Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Saturday, March 22, 2025

கம்பராமாயணத்தில் ஓர் அவலக் காட்சி

பாடல் எண் - 5976.

இலங்கை எரியூட்டுப் படலத்தில் இப்பாடல் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, 

ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, 

மற்றொரு மகவு பின் அரற்ற,

நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்

கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.


பொருள்:

 மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொருசிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்று நெருப்பு பற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய்விழுந்தார்கள். அரக்கியர் கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக்கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.   

இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. என்ன ஓர் அவலமான காட்சி! நினைத்துப் பாருங்கள்!! ஒரு பெண் தலைவிரி கோலமாகக் கூந்தல் எல்லாம் நெருப்புப் பற்றி எரிய, இடுப்பிலே ஒரு குழந்தையோடும்; கையினாலே ஒரு பிள்ளையைப் பிடித்துக் கொண்டும்; கடலை நோக்கி ஓடுகிறாள். அவளுடய இன்னொரு குழந்தை இவர்களுக்குப் பின்னாலே தொடர்ந்து ஓடி வருகிறது.

எல்லோரும் தீப்பற்றி எரிய கடலை நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் அரக்கியாக இருக்கலாம். என்றாலும் அவள் ஒரு தாய். தன் பிள்ளைகளைக் கைவிடாத தாய். பிள்ளைகளின் பிடியைக் கைவிடாது கடலை நோக்கி ஓடும் காட்சியும் இவளைப் பின் தொடர்ந்து பின்னாலே ஓடி வரும் மற்றய பிள்ளையும் மனசை உருகச் செய்கிறார்கள்.

என்ன ஒரு அவலக் காட்சி இது!!


Sunday, October 22, 2023

தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது….

 தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது,

வன்னியைக் கொண்டாடுதல்; அதன் வாழ்வியலைக் கொண்டாடுதல்; மண்ணை, மண்ணின் மகிமையைக் கொண்டாடுதல், அதன் மேல் கட்டமைக்கப் பட்டிருக்கும் வீடுகளை, குடிசைகளை,  அக் குடியிருப்புகளில் வாழும் சமான்ய  மக்களை, மேலும் அங்குள்ள மரங்களை, செடிகொடிகளை,வயல்களை, வெளிகளை, காடுகளை, கழனிகளைக் , குருவிகளை,  கால்நடைகளை, காடுகளில் உலவும் விலங்கினங்களை, வீட்டுப் பிராணிகளை என Flora,Fauna அனைத்தையும் கொண்டாடுதல் என்று அர்த்தம் பெறும்.

வன்னி பிரதேசம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. அவை முல்லையும் மருதமும் கலந்த நிலம். அங்கு சேவலுக்குப் போட்டியாக  மயில்களும் அகவும். காட்டோரம் மான்கள் சுயாதீனமாய் திரியும். பகல் பொழுதில் மாடு மேய்த்து மாலை நேர மம்மல் பொழுதுகளில் யானை விரட்டும் சிறுவர்களுக்கும்; குரங்குகளுக்கு நெளிப்புக் காட்டி குண்டுமணிகளோடு சுள்ளிகள் பொறுக்கும் சிறுமிகளுக்கும் பாலைப் பழங்களையும் வீரைப் பழங்களையும் காட்டு மரங்களே  நல்கும். காட்டுத்தேனும் தேக்கு மரமும் நிறைந்த முல்லை நிலத்தில் எருதுகளோடு கூடவே மேயச் செல்லும் கறவை மாடுகளுக்குக் குளங்களில் தண்ணீர் எப்போதும் குறையாதிருக்கும். அங்கு துள்ளி விழும் விரால் மீன்களோடு சிறுவர்கள் குதித்து நீச்சலடிக்க, வயலுக்குப் பாயும் வாய்க்கால் தண்ணீரில் புலுனிக் கூட்டம் குளித்து சிறகுலர்த்தும்,

சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் குடியிருக்கும் ஏழைக் குடியானவனின் பொட்டல் விழுந்த கிடுகுக் குடிசைகளில் ஈதல் அறம் நிறைந்து கிடக்க, ஒற்றை ஒழுங்கையால் அச்சமற்று நடந்து போவாள் பள்ளி செல்லும் பிள்ளை.

இத்தகையதான இந்த மண் குறித்த அடையாளங்கள் வடக்கு வாழ் தமிழ் மக்களின் மண்ணமைப்பில் இருந்து வேறுபட்டவை. அந்த சுண்ணாம்புக் கற்களும், செம்மண்ணுமான நிலத்தில் கல்வீடுகளும் கிடுகுவேலிகளும் பனைமரக் காடுகளும்,கம்பீரமாய் உயர்ந்து நிற்கும். புகையிலைத் தோட்டங்களும், வெற்றிலைக் கொழுந்துகளும் கிணற்றுப் பாசனமும் மண்ணின் மகிமை பேசும். கல்விக்கும், கட்டுப்பாட்டுக்கும், கடின உழைப்புக்கும், சிக்கன வாழ்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் பெயர்போன வடக்கின் சாயையிலிருந்தும் கூட வன்னி பெருமளவில் வேறு படும்.

அதே நேரம் பெளர்ணமிக் காலங்களில் மீன்கள் பாடும் தேன்நாடாகப் புகழப்படுவது கிழக்கு. அங்கு வாழும் தமிழ் மக்களின் நாட்டார் பாடல்களோடும் வடமோடி தென்மோடிக் கூத்துகளோடும்; தயிரோடு பழம் பிசைந்து; இசைபோலும் மொழிபேசி; விருந்தோம்பி மகிழ்ந்திருக்கும் கிழக்குவாழ் மக்களின் அன்றாட இயல்பிலிருந்தும் கூட வன்னி வேறுபடும். இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த மதங்களை அனுசரிக்கும் மக்கள் அங்கு ஒன்று கூடி அருகருகாகவும் சுமூகமாகவும் வாழும் மாண்பினைக் கொண்டிருக்கிறார்கள். அந்த நெய்தல் நில சமூக சாயையிலிருந்தும் கூட வன்னி முற்றிலுமாக வேறுபட்டது.

அந்த வரிசையில் மலையகத் தமிழ் மக்களை நினைத்துப் பார்க்கிறேன்! இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிப் பிரதேசங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வியலோ இன்னும் ஒரு படி வேறானது. துயர் நிறைந்தது. தேயிலை இரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக குளிருக்கும் கடிக்கும் அட்டைகளுக்கும் ஈடுகொடுத்து அன்றாடம் கடினமாக உழைத்து இன்றும் லயன்களில் வாழும் அவர்கள் வாழ்வின் துயரங்கள் எழுத்தில் வடிக்க வொண்ணாதது!

நாம் – தமிழர்களாக – அவர்களை மொழியாலும் வாழ்வாலும் ’கவனியாது’ விட்டு விட்ட குறையை – காலமகள் தமிழர்களுக்கு ஒருநாள் உரத்த மொழியில் எடுத்துச் சொல்லக் கூடும். அதன் எதிரொலி ஈழத் தமிழர் புலம் பெயர்ந்த தேசங்கள் வரை கேட்கவும் கூடும்.....

இவர்களோடு, இஸ்லாமியத் தமிழ், கொழும்புத்தமிழ், மற்றும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் தமிழியங்களுமாக - இருக்கும் அத்தனை சிறு சிறு நீரோடைகளும் தமிழ் என்ற பொதுவான பெரு நதியில் அதனதன் பண்பு நலன்களோடும்; தனித்துவ தன்மைகளோடும்; சமத்துவமாக, தயக்கமேதுமற்ற தமக்கேயான பெருமிதத்தோடும்; இணக்கப்பாட்டோடும் ( hormony) ஒன்றுகலக்கும் போது தான் ஈழத்தமிழுக்கான முழுமையான இலக்கியமும் அதற்கான இலக்கிய முழுமையும் கிட்டும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால் அது ஒரு பெரும் வண்ணமயமான வெளிச்சத்தை நம் தமிழுக்கு பாய்ச்சும் என்பது நிச்சயம்.

அஃது நிற்க,

இந்த வகையில் புவியியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தனக்கென தனி அடையாளங்கள் கொண்ட வன்னி மண்ணை அதன் அத்தனை சாயல்களோடும் மண் வாசம் மாறாமல் பதிவு செய்தவை தாமரைச் செல்வியின் கதைகள். காலம் இயல்பாக  நமக்கு அவரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இன்றய தொழில்நுட்ப யுகத்தில் நின்று கொண்டு 70களின் வாழ்வியலை கற்பனை பண்ணுவது கூட இன்றுள்ள இளம் சந்ததியினருக்குக் கடினமாக இருக்கக் கூடும். 70களில் தொலைக்காட்சிகளோ, தொலைபேசிகளோ இருக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. வன்னிப் பிரதேசங்களுக்கு மின்சார வசதி கூட அதிக பேரிடம் இருந்திருக்கவில்லை. இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சாதனம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து தமிழ் சேவையும், ( ஸ்ரீமாவோ ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட தென்னிந்திய சஞ்சிகைகளின் முடக்கத்தால் ) எழுச்சி பெற்ற வீரகேசரிப் பிரசுரங்களும் பத்திரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளும் தான்.

இன்று நாம் பெண்விடுதலை பற்றி  நிறையப் பேசுகிறோம்; நிறைய மாறி இருக்கிறோம்; இப்போதும் மாறி வருகிறோம்; இனியும் மாற்றங்கள் வரும் என்று நம்பலாம். ஆனால் தாமரைச் செல்வி வாழ்ந்த ஆரம்ப காலச் சூழலில் ஒரு விவசாய வாழ்க்கைச் சுமைகள் கொண்ட ஒரு பின்புலத்தில் இள வயதில் திருமணமாகிய பின்பும்; இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாகிய பின்பும்; ஏறும் சுமைகளுக்கு மத்தியிலும் அவரது கதைப் புலங்கள் மண்ணின் பதிவுகளாக அதன் அச்சொட்டான இயல்பை பதிவாக்கி இருக்கின்றன என்பது எத்தனை பெரிய சாதனை!

ஆண்களால் இலக்கிய உலகில் கால் பதிக்க இருக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் ஒரு பெண்ணாகக் குடும்ப சுமைகளைச் சுகமாகச் சுமந்து கொண்டு, விவசாய வயல்வெளி வேலைகளுக்கும் உதவிக் கொண்டு, பிள்ளைகளை - அவர்களின் தேவைகளை - படிப்புகளையும் கண்காணித்துக் கொண்டு மூத்த சகோதரியாக தன் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டு, இலக்கிய உலகில் தொடர்ச்சியாக வலம் வருவது என்பது அத்தனை சாமான்ய விடயம் அல்ல. இவற்றை எல்லாம் சுமந்த படி சுமார் 50 ஆண்டுகளாக வன்னியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாரிய பணியை பெண்மை நலம் மாறாமல் அவர் அநாயாசமாக செய்து வந்திருக்கிறார்.

அந்த இலக்கிய வடிவங்களில் தெரிவது எல்லாம் வன்னியின் பண்பு நலம்.

அவை வன்னிப் பகுதியின் வயல் வெளிகளைப் போல தமிழ் இலக்கியப் பரப்பில் வன்னி மண்ணுக்கான இலக்கிய அறுவடையாக பரந்து பொலிந்திருக்கின்றன. தனது கட்டுக்கோபான சிந்தனைகளின் ஊடே கண்ணியமும் அக்கறையும் பொறுப்புணர்வும் மீதுர, வன்னியின் வாழ்வை இலக்கியமாக்கி இருப்பவை அவரது எழுத்துக்கள். அவர் வன்னி இலக்கிய வடிவத்திற்கு ஆண்மாவாகவும் உடலாகவும் ஓருருவம் கொடுத்திருக்கிறார். எளிய வாழ்வுக்குரித்தான அம் மக்களை இலக்கியப் பல்லக்கில் ஏற்றி வைத்தவை அவரது எழுத்துக்கள்.  தனித்துவமான வன்னியின் சாயலை தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டு வந்தவை அவர் கை பிடித்த பேனா. அவை தனித்துவமான ஈழத்து இலக்கியக் கருப் பொருளுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

நிலத்தினடியில் ஆழ வேரூன்றி, உயர எழுந்து, விழுது பரப்பி, ஊரே இருந்து போக நிழல் தந்து, சாப்பிட்ட உணவினை அசைபோட்டபடி இளைப்பாறும் ஊர் மாடுகளுக்கு அதன் அடிமடியிலே இடம் கொடுத்து, பல பறவைகள் சந்ததி சந்ததியாகக் கூடுகட்டி வாழ கிளை தந்து, அவ் ஊர் மக்களின் சுகதுக்கங்களையும், இரகசியங்களையும், புறணிகளையும், காதல் சல்லாபங்களையும், சண்டை சச்சரவுகளையும், அழுகைகளையும் உவகைகளையும் பார்த்த படி ஊர் நடுவே உயர்ந்து நிற்கும் ஒரு பேராலமரம் போலும் அவர் அந்த மண்ணின் விழுமிய சாட்சியாக இருக்கிறார். அவரது படைப்புகள் அவற்றை வழிமொழிந்து நிற்கின்றன.

