Friday, April 5, 2024

பொழுது போக்கு: வண்ணம் தீட்டல்


பல மாதங்களுக்குப் பின்கிடைத்த ஒரு ஓய்வு நாளில் இங்கு வருகிறேன்.

எல்லோரும் நலம் தானே? முன்னர் போல இப்போதெல்லாம் பலர் வலைப்பூக்களை நாடுவதில்லை. பலரும் பல வேறு பட்ட சமூக வலைத்தளங்களுக்குப் போய் விட்டார்கள்.

நானும் கூடத்தான்.

ஆனாலும் வலைப்பூவில் நம் மனதில் பட்டவற்றைப் பகிர்வதற்குக் கிடைக்கின்ற இடத்தைப் போல் ஏனைய தளங்களில் வாய்ப்புகள்  அமைவதில்லை. அதனால் எப்போதும் இந்த வலைப்பூ எனக்கு தாய் வீடு மாதிரி. வருவோர் போவோர் யாரும் இல்லா விட்டாலும் நம் வீடு நமக்கு வசதியானது தானே!

கடந்த வருட இறுதியில் கிடைத்த விடுமுறையில் நான் பெற்றுக் கொண்ட ஒரு புத்தகம் வண்ணம் தீட்டுதல். வளர்ந்தவர்களுக்கான அந்த வண்ணம் தீட்டும் புத்தகம் ஐக்கியஇராச்சியத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உருவாக்கியவர் Millie Marotta.

அந்தப் புத்தகத்தில் இருந்த சில படங்களுக்கு வண்ணம் தீட்டிய அனுபவம் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியை; மன ஒருமைப்பாட்டை; அமைதியை; அது தந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் படங்களை எல்லாம் யார் வரைந்தார் என்ற தேடல் எழுந்தது. கூகுள் தேடலில் மைலி தனக்கென ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அங்கு தன் புத்தகங்களில் இருந்து வண்ணம் தீட்டி மக்கள் அனுப்பிய படங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார் என்ற விடயங்களை எல்லாம் அறிய முடிந்தது.

ஆஹா! எத்தனை வண்ணங்கள்! எத்தனை யுக்திகள்!! ஒரு படத்திற்காக எத்தனை வகைகளில் எல்லாம் பார்வைகளும் வண்ணங்களும் பதிவாகி இருக்கின்றன!! என்றெல்லாம் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

கூடவே ஒரு விதமான ’எல்லோரும் ஒரேவிதமான ஆர்வத்தால் ஒன்றிணைந்தவர்கள் என்ற ஒரு வித உறவும் ஆர்வமும் மகிழ்வும் கூடவே எழுந்தது.

ஒருவித ஆர்வக் கோளாறில் நானும் வண்ணம் தீட்டிய சில படங்களை அனுப்பி வைத்தேன். அனுப்பிய சில நாட்களில் அது அங்கு முதல் பக்கத்தில் பிரசுரமாகி மேலும் அது மகிழ்ச்சியைத் தந்தது.

உங்கள் பார்வைக்காக என்னுடயவையும் மேலும் உலகளாவிய அளவில் மக்கள் வண்ணந் தீட்டி அனுப்பிய படங்களையும் கீழ்வரும் இணைப்பில் சென்று காணலாம்.


 புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மன ஒருமைப்பாட்டையும் தரும் இவாறான பல புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. நீங்களும் ஒன்றை வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்!

Thank You Millie .❤

Wednesday, December 27, 2023

Tree of Life

 ஒரு மரம் சொல்லும் செய்திகள் ஏராளம் உண்டு. அதனிடம் இருக்கும் அமைதி, கொடைத்திறம், அழகு, வாழ்வு, என்று மனிதர் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளம் உண்டு.

குழந்தையாய் இயற்கையிடம் இருந்து இரவல் வாங்கிய தண்ணீரையும் காற்றையும் ஒளியையும் உண்டு சுவாசித்து; வளர்ந்து பூத்து காய்த்து கனிந்து இலையாய், கிளையாய், பெரு விருட்சமாய் வியாபித்து, உயிரினங்களுக்கு பயன் கொடுத்து தன் வித்துக்கள் வழியாக அல்லது தன் வேரடி வழியாக தன் சந்ததிகளை பரப்பி இல்லாது போகிறது ஒரு மரம்.

அப்போ வாழ்க்கை என அது நமக்குக் கற்றுத் தருவது யாது?

