Sunday, November 29, 2009

மாவீரர் தியாகங்களுக்கு!


முதலில் ஒரு மனிதனாயும் பின்பு ஒரு போராளியாயும் இருந்த மக்கள் மனங்களை வென்ற வில்வன் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் என்ற போராளியின் நினைவுகளுக்கும் மற்றும் உயிர் நீத்த 'அனைத்து' போராளிகளுக்கும் மக்களுக்குமாக ஒரு கண்ணீர் அஞ்சலி.

Thursday, November 12, 2009

ஆரோக்கியமான குடும்ப உறவு

!

ஒரு தமிழ் பெண்ணுக்குத் தன் கணவன், வீடு, குடும்பம், பிள்ளைகளே உலகம்.அதற்காக அவள் பம்பரமாகச் சுழல்கிறாள்.தன் வாழ்வையே அதனைச் சுற்றி அமைத்துக் கொள்கிறாள்.இவற்றுக்கப்பால் தன் அடையாளங்களை, விருப்பு வெற்றுப்புகளை தன் ஆற்றல்களை, திறமைகளை அவள் பெரும்பாலும் அறிந்து கொள்வதில்லை.அதனை அறிய நாட்டம் கொள்வதுமில்லை.பிள்ளைகளின் உயர்வே தன் சுகம்,குடும்ப வாழ்வே தன் வாழ்வின் எல்லை என்று அமைத்துக் கொள்வதால் பெரும்பாலான பெண்களால் அதனைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதை அறிய முடியாதிருக்கிறது.

நம்முடைய பண்பாடும்,சமூக அமைப்பும் அவ்வாறான ஒரு வாழ்க்கை முறையையே பெண்ணுக்கு அறிமுகப் படுத்துவதால் உருவங்கள் சிதைக்கப்பட்ட பெண்ணாய்; குடும்ப அங்கத்தவர் வாழ்வையே தன் உருவம் எனக் கொண்டவளாய் அவள் வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.படித்த நல்ல பதவியில் இருக்கின்ற பெண்களால் கூட அதைத் தாண்டி தனக்கான தன்னுடைய உருவத்தை அடையாளம் காண முடியாதிருக்கிறது.

மாறாகத் தன் திறமையை,ஆற்றலை, தன் சுயத்தை அடையாளம் காணும் ஒருவர் தன் வாழ்வில் வரும் பல சிக்கல்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் தீர்வுகளைக் கண்டு கொள்ளலாம் என்பது மிக எளிமையான உண்மை.

இருந்தபோதும் குடும்பவாழ்வும் அதன் மீதான கரிசனையும் அதனுடனான வாழ்வும் எல்லாக் குடும்பப் பெண்களுக்கும் இன்றியமையாத ஒன்றே.

அண்மையில் வேலை சம்பந்தமாக இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை பற்றிப் பேசப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக்கள் ஆரோக்கியமான குடும்ப உறவு முறை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறது.கருத்தரங்கில் சொல்லப்பட்ட முக்கியமான குறிப்புகள் இவை.

1. கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் போதே தாம் தாமாகவும் இருக்க முடியும்.

2.ஒருவரிடம் இருக்கும் திறமையை அடுத்தவரால் வெளிக்கொணர முடியும்.

3.ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடியும்.

4.ஒருவரை ஒருவர் மாற்றவோ ஆளுமைப்படுத்தவோ முயல மாட்டார்கள்.

5.ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவார்கள்.

6.ஒருவரை ஒருவர் மகிழ்வோடு அனுபவிப்பார்கள்.

7.ஒருவரில் ஒருவர் வசதியாயும் இயல்பாயும் இருப்பார்கள்.

8.ஒருவரின் தீர்மானங்கள், உணர்வுகள், சிந்தனைகளை மதிப்பார்கள்.

9.தம்மோடும், ஒருவர் மீதொருவரும் நேர்மையாக இருப்பார்கள்.

10. ஒருவரது குறை நிறைகளை ஏற்றுக் கொண்டு தமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவார்கள்.

11. ஒருவரின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

12. எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லா விடயங்களையும் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.
சில நாட்களின் முன்( ஒக்ரோபர் 23ம் திகதி) hellorayar.blogspot.com என்ர வலைப்பூவில் மிஸ்டர் றைட் என்பவர் பதிவிட்டிருந்த கீழே உள்ள கட்டுரையும் அதற்குப் பொருத்தமாக இருப்பதால் அக்கட்டுரையையும் அப்படியே இங்கு மறு பதிவிடுகிறேன். அவருக்கு என் நன்றி.

'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.
"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!


''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.


''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்


உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும்.. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்


நன்றி : அவள் விகடன்

Thursday, November 5, 2009

சற்றே சிரிக்க...
கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...


மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையா சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

--------------------------------------------------------------------------------
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...

--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
--------------------------------------------------------------------------------


மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

--------------------------------------------------------------------------------

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
---------------------------------------------------------------------------------

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
---------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
---------------------------------------------------------------------------------

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

நன்றி; தோழி, கெளரி.
--------------------------------------------------------------------------------

Thursday, October 22, 2009

வீடு


எனக்கோர் வீடு வேண்டும்
நாலு சதுர அறைகளும்
நன் நான்கு மூலைகளும்
நீள் சதுர விறாந்தைகளும் அற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

என்னைச் சுளற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய
கல் மதில்களுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

பூட்டற்ற கதவுகளுடன்
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு.

குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த

ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்
ஆழியாழ். நன்றி -மை-

ஒரு கவிதை உனக்குப் புரியவில்லை என்றால் அது உனக்குரிய கவிதை அல்ல - யாரோ -

Sunday, October 4, 2009

காரியாலய போஸ்டர் ஒன்றுவேலை இப்படித்தான் நம்மைப் பிளிந்தெடுக்கிறது.:-)
அன்பும் சில வேளைகளில் அப்படி ஆக்கி விடுகிறது.:-(

Tuesday, September 8, 2009

வென்ற்வேத்வில் தமிழ் கல்வி நிலையக் கலைவிழா

சென்ற சனிக்கிழமை 06.09.09 அன்று வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைவிழா மாலை 2 மணியளவில் மிகக் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடந்தது.சுமார் 500மாணவர்களையும் சுமார் 40 ஆசிரியர்களையும் கொண்டியங்கும் இக் கல்வி நிலையம் இரண்டு வளாகங்களில் நடைபெறுகிறது.நடப்புக் கல்வியாண்டின் அதிபராக திரு. நாகேஸ்வரன் அவர்கள் விளங்குகிறார்.

1988ம் ஆண்டு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்த இக்கல்வி நிலையம் இன்று இரண்டு வளாகங்களில் சனிக்கிழமை தோறும் மாலை 2.00 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை தமிழை அடுத்த சந்ததிக்கு வழங்கும் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது.

அங்கு கல்வி கற்கும் சில பெரிய வகுப்புச் சிறார்களின் படங்கள்(ஆசிரியர்களுடன்) சிலவற்றை உங்கள் பார்வைக்காக இங்கு தந்துள்ளேன்.


இன்றய வருடம் " ஒற்றுமையே பலம்" என்ற தலைப்பை முன் வைத்து இடம் பெற்ற கலைவிழாவின் அடி நாதத்தை விழாவில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் மெருகேற்றி அரங்கேற்றின.ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்தன.

வருடந்தோறும் இடம் பெறும் இம்மாதிரியான கலைவிழாக்கள் வருங்காலத்தில் தமிழ் வாழும் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கிறது.

கீழே உள்ள படங்கள்இரண்டும் இரண்டு வளாகங்களிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறது.இவை கலைவிழா ஆண்டுமலரில் இருந்து பெறப்பட்டன.


Wednesday, August 26, 2009

இலக்கியத்தில் விருந்தோம்பல்இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும் கூறிச் செல்கிறது குறள்.

நாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.

'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;
திருந்துற நோக்கல்;'வருக'என உரைத்தல்;
எழுதல்;முன் மகிழ்வன செப்பல்;
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;
'போம்' எனில் பின்செல்வ தாதல்;
பரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே!'

ஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்

*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்
*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்
*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்
*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்
*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்
*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்
*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்
*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்
*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்

என்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.

மேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,

'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்'

என்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

அக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே!- வீணுக்கென்
என்பெல் லாம்பற்றி எரிகிறது;ஐயையோ!
அன்பிலாள் இட்ட அமுது!

விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,

'இருந்து முகந்திருத்தி,ஈரோடு பேன்வாங்கி,
'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி
ஆடினாள்;பாடினாள்;ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்'

ஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம்! தொண்டை எல்லாம் வரண்ட தாகம்! இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா! வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;

'கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் ஒன்று மென்முலையார்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
'மோர்' என்று பேர் படைத்தாய்
முப்பேறும் பெற்றாயே'

மோரே! நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்


'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'

அல்லவா?

Saturday, August 1, 2009

பாலி ஆறு நகர்கிறது


அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச்சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்
அமைதியாய்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியன்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன் தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டு
புளுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நின்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது


இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்களது ஊர் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலியாறு நகர்கிறது.

வ.ஐ.ச.ஜெயபாலன்,
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலில் இருந்து.

Saturday, July 25, 2009

சொல்லும் பொருளும்;சொல்லின் பொருளும்


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனைக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.

வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும் பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும் அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)


ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் செய்யப் படுவது ஊழியம். அதனால் உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.
பட உதவி;நன்றி,இணையம்

(பதிவு மறு பிரசுரம்.ஈழத்து முற்றத்திலும் இது பதிவாகியுள்ளது)

Sunday, July 19, 2009

சோகம்இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லை
எல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.
கொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.
விரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.
கொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்
எந்தக் கறையும் இல்லை.
இரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,
கத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.
தரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை நிறம்.

சுவடேதுமில்லாமல் மறந்து போன இந்த இரத்தம்
ஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதியல்ல;
அதனிடம் சென்றடைய
எனக்கு வழி காட்டுபவர் யார்?
பேரரசர்களுக்கான சேவையின் போது
சிந்தப்பட்ட இரத்தமல்ல-
அது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,
அதன் எந்த ஒரு ஆசையும் பூர்த்திசெய்யப்படவில்லை.
பலிச் சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல அது.
கோயிலிலுள்ள புனிதக் கோப்பையில்
பிடித்து வைக்கப் பட்டதுமல்ல.
எந்த ஒரு சண்டையிலும் சிந்துப்பட்டதல்ல-
வெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு
யாராலும் பயன்படுத்தப் பட்டதுமல்ல.

ஆயினும் யாருடய செவிக்கும் எட்டியிராத அது
தன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்
கூக்குரலிடுகிறது.
கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை;விருப்பமில்லை.
கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது
இந்த அனாதை இரத்தம்.
ஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை.
வழக்கு ஏதும் பதிவு செய்யப் படவில்லை.
தொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு ஊட்டமாக இருந்தது
தூசி மட்டுமே.
பிறகு அது சாம்பலாயிற்று,சுவடு எதனையும்
விட்டுச் செல்லாமல்
தூசிக்கு இரையாயிற்று.

கவிஞர்;

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்

பட உதவி; நன்றி;இணையம்.

இராணுவ முகாம்களில் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டு சுவடேதும் இல்லாமல் காணாமல் போய் விட்ட ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.

Sunday, July 12, 2009

திருமணத்தின் முன்னும்;பின்னும்

அண்மையில் மின் தபால் மூலம் வந்த சிறு உரையாடல் பகுதி இது.மூலம்(www.wackywits.com)

திருமணத்துக்கு முன்பான உரையாடல் இது.திருமணத்திற்குப் பின் எப்படி என்று அறிய விருப்பமா? இதே உரையாடலைக் கீழிருந்து வாசித்துப் பாருங்கள்.

