Thursday, September 28, 2023

பூக்களால் பொலியும் பூமியும் நட்பினால் நிறையும் நாட்களும்

 வசந்த காலம் வந்து விட்டாலே ஜாலி தான். இதமான காலநிலை, பார்க்கும் இடமெங்கும் பசுமை, குருவிகளின் குரலோசை காதை நிறைக்க வேலையில் இருந்து விடுமுறையும் கிடைத்து விட்டால் அது இரட்டிப்பு போனஸ். 

கூடவே, சிரமமற்ற செரிமானம்  கொண்ட உடலும், தியானத்தால் தெளிந்த மனமும், வாய்க்கக் கிடைப்பது பாக்கியம். 

நாளாந்தம் புது மரக்கறிகள் வாங்கி ஆற அமர பார்த்துப் பார்த்து சமைத்து உண்பதும்;  மழைக்கால மாலைகளில் பென்னாம் பெரிய ஜன்னலோரம் சாய்வுநாற்காலியில் ஆறுதலாய் அமர்ந்து, அவசரம் எதுவுமில்லாமல், மழையைப் பார்த்தபடி, சுடச்சுட தேநீரோடும் நமக்குப் பிரியமான எழுத்தாளரின் இன்னும் பிரிக்கப்படாத புத்தகங்களோடு உறவாடக் கிடைப்பதுவும்; பூங்காவுக்குள் பொடிநடை போட்டபடி  புத்தகக் கர்த்தாக்களோடு இலக்கியங்கள், கலைகள் மற்றும் அவற்றின்  இன்றய போக்குகள் குறித்து மனமொத்துக் கலந்துரையாட அவகாசமும் கிடைத்தால் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி வந்து விடாதா? 

 அண்மையில் கனடாவில் அவருக்கு வழங்கப்பட்ட இயல் விருதைப் பெற்றுக் கொண்டு ஐரோப்பிய சுற்றுப்பயணத்தையும் முடித்து விட்டு மெல்போர்ன் போகும் வழியில் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு வருகை தந்திருந்தார் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள். அவரை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த பூங்காவுக்குப் போயிருந்தேன். வாஞ்சையோடும் பட்சத்தோடும் பழகும் அவரின் அன்பு மிகவும் விஷேஷமானது. 

அவரது எழுத்துக்கள் குறித்த என் காட்டமான விமர்சனங்களை எல்லாம் ஒரு வித புன்முறுவலோடு கடந்து செல்லும் மூத்த படைப்பாளி எழுத்தாளர் அவர். சகல எழுத்துலகத்தாரினதும் தொடர்புகளை பேணுவதிலும், சகல தரப்பாரையும் ஏற்று நடப்பதிலும், நட்புறவு பாராட்டுவதிலும், அவரவர் நிறைகளைக்  கொண்டாடுவதிலும், தான் கண்ட சுவாரிசமான விடயங்களை ஒரு கதை போலவே விபரிப்பதிலும், சுறுசுறுப்பிலும்,சிறந்த ஞாபக சக்தியிலும் அவரைப் போல ஒருவரைக் காண்பதரிது.
படப்பிடிப்பு: 17.09.2023 

இன்னொருவர் நாட்டியக் கலாநிதி கார்த்திகா. கணேசர் அவர்கள். சுமார் 60 வருடங்களாக நாட்டியத்துறையில் நடனமாடியும், பல நாட்டிய நிகழ்ச்சிகளை மேடையேற்றியும், புதிய பாணியில் பரீட்சார்த்தமாக பலவித நாட்டியபாணிகளை உட்புகுத்தி புதிய பரிமானங்களை நாட்டிய உலகில் ஏற்படுத்தி சாதனை புரிந்தும், பல நாட்டிய மணிகளை உருவாக்கியும், பல்வேறு விதமான நாட்டியம், வரலாறு குறித்த ஆராய்ச்சி நூல்களை எழுதியும், பல மாதாந்த சஞ்சிகைகளுக்கு இன்று வரை கட்டுரைகள் எழுதியும், வானொலியில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியும் எங்கள் எல்லோருக்கும் ஓர் முன்மாதிரியாக விளங்குபவர் அவர்.
அவர்கள் இருவரோடும் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது படைப்புகள், அனுபவங்கள், கலையுலக இடர்பாடுகள், சுவாரிசமான சம்பவங்கள், வாழ்க்கை குறித்த பார்வைகள் என பலவற்றையும் உரையாடியும் பேசியும் பூந்தோட்டத்தின் வழியே போய் வந்தது ஓர் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

சொர்க்கம் இங்கு தான் நண்பர்களே இருக்கிறது.

அது நாம் உருவாக்கிக் கொள்வது தான்.

இதோ இங்கிருக்கிறது எனது சொர்க்கம்.


எத்தனை தரம் போய் வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய காட்சிகளைத் தந்து என்னைப் பூரிக்கச் செய்யும் இந்தத் தோட்டம் இன்னொரு சொர்க்கம்!

படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்

இடம்: பரமற்றா பூங்கா

27.9.2023 புதன் காலை.