மற்ற உயிரினங்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதும் அதன் வழியாக தன் சந்ததியை இந்த மண்ணில் விட்டுச் செல்வதும் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் கூட நம் வாழ்வை அப்படியே அர்த்தப் படுத்தியும் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அதில் இன்னும் எத்தனையோ வாழ்வின் அர்த்தங்கள் தொனிக்கும். என் வீட்டுக்கு அருகிலொரு மரம் உண்டு.  அது எனக்கு மிகவும் பிடித்தமான மரம்.

காலநிலைகளுக்கேற்ப அது தன் வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்களைக் கண்டு வருகிறது என்பதை கடந்த ஒரு வருடமாகக் கவனித்து வருகிறேன். அதன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை கீழே படமாகத் தருகிறேன். பாருங்கள்.

அது போலத்தான் நம் வாழ்வும் தோழர்களே! 

இரவும் பகலும் வருவது போல; மழையும் வெய்யிலும் வருவதைப் போல; நன்மையும் தீமையும் இருப்பதைப் போல; ஏற்றமும் இறக்கமும் வருவதைப் போல இந்த மரத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள்.

அது தன்னை மேலும் மேலும் புதுப்பித்தபடி பெருத்து மேலோங்கி உயர்ந்து செல்கிறது.

அது போல நம் எல்லோர் வாழ்வும் இயற்கையின் - இந்தப் பிரபஞ்சத்தின் வல்லமைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற சுலோகத்தை சுமந்தவாறு புதிய வருடத்தில் உற்சாகமாகப் பயணிப்போம்.

எல்லோருக்கும் எனது 2024 புது வருட நல் வாழ்த்துக்கள்.


மேலே இருப்பது சிட்னியின் இலையுதிர் காலத்துப் பருவம். அது மார்ச் ஏப்ரல் மே மாதத்துக்குரிய காலங்கள். அதில் இந்த நடு நிற்கும் இந்த நெடுமரம் எத்தனை அழகோடு காட்சியளிக்கிறது பாருங்கள். இலைகளை உதிர்ப்பதற்கு முன்னால் அது தன் நிறங்களை எத்தனை அழகாக காட்சிப்படுத்துகிறது. இல்லையா?


                                               


                                    


                                               

குளிர் காலத்தில் அதன் கோலம் இது. மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் சிட்னியின் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதத்திற்குரிய காலங்கள். பாருங்கள் அது தன் இலைகள் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு ஒரு பட்ட மரம் போல காட்சியளிப்பதை....

மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் செப்ரெம்பர், ஒக்ரோபர், நவம்பர் மாதத்திற்குரிய வசந்த காலத்தில் அந்த நெடுமரம் நின்ற காட்சி இது. நம்ப முடிகிறதா? பட்டுப்போன மரத்தைப் போல இலைகள் யாவையும் உதிர்த்து விட்டு நின்ற மரமா இது என்று ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?

வாழ்க்கையும் அப்படித்தான் தோழர்களே!

இப்போது இங்கு வெய்யில் காலம். இந்த மரத்திற்கு மிகவும் உவப்பான காலம் போலும்! அண்மையில் பார்த்த போது நீள நீளமான பூக்களோடு காட்சியளித்தது. அதனை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் இரு மாதங்கள் நமக்கு கோடை நீடிக்கும் என்ற போதும் இம்மரம் தன் பூக்கும் பராயத்தை கோடையின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது.

TREE OF LIFE! 

இன்னும் இரண்டு மாதங்களில் இலைகள் சிவந்து உதிர ஆரம்பிக்க இருக்கும் போது இந்த மரம் தன் ஒரு வருட சுளற்சியை நிறைவு செய்யும்.

 பாருங்கள்! இலை உதிர்காலம் வரப் போகிறது என்று அது கலங்குவதில்லை! குளிர்காலம் வந்துவிட்டதே என்று  அது கோவித்துக் கொள்வதில்லை. அது போல வசந்தகாலத்தில் அது இது தான் நிரந்தரம் என்று கர்வம் கொள்வதில்லை; பூக்கும் அதன் கோடைகாலத்திலோ அது குதூகலமும் கொள்வதில்லை.

அது அனைத்தையும் ஏற்றுக் கொண்டபடி ஒவ்வொரு வருடத்திலும் ஒரு படி உயர்ந்து செல்கிறது. மொளனமாக!!