John: Ah..At last.I can hardly wait!

Jane: Do you want me to leave?

John: No! Don't even think about it.

Jane:Do you love me?

John: Of course!Always have and always will.

Jane: Have you ever cheated on me?

John: No! Why are you even asking?

Jane: Will you kiss me?

John: Every chance i get!

Jane: Will you hit me?

John: Hell no! Are you craze?!

Jane: Can i trust you?

John: Yes

Jane: Darling!

புன்னகைக்க முடிகிறதா?

Thursday, July 2, 2009

அறிவின் விழிப்பு - முருகையன் -

27.06.2009 அன்று காலமான கவிஞர் முருகையன் அவர்களின் நினைவாக!

நான் யாழ் வளாகத்தில் கற்றபோதும்; வேலை செய்த போதும் பதிவாளராகக் கடமையாற்றியவர்.உருவத்தில் சிறியவராகவும்; சுபாவத்தில் அமைதியானவராகவும் விளங்கியவர்.உணர்வுகளை வென்றவராக அவர் விளங்கினார்.அதனால் போலும் சர்ச்சைகள் அவரிடம் சொந்தம் கொண்டாடியதில்லை.

அவர் தமிழுக்குத் தந்த கவிதை இது!!!
ஈழத் தமிழருக்கு விட்டுச் சென்ற அவரின் சிந்தனைச் செல்வத்தில் ஒன்று!!இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமை எங்களுக்குஇரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு

மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின்முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.
தேட்டம் என்று நம்பி,சிதைந்த பழம் பொருளின்
ஓட்டை,உடைசல்,உளுத்த இறவல்கள்,
பீத்தல்,பிறுதல்,பிசகி உதிர்ந்தவைகள்,
நைந்த கந்தல்- நன்றாக நாறிப் பழுதுபட்டு
சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை -
இப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து
மூட்டைகட்டி, அந்த முழுப்பாரம் கண்பிதுக்கக்
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.

மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.
பாதை நடையின் பயணத் துயர் உணரா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.
ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.

மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்
பற்றி, முயன்று, பகை களைந்து,மேலேறி
விண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக
மண்தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,
வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்
ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்
நெஞ்சம் இசைந்தார்.
நிகழ்த்தினார் நீள்பயணம்.

பின் முதுகில் பாரப் பெருமை இல்லாதவர்கள்
இத்தனையும் செய்தார்.
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
நாமோ
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும்
சற்றே இறக்கிச் சலிப்பகற்றி, ஓய்வு பெற்றுப்
புத்தூக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்.

மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக்
கொட்டி உதறி, குவிகின்ற கூழத்துள்
வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி,
அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதோ
சற்றேனும் இல்லோம்.
சலிப்பும் வலிப்பும் எழ,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த,
ஊருகிறோம்;ஊருகிறோம் - ஓயாமல் ஊருகிறோம்.

பரந்த உலகோர் பலரும், சுமையைச்
சுருங்கும் படியாகக் குறைத்துச் சிறிதாக்கிக்
கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,
வெற்றுக்கை கொண்டும் வியப்புகள் ஆக்குகையில்,
புத்தி நுட்பம்,செய்கை நுட்பம்,போக்கு நுட்பம் என்பவற்றால்
சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,
நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர் படுத்த
ஊருகிறோம்,ஊருகிறோம் - ஓயவில்லை,
ஊருகிறோம்.

வேண்டாத குப்பை விலக்கி,மணி பொறுக்கி
அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஓ!
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;
பண்பாட்டின் பேரால் பல சோலி எங்களுக்கு."பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து....

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, June 28, 2009

வல்லாரைச் சம்பல்

தேவையான பொருட்கள்;

கழுவிக் காம்பு நீக்கிய வல்லாரை இலைகள் 2 கைப்பிடி
தயாராக்கப் பட்ட தேங்காய் பூ -ஒரு சிறங்கை
பெரிய வெண்காயம் -பாதி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் -1
நற் சீரகம் - சிறிதளவு
மிளகு - 4-5
தேசிக்காய் - பாதி

செய்முறை:

புதிய வல்லாரை இலைகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.(குறுனலாக அல்ல). அதே போல வெண்காயத்தையும் பச்சை மிளகாயையும் வெட்டிக் கொள்ளவும்.இவற்றோடு மிளகு, சீரகம் என்பவற்றையும் தேங்காய்பூவையும் போட்டு மிக்சியில் உங்களுக்கு விருப்பமான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.சம்பல் பதம் சிறப்பாக இருக்கும். இறக்கிய பின் தேசிக்காய் புளி விடவும்.

5 நிமிடத்தில் செய்து விடத்தக்க இப்பாகம் மிகச் சுவை நிறைந்ததும் சத்துக்கள் சேர்ந்ததும் மலிவானதுமாகும்.

சோறோடு சாப்பிடலாம்.செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.இது போல் முருங்கையிலை வறையும் சோறோடு சாப்பிடச் சுவையானது.

Friday, June 26, 2009

நெருடல்

உயிருக்காய்
ஊர் விட்டோடிய போது
கட்டவிழ்க்க மறந்த
பச்சிளங்கன்றும் தாய்ப்பசுவும்
எட்டாத அருகில் நின்ற நினைவும்,

வைரவ மடையில்
மனிதக் காலனின்
கத்தியின் கீழ் மிரண்ட
அப்பாவி ஆட்டின்
அவல முடிவும்
நினைவுக்கு வர

பதறுது மனசு.

உன் நினைவு குறித்த நெருடலோடு!

Thursday, June 18, 2009

ஒரு நட்பின் புன்னகை

புறம் பார்த்து-
ஒரு நட்பின் புன்னகையோடு
நீ என்னைத் தேர்ந்தெடுத்தாய்.

நன்றி எனினும்
நண்பா,

ஆடைகள் பார்த்து
ஆளை எடை போடும் உலகில்
என் இருத்தலின் உன்னதம்
புரிவதுனக்கு
எங்ஙனம்?

என் அக எல்லைகளின் ஆழ அகலங்கள் பற்றி...
அதன் அலங்காரங்கள் பற்றி...
அறைகளை நிரப்பும் வெளிச்சங்கள் பற்றி..
மூலைகளில் படிந்து கிடக்கும் தூசிகள் பற்றி..
இரத்தம் காவித் திரியும்
பரம்பரை அலகுகள் பற்றி..
இன்னும்..இன்னும்..
அந்தக் கரும் பாறை பற்றி...

இவ்வாறு பூமியுள்ளே ஊன்றியுள்ள
என் விருட்ச வேர்களைப் பற்றி அறிவாயாக!

உரத்துப் பேசாத இந்த
உரையாடலின் சாரமே நானாவேன்.

உடலல்ல நான்.
உடலுக்குள்ளே தான் நான்.

நண்ப,
உன் ஆண் என்ற சட்டையைக்
களைந்து விட்டு வருவாயாக!
பால்களைத் தாண்டிய பரிமானம் ஒன்றில்
உன் பாதங்கள் பதிவதாக!

பாலால் என்னைப் பாகுபடுத்து முன்
மனிதனாய் என்னை மதிப்பாயாக!!

வா!இனி உன்
நட்பின் புன்னகை பற்றிப் பேசுவோம்.

Thursday, June 11, 2009

இயற்கையின் ஸ்பரிசம்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலை இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!


கார் கால மாலையில்
செழித்த மரக்கிளையில்
பஞ்ச வர்ணக் கிளிகள் இரண்டு
சிறகுலர்த்திக் கொஞ்சுதல் போல!


வளர்த்த நாய்க்குட்டி
வாஞ்சையான அன்பினை
வார்த்தைகளின்றி வெளிப்படுத்துதல் போல!


நிர்மல வானில் பூரண நிலவு
மரங்களுக்கிடையே
குளிரொளியோடு வருவது போல!


பயமறியா இளங்கன்று
பால் குடித்துப் புல் வெளியில்
துள்ளி ஓடும் சுதந்திரம் போல!


தாய்க் கோழி குஞ்சுக்கு
தீனி கொடுத்துப் பத்திரமாய்
பருந்திலிருந்து காத்தல் போல!


சின்னச் சின்ன வாச மலர்கள்
மழைத் துளியில் சிலிர்த்தபடி
புன்னகை செய்வதைப் போல!


மழை நின்றதோர் மஞ்சள் மாலையில்
ஏரிக் கரையின் புல் வெளி ஓரமாய்
தாராக்களும் மனிதர்களும்
குடும்பங்களாய்ச் செல்லுதல் போல!


யாரோ ஒரு வழிப் போக்கன்
போகிற போக்கில்
சினேகமாய் ஒரு புன்னகையைச்
சிந்தி விட்டுப் போவதைப் போல!


மேலும் ஒரு
தாயான பெண்ணின்
முதல் புன்னகை போல!


எத்தனை அழகாய் உள்ளது பூமி!

எல்லைகள் கடந்த ஒரு சுக வெளியில்
விடலைப் பருவக் காதலர் இருவர்
காதல் கொண்டு குலவுகையில்

எத்தனை அழகாய் உள்ளது பூமி!

Thursday, June 4, 2009

சின்னச் சின்னச் சந்தோஷங்கள்.....

மனம் சோர்வாக, கவலையாக,இருக்கின்ற போதுகளில்......
முயற்சித்துப் பார்க்கக் கூடியவை.

* சுடு நீரில் சுகமான ஸ்னானம்:சுத்தமான பருத்திஆடை

* கடற்கரைக்குப் போதல்; அதன் இயற்கையை ரசித்தல்

*பூந்தோட்டம் செய்தல்; களைஎடுத்தல்; பண்படுத்தல்

*வீட்டை மீண்டும் ஒருமுறை ஒழுங்கு படுத்துதல்

*ஜெபம்,தியானம்,யோகா செய்தல்

*காலார நடந்து போய் வருதல்.

*பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல்.

* தண்ணீர் குடித்தல்

*நண்பர்களோடு பேசுதல்

*உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.

*புதிய சமையல் ஒன்றை முயற்சித்துப் பார்த்தல்

* ஆண்களாயின் நண்பர்களோடு ரெனிஸ்,கிறிக்கெற் விளையாடுதல்.

*பாடல்,இசை கேட்டல்.படம் பார்த்தல்,புத்தகம் வாசித்தல்

*டையறி எழுதுதல்

*கடைகளுக்குப் போய்வருதல்

* தலை முடியை வேறுவிதமாக மாற்றிக் கொள்ளுதல், முக ஒப்பனை

*பிற்போடப் பட்டுக் கொண்டிருந்த வேலைகளைச் செய்து முடித்தல்
(உ+ம் புத்தகங்களை அடுக்குதல்,அலுமாரியில் ஆடைகளை அடுக்குதல்,குறையான தையல் வேலைகளை முடித்தல்,போன்றன)

*குழந்தைகளோடு விளையாடுதல்

*செல்லப் பிராணிகளோடு நேரம் செலவளித்தல்.

*உணர்வுகளைக் கலைவடிவமாக்கிப் பார்த்தல்.
(கவிதை,கதை,ஹக்கூ,....)

*பாதகமில்லாத புதிய ஒரு விடயத்தை தொடங்குதல்.
(உ+ம் உண்டியலில் காசு சேர்த்தல்,சமூக சேவை,நண்பர்களாகச் சேர்ந்து ஒரு விடயத்தை சாதித்தல்....)

