Friday, October 28, 2016

சிட்னி கம்பன் விழா 2016

கடந்த வார இறுதியில் ( 21, 22, 23ம் திகதிகள்) நடந்தேறியது கம்பன் விழா.

வெள்ளி மாலையில் தொடங்கிய அவ் விழா சனி ஞாயிறு இரு அமர்வுகளாக காலை 9.30 மணியில் இருந்து 1.30 மணி வரையும் பின்னர் மாலை அமர்வுகள் 4.30 இலிருந்து இரவு பத்து மணி வரையும் நடந்தேறியது. மதிய உணவு இலவசம் என்பது ஒரு கொசுறுச் செய்தி.

தமிழுக்கு விழா
தமிழ் இலக்கியத்துக்கு விழா
இலக்கியம் தந்த கம்பனுக்கு விழா!

நிஜமாகவே நெஞ்சுக்குள் பெய்தது ஒரு மாமழை! நீருக்குள் மூழ்கியது தாமரை!!

கம்பராமாயண உவமை ஒன்று இப்படி பேசுவதாக தமிழகப் பேச்சாளர் ஒருவர் பாடினார். அது, ஆந்திராவில் பரந்து விரிந்து ஓடுகிற கோதாவரி நதி பற்றியது. கூடவே அது கவிதையின் வண்ணத்துக்கும் பொருந்திப் போகிற கம்ப வரி. சிலேடை வரி. அது இது தான்.

’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

இங்கும் ஓடியது ஒரு தமிழ் நதி, கோதாவரி போல.....

கரை புரண்ட படி.....

தமிழக, இலங்கை, அயல் மாநிலம் போன்ற இடங்களில் இருந்து மட்டுமன்றி உள்ளூர் பேச்சாளர்களோடு இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தம் ஆற்றல்களைக் காட்டியதும் பத்தாவது ஆண்டு விழா என்பதும் கூடுதல் சிறப்பு.

இந்த கம்பன் விழாவுக்கும் ஏனைய தமிழ் விழாக்களுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறு பாடு உண்டு. கம்பன் விழா ஒரு பண்பாட்டை சுமந்து நிற்கும். அதன் அலங்காரங்களில் இருந்து தொடங்கும் அது. மண்டபத்துக்கு போகும் பாதைகள் எங்கும் தமிழ் புத்தக வரிசைகள், கோலங்கள், குத்துவிளக்கு நிறைகுடம் கூடவே இளந்தமிழ் பெண்கள் திருநீறு சந்தனம் குங்குமம் பன்னீரோடும் பண்பாடு சார்ந்த உடைகளோடும் வரவேற்க காத்து நிற்பர். கூடவே ஓருருவர் அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்த புன்னகையோடு காத்து நிற்பர்.

மேடை பூக்களாலும் தோரணங்களாலும் பதாகைகளாலும் வண்ண விளக்குகளாலும்  பாவை விளக்குகள் ஆளுயரக் குத்து விளக்குகள் பித்தளைப் பூத்தாங்கிகள், குடைகள் சிம்மாசனங்களாலும் தனியழகு பெறும். மிகுந்த சிரத்தையோடு அதனைக் கவனித்த முறை கவனத்தை அள்ளும். அருகாக இராமா சீதா கல்யாண சமேத பெரும் படம் ஒன்று அதற்கான இடத்தில் அதற்கான மரியாதைகளோடு வீற்றிருக்க முன்னாலே பித்தளை விக்கிரகமாக கம்பர் ஏடோடும் எழுத்தாணியோடும் அமர்ந்திருப்பார். அவ்விடத்தை வியாபித்தும் மங்கல கர அணிகலன்கள்.....

இவைகள் ஒரு விதமாக பார்வையாளர்களை வசீகரப்படுத்தி கொண்டாட்ட உணர்வினையும் குதூகல மன நிலையையும் கொண்டுவரவல்லவை. ஏதோ இது நம்ம வீட்டுக் கல்யாணம் என்ற மன உணர்வை இவை கொண்டு வந்து விடுகிறது.

