Showing posts with label தமிழ் பக்தி இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் பக்தி இலக்கியம். Show all posts

Wednesday, September 10, 2025

சரஸ்வதி பூசையும் குருபரனின் பக்தித் தமிழும்

இன்று காலையிலேயே மழை!

’ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி; ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து; பாழியந் தோளுடய பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி; வலம்புரி போல் நின்றதிர்ந்து; தாழாதே சார்ங்க முதைத்த  சர மழை போல...’, ஒரு மழை!

குடை பிடித்தேனும் இன்று நடந்தே வேலைக்குப் போவது என்று தீர்மானம்.

பாதையும் பயணமும் சிறியது தான். சொல்லப் போனால் அது ஒரு 15 - 20 நிமிட நடை தூரம் தான். இதனை நான் இத்தனை காலமும் எப்படித் தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சொகுசு கேட்கும் வாழ்க்கைமுறையின் சோம்பேறித் தனங்கள்..... - இது தான் காரணம்; வேறென்ன? 

சரி உங்களுக்காக இன்றைக்கு ( 10.9.2025 புதன் காலை)   பாதையில் கண்ட சில காட்சிகள்.






பாதையில் அறிமுகமான ஒருவரைக் கண்டேன். 

அவரிடம் இருந்து நேற்றய தினம் வட்ஸப்பில் ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. இம்முறையேனும் நீங்கள் எங்கள் நவராத்திரிப் பூசையில் கலந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அவரை வீதியில் கண்டபோது சற்று சங்கோஜமாக இருந்தது. 

புன்னகைத்துப் பிரிந்தோம்.

அவர் ஒரு தமிழகத்துப் பிராமணப் பெண்மணி. ஆசாரங்களைச்  சிரத்தையாகக் கடைப்பிடிப்பவர். இந்த வேண்டுதலை என்ன செய்யலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு போய் என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை.

பொதுவாக ஈழத்தவர்களாகிய நாம் தமிழகத்தவர்கள் போல் கோலாகலமாக நவராத்திரியைக் கொண்டாடுவதில்லை. கொலு வைப்பதும் துதிப்பாடல்கள்  பாடுவதும்  நம்மிடையே வழக்கத்தில் இல்லை. பாடசாலைகளில் மாத்திரம் ஒன்பது நாளும் கோலாகலமாக பூசைகளும் பிரார்த்தனைகளும் நடந்தேறும். கும்பம் வைத்து, ஐயர் வந்து, மந்திரங்கள் சொல்லி; சுண்டல், பொங்கல் பிரசாதங்களோடு கொண்டாட்டங்கள் நடைபெற்று ஒரு கலை விழாவோடு சரஸ்வதிப் பூசை நிறைவுக்கு வரும்.

பாடசாலை மாணவர்களைக் கொண்டிருக்கிற குடும்பங்கள் விரதமிருப்பதோடு கடைசி நாள் ( ஒன்பதாம் நாள் இரவு) ஆயுத பூசை என்று ஒன்றை வைத்து, அன்றைக்கு சுவாமி அறையில் தொழிலாளர்கள் தங்களுடய தொழில்சார்ந்த ஆயுதங்கள், உபகரணங்களையும்; பாடசாலைப் பிள்ளைகள் தங்கள் பாடப்புத்தகங்களையும் வைத்து பொங்கல், பிரசாதங்கள், பூ, பால், பழங்கள் எல்லாம் படைத்து வணங்குவதோடு எங்களுடய சரஸ்வதிப் பூசை இனிதே நிறவு பெறும்.

எங்கள் வீட்டிலும் இதுவே வழக்கமாக இருந்தது.

எங்கள் பாடசாலையில் நடைபெறும் சரஸ்வதிப் பூசை என்றைக்கும் என்னால் மறக்கவொண்ணாதது. பள்ளிக் கூடமே கலைக்கோலம் பூண்டிருக்கும். பாடசாலை ஆரம்பித்ததும் முதல் இரண்டு பாட வேளைகளும் பூசைக்காக ஒதுக்கப் பட்டுவிடும். ஒன்பது நாளும் ஒன்பது வகுப்புகளுக்குரியது. நாமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரிப்பில் ஈடுபட்டிருப்போம். சுவரோடு அமைந்திருக்கிற கரும் பலகைகள் எல்லாம் வண்ணச் Chalk குகளினால் சரஸ்வதியும் லக்ஷ்மியும் துர்க்கையும் உயிர்ப்போடு விளங்குவார்கள். 

பாடசாலை முடிந்த பிறகு  மறுநாளுக்குரிய வகுப்பு ஆண் மாணவர்கள் நின்று அலங்கரிப்பில் ஈடுபடுவார்கள். எங்கிருந்தோ சைக்கிளில் டபிள் போய் செந்தாமரைப் பூக்களையும் தென்னை ஓலைகளையும் வெட்டி வந்து அந்த மண்டபத்தை அலங்கரிப்பது அவர்களுடய பொறுப்பு. பெண்பிள்ளைகள் மறுநாள் காலை வீட்டில் இருந்து எல்லோருமாகக் கொண்டுவரும் பிளிந்த தேங்காய் பூக்களையும் அரிசி முதலானவற்றையும்  நிறமூட்டிக் கோலம் போடுவார்கள். மயிலும் தாமரையும் தண்ணீர் தடாகமும், பூக்களும் என பல்வேறு கோலங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் பூமாலைகள் கட்டி முப்பெரும் தேவியரையும் அலங்கரிப்பதும் பெண்பிள்ளைகளின் பிரதான கடமை.

பூக்களும் சந்தனமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் கற்பூரமும் மாணவர்களின் ஒத்துழைப்பும் பிரசாதங்களுமாக அது ஒரு தெய்வீக வாசனை; தெய்வீகப் பொலிவு!....

இன்னுமொரு முக்கியமான காரியமும் அங்கு நடைபெறும். சகலகலாவல்லி மாலையும்  நினைவில் இப்போது இல்லாத, வேறொரு நீண்ட பெரிய பாடலும் அந்த வகுப்பு மாணவர்கள் பாட வேண்டும். அந்த நீண்ட  பாடல் நமோ நம என்று முடியும். அந்த நேரம் அதாவது, நமோ நம என்கின்ற போதும்; சகலகலாவல்லியே என்கின்ற போதும், மேடையில் திருவுருவப் படங்களின்  இருபுறமும் நிற்கின்ற முழுப்பாவாடை சட்டை அணிந்திருக்கின்ற இரண்டு மாணவிகள் தாங்கள் ஏந்தி வைத்திருக்கும் தட்டில் இருந்து பூக்களை எடுத்துச் சுவாமிக்கு போட வேண்டும். அதற்கான பயிற்சியும் யார் பூ போடுவது என்ற தெரிவும் வகுப்பாசிரியரின் பொறுப்பாக இருக்கும். ( பூக்களை வெறுமனே எறியாமல் அதனைக் கைகளை மேலே உயர்த்தி மெதுவாகக் கீழே இறக்கிப் பூவினை மென்மையாக சாமிப் படத்தின் முன்னால் வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தந்த அறிவுறுத்தல் எனக்கு இன்னமும்  நினைவிருக்கிறது ) அந்த இருவர் மாத்திரம் அன்றைக்கு முழுப்பாவாடை சட்டையோடு பாடசாலைக்கு வரலாம். எனையவர்கள் சீருடை தான் தரித்திருக்க வேண்டும்.

பூசை முடிந்ததும், மேடையில் வீற்றிருக்கும் சுவாமிகள் மாத்திரம் அப்படியே இருக்க, வீபூதி, சந்தனம், பிரசாதம் எல்லாம் அவற்றுக்குப் பொறுப்பான வகுப்பு மாணவர்கள் கொடுத்து முடித்த பின், கூட்டம் கலையும். அந்த மண்டபம் மீண்டும் வகுப்பறைகளாக மாறிவிடும். மாலை 3.30க்கு பாடசாலை விட்டதும் அடுத்த நாளுக்குரிய வகுப்பு மாணவர்கள் மாத்திரம் நின்று அலங்கரிப்பில் ஈடு படுவார்கள். வகுப்பாசிரியர் மேற்பார்வையில் ஈடுபட்டிருப்பார்.

