Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Saturday, September 5, 2026

உலக திருக்குறள் மகாநாடும் விருது விழாவும் 04.09.2026 சிட்னி

 






நேற்றய தினம் 04.09.2026 வெள்ளிக்கிழமை சர்வதேச திருக்குறள் மகாநாடு ஒன்று சிட்னியில் உள்ள அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

இதனைத் தமிழ் வளர்ச்சி மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. அவர்களுக்கு இணை அனுசரனையாளர்களாக மொறீசியஸ், மலேசிய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பண்பாட்டு மையங்கள் தம் ஆதரவை வழங்கியிருந்தன.

கூடவே, அவுஸ்திரேலிய SBS வானொலி, அவுஸ்திரேலியக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், உட்பட பல நிறுவனங்கள் தம் நிதி மற்றும் நடைமுறை அனுசரனையை வழங்கியிருந்தன.

காலை தொடங்கி மாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந் நிகழ்வில் உலகநாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் முப்பது அறிஞர்களும் அவுஸ்திரேலிய இளைய சமூகத்தினரும் கலந்து கொண்டு தம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். 

வேலைநாள் என்பதால் முழு நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என் அன்புத் தோழி கீதா. மதிவாணன் அவர்களுக்கு அவருடய மொழிபெயர்ப்பு முயற்சிகளை பாராட்டி விருது வழங்கப்பட்ட நிகழ்வில் நான் கலந்து கொண்டேன்.

உலக அறிஞர்கள் முன்னிலையில் அவரது அரிய தமிழ்பணிகள் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு அவரை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருது உண்மையானதும் பொருத்தமானதும் சிறப்பானதுமாகும்.

அவர் என்னுடய பிரிய தோழியாக இருப்பதானது இந்தத் தமிழின் வழியான தொடர்பால் ஏற்பட்டது தான். அவரிடம் இருக்கிற எளிமை, உண்மை, திறமை, அமைதியும் மென்மையுமான அவரது குணாம்சம், தன்னை எப்போதும் முன்நிறுத்தாத மேன்மை, ஆர்வம், தமிழ் மீதான பற்றுதல், அதனைச் செழுமைபெறச் செய்வதற்கு அவர் கொடுக்கும் பொன்னான நேரம், மற்றும் தமிழ் மீதான ஆழமான அறிவு, மொழிப்பற்றுதல் ஆகியனவற்றோடு எது தமிழுக்குத் தேவை / தமிழுக்கு எது முக்கியம் என்பதைக் கண்டறிந்து அதற்காக உண்மையாக உழைப்பது என்பவற்றின் வழியாகத் தமிழைச் சிறபிக்கிறவர் அவர். 

போட்டிகள், புகழ், பிரபலம், உள் அரசியல்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதவர் அவர். அவற்றில் இருந்து எப்போதும் விலகியே இருப்பவர். மத்தியஸ்தம் வகிக்க அவர் அமைப்புகளால் அழைக்கப்படுகின்ற போதும்; கருத்தரங்கங்களில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் கோரப்படும் போதும்; மொழிபெயர்ப்புகள் செய்து தரக் கேட்கப்படுகின்ற போதும்; பல இயலாதவர்கள் தமிழ்மொழியில் தட்டச்சுச் செய்து தரக் வேண்டுகின்ற போதும் தன் நிலைப்பாட்டை / உண்மைநிலையை சொல்லி இன்முகத்தோடு அவைகளைச் மறுப்பேதும் சொல்லாமல் செய்து கொடுப்பவர்.

அவர் விருதுகளுக்காகவோ அல்லது பாராட்டுதல், மற்றும் அங்கீகாரங்கள் இவற்றுக்காகவோ உழைப்பவர் அல்லர். ஆனால் அவ்வாறு ஒன்றை ஒருவரின் திறமையை இனம் கண்டு கொடுக்கின்ற போது, அது நிச்சயம் அவருக்கு ஓர் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் வழங்கும். அந்த வகையில் நேற்றயதினம் அவருக்குக் கிடைத்த விருது மிகப் பொருத்தமானதும் பாராட்டத்தக்கதுமான நிகழ்வாகும்.

