Saturday, February 20, 2021

அந்த நீல மாபிள் கண்களும் அவலச் சுவையும் நம் தத்துவப் பரிஹாரங்களும்....

 நேற்றய தினம் உருகி நின்ற நீல மாபிள்கள் இரண்டைக் கண்டேன். 

அது பிங்லேடி அப்பிளின் மேல் பதிந்து நின்ற இரு நீலக் கண்கள். 

ஆறுவயதுக் குழந்தைக்குரியவை. தனியே விடப்பட்டதன் அச்ச உணர்வை கொண்டிருந்த உணர்ச்சிக் குவியலென அவை....உணர்வுக் குவளையென அந்தக் கண்கள்....உருகி நின்ற நீல மாபிள்கள்...கண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த நீல டொல்பின்கள்.......அதற்குள் ஊடாடி நின்ற மருட்சி! அது ஒரு மான்குட்டியின் மருட்சி!  

அவளை சமாதானம் செய்ய ஒரு ஸ்டிக்கர் போதுமாக இருந்தது. என்றாலும் அந்தக் கண்களை; அது கொண்டிருந்த உணர்ச்சிகளை மறக்க முடியவில்லை; அது துன்பத்தின் பாற்பட்டதல்ல; அது ஒரு அவல, பய உணர்வின் வெளிப்பாடு. என்ன செய்யப் போகிறேன் என்று எதுவுமே தெரியாது நிற்கதியாய் நிற்கும் நிலை. ஒரு பரிதவிப்பு நிலை.

 போரில் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.... 

போர் ஒன்றை எந்த ஒரு உயிரினமும் இனிப் பார்க்காதிருக்க இந்தப் பிரபஞ்சம்  அருள்பாலிக்க வேண்டும்! 

...........................

இதனைப் பார்த்த போது அண்மையில் படித்த சமஸ்கிருதப் பெண் ஒருத்தி நினைவுக்கு வந்தாள். அவள் அன்பு கொண்டிருந்த தலைவன் பரத்தையிடம் போய் விட்டு வருகிறான். அவன் எங்கு போய் வந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். போகிறவனை அவள் என்ன செய்துவிட முடியும்? 

மாருளை என்ற பெண் கவிஞை ஒருத்தி வட மொழி இலக்கியத்தில் பதித்தது அது. ஒருவித நிர்க்கதியோடு அவனை எதிர்கொள்கிறாள் பெண். மனசெல்லாம் பாரத்தோடு அவள் நிற்கிறாள். முட்டி வழிகிறது வருத்தம். ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல அவன் கேட்கிறான். ஏன் மெலிந்து போயிருக்கிறாய்? அவள் சமாதானம் சொல்கிறாள். நான் அப்படித்தானே! மேலும் அவன் தொடர்கிறான்... ஏன் அழுக்காக உன்னைக் கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? அவள் வீட்டுவேலை என்று மழுப்புகிறாள். உனக்கு என் நினைவு இருக்கிறதா என்று மேலும் அவன் கேட்கிறான். அவ்வளவு தான்!  இல்லை, இல்லை என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கிவிட்டாளாம்.

இந்த நிர்க்கதி நிலை பின்னர் கண்ணீரை கொண்டுவருகிறது. நம் திராவிடப் பெண்கள் அழுதிருக்கிறார்கள். காதலுக்காக; கடந்து போனவர்களுக்காக; போரில் மாண்டவர்களுக்காக அவர்கள் அழுதிருக்கிறார்கள். அதன் உச்ச பட்சமாக இறந்தவர்களை; வீர நாயகர்களை தெய்வாம்சத்துக்கு உயர்த்தி அவர்களை நடுகற்களாக வழிபட்டிருக்கிறார்கள். ஆனாலும், காதலையும் போரையும் தாண்டிய ஒன்றை அவர்கள் கற்பனை பண்ணவில்லை. மிக யதார்த்தமாக வாழ்க்கையை எதிர்கொண்டு ‘அனுபவித்து’ வாழ்ந்திருக்கிறார்கள். 

