Sunday, January 26, 2014

ஜனவரி ‘ 26

’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

’பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே’
- புறம் - 192 -

இத்தனை அடிகளும் ஒரே பாடலில் சுமார் கிபி 1 - 3 நூற்றாண்டுக்குள் திராவிடப்பன்பாடு சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறது. அதன் சிறப்புப் பற்றி எல்லாம் பலரும் சொல்லி விட்டார்கள். என்றாலும் கூட அதை இன்றும் பார்த்து அனுபவித்து வியக்காமல் இருக்க முடிவதில்லை.கடந்து போக முடிவதில்லை.

பார்க்கும் தோறும் மனம் குளிர்ந்து போகிறது! ஒரு பெருங் கலாசார பின்னணி கொண்ட பழம் பெரும் மொழியின் பிரதிநிதிகளாய் இருந்து வந்தோமென மனம் பெருமிதம் கொள்கிறது.

இன்று நான் சொல்லப்போகிற பாடல் அதற்கு முதலில் வைக்கப்பட்டிருக்கிற பாடல்.191 வது பாடல். பிசிராந்தையார் பாடியது.

‘யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதீர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான் கன் டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை,
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!”

உமக்கு ஆண்டுகள் பல கடந்தும் தலையில் ஒரு நரைமயிரும் தோன்றாமல் இளமையாக இருப்பதற்கு காரணம் யாது என்று வினவினீர்களாயின் சொல்லுகிறேன் கேழுங்கள்! என் மனைவி மாட்சிமை உடையவள். புதல்வர்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். என்னுடய பணியாட்கள் என்னுடய எண்ணங்களுக்கேற்ப வேலை செய்கிறார்கள்.என் அரசனும் அறமில்லாதவற்றைச் செய்யாதவன். அவ்வாறானவனுடய தலைமை ஊரைக் காக்கிறது.கற்றுத் தெளிந்து அடக்கத்தோடு வாழும் சான்றோர்கள் என்னைச் சூழ என் ஊரில் குடி இருக்கிறார்கள். (அதனால் நான் நரை இல்லாது இளமைப் பொலிவோடு இருக்கிறேன்)

ஆஹா! எத்தனை அழகிய வாழ்க்கை! இப்படிப் பார்த்துப் பார்த்து வியந்து மயங்கும் வகையில் இன்னொரு பாடலும் புறநானூறில் இருக்கிறது. அது 57 வது பாடல். பாடிய புலவர் காவிரிப்பூம் பட்டினத்து காரிக் கண்ணனார்.

”வல்லார் ஆயினும், வல்லுனர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவதுடையேன்; என் எனில்,
நீயே, பிறர் நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு

இறங்கு கதிர்க் களனிநின் இளையரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
இன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு; நின்
நெடுநல் யானைக்குத் கந்து ஆற் றாவே!”

எளியவர்களானாலும் வல்லவர்களானாலும் உன்னைப் புகழ்பவர்களுக்கு திருமாலைப்போல துணை நின்று வாழ வைக்கும் சிறப்பினை உடைய பாண்டிய மாறனே! உன்னிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விடயம் உண்டு. என்னவென்றால், நீ பிறருடய நாட்டைக் கைப்பற்றுகின்ற போது அந் நாட்டின் நீர் நிலைகளுக்கருகில் முற்றிய கதிர்களோடு செழித்து விளைந்து நிற்கிற விளைச்சலை உன்னுடயவர்கள் கொள்ளை இடுவதாயினும் கொள்ளையிடுக. நலம் மிக விளங்கி நிற்கிற பட்டினங்களை எரியூட்டுவதாயினும் எரியூட்டுக. மின்னி நிமிர்ந்து நிற்கிற உன் வேலினால் பகைவர்களை கொல்லுவதாயினும் கொல்லுவாயாக! உன்னோடு சேர்ந்து உன் வீரர்கள் என்ன செய்வதாயினும் செய்யட்டும்.

ஆனால், காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே! அது உன் யானைகளுக்கு ஒரு போதும் போதப்போவதில்லை.

மரங்களுக்காகக் கூட அவற்றைக் காப்பாற்றவேண்டி தூது போன தேசம்!

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என தம் வாழ்வை சகல உயிர்களுக்குமாக சிந்தித்து; இந்த உலகப் பந்தை  உயிர் வாழும் சகல உயிரினங்களோடும் பகிர்ந்து வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம்!