*எல்லாம் நன்மைக்கே என்ற மனப் போக்கு.

*நண்பர்கள் வீட்டுக்குப் போய் வருதல்.

*விட்டுப் போன விருந்தாளிகளை அழைத்து சுவையான விருந்தளித்தல்

*கோயிலுக்குப் போய் வருதல்

இப்படிப் பல.

உங்களது சின்னச் சின்னச் சந்தோஷங்கள் என்ன?

உங்களுக்கு தெரிந்தவற்றைப் பின்னூட்டமிடுங்கள்.மற்றவர்களுக்கும் அது பயனுடயதாக இருக்கும்.

சின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிரம்பியிருக்கிறது வாழ்க்கை

Sunday, May 31, 2009

நம்மை நமக்கு மீட்டுத் தர.....

அழகான இந்தத் தலைப்பு உமாவின் பதிவிலிருந்து பெறப்பட்டது.சலிப்பும் சோர்வும் கொண்டிருந்த போது இச் சொல் புதிதாய் ஒரு கதவை மனதில் திறந்து சென்றது.

பிரச்சனைகளை எப்படி நாம் சமாளிக்கலாம் என்பதற்கு அவரவருக்கென்று சில வழிமுறைகள் உண்டு.புறக் காரணங்களாலும் அகக்காரணங்களாலும் ஏற்படும் மன அழுத்தங்கள் தீரும் வழிமுறைகள் பற்றி நேற்றய தினம் ஒரு கலந்துரையாடல் STARTTS இன் ஆதரவோடு இடம் பெற்றது.அவை பலருக்கும் பயனுடயதாக இருக்கலாம் என்பதால் இங்கு உங்களோடு இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1) குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை விட அச் சம்பவம் பற்றி நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளே பெரும்பாலும் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணமாகின்றன.உதாரணமாக எமக்குத் தண்ணீர் விடாய்க்கிறது என்றும்;ஒரு பாத்திரத்துக்குள் பாதியளவு தண்ணீர் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.இதனை நாம் எப்படிப் பார்ப்போம்?
ஆஹா..தண்ணீர் இருக்கிறது!
ம்ம்.. பாதியளவு தானே இருக்கிறது.
எனக்கிது போதாது.
பாதியளவாவது கிடைத்ததே!
இது ஒருவாய்க்குக் காணுமா..?
பறவாயில்லை போதும்..!
நாளைக்கு என்ன செய்வது..?
இன்றைக்குச் சமாளிக்கலாம்.

இப்படிப் பலவிதமாகப் பார்க்கலாம்.இதனால் பாதியளவு தண்ணீர் என்பதல்ல பிரச்சினை; அதனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது பிரச்சினை.நாம் பார்க்கின்ற பார்வையில் தான் பிரச்சினை.

பொதுவாக நம்முடய நடைபாதையில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது கல்லடிபட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். நாம் எப்படி அதனை மற்றவர்களுக்குச் சொல்கிறோம்? "கல்லடித்துவிட்டது" என்று தானே!உண்மையில் கல்லா நம்மை அடித்தது? நாமன்றோ கல்லை அடித்தோம்!நாம் அதனை எவ்வாறு பொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அதனால் உண்மையில் பிரச்சினை என்ன என்பதைச் சரியாக அடையாளம் கண்டுகொள்வது என்பது மிக முக்கியமானது.சரியான மூலத்தினை அடையாளம் கண்டு கொண்டு விட்டோம் என்றால் அந்த இடத்திலேயே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடுகின்றன.பின்னர் தீர்வுகளும் இலகுவாகி விடுகின்றன.

அதனால் நாம் அச் சம்பவத்தால் என்ன உணர்வினைப் பெற்றிருக்கிறோம் என்பதை முதலில் இனம் கண்டு கொள்வதும்(துன்பம்,கோபம்,உடன்படாமை,வெறுப்பு...); அதன் மூல காரணத்தை அடையாளம் கண்டு கொள்வதும்; நமக்கு நம்பிக்கையானவர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

சரி நமக்குத் தெரியாத புறக் காரணிகளால் வருகின்ற தொந்தரவுகளை,பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம்?உதாரணமாகக் கோபமாக இருக்கும் அனால்,யாரோடு கோபப் படுவது என்று தெரியாமல் இருக்கும்.ஈழப் பிரச்சினையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.யாரோடு நாம் நோகலாம்? இந்த வலியை எங்கு சென்று நாம் தீர்த்துக் கொள்ளலாம்?

பொதுவாக நாம் இழப்பையோ வலிகளையோ சந்திக்கின்ற போது அது 6 கட்டங்களைச் சந்திப்பதாகச் சொல்லப் படுகிறது.

1) உயிர் தப்புதல்.
2) துன்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தல்.
3) கடவுளோடு பேரம் பேசுதல்.
4) கோபம் கொள்ளுதல்.
5) துன்பமடைதல்.
6) ஏற்றுக் கொள்ளுதல்.

எந்த ஒரு உயிருக்கும் முதலில் உயிர் தப்புதலே பிரதானமாக இருக்கும்.உதாரணமாக வளிநாடுகளுக்கு நம்மைப் போல் தப்பி வந்தவர்கள்.அதன் அடுத்த கட்டமாக இந்த 'இரண்டக நிலையை' ஏற்றுக் கொள்ள மறுத்தல் இருக்கும்.புலம் பெயர்ந்த தமிழரிடம் இருக்கும் இந்த 'ஈழதாகம்'அதனைச் சரியாகப் புலப்படுத்தும்.பின்னர் அது நம்மை விட மேலான ஒரு சக்தியிடம் பேரம் பேசுவதாகவோ அல்லது எடுத்துரைப்பதாகவோ இருக்கும்.உதாரணமாக பரீட்சை எழுதிவிட்டுக் கடவுளிடம் நேத்தி வைப்பதில்லையா அது போலத் தான்.புலம் பெயர்ந்தோர் தத்தம் நாட்டு அரசுகளோடு மகஜர்களைக் கொடுத்ததையும் இதற்கு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

அதன் அடுத்த கட்டமாகக் கோபம் புலப்படும்.இப்போது நம்மவர் இருக்கின்ற நிலையை அதற்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.குற்றவுணர்வும் இதற்குள் கலந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.இக்கோபம் தத்தம் நாட்டு அரசு மீதானதாகவும் சில வேளை தம்மீதானதாகவும் கூட இருக்க வாய்ப்புண்டு.(சிட்னியில் இடம் பெற்ற கைகலப்புகள் பொலிஸாரின் தலையீடு என்பன கவனிக்கத்தக்கது.)

இது பின்னர் துன்பமாக மாறி ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்று கூறப் படுகிறது.

இந்தப் படிநிலைகளை உணர்ந்து கொள்வதன் மூலம் நாம் இப்போது என்ன மனநிலைப் படிமுறையில் இருக்கிறோம் என்பதை இனம் கண்டு கொண்டு போவது நல்லது.

இவை முழுக்க முழுக்க இயல்பானவை;இயற்கையானவை;எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோல்விகளையும் இழப்புகளையும் சந்தித்திருப்போம்.ஆதனால் அவை எல்லாம் இயற்கையானவை என்றும் இயல்பானவை என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

சரி, இந்தக் கோபத்தை,அன்றாட பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? நேற்றய தினம்(30.05.09) ஒவ்வொருவரும் எப்படி எப்படித் தப்பிக் கொள்கிறார்கள் என்பது பற்றி சுவாரிஸமான பல தகவல்களைத் தந்தார்கள்.

அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Saturday, May 23, 2009

கோரிக்கைகள்

சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.ஊர்வலங்கள்,இணையம், வானொலி, தொலைக்காட்சி.. என எல்லாம் பார்த்தும் கேட்டும் சலித்த பின்னர் மனிதர்கள்,சத்தங்கள், வன்முறைகள், இரைச்சல்கள் என இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு மெளனமாகவும் அமைதியாகவும் நான் என்ன செய்யலாம் என்பது தான் எனது நீண்ட நாள் சிந்தனையாக இருந்தது.

செய்யலாம் என்று நினைத்த விடயங்கள் இரண்டு.

1) சிறிது பணத்தை சேமித்தும் தானமாய்ப் பெற்றும் நேரடியாக தமிழரின் முகாம்களுக்குச் சென்று சரியான தேவைகளைக் கண்டறிவதும் வேண்டிய சேவைகளை அவர்களோடு இருந்து கண்டுபிடித்துப் பெற்றுக் கொடுப்பதும்.

2) இரண்டு அனாதைத் தமிழ் குழந்தைகளைத் தத்தெடுத்து கொண்டு வந்து வளர்ப்பது.

அதன் ஒரு கட்ட நடவெடிக்கையாக நான் இணைந்து செயற்படும் S.T.A.R.T.T.S என்ற அமைப்பினூடாக (சித்திரவதை,உணர்வதிர்ச்சி என்பவற்றிலிருந்து உயிர் பிழைத்தோருக்கான சிகிச்சைக்கும் மறு வாழ்வுக்குமான சேவைகளை வழங்கும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு)அவர்களது உள்ளார்ந்த கரிசனையினாலும் இன்று ஒரு சிறு கூட்டம் ஒன்றை கூட்டினோம்.அதில் கலந்து கொண்ட எலிசபெத் அம்மையார் மக்களிடமிருந்து அவர்கள் என்னவகையில் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என்ற விடயம் பற்றிக் கலந்துரையாடினார்.

இனிய அந்த எம் மக்கள் உணர்வு பூர்வமாகவும் கண்ணீரோடும் அக்கறையோடும் சொன்ன விடயங்கள் கல்மனதையும் உருகச் செய்வன.அவர்கள் கேட்ட கோரிக்கைகள் இவைதான்.

*சரியான தரவுகள் எடுக்கப்பட வேண்டும்.

*அவசர உதவி அளிக்கப் பட வேண்டும்.

*அனாதயாக்கப் பட்ட குழந்தைகளுக்கு நீண்ட கால உதவித்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்.

*மருந்து, உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*கடத்தல், கற்பழிப்பு,என்பன ஒழிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*உண்மை தடைகளின்றி வெளிவர ஆவன செய்யப்பட வேண்டும்.

*போர் குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

*சர்வதேசம் ஏன் மெளனமாக இருந்தது என்பதற்குப் பதில் வேண்டும்.

*மனப் பாதிப்புக்கான சேவைகள் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*வெளி நாடுகளுக்கு உண்மை நிலையை நடு நிலை அமைப்புகளால் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

*மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக மக்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யப் படுவதோடு அரசுக்கு உதவிக்காகப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

*சர்வதேச நடுவு நிலைமையாளர்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

*தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்படுவதும் பண்பாடு சிதைக்கப் படுவதும் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு சரியான தீர்வு எட்டப் பட வேண்டும்.

இவற்றை எல்லாம் அக்கறையோடு அந்த அம்மையார் கேட்டுக் கொண்டார்.

இந்த இடத்தில் இந்த அமைப்பினைப் பற்றியும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.உளவள நிபுணர்களால் அழகு பெற்றிருக்கிறது இந்த அமைப்பு. பொதுவாக போர்ச் சூழல்களால் பாதிக்கப் பட்டு வந்தவர்களுக்கான மீள் வாழ்வினைக் கொடுக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.சுகாதார அமைச்சு இதற்கான நிதிஉதவியை வழங்கிவருகிறது.இப்போது மேலும் தம்மை சுதந்திரமாக இயங்க விடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு அதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது இறங்கி இருக்கிறது. அதற்கான காரணங்கள்

* அரசின் கொள்கைகளுக்கும் மனிதாபிமானத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதாக இவ்வமைப்பு கருதுகிறது.