வாழ்க்கை குறித்த தத்துவார்த்தம் தொனிக்கும் பாடல்களிலும் கூட இந்த வாழ்க்கை தற்காலிகமானது ஆற்றில் விழுந்துவிட்ட இலை ஒன்று ஆற்றின் ஓட்டத்துக்கு ஏற்ப ஓடுவது போன்றது தான் நம் வாழ்க்கை என்றவாறாகவே வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார்கள். உண்பது நாழி உடுப்பது இரண்டே தான் என்று தேவையை வரையறுத்து வைத்திருந்தார்கள். அதனால் பேதமற்ற எளிய வாழ்வு சித்தித்திருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் வருத்தங்களுக்கு மாற்று கருத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

மாறாக சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு அப்பாலான கடவுள் சித்தாந்தம் ஒன்றை கற்பனை செய்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்டது. அதனால் வரும் துன்பங்களுக்கு விதியே காரணம் என அது ஆறுதல் கொண்டது. 

நம்முடய எண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன நம் வாழ்க்கை பற்றிய பார்வையை; வாழ்க்கையை  எப்படி எல்லாம் மாற்றியமைக்க வல்லதாக இருக்கிறது என்பது ஒரு அதிசய விஞ்ஞானம்; 

விஞ்ஞிகை என்ற பெண் விதியின் வலிமையைப் பற்றி சொல்லும் ஸ்லோகம் ஒன்றில் ’துன்பமாகிய பொல்லினால் (தண்டம்) மனதுக்கு அடிக்குமேல் அடி கொடுத்து அதனை மண்ணைப் போல பிசைந்து அதனை உருட்டிப் பிடித்து ஓயாமல் சுளன்றுகொண்டிருக்கும் சிந்தை (எண்ணம்) என்ற சக்கரத்தில் வைத்து பெரிய குயவன் ஒருவனைப் போல இந்த விதி என்னைச் சுளற்றுகிறதம்மா; நான் என்ன செய்வேன்? என்று வருந்துகிறாள்.( இவளுடய காலம் 7ம் நூற்றாண்டு என்று அறிய முடிகிறது. மேலும் இவள் இரண்டாம் புலிகேசியின் புதல்வனான சந்திராதித்தியனின் மனைவி என்றும் தெரிகிறது)

சுபத்திரை என்ற பெண் கவிஞை விதியை - அது நல்லவர்களையே வாட்டுகிறது என்பதை பாலுக்கு உவமை சொல்லிப் பாடுகிறாள். பால் அதன் தரம், சிறப்பு என்பவற்றுக்காக பசுவில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டது; பிறகு அதனைக் காய்ச்சி அதன் இனிமை எடுக்கப் பட்டது; அதன் பிறகு கடைந்து அதன் சாரமாகிய வெண்னையும் எடுக்கப் பட்டது; இவ்வாறெல்லாம் அபகரிக்கப் படுவதற்கு பாலின் சுவை, தரம், தன்மை அன்றோ காரணமாகி விட்டது என்கிறாள் அவள்.

இந்த விதி குறித்து சரஸ்வதி என்ற பெண் கவிஞை காணும் காட்சி சற்று வித்தியாசமானது. அவள், தாளையை பார்த்து சொல்கிறாள். ‘தாளையே உன் இலைகள் வாளைப் போல கூர்மையுடன் இருக்கின்றன. உன்னிடம் தேனே இல்லை; உன் பூவிலுள்ள மகரந்தப் பொடிகளோ காற்றில் கலந்து கண்ணை உறுத்துவனவாக உள்ளன. ஆனாலும் உன்னை நாடி வண்டுகள் வருகின்றன. உன் பூவின் மணம் என்ற ஒன்று எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறதே என்கிறாள்.

லக்ஷ்மி என்ற பெண் தன் சுலோகத்தில் விதியை இப்படியாகக் காண்கிறாள். பலர் விஷய தானங்களோடு அறிவுடையவர்களாக இருந்தாலும் அதிஷ்டமும் அபிமானமும் சிலருக்கே கிட்டுகிறது என்பதை கண்ட அவள், ‘காடுகளில் புது மலர்கள் எல்லாவற்றிலும் விழுந்து புரளும் வண்டு கந்தபலி என்ற பூவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை; அதற்கு என்ன மணமும் குணமுமா இல்லை? அழகுக்கு என்ன குறைச்சல்? ஆனாலும் வண்டுகள் ஏன் முகர்வதில்லை? இது தான் விதிச் செயலோ என்று கேட்கிறாள்.

நம் இலக்கியப் பெண்கள் எல்லாரும் முத்துமுத்தாக கண்ணீர் விடுவார்கள். பிறகு  அவர்கள் இறந்தவர்களை பாட்டிலும் நடுகல்லிலும் வைத்தார்கள். யதார்த்த வாழ்க்கையினை அதன் இயல்போடு அப்படியே ஏற்றுக் கொண்டு  வாழ்ந்தார்கள். உண்மையும் இயல்பும் இயற்கையும் காதலும் போரும் சமத்துவமுமான வாழ்வு அது. 