வன்னி மண்ணின் அமைதிக் காலங்களில் அதன் எழிலையும் அதன் தனித்துவத்தையும் செவ்வனே அவர் பதிவு செய்திருக்கிறார்.  அதே மாதிரி வன்னி மண் போர்களைச் சந்தித்த போர் காலங்களின் போதும்; பின்னர்  இடம்பெயர்ந்து, சரண் புகுந்த, வடதமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த போதும்; போராளிகளின் பாசறையாக; இலங்கை, இந்திய இராணுவம் புகுந்துவிட முடியாத பேரரனாக, அது விளங்கிய போதும்;  அதன் முகத்தையும் சமூகத்திற்கு அவர் தன் எழுத்துக்களால் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

பின்னர் அவலங்கள் நிகழ்ந்த போதும், இழம்புகள் சம்பவித்த போதும் தோல்விகளைக் கண்டபோதும் மண் கொண்ட மாற்றங்கள் அவர் கதைகளில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. இடம்பெயர்ந்த போது இடப்பெயர்வின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறார். புலம்பெயர்ந்த பிறகு புலத்தின் தன்மைகளையும் அவர்  பதிவு செய்திருக்கிறார்.  சுமைகளில் இருந்து உயிர்வாசம் வரையான அவரது படைப்புகள் அதற்குச் சாட்சி.

இந்த சந்தர்ப்பத்தில் காட்டாறு எழுதிய செங்கையாழியானையும் நிலக்கிளி எழுதிய பால மனோகரனையும் ஒரு தடவை நினைத்துக் கொள்கிறேன். தாமரைச் செல்வியின் முதலாவது நாவலான சுமைகளோடு வைத்தெண்ணத்தக்க அவை வன்னியின் வாழ்வை பிரதிநிதித்துவப் படுத்துவன. வன்னியைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தத்ரூபமாக தூக்கி நிறுத்தியவை அவை!

தாமரைச் செல்வி என்பவர் தனி ஒருவரல்ல; அவர்  வன்னிக்கான இலக்கியப் பிரதிநிதி. வ.ஐ.ச. ஜெயபாலன் 1968ல் எழுதிய கவிதை ஒன்றில் வன்னியை இப்படிப் பதிவு செய்வார். ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் வெளிவந்த அக் கவிதை, இவ்வாறு நகர்கிறது. 

’துணைபிரிந்த குயில் ஒன்றின் 

சோகம் போல; 

மெல்லக் கசிகிறது 

ஆற்று வெள்ளம். 

காற்றாடும் நாணலிடை 

மூச்சுத் திணறி 

முக்குளிக்கும் வரால் மீன்கள். 

ஒரு கோடைகாலத்து மாலைப் பொழுது அது! 


என்னருகே 

வெம்மணலில் 

ஆலம்பழக் கோதும் 

ஐந்தாறு சிறு வித்தும் 

காய்ந்து கிடக்கக் காண்கிறேன். 

என்றாலும் 

எங்கோ வெகு தொலைவில் 

இனிய குரல் எடுத்து 

மாரிதனைப் பாடுகிறான் 

வன்னிச் சிறான் ஒருவன்.’ 

என்று அந்தக் கவிதை வன்னியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பாடும். அந்த நம்பிக்கையாக – மாரிதனைப் பாடிய வன்னிச் சிறானாக - 70 களில் வன்னி இலக்கியத்திற்குக் கிடைத்தவர் தாமரைச் செல்வி.

தாமரைச்செல்வி தந்தவைகள் கதைகள் தான் என்ற போதும், அதன் கருவில் எப்போதும் ஒட்டிநிற்பவை உண்மைகள்; மண்வாசம் மாறா மெய்மைகள். பொய்யான ஒன்றை அவர் ஒருபோதும் புனையவில்லை. புகழுக்காகவும், பிரபலத்திற்காகவும், பாராட்டுக்களுக்காகவும் அவர் கதைகள் ஒருபோதும் மண்டியிட்டதில்லை. சலுகைகள் அவர் பேனாவைச் சரியச் செய்ததில்லை. புகழ் அவரைப் போதை கொள்ளச் செய்ததில்லை. எப்போதும் சமூகப் பொறுப்போடும் மண்மீதான நேசிப்போடும், ஆத்மார்த்தமான உண்மையோடும் ஒருவித அமைதியோடும் நிதானத்தோடும் பயணிப்பவை அவரது கதைகள்: அவரும் தான்.

வன்னி என்ற பெரும் பரப்பின் ஆத்துமமும் தாமரைச் செல்வியின் ஆத்துமமும் ஒன்று கலக்கும் இடமும் அது தான். அவர் ஒரு காலகட்டத்து வன்னியின் ‘காலம்’.

ஒரு தடவை, அவரோடு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் ‘ உங்கள் கதைகளில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிகளில் பல தசாப்தங்களாகக் குடியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்து போகிறார்கள். ஏன் நீங்கள் அவர்களை உங்கள் கதைகளுக்குப் பிரதான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை? அது ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கிறதே! என்று கேட்டபோது, அதற்கு அவர், ’அது உண்மை தான்; இந்த விடயம் பரந்த அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று. அவர்களுடய வாழ்வும் வலிகளும் பத்திரமாகவும் பவித்திரத்தோடும் கையாளப்பட வேண்டியவை. எனக்கு அவர்களின் மலையக வாழ்வு பற்றியும் இங்கு இடம் பெயர்ந்ததன் பின்னணி பற்றியும் அதிகம் தெரியாது. தெரியாததை என்னால் சொல்லமுடியாது; சொல்லக் கூடாது. ஆனால் அவர்கள் என் கதைகளில் எப்போதும் ’அவர்களாகவே’ வந்துபோவார்கள்’;என்றார்.

அது தான் தாமரைச் செல்வி.

அகத்தியரின் பிள்ளையார் தட்டி விட்ட கமண்டலத்தில் இருந்து பெருகிய காவேரியாக அவரது பேனா மை வன்னியை செழுமைப்படுத்தி, மகிமைப் படுத்தியிருக்கிறது. வயல் நீளத்திற்கும் நீண்டு செல்லும் காலத்தின் நீட்சியில்; அந்த எழுத்தின் பாதையில்; அவர் வன்னியின் ’காலத்தைச்’ சுமந்தபடி ‘வன்னியாச்சியாக’  நடந்து சென்றிருக்கிறார். 

அந்த நடமாட்டம் தென்பகுதிக்கு வந்து சரிந்த பூமியை நிமிர்த்திய அகத்தியரின் நடமாட்டம் போல்வது.

அவரைக் கொண்டாடுதல் என்பது வன்னியைக் கொண்டாடுதல். 


- யசோதா.பத்மநாதன். சிட்னி. 22.10.2023.

Friday, December 30, 2022

The Great Lifco Dictionary

 



வெகு அபூர்வமாக நான் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த லிஃகோ அகராதி.1952 ம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்டு 1999ம் பதிப்பாக பதிவேறி 2002ம் ஆண்டு என்னை வந்தடைந்தது அது.

The Little Flower Company இந்திய ரூபாய்கள் 160 க்கு அப்போது இதனை விற்பனை செய்திருக்கிறது. மொத்தமான துணியினால் ஒட்டி அக்கறையோடு பைண்ட் செய்யப்பட்ட இந்த அகராதி “ suggestions for the improvement of this book or corrections will be gratefully welcome by the publishers - whose main aim is accuracy and service" என்ற முன்பக்க பதாகையோடு ஆங்கில; ஆங்கில; தமிழ் மொழி வளத்தோடு அமைந்திருக்கிறது.

இன்று எத்தனையோ விதமான அகராதிகள், online செயலிகள், கூகுள் translation என்று எத்தனையோ இலகுவாகவும் உடனடியாகவும் சுலபமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டதால் உலக மொழிகளையே நொடிப்பொழுதில் மொழிமாற்றம் செய்யும் வசதிகளை நாம் கண்டடைந்து விட்டோம். 

இருந்த போதும் நேற்றய தினம் வருட இறுதியிலேனும் புத்தகத்தட்டைத் தூசி தட்டும் நிமித்தமாக இதனை வெளியே எடுத்துப் புரட்டிப் பார்த்த போது தான் அது எத்தனை சிரத்தையோடும் தகவல்களோடும் எக்காலத்திற்கும் பொருந்தி காலத்தை வென்று நிற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காண முடிந்தது.  

அது மொழிபெயர்ப்பை மட்டும் செய்யவில்லை. தமிழோடு தமிழ் தகவல்கள், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என சகலவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ஒரு சொல்லை எழுதும் போது அதற்கு எழுத்துகள் எவ்வாறாக அவற்றோடு இணைகின்றன, அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்ற தகவல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கான விபரமான குறிப்புகளை ஒரு புறம் தருகிறது. 

ஒரு வசனம் அமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய குறியீடுகள்; அவை எங்கெங்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் உள்ளது. எப்போதும் ஒற்றுமையில் அமைந்துள்ள சொற்கள், எப்போதும் பன்மையிலேயே காணப்படும் ஆங்கிலச் சொற்கள், எப்போதும் சோடிகளாக வரும் சொற்கள், சிறப்புப் பாவனைக்குரிய சொற்கள் என இவை போன்றவை தனியாக இனங்காட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் எத்துணை முக்கியமானது என்பது பற்றி லிஃகோ The Little Flower company எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று அது தன் தேசத்து மக்களை; இளைய சமுதாயத்தினரை எத்தனை அக்கறையோடு நேசிக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது. ’We are interested not only in making you pass the examination, but also in shaping your mind and character’ என்று சொல்லும் அது தேசத்து இளைய சமுதாயத்துக்குக் கூறும் அறிவுரை மகத்தானதாக இருக்கிறது. அது பற்றி எல்லாம் எழுதப் புகுந்தால் இந்தப் பதிவே ஒரு அகராதி போலாகி விடும் என்பதால் கீழ் வரும் அவர்களின் வசனங்களோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன். ” We are proud to diclare that during the fifty years of our service to the student world, we have contributed our mite to elevate sons and daughters of india to be worthy citizens, by giving them sound and timely advice. many of our elders, we are sure, will tell you of this aspect of our service.

ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளில் இருந்து நோபல் பரிசு பெற்றோரின் விபரங்கள், சுதந்திரமடைந்த உலகநாடுகளின் விபரங்கள், உலக நாடுகளின் பாராளுமன்றங்களின் பெயர்கள், உலகத்தில் பிரபலமானவை, உலக நாடுகளின் நேர வித்தியாசங்கள், அளவை முறைகள், புத்தக அளவுகள், கணித குறியீடுகள், விதிமுறைகள், சொற்களின் மூலம் எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள், சொற்களும் அதற்கான ஒலிஅமைப்புகளும் பற்றிய தகவல்கள், சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் வாசிக்கும் முறைமை பற்றிய தகவல்கள், வாழ்த்துக்கள் / முகமன் கூறும் முறைகள், மற்றும் நேரங்கள், ஒருவரை விழித்து அழைக்கும் பாணிகள், கடிதம் எழுதும் முறை, சில லத்தீன் சொல்லாடல்கள், உணவருந்தும் நேரங்களில் உணவு வகைமுறைகளுக்குப் பாவிக்கப்படும் சொல்லாடல்கள், ஷேக்ஸ்பியரின் 150 சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், விஞ்ஞான விதிமுறை மற்றும் சொற்களுக்கான விளக்கங்கள், சில முக்கிய பத்திரிகைத் துணுக்குச் செய்திகள், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொற் தொகுதிகள் என்று அது ஒரு வாழ்க்கைக் களஞ்சியமாகவே விளங்குகிறது. அவர்கள் உண்மையாகவே  ’shaping your mind and characte’. ஆங்கிலேயப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கூட அவர்கள் இந்த அகராதி வழியாக இந்தியத் தமிழர்களுக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள்.