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும்  ஒன்றே
அறிந்து நாம் பார்க்கும் போதே”

என்ற பிரபஞ்ச இயக்கம் பற்றிய தெளிவான புரிதலோடு இருந்த தேசம்!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் ; மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும்; மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்த போது சிறு பறவைகள் சிதறி ஓடுவதைப் பார்த்து மணிகளின் நாக்குகளைக் கட்டச் சொன்ன

‘தாதூண் பறவை பேதுறல்
அஞ்சி மணிநா ஆர்த்த
மாண் வினைத் தேரனாகட்டும்

முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டிலே! என கொல்லையில் பூத்த முல்லையோடு கோவித்துக் கொண்ட ஒல்லையூர் நாட்டுச் சாந்தனின் காதலியாகட்டும்

இந்த உலகத்தில் உள்ள சகலவற்றையும் தன் சொந்தமாக; தன் உறவாக; தன் நட்பாக; மதித்து; போற்றி, உறவு கொண்டாடி, வாழ்ந்த ஒரு வாழ்க்கை! வாழ்ந்து வந்த ஒரு தேசம்! தேசத்து மக்கள்!.............

ஜனவரி 26

அவுஸ்திரேலிய தினம்! இவை எல்லாம் நினைவு வர இந்த நாள் காரணமாயிற்று!

இப்படியான ஒரு வாழ்க்கை முறைக்குக் கொஞ்சமும் மாசுபடாது குறைவு படாது வாழ்ந்து வந்தது இந் நாட்டுக் குடிகள்!

அபோரிஜனல் மக்கள்!

அவர்களிடம் எல்லைகள் வேலிகள் எதுவும் இருந்ததில்லை; பயன் தரும் சகல மரங்களும் சகல மக்களுக்கும் சொந்தமாய் இருந்தது.

மதம் இருந்ததில்லை!

நாணயப் புளக்கம் (பணம்) தேவைப்பட்டதே இல்லை.

இறந்தோரையும் இயற்கையையும் உயிரிலும் மேலாகப் போற்றினார்கள்!

ஆங்கிலேயச் சிறைக்கைதிகள் இங்கு வந்து இறங்கிய போது இந்த மக்கள் வாழ்ந்த நாட்டை மனிதர்கள் இல்லாத தேசம் என பிரகடனப்படுத்தி தம் கொடியினை நாட்டினார்கள்.

அவர்கள் கண்களுக்கு இவர்கள் மனிதர்களாக / மனிதப்பிறவிகளாகவே தெரியவில்லை!

இந்த மக்களை விரட்டி அடித்தார்கள்.

கொன்று குவித்தார்கள்.

குழந்தைகளை கவர்ந்து கொண்டோடினார்கள்.

அதற்கு குறைந்த பட்சம் ஒரு பாவ மன்னிப்பைக் கேட்கத் தானும் ஜோன் ஹவேர்ட்டுக்கு மனம் வரவில்லை.

இப்போது இங்கு போதைப்பொருளும் மதுபான பாவனைகளும், புகைத்தலும்  மலிந்து இனத்துவேசத்தை கறித்துப்பும் ஒரு இளம் கலாசாரம் பெருகி வருகிறது.

அதனை “Toxic Culture'" என ஏனைய நாடுகள் இதனைச் சுட்டிக் காட்டுகிறன.

நச்சுப் பண்பாடு!

வன்முறைக் கலாசாரம்!

பல்கலாசார நாடும் கூட!

அதனைப் பகீரங்கமாகச் சொல்லவும் நடக்கவும் இடம் தரும் ஜனநாயக சுதந்திரம்!

மிகவும் மெல்லியதான சட்டக் கோடுகள்!

அகதிகள் சார்பாக ரொனி அபேர்ட் சொல்லும் கருத்துக்கள் கேட்கச் சகிக்க முடியாதவை.

இது அரச தலைவர்கள் சார்ந்ததென தனியே தலைவர்களில் குறைகூறுவதில் பயனில்லை. பெரும்பாண்மை மக்கள் கருத்தும் அதுவே! பெரும் பாண்மைகளால் தெரிவு செய்யப்பட்ட அரசு தான் இது. மக்களின் கருத்தைத் தான் அவர்கள் பிரதி பலிக்கிறார்கள்.

இந்தத் தேசத்தில் தான் நம் கால் பதிந்திருக்கிறது.

