Friday, August 27, 2010

மின்னாமல் முழங்காமல் வந்த மழை


லைசன்ஸைப் பார்த்துப் பார்த்து போய்க் கொண்டே வேலைத்தலம் போய்ச் சேர்ந்தேன் என்று சொன்னேன் தானே! அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இதை.


இப்போது கொஞ்சம் என் வேலை இடத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஒரு அரச திணைக்களம்.தபால் திணைக்களம்.பல்லாயிரம் ஊழியர்கள் கண்டம் முழுவதும் வேலையில் இருக்கிறார்கள்.அதில் நான் ஒரு சிறு துளி.அது மக்களுக்குப் பல பிரிவுகளில் பல சேவைகளை வழங்குகிறது.நான் வேலை செய்கின்ற பிரிவின் பிரதான வேலை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வருகின்ற போகின்ற தபால்கள்,பாசல்களைப் பெற்று அவற்றை பிரித்து பகுத்து (உட்பிரிவுகளின் படி)அவர்களுக்கு அனுப்பி வைப்பது காலையில் வேலை செய்கின்றவர்களுடய வேலை.(5 மணி நேரம்.6-11)

மாலையில் 5 மணி நேரம் வேலை செய்கின்றவர்கள் காலையில் பிரித்து வைத்து விட்டுப் போன தபால்கலைத் திணைக்கள ஊழியர் மூலமாகக் கொடுத்தனுப்பி விடுவதும்,அவர்களிடம் இருந்து வருகின்ற தபால்கள்,பாசல்கள்,உள்நாட்டு வெளிநாட்டு கடுகதிக் கடிதங்கள் போன்ற வற்றை அவர்களுக்கான சலுகை விலையில் கணனியில் பதிவு செய்வதும்;ரசீதை அவர்களுக்கு அன்றே அனுப்பி வைப்பதும் அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப தபால் திணைக்களத்து பொருட்களைக் கொள்வனவு செய்து அனுப்பி வைப்பதுமாகும். சில வேளைகளில் அவசர காரியமெனில் கூரியரை ஒழுங்கு படுத்தி அந்த பொருள் குறிப்பிட்ட நேரம் போய்ச் சேர ஒழுங்கு செய்வதும் மாலையில் வேலை செய்பவரது பொறுப்பு.

நான் சொனி நிறுவனத்துக்கும் அரச பாதுகாப்பு திணைக்களத்துக்குமான வெளியே செல்லும் தபால்களுக்குப் பொறுப்பாக இருந்தேன்.(இது நான் சொல்வது சுமார் 10 வருடங்களுக்கு முந்திய கதை)

இந்தச் சந்தர்ப்பத்தில் பல நூற்றுக்கணக்கான அரச தனிப்பட்ட நிறுவனங்கள் பல ஒப்பந்த அடிப்படையில் நம் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட படியால் அவர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப் பட்டிருந்தன. திடீரென நம் தலைமையகம் இவற்றைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பகுதி வேலைகளை விற்று விட்டது. அதனால் அங்கு வேலை செய்த தபால் திணைக்களத்து ஊழியர்களுக்கு 3 வாய்ப்புகளைத் தந்திருந்தார்கள்.

1.குறிப்பிட்டளவு சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு வேலையில் இருந்து நீங்கிச் செல்லலாம்.
2.புதிய நிறுவனத்தோடு அதே அளவு சம்பளத்தில் சேர்ந்து கொள்லலாம்.
3. வேறு இடத்துக்கு மாற்றம் தரும் வரை தாமதிக்கலாம்.

நான் 3 வது தீர்மானத்தை எடுத்திருந்தேன்.(அது பிரித்தானிய கொலனிக்குள் நம் நாடு இருந்ததன் எச்சம்.:)

அதனால் இப்போது எனக்கு என் வேலையோடு, புதிய நிறுவனத்துக்கு வேலையைக் கற்றுக் கொடுக்க வேண்டிய வேலையும் இருந்தது.5 மணி நேரம் என்பது தரப்பட்டிருக்கின்ற வேலையைச் செய்து முடிக்கவே போதுமானதாக இருக்கும். அதற்குள் புதிதாதச் சில வேலைகளும் சேர்ந்து கொள்வதால் 12 - 5 மணி வரையுமான வேலை சில வேளைகளில் கூடுதலான நேரத்தையும் எடுக்கும். ஆனாலும் வரவுப் பதிவேட்டில் 12 - 5 என்றே பதிந்து செல்வது வழக்கம்.நானே ராணி நானே பொறுப்பு என்பதால் வந்த ஒரு வித பொறுப்புணர்வு என்று சொல்லலாம்.எப்போவாவது இருந்து விட்டு முகாமையாளர் வருவார். நலமா? வேலை எப்படி? என்று கேட்டு விட்டுப் போவார். அவ்வளவு தான். வேலை கை நழுவிப் போக இருப்பதால் வந்த அசிரத்தை என்றும் இதனைக் கொள்ளலாம்.