பாடசாலை நாட்களில் அது தான் எங்களுக்கான அதிகபட்ச சந்தோஷமும் கோலாகலமும்.

அது நிற்க, 

இந்த அழைப்பிதழ் வந்த போது எனக்கு என் பாடசாலை ஞாபகமும் சகலகலாவல்லி மாலையுமே நினைவுக்கு வந்தது.

சகலகலா வல்லி மாலை! இதனைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா? குமரகுருபரர் அருளிச் செய்த பத்துப் பாடல்கள்!

அது பக்தித் தமிழின் பிளிந்தெடுத்த அமுதம்! 

ஆண்டாளின் திருப்பாவை போல;  மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போல; தமிழும் பக்தியும் அதில் மிளிரும் கம்பீரமும், கடவுளுடனான அவர்களின் அன்னியோன்னிய உரிமை வெளிபடும்;  பாங்கும்;  பாட்டும்;  பாடும் தமிழும்; அதன் இனிமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

தமிழ் கம்பீரமாகவும்; பக்தி வசீகரமாகவும்; விளங்குவது  என்பதுவும்; அது நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதுவும்; தமிழர் பண்பாட்டுக்கே பெருமை சேர்ப்பது;. அவை தமிழ் மகுடத்துக்குப் பதிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பெருமை மிகு  இரத்தினங்கள்; ஒளிரும் பிரகாச நட்சத்திரங்கள்.

அது பாடப் பாட பரவசம் தருவது; பருகப் பருக பக்தி பெருகுவது...

குருபரர் பாடுகிறார்,

‘வெந்தாமரைக்கு அன்றி, நின் பதம் தாங்க, என் வெள்ளை உள்ள(மான) தண் தாமரைக்குத் தகாது கொலோ?’ என்கிறார். வெந்தாமரையில் பாதம் பதித்தபடி நின்றிருக்கிறாயே ( சரஸ்வதி தேவி) உன் பாதத்தைத் தாங்க எனது வெள்ளை உள்ளமான குளிர்மையான தாமரைக்குத் தகுதி இல்லையா?  - என்று கேட்கிறார்.

மேலும், ’நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் ( என்னைப் ) பணிதருள்வாய்!’ என்று கேட்கும் அந்த தமிழின் கம்பீரத்தைப் பாருங்கள். அதிலே ஓர் அன்பும் கட்டளையும் ஒழிந்து / ஒளிர்ந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சும்மா பாடல் இல்லை. சொற்சுவையும் பொருள் சுவையும் தோய்ந்திருக்கத் தக்கதாகப் பாடுகிற பணி - அதிலே என்னைச் சேர்த்து விடு என்று எத்தனை அழகாய் கேட்கிறார் பாருங்கள்!

பிறகு ஆதங்கப் படுகிறார் எப்படி என்றால், . புலவர்கள் உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவலினை ( அவர்கள் )  சிந்தக் கண்டு களிப்பவளே! ( கலாப மயிலே - சரஸ்வதி தேவி) (அந்தப் புலவர்கள் மாதிரி,)  ‘அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது ஆர்த்து உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?’ - எனக்கும் அப்படி ஒரு பாக்கியத்தைத் தந்தருள மாட்டாயா? என்று இறைஞ்சிக் கேட்கிறார். அப்படிக் கேட்டுவிட்டுப் பிறகு, ‘ தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்(ந்த) வாக்கும் பெருக ( எனக்குப்) பணித்தருள் என்பது அவரது வேண்டுதல்./ ஒருவித உரிமைக் குரலாக அந்தத் தமிழ் தொனிக்கிறது பாருங்கள்! - ஒருவித அதட்டல்; உரிமையான - எனக்குத் தரவேண்டியதைத் தந்து விடு என்பதான ஒரு கோரிக்கை அது!

அப்படிக் கேட்ட பிறகும் வரவில்லையே என்று விம்முகிறது அந்தப் பக்தித் தமிழ். ஏன் நீ இன்னமும் என்னிடத்தில் வரவில்லை என்ற ஏக்கம் தொனிக்கும் அடுத்த பாடலில் ( 5 ) அதனை அவர் இப்படி முன்வைக்கிறார். ‘பாத பங்கேருகம் என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே?’ என்று கேட்டுவிட்டு ஆறாவது பாடலில், ’பண்ணும் பரதமும், தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது (தாக) எய்த நல்காய்!’ என்று மீண்டும் ஒரு வேண்டுதல் விடுக்கிறார்; விண்ணப்பம் வைக்கிறார். .- நான் நினைக்கிற போது பண்ணும் பரதமும் தீஞ்சொல் பனுவலும் எனக்கு எளிதாகக் கிடைக்க நீ அருள வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

’கிடைக்க வை’ என்பதை ’எய்த நல்காய்’ என்று சொல்லும் இந்தத் தமிழ் சுவை எத்தனை உவப்பாக இருக்கிறது! இல்லையா? இந்தத் தமிழை நாங்கள் வரலாற்றின் எந்தப் பாதையில்; எந்தத் திசையில்; எங்கு? எப்படித் தொலைத்தோம்?

அவரது அடுத்த இறைஞ்சுதலும் விருப்பமும் ஆவலும் இப்படியாக வருகிறது.  ‘ பாட்டும், பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் (தேவி) என்று இவ்வாறாகக் கேட்டுவிட்டு என்னை உனது அடிமையாக்கு என்று அடுத்த பாடலில் ஒரு போடு போடுகிறார்.’ ’சொல்விற்பனவும் அவதானமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து என்னை அடிமை கொள்வாய்’ ( தேவி) என்றவர், இறுதிப்பாடலில் 

‘மண்கண்ட வெண்குடை(குக்) கீழாக

மேற்பட்ட மன்னரும்

என் பண் கண்ட அளவில்

பணியச் செய்வாய்!

படைப்போன் முதலாம் விண்கண்ட தேய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில், உன்போல் கண் கண்ட தெய்வம் உளதோ? சகலகலா வல்லியே! என்று முடிக்கிறார்!

பூமியிலே வாழ்கிற வெண்கொற்றக்குடைக்குக் கீழாக நிமிர்ந்து நிற்கின்ற மன்னரும் என்னுடய பண்ணை - பாட்டை - கேட்ட அளவில் பணியச் செய் என்று கம்பீரமாகக் கேட்கிறது குருபரனின் பக்தித் தமிழ்!

‘படைத்தல் தொழிலைச் செய்பவன் உட்பட எவ்வளவோ கோடானு கோடி தெய்வங்கள் இருக்கின்றன தான்; ஆனாலும், சொல்லப் போனால் (விளம்பில்)  உன்னைப் போல ஒரு தெய்வம் உள்ளதோ சகலகலாவல்லியே? இது குருபரர். - குமர குருபரர்.

விண்ணுக்கொரு மருந்தை; வேத விழுப்பொருளை; கண்ணுக்கினியானை; பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக ... சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை என்று உருகினார் மாணிக்க வாசகர். ( திருவெம்பாவை) 

’கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்; ஏழில் இயம்ப, இயம்பும் வெண்சங்கெங்கும்; கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை; கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?’ என்று உருகி உருகி வையகம் வாழத் தமிழ் செய்கிறாள்  ஆண்டாள். ( திருப்பாவை)

என்னே தமிழ்!

என்னே பக்தி!!

சகலகலாவல்லியே நீயே சரண்!!

Saturday, March 22, 2025

சிவ புராணம் - சில சந்தேகங்கள்....சில திருத்தங்கள்........ சில குறிப்புகள்.........

 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பணிந்து, தொழுது இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

முற்குறிப்பு:

6 - 9 நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலப் பகுதியில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கள் அச்சு இயந்திரத்தின் அறிமுகத்துக்குப் பிறகு அச்சுருப் பெற்றன என்பது வரலாறு.

ஓலையில் எழுத்துக்களை எழுதுகிற போது சில சிக்கல்கள் இருக்கின்றன. ஓலையிலே குற்றுகள், சுழிகள், கொம்புகள் போன்ற எழுத்துவடிவங்களை எழுதுகிற போது ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதனால் அதனை எழுதுகிறவர்கள் சந்தர்ப்பம் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவது வழக்கம்.