WE ARE ON ABORIGINAL LAND!

நம் கால்கள் தரித்திருப்பது அபோரிஜினல்களின் தாய் மண்ணில்!

அதை நாம் மறவாதிருப்போம். எங்கு நாம் அவர்களைக் கண்டாலும் அவர்களை மதிக்க இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்!

ஜனவரி ‘ 26! அபிரோஜினல்களின் தாய் தேசம் பறி போன நாள்!


( குறிப்பு: கீழே முதலாவதாகக் கொடுக்கப்பட்டிருக்கிற பாடலைப் பார்க்கப் பிரியப்படாதவர்கள் அதே பாடலை சுப்பர் சிங்கரில் அனுவும் யாழினியும் பாடியிருக்கிறார்கள். நேரே அங்கு போகவும்.)விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

கந்தல் ஆனாலும் தாய் மடிபோல்
ஒரு சுகம் வருமா வருமா ???
சொர்க்கம் சென்றாலும் சொந்த
ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா ???
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே; பிழைத்தால் வருகின்றோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகின்றோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்...

விடைகொடு எங்கள் நாடே..
கடல் வாசல் தெளிக்கும் வீடே..
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.

எங்கள் பிள்ளையின் சங்கீதம்
பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..//
எங்கள் இளம் திங்கள்
வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்..
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம்
மரமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில்
அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.


உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்னும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா
(உந்தன்..)

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க
(உந்தன்..)

பால் போல உள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மொழியில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
(உந்தன்..)

படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

...................................................

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மனமே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனைகள்
கவி கோர்த்த வார்த்தைகள்
துளி கண்ணீர் போல்  இன்பம் தருமோ

எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

Wednesday, January 22, 2014

தமிழுக்குக் கிடைத்த கூடாரம்

பொங்கலன்றான திறப்பு விழா – 14.1.2014

Image

Image

Image


Imageஈழத்தமிழர் கழகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட தமிழர் கழகமாகும். அது பல சமூக நல திட்டங்களில் தன்னை இணைத்து பல்வேறு விதமான சமூக சேவைகளை பல ஆண்டுகளாக ஆற்றி வருகிறது.

அவர்களுக்காக அவுஸ்திரேலிய மாநில அரசு தமிழ் சமூகத்தினரின்  தன்னார்வ சமூக  செயற்பாடுகளுக்காக வீடொன்றினைக் கையளித்துள்ளது.

இங்கு தமிழ் சமூகத்தவர் தம் இலாப நோக்கற்ற சமூக நல சேவைகளுக்காக இந்த அழகிய கூடாரத்தைப் பாவிக்க காலம் கைகூடி இருக்கிறது.

ஈழத்தமிழர் கழகத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரமும் வெகுமானமும் அவர்களின் உழைப்புக்கு அரசு கொடுத்த சன்மானமாகும். அதன் பொருட்டு – குறிப்பாக அதன் நிர்வாக பீடத்திற்கு என் தலை தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

உத்தியோக பூர்வமான திறப்பு விழா தமிழுக்கு தைத்திங்கள் முதல் நாளன்று 14.1.14 அன்றுபொங்கல் தினத்தோடு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
Image

Image

Image


தமிழுக்கும் தமிழருக்கும் அரசாங்கத்தினால் கிடைத்த இந்த உயர்வான அங்கீகரத்துக்கு உழைத்த எல்லோருக்கும் மீண்டும் என் நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளை இவ்வாறு ஒரு இடம் தமிழருக்குக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு நமக்கு அறியத்தந்து பொங்கலன்றான திறப்பு விழாவுக்கும் நம்மை அழைத்தமைக்கும் கூடவே எவ்வித தயக்கமும் இன்றி  நமக்கும் அங்கு நம் மாதாந்த இலக்கிய சந்திப்பை நடாத்த கருணைகூர்ந்து இடம் ஒதுக்கித் தந்ததற்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் வாத்சல்யத்தையும் தெரிவிப்பதில்  பெருமிதமும் கொள்கிறேன்.

Image

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!

Monday, January 20, 2014

கற்பு விலங்கு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிறார்களே! - இது உண்மையா என்ற கேள்வி எனக்கு நெடு நாட்களாய் உண்டு.

ஏன் ஆண்களுக்கு குறிப்பாக கணவான்களுக்கு சுயமாக புத்தியே இல்லையா? அல்லது சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்களா அவர்கள் !

