Wednesday, August 29, 2018

தமிழ் கடலில் சம்பந்தன் அலைதமிழை பக்தியில் மொழி என்றவர் கத்தோலிக்கத் துறவியான தனிநாயகம் அடிகளார்.

கூடவே, சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழி உரிமை தமிழுக்கே உண்டு என்றவர் அவர். அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்,  திருவருட்பா பனுவல்கள், பெரிய புரானம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள் வேறெந்த மொழியிலும் இல்லை என்று சொன்னார்.  அவருக்கிருந்த பன்மொழிப் புலமை அதைச் சொல்லும் தகுதியை அவருக்கு ஈந்தது.

இருந்த போதும், தமிழும் அதன் சிறப்பும் என்றதும் பெரும்பாலானோர் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் உள்ள அழகுகளைக் காண்பதோடு நிறைவு கொண்டு விடுகின்றனர்.

சமயம் என்றதும் அது ஒரு குறிப்பிட்ட சாராருக்குரியது என்று நாமே நமக்குள் ஒரு எல்லையைப் போட்டுக் கொண்டு விடுகிறோம். பிரார்த்தனைப் பேழைகளைப் போல விளங்கும் அவைகளுக்குள் தான் எத்தனை எத்தனை விலை மதிக்கவொண்ணா திரவியங்கள்....தமிழால் நெய்த மென்பட்டு துகில் போலும் பனுவல்களின் மீது துலங்கும் ஆழி முத்துக்களைப் போலும் பொருள்களை; அதில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் எழிலை இங்கு நிரந்தரமாய் விரித்து வைக்க வேண்டும் என்று இப்பதிவு.

அதில் ஞான சம்பந்தனைத் தெரிவு செய்ததற்கு குறிப்பிட்ட சில காரணங்கள் உண்டு. இந்த மனிதன் ஒருவித தெய்வீக அம்சம் கொண்டவராகக் வரலாற்றில் குறிக்கப்பட்டாலும் தமிழோடு இசை பாடலை இணைத்தமை, மேலும் துறவறத்தை வற்புறுத்தும் சமணபெளத்த கோட்பாடுகள் தமிழ் பண்பாட்டிற்கு இயல்பாகாதன என்ற ஒற்றைக் காரணத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு சாதாரண வாழ்வினூடாக பக்தி இயக்கமாக சைவத்தை நிலைநாட்ட வல்லவராக இருந்தமை; அதனைத் தொடக்கி வைத்த முதல் மனிதராகவும் அதே நேரம் சிறு பிராயத்தினனாக இருந்து அற்புதங்களினூடாகவும் தன்னம்பிக்கையுடனான எதிர்ப்புகளினூடாக தான் சார்ந்த நெறியை நிலைநாட்டியமை; ஆகியன சில காரணங்களாகும்.

அத்தோடு சங்க காலத் தமிழரிடம் பிரதான இடத்தைப் பெற்றிருந்த இசை கூத்து நாடகம் நடனம் முதலான கலைகள் சமண பெளத்தரால் ஒதுக்கப்பட அதனை சைவசமயத்தோடு இணைத்தமை அவர் செய்த முக்கியமானதொரு கைங்கரியமாகும். இதனால் பக்திப்பாடல்கள் பண்னார் இசையுடன் கூடிய பக்திப் பாடல்களாகவும் சிவன் ஆடவல்லானாகவும் ஆலய சிற்பங்களில் நடன வடிவங்களைச் சித்திரிப்பனவாகவும் வளர்ச்சி பெற்றன. பண்ணார் இந்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே என்றும்; ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடய தோழனுமாய் என்றும்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் என்றும்; தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன் என்றும் இறைவன் அழைக்கப்படும் ஆற்றினை தேவார திருப்பதிகங்களில் காணலாம்.