இனி விடயத்துக்கு வருகிறேன்.(ஆலாபனை எல்லாம் முடிந்து விட்டது)வழமை போல் வந்து கையெழுத்திட்டுப் பொருட்களைப் பொறுப்பேற்று வேலை ஆரம்பித்து சுமார் 2 மணி நேரம் இருக்கும். என் முகாமையாளர் மைக்கல் பிறவுன்( எங்கள் முன்னாள் பிரதமர் கெவின் ரட் மாதிரி இருப்பார்) வந்தார். எமக்கிடையிலான் உரையாடல் கீழ் கண்டவாறு இருந்தது.

நலமா யசோதா?
நலம் நீங்கள் எப்படி மைக்?
(அதற்குப் பதில் இல்லை)வேலை எப்படிப் போகிறது?
வழமை போல.
பிரச்சினை ஏதேனும் உண்டா?
இது வரை இல்லை. சுமூகமாகப் போகிறது.
புது நிறுவனத்தினர் உன்னோடு எப்படி நடந்து கொள்கிறார்கள்.
நட்போடும் ஒத்துழைப்போடும்.
நேரம் உனக்குப் போதுமானதாக இருக்கிறதா?
சற்றுக் கடினம் தான் ஆனாலும் சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது.
முழு நேரமாக வேலை செய்ய உனக்குச் சம்மதமா?
என்ன? போஸ்டிலா?
ஆம் நாளையில் இருந்து உன்னால் அதனை ஆரம்பிக்க முடியுமா?
!!!!!!உண்மையாகத் தான் கேட்கிறாயா?
ஆமாம். ஒருவர் ராஜினாமாச் செய்திருக்கிற படியால் அதனையும் சேர்த்து நீ செய்ய வேண்டி இருக்கும்.
நேரம்?
9 - 5.
நிச்சயமாக. என்னை நீ தெரிவு செய்ததற்கு நன்றி.
நாளை காலை வேலை ஆரம்பிக்கு முன்பாக என் காரியாலையத்துக்கு வந்து உன் நியமனக் கடிதத்தைப் பெற்றுச் செல்.வாழ்த்துக்கள்.

முழு நேர வேலைக்குத் தவம் கிடந்த நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

மின்னாமல் முழங்காமல் பெய்த மழை அது.

அது என் வாழ்வுக்கான சுபீட்சமான பாதை திறக்கப் பட்ட நாள்.

நவம்பர் மாதம் 22ம் திகதி.

Thursday, August 19, 2010

லைசன்ஸ் எடுத்த கதை


சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை படித்தேன். அது சுரேந்திரநாத் என்பவர் எழுதிய தீராக் காதல் என்ற கதை.அது இப்படித் தொடங்குகிறது."கடவுள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒழித்து வைத்திருப்பார்.எனக்கு அது..." என்று ஆரம்பிக்கும்.

என்னுடய வாழ்விலும் வந்த ஓர் அற்புதமான தருணம் இது.அப்போது நான் பகுதி நேரமாக பிற்பகல் 12 மணி தொடக்கம் 5 மணிவரை வேலைக்கு (நகர் புறம் என்பதால் தொடர் தொடரூந்தில்) பயணித்துக் கொண்டிருந்த காலம்.அதனால் காலையில் இருந்த நேரத்தை கார் பழகுவதற்கு ஒதுக்கிக் கொண்டேன்.ஒரு மணி நேரம் பழக 35 டொலர்கள் கொடுத்து பழகிப் பரீட்சைக்கு மேலும் காசு கட்டி பரீட்சை நேரம் ஓடுவதற்காக காருக்கு வாடகையாக(பழகிய கார் என்றால் ஓடுவது சுலபமில்லையா)மேலும் பணம் கொடுத்து பழகிய காரையே வாடகைக்குப் பெற்று, பரீட்சைக்கு முதல் 2 மணி நேரம் பயிற்சியும் பெற்றுத் தயாராகக் காரியாலயத்தில் குந்தியாயிற்று.