எனக்கிந்த புற அழகு சார்ந்த விடயங்களில் அத்தனை ஈடு பாடு இல்லாத போதும் - அநாவசிய ஆடம்பரத்துக்கு அளிக்கப் படும் செல்வம் - அது விரயக்கணக்கில் வைக்கப்பட வேண்டியது - என்று நான் நினைக்கின்ற போதும் அது கவனத்தை ஈர்த்து அந் நிகழ்வின் பால் ஒன்ற பாதை வகுக்கிறது  என்ற உண்மை  உறைக்கவே செய்தது.

கூடுதல் நிறைவாக ஒலி ஒளி அமைப்புகள்.....

பார்த்துப் பார்த்து; திட்டமிட்டு திட்டமிட்டு கூட்டு முயற்சியின் ஒட்டு மொத்த வெற்றி இவ்விழா!

இவை புறவயப்பட்ட தென்றால் அங்கு ஒட்டுமொத்தமாக நிலவுகின்ற ‘வாசம்’ என்று ஒன்றுண்டு. அது பேச்சில் நடத்தையில்  துலங்கும் ‘பண்பாட்டு வாசம்’. அனைத்துக் கம்பன் கழகத்தாரிடமும் ஒன்று போலவே  இருக்கும் பணிவு, அன்பு, புன்னகை, அடக்கம், உபசரிப்பு, ஒத்துழைப்பு, நட்பியல்பு கூடவே அவற்றுக்கு ஈடாக ராஜ கம்பீரத்தோடு துலங்கும் ஆற்றலும் பேச்சு வன்மையும்.

கம்பனில் இருந்து கம்ப வாரிதியை பிரிக்க முடியாது. சிட்னி என்றால் ஜெயராமில் இருந்து கம்பனைத் தனியே பிரிக்க இயலாது. Cumber land ( கம்பன் நிலம்) என்ற பிரதேசத்தில்  jeyram ( ஜெய (வெற்றி) ராமன்) வாழுதலும் விழா எடுத்தலும் எத்தனை பொருத்தம் பாருங்கள்!இந்த ஜெயராம் பற்றி கொஞ்சமாய் ஏனும் ஏதும் சொல்லாமல் அப்பால் நகருத்தல் எனக்கு நான் செய்யும் அதர்மமாகும். அவர் கானக நடுவே அடர் வானில் தெரியும் ஒரு வடதுருவ நட்சத்திரம். ஒரு புலர் காலைப் பொழுதுக்கான அறிகுறி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இவ்வாறான அபிப்பிராயம் நிலை பெற சில காரணங்கள் உண்டு.

1. அவரிடம் இருக்கும் அர்ப்பணிப்பும் தாய்மை உணர்வும்.
2. அவரிடம் இருக்கும் ஒரு விதமான துறவு நிலை
3. கூடவே அவரோடு இருக்கும் எளிமை அன்பு பணிவு அடக்கம் முதலான அணிகள். தள்ளியே நிற்கும் தன்மை. மற்றவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கும் குணம்.
4. இலக்கியம்,கலைகள், பண்பாடு இவற்றின் பால் அவருக்கு இருக்கும் அபரித்தமான நம்பிக்கை உறுதிப்பாடு மற்றும் அவற்றை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் நாட்டம்.
5. பெறுமதி மிக்க தன் நேரத்தை அமைதியான முறையில் சமூகத்துக்குக் கொடுக்கும் உயர்ந்த உள்ளம்.

அவரின் செயற்பாடுகளை யாரும் சொல்லி நான் அறிகிற பொழுதுகளில் கடவுள் சிலரை சிலவற்றுக்காகப் படைக்கிறாரோ அதற்காகவே அவர்களை தயார் படுத்துகிறாரோ என்று தோன்றும். இவர் அதற்கு முழுதாகப் பொருந்திப் போகிறார்....

பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் திளைத்து மகிழவும் பல பல விடயங்கள் இருந்தன. இருந்த போதும் இரண்டரை நாட்களை முழுதாக எனக்கு ஒதுக்க இயலாது போயிற்று. அதனால் இந் நிகழ்வு பற்றிய முழுமையான பார்வையை - அபிப்பிராயத்தைத் தருதல் என்பதும் இயலாததாயிற்று. அதனால் ஒரு நினைவுக்காக குறிப்புகளாக மட்டும் சில;

கிட்டியவை:

1.இயற்கலை; பேச்சு வன்மை- குறிப்பாக ஈழத்துப் பேச்சாளர்கள், தமிழகப் பேச்சாளர்கள், அவுஸ்திரேலியப் பேச்சாளர்கள், இரண்டாம் தலைமுறைப் பேச்சாளர்கள் என பல அணிகள்!