இனி தமிழ் மொழியில் இருக்கும் சிறப்புகளையும் அழகுகளையும் தொகுத்திருக்கும் முறைடோ இன்னும் அழகாக இருக்கிறது. தமிழ் இலக்கண அணிகள், உருபுகளுக்கான ஆங்கில பெயர்கள், வழக்கமாக உரையாடல்களில் இடம் பெறும் சிறப்புத் தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இருப்பிட பாகங்களின் பெயர்கள், அன்றாடப் தமிழரின் பாவனைப் பொருள்களுக்கான ஆங்கிலச் சொற்கள், இடப்பெயர்கள், பலசரக்குப் பொருட்கள், நோய்கள், தானியங்களின் பெயர்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள், பூக்களின் பெயர்கள், வேலைகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன  மற்றும் மிருகங்களின் பெயர் அட்டவணை, ஜந்துக்களின் இரைச்சல்களின் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், நவரத்தினங்கள், ராசிகள், கிரகங்கள், மிருகக் குழந்தைகளின் பெயர்கள்,கணிதம், பல விதமான தமிழ் ஆங்கிலப் பழமொழிகள், எனப் பெருகிக் கிடக்கிறது விபரங்கள். கூடவே, விஞ்ஞான,பெளதீக, தாவர, உடலியல், இரசாயண,கணித, வரலாற்று, புவியியல், வர்த்தகம், அரசியல் சார்ந்த சொற்கள், என அறிவியல், தமிழ் கலாசாரத்தின் அம்சங்களையும் அது கொண்டிருக்கிறது.

6.9.1967ம் ஆண்டு டொக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு சொன்ன செய்தி ஒன்று இவ்வாறாகப் பதிவாகி இருக்கிறது. ‘The teachers should set an example to the puples by their behaviour....We should develop the habits of self - scrutiny and self- discipline......If proper attitudes are developed in our youth, we will certainly have a better future for our country'

கூடவே, வாசகர்களுக்கென சில முன்னைய கால இந்திய ஆண்மீக வாதிகளின் உன்னதமான பொன்மொழிகளைக் கட்டம் போட்டும் சொல்லி இருக்கும் இந்த அகராதி வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான உந்து சக்தியையும் ஊக்க மருந்தையும் கூட அதன் வழியாகக் கொடுத்திருக்கிறது.

 மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விரிவான தகவல்கள் மேலும் உபயோகமாக இருக்கிறது. முடிந்தால் அது பற்றி தனிப் பதிவாகவே எழுதத் தக்க அளவுக்கு அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன.

 ஆங்கில; தமிழ் மொழிகளை மட்டுமல்லாது அவற்றின் இயல்புகளையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தன்னுள்ளே பொதித்து ஒரு வாழ்க்கைச் சுரங்கமாக அமைந்திருக்கிறது இந்த அகராதி.

எத்தனை செயலிகள் வந்தாலென்ன; எத்தனை சுகமாக அவை நம் விரல்களை வந்தடைந்தாலென்ன; இந்த லிஃகோ அகராதியை கையில் வைத்திருக்கும் போது ஒரு  வாழ்வியலையும் பண்பாட்டையும் வைத்திருப்பது போன்ற உணர்வு மட்டுமல்ல; பொதுநலமும், நாட்டு நலமும், சமூக நலமும், இளஞ்சமுதாயத்தினர் மீதான அக்கறையும் ஆதூரமும், மகத்தான  நாட்டுப்பற்றும், சேவை மனப்பண்மையும் கொண்ட ஒரு மனித கூட்டத்தின் மிகப்பெரும் மனங்களையும் பெரும் பேறினையும் கையில் தாங்கியிருப்பதைப் போல ஓர் எண்ணம்.

Hats Off to you guys!

உங்களாலேயும் தான் பாரதம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது!! 

அதன் அறம் சார்ந்த ஆத்மா இப்படியான தேசபக்தர்களாலும் தான் தூக்கி நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

....

ஒரு குழந்தையை மடியில் கிடத்தியிருப்பதைப் போல ஒரு பண்பாட்டுப் பெட்டகத்தை என் மடியில் பெருமையோடு ஏந்தியிருக்கிறேன்.!

வாழ்க பாரத சமுதாயம்!! வாழ்க இனிது வாழ்கவே!!

Saturday, September 24, 2022

ஈழத்தமிழ் தேசிய கீதம் - பரமஹம்சதாசன்

 


இதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர் பரமஹம்சதாசன். 

3.9.22 அன்று இலங்கையில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிகழ்த்தப்பட்ட இசைநிகழ்ச்சி ஒன்றிற்குப் போயிருந்தபோது கொடுக்கப்பட்ட ஓரு கைநூலில் இந்த ஈழத்தமிழ் வணக்கப் பண் என்ற தலைப்பில் அமிழ்தம் போன்ற இந்தப் பாடலைக் கண்டேன். அதனை இயற்றியவர் பெயர்  பரமஹம்சதாசன் என்றிருந்தது.

கூகுளில் அவரைத் தேடிய போது அவர் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு தமிழகக் கவிஞர் என்ற ஆச்சரியத் தகவல் கிட்டியது. 16.12.1916ல் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து, பிரமச்சாரியாகவே வாழ்ந்து, தனது 49வது வயதில் 1965 ஜனவரியில் மறைந்திருக்கிறார். 

கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தவர் பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது பக்தி கொண்டு, தன் பெயரை பரமஹம்சதாசன் என்று மாற்றிக் கொண்டார் என்று அறிய முடிகிறது.




தாய்நாட்டு வணக்கப் பண்

வாழ்க ஈழத் தமிழகம்

வாழ்க இனிது வாழ்கவே

மலைநிகர்த்திவ் வுலகில் என்றும்

தலை நிமிர்ந்து வாழ்கவே!


அமிழ்தை வென்ற மொழியினள்

அருள் கனிந்த விழியினள்

அரிய பண்பு நிதியினள்

அவனி மெச்சும் மதியினள்

மமதை கொண்ட பகைவரும்

வணங்கும் அன்பு விதியினள்

வளரும் இருபத் தைந்துலட்சம்

மக்கள் கொண்ட பதியினள் 

                                                               ...வாழ்க

வானம் பாடி போலமீன்

கானம் பாடும் வாவிகள்

மலர்க் கனி குலுங்கிடும்

எழில் மிகுந்த சோலைகள்

தேனும் பாலும் பாய்ந்திடச்

செந்நெல் பொலியும் கழனிகள்

தெய்வ கற்பகத் தருக்கள்

உய்வ ளிக்கும் மாநிலம்

                                                        .....வாழ்க

பட்டிப் பளை

பயில் அருவிமுத் தாறுகள்

பல வளங்கள் பொலியவே

எழில் நடஞ்செய் துலவிடும்

மட்ட களப்பு, யாழ்நகர்,

மாந்தை, வன்னி, திருமலை,

மகிழ்வொடு மலைத் தமிழர்கள்

மலரடி தொழும் இனியவள்

                                                                .... வாழ்க

இக்கவிஞர் காலமாகுவதற்கு இரண்டு வருடங்களின் முன்னர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘Fruit Gathering' என்ற நீண்ட கவிதையை 'தீங்கனிச் சோலை' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அதில் ஒரு சிறு பகுதி இது.


                      எனது பிரார்த்தனை


’ஆபத்தி நின்றெனைக் காத்தருள்’ என்று 

தாபத்தி னாலுந்தன் தாளுறவில்லை!

’யாவற்றை யும்வெல்லும் ஆற்றலை நல்கென்

றே, பக்தி செய்துனை ஏத்திடு கின்றேன்!


’துன்பம் துடைத்துச் சுகப்படுத்’ தென்றுன்

இன்பப் பதத்தை இறைஞ்சிட வில்லை;

தெம்போ டணைத்தும் சிரித்துத் தகர்த்தும்

பண்பை எனக்கருள்’ என்றே பணிந்தேன்!


வாழ்வெனும் போர்க்கள வாயிலில் நின்றுன்

தாள்பணிந் தேதுணை தாவென வில்லை;

‘நாள் கடந்தாலும் , தன் நம்பிக்கை மிக்க

நீள்கடும் போர்த்திறல் நீயருள்’ என்றேன்


தப்பிக்க வெண்ணித் தயங்கிப் பதுக்கல்

அற்ப முமின்றி, என் ஆத்மசுதந்திரப்

பொற்பினை, ஆற்றல் பொறுமையில் காண

வெற்பெனத் திண்மன வீறெனக் கே, தா!


வெற்றியில் மட்டும்நின் விண்கரு ணைத்தேன்

கொட்டிடக் கண்டொரு கோழையா காமல்,

உற்றிடும் தோல்வியி லும், நின் கரத்தைப்

பற்றில், வாழ் வுண்டென்னும் பண்பு மனம் தா!


(- மகாகவி தாகூரின் ‘Fruit Gathering' ன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘தீங்கனிச் சோலை’ -  பரமஹம்சதாசன். முதற்பதிப்பு 1963, ஏப்பிரல், ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி, இலங்கை. பக் 139 - )

இப்புத்தகத்தை நூலகத்தின் கீழ்வரும் இணைப்பினைச் சொடுக்கிச் செல்வதின் வழி கண்டு கொள்ளலாம். 

 தீங்கனிச் சோலை

நன்றி: noolaham.org

Saturday, November 6, 2021

ஆதித் திராவிடத் தமிழர்களின் ஜீவ காருண்யம்

 


காருண்யம், இரக்கம், அன்பு,அக்கறை  என்பது எல்லாம் உயர்வான ஒரு மனநிலை. மேலான மனங்களில் மேலோங்கி நிற்பன.

அது என்ன தமிழரிட்ட மட்டும் அது தனியா இருக்கிற ஒரு பண்பா எண்டு கேட்டா நிச்சயமா இல்லை. அது எல்லா இன, மொழி, பண்பாடு கொண்ட மக்களிட்டையும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  இருக்கு. அது ஒரு நல்ல மனிசரின்ர குணம்.

இண்டைக்கு நான் இங்க குறிப்பா சொல்ல விரும்புற விஷயம் என்னெண்டா எங்கட தமிழ் மரபில; அதிலயும் குறிப்பா வேற எந்த ஒரு சிந்தனைக் கலப்பு, பண்பாட்டு செல்வாக்குகளும் தமிழுக்குள்ள வராமல் இருந்த ஒரு காலத்திலயே இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயம் தமிழன்ர மனநிலையில நிலைச்சு இருந்திருக்கு எண்டதத் தான்.

அது தெளிவா தெரியிற ஒரு தனித்தமிழ் வேர். பின்னாளில அது பிறகு அறமா நிலைக்கிறதுக்கு இது தான் அடிப்படையா அமைஞ்சிருக்கு. இதுக்கு தமிழ் இலக்கியத்தின்ர பாதை யெல்லாம் தொடர்ச்சியான தெளிவான சான்றிருக்கு. அத எல்லாம் இணைச்சா  ஒரு பெரிய தமிழ் Free Way யே போட்டிடலாம். அவ்வளவு கிளியர் அது!

சரி அது இருக்கட்டும், நாங்கள்  ஆதித்தமிழ் திராவிட வாழ்க்கை முறையின்ர தொடக்கத்துக்கு வருவம்.  தமிழ் மூதையையரின்ர தனித்தமிழ் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் வாழ்க்கை. காதல், சண்டை இந்த ரெண்டு பிறக்கெட்டுக்குள்ளயும் எங்கள அடைச்சுப் போடலாம். இதுக்குள்ள தான் மானம் ரோசம், அறிவு புலமை, அன்பு பண்பு, ரசிப்பு ருசிப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாம் அடங்கி இருந்திருக்கு. 

ஏன் சண்டையள் வந்திருக்கு எண்டு பாத்தா அது நாட்டுக்கு நாடு நிலம் பிடிக்கிறதா இல்லாட்டி ஒருத்தரின்ர மந்தையளை அடுத்த நாட்டுக்காரன் வந்து கடத்திக் கொண்டு போக இந்த நாட்டுக்காரர் அதை மீட்க  சண்டைக்கு போன விதமா தான் இருந்திருக்கு. போரில போய் செத்த வீரருக்கு அவர தாட்ட இடத்தில ஒரு கல்லை வச்சுப் போட்டு அந்த நடுக்கல்ல கடவுளா வழிபட்ட வாழ்க்கை தான் இவையின்ர கடவுள் கொள்கை. ஒரு விதமான செய்நன்றிக்கடன். அதத்தாண்டி அவை வேற ஒண்டையும் யோசிக்கேல்ல. 

கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த வாழ்க்கையை எல்லாரும் ஒரேமாதிரி; ஒரு பாகுபாடும் இல்லாமல்; நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கினம். தன்னைச் சுத்தி இருக்கிற இயற்கையை  அவை அவதானிச்சு நேசிச்சு வாழ்ந்திருக்கினம்.