அது மாதிரி இன்னொரு கருத்தும் ஒன்று சொல்வார்கள். ’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று!

ஆணுக்கு அதில் ஒரு பங்குமே கிடையாதா என்ன?

அதுமாதிரி இன்னொன்று இருக்கிறது. அது, ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ அப்படியென்றால் கணவன் ஒரு பெண்ணுக்கு அமைவதெல்லாம் யார் கொடுத்த வரம்! சாத்தான் கொடுத்த வரமாய் / சாபமாய் இருக்குமோ?

இப்படிக் கொதிச்சு போய் ஒரு பதிவு போட அண்மையில் வாசித்த ஒரு கட்டுரை காரணமாயிற்று. திராவிடப்பண்பாடு எத்தனை தூர நோக்கோடு புராதன காலத்திலேயே பெண்ணைக் கடவுளாக்கி பின்னால் அவள் வளராது வீழ்த்த எத்தகைய படுகுழியை வைத்திருக்கிறது என்ற அயர்ச்சியே அதனை வாசித்த போது மிஞ்சியது.

எத்தனை எத்தனை காலங்கள் உருண்டோடிப் போயினுமென்ன! இன்னும் அதனைப்பற்றிப்பிடித்தபடி ...................

இரண்டாயிரம் ஆண்டுகால பழமை நமக்கு!.................

திராவிடப் பெண்ணை அது ஒரு கற்பு விலங்காக காலாகாலத்துக்குமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது

அது மாத்திரமல்ல எதனைச் செய்தாலும் அதனைப் பெண்னோடு சம்பந்தப்படுத்தி பழி போடும் விற்பன்னத்தையும் அது காலாகாலத்துக்கும் செய்து தான் வந்திருக்கிறது.

உடன்கட்டை ஏறுதல், மறுதார மறுப்பு, சீதனக் கொடுமை, பால்ய விவாகம், பெண் சிசுக் கொலை, கற்பழிப்பு, கல்வி மற்றும் வாக்குரிமை மறுப்பு,.....

எத்தனையைத் தாண்ட வேண்டி இருந்திருக்கிறது ? இன்னும் இருக்கிறது!

. ‘கற்புள்ள கருவாடாக’ எத்தனை பெண்கள்! இன்னமும் இன்னமும்.

பெண்கள் சொத்தாக / தம் உரிமைப்பண்டமாகப் பார்க்கப் படுவதில் இருந்து அவள் விடுபடும் நாள் என்று வரும்? சக மனிதப்பிறவியாய் ஆகும் நாள் என்று வரும்?

இப்படியான நிலைமையில் பெண்ணை எப்படியாக மதிக்கிறது திராவிடப்பண்பாடு?

புறநானூறில் ஒரு பாடல் வருகிறது இப்படி!

பெண்ணை உடமைப் பொருளாக்கி அவளிடம் எத்தகைய விருப்ப
அனுமதிகளும் பெறாமலே அவள் பொருட்டுப் போருக்குப் புறப்பட்டுப் போன சமூகத்தையும் அதற்குக் கூட அவளையே குற்றவாளிஆக்கிய கதையையும் புறநானூறு பாடல் 345 சொல்லும் இந்தக் கதையைக் கேழுங்கள்.


களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேரி ஓடத் துகள் கெழுமின தெருவு;
மா மறுகலின் மயக் குற்றன வழி;
கலங் கழாஅலின் துறைகலங் குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்
ஒவு உறள் இரும்புறம் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,

மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன் ஐ மாரே,
செல்வம் வேண்டார், செருபுகல் வேண்டி,
‘நிரல் அல் லோர்க்குத் தரலோ இல்’ என,
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,

குழா அம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த்து ஆயினும், அன்னோ!
என் ஆவது கொல் தானே
பன்னல் வேலிஇப் பனைநல் ஊரே!

(பாடல் 345 பாடியவர்: அடைநெடுங் கல்வியார்)


(கரிய கண்களை உடையவளாய் நெருங்கிய மார்பகங்களைக் கொண்டு காண்பவர்க்கு விருப்பத்தை உண்டாக்கும் பார்வையுடைய இப் பெண்ணை நம்பி வந்தவர்கள் இரங்கத்தக்கவராவர்.