இந்த 4 வகைப்பட்ட பேச்சாளர்களிடமும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் சில விடயங்கள் இருந்தன. ஈழத்தில் இருந்து வந்த பேச்சாளர்களிடம் பேச்சு வன்மையோடு சிறந்த பேச்சுக்கான தயாரிப்பும் இருந்தது. தமிழகப் பேச்சாளர்களிடம்  நகைச்சுவையும் பொருள் வளமும் கலந்த ஓர் இயல்பான பேச்சு வழக்கு இருந்தது. அவுஸ்திரேலியப் பேச்சாளர்களிடம் பேச்சில் ஒரு வித தீவிரப் போக்கு; வாதத்திறன் காணப்பட்டது. இரண்டாம் தலைமுறைப்பேச்சாளர்களிடம் மிகுந்த திட்டமிட்ட வரையறைக்குள் நிற்கும் குணாம்சம் மிகுந்த சரளமான தமிழ் வீச்சோடு கூடிய அழகோடியது.கூடவே இவற்றோடெல்லாம் சமூகப் பிரச்சினைகள், நடைமுறை அரசியல், சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு என சிலேடையாக தொட்டுச் சென்ற விடயங்கள் பேச்சோடு கிடைத்த ஓர் ஏலக்காய் வாசனை.

2. முதன் முதலாக கலை தெரி அரங்கம்: இது 10வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வு. இயல் இசை நாடகம் மூன்றையும் ஒன்றாக்கி ஒரு மேடையில் இரண்டாம் தலைமுறை படைத்தளித்த ஒரு கூட்டு வெளிப்பாடு.( அந்த ராமநாடக கீர்த்தனைக்கு  நிறைந்த மக்கள் கூட்டம், முடிவில் மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்தார்கள்).

3. சமூகத்துக்கு நாட்டுக்குச்சேவையாற்றிய பெரியோர்கள் மதிக்கப் பட்டமை; கெளரவிக்கப் பட்டமை. அந்த கெளரவத்தை அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளால் கையளித்தமை.(அவர்கள் கூட சொல்லி வைத்தது மாதிரி தமிழ் பண்பாட்டு உடையணிந்து வந்திருந்தார்கள்.)

4. மூன்றாம் தலைமுறையையும் உள்வாங்கி அவர்கள் வயது, பருவம் தன்மைகளுக்கேற்ப வழங்கப் பட்ட மேடை. (சிறு பிள்ளைகள் இராமாயண கதாபாத்திரங்களைப் போல உடை அணிந்து தம் குண இயல்பைக் குறிப்பிட்டு சபையோரிடம் தான் யார் எனக் கேட்டார்கள்)

5.ஒட்டு மொத்தமான நேர முகாமைத்துவம், தொண்டர் படையின் பொறுப்பான செயற்பாடுகள். ( உதாரணத்திற்கு ஒன்று,. கடைசி நாள், கடைசி நிகழ்வு; வழக்காடு மன்றம் .’ குற்றக் கூண்டில் சீதை’ என்பது தலைப்பு. கைத் தொலைபேசியில் அதனை ஒலிப்பதிவு செய்ததால் சொல்கிறேன். நிகழ்வு சரியாக 2 மணி நேரம் 3 நிமிடங்களில் முடிந்தது. மணிக்கூடு எதனையும் பார்க்காமல்; யாருக்கும் நேர சமிக்ஞைகள் வழங்காமல்; கம்பவாரிதி அந்த சாதனையைச் செய்திருந்தார்! )கிட்ட வேண்டியவை:

1. சம பந்தி வாய்ப்பு; முதலாவது தொடக்க நிகழ்வாக அமைந்தது கவியரங்கம். ஒரு பெண் கவிஞர் கூடவா இருக்கவில்லை? வண்ணங்களைப் பற்றிய கவி அரங்கில் ஏன் இப்படி ஒரு தனி வண்ணம்?