அதனைப் பிறகு வாசிக்கிறவர்கள் வேறு ஒருவராக இருந்தால் முதலில் அதனை வாசித்துப் பார்த்து, அதன் பொருளை இன்னதென உணர்ந்து, சொற்களை அனுமானித்து, ஒருவாறாக வசனத்தையோ பாட்டையோ வாசிப்பார்கள். அதனை எழுதியவரும் வாசிப்பவரும் வேறு வேறானவர்களாக இருக்கும் பட்சத்தில் அதில் தவறுகள் நேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நம் தேவார திருப்பதிகங்களுக்கும் பொருந்தும். 

இந்தப் பதிகங்களைப் படியெடுக்கின்ற போது நேர்ந்துவிட்ட தவறுகளை நான் மிகவும் போற்றி மகிழும் சிவபுராணத்தில் ஆங்காங்கே கணக்கிடக்கிறது. தேவார திருப்பதிகங்களில் பிழை கண்டுபிடிக்கலாமா என்று யாரேனும் என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். எனது கருத்தையும் அநுமானத்தையும் நான் சொல்கிறேன். அதில் ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் அதனை நிச்சயமாகத் திருத்திக் கொள்வேன். யாரும் எதிலும் நிபுணர்கள் கிடையாது. எல்லோருக்கும் தவறுகள் நேர்வது இயல்பு. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு, திறந்த மனதோடு நாம் பாடல்களைச் சரியான அர்த்தத்தோடு பாடவேண்டுமே தவிர, எழுதி வைத்து விட்டதை சரியோ பிழையோ என்று பாராது அப்படியே ஒப்புவிப்பதைத் தவிப்பதற்காக இப் பாடலை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

நன்றி. தவறிருப்பின் பொருத்தருள்க. மறக்காமலெனக்கும் சுட்டிக் காட்டுக.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க                                         வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க                                    கோள்களை ஆண்ட

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க                                   நின்று அன்னிப்பான்

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5


வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க                                வேதம் கொடுத்தாண்ட

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க           மெய்கழல்கள்

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க                பிறந்தார்க்குச் 

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க              கரம் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10        சிரம் குவிப்பார்


ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15


ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்                                           பல் மிருகமாகிப்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30                                          செல்லாது நின்ற


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்                               விடை பகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40


ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்                    நின்று எழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45


கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை                                                        மலம் சேரும்

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55


விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே                                                   பேசாது நின்ற

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே                                      ஓதாதார் உள்ளத்து / ஒழிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே                               துன் இருளே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                   வந்தறிவாய்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே        ஊற்றானார் உண்ணா அமுதை உடையானே 

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே                                          மீண்டு இங்கு வந்து

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 


மேலதிக குறிப்புகள்:

1.கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க  கோள்களை ஆண்ட

கோகழி என்பதற்கும் கோகழியினை ஆண்ட என்பதற்கும்  என்னால் சரியான அல்லது பொருத்தமான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கோள்களை ஆண்ட என்று வருகிற போது நவக்கிரகங்களையும் கோள்களையும் அதன் வலிமைகளையும் நம்புகிற இந்துக்கள் அவற்றை ஆள்கின்றவனாக கடவுளைப் போற்றி, கோள்களை ஆண்ட குரு மணி (தன் - அவன்) தாள் வாழ்க என்று வருகிற போது அது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

2. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க        நின்று அன்னிப்பான்

ஆகமமுமாகி அதிலிருந்து அன்னிப்பவனாகவும் ( ஆகமங்களில் இருந்து தள்ளி நிற்பவனும் ஆகியவனின் தாள் - பாதங்கள் வாழ்க.

3. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க    வேதம் கொடுத்தாண்ட 

வேகங் கெடுத்தாண்ட என்பதற்கு எவ்வாறாக அர்த்தம் கற்பிக்க இயலும்? ‘வேதம் கொடுத்த ஆண்டவர்’ என்று நாம் இறைவனை துதிக்கிறோம். வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்று இந்துக்களாகிய நாம் நம்புகிறோம். அதனால் வேதங்களைக் கொடுத்து ஆண்ட வேந்தன் - அரசனுடய அடிகள் வெல்க என்று வருவது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

4.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க   மெய்கழல்கள் 

பிறப்பினை இல்லாது செய்யும் பிஞ்ஞகன் ( அவனுடய) மெய்கழல்கள் - கழல் என்பது காலில் அணியும் ஒரு பாத அணி. இங்கு அதனை அணிந்திருக்கிறவனுடய பாதங்களைக் குறிக்கிறது.  உண்மையான பாதங்கள் வெல்க.

5.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க  பிறந்தார்க்குச்

சேயோன் என்ற சொல்லுக்கு சிவன், சிறந்தவன், சிவந்தவன் என்றெல்லாம் தமிழில் பொருள் கூறப்படுகிறது. இந்து சமயத்தில் புறத்தார் என்று சிறு தெய்வ வழிபாடுகளைச் செய்துவரும் இந்துக்களை குறிப்பிடுவதாகச் சில கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்து சமயத்துக்குள் நல்லறிவும் ஞானமும் நல்லமைச்சுப் பதவியும் பெற்றிருந்த மாணிக்க வாசகர் இந்துசமயத்துக்குள்ளேயே பாகுபாடுகளைச் சுட்டிப் பாடி இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பிறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க - அதாவது பிறந்த எல்லாருக்கும் சிவனாக இருக்கிறவனுடய பூப் போன்றதும் கழல்களை அணிந்துருக்கிறதுமான பாதங்கள் வெல்க! என்பது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

6.கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க  கரங் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க    சிரங் குவிப்பார்

கரங் குவிவார் / சிரம் குவிவார் என்பதை விட கரம் குவிப்பார் / சிரம் குவிப்பார் என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கரம் குவிப்பவர்களுடய உள்ளங்கள் மகிழும் கோன் - அரசன்/ தலைவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

சிரங்குவிப்பார் - தலைகுனிந்து வணங்குபவர்கள் - அவர்களை ஓங்கி ( உயரச் செய்யும்) சீரோன் - சிறப்பானவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

7.பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்      பல் மிருகமாகிப்

பல் மிருகமாகி - பலவிதமான மிருகங்களாக உரு எடுத்து என்று வருதல் பொருத்தமாக இருக்கும். அதனை அடுத்துப் பறவையாய் பாம்பாகி என்று வருவதால் முன்னால் இருக்கும் சொல் பல்மிருகம் என்று வருதல் மிகவும் பொருளுடைத்து.

8.செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்     செல்லாது நின்ற

செல்லா அ - செல்லாது நின்ற - இதுவரை பிறபெடுக்காமல் இருக்கின்ற தாவரக் குழுமத்துக்குள் என்று பொருள் கொள்க.

9.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்       விடை பகா வேதங்கள்.

இதில் ஓர் எழுத்துப் பிழை தான் நேர்ந்திருக்கிறது என்பது என் அனுமானம். விடைப்பாகா என்பது விடை பகா - அதாவது விடை பகராத - விடை தராத வேதங்கள் என்று வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

10.போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்  நின்று தொழுதால்

இது ஓரு மறை பொருளாய் நிற்கும்சொல் என்றே எனக்குத் தோன்றுகிறது. நிந்தொழும்பின் என்பது நின்று தொழுதால் - நிந்தொழும்பின் என்று பொருள் கொள்ளல் சாலப் பொருந்தும்.( நின்று வணங்குவீர்களானால்)

11மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை  மலம் சேரும்

மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கும். இந்துக்களாகிய நாம் நம் ஆத்மாவை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள் பீடித்திருக்கின்றன என நம்புகிறோம்.

மலஞ்சோரும்  என்பதற்குத் தனியாக அர்த்தம் காண்பதை விட அச் சொற்தொடருக்கு முழுதாக அர்த்தம் காணின் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

’ஒன்பது வாயில் குடில்’ என்று ஓர் அழகான பதத்தை உபயோகிக்கிறார் மாணிக்க வாசகர். எங்களுடய உடல் ஒன்பது வாயில்களைக் கொண்ட ஒரு குடில் என்று சொல்கிறார் அவர். அவை எவை ஒன்பது வாயில்கள்?