உதிர்வதும் பின் துளிர்ப்பதும் பூப்பதும் பின் காய்ப்பதும் இயற்கையின் நியதி என்பதை இயற்கை இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது; ஒவ்வொரு அம்சங்கள் வழியாகவும்.

இப்படித்தான் நம் வாழ்வும்! வாழ்ந்து பார்த்து விடுவோம். 

இந்தப் போதி மரம் போல...

சங்க காலத்துப் புலவன் கணியன் பூங்குன்றன் சொன்னது போல ஆற்றில் விழுந்த ஓரிலையைப் போல நம் வாழ்வு! 

புதுவருட நல்வாழ்த்துக்கள்!!

Welcome to 2024!

Sunday, October 22, 2023

தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது….

 தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது,

வன்னியைக் கொண்டாடுதல்; அதன் வாழ்வியலைக் கொண்டாடுதல்; மண்ணை, மண்ணின் மகிமையைக் கொண்டாடுதல், அதன் மேல் கட்டமைக்கப் பட்டிருக்கும் வீடுகளை, குடிசைகளை,  அக் குடியிருப்புகளில் வாழும் சமான்ய  மக்களை, மேலும் அங்குள்ள மரங்களை, செடிகொடிகளை,வயல்களை, வெளிகளை, காடுகளை, கழனிகளைக் , குருவிகளை,  கால்நடைகளை, காடுகளில் உலவும் விலங்கினங்களை, வீட்டுப் பிராணிகளை என Flora,Fauna அனைத்தையும் கொண்டாடுதல் என்று அர்த்தம் பெறும்.

வன்னி பிரதேசம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. அவை முல்லையும் மருதமும் கலந்த நிலம். அங்கு சேவலுக்குப் போட்டியாக  மயில்களும் அகவும். காட்டோரம் மான்கள் சுயாதீனமாய் திரியும். பகல் பொழுதில் மாடு மேய்த்து மாலை நேர மம்மல் பொழுதுகளில் யானை விரட்டும் சிறுவர்களுக்கும்; குரங்குகளுக்கு நெளிப்புக் காட்டி குண்டுமணிகளோடு சுள்ளிகள் பொறுக்கும் சிறுமிகளுக்கும் பாலைப் பழங்களையும் வீரைப் பழங்களையும் காட்டு மரங்களே  நல்கும். காட்டுத்தேனும் தேக்கு மரமும் நிறைந்த முல்லை நிலத்தில் எருதுகளோடு கூடவே மேயச் செல்லும் கறவை மாடுகளுக்குக் குளங்களில் தண்ணீர் எப்போதும் குறையாதிருக்கும். அங்கு துள்ளி விழும் விரால் மீன்களோடு சிறுவர்கள் குதித்து நீச்சலடிக்க, வயலுக்குப் பாயும் வாய்க்கால் தண்ணீரில் புலுனிக் கூட்டம் குளித்து சிறகுலர்த்தும்,

சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் குடியிருக்கும் ஏழைக் குடியானவனின் பொட்டல் விழுந்த கிடுகுக் குடிசைகளில் ஈதல் அறம் நிறைந்து கிடக்க, ஒற்றை ஒழுங்கையால் அச்சமற்று நடந்து போவாள் பள்ளி செல்லும் பிள்ளை.

இத்தகையதான இந்த மண் குறித்த அடையாளங்கள் வடக்கு வாழ் தமிழ் மக்களின் மண்ணமைப்பில் இருந்து வேறுபட்டவை. அந்த சுண்ணாம்புக் கற்களும், செம்மண்ணுமான நிலத்தில் கல்வீடுகளும் கிடுகுவேலிகளும் பனைமரக் காடுகளும்,கம்பீரமாய் உயர்ந்து நிற்கும். புகையிலைத் தோட்டங்களும், வெற்றிலைக் கொழுந்துகளும் கிணற்றுப் பாசனமும் மண்ணின் மகிமை பேசும். கல்விக்கும், கட்டுப்பாட்டுக்கும், கடின உழைப்புக்கும், சிக்கன வாழ்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் பெயர்போன வடக்கின் சாயையிலிருந்தும் கூட வன்னி பெருமளவில் வேறு படும்.