கூடவே மன்னனைப்பாடு பொருளாகவும் புரவலனாகவும் கொண்டு இலக்கியம் படைத்த; சாதாரண மனித குலத்தின் பாடுகளையும் உணர்வுகளையும் கவிதைகளாக்கிய மரபுகளுக்கு மாறாக இங்கு இறைவனைப் பாடு பொருளாகவும் இறைவனுக்கு அத்தலத்தோடு தொடர்புடய தொன்மத்தின் அடிப்படையில் ஒரு அம்மையை மனைவியாக்கி பாடும் தன்மையும் எடுத்துக் காட்டப்பட்டு பெண்களும் இல்லறவியலும் வெறுத்தொதுக்கற்பாலன அல்ல என்ற கோட்பாட்டை பொதுமையாக்கி, கடவுளும் நம்மைப் போன்றவரே என்ற புது மரபினை இப் பக்தி இலக்கியம் அறிமுகப்படுத்தி வைக்கிறது.

இவரின் பக்தி இலக்கிய வகையைக் கண்டுகொள்ள உதவும் முக்கியமான இன்னொரு கூறு பாடல் வைப்பு முறையாகும்.இவை  10 10ஆக பதிக முறையில் ஆக்கப்பட்டிருக்கின்றன. முதலாம் திருமுறை 136 பதிகங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பதிகமும் 11 பாடல்களைக் கொண்டு மொத்தமாக1469 பாடல்களை உள்ளடக்கி இருக்கிறது. முதலாம் திருமுறையில் மாத்திரம் 88 கோயில்கள் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. 

பதிக ஒழுங்கமைப்பை பார்க்கும் போது அதில் ஒரு ஒழுங்கை அவர் பின்பற்றி இருப்பது தெரியவரும். முதல் 9 பாடல்களும் இறைவனின் பெருமையை நாட்டுவளத்தோடு இணைத்து சாற்றும். அதில்  10வது பாடலை சமண பெளத்த எதிர்ப்பினை சொல்வதற்காகப் பயன் படுத்தி உள்ளார். 10 பாடல்கள் முடிந்ததும் அப்பாடல்களை ஓதுவதால் உண்டாகும் பயன் 11வதாக கூறப்படும். சம்பந்தனால் இயற்றப்பட்ட இப்பாடல்களைப் பாடிப்பரவுவதால் பெறத்தக்க பயன்கள்  இன்னென்ன என தன்னம்பிக்கையோடு அவர் அதில் பட்டியல் இடுகிறார்.

இவரின் பதிகங்களில் ஆங்காங்கே காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமாக அவதானிக்கத் தக்கன. ஆங்காங்கே வீடுகள், மாடங்கள்,கருங்கல் மதில்கள்,  வீதிகள், ஆடல் பாடலுக்கான இசைக்கருவிகள், பெண்கள் அணியும் நகைகள், அவர்கள் செய்யும் அலங்கார வகைகள், முக ஒப்பனைகள் என வரும் குறிப்புகள் சுவாரிசமானவை.

இவர் பாடல்களில் பொதுமையாகக் காணப்படும் அம்சம் புராணக்கதைகள், மாதொருபாகனான சிவனின் தோற்றம், அவர் கோயில் கொண்டிருக்கும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த குண அழகு, அங்குள்ள மக்களின் இயல்பு, போன்றனவாகும். மிகக் குறிப்பிடத்தகுந்த சில பதிகங்களில் இறைவனிடம் தூது போவது போன்ற பாணியிலான தூது வகையிலான பாடல்களையும் பாடி இருக்கிறார்.

இவரின் பாடல்கள் பக்தி இயக்கத்தின் கோட்பாட்டுக் குரலாக கருதுமாறு அமைந்துள்ளன. இவர் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் பார்வைக்கு ஆட்பட்டு அதனுடய இலக்கிய முகவராகத் தொழில்பட்டமையைக் காண்கிறோம்.

