்று. இருந்த போதும் கலித்தொகையில் சிவன் ஆட பார்வதி தாளம்போட்ட பாடல் நினைவும் கண்முன்னே மின்னி ஒரு தடவை மறைந்தது. இசையும் நடனமும் நடனத்தின் ராசனெனெ நாம் கொண்டாடும் நடராசனோடு இணைந்து நடந்த கால ஊழியின் ஆடல் அசைவை இவ்வாறு கலித்தொகை சொல்கிறது.

பார்வதி இசைக்கணக்கு போட ஆடும் நடராஜனின் ஆடல் தானே இந்த உலக ஆட்டம்! கலித்தொகைத் தமிழன் அதைச் சொன்ன வகை இது.

ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,
மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி;

படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை மென்தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ?

கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு,
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,
மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி;

படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை மென்தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ?

கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு,
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

அங்கிருந்து தொடங்கிய ஆட்டம் இன்றுவரை….தொடர்கிறது என்பதைச் சொல்ல அடுத்ததாக வந்தது சிவ நிருத்தியம். நடராஜனின் ஆடல் அற்புதங்கள் கண்களாலும் முகத்தாலும் முத்திரையாலும் ஆந்திர தேசத்து கூச்சுப்புடி நடன பாணியில் அது இங்கு வெளிப்பட்டு நின்றது.

அடுத்ததாக ஹம்ஸ பூர்வி என்றொரு ஆடலறிமுகப்படுத்தப்பட்டது. இசையின் ஸ்வரங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்த இந் நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை ஒரு புதிய பார்வையை இசையை நோக்கியும் நடனத்தை நோக்கியும் பார்க்க வைத்ததது. இயலால் சுட்டிக் காட்டிய இசையோடு இணைந்த நடனம் மலர்கொடியாய் ஆடிய பெண்ணின் லாவன்யங்களோடு இணைந்து இயலிசை நடனத்தின் கூட்டாய்; கண்ணுக்கும் கருத்துக்கும் காதுக்கும் ஒருங்கு சேர மெருகூட்டிய இலவச விருந்தாக அது இருந்தது. காணக்கிட்டியோர் பாக்கியசலிகள்!

இயற்கையில் இருந்தே அனைத்தும் பிறந்ததென்பதற்கு இசை என்ன விதி விலக்கா? ஸ என்ற ஸ்ட்சமம் மயிலின் அகவலாகவும் ரி என்ற ரிஷபம் எருதின் குரலாகவும் ஹ என்ற ஹாந்தாரம் ஆடுகளின் குரலாகவும் ம என்ற மத்தியமம் அன்றில் பறவைகளின் கூவுதலாகவும் ப என்ற பஞ்சமம் குயிலின் கூவுதலாகவும் தா என்ற தைவதம் குதிரையின் கனைத்தலாகவும்  நி என்ற நிஷாதம் யானையின் பிளிறலாகவும் வந்ததை அபிநயத்தால் கண்ட போது அது கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தாக அமைந்த அதே சமயம் எவ்வாறு இசையும் நடனமும் தனக்கென தனி ஒரு சுயம்புவான தோற்ற தனித்துவத்தைக் கொண்டிருக்கிறதென்பதையும் அறிந்து மெய்சிலிர்க்க முடிந்தது. 

தமிழ் செம்மொழியானமைக்கு இந்த சுயம்பு அம்சங்கள் தானே அடிப்படை!

அது போலவே இன்னொரு நடன அம்சமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அது மண்டூக சப்தம் ஆகும். இது நாட்டிய வரைமுறைகளில் மூன்றாவதாக இடம்பெறும் சப்தம் ஆகும். இது குறித்த அறிமுகத்தின் போது சப்தம் என்பது கிருஷ்னசப்தம், கோதண்டராம சப்தம் என பலவகை சப்தங்கள் உண்டு என்று சொல்லி தெய்வத்தைப் புகழ்ந்து பாடுதல் என்ற பொருள் படும் என அறிவித்திருந்தார்கள். இங்கு பாடலின் கருத்து முகபாவத்தாலும் முத்திரைகளாலும் அபிநயித்துக் காட்டப்பட்டது. இங்கே ஓர் அழகிய பூங்கா. அங்கே விதவிதாமான வாசமும் வண்ணமும் அழகுமாக மலர்கள்… அருகே ஓர் தண்ணீர் தடாகம்… அதனைச் சுற்றி அமைந்திருக்கிறது இயற்கையின் அத்தனை எழிலும்… மயில்கள் ஆடுகின்றன… மான்கள் மருண்டவண்ணம் துள்ளித்திரிகின்றன… தேனுண்ட மயக்கத்தில் வண்ணிடங்கள் ரீங்கரிக்கின்றன….பறவைகள் பறக்கின்றன. ரம்மியமான அந்தப் பூங்காவனச் சூழலில் பூக்களைக் கொய்யும் அழகிய இளம் பெண்கள் அவற்றை கூடி இருந்து மாலை புனைகிறார்கள்… அவற்றை இறைவனுக்கு சாற்றி மகிழ்கிறார்கள்… இத்தகைய ரம்மியங்களுக்குள் தவளைகளும் தங்கள் பாட்டை ஆரம்பிக்கின்றன… இவைகள் எல்லாவற்றையும் நடனத்திற்குள்ளால் கண்டால் எப்படி இருக்கும்! கண்டோம்! களிகூர்ந்தோம்!...