அதே நேரம் பெளர்ணமிக் காலங்களில் மீன்கள் பாடும் தேன்நாடாகப் புகழப்படுவது கிழக்கு. அங்கு வாழும் தமிழ் மக்களின் நாட்டார் பாடல்களோடும் வடமோடி தென்மோடிக் கூத்துகளோடும்; தயிரோடு பழம் பிசைந்து; இசைபோலும் மொழிபேசி; விருந்தோம்பி மகிழ்ந்திருக்கும் கிழக்குவாழ் மக்களின் அன்றாட இயல்பிலிருந்தும் கூட வன்னி வேறுபடும். இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த மதங்களை அனுசரிக்கும் மக்கள் அங்கு ஒன்று கூடி அருகருகாகவும் சுமூகமாகவும் வாழும் மாண்பினைக் கொண்டிருக்கிறார்கள். அந்த நெய்தல் நில சமூக சாயையிலிருந்தும் கூட வன்னி முற்றிலுமாக வேறுபட்டது.

அந்த வரிசையில் மலையகத் தமிழ் மக்களை நினைத்துப் பார்க்கிறேன்! இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிப் பிரதேசங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வியலோ இன்னும் ஒரு படி வேறானது. துயர் நிறைந்தது. தேயிலை இரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக குளிருக்கும் கடிக்கும் அட்டைகளுக்கும் ஈடுகொடுத்து அன்றாடம் கடினமாக உழைத்து இன்றும் லயன்களில் வாழும் அவர்கள் வாழ்வின் துயரங்கள் எழுத்தில் வடிக்க வொண்ணாதது!

நாம் – தமிழர்களாக – அவர்களை மொழியாலும் வாழ்வாலும் ’கவனியாது’ விட்டு விட்ட குறையை – காலமகள் தமிழர்களுக்கு ஒருநாள் உரத்த மொழியில் எடுத்துச் சொல்லக் கூடும். அதன் எதிரொலி ஈழத் தமிழர் புலம் பெயர்ந்த தேசங்கள் வரை கேட்கவும் கூடும்.....

இவர்களோடு, இஸ்லாமியத் தமிழ், கொழும்புத்தமிழ், மற்றும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் தமிழியங்களுமாக - இருக்கும் அத்தனை சிறு சிறு நீரோடைகளும் தமிழ் என்ற பொதுவான பெரு நதியில் அதனதன் பண்பு நலன்களோடும்; தனித்துவ தன்மைகளோடும்; சமத்துவமாக, தயக்கமேதுமற்ற தமக்கேயான பெருமிதத்தோடும்; இணக்கப்பாட்டோடும் ( hormony) ஒன்றுகலக்கும் போது தான் ஈழத்தமிழுக்கான முழுமையான இலக்கியமும் அதற்கான இலக்கிய முழுமையும் கிட்டும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால் அது ஒரு பெரும் வண்ணமயமான வெளிச்சத்தை நம் தமிழுக்கு பாய்ச்சும் என்பது நிச்சயம்.

அஃது நிற்க,

இந்த வகையில் புவியியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தனக்கென தனி அடையாளங்கள் கொண்ட வன்னி மண்ணை அதன் அத்தனை சாயல்களோடும் மண் வாசம் மாறாமல் பதிவு செய்தவை தாமரைச் செல்வியின் கதைகள். காலம் இயல்பாக  நமக்கு அவரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இன்றய தொழில்நுட்ப யுகத்தில் நின்று கொண்டு 70களின் வாழ்வியலை கற்பனை பண்ணுவது கூட இன்றுள்ள இளம் சந்ததியினருக்குக் கடினமாக இருக்கக் கூடும். 70களில் தொலைக்காட்சிகளோ, தொலைபேசிகளோ இருக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. வன்னிப் பிரதேசங்களுக்கு மின்சார வசதி கூட அதிக பேரிடம் இருந்திருக்கவில்லை. இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சாதனம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து தமிழ் சேவையும், ( ஸ்ரீமாவோ ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட தென்னிந்திய சஞ்சிகைகளின் முடக்கத்தால் ) எழுச்சி பெற்ற வீரகேசரிப் பிரசுரங்களும் பத்திரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளும் தான்.

இன்று நாம் பெண்விடுதலை பற்றி  நிறையப் பேசுகிறோம்; நிறைய மாறி இருக்கிறோம்; இப்போதும் மாறி வருகிறோம்; இனியும் மாற்றங்கள் வரும் என்று நம்பலாம். ஆனால் தாமரைச் செல்வி வாழ்ந்த ஆரம்ப காலச் சூழலில் ஒரு விவசாய வாழ்க்கைச் சுமைகள் கொண்ட ஒரு பின்புலத்தில் இள வயதில் திருமணமாகிய பின்பும்; இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாகிய பின்பும்; ஏறும் சுமைகளுக்கு மத்தியிலும் அவரது கதைப் புலங்கள் மண்ணின் பதிவுகளாக அதன் அச்சொட்டான இயல்பை பதிவாக்கி இருக்கின்றன என்பது எத்தனை பெரிய சாதனை!