உண்மையான திறமைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் அது. அவரை  இனம்கண்டு அவருக்கு விருது கொடுத்ததில் தமிழ் வளர்ச்சி மன்றமும் அதன் ஸ்தாபகர் சட்டத்தரணி திருமதி சந்திரிக்கா. சுப்பிரமணியன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

கீதா.மதிவாணன் பல்துறை ஆற்றல் வாய்ந்தவர். பல்வேறு புத்தகங்களை அவர் உருவாக்கி அளித்திருக்கிறார். அவர் ஓர் இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர் என பல்துறை விற்பன்னர் என்ற போதும்  எனக்குத் தனிப்பட்ட முறையில் அவரது மொழிபெயர்ப்பு வேலைகள் மீது தணியாத காதல் உண்டு. 

அவர் ஓர் இலாவகமான கதை சொல்லி. எளிமையான தமிழ் சொற்கள், வசீகரமான ஆற்றொழுக்கான வசனநடை, மொழிபெயர்ப்பு என்று தெரியாதபடி இயல்பாகச் கதையை எடுத்துச் செல்லும் ஒழுங்கு, மிக மென்மையாக அதே நேரம் ஆணித்தரமாக அவுஸ்திரேலியப் பண்பாட்டை தமிழ் மொழிக்குள் எடுத்து வரும் பாங்கு, மூல எழுத்தின் மீதும் எழுத்தாளர் மீதும் அவர் கொண்டிருக்கிற பற்றுதலும் அவர்களைப்பற்றிய முழுமையான அறிவும், அவசரப்படாமல் நிதானமாக அவர் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு எடுத்துக் கொள்ளுகிற நேரம் ஆகியன அவரது மொழிபெயர்ப்புகளை தமிழின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லுகின்றன.

ஹென்றி.லோஷன் வழியாக அவுஸ்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேறிகளின் அல்லல்களையும்; ரஷ்ய எழுத்தாளர்களின் வழியாக ரஷ்யப் பண்பாட்டின் தார்ப்பரியங்களையும்; யப்பானிய எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு வழியாக யப்பானியப் பண்பாட்டின் ஆழங்களையும் அவர்களின் எழுத்துக்களின் வசீகரங்களையும் அவர்தம் உலகங்களையும் நான் கீதாவின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். 

நான் நம்பி அவற்றை வாசிப்பதற்குக் காரணம் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் மட்டுமன்றி, இவரின் மொழிபெயர்ப்பின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கை,  உண்மைத் தன்மை, அவற்றை மொழிபெயர்ப்பதற்கு அவர் கொடுத்திருக்கிற உழைப்பு, நேரம் மற்றும் அந்தக் கதைகளின் மீதான அவரது நேசம் ஆகியனவும் தான். தார்மீகமான அவரது தமிழ்பணி அது! அதில் நான் நனைந்து முழுகி முக்குளித்து மகிழ்ந்திருக்கிறேன். புதுப் புது உலகங்களைக் கண்டு உள்ளம் குளிர்ந்திருக்கிறேன். 

அவரது தமிழ் பணி வாழ்க!

அவருக்கு இந்த முதல் விருது கிடைத்ததில் நான் மிகுந்த பெருமைப் படுகிறேன்.

அவருக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். அவர் மேன்மேலும் குறிப்பாக அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் பண்பாட்டு உலகங்களையும் தமிழுக்கு எடுத்து வரவேண்டும். தமிழ் அதன் வழி செழுமையுற வேண்டும்.

கீதா,

உங்களை என் தோழியாகப் பெற நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறேன்.

வாழ்க உங்கள் பணி!

வளர்க உங்கள் சேவை!