அடுத்ததாக வந்தது மல்லாரி. இது குறித்த அறிமுகம் நான் உட்பட பலருக்கும் மல்லாரி என்ற அம்சத்தின் வீரியம் குறித்த அறிமுகத்தை தந்திருக்கும் என நம்பலாம். ‘தமிழர் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகளும் மங்கல இசையின் சிறப்பு மிக்க பரிமானம் மல்லாரி இசை. இது சாகித்தியம் இல்லாத சங்கீதம் என பொதுவாக அறியப்படுகிறது. ஆலயங்களில் திருவிழாக்காலங்களிலும் இறைவன் திருவீதியுலா வரும் காலங்களிலும் வகுக்கப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் இசைக்கப்படுவது மல்லாரி. சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும் போது இசைக்கப்படுவது /வாசிக்கப்படுவது தீர்த்த மல்லாரி. அதைத் தொடர்ந்து தளிசை எடுத்து வரும் போது வாசிக்கப்படுவது தளிசை மல்லாரி. தேரோட்டம் நடைபெறுகின்ற போது தேர் மல்லாரி என மல்லாரிகளில் பலவகை உண்டு. மல்லாரி இசை நாதஸ்வரத்தில் ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கி விட்டது தெரிந்து விடும். நாதஸ்வரத்தில் மட்டுமே வாசிக்கப்படும் மல்லாரி இசைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது லயம் என்னும் தாளக்கணக்குகள். தாதஸ்வர வித்துவானின் கற்பனைக்கும் ஞானத்திற்கேற்ப கச்சேரி களை கட்டும்”.என அறிமுகப்படுத்தினார் விழா நடத்துனர். அந்த இசையை நடனத்துக்கு மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும். ஒரு பண்பாட்டின் நடன மொழிபெயர்ப்பு…இசையை ஊடுருவிக்கொண்டு கண்வழி கருத்தில் புகுந்தது.

இத்தகைய பெரிய பெரிய அழகியல் விருந்துகளுக்கிடையே ‘பொரியலைப் போல’ சிறு குழந்தைகள் வந்து மண் தின்றவாயனை; கோகுலத்துக் கண்ணனை வந்து காட்டிச் சென்றது பூமாலையினிடையே வைத்துக் கட்டும் வேறு வண்ணப் பூ போல புத்துணர்வை ஒரு சிறு புன்னகையைத் தந்து போனது. கூடவே இந்த நடன நிகழ்ச்சிக் கோர்வையின் கட்டுமானப்பணிகளின் நேர்த்தியையும் காட்டியது.

பிறகோ எனில் விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்க வந்தாள் ஒரு கன்னிகை. அவள் மேனகை. அவளுடய புறப்பாடுகளின் பூர்வாங்க ஏற்பாடுகள் தான் எத்தனை! எண்ணை வைத்து தலைவாருவதில் இருந்து ஆபரணம் புனைத்து, பூச்சூடி, புனுகுகள் பூசி மயக்கப் புறப்படும் அந்த ஒய்யார அழகு தான் என்னே! தவ முனிவர் என்ன பெண்ணான நானே மயங்கிப் போனேன் போங்கள்! அவ நீளப்பின்னலை முன்னாலே கையிலெடுத்து விசுக்கி விசுக்கி நெளிந்து நெளிந்து ஒய்யார நடை நடக்கையில் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்! சபையே விழுந்து போச்சும்மா….சபையையே பின்னலுக்குள் சுருட்டிக் கொண்டு போய் விட்டாள் என்பதை கரகோஷம் பின்னர் அத்தாட்சிப்படுத்தியது.