உதாரணமா ஒரு சின்ன சம்பவத்தை உங்களோட பகிர்ந்து கொள்ளலாம். நற்றிணை எண்ட இலக்கியத்தில வாற உலோச்சனார் எண்ட புலவர் பாடின பாட்டு இது. ரெண்டு இளஞ் சினேகிதியள் கதைக்கினம். வேறை என்ன? காதல் தான். வாறன் எண்டு சொன்ன காதலனைக் காணயில்லை. இது தான் ரொபிக். ஒரு சினேகிதி மற்றச் சினேகிதியயிட்ட இதச் சொல்லி கவலைப்படுரா. மற்ற சினேகிதி இவவுக்கு கவுன்ஸிலிங் செய்யிறா; இப்பிடி. இங்க பாரு, ஆருஞ் சூடாமல் சும்மா வச்சிருக்கிற பூமாலை மாதிரி வாடுறியே! முதல்ல இப்பிடி கவலைபடுறத நிப்பாட்டு எண்டு முதல்ல கவலையை நிப்பாட்டச் சொல்லிப் போட்டு ஏன் அவன் வரத் தாமதமாகுது எண்டதுக்கு காரணம் சொல்லுறா.

 ஏனெண்டா அவன் கடற்கரை வழியா இரவு வர வேணும். இரவில நண்டுகள் எல்லாம் கடற்கரையில ஓடித்திரியும். இப்பிடி நண்டுகள் ஓடித்திரியிற பாதைவழியா தேரை ஓட்டி வரவேணும். அது லேசான காரியமில்லை. இந்தகாலத்தில நாங்கள் இரவு ரோட்டுகளில கங்காருகள் குவாலாக்கள் ரோட்டுகள குறொஸ் பண்ணேக்கை அடிபடாமல் கவனமா கார் ஓட்டி வாற மாதிரி - அந்தக்காலத்தில  நண்டுகளை மிதிச்சிடாமல் தேரை ஓட்டி வரவேண்டிய தேவை இருந்திருக்கு போல. அப்பிடி அவன் கவனமா நண்டுகளை கவனிச்சு தேர் ஓட்டி வாறதால தான் தாமதமாகுதாம் எண்ணுறா. பெய்யாது வைகிய கோதை போல... எண்டு தொடங்குற அந்தப்பாட்டில அந்தச் சினேகிதி.

அட இதெல்லாம் என்ன பெரிய விஷயமா எண்டு நீங்க கேட்டா, அது பெரிய விஷயம் தான் எண்டு சொல்லுறதுக்கு தமிழிட்ட ஒரு காரணம் இருக்கு. அது என்னெண்டா கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில செம்மொழியா; தெய்வீக மொழியா; தேவ பாஷையா  வளர்ச்சி அடைஞ்சிருந்த சமஸ்கிருதத்தில - யாகம் எண்டு ஒரு சடங்கு நடந்திருக்கு.  வேதங்களும் பாரத இராமாயண இதிகாசங்களும் செல்வாக்கோட இருந்த  அந்த ஆரிய வாழ்க்கையில - அதின்ர சிந்தனைப் பண்பாட்டில - வேத மந்திரங்களை ஓதி, அக்கினி வளர்த்து அதில கடவுளுக்கான உணவுப் பொருள்களை அவிப்பாகமாக போட்டு  கடவுளோடு அவர்கள் தொடர்பு கொண்டு தமக்கு தேவையானதை பெற்ற முறை அது. அப்பாவி உயிரினங்களை அக்கினியில போட்டு ஆகுதி ஆக்கி கடவுளுக்கு சமர்ப்பிக்கிற முறையும் அதில இருந்து இருக்கு. 

இதை எல்லாம் நாங்கள் சிம்பிளா ஒரு வரியில கடந்து போயிட முடியாது. பக்கம் பக்கமா; கிட்ட கிட்டவா; அருகருகா வளர்ந்து வந்த  சிந்தனைப்பண்பாடு  எண்டாலும் வேற வேறயான வாழ்க்கை நெறிமுறையள் நம்பிக்கையள் இந்த ரெண்டு பண்பாட்டிலயும் இருந்திருக்கு. அதுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒண்டு சொல்லலாம்.

’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே’ எண்டு தன்ர காதலன் போரில செத்தாப்பிறகும் எங்கட வீட்டுல இருக்கிற  நீ எப்பிடி இப்பிடி பூத்திருக்கிறாய் எண்டு முல்லைப்பூவோட ஒரு தமிழ் காதலி கோவிச்சுக்கொண்டிருந்த தமிழ் பண்பாட்டு நிலவின அதே காலத்தில  குதிரையின்ர முதுகில அரசன் வெற்றிக் கொடியை வச்சு அது சுத்தித்திரிஞ்ச ஊரெல்லாம் தன்ர ஊர் எண்டு பிரகடனப்படுத்தி, அந்தக் குதிரைய வேற ஒரு அரசன் பிடிச்சிட்டா அவனோட போர் செய்து, அவனை வெற்றி கொண்டு, அதுக்குப் பிறகு  தன்னை சக்கரவர்த்தி எண்டு பிரகடனப்படுத்தி, அந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக யாகம் செய்து அதில அதே குதிரையை கொன்று அதின்ர கொழுப்பை ஆகூதி ஆக்கி அந்த முளாசி எரியுற அக்கினியில அந்த குதிரையின்ர  மாமிசத்தை வாட்டி விருந்து கொடுத்து ‘அஸ்வமேத யாகம்’ நடத்திக் கொண்டிருந்தது தேவ பாஷை. 

சரி, இப்ப இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயத்துக்கு வருவம். இண்டைக்கு நான் உங்களோட பகிர்ந்து கொள்ள இருக்கிற பாட்டு புறநானூறு எண்ட இலக்கியத்தில கோவூர் கிழார் எண்ட புலவர் பாடின 46வது பாட்டு.

இந்தப் பாட்டை சொல்லுறதுக்கு முதல் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னால் நல்லா இருக்கும். கிள்ளிவளவன்; மலையமான் எண்டு ரெண்டு சோழ ராசாக்கள். ரெண்டுபேருக்கும் பகை. ஒருமுறை கிள்ளிவளவன் மலையமானின்ர ரெண்டு பிள்ளைகளையும் உயிரோட பிடிச்சுக்கொண்டு வந்திட்டார். யானையால பிள்ளையளக் கொண்று பழி தீர்க்கிறது தான் கிள்ளி வளவன்ர நோக்கம். இது தான் சம்பவப் பின்னணி.

பிள்ளையள் சின்னவை. ரோற்றிலர்ஸா இருந்திருப்பினம் போல.  பெரிய ஆக்களின்ர உலகம் போல இல்லத் தானே குழந்தையளின்ர உலகம்! பிள்ளையளுக்கு இடம் ஆக்கள் எல்லாம் புதுசா இருக்கு; பழக்கமில்லாத இடம். மருண்டு போய் நிக்கினம். என்ன நடக்குது; ஏன் தாங்கள் அங்க நிக்கிறம் எண்ட ஒண்டும் அவைக்கு விளங்கேல்ல. யானை கொண்டுவரப் படுது. யானையை கண்ட உடன பிள்ளையளுக்கு கொண்டாட்டம். வாவ்... யானை... எண்டு ஆச்சரியமும் குதூகலமுமாக எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா ஒரு விதமான கூறியோசிற்ரியோட அதப் பாத்துக் கொண்டு நிக்கினம்.

கோவூர் கிழார் பாடுறார்.


நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!

இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்!

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த 

புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண் நோவு உடையார்!

கேட்டனை! ஆயின், நீ வேட்டது செய்ம்மே!

மன்னா, புறாவின்ர துன்பம் போக்கின சோழ பரம்பரையில வந்தவன் நீ. புறாவுக்கு மட்டுமா? எல்லா உயிர்களின்ர துன்பங்களையும் போக்குகிறவன் நீ. இந்தப் பிள்ளையளப் பாரு! இவையும் பெரிய குடும்பத்தில பிறந்த பிள்ளையள் தான். படிச்ச ஆக்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது எண்ணுறதுக்காக தங்கட செல்வங்களை எல்லாம் பகிர்ந்து குடுத்து வாழுற மரபில வந்த பிள்ளையள் இவை!

நேற்றுவரைக்கும் குளிர்மையான நிழலில; ஒரு கவலையுமில்லாமல் பாதுகாப்பா விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையள். இண்டைக்கு உனக்கு முன்னால கைதியளா நிக்கினம். இந்த புது இடத்தைப் பாத்து திகைச்சுப் போய் நிக்கினம். 

இவையை கொல்லுறதுக்காக நீ யானையை கொண்டு வந்திருக்கிறாய். அது கூட தெரியாமல் அதுகள் யானையை பார்த்து சந்தோஷமா ஆச்சரியப்பட்டுக் கொண்டு  நிக்குதுகள்.. இந்த அப்பாவிப் பிள்ளையளையா நீ கொல்லப் போறாய்?

என்னவோ நான் சொல்லுரத சொல்லியிட்டன். இனி நீ உனக்கு எது சரி எண்டு படுதோ அப்படிச் செய் 

எண்டு சொல்லுறார். 

ஒரு காருண்யமான காரியத்தை உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு சுடச் சுட சொல்லாமல்; மென்மையா உணர்த்திற அதே நேரம் எதிரி மன்னன்ர குண இயல்புகளை அதுக்காக இகழ்ந்து கூறியோ அல்லது இந்த மன்னனிட்ட பணிஞ்சு போயோ சொல்லாமல் கோவூர் கிழார் சொன்ன பாணி எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? 

கோவூரார்; தமிழ; அதின்ர ஜீவகாருண்யத்தை சொன்ன முறையும் இந்த வரலாற்று சம்பவமும் அதைப் பாட்டுக்குள்ள புகுத்தி காட்சிப்படுத்தின பாங்கும் தமிழ் உள்ள வரை தமிழன்ர அறம், கருணை, காருண்யம், மனசாட்சி எல்லாத்துக்குமான தொடக்கப் புள்ளியா இருந்தே வரும்.

இப்பிடி எத்தினையோ பாட்டிருக்கு. அதில இது ஆதித் தமிழ் திராவிடனிட்ட இருந்த காருண்யத்தின்ர ஒரு சிறு துளி!

Saturday, February 20, 2021

அந்த நீல மாபிள் கண்களும் அவலச் சுவையும் நம் தத்துவப் பரிஹாரங்களும்....

 நேற்றய தினம் உருகி நின்ற நீல மாபிள்கள் இரண்டைக் கண்டேன். 

அது பிங்லேடி அப்பிளின் மேல் பதிந்து நின்ற இரு நீலக் கண்கள். 

ஆறுவயதுக் குழந்தைக்குரியவை. தனியே விடப்பட்டதன் அச்ச உணர்வை கொண்டிருந்த உணர்ச்சிக் குவியலென அவை....உணர்வுக் குவளையென அந்தக் கண்கள்....உருகி நின்ற நீல மாபிள்கள்...கண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த நீல டொல்பின்கள்.......அதற்குள் ஊடாடி நின்ற மருட்சி! அது ஒரு மான்குட்டியின் மருட்சி!  

அவளை சமாதானம் செய்ய ஒரு ஸ்டிக்கர் போதுமாக இருந்தது. என்றாலும் அந்தக் கண்களை; அது கொண்டிருந்த உணர்ச்சிகளை மறக்க முடியவில்லை; அது துன்பத்தின் பாற்பட்டதல்ல; அது ஒரு அவல, பய உணர்வின் வெளிப்பாடு. என்ன செய்யப் போகிறேன் என்று எதுவுமே தெரியாது நிற்கதியாய் நிற்கும் நிலை. ஒரு பரிதவிப்பு நிலை.

 போரில் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.... 

போர் ஒன்றை எந்த ஒரு உயிரினமும் இனிப் பார்க்காதிருக்க இந்தப் பிரபஞ்சம்  அருள்பாலிக்க வேண்டும்! 

...........................

இதனைப் பார்த்த போது அண்மையில் படித்த சமஸ்கிருதப் பெண் ஒருத்தி நினைவுக்கு வந்தாள். அவள் அன்பு கொண்டிருந்த தலைவன் பரத்தையிடம் போய் விட்டு வருகிறான். அவன் எங்கு போய் வந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். போகிறவனை அவள் என்ன செய்துவிட முடியும்? 

மாருளை என்ற பெண் கவிஞை ஒருத்தி வட மொழி இலக்கியத்தில் பதித்தது அது. ஒருவித நிர்க்கதியோடு அவனை எதிர்கொள்கிறாள் பெண். மனசெல்லாம் பாரத்தோடு அவள் நிற்கிறாள். முட்டி வழிகிறது வருத்தம். ஒன்றுமே தெரியாத அப்பாவியைப் போல அவன் கேட்கிறான். ஏன் மெலிந்து போயிருக்கிறாய்? அவள் சமாதானம் சொல்கிறாள். நான் அப்படித்தானே! மேலும் அவன் தொடர்கிறான்... ஏன் அழுக்காக உன்னைக் கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? அவள் வீட்டுவேலை என்று மழுப்புகிறாள். உனக்கு என் நினைவு இருக்கிறதா என்று மேலும் அவன் கேட்கிறான். அவ்வளவு தான்!  இல்லை, இல்லை என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கிவிட்டாளாம்.