Wednesday, December 27, 2023

Tree of Life

 ஒரு மரம் சொல்லும் செய்திகள் ஏராளம் உண்டு. அதனிடம் இருக்கும் அமைதி, கொடைத்திறம், அழகு, வாழ்வு, என்று மனிதர் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளம் உண்டு.

குழந்தையாய் இயற்கையிடம் இருந்து இரவல் வாங்கிய தண்ணீரையும் காற்றையும் ஒளியையும் உண்டு சுவாசித்து; வளர்ந்து பூத்து காய்த்து கனிந்து இலையாய், கிளையாய், பெரு விருட்சமாய் வியாபித்து, உயிரினங்களுக்கு பயன் கொடுத்து தன் வித்துக்கள் வழியாக அல்லது தன் வேரடி வழியாக தன் சந்ததிகளை பரப்பி இல்லாது போகிறது ஒரு மரம்.

அப்போ வாழ்க்கை என அது நமக்குக் கற்றுத் தருவது யாது?

மற்ற உயிரினங்களுக்குப் பயனுள்ளதாக வாழ்வதும் அதன் வழியாக தன் சந்ததியை இந்த மண்ணில் விட்டுச் செல்வதும் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் கூட நம் வாழ்வை அப்படியே அர்த்தப் படுத்தியும் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அதில் இன்னும் எத்தனையோ வாழ்வின் அர்த்தங்கள் தொனிக்கும். என் வீட்டுக்கு அருகிலொரு மரம் உண்டு.  அது எனக்கு மிகவும் பிடித்தமான மரம்.

காலநிலைகளுக்கேற்ப அது தன் வாழ்வில் எத்தனை எத்தனை மாற்றங்களைக் கண்டு வருகிறது என்பதை கடந்த ஒரு வருடமாகக் கவனித்து வருகிறேன். அதன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை கீழே படமாகத் தருகிறேன். பாருங்கள்.

அது போலத்தான் நம் வாழ்வும் தோழர்களே! 

இரவும் பகலும் வருவது போல; மழையும் வெய்யிலும் வருவதைப் போல; நன்மையும் தீமையும் இருப்பதைப் போல; ஏற்றமும் இறக்கமும் வருவதைப் போல இந்த மரத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள்.

அது தன்னை மேலும் மேலும் புதுப்பித்தபடி பெருத்து மேலோங்கி உயர்ந்து செல்கிறது.

அது போல நம் எல்லோர் வாழ்வும் இயற்கையின் - இந்தப் பிரபஞ்சத்தின் வல்லமைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற சுலோகத்தை சுமந்தவாறு புதிய வருடத்தில் உற்சாகமாகப் பயணிப்போம்.

எல்லோருக்கும் எனது 2024 புது வருட நல் வாழ்த்துக்கள்.






மேலே இருப்பது சிட்னியின் இலையுதிர் காலத்துப் பருவம். அது மார்ச் ஏப்ரல் மே மாதத்துக்குரிய காலங்கள். அதில் இந்த நடு நிற்கும் இந்த நெடுமரம் எத்தனை அழகோடு காட்சியளிக்கிறது பாருங்கள். இலைகளை உதிர்ப்பதற்கு முன்னால் அது தன் நிறங்களை எத்தனை அழகாக காட்சிப்படுத்துகிறது. இல்லையா?


                                               


                                    


                                               

குளிர் காலத்தில் அதன் கோலம் இது. மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் சிட்னியின் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதத்திற்குரிய காலங்கள். பாருங்கள் அது தன் இலைகள் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு ஒரு பட்ட மரம் போல காட்சியளிப்பதை....





மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் செப்ரெம்பர், ஒக்ரோபர், நவம்பர் மாதத்திற்குரிய வசந்த காலத்தில் அந்த நெடுமரம் நின்ற காட்சி இது. நம்ப முடிகிறதா? பட்டுப்போன மரத்தைப் போல இலைகள் யாவையும் உதிர்த்து விட்டு நின்ற மரமா இது என்று ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?

வாழ்க்கையும் அப்படித்தான் தோழர்களே!