ஆண்களால் இலக்கிய உலகில் கால் பதிக்க இருக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் ஒரு பெண்ணாகக் குடும்ப சுமைகளைச் சுகமாகச் சுமந்து கொண்டு, விவசாய வயல்வெளி வேலைகளுக்கும் உதவிக் கொண்டு, பிள்ளைகளை - அவர்களின் தேவைகளை - படிப்புகளையும் கண்காணித்துக் கொண்டு மூத்த சகோதரியாக தன் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டு, இலக்கிய உலகில் தொடர்ச்சியாக வலம் வருவது என்பது அத்தனை சாமான்ய விடயம் அல்ல. இவற்றை எல்லாம் சுமந்த படி சுமார் 50 ஆண்டுகளாக வன்னியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாரிய பணியை பெண்மை நலம் மாறாமல் அவர் அநாயாசமாக செய்து வந்திருக்கிறார்.

அந்த இலக்கிய வடிவங்களில் தெரிவது எல்லாம் வன்னியின் பண்பு நலம்.

அவை வன்னிப் பகுதியின் வயல் வெளிகளைப் போல தமிழ் இலக்கியப் பரப்பில் வன்னி மண்ணுக்கான இலக்கிய அறுவடையாக பரந்து பொலிந்திருக்கின்றன. தனது கட்டுக்கோபான சிந்தனைகளின் ஊடே கண்ணியமும் அக்கறையும் பொறுப்புணர்வும் மீதுர, வன்னியின் வாழ்வை இலக்கியமாக்கி இருப்பவை அவரது எழுத்துக்கள். அவர் வன்னி இலக்கிய வடிவத்திற்கு ஆண்மாவாகவும் உடலாகவும் ஓருருவம் கொடுத்திருக்கிறார். எளிய வாழ்வுக்குரித்தான அம் மக்களை இலக்கியப் பல்லக்கில் ஏற்றி வைத்தவை அவரது எழுத்துக்கள்.  தனித்துவமான வன்னியின் சாயலை தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டு வந்தவை அவர் கை பிடித்த பேனா. அவை தனித்துவமான ஈழத்து இலக்கியக் கருப் பொருளுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

நிலத்தினடியில் ஆழ வேரூன்றி, உயர எழுந்து, விழுது பரப்பி, ஊரே இருந்து போக நிழல் தந்து, சாப்பிட்ட உணவினை அசைபோட்டபடி இளைப்பாறும் ஊர் மாடுகளுக்கு அதன் அடிமடியிலே இடம் கொடுத்து, பல பறவைகள் சந்ததி சந்ததியாகக் கூடுகட்டி வாழ கிளை தந்து, அவ் ஊர் மக்களின் சுகதுக்கங்களையும், இரகசியங்களையும், புறணிகளையும், காதல் சல்லாபங்களையும், சண்டை சச்சரவுகளையும், அழுகைகளையும் உவகைகளையும் பார்த்த படி ஊர் நடுவே உயர்ந்து நிற்கும் ஒரு பேராலமரம் போலும் அவர் அந்த மண்ணின் விழுமிய சாட்சியாக இருக்கிறார். அவரது படைப்புகள் அவற்றை வழிமொழிந்து நிற்கின்றன.

வன்னி மண்ணின் அமைதிக் காலங்களில் அதன் எழிலையும் அதன் தனித்துவத்தையும் செவ்வனே அவர் பதிவு செய்திருக்கிறார்.  அதே மாதிரி வன்னி மண் போர்களைச் சந்தித்த போர் காலங்களின் போதும்; பின்னர்  இடம்பெயர்ந்து, சரண் புகுந்த, வடதமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த போதும்; போராளிகளின் பாசறையாக; இலங்கை, இந்திய இராணுவம் புகுந்துவிட முடியாத பேரரனாக, அது விளங்கிய போதும்;  அதன் முகத்தையும் சமூகத்திற்கு அவர் தன் எழுத்துக்களால் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

பின்னர் அவலங்கள் நிகழ்ந்த போதும், இழம்புகள் சம்பவித்த போதும் தோல்விகளைக் கண்டபோதும் மண் கொண்ட மாற்றங்கள் அவர் கதைகளில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. இடம்பெயர்ந்த போது இடப்பெயர்வின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறார். புலம்பெயர்ந்த பிறகு புலத்தின் தன்மைகளையும் அவர்  பதிவு செய்திருக்கிறார்.  சுமைகளில் இருந்து உயிர்வாசம் வரையான அவரது படைப்புகள் அதற்குச் சாட்சி.