இவள் தமையன் மார்களோ தமக்கு நிகரான வீரம் இல்லாதவர்களுக்கு தருவதில்லை என்று சொல்லி, அவர்கள் தரும் செல்வத்தை விரும்பாதவர்களாய் போர் செய்வதை விரும்பி கழிகளால் பின்னிக் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தி, வடுக்களை உண்டாக்கும் கூர்மையான வாளையும் ஏந்தினர். புலால் நாற்றம் கொண்ட வலிமையான காம்புடைய கொடிய வேலை ஏந்தி கழுவாத தலையுடையவராய் நின்றனர்.

படை எடுக்க வந்த வீரர்கள் தங்கிய நிலையில் போர் யானைகளைக் கட்டுவதால் சோலையில் உள்ள மரங்கள் பாழ் பட்டன. தேர்கள் செல்வதால் தெருக்கள் புழுதியால் நிரம்பின. குதிரைகள் சாரி சாரியாகச் செல்வதால் வழிகள் உருத்தெரியாது மறைந்துள்ளன. படைக்கலங்களைக் கழுவுவதால் நீர் துறைகள் பாழாகின. இரும்பு போலும் இரட்டைக் கதவுகளையுடைய வழியைத் தாக்குவதற்கு வந்த புதிய வேந்தர்கள் பலராவர்.

இத்தகைய வீரர்கள் சூழ்ந்த பருத்தி வேலியுடைய இந்த நல்லூர் இனி என்னாகுமோ? )

இது,காலைக்கொண்டுபோய் கல்லோடு மோதி விட்டு ‘கல்லடித்துவிட்டது’ என்று சொல்வது போல் இருக்கிறதா இல்லையா?

எத்தனை எத்தனை பெண்கள் நமக்காக எல்லாம் போராடி சக மனிதனாக வாழ இந்த அடிப்படை உரிமைகளை வென்று நமக்குத் தந்திருப்பார்கள்! அவர்கள் இவற்றுக்காகப் போராடும் போது எத்தனை அவமதிப்புகளை, வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்திருப்பார்கள்!.

இந்த இடத்தில் தான் பாரதி உயர்ந்து நிற்கிறான்!

அண்மையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அதிகாலை ஒலிபரப்பில் திரு. பவராஜா அவர்கள் பாரதியார் பெண்ணுக்கு வழங்க வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய உரிமைகள் சம்பந்தமான ஒரு பாரதியாரின் கட்டுரையை வாசித்தார்.அவரிடம் அதனைக் கேட்ட போது பெரிய மனதோடு அதனை நிழல்பிரதி செய்து அக்கட்டுரையை எனக்குக் கையளித்தார்.

அது முழுவதுமே பதியத்தக்கது தான் என்ற போதும் சில பகுதிகளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகிறேன்.“ அடிமைகள் யாராயினும் அவர்களுக்கு விடுதலை கொடுத்தால் அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு அண்டச்சுவர்கள் இடிந்து போய் ஜகமே அழிந்து போய் விடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்தி ஆள்வோருடய ஸம்பிருதாயம்.

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ பெண்கல்வி தமிழ் நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை.இதுவரை கூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து பூமியின் மேல் விழும் என்றும் வால் நட்சத்திரம் வகையறாக்கள் எல்லாம் நடுவில் அகப்பட்டு துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள்....................

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதால் ஜனசமூகம் குழம்பிப் போய் விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் சுயேச்சையுடன் வாழ்வதைத் தாம் பார்க்கக் கூடாது என்ற அசூயையால் சொல்கிறார்களேயொழிய வேறொன்றும் இல்லை.

....................விடுதலையாவது யாது? என்ற மூலத்தை விசாரிக்கும் படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். ‘ பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், கொல்லாமலும், அவர்களுடய உழைப்பின் பயனைத் திருடாமலும் மற்றபடி ஏறக்குறைய ‘நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நன்நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் காணக்கிடைக்கும்.’ பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஸ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட். ஸ்பென்ஸர் சொல்கிறார்.

...................இப்படி நமது ஸ்திரிகள் இருக்கலாமே என்று கேட்டால் கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரிகளைக் காட்டிலும் நமது ஸ்திரிகள் இயற்கையிலேயே நம்பத்தகாதவர்கள் என்று தார்ப்பரியமா? மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம்( உதாரணம்) காட்டினால் நமக்கு சரிப்படாது. கேவலம் ஐரோப்பியர் என்று சொல்லிச் சிலர் தலையசைக்கலாம்.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்

1.பெண்களை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

2. அவர்களுக்கு இஸ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க விரும்பினால் நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

4. பிதுரர்ஜிதத்தில்பெண்குழந்தைகளுக்கு ஸ்மபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.