ஞான சம்பந்தன் முதல் 3 திருமுறைகளைப் பாடி இருக்கிறார். சுமார் 4158 பாடல்கள். எல்லாவற்றையும் இன்னும் நான் வாசிக்கவில்லை. தமிழ் பக்தி இலக்கியம் என்ற புத்தகத்தில் அமைந்திருக்கிற சில பாடல்களில் நான் கண்டு களித்து உண்டு உயிர்த்தவற்றை இங்கு
* சம்பந்தனின்  தமிழ்,
* அதில் காணப்படும்  இசை நடன போன்ற நுண்கலைக் குறிப்புகள்,
* அவரிடம் இருந்த பெளத்த, சமண மத  எதிர்ப்பு,
* சில அவதானிக்கத் தக்க வரலாற்றுக் குறிப்புகள்
ஆகிய நான்கு  தலைப்புகளில் இங்கு பதிய ஆவல்.( தமிழ் பக்தி இலக்கியம், அ.அ. மணவாளன், சாகித்திய அகாதமி, புது தில்லி, 2004, கவுன்சில் நூலகம், வெண்ட்வேர்த்வில், 894.8111MAN)

ஞான சம்பந்தன் வாழ்க்கைப் பின்னணி:

சம்பந்தனைப் பற்றி அறிய கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாரின் பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்) பெரிதும் உதவுகிறது. சேக்கிழாருக்கு அதனை எழுத ஆதாரமாக இருந்தவை சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகை, மற்றும் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியுமாகும்.

இவர்களுடய கருத்துக்களில் இருந்து ஞான சம்பந்தன் பிராமண குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்து 3 வயதில் ஞானப்பால் உண்டதனால் அருள் ஞானம் கைவரப்பெற்று இறை பாடல்களை பாட ஆரம்பித்தார் என்றும்; இறைவனின் அருளால் பொற்தாளம் பெற்று தமிழ் திருப்பதிகங்களை இசையோடு பாடி; முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியன பெற்றார் என்றும்; முயலகன் நோய் தீர்த்தமை, பனி வாதையை நீக்கியமை, முத்துப் பந்தல் பெற்றமை, உலவாக் கிழியாகிய எடுக்க எடுக்க குறையாத பொற்கிழி பெற்றமை; இசைக்கு அடங்காத படி ‘மாதர் மடப்பிடி என்ற இறைவனின் பெருமையை விளக்கும் பாடலை பாடியமை; விடம் தீண்டியவரை எழுப்பியமை; வரட்சியினால் உயிர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை விரட்ட அன்னதானத்துக்கு இறைவனிடம் காசு பெற்றுக் கொடுத்தமை; பூட்டி இருந்த திருக்கதவைத் திறந்தமை; பாண்டிய அரசனின் வெப்பு நோயைத் தீர்த்தமை; அனல்வாதம் புனல் வாதத்தின் மூலம் சமண பெளத்தத்தை எதிர்த்தமை; புத்தநந்தி தேரர் என்ற பெளத்தரை வாதில் வென்றமை; இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்தமை ஆகிய இவைகளோடு தன் 16ம் வயதில் திருமண கோலத்தில் வந்திருந்த அத்தனை பேரோடும் இறைசோதியில் ஒன்றாகக் கலந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவைகள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என்று கொஞ்ச நாளாய் எனக்குள்ளே ஒரு சிந்தனை ஓடியது. இவைகளின் உண்மை பொய்களுக்கப்பால் இம் மனிதர் செய்த தமிழை அதன் அழகை; எழிலை; அதில் புதைந்து கிடக்கும் வரலாற்று முத்துக்களைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கக் கூடும் என்று தெளிந்ததால் இந்தப் பதிவு பதிவாகி மலர்கிறது.

தமிழோடு அவர் ஆடிய விளையாட்டுக்களை இங்கு பதிதல் கடினமாதலால் அது அது தனிப்பதிவாக வருகிறது. இங்கு அவருடய பாடல்களில் வந்துள்ள இசை நடன பாடல் குறிப்புகளையும் எவ்வாறு அவர் நாசுக்காகச் சமண பெளத்த எதிர்ப்பின் குரலைக் காட்டி இருக்கிறார் என்பதையும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சில வரலாற்றுக் குறிப்புகளையும் இனிக் காணுவோம்.