இல்லாத ஒன்றை அவர்கள் காணாததால் தன்னம்பிக்கை அங்கு நிறைந்திருந்தது. காத்லித்தவன் கைவிட்டதற்கு அவர்கள் விதியைச் சரனடையவில்லை. மாறாக காதலனைக் காணாமல் அவனைத்தேடிப் புறப்பட்ட வெள்ளிவீதியாரையே நாம் இலக்கியத்தில் காண்கிறோம்.அந்தக் கவிஞை விதியை குற்றம் சாட்டவில்லை; இல்லாத அல்லது தெரியாத தெய்வீக அம்சத்தில் அவள் பழி போடவில்லை; அவள் தன்னை விட்டு விட்டுப் போனவனை குறுந்தொகையில் தேடுகிறாள் இப்படி,


நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  (குறு;130)

நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா? அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு!

அவள் திராவிட பெண்! 

அவர்களுடய அழுகை வீரத்துக்காக விளைந்த ஆனந்த அழுகையாக இருந்திருக்கிறது. அல்லது காதலுக்காக அழுத பிரிவுத்துயரால் விளைந்திருக்கிறது. கீழே வரும் பாடல் வீரமரபில் வந்த தலைமயிர் நரைத்த கிழவியின் ஆனந்தக் கண்ணீர் வகை சார்ந்தது.

புறம் 277 இல்

மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெழுத்திருப்பது போல நரைத்த கூந்தலைக் கொண்டிருக்கும் பெண் தன் மகன் போர்களத்தில் யானையைக் கொன்று தானும் மாண்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அவனைப்பெற்றதிலும் பார்க்க மகிழ்கிறாள். ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கிறாள். இருந்தாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர். அது எப்படி இருக்கிறதென்றால் மழைத்தண்ணீர் மூங்கில் இலையில் இருந்து துளித்துளியாய் விழுவதைப் போல இருக்கிறதாம். ( மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல்.....)

'பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 

பிறங்கு இரும் முன்னீர் வெறு மணலாக

புறங்காலின் போக இறைப்பேன் முயலின்

அறம் பனையாகலும் உண்டு’

நல்லந்துவனாரின் இந்த பாடல் அடிகள் (144)

அலை எழுந்து பொங்கும் பெருங் கடலே என்னைப் பேணாமல் என்னை விட்டு விட்டுப் போனவனைத் தேடிப் போக எனக்கு கொஞ்சம் வழிவிட்டுத் தாருங்கள். அப்படி நீங்கள் எனக்கு வழி விடவில்லையானால் என் புறங்காலால் இந்த நீர் முழுவதையும் இறைத்து உன்னை வெற்று மணலாக்கி விடுவேன். இது இயலுமா என்றால் இயலும். என் முயற்சிக்கு நல்லறம் துணை நிற்கும். எனவே என்னால் அது இயலும் ‘ என்று தன்னம்பிக்கை மிளிர பாடும் இந்தப் பாடல் திராவிட சிந்தனையின் ஒரு முத்து எனிலும் பொருந்தும். 

அது கடவுள் மீதோ விதியின் மீதோ பழி போடவில்லை. சரியாக நடந்தால் அந்த அறமே அதைக் காக்கும். என்னால் வென்றுவிடமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது அப் பாடல். ‘நன்றும் தீதும் பிரர் தர வாரா என்ற பண்பாட்டின் வழி அது!

கலித்தொகையின் பிறிதொருபாடலில் காதலனைப் பிடித்து தராவிட்டால் நிலவிலே இருக்கிற முயலை நாயிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிற தோழியை நல்லந்துவனார் இப்படிக் காட்டுகிறார். அந்தப் பாடல் இது.

‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயலால்

எம்கேள்! இதனகத்து உள்வழி காட்டீமோ?