இந்த நிர்க்கதி நிலை பின்னர் கண்ணீரை கொண்டுவருகிறது. நம் திராவிடப் பெண்கள் அழுதிருக்கிறார்கள். காதலுக்காக; கடந்து போனவர்களுக்காக; போரில் மாண்டவர்களுக்காக அவர்கள் அழுதிருக்கிறார்கள். அதன் உச்ச பட்சமாக இறந்தவர்களை; வீர நாயகர்களை தெய்வாம்சத்துக்கு உயர்த்தி அவர்களை நடுகற்களாக வழிபட்டிருக்கிறார்கள். ஆனாலும், காதலையும் போரையும் தாண்டிய ஒன்றை அவர்கள் கற்பனை பண்ணவில்லை. மிக யதார்த்தமாக வாழ்க்கையை எதிர்கொண்டு ‘அனுபவித்து’ வாழ்ந்திருக்கிறார்கள். 

வாழ்க்கை குறித்த தத்துவார்த்தம் தொனிக்கும் பாடல்களிலும் கூட இந்த வாழ்க்கை தற்காலிகமானது ஆற்றில் விழுந்துவிட்ட இலை ஒன்று ஆற்றின் ஓட்டத்துக்கு ஏற்ப ஓடுவது போன்றது தான் நம் வாழ்க்கை என்றவாறாகவே வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார்கள். உண்பது நாழி உடுப்பது இரண்டே தான் என்று தேவையை வரையறுத்து வைத்திருந்தார்கள். அதனால் பேதமற்ற எளிய வாழ்வு சித்தித்திருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் வருத்தங்களுக்கு மாற்று கருத்தை அவர்கள் சிந்திக்கவில்லை.

மாறாக சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு அப்பாலான கடவுள் சித்தாந்தம் ஒன்றை கற்பனை செய்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்டது. அதனால் வரும் துன்பங்களுக்கு விதியே காரணம் என அது ஆறுதல் கொண்டது. 

நம்முடய எண்ணங்கள், நம்பிக்கைகள் என்பன நம் வாழ்க்கை பற்றிய பார்வையை; வாழ்க்கையை  எப்படி எல்லாம் மாற்றியமைக்க வல்லதாக இருக்கிறது என்பது ஒரு அதிசய விஞ்ஞானம்; 

விஞ்ஞிகை என்ற பெண் விதியின் வலிமையைப் பற்றி சொல்லும் ஸ்லோகம் ஒன்றில் ’துன்பமாகிய பொல்லினால் (தண்டம்) மனதுக்கு அடிக்குமேல் அடி கொடுத்து அதனை மண்ணைப் போல பிசைந்து அதனை உருட்டிப் பிடித்து ஓயாமல் சுளன்றுகொண்டிருக்கும் சிந்தை (எண்ணம்) என்ற சக்கரத்தில் வைத்து பெரிய குயவன் ஒருவனைப் போல இந்த விதி என்னைச் சுளற்றுகிறதம்மா; நான் என்ன செய்வேன்? என்று வருந்துகிறாள்.( இவளுடய காலம் 7ம் நூற்றாண்டு என்று அறிய முடிகிறது. மேலும் இவள் இரண்டாம் புலிகேசியின் புதல்வனான சந்திராதித்தியனின் மனைவி என்றும் தெரிகிறது)

சுபத்திரை என்ற பெண் கவிஞை விதியை - அது நல்லவர்களையே வாட்டுகிறது என்பதை பாலுக்கு உவமை சொல்லிப் பாடுகிறாள். பால் அதன் தரம், சிறப்பு என்பவற்றுக்காக பசுவில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டது; பிறகு அதனைக் காய்ச்சி அதன் இனிமை எடுக்கப் பட்டது; அதன் பிறகு கடைந்து அதன் சாரமாகிய வெண்னையும் எடுக்கப் பட்டது; இவ்வாறெல்லாம் அபகரிக்கப் படுவதற்கு பாலின் சுவை, தரம், தன்மை அன்றோ காரணமாகி விட்டது என்கிறாள் அவள்.

இந்த விதி குறித்து சரஸ்வதி என்ற பெண் கவிஞை காணும் காட்சி சற்று வித்தியாசமானது. அவள், தாளையை பார்த்து சொல்கிறாள். ‘தாளையே உன் இலைகள் வாளைப் போல கூர்மையுடன் இருக்கின்றன. உன்னிடம் தேனே இல்லை; உன் பூவிலுள்ள மகரந்தப் பொடிகளோ காற்றில் கலந்து கண்ணை உறுத்துவனவாக உள்ளன. ஆனாலும் உன்னை நாடி வண்டுகள் வருகின்றன. உன் பூவின் மணம் என்ற ஒன்று எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறதே என்கிறாள்.

லக்ஷ்மி என்ற பெண் தன் சுலோகத்தில் விதியை இப்படியாகக் காண்கிறாள். பலர் விஷய தானங்களோடு அறிவுடையவர்களாக இருந்தாலும் அதிஷ்டமும் அபிமானமும் சிலருக்கே கிட்டுகிறது என்பதை கண்ட அவள், ‘காடுகளில் புது மலர்கள் எல்லாவற்றிலும் விழுந்து புரளும் வண்டு கந்தபலி என்ற பூவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை; அதற்கு என்ன மணமும் குணமுமா இல்லை? அழகுக்கு என்ன குறைச்சல்? ஆனாலும் வண்டுகள் ஏன் முகர்வதில்லை? இது தான் விதிச் செயலோ என்று கேட்கிறாள்.

நம் இலக்கியப் பெண்கள் எல்லாரும் முத்துமுத்தாக கண்ணீர் விடுவார்கள். பிறகு  அவர்கள் இறந்தவர்களை பாட்டிலும் நடுகல்லிலும் வைத்தார்கள். யதார்த்த வாழ்க்கையினை அதன் இயல்போடு அப்படியே ஏற்றுக் கொண்டு  வாழ்ந்தார்கள். உண்மையும் இயல்பும் இயற்கையும் காதலும் போரும் சமத்துவமுமான வாழ்வு அது. 

இல்லாத ஒன்றை அவர்கள் காணாததால் தன்னம்பிக்கை அங்கு நிறைந்திருந்தது. காத்லித்தவன் கைவிட்டதற்கு அவர்கள் விதியைச் சரனடையவில்லை. மாறாக காதலனைக் காணாமல் அவனைத்தேடிப் புறப்பட்ட வெள்ளிவீதியாரையே நாம் இலக்கியத்தில் காண்கிறோம்.அந்தக் கவிஞை விதியை குற்றம் சாட்டவில்லை; இல்லாத அல்லது தெரியாத தெய்வீக அம்சத்தில் அவள் பழி போடவில்லை; அவள் தன்னை விட்டு விட்டுப் போனவனை குறுந்தொகையில் தேடுகிறாள் இப்படி,


நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  (குறு;130)

நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை, வானத்திற்கும் ஏறவில்லை, விலக்கும் பெரிய கடல் உள்ளும் நடந்து செல்லவில்லை.  நாம் அவரை நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், குடிகள்தோறும் முறையாகத் தேடினால் அகப்படாமல் போய் விடுவாரா? அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு!

அவள் திராவிட பெண்! 

அவர்களுடய அழுகை வீரத்துக்காக விளைந்த ஆனந்த அழுகையாக இருந்திருக்கிறது. அல்லது காதலுக்காக அழுத பிரிவுத்துயரால் விளைந்திருக்கிறது. கீழே வரும் பாடல் வீரமரபில் வந்த தலைமயிர் நரைத்த கிழவியின் ஆனந்தக் கண்ணீர் வகை சார்ந்தது.

புறம் 277 இல்

மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெழுத்திருப்பது போல நரைத்த கூந்தலைக் கொண்டிருக்கும் பெண் தன் மகன் போர்களத்தில் யானையைக் கொன்று தானும் மாண்ட செய்தியைக் கேள்விப்பட்டு, அவனைப்பெற்றதிலும் பார்க்க மகிழ்கிறாள். ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கிறாள். இருந்தாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர். அது எப்படி இருக்கிறதென்றால் மழைத்தண்ணீர் மூங்கில் இலையில் இருந்து துளித்துளியாய் விழுவதைப் போல இருக்கிறதாம். ( மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல்.....)

'பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் 

பிறங்கு இரும் முன்னீர் வெறு மணலாக

புறங்காலின் போக இறைப்பேன் முயலின்

அறம் பனையாகலும் உண்டு’

நல்லந்துவனாரின் இந்த பாடல் அடிகள் (144)

அலை எழுந்து பொங்கும் பெருங் கடலே என்னைப் பேணாமல் என்னை விட்டு விட்டுப் போனவனைத் தேடிப் போக எனக்கு கொஞ்சம் வழிவிட்டுத் தாருங்கள். அப்படி நீங்கள் எனக்கு வழி விடவில்லையானால் என் புறங்காலால் இந்த நீர் முழுவதையும் இறைத்து உன்னை வெற்று மணலாக்கி விடுவேன். இது இயலுமா என்றால் இயலும். என் முயற்சிக்கு நல்லறம் துணை நிற்கும். எனவே என்னால் அது இயலும் ‘ என்று தன்னம்பிக்கை மிளிர பாடும் இந்தப் பாடல் திராவிட சிந்தனையின் ஒரு முத்து எனிலும் பொருந்தும். 

அது கடவுள் மீதோ விதியின் மீதோ பழி போடவில்லை. சரியாக நடந்தால் அந்த அறமே அதைக் காக்கும். என்னால் வென்றுவிடமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது அப் பாடல். ‘நன்றும் தீதும் பிரர் தர வாரா என்ற பண்பாட்டின் வழி அது!

கலித்தொகையின் பிறிதொருபாடலில் காதலனைப் பிடித்து தராவிட்டால் நிலவிலே இருக்கிற முயலை நாயிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிற தோழியை நல்லந்துவனார் இப்படிக் காட்டுகிறார். அந்தப் பாடல் இது.

‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயலால்

எம்கேள்! இதனகத்து உள்வழி காட்டீமோ?

காட்டீ யாயின் கதநாய் கொளுவவேன்

வேட்டுவர் உள்வழி செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீரா யெனின் (144)

தலைவி தலைவனைத் தேடிச் சலித்துப் போய் விடுகிறார். இந்த பரந்த உலகில் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உலகம் முழுவதையும் உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலவிடம் கேட்கிறாள்; இங்க பார்! நிலவு! உன்னட்ட இருக்கிற முயல் இங்க முயலாகத் தான் தெரியுது. ( நிலவில் இருக்கிற களங்கத்தை இவள் முயலாகக் காண்கிறாள். நாம் ஒரு பாட்டி கால்நீட்டி இருக்கிறாள் என்று கதை சொல்கிறோம் இல்லையா; அதுமாதிரி) முயலே! என் தலைவன் எங்க இருக்கிறான் எண்று எனக்குச் சொல்லிவிடு. இல்லையென்றால் உன்மீது சினம் கொண்டு நாயை ஏவி விடுவேன்.அல்லது வேடர்களிடம்  உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன். நான் இப்ப மூளை (மதி) கலங்கிப் போய் இருக்கிறேன். இப்ப என் துயரத்தை நீ தீர்த்து வைக்கவில்லை  என்றால் சந்திரனோட ( மதியோட) உன்னையும் சேர்த்து பிடிக்கச் சொல்லி பாம்பையும் ஏவி விடுவன் எண்டு எச்சரிக்கிறாள்.

தன்னம்பிக்கையும் வெளிப்படை உணர்வும் கொண்ட வசீகரமான கம்பீரமான தமிழ் திராவிடப் பெண்கள் இவர்கள்!

நம்மிடம் இந்த ஆரிய மத நம்பிக்கைகள் ஊடுருவாமல் இருந்திருந்தால் நம் நம்பிக்கைகள் வேறொரு பாதையில் போயிருக்கும் என்றே தோன்றுகிறது.

நேற்றய தினம் Eda என்ற சிறுமியின்  நீல மாபிள் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரும் அது என்னைக் கண்டதும் சிதறி விழுந்த அதன் உடைவும்  எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்து விட்டுப் போயிருக்கிறது.....

எடாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, February 13, 2021

ஆரிய, திராவிட சிந்தனை மரபு

 நாலே நாலு விஷயம் தான். 