கண்கள் - 2

காதுகள் 2

மூக்குத் துவாரங்கள் - 2

சலவாசல் - 1

மலவாசல் - 1

யோனிவாசல் - 1 

இவ்வாறாக மொத்தம் ஒன்பது வாசல்கள் எங்கள் உடலுக்கு உண்டு. இந்த ஒன்பது வாயில்களைக் கொண்ட குடிலை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் சேரும். (சோரும் என்று அர்த்தமாக மாட்டது)

இந்த உடல் குறித்த உவமைகளை இந்து சமயக் குரவர்கள் பலவாறாகப் பாடியுள்ளார்கள்.

’.......மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி....’ 

என்று ஒளவையார் விநாயகர் அகவலில் செப்புகிறார்.

அது போல, 

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்கிறார் திருமூலர் தன் திருமந்திரத்தில். 

பூதத்தாழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு பாடுகிறார்,


‘அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியாக, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்’. 

எவ்வளவு அழகிய பாடல்கள் இல்லையா? 


திருமூலரின்  இன்னொரு பாடல் 

’உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே’ - என்றும்


’உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வி இலோரே’!

 - என்றும் உள்ளத்தினுள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெல்லாமோ தேடி அலையும் பக்தர்களைத் திருமூலர்  பாடுகிறார். 

அது போல ’ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...’  என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன் பிடித்த பத்து என்று தரும் இந்தப் பாடல்களில் வரும் பக்தி கனிரசத்தை சற்றே நுகர்ந்து பாருங்கள்.

 

1. உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு

வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!

செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!

எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

2. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!

முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,

கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!

இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

3.அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

4. அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!

பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

5. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!

மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

6. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,

பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!

திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!

இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

7. பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,

பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!

தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

8. அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்

சித்தனே! பக்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

9. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உவப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

10. புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்

என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!

துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!

இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?


இது போல வள்ளலார் தரும் பாடல் ஒன்றும் இனிது நோக்கத் தக்கது. ( சொல்ல வந்த விடயத்தைத் தாண்டி பதிவு வேறு திசை திரும்பினாலும் பாடல்களின் பொருள்வளத்தினாலும் அதன் அருட் திறத்தினாலும் அர்த்தபுஷ்டியான பாடல் செழுமையினாலும் அவற்றையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.)

’கங்கையில் காவிரியில் நூறுமுறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி

வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து

பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்

தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்’.

என்கிறார் வள்ளலார்.


சரி நாம் இனி நம் விடயத்திற்கு வருவோம்.


12. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே    பேசாது

பேராது என்பதற்குப் பதிலாகப் பேசாது நின்ற என்று வருவது பொருத்தமாக அமையும் போலத் தோன்றுகிறது. இறைவன் உயிர்களோடு நேரடியாகப் பேசுவதில்லை; என்றாலும் கருணைக்குரியவனாக; - கருணைக்குரிய பேராறாக அவன் விளங்குகிறான். அதனால், பேசாது நின்ற பெருங்கருணைப் பேராறே என்பதே பொருத்தமான சொல்லடியாக இருக்க வேண்டும்.

13.ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே       ஓதாதார் உள்ளத்து ஒழிக்கும் ஒளியானே

ஓதாதார் அதாவது ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய என்ற மந்திரத்தை ஓதாதவர்களுடய உள்ளத்தில் ஒழித்து ( மறைந்து) இருக்கும் ஒளி பொருந்தியவனே - ஒளியானே என்பது பொருத்தமான சொற்தொடராக எனக்குப் படுகிறது.

ஒழி- மறைத்தல்  / இல்லாது செய்தல்

ஒளி - வெளிச்சம் / பிரகாசம்

இந்த வரியில் வரும் இரண்டும்  ( ஒழி / ஒளி )  இருவேறு அர்த்தங்களில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

14. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                  வந்தறிவாய்

 தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

 ஊற்றான உண்ணா ரமுதே உடையானே  ஊற்றானார்; உண்ணா அமுதை உடையானே

இந்த வரிகளுக்கு முதல் மூன்று வரிகளோடு சேர்த்து பொருள் கூறலே பொருத்தம் என்று தோன்றுகிறது. அதாவது, நீ இந்த உலகத்தில் எப்போதும் வந்து போகும் வெவ்வேறான மாற்றங்களாக அறியப்படுகிறாய். ( என்றாலும்) எம்மைத் தேற்றுகிறவனாகிய நீ தேற்றுவதனால் என் சிந்தனை தெளிவடைகிறது. ஊற்றானவனே! உண்ணாத அமுதை உடையவனே! அதாவது,உண்ணாத அமுதை உடையவர் சிவனார். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வெளிவந்த அமுதத்தை விழுங்கிய போது அது நஞ்சென்று அறிந்த பார்வதி சிவனாரின் தொண்டையை இறுகப் பற்ற, அது தொண்டயில் தங்கி விட்டது என்கிறது புராணம். அதனால் அவர் நஞ்சுண்ட கண்டன் ( கண்டம் - தொண்டை) ஆனார். அதனைத் நாவுக்கரசரின் திருஅங்கமாலை என்ற தேவாரத் திருப்பதிகம்  இப்படிப் பகரும். ( பதிகம் என்பது 12 பாடல்களால் ஆனது) ( அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனைத் தொழும் ஆற்றை அவர் பாடும் திறன் வியந்து நோக்கற்பாலது. அதனால் அதன் முழுப் பாடலையும் இங்கு பதிவிடுகிறேன்)

தலையே நீவணங்காய் - தலை

  மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

  தலையே நீவணங்காய்.  1  


கண்காள் காண்மின்களோ - கடல் 

  நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

  கண்காள் காண்மின்களோ.  2  


செவிகாள் கேண்மின்களோ - சிவன்

  எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 

  செவிகாள் கேண்மின்களோ.  3 


மூக்கே நீமுரலாய் - முது

  காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

  மூக்கே நீமுரலாய்.  4  


வாயே வாழ்த்துகண்டாய் - மத

  யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

  வாயே வாழ்த்துகண்டாய்.  5  


நெஞ்சே நீநினையாய் - நிமிர் 

  புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

  நெஞ்சே நீநினையாய்.  6  


கைகாள் கூப்பித்தொழீர் - கடி 

  மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

  கைகாள் கூப்பித்தொழீர்.  7 


ஆக்கை யாற்பயனென் - அரன் 

  கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 

  வாக்கை யாற்பயனென்.  8  


கால்க ளாற்பயனென் - கறைக் 

  கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 

  கால்க ளாற்பயனென்.  9  


உற்றா ராருளரோ - உயிர் 

  கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

  குற்றார் ஆருளரோ.  10  


இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

  கிறுமாந் திருப்பன்கொலோ.  11  


தேடிக் கண்டுகொண்டேன் - திரு

  மாலொடு நான்முகனுந்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 

  தேடிக் கண்டுகொண்டேன்.  12

இவ்வாறாக உண்ணா அமுதை உடையவனே என்பது பொருந்தும்.


15. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே     மீண்டு இங்கு வந்து

மீண்டு இங்கு வந்து வினைகளினால் ஏற்படுகின்ற பிறவிகள் சேராமல் ( இந்தப் பூமியில் பிறந்து ஆனவம் கன்மம் மாயை இவைகளினால் பீடிக்கப் பட்டு நாம் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் ஆற்றி இறைவனை அடையும் பாக்கியத்தை மறந்து மீண்டும் மீண்டும் பிறவிச் சாகரத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறோம். 

அவ்வாறு மீளவும் இந்த உலகில் பிறந்து வினைப் பிறவியினை எடுக்காமல் என்பது இதன் பொருளெனில் தவறாகா.

