Friday, December 29, 2017

ஸ்ரீ காந்த லக்ஷ்மி

 ஸ்ரீ காந்த லக்ஷ்மி......

யாழ்பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகர்!
நூலகம் குறித்த; நூலக இயல் குறித்த ஈழத்துத் தமிழ் புத்தகங்கள் பலவற்றின் தாய்!
noolaham.org இன் வழிகாட்டுனர் சபையின் ஆரம்பகாலத்தில் இருந்து இற்றை வரையான உறுப்பினர்!

www.jaffnaheritage.blogspot.com
வாழும் மரபு

www.jaffnaheritage.wordpress.com (விம்பநூலகம்)
ஈழத்தமிழர் வாழ்வியல்

நூலக விழிப்புணர்வு நிறுவனம் மற்றும் முப்பரிமாண நூலகங்களின் சொந்தக்காறி!

எல்லாவற்றுக்கும் மேலாகத்  தன் வாழ்நாளில் சம்பாதித்த தன் அனைத்து உழைப்பினையும் முதலாகப் போட்டு தன் இல்லத்திலேயே நான்கு மாடியில் கொள்ளத்தக்க தமிழர் தம் பாரம்பரிய மரபு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் அரிய தமிழ் சமூக பண்பாட்டுக் காவலாளி!

இணுவிலில் இருக்கும் அந்த இல்லத்துக்கு ‘அறிதூண்டல் மையம்’ என்று பெயர்.

மறைந்து போன பாரம்பரியப் பொருள் பண்பாட்டின் காவலாளி........

அறிவு மாணவர்களைத் தேடிச் சென்றடைய வேண்டும்;
அது கண்டு, தொட்டு உணர்ந்து அறிகையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்;
அறிவுக் கருவூலமான நூலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலம் இது என்பதை உலகின் பல நாடுகளுக்கும் அங்குள்ள நூலகங்களுக்கும் சென்று கற்று; உணர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த பல்வேறு தடைகள் இயலாமைகள் வளப்பற்றாக்குறைகளுக்குள்ளும் தொடர்ந்து போராடி வரும் பண்பாட்டுப் போராளி!

“வாழும் மரபு” என்ற சொல் குறித்த அர்த்தத்தின் சொந்தக்காறி.


ஸ்ரீ காந்த லக்ஷ்மி.......

இவரை நான் சந்தித்ததே ஒரு தற்செயல் தான். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது  16.10.2017 அன்று யாழ்பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். அதன் ஓரங்கமாக நூலகத்துக்குச் செல்ல விரும்பி அங்கு சென்ற போது இப் பிரதம நூலகரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அவரது அறை நவீன வசதிகள் கொண்ட பகுதியாக இருக்கும் என்ற என் எண்ணத்துக்கு மாறாக அது ஒரு தமிழ் பண்பாட்டுப் பேணுகையின் ’வாழும் மரபாக’ இருந்தது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!

அவரை மறந்து அவர் சேகரித்து வைத்திருக்கிற அரும் பொருட்களை பூரிப்போடும் ஒரு வித வியப்போடும் நான் காண விளைந்ததைக் கண்ட அவர் ‘கருத்தூண்’ என்றொரு புத்தகத்தை பின் புறமாகத் திரும்பி தன் புத்தக அடுக்கில் இருந்து எடுத்து மனமுவந்து பரிசளித்தார்.

அந்த நாளின் இரவு அவரது புத்தகத்தை ஆசையோடு பார்த்து படித்து அறிந்து ஒரு விதமான கிறக்கத்தில் உறங்கி மறு நாள் காலை 7.30 மணிக்கு இந்தப் பெண்மணியைக் காண சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டில் போயிறங்கி நான் நின்ற போது ஒரு புன்னகையோடு, வேலை நேரத்தைத் தயங்காமல் பின் போட்டு, ஒரு வித தாய்மையின் பூரிப்போடு தன் பொருட்கள் அனைத்தையும் பார்ப்பதற்காக எனக்குத் திறந்து விட்டு, அது பற்றி உரையாடி, விளக்கம் கூறி, ஆதங்கம் பகிர்ந்து, நாம் ஆத்மார்த்தமானோம்.....

நான் பார்ப்பதற்காகச் சுதந்திரத்தை முழு நம்பிக்கையோடு எனக்குப் பரிசளித்து விட்டு, சமைத்து தந்த விருந்தோம்பலில், அவரின் ‘வாழும் மரபினை’ அறிந்து கொண்டேன்.