இப்போது இங்கு வெய்யில் காலம். இந்த மரத்திற்கு மிகவும் உவப்பான காலம் போலும்! அண்மையில் பார்த்த போது நீள நீளமான பூக்களோடு காட்சியளித்தது. அதனை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் இரு மாதங்கள் நமக்கு கோடை நீடிக்கும் என்ற போதும் இம்மரம் தன் பூக்கும் பராயத்தை கோடையின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது.





TREE OF LIFE! 

இன்னும் இரண்டு மாதங்களில் இலைகள் சிவந்து உதிர ஆரம்பிக்க இருக்கும் போது இந்த மரம் தன் ஒரு வருட சுளற்சியை நிறைவு செய்யும்.

 பாருங்கள்! இலை உதிர்காலம் வரப் போகிறது என்று அது கலங்குவதில்லை! குளிர்காலம் வந்துவிட்டதே என்று  அது கோவித்துக் கொள்வதில்லை. அது போல வசந்தகாலத்தில் அது இது தான் நிரந்தரம் என்று கர்வம் கொள்வதில்லை; பூக்கும் அதன் கோடைகாலத்திலோ அது குதூகலமும் கொள்வதில்லை.

அது அனைத்தையும் ஏற்றுக் கொண்டபடி ஒவ்வொரு வருடத்திலும் ஒரு படி உயர்ந்து செல்கிறது. மொளனமாக!!

உதிர்வதும் பின் துளிர்ப்பதும் பூப்பதும் பின் காய்ப்பதும் இயற்கையின் நியதி என்பதை இயற்கை இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது; ஒவ்வொரு அம்சங்கள் வழியாகவும்.

இப்படித்தான் நம் வாழ்வும்! வாழ்ந்து பார்த்து விடுவோம். 

இந்தப் போதி மரம் போல...

சங்க காலத்துப் புலவன் கணியன் பூங்குன்றன் சொன்னது போல ஆற்றில் விழுந்த ஓரிலையைப் போல நம் வாழ்வு! 

புதுவருட நல்வாழ்த்துக்கள்!!

Welcome to 2024!

Saturday, October 7, 2023

வீதியில் ஒரு வேடிக்கை

 கடந்த 5.10.2023 அன்று சிட்னி மாநகரில் காணக் கிடைத்த ’Street Art' காட்சி ஒன்று.





இந்தக் காணொளியில் கண்முன்னால் அந்த வித்தை தெரிகிறது.




 படப்பிடிப்பும் ஒளிப்பதிவும்: யசோதா.பத்மநாதன்.

காலம்: 05.10.2023

இடம்: சிட்னி மாநகரம்

Wednesday, October 4, 2023

காலங்களும் கோலங்களும் - ஒரு பெரு மரமும் நான்கு பருவ காலங்களும்

 





மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் இலை உதிர் காலத்துப் பருவத்தில் ஒரு மரத்தின் தோற்றம்.
இலை உதிர் காலம் ( மார்ச், ஏப்பிரல், மே ) - ( படப்பிடிப்பு 2023.05.11)





மேலே காட்டப்பட்டுள்ள படங்கள் குளிர்காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரத்தின் தோற்றம்
குளிர் காலம் ( ஜூன், ஜூலை, ஓகஸ்ட் ) - ( படப்பிடிப்பு  2023.7.10 )





மேலே காட்டப்பட்டிருக்கும் படங்கள் வசந்த காலத்துப் பருவத்தில் நிற்கும் அதே மரம்
வசந்தகாலம் ( செப்ரெம்பர், ஒக்ரோபர், நவெம்பர்) ( படப்பிடிப்பு 2023. 10.04 )


‘மாற்றம் ஒன்றே மாறாதது’ 
உதிர்வதும் பின்பு துளிர்ப்பதும் ஜொலிப்பதும் பின்பு சோர்ந்து விழுவதும் இயற்கையின் நியதி!

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
இடம்: Targo Road, Toongabbie, NSW 2146.