இறுதியாக,

.......சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர்

சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

( இந்தப் பாட்டினைப் பொருளுணர்ந்து சொல்லுபவர்கள், பலரும் போற்றும் விதமாக, சிவபுரத்தில் இருக்கின்ற சிவனுடய திருவடியைச் சென்று சேர்வார்கள்.) என்று முடியும் இந்தச் சிவபுராணத்து இறுதி வரிகளோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

பிற்குறிப்பு:

பேசாப் பொருளொன்றைப் பேச நான் புகுந்தேன். சரி தவறு தெரியுமளவுக்கு நான் இன்னும் ஞானத்தை அடைந்து விடவில்லை. இருந்த போதும், இந்தச் சிவபுராணத்தை ஓதுகின்ற அன்பர்கள் அதன் பொருளுணர்ந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி இதனை நான் இங்கு பதிவிடுகிறேன்.

தவறெனில் சிறியேனின் பிழை பொறுத்து ஏற்பது உம் கடன்.

Thursday, April 18, 2024

சொல் மாலைகள்

படங்கள்; நன்றி இணையம்


படங்கள்: நன்றி இணையம்

படங்கள்: நன்றி இணையம்


 ’வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர் ஆழி நீங்குகவே என்று’  - பொய்கையாழ்வார் -

பொய்கையாழ்வார் இறைவனை ஐம்புலன்களாகவும் ( மெய், வாய், கண், மூக்கு, செவி)  ஐம்பூதங்களாகவும் -  நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) அழிவற்ற மெய் ஞானமாகவும் ஞானமுடையவர்கள் செய்யும் வேள்வியாகவும் அறமாகவும் காண்கிறார்.

மண்னுலகம் அவருக்கு தகளியாகத் தெரிகிறது. கடல்நீரோ நெய். சூரியன் அதன் சுடர், அது ஞான விளக்கு! அது அக இருளை அகற்றும் ஞான தீபம். அந்த வெளிச்சத்தின் வழியாக மாயையை உண்மை எனக் கருதி இருக்கும் இருள் அகன்று  ஞானம் சித்திக்கும் என்பது பொய்கையாழ்வாரின் நம்பிக்கை!.

பூதத்தாழ்வாருக்கு அது வேறொரு வடிவம் காட்டுகிறது.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்’

அன்பே விளக்காகவும் ஆர்வம் நெய்யாகவும் உள்ளம் ( சிந்தை ) திரியாகவும் ஞானவிளக்கை ஏற்றுகிறார் அவர்.

உள்ளத்தையே பெரும் கோயிலாகக் கொண்டவர் திருமூலர். அவருக்கு,

‘உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் அனைத்தும் காளாமணி விளக்கே’ -

உள்ளத்தை இறைவனின் கருவறையாகவும்  உடலை ஆலயமாகவும் வாயைக் கோபுரமாகவும் ஞானமடைந்தவர்களுக்கு ( பேருண்மையை அறிந்தவர்களுக்கு) நம் உயிர் சிவமாகவும் மாயக்குள்ளே இழுக்கும் ஐம்புலன்களும் ( கள்ளப் புலன்) மணிவிளக்காககவும் கண்டவர் திருமூலர்.

அப்பரோ அதனை வேறுவிதமாக காண்கிறார்.

‘காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீரமைய வாட்டி

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே’   என்று போற்றுகிறார்.

அப்பருக்கு உடல் கோயிலாகவும் உள்ளம் கடவுளின் அடியாளாகவும் ( அடிமை) உண்மையோடிருத்தல் தூய்மையாகவும் ஆத்மாவினை கடவுளாகவும் கொண்டு அன்பினை நெய்யும் பாலுமாக கொடுத்து இறைவனை வழிபடுகிறார் அவர்! 

நாவுக்கரசருக்கு அது இப்படியாகத் தோற்றம் தருகிறது. 

’ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே

உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலாம் ஆனாய் நீயே 

மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிதும் இனியாய் நீயே

பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே

திருவையாறு அகலாத செம்பொற் சோதி’      - நாவுக்கரசர் - 

உலகில் உள்ள அனைத்துமே அவருக்கு இறைவனின் தோற்றமாகத் தெரிகிறது.

பக்தியும் தமிழும் ஞானமும் அறிவும் இனிக்க இனிக்க தெய்வீக அமுதமாக சுவைக்கத் தந்தவர்கள் அவர்கள். ஞானத் தமிழாக; பக்தித் தமிழாக சுவைக்கும் அந்தத் தமிழ் தான் எத்தனை அழகு! எத்தனை சுவை! 

கலப்படமற்ற தனித்தமிழின் அழகன்றோ அழகு!

மேற்கண்ட இந்தச் சொல்மாலைகள் எல்லாம் வாடாத மலர் மாலைகள். தமிழகத்தின் பக்தி மாலைகள். தமிழ் மாலைகள்! 

ஆனால் இந்தச் சொல்மாலைகள் போல இப்போதெல்லாம் தனித்தமிழ் பாமாலைகளைக் கேட்பது அபூர்வமாகி விட்டது. சில பக்திப்பாடல்கள் வாத்திய இசையோடும் இனிய குரலோடும் பக்திப் பரவசத்தோடும் சிறந்த ஒலித்தரத்தோடும் வருவது உண்டு தான் எனினும்  தமிழின் குழைவு அதன் இலக்கிய அழகு அதில் ஏற்றப்பட்டிருப்பது குறைவென்றே எனக்குத் தோன்றுகிறது. 

கர்நாடக மானிலத்தில் 12ம் நூற்றாண்டில் ஒரு பக்தர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் பசவண்ணர். வீரசைவம் என்ற ஒரு புதிய மதப்பிரிவை உருவாக்கியவர் இவர் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் வச்சனா என்றழைக்கப்படுகின்றன. ( வசனங்கள்)  அதில் ஒன்று இப்படியாக அமைகிறது.

‘வசதி இருப்போர் சிவாலயம் கட்டுவர். வறியவன் யான் என்ன செய்குவேன் ஐயனே? என் காலே தூண்; உடலே கோயில்; சிரமே பொற் கலசம் ஐயா; கூடல சங்கம தேவனே!கேட்டிடுவாய்! நிலையாய் இருப்பதற்கு அழிவுண்டு; சங்கமத்துக்கு அழிவில்லை’ - என்ற வாறு அமைந்துள்ளது.

தமிழில் இவ்வாறானதைப் போன்ற வசன வடிவங்கள் பாடல்களாக உருப்பெறுகிற போது இசையும் இனிய குரலும் இணைந்து கொண்டாலும் மொழிவளம்; கற்பனை வளம் அதனோடு இணைந்து கொள்ளாததனால் அவை ஏதோ ஒரு வித உணர்வோடு ஒன்றிய அன்னியோன்னிய உணர்வை ஏற்படுத்தி விடுவதில்லை.

மேலும் அவை மெருகேற்றப்பட்டு பாடலாகத் தவளுகிற போது அதன் உண்மை பக்தி மேக்கப் போட்டிருக்கும் மணப்பெண்ணின் அழகினைப் போலவே சமயா சமயங்களில் தோற்றம் காட்டுகிறது. 

( சில நல்ல வளமுள்ள பாடல்கள் இல்லாமலில்லை. மண்ணானாலும் திருச்செந்தூரில்..., கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்....., மருதமலை மாமணியே முருகையா....,திருச்செந்தூரின் கடலோரத்தில்....,கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... , சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...)

இன்று என் வட்ஸப் பிற்கு ஒரு வீடியோ ஒன்று வந்திருந்தது. அது மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வெண்ணைத்தாழி உற்சவம் குறித்த ஒளிப்பதிவு. சுவாமி வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறது. இடைச்சிகள் எனப்படுவோர் இலைகளில் வெண்ணையை உருட்டி உருட்டிப் பக்தர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்தர்கள் அதனை வாங்கி வெண்ணை விரும்பியான சுவாமிக்கு அடித்துக் கொண்டே வருகிறார்கள். அர்ச்சகர்கள் வந்து விழும் வெண்ணை உருண்டைகளை வழித்து வழித்து எடுத்துக் கொண்டே வருகிறார்கள். இருந்தும் அவை உருகி உருகி வழிந்த படி இருக்கிறது.