மேலே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படங்கள் அவரது காரியாலய அறையில் காட்சிப்பொருட்களாக உள்ளவற்றுள் சில...

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017.
இடம்: யாழ் பல்கலைக்கழக நூலகம்; நூலகர் அறை.

அக்கோய்... 
நீங்களும் எங்கள் பண்பாட்டுப் பொக்கிஷம் தான்!

மேலே காணப்படும் ஒளிப்படங்களை எடுக்க அனுமதி தந்த நூலகர். திருமதி.ஸ்ரீகாந்த லக்ஷ்மி. அருளானந்தன் அவர்களுக்கு என் நன்றி.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 17.10.1017.
இடம்: இணுவில்.


Friday, December 22, 2017

லக்ஸலா....

லக்ஸலா.......

கொழும்பில் இருக்கும் ஓர் அரச கலைக்கூடமும் விற்பனை அரங்கும்!

சிங்கள மக்களின் கலைகளின் முகம்!
ஸ்ரீலங்காவின் பண்பாட்டு பொருள்களின் விற்பனைக் களஞ்சியம்!

அரச ஆதரவோடு வெளி நாட்டவருக்காக தன்னை நேர்த்தியோடு  காட்சிப்படுத்தும் நாட்டின் முகம்!

இலங்கையில் பல்வேறு இடங்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் இக் காட்சியகம் கொழும்பில் 98/4, Havelok Road, Colombo - 5 - என்ற இடத்திலும் காட்சியகத்தைக் கொண்டிருக்கிறது.

5.10.2017 அன்று அங்கு சென்ற போது எடுத்த சில ஒளிப்படங்கள் இங்கே.
                                          ( முழுவதும் எடுக்க வில்லை...)
மேலே காணப்படுகிற தலையாட்டி பொம்மைகள் சிங்கள மக்களின் கலைகளை வெளிப்படுத்தும் அவர்தம் தனித்துவக் கூறின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம். நான் சிறு பிள்ளையாக இருந்த போது கண்ட தலையாட்டி பொம்மைகள் தம்பதி சமேதரராக தத்ரூபமான வண்ணங்களோடு இருவகைப்பட்டவையான கூறுகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. 

ஒரு சோடி பெரஹெரா நடனமாதுவும் அதற்கு மேளம் அடிக்கும் ஆண் சோடியையும் கொண்டிருக்கும். அவர்கள் அழகிய கலைத் தம்பதியினர்.

 மற்றய சோடி கிராமத்து தம்பதிகளை நினைவுறுத்தும் வண்ணம் பெண் மரபு வழியான அவர்களின் ஆடையான லுங்கியும் பிளவுசும் அணிந்து பெரிய பல் வெளித்தெரியும் வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டையான பருமனான தோற்றத்தோடும் ; ஆணும் அதே போல சாறமும் அதன் மேலே கறுப்பு பெல்ட்டும் அணிந்து வெறும் தோளிலே சால்வையும் போட்டபடி அதே வெள்ளாந்திச் சிரிப்போடும் கட்டயான மண்ணிறத் தேகத்தோடும் காணப்படுவர்.

மிகக் கச்சிதமான அழகு அது! 

ஆனால் அவற்றை எல்லாம் இப்போது அதே கலையழகோடு காணக்கிடைக்கவில்லை. இங்கு தம்பதியினராகக் கூட அவர்கள் இல்லை. கலை அம்சமும் முன்னரைப் போல நேர்த்தியாக இல்லை. 

majestic city என அழைக்கப்படும் கடைத்தொகுதிகளைக் கொண்ட வளாகத்தில் வெளி மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் இருந்து பொருட்களை நேரடியாக பெற்று விற்பனை செய்யும் ஒரு கடைக்கார பெண்மணியோடு உரையாடிய சமயம் அவர் ‘இப்போதெல்லாம் பழைய மாதிரி கலைஞர்களைக் காணக்கிட்டுவது அபூர்வம் என்றும்; புதிய சந்ததியினர் இவ்வாறான வேலைகளில் வருமானப் பற்றாக்குறையாக இருப்பதாலும்; படித்து வேலைகளுக்குப் போகும் விருப்பம் அதிகரித்து வருவதாலும்; இத்தகைய கலைகள் இப்போது அருகியும் அழிந்தும் வருகின்றன எனக் கூறினார்.