ஆதித் திராவிடத் தமிழர்களின் வாழ்க்கை முறை ஆரிய பண்பாட்டுச் செல்வாக்கிற்கு முன்னால் எப்படியாக இருந்தது என்பதை 4 சிறு உபதலைப்பின் கீழ் காணுதல் இந்தக் கட்டுரையில் நோக்கம்.

1. நாளாந்த வாழ்க்கை

2. இயற்கையை போற்றிய வாழ்வும் ஜீவகாருண்யமும்

3.கல்வியும் அறிவு சகலருக்குமானதாக இருந்தமை

4.உழவுக்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தமை.

இதற்குள்ளே நிற்கவேண்டும் என்று எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டாயிற்று; மேலும் தகவல்களைத் தேடாமல் மனம் குறித்துக் கொண்ட விடயங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களை நேரடியாக இங்கு  எழுத்தில் பதித்து விட வேண்டும் என்றும் தோன்றிற்று.

அண்மையில் பரிபாடல் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட ஒரு பாடல் வரி தான் இந்த எண்ணப் பதிவுக்குக் காரணம். அது,

‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புவீர்யீ! கேண்மின் சிறந்தது;

காதற்காமம் காமத்துச் சிறந்தது; 

விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;

புலத்தலிற் சிறந்தது கற்பே......’

என்றவாறாக விரிந்து பெருகும் பாடல் அது! 

1. அது சொல்லும் பொருள் என்னவென்றால் ’நான்குவேதங்களையும் விரித்துரைத்து அவற்றின் புகழை எல்லாம் உலகுக்கு விளக்குகிற, வாய்பேச்சில் வல்லவர்களான வடமொழிப் புலவர்களே! சிறந்த ஒன்றைக் கூறுகிறோம்;  கேளுங்கள்! ‘காதலோடு மனமொத்துக் கூடிப் பெறுகிற இன்பமே காம இன்பங்களுக்குள் சிறந்தது. பிற பெண்களிடம் சென்றுவிட்டு ஊடலினால் பெறும் இன்பம் உண்மையில் இன்பம் அன்று; தம் கணவர் தம்மைவிட்டு அகன்றதை அறியாதவரான இல்லத் தலைவியர்களை வருத்தும் தவறினைச் செய்யாத;  தள்ளுவதற்கு இயலாத அகப்பொருள் பண்பாட்டின் இலக்கணத்தோடு அமைந்த தண்மை பொருந்திய தமிழ் பண்பாட்டின் வழியிலே வந்த மக்கள் வாழும் பரம்குன்றம் இது’ என்றவாறு பொருள் கொள்ளத்தக்கதாக அப்பாடல் அமைந்துள்ளது.

இந்தப் பாடல் கிளப்பிய சிந்தனைதான் இந்த ஆரிய திராவிட சிந்தனை மரபின் வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் காணும் ஆர்வத்தைத் தூண்டியது. 

சங்க காலமாகிய கிபி 1 - 3 நூற்றாண்டுகளுக்குள்ளேயே வட இந்திய ஆரிய சமஸ்கிருத பண்பாட்டு வாழ்க்கைமுறை, தத்துவார்த்த சிந்தனைகள் எல்லாம் தென் இந்தியா எங்கும் புகுந்து மக்களால் பின்பற்றப்படும் வாழ்க்கைமுறையில் ஒன்றாகி விட்டது.

அதனால் ஆதித் திராவிட பண்பாடு அதாவது சுத்த தமிழ் பண்பாடு எது ஆரியப் பண்பாடு எது என்பது குறித்துப் பார்ப்பது, நம் மூலத்தை அறிந்து; நம் மூல வேர் எது? நம் சிந்தனை மரபு எத்தகையது என்ற தெளிவினை பெற அது உதவும்.

திராவிட வாழ்க்கைமுறையில் சாதிப்பாகுபாடுகள்; இனப் பாகுபாடுகள்; ஆண்பெண் பேதம் எதுவுமில்லாததாக அது விளங்கியமைக்கு சங்க காலப் பாடல்கள் சாட்சி. அதனைப் பாடியவர்கள் பல்வேறு தொழிலைப் புரிந்தவர்களாக இருந்தார்கள்; பெண்பாற்புலவர்களும் இருந்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்தார்கள். வாழ்வு பற்றி அறிவார்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். அதனால் ’பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்ந்தல் அதனிலும் இலமே’ என்று அடக்கத்தோடு வாழ்ந்தார்கள். யாண்டு பலவாக என்ற சங்கப்பாடல் ’கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று பெருமை கொள்ளும் படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். ‘உண்பது நாழி; உடுப்பவை இரண்டே’ என்று எளிமை வாழ்வை அதன் அடிப்படை தேவைகளை சொன்னது தமிழ் அறம்.

இதே காலப்பகுதியில் உள்ளே புகுந்த ஆரியப் பண்பாட்டின் செல்வாக்குகள் ஆங்காங்கே ஒலிப்பதை சங்கப் பாடல்களிலேயே காணலாம். அவர்கள் வர்ண பாகுபாட்டை கொண்டு வந்தார்கள். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக பிறக்கிறான் என்றார்கள்.  படிப்பும் அறிவும் பிறப்பால் உயர்ந்தவனாகப் பிறக்கும் ஒருவனுக்கே உரியது என்றார்கள்.இப்படியாகப் பின்நாளில் தமிழரின் மேன்மை பொருந்திய  வாழ்க்கை ஒன்று சாதியால் பிளவு பட்டது. அது நம் ஆதி வாழ்வு அல்ல; அது நம் வாழ்வில் புகுந்த ஒன்று.

2. ஆதித் திராவிட தமிழன் இயற்கையை ஆராதித்து இயற்கையை தன் வாழ்வின் ஒரு கூறாகவே கண்டான். அதற்கும் சங்கப் பாடல்களே சாட்சி. ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்று முல்லையோடு கோவிக்கும் தலைவியும்; புன்னைமரத்தடியில் என்னைச் சந்திக்காதே காதலா! அது மரமல்ல என் தங்கை  என்று காதலனுக்கு சொல்லும் காதலியும்; நாம் சந்தித்ததற்கு நாரை மட்டும் தான் சாட்சி என்று நாரையை சாட்சிக்கழைக்கும் தலைவியையும் கொண்டதாக அமைந்தது தமிழ் திராவிட காதல் வாழ்வியல். முற்றத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது அணில்கள் கொண்டாட்டமாக ஓடித்திரியும் என்பதை கண்டு பாடலில் அதனை வைத்ததால் அணிலாடும் முன்றிலார் என்று ஒரு புலவர் பெயர் கொண்டது தமிழ் திராவிட பண்பாட்டின் அழகியல். மாறாக ஆரியப் பண்பாடு உயிரினங்களை ஆகுதி ஆக்கி அக்கினியில் போடப் பணித்தது. கடவுளை மகிழ்விக்க யாகங்கள் பிறந்தன. அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் மாத்திரம் உயரிய உரிமைகளை அது வழங்கியது.

இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் ஆதித் திராவிடத் தமிழ் பண்பாடு சகல உயிர்களையும் தன்னைப் போலவே பிறரையும் பிற உயிரினங்களையும் மட்டுமல்ல இயற்கை வளங்களையும் மரங்களையும் கூட நேசிக்கும் அறத்தை கொண்டு விளங்கியது.

ஜீவன்கள் மீதான அவர்களின் காருண்யம் எத்தகைய மேன்மை பெற்றதாக விளங்கியதென்பதற்கு புறநானூறில் வரும் கோவூர் கிளாரின் 46வது பாடல் சாட்சி.(நீயே, புறவின் அல்லல்...)  இரவு நேரம் கடற்கரை மணலில் நண்டுகள் ஓடித்திரியும். அவைகளில் தேர்சக்கரம் மிதிபடாமல் வர வேண்டி இருப்பதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று தலைவிக்கு ஆறுதல் சொல்லும் நற்றிணைத் தலைவியும் (பெய்யாது வைகிய கோதை...11) ; தேரில் வேகமாக வரும் போது எழும் மணி ஓசை வண்டுகளின் காதலை தடுத்து நிறுத்தி விடுமோ என்று எண்ணி மணிகளின் நாக்குகளை அசையாமல் இறுகக் கட்டி விட்டு மெதுவாக வருவதால் தான் உன் காதலன் வரத் தாமதமாகிறது என்று சொல்லும் அகநானூற்றுத் தோழியும் ( முல்லை வைந்நுனை தோன்ற...4) அழகியல் சார்ந்த தமிழரின் வாழ்வியல் சாட்சிகள்,.

3. திராவிட சிந்தனை மரபில் கல்வி. அது எல்லோருக்குமானதாக இருந்தது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று சொல்லும் புறப்பாடல் (183) ஒன்று முடியும் போது ‘நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’ என்று முடியும்.

இப்பாடல் நேரடியாகவே ஆரியத்தோடு அறிவால் முரண்பட்டு ஆதித்திராவிட வாழ்வின் மகத்துவத்தை வீரியத்தோடு சொல்லக் காணலாம். ஆரிய பண்பாடு பிறப்பாலே தான் ஒருவனுக்கு கல்வி என்ற போது; இல்லை, அது நீங்கள் சொல்லும் பிராமண, சத்ரிய, வைசிய,சூத்திர வர்ணத்துள்ளும் ஒருவன் கற்றால் அவன் மேற்பாலுக்கு வரலாம் என்று ஒரு எதிர்ப்புக் குரலாக இங்கு ஒலிக்கக் காணலாம். இதனை பின்னாளில் வள்ளுவரும் சிறப்பாகச் சொல்லுவார். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்பொருளை காண்’ என்றவர் வள்ளுவர்.

வள்ளுவரும் புத்தரும் ஆரியத்துக்கெதிராக தொடுத்த போர் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. குறிப்பாக வள்ளுவர் அதனை வெகு சமர்த்தாகச் செய்திருக்கிறார். புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர், ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று’  ( குறள் -259) என்கிறார்.  இவைகளை விரித்துச் சென்றால் முன்னர் சொன்னது போல் கட்டுரை வேறு பாதையில் திசைமாறிவிடும் என்பதால் அதனை இந்த இடத்தில் நிறுத்தி விடுகிறேன்.

4.உழவுத் தொழில்; பிராமணரும் அரசரும் பிறப்பால் முதல் இரண்டு இடத்தையும் பெற மூன்றாவது இடத்தை வணிகர்கள் கைப்பற்ற வாழ்க்கைக்கு ஆதார சுருதியினர் பின் தள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை ஆரிய சித்தாந்தம்  கற்பிக்க உழவுத்தொலைச் சிறப்பித்து; ’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார் என்றுரைக்கிறார் வள்ளுவர்; ஆரியம் எல்லாம் தெய்வத்தாலே நிர்ணயிக்கப் பட்டது என்று சொல்ல வள்ளுவன்’ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என்கிறார். ஆரிய தர்மத்தை நிறுவிய மனு பிறப்பாலே தான் ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பிறக்கிறான் என்று சொல்ல புறநானூறு (18) நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று உழவனையும் உழவையும் முன்னிலைப் படுத்துகிறது. பிறப்பால் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை வள்ளுவன் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறான்.

இந்த நமக்கே நமக்குச் சொந்தமான; ஆதித் தமிழ் திராவிட வாழ்க்கையை மீட்டெடுத்தால் நம் வாழ்வு எத்தனை அர்த்தமுடையதாக இருக்கும் இல்லையா?

Thursday, July 9, 2020

தமிழ் துமி(ளி) - அறிந்ததும் பகிர்வதும் -

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை - அன்பே
உன்மேல் பிழை.....

என்று கவிஞர் தாமரையின் கவி வரிகளுக்கு திரைக்கலையில் ஓர் இசைவடிவம் கிடைத்திருக்கிறது. இந்தப் பாடலில் நெஞ்சுக்குள் ஒரு மாமழை பெய்கிறது.

தமிழ் இலக்கியத்திலோ ஒரு மா அலை அடிக்கிறது; ஐங்குறு நூறு காதலன் ஒருவனுக்கு. சங்க காலத்து மனிதனின் காதல் இது.

ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!

இதன் சுருக்கமான; வரட்சியான விளக்கம் என்னவென்றால் கடலிலே அலைகள் ஓய்வில்லாமல் சத்தம் போட்டு இரைந்த படி இருக்கும். அது போல பெண்ணே, உன்னால் என் மனமும் இரவெல்லாம் நித்திரை இன்றி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

இதனை இப்படியே பார்த்து விட்டு எளிதாகக் கடந்து போய் விடலாம். அப்படி போய் விட்டால் அது சாதாரண கண். அதனுள்ளே ஒரு அழகியல், அருமை பெருமை ஒரு காட்சி எல்லாம் ஒளிந்து போயுள்ளது. அதனைக் காணும் போது தான் கவியுள்ளம் கவி இன்பத்தைப் பெறுகிறது. அந்த இன்பம் என்ன என்பதைச் சற்று பார்ப்போமா?