ஊர்வலம் இவ்வாறாக நகர்கிறது. இதனை விளக்கிக் கொண்டு வருகிறார் ஓர் அர்ச்சகர். அவரின் தமிழ் தான் எத்தனை இனிமையாக இருக்கிறது! அவர் சொல்கிறார், ’வெண்ணையைத் திரட்டி இப்படியும் அப்படியும் அடித்து கோபாலா கோபாலா என்று பக்தி முழக்கம் செய்து கொண்டு பக்தர்கள் வருகிறார்கள்;  அந்த வெண்ணையை எல்லாம் அர்ச்சகர்கள் வழித்து வழித்து விட்டுக் கொண்டே வருகிறார்கள். அவை எல்லாம் வீதியிலே விழுந்து அதனை மக்கள் மிதித்து மிதித்து வருகிறார்கள். அதனால் அந்த ஊர்வலம் வரும் 15 மைல்களும் நெய் வாசம் கமளுது. ஊர் வரையிலும் பக்தர்களின் கால்கள் நெய்யால் தோய்ந்த வாறு இருக்க அவர்கள் பக்திப் பாடல்களைப் பரவசமாகப் பாடிய படி வருகிறார்கள். பங்குனி மாதத்து வெய்யிலில் வெண்ணை உருகி ஒரே சேறாக; ஆகி இருக்க அதனை எல்லாம் உழக்கியபடி வருகிறார்கள். நெய் வாசம் பெருகிக் கிடக்கிறது. அப்படியாகக் கண்ணன் வருகிறான். 

அப்படி வரும் போது வீதிகளில் கண்ணனுக்காகக் காத்திருக்கும் பாட்டிகள் சிலர்  பெருமாள் புறப்பட்டு விட்டானா என்று கேட்க மாட்டார்கள். சாமி கிளம்பியாச்சா என்று கேட்க மாட்டார்கள். கோபாலன் எங்க நிக்கிறான்? கோபாலன் இப்ப எங்க நிக்கிறான்? என்று கேட்பார்களாம்! அவர்களைப் பார்த்து கிருஷ்ண தரிசனத்தை அறிந்து கொள்ள வேண்டும்! என்று அந்த அர்ச்சகர் சொல்லுகிற போது,

தமிழும் பக்தியும் இதோ இங்கு வாழுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது! சொல் மாலைகள் எப்பொழுதும் பாடலோடும் இசையோடும் இனிய குரலோடும் தான் ஒலிக்க வேண்டுமென்பதில்லை. அது சமயா சமயங்களில் வெண்ணையைப் போல உற்சவ காலங்களில் இரு கைகளிலும் பிரசாத்தைத்தை ஏந்திக் கொள்வதைப் போல சாதாரண பக்தர்களின் பொற் பதங்களில் பொதிந்து போயுள்ளது! 

இவ்வாறான அழகியல்களை; உண்மையான இயல்புகளை வைத்து தமிழையும் பக்தியையும் பாடல்களாகப் புனையலாமே!

அவை நிரந்தரமாய் வாழ வழி செய்யலாமே!

Sunday, September 2, 2018

வைஷ்ணவக் கப்பல்

அண்மையில் பக்தி இலக்கியத்தில் தமிழழகு குறித்த ஒரு தேடல் ஆரம்பமாகி சம்பந்தர் தந்த தேவாரத் தமிழில் முக்குளித்து மேலெழுந்த போது சில சுவாரிசமான விஷயங்கள் தட்டுப்பட்டன. 

கண்டு கொண்ட சில சுவாரிசங்களில் ஒன்று சம்பந்தர் எவ்வாறு திட்டமிட்டு பெளத்த சமணக் கொள்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார் என்பதும்; அதனை திட்டமிட்டு தன் பதிக வைப்பு முறைகளில் 10வது பதிக வைப்பை அதற்கெனவே ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பதும்; ஒன்று. அதனை  தமிழன்பர் திரு. தனபாலசிங்கம் ஐயா அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர் வைஷ்ணவ பாசுரங்களில் இத்தகைய எதிர்ப்புணர்வு  குறித்த இயல்பு இருக்கவில்லை என்று கூறினார்.

ஞானசம்பந்தரின் முதலாவது திருமுறையே 1000 மேற்பட்ட (1256 என்று நம்புகிறேன்.) தேவாரங்களால் ஆனது. இந்த மனிதரின் இன்னும் இரு திருமுறைகள் உள்ளன; படிக்க. போதாதென்று சேக்கிழார் வேறு இவரைப்பற்றி 1000 மேற்பட்ட பாடல்களால் பேசி இருக்கிறார். சம்பந்தர் குறித்தே இன்னும் பார்க்க எத்தனையோ இருக்க வைஷ்ணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்குள் இப்போது போவதென்பது இயலாத காரியம்.

இருந்த போதும் வட்ஸப்பில் வந்த இப்பாடல் இசையும் நடனமுமாய் ‘வைஷ்ணவக் கப்பலின்’ வருகையை பாடும் இந்த அழகினை என்னவென்பது!!



அகிலமெல்லாம் மிக விளங்கும் ஆதி
அரவணைமேல் பள்ளி கொள்ளும்
இரகு குலத்தோன் குல தெய்வம்
எங்கள் ரங்கருடய சந்திதிக்கு

தருமங்களானதொரு பலகைகள் சேர்த்து
தத்துவமானதொரு பாய்மமரம் நட்டு
நான்கு வேதங்களும் நங்கூரமாக்கி
நலமுள்ள திருமந்ர கொடி தன்னை நாட்டி

அறுபத்து நான்கு கலை ஆணியாய் தைத்து
ஆகம புராணமெனும் அருங் கயிற்றில் கட்டி
அழகியதோர் துவயம் தனை பீரங்கியாக்கி
அணிகுருகை மாறன் அதற்கு அதிகாரி

நாலாயிரம் என்னும் நல்லதோர் பொருளை
ஞானமென்னும் கப்பலில் நன்றாக ஏற்றி
கப்பலில் வருகின்ற கணவான்கள் பெயரை
களிப்புடனே சொல்லுகிறேன் கவனமாய் கேளீர்

மகிழ்மாறன், மதுரகவி, மழிசையர், பாணன்
மன்னன் மங்கை, பொய்கை, பூதம், பேயாழ்வார்
பார்புகழ் சேரருடன், தொண்டரடி பொடியார்
பட்டர் பிரான் மகிழ் பாகவதருடனே

ஆண்டாளுடன் ரங்க மன்னாரும் ஏறி
அந்தணர் கூடி ஜயஜய என்று
கருணை என்னும் பெரிய கடலினைத் தாண்டி
களிப்புடன் திருவரங்கம் வந்ததையா கப்பல்

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ கோவிந்தா


- கல்யாணபுரம். ஸ்ரீ.ஆர்.ஆரவமுதன்.

Wednesday, August 29, 2018

தமிழ் கடலில் சம்பந்தன் அலை



தமிழை பக்தியில் மொழி என்றவர் கத்தோலிக்கத் துறவியான தனிநாயகம் அடிகளார்.

கூடவே, சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழி உரிமை தமிழுக்கே உண்டு என்றவர் அவர். அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்,  திருவருட்பா பனுவல்கள், பெரிய புரானம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள் வேறெந்த மொழியிலும் இல்லை என்று சொன்னார்.  அவருக்கிருந்த பன்மொழிப் புலமை அதைச் சொல்லும் தகுதியை அவருக்கு ஈந்தது.

இருந்த போதும், தமிழும் அதன் சிறப்பும் என்றதும் பெரும்பாலானோர் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் உள்ள அழகுகளைக் காண்பதோடு நிறைவு கொண்டு விடுகின்றனர்.

சமயம் என்றதும் அது ஒரு குறிப்பிட்ட சாராருக்குரியது என்று நாமே நமக்குள் ஒரு எல்லையைப் போட்டுக் கொண்டு விடுகிறோம். பிரார்த்தனைப் பேழைகளைப் போல விளங்கும் அவைகளுக்குள் தான் எத்தனை எத்தனை விலை மதிக்கவொண்ணா திரவியங்கள்....தமிழால் நெய்த மென்பட்டு துகில் போலும் பனுவல்களின் மீது துலங்கும் ஆழி முத்துக்களைப் போலும் பொருள்களை; அதில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் எழிலை இங்கு நிரந்தரமாய் விரித்து வைக்க வேண்டும் என்று இப்பதிவு.