இன்று அவ்வாறான கலைப்பொருட்களைக் காணவே முடியவில்லை. லக்ஸலாவில் கூட  தலையாட்டிப் பொம்மையில் பெண் நடனமாது மாத்திரமே இருந்தது. எங்கே அந்த மேளம் அடிக்கிற ஆண் சோடி...? இருக்கின்ற அதிலும் கூட முன்னய கலையம்சத்தைக் காண முடியவில்லை....


கீழே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பொக்கிஷப் பெட்டி கொழும்பில் இருக்கும் என் சினேகிதியினுடயது. ஒளிப்படம்: 5.10.17.


கொழும்புக் கடை ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிங்கள மர சிற்பங்கள்...ஒளிப்படம்: 4.10.17.

இவற்றை எல்லாம் பார்த்து விட்டு யாழ்ப்பாணம் போன போது நம்மிடையே ஏன் இவ்வாறான கலைக்கூறுகளின் காட்சிப்படுத்தலும் விற்பனை அரங்கும் இல்லை என்ற மனக்குறையே எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்த மியூசியத்துக்குச் சென்ற போது கவனிப்பார் அற்ற ஒரு மூலையில் ஓரிரு தொழிலாளர்களோடு ஆள் அரவம் எதுவுமற்று ஒரு சிறு மூலையில் அது ஒதுங்கி இருக்கக் கண்டேன்.

குறைந்த பட்சம் ஓரளவு கற்றறிந்த மக்களிடம் கூட இந்த நூதனசாலை பற்றிய ; அதன் வரலாற்றுப் பெறுமதி பற்றிய; பிரக்ஞையோ, பரீட்சயமோ, தேடலோ,ஆர்வமோ, பெருமையோ இல்லாதிருப்பது வேதனையளிப்பது; வருத்தத்திற்குரியது! 

அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பேசிய போது அங்கு இருக்கும் பொருள்களை ஆவணப்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார். ஆனாலும் மழைக் காலங்களின் போது கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதாகவும் பொருட்கள் பல சேதமடையும் நிலமை இருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

மேலும், புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை உண்டெனக் கூறிய அவர் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மிகவும் விநயமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு சில படங்களை மட்டும் எடுக்க அனுமதித்தார். அவருக்கு நன்றி. அவை கீழே வருகின்றன. ஒளிப்படம்: 13.10.2017.


மேலும் சில ஒளிப்படங்கள் கீழ் வரும் லிங்கில் யாரோ ஒருவரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் அவைகளும் முழுமையானவையல்ல. 

https://hiveminer.com/flickr_hvmnd.cgi?method=GET&textinput=archaeological,olympus&tag_mode=all&search_domain=Tags&photo_number=50&page=1&noform=t&sorting=Interestingness&originput=archaeological,olympus&sort=Interestingness&search_type=Tags&photo_type=250

 அங்கு - அந்த நூதன சாலையில் - காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களில் பல வியந்து பார்க்கத் தகுந்தன. அதிலும் குறிப்பாக  யாழ். செண்ட்.ஜோன்ஸ் கல்லூரியின் முன்நாள் அதிபர் ருவைனம் அவர்கள் (ஆங்கிலேயர் ?) (194...) சேகரித்து வைத்திருந்து  பின்நாளில் நூதன சாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிய பல கலைப் பொக்கிஷங்களைக் கண்டு மெய் சிலிர்த்தேன். இந்தளவு பொருட்களையும் கேகரித்து பாதுகாத்து சமூகத்துக்குக் கையளிக்க இந்த மனிதர் எத்தகைய ஒரு கலாரசிகராகவும் சமூகத்தின் கலைக் காவலனாகவும் இருந்திருக்கவேண்டும்! இந்த மாமனிதரைப் பற்றி அறிய அக் கல்லூரியின் இணையப்பக்கத்துக்குப் போனால் அங்கு அவரைப் பற்றிய எந்த தகவலும் காணப்படவில்லை. 

அங்கு இடம் பெற்றிருக்கும் அதிபர் வரிசையில் கூட அவருக்கு - அந்த உன்னத மனிதருக்கு - ஓர் இடம் இல்லை....

நம் நிலைமை இப்படியாக......

குளத்தங்கரையிலே கிடக்கும் தண்ணீர் வடிவமைத்த மொழு மொழு கூளாங்கல்லின் மேலே குளத்தடி  விருட்சத்தில் இருந்து விழும் பழுத்த ஓர் மஞ்சள் இலைக்கு உரையாட அவகாசம் நேர்ந்தால் அவை என்ன பேசிக்கொள்ளக் கூடும்?

இந்த வாழ்வு பற்றி......

வாழ்ந்த கதைகள் பற்றி......