2. கூடுதல் அலங்காரம்; நெருக்கடியாகப் பூக்கள். உதாரணமாக கலை தெரி அரங்க நிகழ்வில் ஆடல் பாடல் வாத்தியம் எல்லாம் ஒரு மேடையில் கூடவே பூக்கள் பாவைகளும் சற்றே நெருக்கடியாக....

3. வெளியே இருந்த காட்சியமைப்பு: புத்தக விற்பனை அரங்கு, கலைகாட்சிக்கு கொடுக்கப் பட்ட இடம்; -  பெரிதாக அறிவிக்கப் பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட உள்ளூர் படைப்பாளர்கள் பற்றிய விபரங்கள் படைப்புகளுக்கு வழங்கப்படவில்லை. ஒரு மூலையில் கவனிப்பாரற்று தேமே எனக் கிடந்தன அவரவர்  பெற்றெடுத்த புத்தகக் குழந்தைகள். தனிப்பட ஒருவரைத் தானும் அந்த இடத்திற்கு நிறுத்தப்படாமை சற்றே உறுத்திற்று.

4. தேடலின் தேவை: கவியரங்கு,பேச்சு, விவாத அரங்கு, வழக்காடு மன்றம்....இயற்கலையின் அழகு மிளிரும் வகைப்பாடுகள் தான். இனி இதை விட வேறு வகைப்பாடுகள் பற்றியும் யோசிக்கலாமோ எனத் தோன்றுகிறது.  தெரிந்த கதையும் அறிந்த ஊடகமும் சலிக்காமல் இருக்க ஒரு புதிய வடிவம் -  இந்தத் தேடல் - ஒரு முயற்சி - ஒரு மாற்றம் - நமக்குத் தேவை. பாற்கடலின் ஆழம் மந்திரமலைக்குத் தெரியும். சுழியோடிகளுக்கு முத்தெடுக்கவா தெரியாது?

பார்வையாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் ஒன்றுண்டு. மண்டபம் நிரம்பிய பார்வையாளர்கள். இரண்டாம் மூன்றாம் வரிசைகள் சில துப்பட்டாக்களாலும் இன்ன பிற தனிப்பட்ட சாதனங்களாலும் ‘இது என் சீட்’ என்று ’குறிகளால் காட்டும் முயற்சியை’ செவ்வனே செய்திருந்தது. கூடவே அருகிருப்பவர் ஆசனத்துக்கு காவலாக...ஆனால் பாருங்கள் நிகழ்ச்சி முடியும் வரை அவைகளே நிகழ்ச்சியைப் பார்த்தன. என்னே ஒரு இங்கிதம் பாருங்கள்....

என்றாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி கோதாவரி ஆறெனப் பெருகியது  தமிழ் வெள்ளம். அது,

’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து, புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து , தண்ணென்று, ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

என் மனம் கரை புரண்டு செல்லச் செல்ல... நெஞ்சுக்குள் பெய்தது மாமழை.

தமிழ் பேச்சின் வீச்சால் புயலடித்து போனதொரு வனமாயும் ஆனது  உள்ளம்....

தமிழ் வாழ்க! அதன் இயல் எழில் இனிதே வாழ்க!

வேண்டும்; மீண்டும்!

பின்னிணைப்பு ( 30.10.16) :

என் அன்புத் தோழி கீதா.மதிவாணன் நிகழ்வில் தான் எடுத்த புகைப்படங்களை அனுப்பி இப்பதிவோடு பாவிக்க அனுமதி தந்தார். இத்துடன் அவை பின்னிணைப்பாகப் பிரசுரமாகிறது. நன்றி கீதா.


Friday, October 21, 2016

எட்டுக்குப் பின்னே.....

இலக்கம் எட்டு பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொடுத்திருக்கிறது. எண்ணியல் சாஸ்திரப் பிரியர்களுக்கு அது ஓர் அதிஷ்டமற்ற எண்.