காட்டீ யாயின் கதநாய் கொளுவவேன்

வேட்டுவர் உள்வழி செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீரா யெனின் (144)

தலைவி தலைவனைத் தேடிச் சலித்துப் போய் விடுகிறார். இந்த பரந்த உலகில் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உலகம் முழுவதையும் உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலவிடம் கேட்கிறாள்; இங்க பார்! நிலவு! உன்னட்ட இருக்கிற முயல் இங்க முயலாகத் தான் தெரியுது. ( நிலவில் இருக்கிற களங்கத்தை இவள் முயலாகக் காண்கிறாள். நாம் ஒரு பாட்டி கால்நீட்டி இருக்கிறாள் என்று கதை சொல்கிறோம் இல்லையா; அதுமாதிரி) முயலே! என் தலைவன் எங்க இருக்கிறான் எண்று எனக்குச் சொல்லிவிடு. இல்லையென்றால் உன்மீது சினம் கொண்டு நாயை ஏவி விடுவேன்.அல்லது வேடர்களிடம்  உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன். நான் இப்ப மூளை (மதி) கலங்கிப் போய் இருக்கிறேன். இப்ப என் துயரத்தை நீ தீர்த்து வைக்கவில்லை  என்றால் சந்திரனோட ( மதியோட) உன்னையும் சேர்த்து பிடிக்கச் சொல்லி பாம்பையும் ஏவி விடுவன் எண்டு எச்சரிக்கிறாள்.

தன்னம்பிக்கையும் வெளிப்படை உணர்வும் கொண்ட வசீகரமான கம்பீரமான தமிழ் திராவிடப் பெண்கள் இவர்கள்!

நம்மிடம் இந்த ஆரிய மத நம்பிக்கைகள் ஊடுருவாமல் இருந்திருந்தால் நம் நம்பிக்கைகள் வேறொரு பாதையில் போயிருக்கும் என்றே தோன்றுகிறது.

நேற்றய தினம் Eda என்ற சிறுமியின்  நீல மாபிள் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரும் அது என்னைக் கண்டதும் சிதறி விழுந்த அதன் உடைவும்  எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்து விட்டுப் போயிருக்கிறது.....

எடாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, February 13, 2021

ஆரிய, திராவிட சிந்தனை மரபு

 நாலே நாலு விஷயம் தான். 

ஆதித் திராவிடத் தமிழர்களின் வாழ்க்கை முறை ஆரிய பண்பாட்டுச் செல்வாக்கிற்கு முன்னால் எப்படியாக இருந்தது என்பதை 4 சிறு உபதலைப்பின் கீழ் காணுதல் இந்தக் கட்டுரையில் நோக்கம்.

1. நாளாந்த வாழ்க்கை

2. இயற்கையை போற்றிய வாழ்வும் ஜீவகாருண்யமும்

3.கல்வியும் அறிவு சகலருக்குமானதாக இருந்தமை

4.உழவுக்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தமை.

இதற்குள்ளே நிற்கவேண்டும் என்று எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டாயிற்று; மேலும் தகவல்களைத் தேடாமல் மனம் குறித்துக் கொண்ட விடயங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களை நேரடியாக இங்கு  எழுத்தில் பதித்து விட வேண்டும் என்றும் தோன்றிற்று.

அண்மையில் பரிபாடல் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட ஒரு பாடல் வரி தான் இந்த எண்ணப் பதிவுக்குக் காரணம். அது,

‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புவீர்யீ! கேண்மின் சிறந்தது;

காதற்காமம் காமத்துச் சிறந்தது; 

விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;

புலத்தலிற் சிறந்தது கற்பே......’

என்றவாறாக விரிந்து பெருகும் பாடல் அது! 

1. அது சொல்லும் பொருள் என்னவென்றால் ’நான்குவேதங்களையும் விரித்துரைத்து அவற்றின் புகழை எல்லாம் உலகுக்கு விளக்குகிற, வாய்பேச்சில் வல்லவர்களான வடமொழிப் புலவர்களே! சிறந்த ஒன்றைக் கூறுகிறோம்;  கேளுங்கள்! ‘காதலோடு மனமொத்துக் கூடிப் பெறுகிற இன்பமே காம இன்பங்களுக்குள் சிறந்தது. பிற பெண்களிடம் சென்றுவிட்டு ஊடலினால் பெறும் இன்பம் உண்மையில் இன்பம் அன்று; தம் கணவர் தம்மைவிட்டு அகன்றதை அறியாதவரான இல்லத் தலைவியர்களை வருத்தும் தவறினைச் செய்யாத;  தள்ளுவதற்கு இயலாத அகப்பொருள் பண்பாட்டின் இலக்கணத்தோடு அமைந்த தண்மை பொருந்திய தமிழ் பண்பாட்டின் வழியிலே வந்த மக்கள் வாழும் பரம்குன்றம் இது’ என்றவாறு பொருள் கொள்ளத்தக்கதாக அப்பாடல் அமைந்துள்ளது.