* ஒவ்வொரு அரசும் மாறும் போது அவர்களின் கொள்கைகள் தம்மைக் கட்டுப் படுத்தக் கூடாது என்று இவ்வமைப்பு கருதுகிறது.

இவ்வமைப்பினை எவ்வளவு தூரம் சுதந்திரமாக இயங்க அரசு அனுமதிக்கும் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இது கஸ்ரப்படும் மனிதர்கள் பால் கொண்டிருக்கும் கரிசனை சற்றே ஆறுதல் தரக்கூடியது.

இறுதியாக எலிசபெத் அம்மையார் பேசும் போது,தான் இது விடயமாகத் தன் மேலிடத்தோடு பேசுவதாகவும்;விரைவில் தமிழ் தலைவர்களோடு ஒரு திறந்த வெளிக் கூட்டம் ஒன்றக் கூட்டி தாம் செய்யக்கூடிய விடயங்கள் பற்றி கலந்துரயாடுவதாகவும்;உண்மைக்காக சர்வதேசத்தின் காதுகளைத் திறப்பதற்கான அனைத்து விடயங்களையும் தம் அமைப்பு மேற்கொள்ளும் எனவும்;அரசுக்கு அதற்கான அழுத்தங்களைத் தம் அமைப்பு கொடுக்க இயலும் எனவும் கூறினார்.

மேலும், அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு சாதனங்களோடு( வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகை) சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பது பற்றிய அறிவுரகளையும் ஆலோசனைகளையும் தம்மால் வழங்க இயலுமெனவும்; அது ஒரு வெற்றிகரமாக தொடர்புசாதனங்களை எமக்கு சார்பாகப் பயன்படுத்துவதற்கு மிக முக்கியம் என்பது பற்றியும் கருத்துத் தெரிவித்தார்.

அத்தோடு எம் மனக்குறைகளை உள்ளார்ந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டதே மன ஆறுதலைத் தரத்தக்க அம்சமாக இருந்தது.

கண்ணீரோடு பலர் விடைபெற்றுக் கொண்டனர்.

நாமும் தான்.

(மேலதிகமாக இவ்வமைப்பினைப் பற்றி அறிய www.startts.com)

Wednesday, May 20, 2009

இலக்கியத்தில் அவலங்கள் - 1

பயனற்றவை

மாடில்லான் வாழ்வு, மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - கூடும்
குருவில்லாவித்தை, குணமில்லா பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்.

செல்வம் இல்லாதவனுடய வாழ்வும்,இயற்கை அறிவு இல்லாதவனுடய வாணிபமும்,நன்மை பயக்கத்தக்க நாடு இல்லாத அரசன் செங்கோல் செலுத்துவதும்,இசைந்த ஆசிரியன் இல்லாத கல்வியும், நற் பண்புகள் இல்லாத மனைவியும், விருந்தினரை ஓம்பாத குடும்பமும் வீணாகும்.

ஒளவையார்.


துன்பம்

ஆஈன, மழைபொழிய, இல்லம்வீழ,
அகத்தடியாள் மெய்நோவ, அடிமைசாக,
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட,
வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல,
தள்ளஒண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

பசு கன்று போட,பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ,வீட்டு வேலைக்காரி உடல் நோயினால் அவதியுற,பண்ணையாள் இறந்து போக,மிகுதியாக உள்ள ஈரம் காய்ந்து விடுமே என்று நெல் விதைகளைச் சுமந்து கொண்டு செல்ல,வழியிலே கடன் காரன் வந்து மறிக்க,அதே நேரம் இறப்புச் செய்தியைக் கொண்டு ஒருவன் எதிரே செல்ல,அதே நேரம் தள்ள முடியாத விருந்தாளி முன்னே வர,பாம்பு தீண்ட, அதே நேரம் அரசு நிலவரி கேட்க,பிராமணர் வந்து காணிக்கை தர வேண்டும் என்று கேட்டார்.

இராமச்சந்திர கவிராயர்.

கடவுளின் துன்பம்

வஞ்சகர் பால் நடந்தலைந்த காலில் புண்ணும்,
வாசல்தொறு முட்டுண்ட தலையிற் புண்ணும்,
செஞ்சொல்லை நினைத்துருகு நெஞ்சிற் புண்ணும்,
தீரும் என்றே சங்கரன் பால் சேர்ந்தேன் அப்பா!
'கொஞ்சம் அல்ல பிரம்பு அடியின் புண்ணும்,வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்,கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பார்' என்றே காட்டி நின்றான் பரமன் தானே!

வஞ்சனை உள்ளவர் பால் சென்று வந்ததனால் எனது காலில் உண்டான காயத்தையும்,வீட்டு வாசல் படிகள் தோறும் முட்டுப்பட்டதனால் என் தலையில் ஏற்பட்ட காயத்தையும்,கடும் சொற்களால் மனதில் ஏற்பட்ட காயத்தையும்,சொல்லி ஆறுதல் பெற சிவனின் பால் சென்றேன்.அதனைக் கேட்ட அவர், நான் பட்ட துன்பமும் கொஞ்சமல்ல அப்பனே பார், பாண்டியனின் பிரம்படியால் பெற்ற காயத்தையும்,கண்ணப்பன் தன் காலினால் உதைந்த காயத்தையும்,பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுணன் கோபங் கொண்டு வில்லினால் அடித்ததனால் உண்டான காயத்தையும் என்று காட்டி நின்றான்.

இராமச்சந்திர கவிராயர்.

தொடரும்.....

Sunday, May 3, 2009

பல்லினப் பண்பாட்டின் பாதை

புதிதாய் இங்கு குடியேறியோருக்காக!


1)திறந்த மனப் பாண்மை(OPEN MINDEDNESS):-

புதிய விடயங்களை அணுகுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும், பிடித்திருந்தால் பாராட்டுவதற்கும்,சிலவேளைகளில் ஏற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களுடய வாழ்க்கை பற்றிய இலக்கணங்களை இனங்கண்டு கொள்வதற்கும் அதன் பெறுமானங்களை நாம் வாழ்வு பற்றிக் கொண்டிருக்கும் பெறுமானங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்கும் பல தெரிவுகளில் இருந்து சரியான ஒன்றை தெரிவு செய்து கொள்வதற்கும் இந்த மனதைத் திறந்து வைத்திருக்கும் மன நிலை (open mindedness) உதவுகிறது.

2) நகைச்சுவை உணர்வு( SENSE OF HUMAR):-

எப்போதும் எல்லாப் பண்பாடுகளிலும் கோபம் கொள்வதற்கும் எரிச்சல் படுவதற்கும் அழுவதற்கும் வெட்கம் கொள்வதற்கும் பல விடயங்கள் உள்ளன.இவற்றை புறம் தள்ளி அக் காட்டமான நிலையிலிருந்து விடுபட இந்த நகைச்சுவையாக விடயங்களை எடுத்துக்கொள்ளும் மன நிலை நமக்கு உதவுகிறது.


3) தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை( ABILITY TO COPE WITH FAILURE):-
எப்போதும் ஒரு புதுப் பண்பாட்டு வாழ்க்கை முறைக்குள் நாம் முற்றாகத் தள்ளப் படும் போது தோல்லி மனநிலை ஏற்படுவது சகஜமே.அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்வருவோர் சிலவேளை இந்த இயல்பிலிருந்து வேறுபடலாம்.இந்தத் தோல்வி மனநிலை சில வேளைகளில் மிக முக்கியமாக இருக்கிறது. அது எங்களுக்கு சமாளித்து வாழும் மன நிலையைப் பயிற்றுவிக்கிறது.


4)தொடர்பாடல்(COMMUNICATIVENESS):-

பல பண்பாடுகள் இது விடயத்தில் பல குழப்பமான சிந்தனைகளையும் நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன.புதிய நாடொன்றில் இலகுவாக வாழ்க்கையை வாழ விரும்பும் ஒருவர் தன்னுடய உணர்வுகளையும் சிந்தனைகளையும் தெளிவாக மற்றவருக்குப் புரியும் படி தெளிவுபடுத்தும் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.உதவிகளைப் பெறுவதிலும் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.தன்னுடய தேவைகளை உரியவாறு தெரியப்படுத்தும் போது தான் அதற்குரிய உதவிகளையும் சரியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.


5)எதற்கும் தயாரான மனநிலை(FLEXIBILITY AND ADAPTABILITY):-

புதிய பண்பாட்டு வாழ்க்கை முறையைச் சரியாக விளங்கிக் கொள்ளவும் சிலவற்றைக் சமாளித்துக் கொள்ளவும் சில விமர்சனங்களைச் சகித்துக் கொள்ளவும் மனதை இணக்கமான மன நிலையில் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.இது சிலவேளை நமக்கு பல காலமாக இணக்கமாக இருந்த ஒன்றை கேள்விக் குறியாக்குகின்ற விடயமாகக் கூட இருக்கலாம்.அவற்றுக்கு மனதைத் தயார் படுத்தி வைத்திருத்தல் நமது மனநிலைக்குப் பாதுகாப்பாகும்.


6) ஆர்வம்(CURIOSITY):-

இது மற்றவர்களுடய வாழ்க்கை முறையை,இடங்களை, புதுயுக்திகளை,இவை போன்ற பலவற்றை ஆராயத் தூண்டும்.புதிய நாடொன்றில் நிரந்தரமாய் இருக்க விரும்புவோருக்கு இத் திறமை வாழ்க்கையைத் திறம்பட நிலைநிறுத்த உதவும்.ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து பல புதிய நடத்தைகளையும் நிகழ்ச்சிகளையும் கண்டு அவர்களுக்குச் சரியெனப் பட்டது பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பர்.7) நடைமுறைக்கு ஒத்ததான எதிர்பார்ப்புகள்(POSITIVE AND REALISTIC EXPECTATIONS):-

புது நாடுபற்றி பல கனவுகளோடும் பல புதிய திறமைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வருவோருக்கு இது சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட அவற்றை அடைவதற்குக் காலம் எடுக்கும் என்ற நடைமுறை உண்மையை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.இது முக்கியமானதும் கூட.புது வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப் படுத்தும் படிமுறையில் மனநிலை அதி உச்சத்துக்கும் மிகத் தாழ்வுக்கும் மாறிமாறிச் செல்லுவது வழமை.ஆனால் அந்தச் சவால்களும் எதிர்மறையான சிந்தனைகளும் தான் அவர்களை உயர்வான நிலைக்கு இட்டுச் செல்லும் படிக் கற்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.


8) வேறுபாடுகளைச் சமாளித்தல்(TOLERANCE FOR DIFFERENCES):-

வேறுபாடான கருத்துக்களையும் வாழ்வு பற்றிய தனித்துவமான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதர்களை சகித்துக் கொள்ளும் மனநிலையையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.அது மற்றவரைப் புரிந்து கொள்வதற்கு மாத்திரமன்றி நமது உள் மனதைப் பலப் படுத்தவும் உதவுகிறது.அதே நேரம்,வேறுபாடான தோற்றம், நடத்தை மற்றும் உணர்வுகள் கொண்டவர்கள் பாதுகாப்பை உணரவும் வைக்கிறது.அது நமக்கும் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும்.9) மற்றவர்களைப் பற்றிய உடன்பாடான மன நிலை(POSITIVE REGARD FOR OTHERS):-

இது மற்றவர்களை நோக்கிய நமது மரியாதையை,நட்புறவை,இணக்கமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறான மனநிலை உள்ள மக்கள் விரைவில் மற்றவர்களின் கருத்தைக் கவருகிறார்கள்.ஒரு சிறு சம்பவம், ஒரு சிறு நடத்தை இதற்குப் போதுமானதாக இருக்கும்.