இந்த சந்தர்ப்பத்தில் காட்டாறு எழுதிய செங்கையாழியானையும் நிலக்கிளி எழுதிய பால மனோகரனையும் ஒரு தடவை நினைத்துக் கொள்கிறேன். தாமரைச் செல்வியின் முதலாவது நாவலான சுமைகளோடு வைத்தெண்ணத்தக்க அவை வன்னியின் வாழ்வை பிரதிநிதித்துவப் படுத்துவன. வன்னியைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தத்ரூபமாக தூக்கி நிறுத்தியவை அவை!

தாமரைச் செல்வி என்பவர் தனி ஒருவரல்ல; அவர்  வன்னிக்கான இலக்கியப் பிரதிநிதி. வ.ஐ.ச. ஜெயபாலன் 1968ல் எழுதிய கவிதை ஒன்றில் வன்னியை இப்படிப் பதிவு செய்வார். ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் வெளிவந்த அக் கவிதை, இவ்வாறு நகர்கிறது. 

’துணைபிரிந்த குயில் ஒன்றின் 

சோகம் போல; 

மெல்லக் கசிகிறது 

ஆற்று வெள்ளம். 

காற்றாடும் நாணலிடை 

மூச்சுத் திணறி 

முக்குளிக்கும் வரால் மீன்கள். 

ஒரு கோடைகாலத்து மாலைப் பொழுது அது! 


என்னருகே 

வெம்மணலில் 

ஆலம்பழக் கோதும் 

ஐந்தாறு சிறு வித்தும் 

காய்ந்து கிடக்கக் காண்கிறேன். 

என்றாலும் 

எங்கோ வெகு தொலைவில் 

இனிய குரல் எடுத்து 

மாரிதனைப் பாடுகிறான் 

வன்னிச் சிறான் ஒருவன்.’ 

என்று அந்தக் கவிதை வன்னியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பாடும். அந்த நம்பிக்கையாக – மாரிதனைப் பாடிய வன்னிச் சிறானாக - 70 களில் வன்னி இலக்கியத்திற்குக் கிடைத்தவர் தாமரைச் செல்வி.

தாமரைச்செல்வி தந்தவைகள் கதைகள் தான் என்ற போதும், அதன் கருவில் எப்போதும் ஒட்டிநிற்பவை உண்மைகள்; மண்வாசம் மாறா மெய்மைகள். பொய்யான ஒன்றை அவர் ஒருபோதும் புனையவில்லை. புகழுக்காகவும், பிரபலத்திற்காகவும், பாராட்டுக்களுக்காகவும் அவர் கதைகள் ஒருபோதும் மண்டியிட்டதில்லை. சலுகைகள் அவர் பேனாவைச் சரியச் செய்ததில்லை. புகழ் அவரைப் போதை கொள்ளச் செய்ததில்லை. எப்போதும் சமூகப் பொறுப்போடும் மண்மீதான நேசிப்போடும், ஆத்மார்த்தமான உண்மையோடும் ஒருவித அமைதியோடும் நிதானத்தோடும் பயணிப்பவை அவரது கதைகள்: அவரும் தான்.

வன்னி என்ற பெரும் பரப்பின் ஆத்துமமும் தாமரைச் செல்வியின் ஆத்துமமும் ஒன்று கலக்கும் இடமும் அது தான். அவர் ஒரு காலகட்டத்து வன்னியின் ‘காலம்’.