கோடை காலத்துக்குரிய காட்சி அந்தப் பருவத்தை இந்த மரமும் அண்மிக்கும் போது பதிவேற்றப்படும்.

Sunday, October 1, 2023

பெண்களும் பாதைகளும் பயணங்களும்

 இன்று ஞாயிற்றுக் கிழமை.1.10.2023. வசந்தகாலம் தான் எனினும் வெய்யில் 35 பாகை செல்சியசில் எறிக்கிறது.

பூக்கள் கருகி விட இந்த உக்கிரம் போதும்.

இன்று கடைசியாக அந்த நந்தவனத்தை பார்த்து விட என் இந்தியத் தோழியோடு அவளின் நட்புறவைக் கொண்டாடவும் பேசி மகிழவும் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த நந்தவனத்திற்கு சில கொறிப்பான்களோடும் ஃபில்டர் கோப்பியோடும் பயணமானேன்.

அன்பும் அழகும் அறிவும் ரம்யமான குணமும் மயிலும் சாயலும் கொண்ட அவள் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்குத் தாய். 

சுமார் 30 - 40 வருட காலங்களுக்கு முன்னால் நாம் 10ம் வகுப்பு 12ம் வகுப்புகளை நிறைவு செய்யும் போது ஒரு வினோதமான பழக்கம் ஒன்று இருந்தது. வண்ணக் கடதாசிகளால் அழகான மட்டைகளோடு விற்பனையாகும் ஓட்டோகிறாஃப் என்றழைக்கப்படும் சிறு கொப்பியை வாங்கி அப்போது நமக்கு யாரெல்லாம் நண்பர்களாக மதிப்பவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் எல்லாம் அந்தக் கொப்பியைக் கொடுத்து தம் கையெழுத்தை; மணி வாசகங்களை; முகவரிகளை வாங்கி வைத்துக் கொள்வோம்.

அந்த விவோதமான பழக்கம் எனக்கும் அன்றய காலத்தில் இருந்தது. 5 ரூபாய், மூன்று ரூபாய், 8 ரூபாய் மற்றும் பத்து ரூபாய்களுக்கு விற்பனையாகும் அதிலொன்றை நானும் வாங்கி என் நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லோரிடமும் கொடுத்து அவர்களின் நினைவாக அவர்கள் எழுதித் தந்த வாசகங்களைச் சேகரித்துக் கொண்டேன்.

அதில் சில எனக்கு இன்னும் நினைவில் நிற்கின்றன. எனக்கு மேல் வகுப்பில் படித்த பரமேஸ் அண்ணா ‘ ஓடுக; ஊர் ஓடுமாறு’ என்று எழுதித் தந்தார். என் வகுப்புத் தோழிகள் தர்ம நாயகி மற்றும் சுகுணா முறையே ‘கரைவழி செல்வது கங்கையின் பெருமை; முறை வழி செல்வது மங்கையின் பெருமை’ என்றும்; ‘உனதெண்ணப்படி வாழ்க்கை அமையா விட்டால் வாழ்க்கைக்கேற்ப எண்ணத்தை மாற்றிக் கொள்’ என்றும் எழுதித் தந்தார்கள்.

இன்று ஏனோ எனக்கு அவை எல்லாம் நினைவு வந்தன. இப்போது என் தென்னிந்திய நாட்டுத் தோழிகளை நினைத்துப் பார்க்கிறேன். நான் சிட்னிக்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. பல இலங்கை, இந்திய நாட்டுப் பெண்கள் எனக்கு உரித்துடைய நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே படித்த பண்புநலம் மிக்க அறிவும் அழகும் மீதுரப் பெற்ற பண்பாட்டின் வழி ஒழுகும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

இலங்கைப் பெண்களும் அது போலவே.

ஆனால் இரு நாட்டுத் தமிழ் பெண்களுக்கும் இடையே தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்!