10) தன்னுணர்வு(SENSE OF SELF):-

தன்னை பற்றி தனக்கேயுரிய தனித்துவத்தை தெளிவாகவும் சிறப்பாகவும்அடையாளம் கண்டு அவற்றைத் தெளிவாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் ஒருவர் - தன்னுடய தெளிவான சிந்தனைக்காகத்- எழுந்து நின்று வாதாடத் தயாராக இருக்கும் ஒருவர் - மற்றவர்களுடய நம்பிக்கைகளைக் கொன்றுவிடாத பக்குவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் - உறவு நிலைகளில் மற்றவருக்கும் அத்தகைய மனநிலையை அளிப்பார்.பலமும் பாதுகாப்பும் ஒருங்கு சேர அங்கிருக்கும்.

இங்கிருந்தே பல்லினப் பண்பாடு தோற்றம் பெறுகிறது. பண்பாடு வளம் கொள்கிறது.


Adapted from work by Laurette Bennhold - samaan and Storti,1996.
நன்றி: STARTTS.

Thursday, April 23, 2009

திவ்யாவின் மேசையிலிருந்து....

ஒரு சிந்தனை

சில நாட்களின் முன் என் சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவவினது மகளின் (13 வயது) அறைக்கு என் சகோதரி சொன்ன ஏதோ ஒரு காரணம் நிமித்தம் போக வேண்டி இருந்தது.சாத்தப் பட்டிருந்த அவரது அறைக் கதவில் 'இது இளவரசியினது அறை; வரும் போது கதவைத் தட்டி அனுமதி கேட்கவும்'என்ற இள ஊதா நிறத்தில் எழுதப் பட்ட வாசகம் தென்பட்டது.நான் சென்றிருந்த நேரம் அவர் இருக்க வில்லை.அதனால் தைரியமாகக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன்.

அறை மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.புத்தகங்கள் அதனதன் இடங்களில் அமர்ந்திருந்தன.படுக்கை விரிப்புகள் படுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் விரிப்புகள் ஒழுங்காக விரிக்கப் பட்டிருந்தன.மேற்சுவரில் இள நீல நிறத்தில் முகில் கூட்டங்களும் வெண்ணிலாப் படமும் ஒட்டப் பட்டிருந்தது.மேசையோடு போடப் பட்டிருந்த கண்ணாடி அலுமாரியில் அவர் பெற்றுக் கொண்ட பாடசாலைப் பரிசுகள் வரிசைக் கிரமமாக அடுக்கப் பட்டிருந்தன.அருகோடு இருந்த அவரது அலுமாரியிலும், பக்கச் சுவர்களிலும் அவரது நண்பர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றோரோடு சுற்றுலா போன போதும் எடுத்த புகைப்படங்களும் ஒட்டப் பட்டிருந்தன.

சட்டென்று வேறொரு உலகம் கண்ணில் பட்டது.முற்றிலும் வேறானதொரு உலகமாக அது இருந்தது.அவர் உருவாக்கியிருந்த உலகமது.

தற்செயலாகத் திரும்பிய போது மேசையில் குறையோடு விடப்பட்டிருந்த கொப்பி ஒன்று கண்ணில் பட்டது. அது அவரது சித்திரக் கொப்பி.ஆர்வ மிகுதியால் திறந்து பார்த்தேன். முதல் பக்கம் திவ்யா என்ற தலைப்பில் தன்னைத் தான் வரைந்திருந்தார்.அதன் கீழ் ஒரு வாசகம் காணப் பட்டது.அது,

"YOU ARE IN THIS WORLD TO SING YOUR OWN SONG"

அதன் பின் அங்கு நிற்கத் தோன்றவில்லை எனக்கு.

Wednesday, April 15, 2009

இலக்கியத்தில் விருந்தோம்பல்


இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும் கூறிச் செல்கிறது குறள்.

நாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.

'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;
திருந்துற நோக்கல்;'வருக'என உரைத்தல்;
எழுதல்;முன் மகிழ்வன செப்பல்;
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;
'போம்' எனில் பின்செல்வ தாதல்;
பரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே!'

ஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்

*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்
*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்
*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்
*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்
*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்
*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்
*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்
*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்
*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்

என்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.

மேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,

'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்'

என்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

அக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே!- வீணுக்கென்
என்பெல் லாம்பற்றி எரிகிறது;ஐயையோ!
அன்பிலாள் இட்ட அமுது!

விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,

'இருந்து முகந்திருத்தி,ஈரோடு பேன்வாங்கி,
'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி
ஆடினாள்;பாடினாள்;ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்'

ஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம்! தொண்டை எல்லாம் வரண்ட தாகம்! இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா! வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;

'கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் ஒன்று மென்முலையார்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
'மோர்' என்று பேர் படைத்தாய்
முப்பேறும் பெற்றாயே'

மோரே! நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்.

'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'

அல்லவா?

சொற்சிலம்ப விளையாட்டு

தமிழ் இலக்கியத்தில் சிலேடைகள், சொற்சிலம்பங்கள்,விடுகதைகள் எனப் பல விளையாட்டுக்கள் உண்டு.இங்கு சில விளையாட்டுக்கள் உள்ளன. விடைகளைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

விளையாட்டு ஒன்று;

இப்பாடல் அழகிய சொக்கநாதபிள்ளை பாடியது.

"முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;
முன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;
பிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;
பிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி;
தொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

என்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா?


விளையாட்டு இரண்டு,

இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விளையாட்டு மூன்று;

இப்பாடலைப் பாடியவர் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர்.

'தேங்குழலப் பம்தோசை யித்தியமா உடலில்
திகழ்வடையப் பழம்பணியா ரங்கள்எலா நீத்தே
ஓங்கியழு தலட்டுப்பல காரமுழ அனைமார்க்கு
ஒடுங்கிப்பா யசநிகர்த்த உற்றார்க்கு மஞ்சி
வீங்கிபக்கோ டாமுலையில் பூந்தினவு கொண்டுன்
விரகத்தில் அதிரசமுற் றன்பிட்டு வந்தாள்
தாங்குதனின் கடன் செந்தில் வேலரசே அவணின்
றன்பாலா அடைதலெழில் தருமுறுக்குத் தானே!'

இதில் 12 பலகார வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.அதனூடாக இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது.முடிந்தால் இரண்டு பொருள்களையும் பின்னூட்டத்தில் தாருங்கள்.

போவதற்கு முன் ஒரு பாடல்,

வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?

நயம்;

ஒரு பெண்ணைப் பார்த்து நீ உள்ளமிளக மாட்டாயா? ஒரு பேச்சுரைக்க மாட்டாயா? என்பதைப் புலவர் பா நயம் தோன்ற வெள்ளரிக்காய்,அவரைக்காய், மிளகாய்,பேச்சுரைக்காய் முதலிய பெயர்களைக் கொண்டு இப் பாடலைப் பாடியுள்ளார்.பாடிய புலவர்,அழகிய சொக்கநாதபிள்ளை.

Thursday, April 9, 2009

வெள்ளந்தி உள்ளங்கள்

கடந்த இரண்டு வாரங்களில் கிடைத்த சில சொற்ப நிமிடங்களுக்குள் நட்பு வீடுகளை எட்டிப் பார்த்தேன். அகநாழிகை தன் மகளைப் பற்றிய அழகிய பதிவொன்று போட்டிருந்தார்.அவருக்கு 'நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் வாசு'என்றுஒரு பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்து விட்டு இரண்டு நாட்களின் பின் மீண்டும் திறந்தால் அந்த அழகிய பதிவு எடுக்கப் பட்டு மன்னிப்புக் கேட்கப் பட்டிருந்தது.மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது.ஆனாலும் அந்த அழகிய சுட்டிச் சிறுமி இடம் மாறி இப்போது மனதுக்குள் வந்துவிட்டாள்.

இருந்த போதும்,அவருடய பதிவு குழந்தைகள் பற்றிய என் எண்ணப் பதிவுகளை மீண்டும் கிளறி விட்டது.சிறியதாகவேனும் அது பற்றி ஒரு பதிவு இன்று போட வேண்டும் என்று நினைத்தவாறே வந்தால் 'மழை' வலைப்பூ சகோதரியும் அவ்வாறு ஒரு பதிவு போட்டிருக்கிறார்.சரி, இப்போது குழந்தைகளின் பூங்காவனத்தில் மழை போலும்.

முந்தய என் குழந்தைகள் பற்றிய பதிவில் சொல்ல மறந்த இப்போது அகநாழிகையால் ஞாபகத்துக்கு வந்த என் வட இந்தியத் தோழி சொன்ன கதை இது.தன் 5 வயது மகன் வீட்டில் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அதில் குந்திதேவி சூரிய பகவானிடம் குழந்தையை வரமாகப் பெற்ற காட்சி நடந்து கொண்டிருந்ததாம்.அப்போது அவரது தந்தை,'மகனே நீ வளர்ந்து எங்களைப் பார்த்துக் கொள்வாயா?' என்று கேட்டாராம்.மகன் உடனே ஆம் எனப் பதிலளித்துவிட்டு சற்று தீவிரமாக யோசித்து விட்டு சொன்னாராம்,'அப்பா,உங்களை என்னால் பார்க்கமுடியுமோ தெரியாது, ஏனென்றால் அப்போது நான் சூரியனைக் குப்பிட்டு எனக்குச் சொந்தமாகப் பல குழந்தைகள் இருக்கக் கூடும்.அப்படி என்றால் நான் அவர்களைத் தானே முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று உள்ளங்கைகள் இரண்டையும் முன்னால் விரித்த படி மிகவும் தீவிர பாவனையோடு சொன்னாராம்.

ஆஹா! 'வெள்ளந்தி மனம்' என்பது இதைத் தானோ!