ஒரு தடவை, அவரோடு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் ‘ உங்கள் கதைகளில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிகளில் பல தசாப்தங்களாகக் குடியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்து போகிறார்கள். ஏன் நீங்கள் அவர்களை உங்கள் கதைகளுக்குப் பிரதான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை? அது ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கிறதே! என்று கேட்டபோது, அதற்கு அவர், ’அது உண்மை தான்; இந்த விடயம் பரந்த அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று. அவர்களுடய வாழ்வும் வலிகளும் பத்திரமாகவும் பவித்திரத்தோடும் கையாளப்பட வேண்டியவை. எனக்கு அவர்களின் மலையக வாழ்வு பற்றியும் இங்கு இடம் பெயர்ந்ததன் பின்னணி பற்றியும் அதிகம் தெரியாது. தெரியாததை என்னால் சொல்லமுடியாது; சொல்லக் கூடாது. ஆனால் அவர்கள் என் கதைகளில் எப்போதும் ’அவர்களாகவே’ வந்துபோவார்கள்’;என்றார்.

அது தான் தாமரைச் செல்வி.

அகத்தியரின் பிள்ளையார் தட்டி விட்ட கமண்டலத்தில் இருந்து பெருகிய காவேரியாக அவரது பேனா மை வன்னியை செழுமைப்படுத்தி, மகிமைப் படுத்தியிருக்கிறது. வயல் நீளத்திற்கும் நீண்டு செல்லும் காலத்தின் நீட்சியில்; அந்த எழுத்தின் பாதையில்; அவர் வன்னியின் ’காலத்தைச்’ சுமந்தபடி ‘வன்னியாச்சியாக’  நடந்து சென்றிருக்கிறார். 

அந்த நடமாட்டம் தென்பகுதிக்கு வந்து சரிந்த பூமியை நிமிர்த்திய அகத்தியரின் நடமாட்டம் போல்வது.

அவரைக் கொண்டாடுதல் என்பது வன்னியைக் கொண்டாடுதல். 


- யசோதா.பத்மநாதன். சிட்னி. 22.10.2023.

Saturday, October 21, 2023

இந்தோனேஷிய சீலை ஓவியங்கள்

 சில வாரங்களுக்கு முன் சிட்னிமாநகருக்குப் போயிருந்தேன். அங்கு உள்ள Contemporary Art Gallery யில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேஷிய சீலை ஓவியங்கள் இவை. 

இவற்றைப் பற்றி; இந்த சீலை ஓவியங்கள் எதைப்பற்றிச் சொல்ல வருகின்றன என்ற விடயத்தை என் பார்வைக்கு மட்டும் எட்டியபடி சொல்லி உங்கள் பார்வை காட்டும் வெளிகளைக் குறுக்கி விடாமல்; விபரிக்காமல்; உங்கள் பார்வைக்கும் உங்கள் தனிப்பட்ட சிந்தனைக்கும் அதனை விட்டு விடுகிறேன்.படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
05.10.2023

Saturday, October 7, 2023

வீதியில் ஒரு வேடிக்கை

 கடந்த 5.10.2023 அன்று சிட்னி மாநகரில் காணக் கிடைத்த ’Street Art' காட்சி ஒன்று.

இந்தக் காணொளியில் கண்முன்னால் அந்த வித்தை தெரிகிறது.
 படப்பிடிப்பும் ஒளிப்பதிவும்: யசோதா.பத்மநாதன்.

காலம்: 05.10.2023

இடம்: சிட்னி மாநகரம்

Wednesday, October 4, 2023

காலங்களும் கோலங்களும் - ஒரு பெரு மரமும் நான்கு பருவ காலங்களும்

 

மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் இலை உதிர் காலத்துப் பருவத்தில் ஒரு மரத்தின் தோற்றம்.
இலை உதிர் காலம் ( மார்ச், ஏப்பிரல், மே ) - ( படப்பிடிப்பு 2023.05.11)

மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் குளிர்காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரத்தின் தோற்றம்
குளிர் காலம் ( ஜூன், ஜூலை, ஓகஸ்ட் ) - ( படப்பிடிப்பு  2023.7.10 )

மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் வசந்த காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரம்
வசந்தகாலம் ( செப்ரெம்பர், ஒக்ரோபர், நவெம்பர்) ( படப்பிடிப்பு 2023. 10.04 )


‘மாற்றம் ஒன்றே மாறாதது’ 
உதிர்வதும் பின்பு துளிர்ப்பதும் ஜொலிப்பதும் பின்பு சோர்ந்து விழுவதும் இயற்கையின் நியதி!

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
இடம்: Targo Road, Toongabbie, NSW 2146.

கோடை காலத்துக்குரிய காட்சி அந்தப் பருவத்தை இந்த மரமும் அண்மிக்கும் போது பதிவேற்றப்படும்.