அதில் ஞான சம்பந்தனைத் தெரிவு செய்ததற்கு குறிப்பிட்ட சில காரணங்கள் உண்டு. இந்த மனிதன் ஒருவித தெய்வீக அம்சம் கொண்டவராகக் வரலாற்றில் குறிக்கப்பட்டாலும் தமிழோடு இசை பாடலை இணைத்தமை, மேலும் துறவறத்தை வற்புறுத்தும் சமணபெளத்த கோட்பாடுகள் தமிழ் பண்பாட்டிற்கு இயல்பாகாதன என்ற ஒற்றைக் காரணத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு சாதாரண வாழ்வினூடாக பக்தி இயக்கமாக சைவத்தை நிலைநாட்ட வல்லவராக இருந்தமை; அதனைத் தொடக்கி வைத்த முதல் மனிதராகவும் அதே நேரம் சிறு பிராயத்தினனாக இருந்து அற்புதங்களினூடாகவும் தன்னம்பிக்கையுடனான எதிர்ப்புகளினூடாக தான் சார்ந்த நெறியை நிலைநாட்டியமை; ஆகியன சில காரணங்களாகும்.

அத்தோடு சங்க காலத் தமிழரிடம் பிரதான இடத்தைப் பெற்றிருந்த இசை கூத்து நாடகம் நடனம் முதலான கலைகள் சமண பெளத்தரால் ஒதுக்கப்பட அதனை சைவசமயத்தோடு இணைத்தமை அவர் செய்த முக்கியமானதொரு கைங்கரியமாகும். இதனால் பக்திப்பாடல்கள் பண்னார் இசையுடன் கூடிய பக்திப் பாடல்களாகவும் சிவன் ஆடவல்லானாகவும் ஆலய சிற்பங்களில் நடன வடிவங்களைச் சித்திரிப்பனவாகவும் வளர்ச்சி பெற்றன. பண்ணார் இந்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே என்றும்; ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடய தோழனுமாய் என்றும்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் என்றும்; தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன் என்றும் இறைவன் அழைக்கப்படும் ஆற்றினை தேவார திருப்பதிகங்களில் காணலாம்.

கூடவே மன்னனைப்பாடு பொருளாகவும் புரவலனாகவும் கொண்டு இலக்கியம் படைத்த; சாதாரண மனித குலத்தின் பாடுகளையும் உணர்வுகளையும் கவிதைகளாக்கிய மரபுகளுக்கு மாறாக இங்கு இறைவனைப் பாடு பொருளாகவும் இறைவனுக்கு அத்தலத்தோடு தொடர்புடய தொன்மத்தின் அடிப்படையில் ஒரு அம்மையை மனைவியாக்கி பாடும் தன்மையும் எடுத்துக் காட்டப்பட்டு பெண்களும் இல்லறவியலும் வெறுத்தொதுக்கற்பாலன அல்ல என்ற கோட்பாட்டை பொதுமையாக்கி, கடவுளும் நம்மைப் போன்றவரே என்ற புது மரபினை இப் பக்தி இலக்கியம் அறிமுகப்படுத்தி வைக்கிறது.

இவரின் பக்தி இலக்கிய வகையைக் கண்டுகொள்ள உதவும் முக்கியமான இன்னொரு கூறு பாடல் வைப்பு முறையாகும்.இவை  10 10ஆக பதிக முறையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. முதலாம் திருமுறை 136 பதிகங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பதிகமும் 11 பாடல்களைக் கொண்டு மொத்தமாக1469 பாடல்களை உள்ளடக்கி இருக்கிறது. முதலாம் திருமுறையில் மாத்திரம் 88 கோயில்கள் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. 

பதிக ஒழுங்கமைப்பை பார்க்கும் போது அதில் ஒரு ஒழுங்கை அவர் பின்பற்றி இருப்பது தெரியவரும். முதல் 9 பாடல்களும் இறைவனின் பெருமையை நாட்டுவளத்தோடு இணைத்து சாற்றும். அதில்  10வது பாடலை சமண பெளத்த எதிர்ப்பினை சொல்வதற்காகப் பயன் படுத்தி உள்ளார். 10 பாடல்கள் முடிந்ததும் அப்பாடல்களை ஓதுவதால் உண்டாகும் பயன் 11வதாக கூறப்படும். சம்பந்தனால் இயற்றப்பட்ட இப்பாடல்களைப் பாடிப்பரவுவதால் பெறத்தக்க பயன்கள்  இன்னென்ன என தன்னம்பிக்கையோடு அவர் அதில் பட்டியல் இடுகிறார்.

இவரின் பதிகங்களில் ஆங்காங்கே காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமாக அவதானிக்கத் தக்கன. ஆங்காங்கே வீடுகள், மாடங்கள்,கருங்கல் மதில்கள்,  வீதிகள், ஆடல் பாடலுக்கான இசைக்கருவிகள், பெண்கள் அணியும் நகைகள், அவர்கள் செய்யும் அலங்கார வகைகள், முக ஒப்பனைகள் என வரும் குறிப்புகள் சுவாரிசமானவை.

இவர் பாடல்களில் பொதுமையாகக் காணப்படும் அம்சம் புராணக்கதைகள், மாதொருபாகனான சிவனின் தோற்றம், அவர் கோயில் கொண்டிருக்கும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த குண அழகு, அங்குள்ள மக்களின் இயல்பு, போன்றனவாகும். மிகக் குறிப்பிடத்தகுந்த சில பதிகங்களில் இறைவனிடம் தூது போவது போன்ற பாணியிலான தூது வகையிலான பாடல்களையும் பாடி இருக்கிறார்.

இவரின் பாடல்கள் பக்தி இயக்கத்தின் கோட்பாட்டுக் குரலாக கருதுமாறு அமைந்துள்ளன. இவர் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் பார்வைக்கு ஆட்பட்டு அதனுடய இலக்கிய முகவராகத் தொழில்பட்டமையைக் காண்கிறோம்.

ஞான சம்பந்தன் முதல் 3 திருமுறைகளைப் பாடி இருக்கிறார். சுமார் 4158 பாடல்கள். எல்லாவற்றையும் இன்னும் நான் வாசிக்கவில்லை. தமிழ் பக்தி இலக்கியம் என்ற புத்தகத்தில் அமைந்திருக்கிற சில பாடல்களில் நான் கண்டு களித்து உண்டு உயிர்த்தவற்றை இங்கு
* சம்பந்தனின்  தமிழ்,
* அதில் காணப்படும்  இசை நடன போன்ற நுண்கலைக் குறிப்புகள்,
* அவரிடம் இருந்த பெளத்த, சமண மத  எதிர்ப்பு,
* சில அவதானிக்கத் தக்க வரலாற்றுக் குறிப்புகள்
ஆகிய நான்கு  தலைப்புகளில் இங்கு பதிய ஆவல்.( தமிழ் பக்தி இலக்கியம், அ.அ. மணவாளன், சாகித்திய அகாதமி, புது தில்லி, 2004, கவுன்சில் நூலகம், வெண்ட்வேர்த்வில், 894.8111MAN)

ஞான சம்பந்தன் வாழ்க்கைப் பின்னணி:

சம்பந்தனைப் பற்றி அறிய கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாரின் பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்) பெரிதும் உதவுகிறது. சேக்கிழாருக்கு அதனை எழுத ஆதாரமாக இருந்தவை சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகை, மற்றும் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியுமாகும்.