அவர் பாடலில் வரும் இசை நடனக் குறிப்புகள் தமிழின் அழகோடு துலங்குவதை பாருங்கள். இது திருவையாறு திருத்தலத்தைப் பற்றிப் பாடிய முதலாம் திருமுறைப்பகுப்புக்குட்பட்டது. அதில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் அமைந்த முதலாம் பாடல்

‘புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி
அறிவழிந்திட்டைம் மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சி
சில மந்தியதிலமர்ந்து மரமேறி 
முகில் பார்க்கும் திருவையாறே’

என்கிறார். மேலும்

‘ வேந்தாகி விண்னவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங் கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணுங் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார் வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடும் திருவையாறே’

என்றும்

‘மேலோடி விசும்பணவி வியன் நிலத்தை
மிக அகழ்ந்து மிக்கு நாடும்
மேலோடு நான்முகனும் அறியாத
வகை நின்றான் மன்னுங் கோயில்
கோலாடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலாடச் சிலைச் சேயிழையார்
நடமாடும் திருவையாறே’

என்றும் வருதல் தமிழ் அழகியலோடு கூடிய நுண்கலை அமுதமன்ன வரலாற்றுக் குறிப்பெனலாம்.

சம்பந்தரின் பதிகங்களில் இசையுடன் தமிழைப் பாட வல்லதாக அமைத்தது ஒரு புறமிருக்க; நடனம் இசை குறித்த குறிப்புகள் ஆங்காங்கு இருக்க; அவரின் பதிகங்களில் ஒரு வித வைப்பு முறையும் அமைந்திருக்கக் காணலாம்.

வளரிளம் பருவத்தினனாக வரலாற்றில் குறிக்கப்படும் சம்பந்தனின் பாடல்களில் ஒரு வித தன்னம்பிக்கைப் பாங்கு மிளிரக் காணலாம். பத்துப் பதிகங்களைப் பாடிய பின் 11வதாக இதனைப் பாடுவதால் என்ன என்ன பலன்கள் கிட்டும் என்பதை தன்னம்பிக்கையோடும் ஒரு வித உறுதிப்பாட்டோடும் சொல்வதைக் காணலாம். உதாரணமாக

’ஒரு நெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே’ என்றும்; ( திருப்பிரமபுரம்,)
’நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாட நம்பாவம் பறையுமே’ (திருக்குற்ராலம்) என்றும்;

‘அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவாரவர்கள் போய் விண்ணுலகாழ்வரே’ என்றும்;

‘நந்தி நாம சமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்தேத்தவரெல்லாம்
பந்தபாசம் அறுக்கவல்லார்களே’ என்றும் உறுதி படச் சொல்லும் பாங்கினை அவர் பதிகங்களில் கானலாம்.

எத்தனை நாசுக்காகவும் அதே வேளை உறுதி பட தான் சார்ந்த மதம் பற்றிய உறுதியோடும் தூர நோக்கோடும் இவர்கள் இந்தப் பக்தி இயக்கத்தை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் தேவாரப் பாடல்களிலேயே பல சன்றுகள் உண்டு.

அன்பே சிவம் என்ற சைவ சமய வாய்மைக் கூறு இங்கு நடைமுறையில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இவர்களுடய ஒரே நோக்கு சைவத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதே. அதனை ஓர் இயக்கமாகவே இவர் வழிநடத்திச் சென்றிருக்கிறார். அதனை இங்கு அற்புதங்களினூடாகவும், வாதங்களில் வெல்வதனூடாகவும், அரச ஆதரவோடும் சைவம் தழைத்தமையையும் அதற்கு முன் உதாரணமாகச் சம்பந்தர் திகழ்ந்தார் என்பதையும் காண்கிறோம். அனல்வாதம் புனல்வாதம் என்பவற்றினூடாகவும் தோற்பவர் கழுவேற்றப்பட்டார் என்ற சேக்கிழாரின் பெரியபுராணத் தகவலூடாகவும் இத்தகைய எதிர்ப்புகள் எவ்வாறு வன்முறை சார்ந்து  இடம்பெற்றிருக்கக் கூடும் என்பதை ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.