5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து  வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்ரால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையாக தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.

6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.

7. பெண்களுக்கு ஆண்களைப்போலவே உயர்தரக் கல்வியில் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
..........................

வாழ்க பாரதி!


Wednesday, January 15, 2014

சோதிட நம்பிக்கைகள்

நம்பிக்கையில் இயங்குகிறது உலகம்.

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?

உலகத்தின் பழம் பெரும் பண்பாடுகள் பலவற்றிலும் அத்தகைய நம்பிக்கைகள் பலவாறாக இருந்தன இன்னமும் இருக்கின்றன.

ஜனவரி ஒன்று ஆங்கிலப் புது வருடம்.

ஜனவரி 31ல் 2014க்கான புது வருடம் ஆரம்பிக்கிறது சீனருக்கு.
ஜனவரி 14ல் தமிழராகிய நமக்கு தைத்திங்கள் முதல் திகதி. ஆனால் ஏப்பிரல் 14 நமக்கான புது வருடமாகக் கணிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


சந்தோஷமாக வாழப்பிரியப்படும் மனிதர்களிடம் சோதிட நம்பிக்கையும்  நாட்காட்டிக் கணிப்பீடுகளோடு தோற்றம் பெற்றது.

எதிர்வு கூறல்களும் எதிர்காலம் கணிப்பிடலும் அவ்வகைப்பட்டவையே. அது நாட்டுக்கு நாடு பண்பாட்டுக்கு பண்பாடு தனக்கான தனித்துவங்களோடு விளங்குகின்றன.


நாடுகள் பலவும் அவற்றை அங்கீகரித்து நாட்டின் சிறப்பாக; தம்முடய வளங்களில் ஒன்றாக அரச முத்திரைகளை வெளியிட்டு அவற்றை அங்கீகரித்திருக்கிறன. அந்த முத்திரையின் படங்களையே இப்பதிவில் ஆங்காங்கே காண்கிறீர்கள்.
எண் சோதிடம், கைரேகை சாஸ்திரம் என்பவற்றோடு ஒரு குழந்தை பிறந்த அந்த துல்லியமான நேரத்தை வைத்து பிள்ளையின் எதிர்காலத்தைக் கணிப்பிடும் முறை நம் பழந்தமிழ் பண்பாட்டில் இருக்கிறது.சீனரிடம் புத்தபகவான் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஒரு வித சோதிட நம்பிக்கை உண்டு. அது 12 மிருகங்களின் பெயரால் அழைக்கப்படுவதோடு  மரம். நெருப்பு, பூமி,உலோகம், நீர் ஆகிய 5 அடிப்படைகளில் இயக்கம் பெருகிறதாக நம்புகிறார்கள். (அது பற்றி விபரமாக பின்னர் ஒரு தடவை பார்ப்போம்.)அவுஸ்திரேலியர்களிடம் இன்னொரு விதமான சோதிட நம்பிக்கை உண்டு. அது 4 மூலக்கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.அது பூமி, நீர், காற்று நெருப்பு ஆகியவையாகும். இவை 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு மாத, திகதி அடிப்படையில் அவரவருக்கான இயல்புகள் சொல்லப்படுகின்றன.


பூமியும் நீரும் அது போல காற்றும் நெருப்பும் ஆகிய கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவர் என்றும்; மாறாக நீரும் நெருப்பும் காற்றும் நிலமும் ஆகிய மூலக் கூறுகளுக்குள் அடங்குபவர்கள் ஒருவரோடு ஒருவர் பட்டுக் கொள்ளாமல் இருப்பர் என்றும் அவுஸ்திரேலிய சோதிட நம்பிக்கை கருத்துச் சொல்கிறது. ( நீர் பெருக நிலம் தேவை: நிலம் நீரால் செழுமை பெறும். நெருப்பு பரந்து விரிய காற்றுத்தேவை. பூமிக்கு காற்றால் எது பயனும் இல்லை. அது போல நீருக்குக் காற்றாலும் பயனெதுவும் விளைவதில்லை. மனிதப் பிரிவுக்குள்ளும் அதுவே அடிப்படை என்கிறது இவர்களது சோதிட ஞானம் மற்றும் நம்பிக்கை.அந்த நம்பிக்கைகளைத் தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அறிமுகப்படுத்துவது இப்பதிவின் நோக்கமாகும்.அவுஸ்திரேலிய பண்பாட்டு விழுமியங்களுக்குள் ஒன்றாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய சோதிட முறையை தைப்பொங்கல் வாழ்த்துக்களோடு இங்கே தருகிறேன். உங்களுக்கு அது எவ்வகையில் பொருந்திப்போகிறது என்பதையும் தான் ஒரு தடவை பாருங்களேன். அதே நேரம் நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்பவராக இருந்தால் நீங்கள் வாழும் நாடுகளின் நம்பிக்கைகளை இங்கு பகிர்வதன் மூலம் இந்தப் பதிவை இன்னும் செழுமை பெறச் செய்யலாம்.