இங்கு வாழும் சீனர்களுக்கோ அது ஓர் பூரணத்தின்; சுபீட்சத்தின்; அதிஷ்டத்தின் அறிகுறி. அவர்கள் தேடித்தேடி அந்த இலக்கம் வரத்தக்கதான வீடுகளை வாங்குகிறார்கள். அவர்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் ஆடம்பர வாகனங்களுக்கு அதன் இலக்கத் தகட்டுக்கும் எட்டு என்ற இலக்கம் வரத்தக்கதான இலகக்த் தகட்டை மேலதிக விலை கொடுத்து வாங்கிப் பொருத்துகிறார்கள்.

இப்படியாக நம்பிக்கைகள்.........

ஆனால் நான் இங்கு சொல்ல வருவது எட்டு என்ற இலக்கம் அல்ல. அதற்கு பின்னால் வரும் ஒன்பது என்ற இலக்கம் பற்றியது.

தமிழில் ஒன்பது என்று ஓர் இலக்கம் இல்லையாம் என்ற தகவல் எனக்குப் புதியதாய் இருந்தது. அண்மையில் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்றொரு புத்தகம் பார்த்தேன். அதிலிருக்கும் நொறுக்குத் தீனி போலான தகவல்கள் மிக சுவாரிசமானவை. அதனை என். சொக்கன் என்பார் தந்திருக்கிறார். அதனை பார்த்த பின்னே அதைப் பற்றி என் இலக்கிய நண்பர்கள் பலருக்கும் சொல்லித் திரிகிறேன். அவருடய பல ஆக்கங்கள் இணையவெளிகளிலும் பரவலாகப் பார்க்கக் கிடைக்கின்றன. அதிலொன்றில் இருந்து தான் இந்தத் தகவலை பெற்றுக் கொண்டேன்.

நான் இனி இடையில் நுழையவில்லை.

( நன்றி http://www.tamiloviam.com )
(ஆக்கம்: கண்ணில் நிறைந்த பாவை)

”................
திருக்குறள் பதின்கவனகர் திரு. ராமையா அவர்களின் கேள்வி - பதில் தொகுப்பான, 'கேட்டதும் கிடைத்ததும்' நூல் வாசித்தேன். (இளமதி பதிப்பகம் - 256 பக்கங்கள் - விலை ரூ 50/-)

அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

இதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.

அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

.... ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...

ஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,

ஏழு
எட்டு
தொண்டு
பத்து

என்றுதான் வரவேண்டும்.

ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.

அதாவது,

எழுபது
எண்பது
தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

இதேபோல்,

எழுநூறு,
எண்ணூறு,
தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

இதேபோல்,

ஏழாயிரம்
எட்டாயிரம்
தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.

இப்படியே, ஒவ்வொரு சொல்லாக இடம் பெயர்ந்து, பெரிய குழப்பத்தையே  உண்டாக்கிவிட்டது என்று நிறுவுகிறார் பதின்கவனகர் திரு. ராமையா”.


Monday, October 3, 2016

வண்ண வண்ணப் பூக்களூடே.....1.

நம்ம ஊரில இப்ப வசந்த காலம். பூக்களின் காலம். இளஞ்சூரிய சூட்டில் பச்சை புல்வெளிகளில் உட்கார்ந்திருக்கும் சின்ன சின்ன மழைத்துளிகள் வைர ஜாலம் காட்ட குளிரான தென்றல்காற்று வருடிச் செல்லும் காலைகளில் வண்ண வண்ணப் பூக்கள் சிரித்துக் கிடக்க கிளிகளும் குருவிகளும் தேன் குடித்துக் களிப்பது சிட்னியின் வசந்த கால அழகுகள்.

ஏராளமான பாதையோரத்து அழகுகளில் கை தொலைபேசி கிளிக்கியவை தான் இவை. இன்னும் ஏராளம் உண்டு. ஆனால், உங்களோடு பகிர இன்னொரு வண்ண வண்ண பூக்காடு உண்டு. அது புத்தகப் பூக்காட்டுக்குள் விரிந்த வண்ணங்கள். இதைத் தொடர்ந்து தனிப்பதிவாக அது வரும் விரைவில். இப்போதைக்கு கண்ணுக்கு இவை!