இவைகளோடு கூடவே ‘இடது பதம் தூக்கி ஆடும்’ என்ற பாபநாசம் சிவனாரின் பாடலுக்கான ஆடலும் நாகநடனமும் ஆட்டத்தை சுவாரிசப்படுத்தியது. இடையிடையே கொஞ்சம் முந்திரிப்பருப்புப் போல பொலிவூட் நடனங்கள் ஒன்றிரண்டு.

கூடவே நவராத்திரி காலம் என்பதால் நிறைவுப் பகுதியாக நாட்டுப்புற கலைவடிவங்களில் ஒன்றான காவடியாட்டத்துக்கு இணையாக சூலத்தை ஆயுதமாகக் கொண்டு துர்க்கையின் பாடலுக்கு சூலத்தை வைத்துக்கொண்டு ஆடிய பக்தியாட்டத்தோடு நிகழ்வு மங்கலகரமாக நிறைவு பெற்றது…

இலவசமாக இடம்பெற்ற இந்த ஆடல் நிகழ்வு கன கச்சிதமாக வடிவமைக்கப் பட்டு நடனம் பற்றிய பின்னணி குறிப்புகளோடும் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடும் அமைதியான முறையில் அரங்கேறி இருந்தது. பார்வையாளர்கள் சகலரும் இறுதிவரை இருந்து ரசித்துச் சென்றது ஒரு மனநிறைவு. அது ஒரு இங்கிதமுமாகும். இதனை செம்மையுற தொகுத்து வழங்கி இருந்தார்கள் செளந்தரி கணேசனும், சாரதா.இராமநாதனும்.

அறிவோடு இணைந்த இந்த நடன நிகழ்வை; வேரின் ஆழத்தை விழுதுகளுக்கு விளக்கிய செம்மையான இந்த ஆட்ட நிகழ்வை; வழங்கியவர் நம்மத்தியிலே பன்நெடுங்காலமாக நாட்டியத்தை தன் வாழ்நாளாக கொண்டிருக்கும் வழுவூர் ராமையாபிள்ளையின் மாணவியான நாட்டியக்கலாநிதி.கார்த்திகா.கணேசர் அவர்கள்.

அவர் நாட்டியம் குறித்த பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு வெளிநாடுகளில் நாட்டிய விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். அது மட்டுமல்லாது பல்வேறு பண்பாட்டுக்குரிய நடனங்களையும் கற்று அதிலிருக்கும் சிறப்புகளை பரீட்சார்த்த முயற்சியாக அரங்குக்கு கொண்டுவந்ததிலும் ஈழத்தின் நடனக்கலை வரலாற்றுக்கு பல புதிய முகங்களையும் பரிமானங்களையும் தந்திருக்கிறார்.

ஒரு பண்பாட்டின் கருவூலத்தைச் சுமந்து திரியும் அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் நிறைய விடயங்கள் உள்ளன. அவரை நம் சமூகம் காக்கவும் கனம் பண்ணவும் கூட கடமைப்பட்டிருக்கிறது.

தமிழ் சமூகத்துக்கு ஒரு எதிர்காலம் இங்கிருக்கிறது என்பதை நம்புபவர்கள் எதிர்கால சந்ததி ஒன்று இங்கு வளர்கிறது என்ற பொறுப்பினைக் கொண்டிருக்கிறவர்கள்; செம்மொழி அந்தஸ்து கொண்ட நம் தமிழ் பாரம்பரியம் பெருமிதம் மிக்கது என்பதை உணர்பவர்கள் உள்ளனரெனில் அவர்களுக்கு சொல்ல ஒரு செய்தி உண்டு..

எல்லோரும் தத்தம் ‘தலைப்பாரங்களை’ இறக்கி வைத்து விட்டு அறிவைத் தேடி ஓடி வருக! எங்கிருப்பினும் அவற்றை உள்ளக் கமலங்களில் ஏந்திக் கொள்க!

’விதைகள் முக்கியம்’!

இந்த நடன நிகழ்வு சமூகத்துக்குச் சொல்லும் பாடம் இதுவே!

யசோதா.பத்மநாதன்.
20.10.18

(தமிழ்முரசு அவுஸ்திரேலியாவுக்காக எழுதியது.) 
www.tamilmurasuaustralia.com
இயலோடு இசை’ந்த நடனம்