இந்தப் பாடல் கிளப்பிய சிந்தனைதான் இந்த ஆரிய திராவிட சிந்தனை மரபின் வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் காணும் ஆர்வத்தைத் தூண்டியது. 

சங்க காலமாகிய கிபி 1 - 3 நூற்றாண்டுகளுக்குள்ளேயே வட இந்திய ஆரிய சமஸ்கிருத பண்பாட்டு வாழ்க்கைமுறை, தத்துவார்த்த சிந்தனைகள் எல்லாம் தென் இந்தியா எங்கும் புகுந்து மக்களால் பின்பற்றப்படும் வாழ்க்கைமுறையில் ஒன்றாகி விட்டது.

அதனால் ஆதித் திராவிட பண்பாடு அதாவது சுத்த தமிழ் பண்பாடு எது ஆரியப் பண்பாடு எது என்பது குறித்துப் பார்ப்பது, நம் மூலத்தை அறிந்து; நம் மூல வேர் எது? நம் சிந்தனை மரபு எத்தகையது என்ற தெளிவினை பெற அது உதவும்.

திராவிட வாழ்க்கைமுறையில் சாதிப்பாகுபாடுகள்; இனப் பாகுபாடுகள்; ஆண்பெண் பேதம் எதுவுமில்லாததாக அது விளங்கியமைக்கு சங்க காலப் பாடல்கள் சாட்சி. அதனைப் பாடியவர்கள் பல்வேறு தொழிலைப் புரிந்தவர்களாக இருந்தார்கள்; பெண்பாற்புலவர்களும் இருந்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்தார்கள். வாழ்வு பற்றி அறிவார்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அதனால் ’பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்ந்தல் அதனிலும் இலமே’ என்று அடக்கத்தோடு வாழ்ந்தார்கள். யாண்டு பலவாக என்ற சங்கப்பாடல் ’கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று பெருமை கொள்ளும் படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். ‘உண்பது நாழி; உடுப்பவை இரண்டே’ என்று எளிமை வாழ்வை அதன் அடிப்படை தேவைகளை சொன்னது தமிழ் அறம்.

இதே காலப்பகுதியில் உள்ளே புகுந்த ஆரியப் பண்பாட்டின் செல்வாக்குகள் ஆங்காங்கே ஒலிப்பதை சங்கப் பாடல்களிலேயே காணலாம். அவர்கள் வர்ண பாகுபாட்டை கொண்டு வந்தார்கள். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக பிறக்கிறான் என்றார்கள்.  படிப்பும் அறிவும் பிறப்பால் உயர்ந்தவனாகப் பிறக்கும் ஒருவனுக்கே உரியது என்றார்கள்.இப்படியாகப் பின்நாளில் தமிழரின் மேன்மை பொருந்திய  வாழ்க்கை ஒன்று சாதியால் பிளவு பட்டது. அது நம் ஆதி வாழ்வு அல்ல; அது நம் வாழ்வில் புகுந்த ஒன்று.

2. ஆதித் திராவிட தமிழன் இயற்கையை ஆராதித்து இயற்கையை தன் வாழ்வின் ஒரு கூறாகவே கண்டான். அதற்கும் சங்கப் பாடல்களே சாட்சி. ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்று முல்லையோடு கோவிக்கும் தலைவியும்; புன்னைமரத்தடியில் என்னைச் சந்திக்காதே காதலா! அது மரமல்ல என் தங்கை  என்று காதலனுக்கு சொல்லும் காதலியும்; நாம் சந்தித்ததற்கு நாரை மட்டும் தான் சாட்சி என்று நாரையை சாட்சிக்கழைக்கும் தலைவியையும் கொண்டதாக அமைந்தது தமிழ் திராவிட காதல் வாழ்வியல். முற்றத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது அணில்கள் கொண்டாட்டமாக ஓடித்திரியும் என்பதை கண்டு பாடலில் அதனை வைத்ததால் அணிலாடும் முன்றிலார் என்று ஒரு புலவர் பெயர் கொண்டது தமிழ் திராவிட பண்பாட்டின் அழகியல். மாறாக ஆரியப் பண்பாடு உயிரினங்களை ஆகுதி ஆக்கி அக்கினியில் போடப் பணித்தது. கடவுளை மகிழ்விக்க யாகங்கள் பிறந்தன. அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் மாத்திரம் உயரிய உரிமைகளை அது வழங்கியது.