பரீட்சகர் வெளியே வந்து என்னை வருமாறு அழைத்த கையோடு எனக்குப் பதட்டம் ஆரம்பமாயிற்று.என் பயிற்சியாளரிடம் வாழ்த்தினையும் திறப்பையும் பெற்றுப் பரீட்சகருடன் நடந்து வெளியே வந்தேன்.காரை எடுக்குமாறு கூறினார் பரீட்சகர். எனக்கு காரை எப்படித் திறப்பதெனத் தெரியவில்லை.பாருங்கள் பல மாதங்கள் பயிற்சி பெற்ற அதே காருக்கு எப்போதும் திறந்தவாறே கார் இருப்பதால் எனக்கு காரை திறக்கும் வழி தெரியவில்லை.(றிமோட் கொன்றோல்)அட இந்தச் சின்ன விடயம் கூட எனக்குத் தெரியவில்லையே என்று மனம் அலுத்துக் கொண்டது.நான் முழித்துக் கொண்டு நிற்க,போய் உன் பயிற்சியாளரை அழைத்து வா என்றார் பரீட்சகர்.மனம் கணக்குப் போட்டது.சரி ஒரு பிழை.முதற் கோணல் முற்றும் கோணலாயிற்றே.மனம் சோர அவரை அழைத்து வந்தேன்.

அவர் வந்து அசட்டுப் புன்னகையோடு திறந்து விட,காரை ஸ்டாட் பண்ணினேன். காரியாலய வளாகத்தை தாண்டி இடது புறம் திருப்பு என்று ஆணை பிறந்தது.அந்த இடத்தில் இருந்த ஸ்ரொப் சைன்னுக்கு கிவ் வே கொடுத்து இடது புறம் திருப்பினேன்.ப்ரீட்சகர் அதனைக் குறித்துக் கொண்டதை 'மூன்றாவது கண்'கவனித்துக் கொண்டது.மனம் அடச் சீ 2 வது பிழை என்றது. தொடர்ந்து கொமாண்டிங் தந்து கொண்டே இருந்தார் பரீட்சகர்.

முன்னால் தரித்து நிற்கிற காருக்குப் பின்னால் றிவேர்ஸ் பாக் செய்து விட்டு நீ சரி என்று நினைத்த பின் எனக்குக் கூறு என்றாள். இதற்கு மிகக் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் சற்று நான் இடறுகின்ற இடம் இது. எனவே வலு அவதானமாகவும் ஆறுதலாகவும் சரியாகவும் பாக் பண்ணினேன்.அதில் எனக்கொரு ஆறுதல்.கெட்டிக்காரி என்று எனக்கு நானே மனதுக்குள் ஒரு சான்றிதழையும் கொடுத்து விட்டு பாக் பண்ணியாயிற்று என்றேன் கியர் றிவேஸில் இருக்கத் தக்கதாக.சரி இனி எடுக்கலாம் என்றாள். கியரை டிறைவ்வுக்குக் கொண்டு வரும் போது நினைத்தேன். சரி மூன்றாவது பிழை.

அதன் பின் மனம் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வந்திருந்தது. சரி இம்முறை லசென்ஸ் கிடைக்கப் போவதில்லை.அடுத்தமுறை கவனமாக பார்ப்போம் கிட்டத் தட்ட 120 டொலர்கள் கொடுத்து 3 தவறுகளைப் படித்திருக்கிறேன் என்று மனம் தீர்ப்பினை வழங்க, அதன் பின் தெளிவான நிதானத்தோடு கார் சுமூகமாக ஒரு தவறுகளும் நேராமல் இருப்பிடத்தை வந்தடைந்தது.

தீர்ப்புக்குக் காத்திருக்கின்ற அப் பொழுதில் பயிற்றுனர் பரீட்சை எப்படி என்று கேட்டார். நான் மூன்று தவறுகளைச் சொன்னேன்.மனம் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தது.அது தன்னை எப்போதும் சிறப்பாகத் தயார் படுத்திக் கொள்கிறது.மனதுக்குத் தெரியாத தவறு என்று ஒன்று இருக்கிறதா என்ன? அது தன்னைச் சரியாக இடம், சூழல், நிலைமை - இவற்றிற்கமைவாகத் தன்னைத் தானே சிறப்பாகத் தகவமைத்துக் கொள்கிறது.