இலங்கைத் தமிழ் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக: தன்னம்பிக்கை உள்ளவர்களாக: உரிமை உள்ளவர்களாக: தன் காலில் நிற்பவர்களாக: சம உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஊரில் 40, 50 வருடங்களுக்கு முன்பாகவே அரைப் பாவாடை சட்டை போட்டு, சைக்கிள் ஓடி, படித்து, வேலைக்குப் போன பெண்களாக அவர்கள் இருந்து வந்துள்ளார்கள். 

பாமரப் பெண்களிடமும் அந்த Breathing space இருந்தது.

இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகத்துக்கே முன்மாதிரியாக இருந்து உலகத்தில் முதல் பெண்பிரதமர் என்ற பெருமையை தட்டிக் கொண்டவர் என்பதற்கும் அந் நாட்டின் பெண்களுக்கான உரிமைகளுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று தெரியவில்லை.

பின் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமனாக போர்களத்தில் நின்றார்கள்.

ஆனால் அவுஸ்திரேலியாவில் தென்னிந்தியப் பெண்களைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாகக் குடும்பப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தம் கணவன்மாரின் அழுங்குப் பிடியில் சிக்குண்டவர்களாகவே பெரும்பாலான பெண்கள் உள்ளனர். குறைந்த பட்சம் நானறிந்த பெண்கள் என்று திண்ணமாகச் சொல்ல முடியும்.

தனித்துப் பெண்ணை வேலைக்கு அனுப்பாதவர்களாக; அப்படி வேலைக்குப் போய் வருகிற பெண்களாக இருந்தால் கூட, அவர்களுடய வேலை ஓய்வு நேரங்களிலும் தொலைபேசி அழைப்பில் ‘கவனித்துக்’ கொள்பவர்களாக, நம்பிக்கைக்குரிய தோழியரோடு வெளியே போனாலும் கூட, அவர்களின் தொலைபேசி தொடர்புகளுக்கு அப்பால் போகாதவர்களாக; அவர்களச் சதா காலமும் கண்காணிப்பவர்களாக கணவன்மார் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

கணவர்மார் தங்கள் தொடர்பெல்லைக்கப்பால் அப் பெண் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். பெண்கள் கூட  தம்மோடு  இருக்கும் நண்பர்களோடு  ஓய்வு நேரக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டாலும் கூட நாசுக்காக அடிக்கடி தொலைபேசியைப் பார்த்த படியே அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக அமர்ந்திருக்கிறார்கள். 

அதற்காகக் கணவன்மார்கள் பெண்ணைப் பூட்டி எல்லாம் வைத்திருக்கவில்லை. அவர்கள் மனைவி குழந்தைகளை வெளியே அழைத்துப் போகிறார்கள். இடங்களைச் சுற்றிப் பார்க்கிறார்கள். பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். உணவு விடுதிகளுக்குப் போய் வருகிறார்கள், பண்டிகைகள், விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்.  எல்லாமும் தான் செய்கிறார்கள். ஆனால், அது அவரோடு ( கணவரோடு) மட்டுமாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பதன் பின்னால் இருக்கும் அரசியல் தான் எனக்குப் புரியவில்லை. 

புரியவே இல்லை நண்பர்களே!

பெண்ணை ஏன் ஒரு பால்ய பிராயத்தில் இருக்கும் பிள்ளையைப் போல நடத்துகிறார்கள்? ஏன் எப்போதும் தம் கண்காணிப்பிலேயே அவர்களை வைத்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்? நம்பிக்கைக்குரிய நண்பர்களோடு போனாலும் கூட ஏன் ஒரு பதட்ட நிலையிலேயே எப்போதும்  காணப்படுகிறார்கள்? 

பெண்களும் அதற்கேன் உடன்பாடுடையவர்களாக நடந்து கொள்கிறார்கள்?

ஒருவர் மாத்திரமல்ல; எனக்கிருக்கும் மிகச் சிறந்த என் அன்புத் தோழியரின் வாழ்க்கை இந்த மாதிரியாகத் தான் இருக்கிறது. என் தொழில் துறையில் கூட நான் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பண்பாட்டுப் பின்புலத்தைச் சார்ந்த குடும்பங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது,  இந்த வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. 