இந்த ஆண் குழந்தையின் தந்தை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராம். அது போல் தன் மகனும் விளையாட்டில் ஆர்வமுள்ளவனாக இல்லையே என்பது அத் தந்தையின் கவலை.அதனால் குழந்தையின் தாயார் மகனுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டும் விதமாகக் கதைகள் சொல்வதும் விளையாட்டிடங்களுக்கு அழைத்துச் செல்வதுமுண்டாம்.5 வயதில் ஒரு நாள் பாடசாலையில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து ' அம்மா, நான் இன்று விளையாட்டில் இரண்டாவதாக வந்தேன்' என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவித்தாராம்.தாய்க்கோ மிகுந்த மனமகிழ்ச்சி;மனநிறைவு;பெருமை.மகனை மிகவும் உற்சாகப் படுத்தி நல்லது மகனே அப்படித்தான் இருக்க வேண்டும். 'அடுத்தமுறை இன்னும் நன்றாக முயன்றாயானால் முதலாம் இடத்தை நீ பிடித்து விடுவாய்' என்று பல வழிகளிலும் உற்சாகப் படுத்தி, குழந்தையின் தந்தை வீட்டுக்கு வந்த பின், மகன் விளையாட்டில் இரண்டாவதாக வந்த விடயத்தைப் பெருமையாகக் கூறினாராம். உடனே தந்தை மகனிடம் 'எத்தனை பேர் ஓடினீர்கள்' என்று கேட்டாராம்.உடனே மகன் ஒரு தயக்கமுமின்றிப் பதிலளித்தானாம்,'இரண்டு பேர் அப்பா.':)

முன்னொரு காலம்,1995ம் ஆண்டு,ஒக்ரோபர் மாதம் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வடமராட்சிப் பகுதிக்கு முழு யாழ்ப்பாணமுமே வந்திருந்தது. அங்கு என் தூரத்து உறவினர்களுடய வீட்டில் நான் 3 நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது.அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள்.இரவு வேளைகளில் தூரத்தே ஷெல் வீழ்ந்து வெடிக்கும் ஓசை அடிக்கடி கேட்கும்.நாம் இரவு உணவின் பின் பின்கட்டில் உட்கார்ந்து நாட்டு நிலைமைகள்,மக்களின் இறப்புகள், இனப்பூசல்கள்,பிள்ளகளின் எதிர்காலம் என்று பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளகளும் இதனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்த ஒரு நாள் வெடிச் சத்தங்கள் மிக அருகாமையில் கேட்கத் தொடங்கின.அவர்கள் எங்கும் போவதில்லை என்ற தீர்மானத்திலிருந்தார்கள்.அதனால் தந்தை தன் மூத்த மகனிடம்,'தற்சமயம் நாங்கள் இறக்க நேர்ந்தால் நீ எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவை இல்லை, ஒரு சவப் பெட்டி வாங்கி எங்களை அதில் போட்டு எரித்து விட்டால் போதும்' என்று சொன்னார்.மகன் எதுவும் பேசவில்லை.மறு நாள் காலை நான் புறப்பட ஆயத்தமான போது மீண்டும் ஒரு முயற்சியாக அவர்களை என்னோடு வந்து விடுமாறு கேட்டேன்.அவர்களுடய முடிவில் மாற்றம் இருக்கவில்லை.அப்போது மகன் சொன்னான்.'அப்பா, நாங்கள் முதலிலேயே 2 சவப் பெட்டி வாங்கி வைத்து விட்டால் நல்லது.அந்த நேரத்தில் நாம் அதற்காக இந்த வெடிச்சத்தத்திற்குள் ஓடித்திரிய வேண்டியதில்லை அல்லாவா? நாம் இப்போதே அவற்றை வாங்கி வைத்து விடுவோமா?' என்று கேட்டான். இறைவனின் திருவருளால் அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சியை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை.


சில வருடங்களுக்கு முன் Reader's Digest ல் என்று நினைக்கிறேன்.(நன்றாக நினைவில்லை)வாசித்த ஒரு தாயாரின் அனுபவக் குறிப்பு இது.தன் மகள் 3,4 வயதிருக்குமாம்.மலைப் பாங்கான ஒரு இடத்தில் அவர்களது வீடு அமைந்திருந்ததாம்.அவரது மகள் 3,4 வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள அவரது வயதை ஒத்த சினேகிதர்களோடு விளயாடுவது வழக்கமாம். ஒரு நாள் மாலை வழமை போல் அவர் விளையாடச் சென்றிருந்தாராம்.திடீரென மழை மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து கொண்டனவாம்.இடியும் மின்னலும் தோன்ற ஆரம்பித்து விட்டனவாம்.குளிர் காற்றும் கடும் இடியும் மின்னலும் சட்டென்று சூழ்ந்த இருளும் தாயாருக்கு பதட்டத்தை ஏற்படுத்த பிள்ளையைப் போய் கூட்டி வர வேண்டும் என்ற உந்தலில் அவசர அவசரமாக வீதிக்கு வந்தாராம். தூரத்தில் மகள் வருவதும் மின்னல் ஏற்படுகின்ற தருணங்களில் உடனடியாக நின்று புன்னகை பூத்து விட்டு மின்னல் நின்றபின் நடந்து வந்தாராம். ஒவ்வொருமுறை மின்னலுக்கும் அக்குழந்தை அதையே செய்தவாறு பயமிலாமல் வெகுஜோராக நடந்து வந்தாராம்.ஓடிச் சென்று பிள்ளையை அணைத்தவாறு 'ஏன் மகளே,பயமில்லையா உனக்கு மின்னல் மின்னுகின்ற போதிலெல்லாம் நின்று சிரித்தவாறு வருகிறாயே, ஏன்?' என்று கேட்டாராம்.அதற்கு மகள் சொன்னாளாம்,'ஆம் அம்மா நான் நின்று சிரித்து விட்டுத் தான் வந்தேன். கடவுள் photo எடுக்கும் போது நான் அழகாகச் சிரிக்கத்தானே வேண்டும்.' என்றாளாம்.(மின்னல் பிள்ளைக்கு கடவுள் எடுக்கும் photo வாகத் தெரிந்திருக்கிறது.)என்னே அழகு! குழந்தைகள் உலகு!!

2 மாதங்களின் முன்னால் இங்கு நடந்த சம்பவம் ஒன்று. நான் வசிக்கும் தொடர் மாடிக் குடியிருப்பில் ஒரு தமிழ் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.அவர்களுக்கு 5 வயதிலும் 1+ வயதிலும் குழந்தைகள் உள்ளன.அவர்கள் வேலை நிமித்தம் கிராமப் புறம் ஒன்றுக்கு மாற்றலாகி விட்டார்கள்.வார இறுதிகளில் அவர்களோடு தொலை பேசியில் நாம் கதைப்பதுண்டு.குறிப்பாக மூத்த மகள் தாரணி எங்கள் எல்லோரது உள்ளத்தையும் கவர்ந்தவர்.ஒரு முறை கதைக்கும் போது 'எப்போது சிட்னிக்கு வருகிறீர்கள் தாரணி' என்று கேட்டேன்.அவ சொன்னா, நான் கட்டாயம் ஒருமுறை வரத்தான் வேண்டும் யசோ அன்ரி.ஏனென்றால் நான் வரும் போது என் வீட்டை நன்றாகப் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் கராஜ் இனைப் பார்க்க மறந்து விட்டேன். நான் வந்து ஒருமுறை அதனைப் பார்த்து விட்டுப் போக வேண்டும்.'என்றார்.

2 நாட்களின் முன் என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்.ஒரு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்காக என் சகோதரி சுவிஸ் நாட்டில் இருந்து பிள்ளகளை கல்வி நிமித்தம் அங்கு விட்டு விட்டு 2 வாரத்திற்கு வந்திருந்தார்.11 வயதும் 6 வயதும் நிரம்பப் பெற்ற அவர்களுக்குக் காலையும் மாலையும் தாயாரோடு பேசுவதற்கும் கேட்பதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும்.மணிக் கணக்காகவும் அது நீளும்.இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னாலும் இவ்வாறு தான் பேச ஆரம்பித்தார்கள். நாம் வெளியே செல்வதற்கு ஆயத்தப் பட்டிருந்தோம். அதனால் மகளிடம் என் சகோதரி சொன்னார்,'மகள் நான் land phone ல் இருந்து பேசுகிறேன். காசு நிறைய விரயமாகிறது.நான் பிறகு கதைக்கிறேன்' என்று சொல்ல, 'சரி அம்மா அப்ப நீங்கள் வையுங்கோ' என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்கள்.மாலையில் அவர்கள் எடுத்தார்கள், 6 வயது மகள் சகோதரியிடம் சொன்னாள்,'அம்மா, நீங்கள் காசில்லை என்று கவலைப் படாதைங்கோ.என்னிடம் நிறையக் காசிருக்கிறது அதனை அழகாக வண்ணக் காகிதத்தில் சுற்றி றிபன் எல்லாம் கட்டி நான் அதனை airportக்கு நீங்கள் வரும் போது கொண்டு வருகிறேன்.அது மிகவும் பாரமாக இருக்கும்' என்று சொன்னாளாம்.(சில்லறைக் காசுகள் என்பதால்)

பரிசுத்தமான இந்த குழந்தை மலர்கள் எல்லாம் உலகத்தின் உன்னதங்களின்றி வேறென்ன!

கடவுள் தந்த அழகிய வாழ்வு........

Thursday, March 26, 2009

நினைவுகளில்.....!

போர் சூழ்ந்த தாய் நாட்டில் இருந்தது நான் வாழ்ந்த கிராமம்.விவசாய பூமி.பின் பக்கம் புகையிரதப் பாதையும் முன் பக்கம் யாழ் - கண்டி வீதியும் எல்லைகளாகக் கொண்ட 5 ஏக்கர் நீள் சதுர நிலப் பகுதி.

மனிதர்கள் மட்டுமன்றி குரங்குகள், மயில்கள்,கிளிகள்,கொக்குகள் வண்ணப் பறவைகள்,வண்ணாத்திப் பூச்சிகள்,மான்,மரை, பன்றி,யானை என்று எல்லோரும் நம் உறவினர்கள்.அடிக்கடி வந்து சுகம் விசாரித்துப் போவார்கள்.அன்பின் மிகுதியால் உரிமையோடு குரங்குகள் மாங்காய்களையும், யானைகள் தென்னங்கன்றுகளையும் வந்ததன் அடையாளமாய்க் கொண்டு போவதுமுண்டு.

அவர்கள் போதாதென்று வீட்டில் நாய்,பூனை, ஆடு, மாடு, கோழி என்றும் சில உறவினர்கள்.நாய் பூனையோடு கோவிப்பதும்,ஆட்டுக்குட்டிகள் கதிரையில் ஏறித் தூக்கம் போடுவதும் கோழிகள் முற்றத்தில் அடிக்கடி எச்சம் போடுவதும் அன்றாட நிகழ்வுகள்.

சகல கனி வர்க்கங்களாலும் தென்னை மரங்களாலும் பூஞ்செடிகளாலும் குரோட்டன்களாலும் ஒரு மலிகைப் பந்தலாலும் சூழப்பட்டு மூன்று அறைகளாய் கட்டப் பட்ட எங்கள் கல் வீடு வெள்ளையாய் நடுவில் நின்றிருந்தது.

பாமர மக்களால் சூழப்பட்ட கிராமம் அது. அருகில் ஒரு பிள்ளையார் கோயில்.காலையும் மாலையும் கோயில் மணி கேட்கும்.எங்கோ கூலி வேலை முடித்துப் போகும் ஆண்களும் பெண்களும் நம் கிணற்றில் தொட்டியில் நிறைத்திருக்கும் தண்ணீரில் குளித்துக், கலகலத்து ஈரத்துணியை கழுவிப் பிளிந்து தோளில் போட்டபடி வீட்டுக்கு வருவார்கள்.