மறு நாள் பயிற்சிக்கு நேரத்தை பயிற்றுனரிடம் குறித்துக் கொண்டு, தொடர்ந்து சிற்றிக்கு வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் நானே காரை ஓட்டி ரயில் நிலையம் வரை போகிறேன் என்று அவரிடம் வேண்டுகோளையும் விடுத்து விட்டுக் காத்திருந்தேன். 10 நிமிடங்களின் பின் அழைப்பாணை வந்தது.

பதில் இவ்வாறு இருந்தது."கொன்கிறாஜுலேஷன்ஸ்.யூ பாஸ்ட் த டெஸ்ட்".

ஒரே தடவையில் சித்தியடைந்த என் மன நிலையைப் பிறகு சொல்லவும் வேண்டுமா?

குதூகல மனதோடு அந்தப் புதிய லசென்ஸை அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டே வேலைக்கும் போய்ச் சேர்ந்தேன்.காணுகின்ற மனிதர்கள்,மரங்கள்,வாகனங்கள் எல்லாம் அழகாக இருந்தன.நானும் ஒரு கார் வாங்கி....என்று கற்பனை விரிய பிடித்தமான கார், வண்ணம், மொடல் என்று மனம் ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

உண்மையில் கார் லசென்ஸ் என்பது, புது உலகுக்கான திறப்புத் தான்.சுதந்திரம் கைப்பிடிக்குள் வந்த நாள் அது.

கொஞ்சம் பொறுங்கோ, அடுத்த வாரம் வரை.சொல்ல இன்னுமொரு பாதி இருக்கிறது. அது அடுத்த வாரம் தொடரும்.அதையும் சொன்னால் தான் இந்த நாளின் அற்புதம் பூரணமாகும்.:-)

Wednesday, August 11, 2010

ஒரு பயணக் குறிப்பு


கடந்த ஒரு வாரமாக இது வரை தோன்றியிராத ஓர் உருப்படியான கேள்வி எனக்குத் தோன்றியது.அது உணவுண்ணும் போதும் தனியாக வேலை செய்கின்ற போதும் உறக்கத்துக்குப் போகும் போதும் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கேள்வி இது தான்.

நான் ஏன் எழுதுகிறேன்?

ஒரு விதமான தேடலா என்று கேட்டால் அதற்கு இல்லை என்றே பதில். ஏனென்றால் ஓர் அசாதாரணமான வடிவத்தில் வர்ணப் பேனாவோடு தனியாக ஒரு கொப்பி இருக்கிறது பிடித்தவற்றை எல்லாம் எங்கெல்லாம் காண்கிறேனோ அப்பப்போது இதில் மறக்காமல் பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.பேப்பர் கட்டிங்குகள் என்று வேறு தனியாக இருக்கிறது.தவிரவும் மற்றவர்கள் பார்வைக்குக் கிட்டாத வகையில் ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறேன். கட் அண்ட் பேஸ்ட் பண்ணிப் பத்திரப் படுத்த.ஆதலால் தேடலுக்கு இல்லை என்பதே பதில்.

எல்லோரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேனா என்று கேட்டால் அதற்கும் ம்......இல்லை என்றே பதில்.ஆனால் எனக்குப் பிடித்த பதிவர்கள் பின்னூட்டினால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

பொழுது போக்க? ம்கூம்.அவசரமான பல வேலைகளைக் கூட ஆறப் போட்டுவிட்டு இதற்குள் இருந்திருக்கிறேன்.முடிந்தவரை ஒவ்வொரு புதனும் பதிவு போட வேண்டும் என்று முனைப்பாக ரொம்பப் பொறுப்பாக இருந்திருக்கிறேன்.

வேற......தெரியேல்ல.

இதுவும் ஒரு விதமான பனிக்குணமாக இருக்கலாம்.

இது வரை அதற்குப் பதிலே கிடைக்கவில்லை.இந்த யோசனைக்குத் தொடரும்... போட்டு விட்டிருக்கிறேன்.