இவர்களுடய கருத்துக்களில் இருந்து ஞான சம்பந்தன் பிராமண குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்து 3 வயதில் ஞானப்பால் உண்டதனால் அருள் ஞானம் கைவரப்பெற்று இறை பாடல்களை பாட ஆரம்பித்தார் என்றும்; இறைவனின் அருளால் பொற்தாளம் பெற்று தமிழ் திருப்பதிகங்களை இசையோடு பாடி; முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியன பெற்றார் என்றும்; முயலகன் நோய் தீர்த்தமை, பனி வாதையை நீக்கியமை, முத்துப் பந்தல் பெற்றமை, உலவாக் கிழியாகிய எடுக்க எடுக்க குறையாத பொற்கிழி பெற்றமை; இசைக்கு அடங்காத படி ‘மாதர் மடப்பிடி என்ற இறைவனின் பெருமையை விளக்கும் பாடலை பாடியமை; விடம் தீண்டியவரை எழுப்பியமை; வரட்சியினால் உயிர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை விரட்ட அன்னதானத்துக்கு இறைவனிடம் காசு பெற்றுக் கொடுத்தமை; பூட்டி இருந்த திருக்கதவைத் திறந்தமை; பாண்டிய அரசனின் வெப்பு நோயைத் தீர்த்தமை; அனல்வாதம் புனல் வாதத்தின் மூலம் சமண பெளத்தத்தை எதிர்த்தமை; புத்தநந்தி தேரர் என்ற பெளத்தரை வாதில் வென்றமை; இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்தமை ஆகிய இவைகளோடு தன் 16ம் வயதில் திருமண கோலத்தில் வந்திருந்த அத்தனை பேரோடும் இறைசோதியில் ஒன்றாகக் கலந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவைகள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என்று கொஞ்ச நாளாய் எனக்குள்ளே ஒரு சிந்தனை ஓடியது. இவைகளின் உண்மை பொய்களுக்கப்பால் இம் மனிதர் செய்த தமிழை அதன் அழகை; எழிலை; அதில் புதைந்து கிடக்கும் வரலாற்று முத்துக்களைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கக் கூடும் என்று தெளிந்ததால் இந்தப் பதிவு பதிவாகி மலர்கிறது.

தமிழோடு அவர் ஆடிய விளையாட்டுக்களை இங்கு பதிதல் கடினமாதலால் அது அது தனிப்பதிவாக வருகிறது. இங்கு அவருடய பாடல்களில் வந்துள்ள இசை நடன பாடல் குறிப்புகளையும் எவ்வாறு அவர் நாசுக்காகச் சமண பெளத்த எதிர்ப்பின் குரலைக் காட்டி இருக்கிறார் என்பதையும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சில வரலாற்றுக் குறிப்புகளையும் இனிக் காணுவோம்.

அவர் பாடலில் வரும் இசை நடனக் குறிப்புகள் தமிழின் அழகோடு துலங்குவதை பாருங்கள். இது திருவையாறு திருத்தலத்தைப் பற்றிப் பாடிய முதலாம் திருமுறைப்பகுப்புக்குட்பட்டது. அதில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் அமைந்த முதலாம் பாடல்

‘புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி
அறிவழிந்திட்டைம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சி
சில மந்தியதிலமர்ந்து மரமேறி 
முகில் பார்க்கும் திருவையாறே’

என்கிறார். மேலும்

‘ வேந்தாகி விண்னவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங் கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார் வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடும் திருவையாறே’

என்றும்

‘மேலோடி விசும்பணவி வியன் நிலத்தை
மிக அகழ்ந்து மிக்கு நாடும்
மேலோடு நான்முகனும் அறியாத
வகை நின்றான் மன்னுங் கோயில்
கோலாடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலாடச் சிலைச் சேயிழையார்
நடமாடும் திருவையாறே’

என்றும் வருதல் தமிழ் அழகியலோடு கூடிய நுண்கலை அமுதமன்ன வரலாற்றுக் குறிப்பெனலாம்.

சம்பந்தரின் பதிகங்களில் இசையுடன் தமிழைப் பாட வல்லதாக அமைத்தது ஒரு புறமிருக்க; நடனம் இசை குறித்த குறிப்புகள் ஆங்காங்கு இருக்க; அவரின் பதிகங்களில் ஒரு வித வைப்பு முறையும் அமைந்திருக்கக் காணலாம்.

வளரிளம் பருவத்தினனாக வரலாற்றில் குறிக்கப்படும் சம்பந்தனின் பாடல்களில் ஒரு வித தன்னம்பிக்கைப் பாங்கு மிளிரக் காணலாம். பத்துப் பதிகங்களைப் பாடிய பின் 11வதாக இதனைப் பாடுவதால் என்ன என்ன பலன்கள் கிட்டும் என்பதை தன்னம்பிக்கையோடும் ஒரு வித உறுதிப்பாட்டோடும் சொல்வதைக் காணலாம். உதாரணமாக

’ஒரு நெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே’ என்றும்; ( திருப்பிரமபுரம்,)
’நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாட நம்பாவம் பறையுமே’ (திருக்குற்ராலம்) என்றும்;

‘அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவாரவர்கள் போய் விண்ணுலகாழ்வரே’ என்றும்;

‘நந்தி நாம சமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்தேத்தவரெல்லாம்
பந்தபாசம் அறுக்கவல்லார்களே’ என்றும் உறுதி படச் சொல்லும் பாங்கினை அவர் பதிகங்களில் கானலாம்.

எத்தனை நாசுக்காகவும் அதே வேளை உறுதி பட தான் சார்ந்த மதம் பற்றிய உறுதியோடும் தூர நோக்கோடும் இவர்கள் இந்தப் பக்தி இயக்கத்தை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் தேவாரப் பாடல்களிலேயே பல சன்றுகள் உண்டு.

அன்பே சிவம் என்ற சைவ சமய வாய்மைக் கூறு இங்கு நடைமுறையில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இவர்களுடய ஒரே நோக்கு சைவத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதே. அதனை ஓர் இயக்கமாகவே இவர் வழிநடத்திச் சென்றிருக்கிறார். அதனை இங்கு அற்புதங்களினூடாகவும், வாதங்களில் வெல்வதனூடாகவும், அரச ஆதரவோடும் சைவம் தழைத்தமையையும் அதற்கு முன் உதாரணமாகச் சம்பந்தர் திகழ்ந்தார் என்பதையும் காண்கிறோம். அனல்வாதம் புனல்வாதம் என்பவற்றினூடாகவும் தோற்பவர் கழுவேற்றப்பட்டார் என்ற சேக்கிழாரின் பெரியபுராணத் தகவலூடாகவும் இத்தகைய எதிர்ப்புகள் எவ்வாறு வன்முறை சார்ந்து  இடம்பெற்றிருக்கக் கூடும் என்பதை ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.

சம்பந்தர் பாடல்களிலும் அந்த எதிப்புணர்வு நாசுக்காக வெளிப்படக் காணலாம். அதனை அவர் திட்டமிட்டே தன் பதிகங்களில் புகுத்தி இருக்கிறார்.

‘தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற் களைந்து அடியினை அடைந்துய்மின்’ என்றும்;

‘புத்தரோடமணைவாதி லழிவிக்கும் மண்ணல்’ என்றும்;

‘வெஞ்சின அவுணரொடு முருமிடியு மின்னு
மிகையான பூதமவையும் அஞ்சிடும்’என்றும்;

‘குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாங்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே’ என்றும்;

‘விதியிலாதார் வெஞ்சமணர் சாத்தியரென்றிவர்கள்
மதியிலாதார் என் செய்வரோ வலிவலம் மேயவனே’

என்றும் இவ்வாறு எண்ணற்ற  செய்திகளை அநேகமாக அனைத்துப் பதிகங்களிலும் 10வது பதிகமாக வைத்துச் சொல்லிவரும் ஆற்று நோக்கற்பாலது.

இவ்வாறு சம்பந்தன் என்றொரு புதிய அலை அரச ஆதரவோடும் அற்புதங்கள் என்ற வகைப்பாடு கொண்டும் வாழ்வியல் சிந்தனைகளைப் புரட்டிப் போடும் சிந்தனைக் கூறுகளோடும் சமய உள்ளடக்கத்தோடும் தமிழ் இலக்கிய வரலாற்றில் புரட்சி அலையாக புதிய அலையாக பொங்கி வரக் காண்கிறோம்.

தொடரும்....