முற்றத்தில் வந்து பெண்கள் குந்தினார்கள் என்றால் அவர்களுக்குக் காசு கடனாகவோ அல்லது தேனீரோ அல்லது தம் குறை நிறைகளை அம்மாவிடம் சொல்ல வேண்டிய தேவை ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்.அதுவே ஆண்களாக இருந்தால் கிடுகோ, தேங்காயோ, மண்ணெண்ணையோ,தென்னம் மட்டைகளோ தேவை என்று அர்த்தம்.அதுவே சின்னப் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடய புதுச் சட்டை தைக்கப்பட வேண்டும் அல்லது சாரம் மூட்டப் பட வேண்டும் அல்லது தாயார் முட்டை அல்லது காசு கடன் வாங்கி வரும் படி அனுப்பப் பட்டிருப்பார்கள்.சில வேளை பாலும் பழவர்க்கங்களும் அவர்களது வேண்டுகோளில் ஒன்றாய் இருக்கும்.எளிமையிலும் நேர்மையோடும், கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்ந்த சனங்கள்.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நிற்குக் காலங்களில் 'என்னங்கம்மா, பெரிய தங்கச்சி வந்திருச்சா' என்று தவறாமல் ,லெமென் பவ்'பிஸ்கட்டோடு கேட்டு வரும் கறுப்பையா,பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு என்னைத் தவறாமல் பார்க்க வரும் புஸ்பா, வெற்றிலைக் காவி படிந்த பற்களால் மிக அருமையாய் வெகுளியாய் சிரித்தபடி வரும் பூமணி,சிறு வயதில் என் தங்கையோடு கூடி விளையாடிய பாலன்,தடியில் ரின் மூடி பொருத்தி கார் விளையாடும் கால்சட்டை'கட்டி' இருக்கும் சிறு பிள்ளைகள்,5,6மைல்கள் சைக்கிளில் 'சாவகச்சேரி'பிலாப்பழத்தை கட்டிக் கொண்டு 'என்னவாம் கிறஜுவட்' என்றபடி வரும் பனங்கட்டி மாமா,நான் தவறாமல் விசிட் பண்ணும் பக்கத்து வீட்டு பாலன் கமத்தன்ரி.முன் வீட்டு மோனைச் சித்தப்பா,தனியாக வசித்து வந்த வேலு,.......

இதுவே நான் 'வாழ்ந்த' கூடு.எனக்கு 'உண்மை வாழ்வை' உணர்த்திய காடு.

இன்று கூடு பிரிந்த பறவைகளாய்.......

யார் யார் எங்கெங்கோ....?

எங்கிருந்தாலும் வாழ்க நீவீர்!

பாதுகாப்பாய்! பாதுகாப்பாய்!! பாதுகாப்பாய்!!!

Thursday, March 19, 2009

சிந்திய முத்துகள்

எடுக்கவா? கோர்க்கவா?

தமிழர் வரலாற்று மணற் பரப்பில் நவரத்தினங்களாய் புதையுண்டு கிடக்கும் இலக்கியச் செல்வங்கள் எத்தனையோ! சில அடையாளம் காணப் பட்டன; சில பட்டை தீட்டப் பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன;சில கேட்பாரில்லாமல் சிந்துண்டு போயுள்ளன.

சில தனிப்பட்ட புலவர்கள் பாடி வைத்த பாடல்கள் அத்தகைய தன்மையின.அவர்களில் பலர் ஊரின் நடுவிலே உலாவித் திரிகின்ற பயன் தரும் கனி மரங்களைப் போல் இருந்திருக்கின்றனர்.வறுமையும் வசதியின்மையும் அவர்களை மண்ணுக்குள் தள்ளி விட்டன.அவர்கள் மிளிராது போயினர் எனினும், தனிப் பாடல்களாய் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் ஆங்காங்கே தோற்றம் காட்டுகின்றன.அவ்ர்களிடம் திருவள்ளுவர், கவிச் சக்கரவத்திகள், சான்றோர்கள் ஆகியோரிடம் இருக்கின்ற திறமைகள் போல சில வேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவின் எல்லைகளுக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும், இயற்கை அழகுகளையும் வசீகரிக்கத்தக்க வகையில் சொல்லும் சமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.அவ்வாறு மண்ணுக்குள் புதைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் சில தனிப் பாடல்களை தருவது இந்தப் பதிவின் நோக்கம்.

யார் பாடியது என்று தெரியவில்லை ஒரு பாடல் இருக்கிறது.இதோ, சூரியன் உதிக்கிறது;சூரியகாந்திப் பூ முகம் மலர்கின்றது;மஞ்சள் மகரந்தங்களால் முகம் மினுக்கி, சூரியன் செல்லும் திசை நோக்கித் தவம் கிடக்கிறது அம் மலர்;இந்தக் 'கள்ளத்'தவத்தை சூரியனின் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டால் சிரிக்குமோ? அழுமோ ஆரறிவார் என்று அழகுறக் கற்பனை கொள்கிறது கவிஞ மனம். பாடல் இது தான்,

"மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடி பூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருகுக்குமோ ஆரறிவார்."

என்ன காரணமோ தெரியவில்லை. அந்தக்காலத்தில் வறுமையும் புலமையும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்திருக்கின்றன.இப்போது கூட அது விதிவிலக்கல்ல. இன்றய எழுத்தாளர்களின் நிலை பற்றி திருப்பூர்.கிருஷ்னன் அவர்கள் கார்த்திகை '08 யுகமாயினியில் மிகவும் விசாரப் பட்டு எழுதியிருந்தார்.பொன்னாடைக்குப் பதிலாக ஒரு வேட்டியையாவது போர்த்தக்கூடாதா?உடுத்துக் கொள்ளவாவது பயன்படுமே! என்று கேட்டிருந்தது தான் ஞாபகம் வருகிறது.

படிக்காசுத் தம்பிரான் என்ற புலவரும் அதற்குத் தப்பவில்லை.அந்தக் காலத்தில் புலவர்கள் வள்ளல்களைப் பாடிப் பரிசுப் பொருட்களைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இப் புலவர் சீதக்காதி என்ற வள்ளலை புகழ்ந்து பாடிய பாடல் இது.


"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி; கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்; தொல் பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவண்ணர் நெஞ்சம்; அனு தினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி திருக்கரமே!"

இப் புலவர் வாழ்ந்த காலம் கி.பி.1686-1723 என்று அறியப் படுகிறது.
இப் பாடலைப் பார்க்கும் போது கர்ணன் திரைப் படத்தில் கர்ணனின் ஈகையைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று உங்களுக்கு ஞாபகம் வரலாம். அது'கொடுத்துச் சிவந்தன கர்ன மாமன்னர் திருக்கரமே'என்று முடியும்.சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய பாடல் அது.

புலவர்கள் தம் வறுமையை வேடிக்கையாகவும், நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் கூடப் பாடி இருக்கிறார்கள்.அவர்கள் மிகக் கோபக்காரர்களும் கூட.இரட்டையர்கள் இதில் வெகு சமர்த்தர்.இவர்களில் ஒருவர் குருடர்; மற்றவர் முடவர்; இருவரும் புலவர்கள்.குருடரின் தோளில் முடவர் ஏறிக் கொள்வார்.முடவர் வழிகாட்ட, குருடர் அவ்வழி நடப்பார்.முடவர் காட்டும் வழியோ குருடருக்கு குன்றும், குழியுமாக இருக்கும்.இதனால் சலிப்புற்றுப் பாடிய பாடல் இது.இவர்களில் முதல் பாதியை ஒருவர் பாட, மற்றவர் மறு பாதியை முடிப்பார்.முதல் பாதியைக் குருடர் பாடுகிறார்,

"குன்றுங் குழியும் குறுகி வழி நடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ?"

என்று அவர் அடி எடுத்துக் கொடுக்கிறார்.அவர் தோளில் குஷியாகக் குந்தியிருக்கும் முடவர் அதற்கு பதில் கூறுகிறார், இப்படி,

"- ஒன்றுங்
கொடாதானை கோவென்றும் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்."


இங்கு கோ என்பது பசு; காம தேனு.கா என்பது கற்பக தரு.இரண்டும் வேண்டுவனவற்றை இல்லையெணாது வழங்குவன.( உணவினை வழங்கும் அட்ஷய பாத்திரம் போல :) )

காளமேகம் என்றொருவர் இருக்கிறார். கோபத்திற்கும், நையாண்டிக்கும், புலமைக்கும் மிகப் பேர் போனவர்.இவரும் வறியவர் தான்.


'இம்' என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
'அம்' ந்ன்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே ஆயின்
பெரும் காள மேகம் பிள்ளாய்!


என்று தன்னைப் பற்றிப் பாடியவர்.இம் என்பதற்கு முன் 700.800 பாட்டுகளும்,அம் என்று சொல்லிய மட்டில் 1000 பாட்டுகளும் பாடி முடிந்து விடுவேன்.சும்மா இருப்பேன்; எழும்பினேன் என்றால் மழை போல் பாட்டுகள் பொழிவேன். பிள்ளை, நான் கவி காளமேகம் கண்டியளோ என்பது அப்பாட்டின் பொருள். காள மேகம் என்பது மழை பொழியத் தயாராக இருக்கும் மேகம்.

இந்தக் காளமேகத்தார் பெரும் கோபக்காரர்.வறுமையோடும் வாழ்ந்தவர்.சோழ தேசத்துச் சத்திரம் ஒன்றுக்குச் சாப்பிடப் போகிறார்.புலவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் முன் குடும்பி வைத்த பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.பரிசாரகர் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்க, பிராமணரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது முன்குடுமி சாப்பாட்டுக்குள் விழுந்து விட்டது.அவர் சாப்பிடுவதை நிறுத்தாமலே குடும்பியை எடுத்து உதறினார். அது முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்த காள மேகத்தின் மேல் விழுந்துவிட்டது. வந்ததே கோபம்.கோபத்தோடு பிறந்தது பாடல்,


"சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனை ஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!"

எப்படி இருக்கிறது கோபமும், பாடலும்?

அவரது சாப்பாடு, சுகபோகம் எல்லாம் சத்திரத்தில் தான்.அதிலும் அவருக்கு சாப்பாடு நேரத்திற்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் இரவுச் சத்திரத்தில் சாப்பாடு ஆக்க சற்றுத் தாமதமாயிற்று.அது தாமதமானால் என்ன? காள மேகத்திற்குப் பாடல் பொழிய ஆரம்பித்து விட்டது. இப்படி.


"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி
உலையிலிட ஊருறங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்."

:).

எங்கோ போய் விட்டேன்.ஏதோ எழுதப் போய் எதிலேயோ வந்து முடிந்திருக்கிறது இந்தப் பதிவு.இலக்கியத்துக்குள் நடக்கப் புகுந்தால் அது இப்படித்தான்.நம்மை மறந்து தொலைந்து போய் விடலாம்.எம்மை அறியாமல் அது எங்களை எங்கோ கொண்டு சென்று சேர்த்து விடும்.அங்கு மலிந்து கிடக்கும் செல்வங்கள் அப்படி! வளங்கள் அத்தகையன.

விடயத்திற்கு வருவோம்.இரட்டையரும், காளமேகமும் ஓரளவு அடையாளம் காணப் பட்டவர்கள் தான்.தனிப்பட்ட புலவர்களின் வித்துவச்சிறப்பும் சொல்சிலம்பமும் இன்னும் நயக்கத்தக்கன.அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இப்போது நீங்கள் போவதற்கு முன் இன்னொரு பாட்டு.

மதுர கவி என்று ஒரு புலவர்.அவர் ஒரு வள்ளலைக் கண்டு பாடிப் பரிசு பெற்று விடை பெற ஆயத்தப்பட்ட போது அவ் வள்ளல்,'ஏன் இப்படிப் பறக்கிறாய்' என்று வினவ, அவர் இப்படிப் பாடுகிறார்.

கொக்குப் பறக்கும்,புறா பறக்கும்,
குருவி பறக்கும், குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்; நானேன்
பறப்பேன்? நராதிபனே!
திக்கு விசயம் செலுத்தியுயர் செங்கோல்
நடாத்தும் அரங்கா! நின்
பக்கமிருக்க, ஒருநாளும் பறவேன்!
பறவேன்! பறவேன்!

என்கிறார். நராதிபன் - நரர்கள் - மனிதர்கள் - நராதிபன் - மனிதர்களுக்குத் தலைவன். என்பது பொருள்.