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆதித் திராவிடத் தமிழ் பண்பாடு சகல உயிர்களையும் தன்னைப் போலவே பிறரையும் பிற உயிரினங்களையும் மட்டுமல்ல இயற்கை வளங்களையும் மரங்களையும் கூட நேசிக்கும் அறத்தை கொண்டு விளங்கியது.

ஜீவன்கள் மீதான அவர்களின் காருண்யம் எத்தகைய மேன்மை பெற்றதாக விளங்கியதென்பதற்கு புறநானூறில் வரும் கோவூர் கிளாரின் 46வது பாடல் சாட்சி.(நீயே, புறவின் அல்லல்...)  இரவு நேரம் கடற்கரை மணலில் நண்டுகள் ஓடித்திரியும். அவைகளில் தேர்சக்கரம் மிதிபடாமல் வர வேண்டி இருப்பதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று தலைவிக்கு ஆறுதல் சொல்லும் நற்றிணைத் தலைவியும் (பெய்யாது வைகிய கோதை...11) ; தேரில் வேகமாக வரும் போது எழும் மணி ஓசை வண்டுகளின் காதலை தடுத்து நிறுத்தி விடுமோ என்று எண்ணி மணிகளின் நாக்குகளை அசையாமல் இறுகக் கட்டி விட்டு மெதுவாக வருவதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று சொல்லும் அகநானூற்றுத் தோழியும் ( முல்லை வைந்நுனை தோன்ற...4) அழகியல் சார்ந்த தமிழரின் வாழ்வியல் சாட்சிகள்,.

3. திராவிட சிந்தனை மரபில் கல்வி. அது எல்லோருக்குமானதாக இருந்தது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று சொல்லும் புறப்பாடல் (183) ஒன்று முடியும் போது ‘நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’ என்று முடியும்.

இப்பாடல் நேரடியாகவே ஆரியத்தோடு அறிவால் முரண்பட்டு ஆதித்திராவிட வாழ்வின் மகத்துவத்தை வீரியத்தோடு சொல்லக் காணலாம். ஆரிய பண்பாடு பிறப்பாலே தான் ஒருவனுக்கு கல்வி என்ற போது; இல்லை, அது நீங்கள் சொல்லும் பிராமண, சத்ரிய, வைசிய,சூத்திர வர்ணத்துள்ளும் ஒருவன் கற்றால் அவன் மேற்பாலுக்கு வரலாம் என்று ஒரு எதிர்ப்புக் குரலாக இங்கு ஒலிக்கக் காணலாம். இதனை பின்னாளில் வள்ளுவரும் சிறப்பாகச் சொல்லுவார். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்பொருளை காண்’ என்றவர் வள்ளுவர்.

வள்ளுவரும் புத்தரும் ஆரியத்துக்கெதிராக தொடுத்த போர் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. குறிப்பாக வள்ளுவர் அதனை வெகு சமர்த்தாகச் செய்திருக்கிறார். புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர், ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’  ( குறள் -259) என்கிறார்.  இவைகளை விரித்துச் சென்றால் முன்னர் சொன்னது போல் கட்டுரை வேறு பாதையில் திசைமாறிவிடும் என்பதால் அதனை இந்த இடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

4.உழவுத் தொழில்; பிராமணரும் அரசரும் பிறப்பால் முதல் இரண்டு இடத்தையும் பெற மூன்றாவது இடத்தை வணிகர்கள் கைப்பற்ற வாழ்க்கைக்கு ஆதார சுருதியினர் பின் தள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை ஆரிய சித்தாந்தம்  கற்பிக்க உழவுத்தொலைச் சிறப்பித்து; ’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்றுரைக்கிறார் வள்ளுவர்; ஆரியம் எல்லாம் தெய்வத்தாலே நிர்ணயிக்கப் பட்டது என்று சொல்ல வள்ளுவன்’ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என்கிறார். ஆரிய தர்மத்தை நிறுவிய மனு பிறப்பாலே தான் ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்று சொல்ல புறநானூறு (18) நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று உழவனையும் உழவையும் முன்னிலைப் படுத்துகிறது. பிறப்பால் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை வள்ளுவன் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறான்.

இந்த நமக்கே நமக்குச் சொந்தமான; ஆதித் தமிழ் திராவிட வாழ்க்கையை மீட்டெடுத்தால் நம் வாழ்வு எத்தனை அர்த்தமுடையதாக இருக்கும் இல்லையா?