சம்பந்தர் பாடல்களிலும் அந்த எதிப்புணர்வு நாசுக்காக வெளிப்படக் காணலாம். அதனை அவர் திட்டமிட்டே தன் பதிகங்களில் புகுத்தி இருக்கிறார்.

‘தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற் களைந்து அடியினை அடைந்துய்மின்’ என்றும்;

‘புத்தரோடமணைவாதி லழிவிக்கும் மண்ணல்’ என்றும்;

‘வெஞ்சின அவுணரொடு முருமிடியு மின்னு
மிகையான பூதமவையும் அஞ்சிடும்’என்றும்;

‘குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாங்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே’ என்றும்;

‘விதியிலாதார் வெஞ்சமணர் சாத்தியரென்றிவர்கள்
மதியிலாதார் என் செய்வரோ வலிவலம் மேயவனே’

என்றும் இவ்வாறு எண்ணற்ற  செய்திகளை அநேகமாக அனைத்துப் பதிகங்களிலும் 10வது பதிகமாக வைத்துச் சொல்லிவரும் ஆற்று நோக்கற்பாலது.

இவ்வாறு சம்பந்தன் என்றொரு புதிய அலை அரச ஆதரவோடும் அற்புதங்கள் என்ற வகைப்பாடு கொண்டும் வாழ்வியல் சிந்தனைகளைப் புரட்டிப் போடும் சிந்தனைக் கூறுகளோடும் சமய உள்ளடக்கத்தோடும் தமிழ் இலக்கிய வரலாற்றில் புரட்சி அலையாக புதிய அலையாக பொங்கி வரக் காண்கிறோம்.

தொடரும்....

Sunday, August 5, 2018

அந்தப் புறா குறித்து.....மிருகங்கள், பறவைகள் குறித்து கூர்ந்து அவதானிக்கும் மனநிலை அவசர உலகில் பலருக்கும் வாய்ப்பது அரிது. நானும் அவர்களில் ஒருத்தி.

கடந்த சில வாரங்களின் முன்னர் மல்லிகைச் செடி வைத்திருக்கும் பூச்சாடியினுள்ளே வருவதும் மண்ணைக் கிண்டிக் கிளறுவதும் பறப்பதுமாக ஒரு சிறு புறா வந்து போய்க் கொண்டிருந்தது.

ஏற்கனவே இவைகள் இங்கு வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக வலை ஒன்று வாங்கி அடைத்து விட்டிருந்தது என் பொருள்முதல்வாய மனநிலை. ஒரு விதமான ‘என் இடம்’ என்ற ஒரு அடாவடித்தனம் எனவும் இதனை மொழிபெயர்க்கலாம்.

இருந்த போதும் கட்டிய வலைகளை மீறி; அதற்குள் நாம் விட்டிருக்கும் ஒரு சிறு பலவீனத்தைக் கண்டு கொண்டு, அதற்கூடாகத் தம் மெல்லிய உடலை வளைத்து நெளித்து வெகு இலாவகமாக உள்ளே வந்து விடுகின்றன அவை களில் இரண்டு....

’இந்த உலகம் சகல உயிரினங்களுக்குமானது’ என்ற உண்மையை எந்த ஒரு கல்வித்திட்டங்களும் போதிப்பதோ சொல்லிக் கொடுப்பதோ இல்லைத் தானே? நாம் சொல்லிக் கொடுப்பதெல்லாம் ’வல்லது வாழும்’ என்ற தத்துவக் கோட்பாட்டைத் தானே?

சரி அது போகட்டும்.

பிறகு ஒரு நாள் எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் அதாவது கூடு கட்டியோ அல்லது வேறெந்த முகாந்திரங்களும் இல்லாமல் அச் சிறு புறா பூச்சாடிக்குள் முட்டை இட்டுவிட்டிருந்தது.

மறுநாள் இன்னொரு முட்டை.

இதென்னடா அநியாயமாயிருக்கு என்று பார்த்தால் அவர்கள் இரண்டு பேராக வேறு அடைகாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எப்போதும் யாராவது ஒருத்தர் முட்டையோடு ஐக்கியமாக விட்டுப் பிரியாது இருந்தார்கள்.