அது எல்லாம் சரி, பாடலுக்குள்ளே போகு முன், அது என்ன ஒண்தொடி? ஒண்தொடி என்பது ஒளிபொருந்திய வளையல் என்பதாகும். திருக்குறளிலே கூட அப்படி ஓர் இடம் வரும். காமத்துப் பாலில் 1101 வது குறள் அது!

’கண்டு,கேட்டு, உண்டு,உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள’

என்பார் வள்ளுவனார். கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. என்று மு. வரதராசனார் அதற்கு உரை எழுதியுள்ளார்.

இங்கும் அதே ஒளிபொருந்திய வளையல் அணிந்த பெண் தான் இந்த ஐங்குறு நூற்றுப் பெண்ணும். இந்தப் பெண்ணை குறிப்பாக ‘அரிவை’ என்கிறான் காதலன். ஒரு குறிப்பான கூற்று அது. 

அது என்ன அரிவை வகைப்பாடு? அங்கு தான் தமிழின் இன்னொரு நுட்பமான அழகு வெளிப்படுகிறது. பெண், ஆண் அகிய பாலினங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வளர்ச்சிப் பருவங்களை சங்கத் தமிழ் 7 பருவங்களாகப் பிரித்துள்ளது. பெண் வளர்ச்சிப் பருவம் 

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ ’’ 221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ ’’ 222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ ’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ ’’ 224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ ’’ 226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36) பேரிளம் பெண்டுக்கு இயல்பு என மொழிப.’ ’’ 227 என்கிறது பன்னிரு பாட்டியல். 

அதன் படி இந்த ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண் 19 - 24 வயதுக்கிடைப்பட்ட இளம் பெண்ணாவாள். இப்போது நம்மால் ஒளி பொருந்திய வளயல்கள் அணிந்த ஓர் இளம் பெண் நம் மனக் கண்ணில் தெரிகிறாள் அல்லவா? இவள் தான் ஐங்குறு நூற்றுக் காதலனின் மனம் கவர்ந்தவள். இப்போது அவளை நாங்கள் கண்டு விட்டோம். இனி அவலைக் கண்டதனால் அவன் மனம் படும் பாடு என்னவென்று நாம் அறிய வேண்டாமோ? 

. இப்படியாக ஒண்தொடி அரிவை என்றவன்  மேலும் சொல்கிறான், ‘வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரை போல,..’ என்கிறான். இங்கு தான் பாண்டி நாட்டுக் கடற்கரையின் இயல்பு சொல்லப்படுகிறது. தொண்டி நாடு என்பது பாண்டிய நாட்டுக் கடற்கரை பட்டிணங்களிலே ஒன்று. தற்போதய தமிழகத்து இராமநாதபுர மாவட்டத்தில் இந்த இடம் அமைந்துள்ளதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. 

இந்தக் கடற்கரை பட்டிணத்திலே வண்டுகளின் ரீங்காரம் எப்போதும் கேட்ட படியாக இருக்கிறது. அலைகளோ எந்த நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இரைந்து கொண்டே இருக்கிறது. இங்கு ஒரு காட்சி ஒன்று படிமமாக நம் மீது படிந்து விடுகிறது இல்லையா?. ஒரு விதமாக வண்டுகள் ரீங்காரம் செய்கிற;
அலைகள் ஓய்வு  இல்லாமல் இரைச்சல் இட்டபடியே இருக்கிற; கடற்கரை காட்சி ஒன்று நமக்கு மனக்கண்ணிலே தெரிகிறதல்லவா?. வண்டுகளுக்கும் ஓய்வு இல்லை; கடல் அலைகளுக்கும் ஓய்வு என்பது இல்லை. இடைவிடாத சத்தம் Disturbance. அது.
அது போல என் நெஞ்சமும் துயில் இல்லாமல் ஒரு விதமான Disturbance இல் இருக்கிறது என்கிறான் இந்தக் காதலன்.

அட, நம்ம ஊருப்பா; நம்மட ஆக்கள். தமிழர்! பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் நிலத்தில் வாழ்ந்தவர்கள். நம் இனத்தார். அந்தக் காலத்து தமிழ் இளைஞன் அவன். அவனுடய காதல் உள்ளம் இது!

அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் காதல் தானே உலகத்தையே இயக்கிக் கொண்டு இருக்கிறது? இன்றய நூற்றாண்டுக் காதலனுக்கும் அதே உணர்வு தான். திரைக்கலை ஒன்று அதனை இப்படி இசையோடு தருகிறது.

அடி ஆத்தாடி ஒரு மனசொன்று ரெக்கை கட்டி பறக்க,
 அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா? என்கிறது இந்தக் காதல்.


Monday, January 7, 2019

காலத்தின் கருத்துக்கள்

ஒளவை குறித்து.....

அண்மையில் இந்தப் பெண் ஆழுமை குறித்து பார்க்கக் கிடைத்தது. அவர்கள் எத்தனை பேர் எவ் எவ் காலங்களில் வாழ்ந்தார்கள்; அவர்களின் ஆழுமைப் பண்புகள் என்பன குறித்து ஆராய்வதும் அறிவதும் நல்ல ஒரு காரியமாக இருக்கும் போலத் தோன்றியது. பின்பொருகால் அது குறித்து ஆழச் செல்ல வேண்டும்.

இன்று அவர் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்ய ஆசை.

அவ்வளவு தான்.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாம்நிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போ அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 
.....................

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 

மோனம் என்பது ஞான வரம்பு.

 தக்கோ னெனத்திரி-
பெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

 பீடு பெறநில்-
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.




Monday, October 29, 2018

சேக்கிழானின் எழுத்தாணி வரையும் சைவச் சிற்றூர்

சேக்கிழாரின் காலம் கி.பி 12ம் நூற்ராண்டாகும். பெரியபுராணத்தின் ஆசிரியன். இந்து மதம் சார்ந்த தமிழ் புலமையாளன். தமிழும் சமயமும் கலந்து குழைத்து அவன் தந்த பக்திச் சுவை மிக்க தமிழ் பரவசம் தருவது.

பலரும் சமயம் என்றதும் அது குறிப்பிட்ட ஒரு சாராருக்கென ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்ட அச் சமயத்தவரோ சமயத்தைத் தாண்டி அதில் எதையும் பார்த்து விட்டால் அது ஆண்டவனுக்குச் செய்யும் பெரிய துரோகமென ஒரு விதமான ‘பார்க்க மறுக்கும்’ சோணம் கட்டிய குதிரை மனோ பாவத்தைக்  கொண்டிருக்கிறார்கள்.

அதனால் பக்தித் தமிழின் அழகியல் வெளியே அதிகம் வெளிவராமல் போய் விட்டது.

‘யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர் படோம்; ஏமாப்போம் பிணியறியோம்; இன்பமே எந் நாளும் துன்பமில்லை’ என்று பாடிய சமயக் கவிஞனின் தமிழின் ஏமாப்பு பாரதியின் ’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...’கவிதையில் இருந்து எவ்வகையில் குறைந்து போயிற்று?

’சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என்ற ஒரு சமயச் சித்தனின் ஏக்கத்தில் தான் எத்தனை அழகு! அந்தச் சித்தம் அழகியர் நம் விபுலானந்தரின் ‘உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது’ என்ற தேன் துளிக் குறிப்பில் இருந்து எவ்வகையில் தாழ்ந்து போயிற்று?

கொஞ்ச நாளைக்கு முன்னர் பார்த்து விட்டு அப்படியே ஆறப்போட்டு விட்ட அல்லது மனக் கிடங்கில் ஊறப்போட்டு வைத்திருந்த சேக்கிழானின் திருஞான சம்பந்தன் குறித்த புராண படலத்தில் இருந்து சில தமிழ் முத்துக்களை இன்று வெளியே கொண்டுவரலாம் என்று தோன்றியது.

அந்த மனுஷன் சம்பந்தனைப் பாடுமுன் அந்தாளின்ர நாட்டின்ர வளத்தை பாடுது. சோழர் காலத்தில நாட்டு வளத்தை வேறயும் கன புலவர்மார் பாடி ஒரு கரை கண்டிருக்கினம் தான். கம்பனைத் துக்கிப் பிடித்து கொண்டாடும் பலபேர் அத உருகி உருகிச் சொல்லுவினம். அதுகளைப்பற்றிச் சொல்லப் போனா சேக்கிழார் கைநழுவிப் போயிடுவார் எண்டதால அத இங்க தவிர்க்கிறன்.

சரி சேக்கிழார் எப்பிடி எண்டு நினைக்கிறீங்கள். சொல்லுறார் பாருங்கோ,

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆகுதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.

அங்க ஊர் இப்பிடி இருக்குது வீடுகள் எப்பிடி இருக்குது தெரியுமோ?

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.

சுற்றுப் புறம் எண்டா அது வேறொரு விதமாய் இருக்குது

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.

இப்பிடியான அழகியலோட ஒரு ஊர கற்பனை பண்ணிப் பார்க்கவே எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? இன்னும் அவர் கதைக்குள்ள வரயில்ல. சம்பந்தர் பிறக்கப் போற ஊர் தான் இது. இப்ப தெய்வத்தன்மை வாய்ந்த ஒருத்தர் பிறக்கப் போறார். அதைச் சொல்லுறதுக்காக

பாடல் எண் : 23
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆகுதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

பாடல் எண் : 24
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.

பாடல் எண் : 25
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.

பாடல் எண் : 26
அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.

இப்படியாகச் சம்பந்தர் பிறந்திட்டாராம்..என்ன ஒரு அழகு; என்ன ஒரு பாடல் வைப்பு! அதில் இசைந்து நிற்கும் ஒருவித ஒழுங்கு! தமிழில் இருந்து ஒழுகுது அழகு!!

அக்கம் பக்கமெல்லாம் இப்ப கொண்டாட்டமும் சந்தோஷமுமா இருக்கு. பாருங்கோ அது எப்பைடி இருக்கெண்டா

பாடல் எண் : 35
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.

பாடல் எண் : 36
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.

பாடல் எண் : 37
சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிறைப்பார்.

பாடல் எண் : 38
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.

இப்பிடியாகக் கொண்டாட்டம் அக்கம் பக்கமெல்லாம். ஊரோ செழிச்ச ஊர். ஒரு பிள்ள பிறந்து விட்டா ஊரே கொண்டாடி மகிழுது. சொந்தமும் பந்தமும் சந்தோஷமுமா ஒரு சிற்றூர் நம் முன் விரிகிறதில்லையா?

பல்லவர் காலத்து ஒரு சைவச் சிற்ரூரை சோழர்கால தமிழ் புலமையாளன் ஒருவன் இப்படியாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறான்.

Wednesday, April 11, 2018

தெரியாதோ நோக்கு தெரியாதோ.....

இந்தப் பாடல் சூரியகாந்தி திரைப்படத்தில் மனோரமா பாடிய பாடல்.

தெரியாதோ நோக்கு தெரியாதோ....

என்ன செய்வது? சில விடயங்கள் தெரிந்தாலும் வயதுச் சேட்டைகளில் இருந்து தப்பி விட முடிகிறதா என்ன?

இவை எல்லாம் பருவத்தோடு வருகிற இயற்கையான குணங்கள் தானே. இது பற்றி இராமாயணத்திலே ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது.இராவண வதம் முடிந்து விட்டது. களைப்பும் ஆயாசமுமாக அனுமரின் மடியில் இராமர் துயில் கொண்ட படி இருக்கிறார்.அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது அனுமார் தன் வாலின் நுனியை எடுத்து தூங்கிக் கொண்டிருக்கிற இராமரின் காதுக்குள் புகுத்தி விட்டார். உடனே துடித்துப் பதைத்து எழுந்த ராமன் ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிறீங்களேம்மா’ என்ற கணக்காக அனுமரைப் பார்த்து இது என்ன அனுமான்? என்று கேட்க, ”நான் என்ன செய்வேன்? இது என் இயற்கை புத்தி” என்றாராம்.

விவேக சிந்தாமணியிலே ஒரு பாடல் வருகிறது.

”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”

என்கிறது அது.

அது போலத் தான் காதலும் இயற்கையாய் வருவது. அபூர்வமாக வானொலிகளில் ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். கவிஞர் எப்படி எல்லாம் இந்தக் காதல் சேட்டைகளை எல்லாம் உற்றுக் கவனித்திருக்கிறார் என்பதை பாடல் வழி காணலாம்.