கீழே வருபவை ஆங்கில ஆக்கம் ஒன்றின் தமிழாக்கம்.( சுருக்கமும் செறிவும் கருதி பல விடயங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.)


மேடம்: 21 மார்ச் - 20 ஏப்பிரல் வரை.

மூலக்கூறு: நெருப்பு.
ஆளும் கிரகம் செவ்வாய்.
அதிஷ்ட தினம் செவ்வாய்,
பலம்: சக்தி, ஆர்வம், துணிச்ச, தன்னம்பிக்கை.
பலவீனம்: தன்னலம், கோபம், பொறுமை இன்மை.

இடபம்: 21 ஏப்பிரல் - 21 மே

மூலக்கூறு: நிலம்
ஆளும் கிரகம் வெள்ளி
அதிஷ்ட தினம்: வெள்ளி
பலம்:சார்ந்திருத்தல், இணைந்து செல்லுதல், மன உடல் உறுதி.
பலவீனம்: மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்,


மிதுனம் 22 மே -21 ஜூன்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: மகிழ்வாய் இருத்தல், நல்ல தொடர்பாடல் திறன்,அனுசரித்து போகிற தன்மை
பலவீனம்: சுயநலம், அமைதியற்ரிருத்தல், குழம்பிய மனநிலைகடகம்: 22 ஜூன் - 23 ஜூலை

மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: திங்கள்
ஆளும் கிரகம்: சந்திரன்
பலம்: சூழலுக்கு தக்கவாறு தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளுதல், குடும்பத்தின் மீதான பற்றும் விசுவாசமும்
பலவீனம்: தன் உணர்வுகளை வெளிக்காட்டாத தன்மை, சுடு சொல் பாவனை


சிங்கம்: 24 ஜூலை - 23 ஓகஸ்ட்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்: சூரியன்
அதிஷ்ட தினம்: ஞாயிறு
பலம்: இரக்கம், தலைமைத்துவத்தன்மை, இயல்பான உற்சாகம்
பலவீனம்: பொறாமை, விட்டுக் கொடாத தன்மை, அடக்கியாளும் தன்மை.


கன்னி: 24 ஓகஸ்ட் - 23 செப்ரெம்பர்

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் புதன்
ஆளும் கிரகம் புதன்
பலம்: காரியத்தை முழுமையாகச் செய்து முடித்தல், புரிந்துணர்வு, சூழலுக்கேற்ப அனுசரித்துப் போதல்
பலவீனம்: எல்லாவற்ரையும் மிக நுட்பமாக அவதானித்து பிழை காணுதல், அமைதியற்றிருத்தல், ஒரு காரியத்திற்கு இன்னொருவரில் தங்கியிருத்தல்.

துலாம்: 24 செப்ரெம்பர் - 22 ஒக்ரோபர்

(23 ஒக்ரோபர் வரை என சில குறிப்பிடுகின்றன)
மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வெள்ளி
ஆளும் கிரகம்: வெள்ளி
பலம்: பொறுமை, சமநிலை பேணுதல், காதலும் மகிழ்ச்சியும்
பலவீனம்:கவனமின்மை, அக்கறை இன்மை, உணர்வு வசப்படுதல்.

விருச்சிகம்: 23 ஒக்ரோபர் - 21 நவம்பர்

 (22 ஒக்ரோபரில் இருந்து என சில குறிப்புகள் குறிக்கின்றன)
மூலக்கூறு: தண்ணீர்
அதிஷ்ட தினம்: செவ்வாய்
ஆளும் கிரகம்: புளூட்டோ
பலம்: நம்பத்தகுந்தவர்கள், விசுவாசம் உள்ளவர்கள், அன்பும் பொறுமையும் கொண்டவர்கள்.
பலவீனம்: பிடிவாதம், அன்பில் பொறாமை, உணர்வு வசப்படல்.