ஆனால் இரவுகளின் போது இரு முட்டைகளும் தனியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த என் தங்கை ‘இது புது புருஷன் பெண்டாட்டி போல; பொறுப்பில்லை’ என்றாள். ஆனால் போட்டி போட்டுக் கொண்டு தம்பதியர் இருவருமாக அதிகாலையில் ஓடி வரும் ஆவலைப் பார்த்தால் அவ்வாறு இருக்கும் போலவும் தெரியவில்லை. பிறகு ஒரு நாள் heater போடாத இரவொன்றில் ஒரு புறா தொடர்ந்து அடைகாக்கும் போது தான் ‘ஓஹோ....heater வெளியே தள்ளும் குளிர் தான் அவைகளை இருக்க விடாது துரத்துகிறது என்பதைக் கண்டு கொண்டோம்.

இப்போது என்ன குளிரெனினும் கம்பளி ஆடைகளை அதிகம் அணிந்து கொள்ளுகிறோம். குறிப்பாக ‘குளிர்கிறது’ என்று அடிக்கடி முறைப்பாடு சொல்லும் என் தந்தையார் இப்போதெல்லாம் முணுமுணுப்பதில்லை. எல்லோரும் அதற்கேற்ப நம்மை நாமே அனுசரிக்கப் பழகிக் கொண்டோம்.

இவைகளைச் செய்கையில் தான் என்ன ஒரு சந்தோஷம்!

ஆனால் அவர்களுக்கு நம்மைக் குறித்து எந்த ஒரு பயமும் இருப்பதாகத் தோன்றவில்லை. நாம் அடிக்கடி அந்தப் பக்கம் உடுப்புகள் காயப் போட, எடுக்க, கூட்ட,  பூஞ்செடிகளுக்கு நீரூற்ற பெரிய பாத்திரங்களைக் கழுவினால் காய வைக்க என பல கருமங்களுக்காக அந்தப் பக்கம் போக வேண்டி இருக்கும்; பெரும்பாலும் ஒவ்வொரு நாளும். அவைகளுக்கு மிக அருகில் போவோமெனினும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கும் அப்புறா  என்னை பெயர் சொல்ல முடியா ஒரு உன்னத மனநிலைக்கு என்னை; என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தாரையும் இட்டுச் செல்லும்.

அது எம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை எத்தகைய தளத்தில் ஏற்பட்ட ஒரு நம்பிக்கையாக அது இருக்கக் கூடும்?

தம் இடத்தை இன்றுவரை ஒரு எச்சத்தைத் தானும் இட்டு அசிங்கப்படுத்தவில்லை அவைகள். சுள்ளிகள், குச்சிகள் கொண்டுவந்து தமக்கான கூட்டையும் அவை அமைத்துக் கொள்ளவில்லை. சிலவேளை குச்சிகளைக் கொண்டுவர வகை தெரியாதிருந்திருக்கக் கூடுமோ...?

இப்போது நம்முடய ஆடைகள் காயப்போடும் கொடி மற்றப்பக்கமாகத் திரும்பி விட்டது. யாரும் அதிகம் அதற்குள் நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை சொல்லாமலே எல்லோரும் அனுசரிக்கிறோம். வெளியே எங்கேயாவது போய் விட்டு வந்தாலும் கண் நேரடியாக அவைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைக் கண அவாவுகிறது...

இப்பொழுதெல்லாம் எங்களுக்கிருக்கிற ஒரே கவலை இவைகள் சுகமாகக் குஞ்சு பொரித்து அவைகளை வளர்த்து ஆளாக்கி அதிலும் முக்கியமாக அண்டன் காக்கைகளின் கூரிய அலகுகளில் இருந்து தன் குஞ்சுகளைக் காத்து பின் சுதந்திரமாக அவை பறந்து போக வேண்டுமே என்பது தான்.

உண்மையில் இந்த உலகை; பிரபஞ்சத்தை இன்னொரு உயிரினத்தோடு பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் உவகைக்கு வேறேதும் ஈடு இணை இல்லை!

உண்மையாக!