சரி போகட்டும்.என்னுடைய பதிவுகள் சராசரியாக எப்படி இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன்.ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை ஒரு சித்தாந்த தத்துவார்த்தமானவையாக இருக்கின்றன.ஆனால் எனக்குப் பிடிப்பவை எது என்று கேட்டால் தங்களைத் தாங்கள் யார் என்று வெளிப்படுத்துபவையாக இருக்கின்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கின்றன.எனக்குப் பிடிக்கின்ற பதிவுகளுக்கும் என்னுடய பதிவுகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இருப்பது அப்போது புலப்பட்டது.என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது.நான் சற்று மாற வேண்டி இருக்கிறதோ என்று தோன்றுகிறது.விருட்சமாய் வளர்ந்து நிற்கிற நான் ஐ பிடிங்கி வேறொரு விதமாய் நட்டு விட முடியுமா என்று உள்ளே ஒரு அசரீரி கீட்கிறது:)ஓம் ஓம் என்கிறது மனம்.

ஆனாலும் சற்றே இலகுவாக ஏதாவது இன்று எழுதலாம் என்று மனதுக்கும் எனக்கும் ஒரு உடன்பாடு தோன்றி இருக்கிறது இன்று.

நேற்றய தினம் வேலையால் வரும் போது மழைத் தூறலும் இருட்டுமாக இருந்தது.90 zoon இல் 4 லேன்களில் போய்க் கொண்டிருந்த வாகனங்களும் அதே வேகத்தில் வந்து கொண்டிருந்த 4 லேன்களின் வாகனங்களும் ஓரே சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன.எதிர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த வாகனங்களில் சில தம் ஹெட் லைட்டினால் சிக்னல் போட்டுக் காட்டிக் கொண்டு போயின.அது ஒரு வித வாகனப் பண்பாடு. வீதிப் பண்பாடு என்று சொல்வது கூடுதல் பொருத்தம்.ட்றைவர்களுக்கு மட்டுமே தெரிந்த பாஷை அது. 'வாகனப் பொலிஸார் எங்கேயோ நிற்கிறார்கள் கவனம்' என்பது அதன் அர்த்தம்.என் வேகத்தைப் பார்த்தேன் சராசரியாக 90ல் இருந்ததில் மகிழ்ச்சி.

(ஒரு முறை இப்படித்தான் தமிழர் ஒருவர் வாகனப் பொலிசார் நிற்கிறார்கள் என்று எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு லைட்டினால் சைகை காட்டினாராம் பகல் பொழுது அது.அவர் சைகை காட்டிய வாகனம் மப்டியில் வந்து கொண்டிருந்த பொலிஸ் வாகனமாம்.அதனால் பொலிஸ் அவரை நிறுத்தி ஏன் லைட் சைகை காட்டினாய் என்று கேட்க இவர் ஒரு மாதிரியாகச் சமாளிக்க அது நல்ல வேடிக்கையாக இருந்தது என்றார்.)

நினைத்தது போல் கிட்டத் தட்ட 10 மைல் தள்ளி இருட்டுக்குள் சிவப்பு நீல வெளிச்சம் தெரிந்தது.மிகவும் மறைவான இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த காரில் இருந்து அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.அருகை நெருங்கிய போது பிடிபட்டிருந்த ஒரு காரும் நீலச் சீருடைப் பொலிஸாரும் தெரிந்தனர்.பிடி பட்டிருந்த மனிதர் 3 பொயிண்ட்ஸ் ஐயும் 350 டொலர்களையும் இழந்ததுடன் சற்றே தன் வேலைக் களைப்போடு நின்மதியையும் தொலைத்திருப்பார் என்று தோன்றியது.வோனிங் சைன் தந்த வாகனங்களை - அதன் டைறைவர்களை நன்றி சொல்லத் தோன்றியது இப்போது எனக்கு.மொத்தமாக எல்லோருக்கும் இருக்கின்ற 11 பொயின்ஸ்சும் இழக்கப் படாதிருந்த 350 டொலர்களையும் நினைத்துப் பார்த்தேன்.நின்மதியாக இருந்தது.

நின்மதியை எது எது எல்லாம் தீர்மானிக்கிறது பாருங்கள்!

Wednesday, August 4, 2010

வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்


"வாழ்க்கைக்கான பாடம் வகுப்பறைக்கு வெளியே தான் இருக்கிறது"என்று சொல்வார்கள்.அதனை யாரும் சொல்லித் தருவதில்லை. நாமே சமூகம்,சூழல்,குடும்பம், நண்பர்கள்,அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றனர். நல்ல நண்பர் வட்டம் வேண்டும் என்றனர்.குடும்பங்களுக்குள் வன்முறை கூடாதென்றனர்.அறம், பண்பாடு,சமயங்கள் தோன்றின.சட்டங்கள்,தண்டனை முறைகள் பிறந்தன.ஒழுங்கும் விதியும் அமுல்படுத்தப் பட்டன.