தணுசு: 23 நவம்பர் - 21 டிசம்பர்

மூலக்கூறு: நெருப்பு
ஆளும் கிரகம்;வியாழன்
அதிஷ்ட தினம்: வியாழன்
பலம்: அறிவு பூர்வமான சிந்தனை, உறவை மேம்படுத்தும் ஆற்றல். நேர்மை
பலவீனம்: கூர்மையான நாக்கு, மாறும் தன்மை, கவனமற்றிருத்தல்

மகரம்: 22 டிசம்பர் - 20 ஜனவரி

மூலக்கூறு: நிலம்
அதிஷ்ட தினம் சனி
ஆளும் கிரகம்:சனி
பலம்: கடின உழைப்பு, பொறுப்புணர்வு, மனப்பலம், சுதந்திர மனப்பாண்மை
பலவீனம்: கோபம், தலைமைத்துவத்தை ஏற்க மறுத்தல், அடங்க மறுத்தல்.

கும்பம்: 21 ஜனவரி - 19 பெப்ரவரி

மூலக்கூறு: காற்று
ஆளும் கிரகம்: யுரேனஸ்
அதிஷ்டதினம்: சனி
பலம்: நட்புணர்வு, புத்திசாலித்தனம்,இரக்கமும் ஆதரவுமாயிருத்தல், நடைமுறையோடு ஒத்துப் போதல்
பலவீனம்: பொறுப்பற்றிருத்தல், முதல் தடவையில் எல்லாவற்றையும் எடை போட்டு விடுதல், தன் அபிப்பிராயத்தில் பிடிவாதமாயிருத்தல்.

மீனம்: 20 ஃபெப்ரவரி - 20 மார்ச்

மூலக்கூறு: காற்று
அதிஷ்ட தினம்: வியாழன்
ஆளும் கிரகம்: வியாழன்
பலம்: ஆடம்பர மோகமின்மை, அமைதியும் கோபம் வராத நிலையும்,சிறந்த ஞாபக சக்தியும் புத்திக் கூர்மையும்.
பலவீனம்: உணர்வு நிலை ஊசலாடிக்கொண்டிருத்தல்,

Tuesday, January 7, 2014

தையல் குருவியும் தூக்கணாங் குருவியும் Tailor bird & Weaver bird


இயற்கை நெய்திருக்கிற உயிரின அதிசயங்களில் ஒன்று தையல் குருவி.மென்மையான பச்சை இலையினை தைத்து கூடாக்கி அதற்குள் மூன்று முட்டை இட்டு, குஞ்சு பொரித்து,அவை வளர்ந்து ஆளாகும் வரை தானும் நுனியில் குந்தி இருந்து இரைகொடுத்து வளர்க்கும் வரை இரண்டு இலைகள் மாத்திரம் அத்தனை பாரத்தையும் தாங்கி நிற்கும் என்றால் அவற்றின் பாரம் எத்தனை லேசானதாக இருக்கும்?

இலையை கிழிந்து விடாமல் தைக்கும் தொழில்நுட்பத்தை யார் அவர்க்குக் கற்றுக் கொடுத்திருப்பார்?

நிச்சயமாய் பூக்களுக்குள் தேனை வைத்து, அதனை பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மாத்திரம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தவர் மாத்திரமாகத் தான் இருக்க முடியும் இல்லையா?அது போலத்தான் தூக்கணாங்குருவியின் கூடுகட்டும் விந்தையும் ஓர் அதிசயம். மூன்று அறைகள் வைத்து ஆணும் பெண்ணுமாய் சேர்ந்து அதைக் கட்டி முடித்து உள்ளே வெளிச்சத்துக்காக மின்மினியினைப் பிடித்து வந்து உள்ளே ஒட்டி வைக்க யார் சொல்லிக் கொடுத்திருப்பார்?

அதே பூக்களுக்குள் தேனை வைத்து, அதனை பறவைகளுக்கும் தேனீக்களுக்கும் வண்ணாத்துப் பூச்சிகளுக்கும் மாத்திரம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்தவர் மாத்திரமாகத் தான் இருக்க முடியும் இல்லையா?