Monday, March 2, 2009

தலைப்பாகைத் தமிழ்

வழக்கொழிந்த தமிழ் சொற்களுக்காக;


நாட்டு வளம்

ஒன்று:-

சீவக சிந்தாமணியிலே ஏமாங்கதம் என்றொரு நாடு, அது பற்றிய வருணணை இது,

"காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடை கீறி பருக்கை போழ்ந்து
தேமங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமங்கதமென்று இசையாற் றிசைபோய துண்டே"

நயம்: தென்னைகள் காய்த்துக் குலுங்குகின்றன.பாரம் தாங்காமல் அவை பழுத்து வீழ்கின்றன.அது வீழ்கின்ற அதிர்ச்சியினாலே, அதற்குக் கீழே நிற்கின்ற கமுகு மரங்களின் இனிய தேனைப் பொதித்து வைத்திருக்கின்ற பாழைகள் கீறுப் பட்டுப்(வெடித்து) பூங் கொத்துகள் தாறு கிழிகின்றன.அவற்றுக்கு அயலிலே இருக்கின்ற மாம்பழங்கள் கொட்டுப் படுகின்றன,வாழைப் பழங்கள் சிந்துப் படுகின்றன, ஏமாங்கதம் என்ற நாட்டிலே!

எவ்வளவு வளம் நிறைந்த நாடு பார்த்தீர்களா? நாட்டிலே மட்டுமா! ஏட்டிலே! பாட்டிலே யுமல்லவா வளம் கொளிக்கின்றது?

வழக் கொழிந்த சொல்;

தொடை- பாளை, போழ்ந்து- வெடித்து.


இரண்டு:-

தமிழ் இலக்கியப் பரப்பில் ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் நடக்கும் வித்துவச் சண்டை எப்போதும் பிரசித்தம்.இது அதனோடு சேர்ந்த ஒரு பாடல் தான்.சுருக்கம் கருதி அதனைத் தவிர்த்து விட்டு நாட்டு வர்ணணையோடு மட்டும் நிற்கிறேன்.இது ஒட்டக் கூத்தர் பாடிய பாட்டு,

"வெள்ளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழை
துளியோடிறங்கும் சோநாடா..."

நயம்: கரை புரண்டு வரும் வெள்ளத்துக்குள் குதித்தோடி வரும் கருக்(சூல்) கொண்ட வாளை மீன் வேலியிலே நிற்கின்ற கமுகு மரத்தின் மீது துள்ளிப் பாய்ந்து,மழை பொழியத் தயாராய் இருக்கின்ற முகிலையும் கிழித்து, மழைத் துளியோடு கீழே இறங்குகின்ற வளத்தினைக் கொண்ட சோழ நாட்டவனே...என்று போகிறது அப்பாடல்.

எவ்வளவு செழிப்பான பூமி பார்த்தீர்களா?

வழக் கொழிந்த சொல்;

சினை கொண்ட - கருவுற்ற, சூல்கொண்ட, கற்பமடைந்த.


மூன்று:-

இது புகழேந்தியாரின் சோழ நாட்டு வர்ணணை.புகழேந்தி ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இளையவர்.புகழேந்தி பாடுகிறார் இப்படி,

"பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா..."

நயம்: சேறு பொருந்திய வயலிலே உழுகின்ற உழவர்களுக்குத் தண்ணீர் விடாய்க்கிறது( தாகமெடுக்கிறது).அதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள்.குரங்குகள் எல்லாம் பலாக்கனிகளைப் பாழ் படுத்துகின்றன என்று பாவனை செய்து கொண்டு குரங்குகளுக்கு நிலத்தில் கிடக்கும் சங்குகளைப் பொறுக்கி எறிகிறார்களாம். உடனே குரங்குகள் கோபம் கொண்டு செவ்விளநீர்களைப் பறித்து உழவர்களின் மேல் விட்டெறிகின்றனவாம். அதன் மூலமாக உழவர்கள் தாக சாந்தி செய்துகொள்ளும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டவனே என்று தொடர்கிறது அப் பாடல்.(கவிஞர் சொல்ல வருகின்ற கருத்து இதன் பின்னர் தான் வரும்,சுருக்கம் கருதி அவை இடம் பெறவில்லை.)

வழக்கொழிந்த சொல்;

பங்கம் - சேறு.


நான்கு:-

சரி ஈழ நாட்டு வளத்தையும் சற்றுப் பார்ப்போமே!பறாளை விநாயகர் பள்ளில் எங்கள் சின்னத் தம்பிப் புலவர் இப்படிப் பாடுகிறார்.

"மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்
அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களை சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே"

நயம்; முகில்களை எட்டுகின்ற மாடங்கள் தோறும் மயில்களைப் போன்ற இளம் பெண்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.தாமரைக் குளத்தில் அழகான தாமரைப் படுக்கையின் மீது அன்னக் கூட்டங்கள் விளையாடுகின்றன.அதற்குள் (குளத்துக்குள்)உறங்கிக் கொண்டிருக்கும் எருமை மாடுகள் சுறாக்களுக்கு இடஞ்சலாக இருப்பதால் அவைகள்(சுறாக்கள்)(இடமில்லமையால் மேலே துள்ளி)ஓடிப் பலாக் கனிகளைக் கீறி இஞ்சி வேலியின் அருகிலிருக்கும் மஞ்சள் செடியின் மேல் விழும் நாடு எங்கள் ஈழ நாடு என்கிறார் சின்னத் தம்பிப் புலவர்.

வழக்கொழிந்த சொல்:

மஞ்சு- முகில்,பள்ளி - படுக்கை(பள்ளியறை-படுக்கையறை), மேதி - எருமை.


ஐந்து:-

கம்பன் காட்டிய ஈழ வளத்தைப் பார்க்காமல் போக முடியுமா என்ன? அவர் பாடுகிறார் இப்படி,

"மாகாரின் மின் கொடி மடக்கின ரடக்கி
மீகார மெங்கனு நறுந்துகள் விளக்கி
ஆகாய சங்கையினை யங்கையினி னள்ளிப்
பாகாய செஞ்சலவர் வீசு படு காரம்"

நயம்; கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு (துடைப்பம்)போல் செய்து மீகாரமாகிய மேல் வீடுகள் (மாடி வீடுகள்,மேல் மாடம்)தோறும்(உட் பரிகைகளில்) வீழ்ந்து கிடக்கின்ற நறுந் துகள் - பூக்களில் இருந்து கொட்டுப் பட்டுக் கிடக்கின்ற மகரந்தத் துகள்களை நீங்குமாறு நன்கு விளக்கி(பெருக்கி,இல்லாது செய்து) பக்கத்திலே ஓடுகின்ற அருவியிலே ஓடுகின்ற தண்ணிரை உள்ளங் கைகளிலே மொண்டு( முகர்ந்து) கொண்டு வந்து தெளிக்கின்ற மாளிகைகள் நிறைந்த நாடு என்கிறார் கம்பர்.எத்தனை அழகான கண்ணுகர் கனி இது!!

வழக்கொழிந்த சொல்;

மாகார்-கார் மேகம், காரம்-வீடு, மீகாரம்-மேல்வீடு, மின் கொடி-மின்னல், அங்கை -அகங்கை,உள்ளங்கை.


ஐந்து பாடல்கள்; பத்துச் சொற்கள்.பத்து வந்து விட்டது தானே?


இன்னும் ஒரு சொல் இருக்கிறது. அதனை விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை.அந்தச் சொல்,

கார்த்திகைப் பூ - செங்காந்தள் மலர்.


(கார்த்திகை மாதங்களில் வரண்ட பிரதேசங்களில் பூப்பது. சிவப்பும் மஞ்சளும் அதனுடய நிறம். 6 மெல்லிய நீளமான ஓரங்கள் சுருள் சுருளாக அமைந்த அடியில் அகன்று முன் புறம் உள் நோக்கிக் குவிந்த இதழ்களைக் கொண்ட அழகிய பூ.கொடி வகையைச் சார்ந்தது. ஈழத்தில் வேலி ஓரங்களில் கார்த்திகை மாதங்களில் பூத்திருக்கும்.

ஈழ விடுதலைப் போரில் முதல் போராளி இறந்தது ஒரு கார்த்திகை மாதம்.அதனால் இது ஈழத் தமிழர்களின் தேசியப் பூ. மஞ்சளும் சிவப்பும் எங்கள் தேசிய நிறம்.)


விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய அனைத்து போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் "தலைப்பாகைத் தமிழின்" மண்டியிட்ட வணக்கங்கள்.

ஓம் சாந்தி.நான் தெரிவு செய்திருக்கும் மூன்று பேர்;

1) ஜெயன் மகாதேவன் - சீரிய சிந்தனைகளின் சொந்தக் காரன்.
http://jeyan15.blogspot.com

2) உமா பார்வதி -அன்பாலும் ஜீவகாருண்யத்தாலும் என்னை ஆகர்ஷித்தவர்.
http://umashakthy.blogspot.com

3) கானா பிரபா - பண்பான மனிதர்.
http://kanapraba.blogspot.com

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பற்றி (குறைந்த பட்சம் 10) நீங்கள் ஒரு பதிவு போடுவதோடு மேலும் 3 பதிவர்களை நீங்கள் தெரிவு செய்யவும் வேண்டும்.

ரசிகாவுக்கு நன்றி.
http://rasigarasigan.blogspot.com

Sunday, March 1, 2009

அழைப்பிதழ்

ஆழமும் அமைதியும் அடக்கமும் கொண்ட சின்னப் பெண் ரசிகா "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" என்று என் வீட்டிலும் விருந்து போடச் சொல்லி விட்டார்.அதனால் இவ் வாரம் புதிதாகப் பல விருந்தாளிகள் வீட்டுக்கு வரப் போகிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

விருந்துண்ட வீடுகளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.
வித்தியாசமாக நான் விருந்து படைக்க வேண்டாமா என்ன? ஹேமா( வானம் வெளித்த பின்னும்) கவிதையாலே ஒரு சிறப்பைச் சேர்த்து ஈழத்தின் வழக்கொழிந்த சொற்களை கூட்டஞ்சோறு என்ற தலைப்பின் கீழ் செட்டாகத் தந்திருக்கிறார்.ஊரில் பாவிக்கும் சொற்களைக் கொண்டே கமலும் ஒரு பதிவு போடப் போகிறாராம்.நைஜீரியா ராகவன் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து ஜம்மென்று அம்மி குழவி வரை வந்து விட்டார்.

என் பக்கத்து வீட்டுக் காரர் ரசிகா அருகி இல்லாது போய் விட்ட சில விடயங்களை விடாமுயற்சியோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.நெருங்கிய உறவுக்காரர் பூபதி திரைப் படப் பாடல்களூடாகச் சிறப்பாக மலர்ந்திருக்கிறார்.

இனி நான் என்ன செய்யட்டும்? ஒரே மலைப்பாக இருக்கிறது.


யாழ்ப்பாணத்துக் காலை நேரம்:-

இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைத்து,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ந்து தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தே கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெற்றி, கைகள், மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி வீதி ஓரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நித்திய கல்யாணிச் செடிகள் பூத்திருப்பதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்னுடய பைக்குள் அவற்றைப் போட்ட படியே அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் பாட சாலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னலிட்டு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாகப் போவது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட தாத்தாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு பாட்டி வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத் தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

தாத்தாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வழவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே பாருங்கோ,நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்விக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு பாட்டி அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்விப் பசு குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கன்றுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து, சாம்பலும் தென்னந்தும்பும் கொண்டு விளக்கின சருவத்தில,அல்லது மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? வாற புதன் கிழமை நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - ஒன்றொன்றாக

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வழவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கள் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை ஈழத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)