புலம் பெயர்ந்த பின்பும், சமூக ஊடாட்டத்தின் போதும், வாழ்க்கை தந்த அனுபவங்களின் போதும் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ஒருவர் தன் பிள்ளையைத் தன் காலில் தான் நிற்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான்.அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி; பணமுள்ளவராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி;கல்வியறிவுள்ளவராக இருந்தாலும் சரி இல்லாதவராக இருந்தாலும் சரி;மன உறுதியும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலுவும் உள்ள பிள்ளையாக; தனக்கு தன் தேவைகள் விருப்பங்கள் இவற்றை இனங்கண்டு கொள்ளத் தக்க பிள்ளையாக - அதில் தெளிவான தீர்மானம் உள்ள பிள்ளையாக;இலக்கினைக் கண்டடைந்து அதை நோக்கி பயணிக்கும் திடமுள்ளவனாக; உறுதியாக பிரச்சினைகளை எதிர் கொள்ளும் தீரம் மிக்கவனாக;வெற்றியில் நிதானமாய் இருக்கத் தக்கவனாக;தோல்வியில் துவண்டு போகாதவனாக; அப்பிள்ளை இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமூகத்தையும் வாழ்க்கையின் சுக துக்கங்களையும் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்; மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையையும் பிறர் கையில் எதற்கும் தங்கியிருக்காத தன்மையையும் தன்னைப் புரிந்து கொள்ளும் தெளிவையும் அதே நேரம் அன்பு, மனிதப் பண்பு,எளிமை,சினேகிதத்துவம்,சேவை போன்ற பண்புகளையும், பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.தவறுகளில் இருந்து எழுந்து நடக்கும் வித்தை தெரிந்தவனாக பிள்ளை வளர வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது.அதனை அடையாளம் கண்டு அதில் அவன் தன் ஆற்றலைக் காட்ட பெற்றோர் உதவ வேண்டும்.புலம் பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகள் பாடசாலை தவிர விளையாட்டு, ரியூஷன், நீச்சல், கலை அதிலும் வின்ரர் விளையாட்டு சமருக்கு வேறு விளையாட்டு என பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லாமல் அவர்களது நேரங்கள் பெற்றோரால் களவாடப் படுகின்றன. பெற்றோரின் ஆசைகள் எல்லாம் பிள்ளையில் திணிக்கப் படுகின்றன. அதிலும் ஒரு பிள்ளையாக மட்டும் இருந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

தன் பிள்ளை எல்லாவற்றிலும் திறமை உள்ளவனாக வர வேண்டும் என்று பெற்றோர் ஆசைப் படுவது இயல்பு தான். ஆனால் பிள்ளை பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதும் கவனிக்கப் பட வேண்டியது முக்கியம்.கல்வி கற்கும் இயந்திரமாக பெற்றோர் ஆட்டி வைக்கும் பொம்மையாக பெற்றோரின் ஆசைகளின் வடிகாலாக இருப்பதால் பிள்ளை வளர்ந்த பின் பணம் கொட்டும் ரெல்லர் மெஷினாக மட்டுமே இருப்பான்.மகிழ்ச்சியை அவன் டொலரில் தான் காண வேண்டியிருக்கும்.

பிள்ளைக்கு இல்லாத ஒரு கனவுலகத்தை சிருஷ்டித்துக் காட்டும் பெற்றோரும் உள்ளார்கள்.பணத்தின் மதிப்பு,தம் தேவைகள் எது என்பது பற்றிய தெளிவு,சிக்கனம் இவைகளும் கவனிக்கப் படவேண்டியவை.தமக்குரிய கஷ்டங்களை மறைத்து தம் தகுதிக்கு மீறி பிள்ளைக்கு வேண்டுவனவற்றை எல்லாம் கொடுத்து வாழ்க்கையைப் பற்றிய தவறான முன்னுதாரணமாக அவர்கள் ஆகி விடுவதுமுண்டு.இதனால் திடீரென ஒரு சரிவு வரும் போது அதனை பிள்ளையால் எதிர் கொள்ள முடியாது போய் விடக் கூடும்.சில வேளை பணமில்லாவிட்டாலும் படம் பார்க்கப் போக வேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றக் கூடும்.ஒரு வேளை உணவை விட ஒரு பிள்ளைக்கு புது உடுப்பு கூடுதலான தேவையாக இருக்கக் கூடும்.அதனால் இயல்பாக இருப்பதும் அதனை பிள்ளைக்கு தெளிவாக காட்டுதலும் கூட முக்கியமானது தான்.கனவுகளைக் காணட்டும் ஆனால் யதார்த்தத்தில் இருக்கட்டும்.Think globaly;Act localy.