இந்திய அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய ( தமிழ் நாடு மாத்திரமல்ல) ஆண்கள் அவர்களுடய மனைவிமாரின் தொடர்பிலக்கங்களையோ  அல்லது அவர்கள் குறித்த விபரங்களையோ கூட நாம்  அவர்களின் கணவர்மாரிடமே  காரணம் சொல்லிக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

பெண்களை வெறும் உடமைப் பொருளாகவே அவர்கள் பார்க்கும் இந்தக் கண்ணோட்டத்திற்கு யாது காரணம் என்று தெரியவில்லை. என் தோழி மார்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்த வாழ்க்கையை வந்தது போல ஏற்றுக் கொண்டு அதனில் திருப்திப் பட்டு வாழ்வதாகத் தான் தோன்றுகிறது.

கல்வி அறிவும் மாண்பும் புத்திசாலித்தனமும் அழகும் பண்பும் கொண்ட இந்தப் பெண்கள் தம் சுதந்திரத்தை அனுபவித் தறியாதவர்களாகத்; தமக்கு வழங்கப்பட்ட அல்லது உவந்தளிக்கப்பட்டுள்ள சொற்ப வெளிச்சத்திலும் காற்றிலும் அனுமதிக்கப்பட்ட ஜன்னல் வழியாகவும் உலகைப் பார்த்துத் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். 

21ம் நூற்றாண்டிலும் அவுஸ்திரேலியா போன்ற முதலாம் உலக நாடுகளில் தம் வாழ்க்கையை கொண்டிருந்த போதும் ஒரு மிருகக் காட்சிச் சாலை வாழ்க்கையே அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.

அறிவும் ஆற்றலும் அவர்களின் மேன்மைக்குரிய வாழ்வும் ஒரு மாடி வீடுகளுக்குள் காட்சிப் பொருளாக அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

நாமும் நூதனக் காட்சிச் சாலையில் பொருட்களைப் பார்ப்பதைப் போல; மிருகக் காட்சிச் சாலையில் உணவும் இருப்பிடமும் பாதுகாப்பும் கொடுத்து சில சதுர அடிக்குள் முடக்கப் பட்டுள்ள மிருகங்களைப் பார்ப்பதைப் போல; அவர்களைப் பார்த்து விட்டு வர மட்டுமே முடிகிறது.

வாழ்க்கை என்பது அழகிய பூந்தோட்டம் போன்றது.

சுதந்திரம் என்பது மிகப் பெரியது நண்பர்களே! 

அது மூச்சு விடுவதைப் போல உரித்துடையதும் முக்கியமானதும். 

ஆனால் அதனைக் கண்டடைவது என்பதற்கான பிரயத்தனங்கள் யாரால் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதற்கு என்னிடம் விடை இல்லை.
































































’வசந்த காலத்திலும் 35 பாகை செல்சியசில் வெய்யில் கொழுத்துகிறது இன்றைக்கு!’ 

 மென்மையான பூக்கள் வாடி வதங்கி விட இது போதும். 

முதலாம் உலக நாட்டிலும் நம் பெண்களுக்கு விடுதலை  வாய்க்கப் பெறவில்லை இன்றைக்கும்.- அது நூதனமான வடிவத்தில் நுழைந்திருக்கிறது.

பூக்களைப் போலவே பெண்களும். பூவையரும் வாடி வதங்கி விட இது போதும்.

இரண்டுமே இயற்கையானதல்ல. இந்த இயற்கையின் மாறுபாட்டுக்கு மனிதர்களாகிய நாமே முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூக்கள் பாவம்!

பெண்களும் தான்!


படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.

இடம்: பரமற்ரா பார்க்

காலம்: 01.10.2023. காலை 10 மணி. 34 பாகை செல்சியஸ் வெய்யில்.( மனசிலும் )