கலையோ விளையாட்டோ ஏதாவது ஒன்றில் - அது பிள்ளைக்கு மட்டும் பிடித்தமானது எது என்பதைக் கண்டு அதில் மட்டும் அவனை ஈடு படுத்தினால் பிள்ளைக்கு நேரம் மிச்சமாவதுடன் முழுவதுமாக ஒரு விடயத்தில் தன் ஈடுபாட்டைக் காட்டவும் அது ஏதுவாக இருக்கும்.சில வேளை தனிமையும் கலை மூலமான வெளிப்பாடுகளும் சிறந்த மன வலி நிவாரணி என்பதை பெற்றோர் அறிவது நலம். குடும்பத்துக்கான நேரமும் அதே முக்கியத்துவத்தோடு உணரப்பட வேண்டியது தான்.

அண்மையில் இளம் குடும்பஸ்தரான பொறியியலாளர் (2 ஆண் குழந்தைகளின் தந்தை) குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சொல்வது என்ன? கல்வி,வேலை, வீடு, குடும்பம் எல்லாம் இருந்தும் மனப்பலம் இல்லாமையும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பலமின்மையும் அம்மனிதரை இறப்புக்குத் தூண்டி விட்டது போலும்.

இங்கு கல்வி இருந்து பயனென்ன? கல்விக்கூடங்கள் எதனை நமக்குக் கற்றுத் தருகின்றன? அங்கு விடு பட்ட விடயங்களான மன உறுதி, பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலு,சமூக அழுத்தங்கள்,சமூகத்தின் இயல்புகள், தன்னை அறிதல்,தன் மீது நம்பிக்கை கொள்ளுதல்,சுயமரியாதை,மகிழ்ச்சியின் பாதை,வாழ்க்கையின் மாற்றங்கள் வளர்ச்சிகள் சிதைவுகள் -போன்ற இயல்புகளை எதிர் கொள்ளுதல் எவ்வாறு,போன்ற விடயங்களை நாம் எங்கிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம்? விடுபட்டிருக்கின்ற இத்தகைய விடயங்களைப் பிள்ளைகளுக்கு யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

இதில் இருக்கின்ற ஒரு ஆபத்து என்னவென்றால் சமூகத்தில் இருக்கின்ற பண்பாட்டுக் கோட்பாடுகளும் பெண்கள் மீதான அழுத்தங்களும்,பொருளாதாரம் ஒருவரிடம் மட்டும் குவிந்திருப்பதும் மக்களிடம் சிலவற்றுக்கெதிராக எதிர்த்து நிற்கும் வலுவைக் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையை வளர்க்க அவை உதவவில்லை.அதனால் பலமிழந்தவர்களாக சமூக நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப் படுபவர்களாகவே பலர் உள்ளனர்.வாழ்க்கையோடு சமரசம் ஏற்றுக் கொள்வதோடு அல்லது சகித்துக் கொள்வதோடு முடிவுக்கு வருகிறது.மகிழ்ச்சியற்ற முகங்களுக்கு சமூகம் ஏற்றுக் கொள்ளத் தக்கதான முக மூடிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.வாழ்க்கை வண்ணமயமானது என்று சமூகத்துக்குக் காட்டுவதிலேயே காலம் கரைந்து விடுகிறது.மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் எதிர்கொள்ளவும் யாரும் தயாராயில்லாமல் இருக்க கல்வியும் தன் பங்கை ஆற்றி இருக்கிறது.

அண்மையில் வாசித்த ஆப்பிரகாம் லிங்கன் பாடசாலைக்கு தன் மகனை அனுப்பிய போது ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்ததென்றே தோன்றுகிறது.இது தான் அவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.

பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.

டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.

புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.

இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.

எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.

துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.

உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன் மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.

எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.

தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.