தெரியாதோ நோக்கு தெரியாதோ
Film : சூர்ய காந்தி
singer : manorama
music: MSV
Lyrics : Vaali
song : theriyadho nokku


தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


Tuesday, April 3, 2018

நாட்டுப் புற (பாடல்களில்) ‘யாழ்ப்பாணம்’


எந்த ஓர் இனத்தினதும் உண்மையான அழகை நாம் கிராமங்களில் தான் காணலாம். தாலாட்டு, காதல், கிண்டல், தொழில் பாடல் விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என விரியும் கிராமத்தார் தம் வாழ்க்கைக் கோலங்களில் கொட்டிக் கிடக்கும் அப்பளுக்கற்ற அழகுகள் தனித்திறம் வாய்ந்தவை.

அண்மையில் தேடிக்கொண்டு போன சிலவற்றுக்குள் அகப்பட்டுக் கொண்டன சில யாழ்ப்பாணத்தானின் வாழ்வியல் கோலங்கள்.

“எண்சாண் உடம்புக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பர் அது போல
பொன் சேரிலங்கைச் சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்”

எனச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய யாழ்ப்பாணத்தின் பிரதான குறியீடாய் அமைவது பனை மரம். அதன் சிறப்பையும் அவர் இவ்வாறு உரைப்பார்.

“ கோள்நிலைகள் மாறி மாரி மழை வாரி வறண்டாலும்
கொடிய மிடி வந்து மிகவே வருத்தினாலும்
தான் நிழலளிதுயர்  கலாநிலயமே போல்
தந்து பல வேறு பொருள் தாங்கு பனையோங்கும்”

நெய்தல் நிலப்பரப்பு சுற்றி வர! சுண்னக்கற்பாறை சார்ந்த நில அமைப்பு. கடுமுயற்சியினால் செய்யப்படும் விவசாயம். ஆண்டான் அடிமை குடிமை வழி வந்த இறுக்கமான சாதி,சமூக அமைப்பு. இந்தப் பிரதேசத்து விவசாயக் குடிகள் பற்றி மகா கவி இப்படிச் சொல்வார்.

“மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்பாறைபிளந்து
பயன் விளைப்பான் என்னூரான்“

இந்த வரண்டு போன பூமியில் கல்வி ஒன்றே முன்னேறத்தக்க ஒரே மார்க்கமாய் இருந்ததாலோ என்னவோ இம் மக்கள் கல்வியில் பெரு நாட்டமும் மூளை சாலிகளாகவும் இருந்தனர். அதனால் வாத்தியார்களுக்கு சமூகத்தில் நல்ல பெருமையும் மரியாதையும் கூட இருந்தது. திண்ணைப்பள்ளிக் கூடங்கள் இருந்த காலத்தில் மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் இருந்து விடைபெறும் பாங்கில் அமைந்த இந்தப் பாடலைப் பாருங்கள்.

“காலமை வந்தோமையா
கருத்துடம் பாடம் பெற்றோம்
சீலமாய் எழுதில் கொண்டோம்
தேவரீர் மனதிற்கேற்பக்
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பழஞ்சோறுண்ணச்
சீலமாய் அனுப்புமையா
தேவரீர் மனதிற்கேற்ப”

இங்கத்தய மாம்பழமும் நல்ல ருசி என்பர். இதன் சுவையை கவிஞர் சச்சிதானந்தன் இப்படிச் சொல்வார்.

“ நீதி பிழைப்பிக்கும்: நேர்மை தவறுவிக்கும்
பாதிப் படிப்பில் பதவி தரும் - ஏதுக்கும்
ஓம் பட்டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பாண
மாம்பழத்துத் தீஞ்சுவையின் மான்பு”

இங்கிருந்த பனையில் இருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை பேரா.சி. கணபதிப்பிள்ளை இப்படிச் சொல்வார்

“அழகுறு வண்னம் அமைவுறப் போட்டுத்
தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
அடுக்குப் பெட்டியும் சுடும்
பிட்டவி நீத்துப் பெட்டியும்  சுண்டும்
பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
கைவல் இளையர் கருதி இளைத்த
ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
எனவாங்கு,
இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

எனத் தொடரும் அப்பாடல் பனையோலையில் இருந்து பெறப்பட்ட பயன்களைச் சொல்லும். பனையின் பயனை மட்டுமல்ல ஒருவர் பனையில் ஏறி பனங்கள்ளை எடுக்க கீழே ஒருவர் நின்று மீசை வருடும் காட்சி ஒன்றை என்ன அழகாய் சொல்கிறார் என்று பாருங்கள்.

“நரை தோல் இயனம் அரையில் கட்டி
அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
மார்போடணையத் தோலது தூக்கி
உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
பாலை தட்டிப் பார்த்துச் சீவி
ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
நாநீர் ஊறி உதடு வருடி
பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

எனத்தொடர்கிறது அப்பாடல். நாடோடிப் பாடல் ஒன்று கள்ளை,

“பட்டாங் கத்தி பள பளென
பாலையன் கோட்டை நறறென
பனையும் கருத்திருக்கும்
பனை வட்டும் சிவந்திருக்கும் - அதிலே
இறக்கிய நீரைப் பருகினால்
தலை கிறுகிறுக்கும்”

எனக் கூறுகிறது.

நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து வடமராட்சிப்பகுதியில் வழங்கிவரும் இந்தப்பாடல் ‘கள்ளுக்கடவுளை’ இப்படிப் போற்றுகிறது, ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பேரா.எஸ்.சிவலிங்கராஜா, குமரன் பதிப்பகம், 2014, பக்.109 -10.)

‘ தேடுதற்கும் வகையறியேன் - உன்
திருக்கோயில் தவறணையைத் தேடிக்கொண்டு
ஓடிவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
உன்னுடய கிருபையினைச் சொல்லிச் சொல்லிப்
பாடுதற்கும் வகையறியேன் - பாளை வேந்தா!
பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா!
நீடுலகில் எம் போன்ற ஏழைகட்கு
நீயின்றி யாருதவி சொல்லுமையா!’

பஞ்ச புராண வடிவில் அமைக்கப்பட்ட அடுக்கில் மேற்கண்டது தேவாரமெனவும் கீழே வருவது புராணம் எனவும் அமைந்திருக்கிறது.

‘ சண்டையிலே பிறப்பாய் போற்றி
சல்லியைப் பறிப்பாய் போற்றி
பண்டைய முதல்வா போற்றி
பாளையில் பிறப்பாய் போற்றி
மாதரைக் கெடுப்பாய் போற்றி
கண்டவர் சிரட்டை ஏந்தும்
கடவுளே போற்றி போற்றி’

என்று சொல்லிப் போகும்.

இந்த நாடோடிப் பாடல்களின் அழகு அதன் எளிமை; இயற்கையாய் அமைந்து விடும் எதுகை மோனை - இவைகள் தான். அவை நற்சுவை பயப்பன. இந்த வரிகள் நாடோடிப் பாடல்களின் ரசனைக்காக!

“ சிற்றொழுங்கையாலே செருப்பழுது
போற செப்பம்
ஆரென்று பார்த்தேன்
என் அழகுதுரை மாமி மகன்”

“ஏன் காணும் நிற்கிறீர் றோட்டிலே
கொஞ்சம் இளைபாறிப் போங்காணும் வீட்டிலே”

இவை நிற்க,

ஆனால் இவ்வாறு இறங்கி வரும் கள்ளினை குடித்த உயர் குடியினர் இவற்றைப் பெற்றுக் கொடுத்த மக்களை கண்ணியமான முறையில் போற்றவில்லை: மதிக்க வில்லை. அது பற்றி ஆங்கிலேயர் காலத்துக் குறிப்புகளில் நிறைய சான்றுகள் உண்டு. உயர்சாதியினருடய கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது என்றும்; பெண்கள் காதணிகள் அணியக் கூடாதென்றும்; உயர் சாதியினருக்கு அவர்கள் வழங்குகின்ற மரியாதைகளில் ஏதொரு குறையும் இருக்கக் கூடாதென்றும்; திருமணப் பந்தலில் வெள்ளைத் துணியால் அலங்காரம் செய்யக் கூடாதென்றும் சட்டங்கள் அமுல் படுத்தப் பட்டிருந்தன.

இத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கென தனியாக ஒரு கிணறு கட்டிய போது அதற்குள் நஞ்சினை ஊற்றிய சம்பவம் இம் மக்கள் எவ்வாறான துவேச மனப்பாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதற்குத் தக்க சான்றாகும். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் படிக்க அனுமதி கிட்டி இருக்கவில்லை.  இந்தப் பிள்ளைகள் எப்படியான கஸ்டங்களை அந்த ஆதிக்க சமூகத்தில் பெற்றிருந்தனர் என்பதற்கும் அவர்களை வளர விடாமல் தடுத்ததில் எத்தகைய மூர்க்கத்தனமான கொள்கைகளை உயர்சாதியினர் பின் பற்றினார்கள் என்பதற்கும் பின் வரும் ஆறுமுக நாவலரின் கருத்து தக்க சான்று.


ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: ’வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚ இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’

19ம் நூற்றண்டின் பிற்பகுதியில் எழுந்த பாடல் ஒன்று

‘வண்ணார் வடுகர் பணிக்கர் பண்டாரம்
மடப்பள்ளியர் பரதேசிகள் சட்டையும்
எண்ணுஞ் சரிகையும் உறுமாலும் போட்டிப்போ
யான் பிரபென்கிறார் பாருமடி’

எனப் பாடுதல் காண்க.

இத்தகைய சாதித்தன்மைகள் இருந்தது மாத்திரமல்லாமல் உயர் சாதியினர் தமக்குள்ளும் அடிபாடுகளைக் கொண்டிருந்தார்கள். அவற்றை நாசுக்காகச் சில பாடல்கள் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றன. பக்தியைப் பாட வந்த ஒருவர் அதற்குள் சமூகத்தை பொதித்து வைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலைப் பாருங்கள்.

“ கான மயிற் செங்காட்டுக் கோழி
கடுவிடத்திற் கரந்துறையும் கரிய நாகம்
ஞான விழி யோகியரிற் தூங்கும் பூனை
நாவிரண்டு கூறுடைய உடும்பொடு, ஆடு
போன வழி நனைய அழும் ஓநாய் இந்தப்
பூவுலகை தலைகீழாய் பார்க்கும் வெளவால்
ஆன இவை எல்லாம் அடியாராகி
ஆகடியம் செய்வதுமுன் ஆடலோ சொல்”

யாழ்பாணத்து மக்கள் வேத சமயத்தை இலகுவாக ஒப்பவில்லை. தன் குடும்பத்தால் ஒதுக்கப் பட்ட பெண் ஒருத்தி ஒரு சாவீட்டில் இப்படி ஒரு ஒப்பாரி வைக்கிறாள். இரு சமயத்தாருக்கும் இருந்த அன்பின் ஊடலை இந்த சாவீட்டுப் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது.

“ என்ர ஆத்தை, நீ வேத சமயமென
இவை
விரும்பி அழ மாட்டினமாம்
நாங்கள் சைவ சமையமெணை
என்னோட சொருகி அழ மாட்டினமாம்
ஊர் தேசம் விட்டாய்
என்ர ராசாத்தி
உறவுகளைத்தான் மறந்தாய்
மேபிள் துரைச்சி எண்டு
இஞ்ச
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையெணை
என்ர ராசாத்தி
உன்ர உறவும் அழவில்லையெணை”

இவ்வாறு வேத சமயத்துக்கு மாறிய பெண்ணொருத்தியின் உறவுக்காரர் அவர்களைப் பார்த்து தம் நடத்தை வேறுபாடுகளைக் சோகத்தோடு கலந்து துக்கப்பகிர்வு பாடல்களூடு சொல்லக் காணலாம். மேலும்,

“படலையிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்கு
நான் பாவக்காய் ஆகினனே!
வேலியிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்குநான்
வேப்பங்காய் ஆகினனே!

தன் சகோதர முறையானவர்களை தம் தாயைச் சாட்டி “நீ பெத்தவைக்கு” என்று சொல்வதைக் காண்க. மற்றும் ராசாத்தி, கிளி, குஞ்சு, செல்லம் போன்ற பெயர்கள் பொதுப் பயன் பாட்டில் இருப்பதையும் இப்பாடல் புலப்படுத்துகிறது.

தாய் வீட்டு ஒப்பாரி ஒன்று இப்படிப் போகிறது.

“ என்ர ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ர
வண்ண வண்டி வாடுதணை
என்ர ஆத்தை
நீ
கோலி வரத் திண்டிருந்தன்
என்ர கோலவண்டி வாடுதணை”

இதில் ஆத்தை என தாயைக் குறிப்பதனையும் எணை என வழங்கும் பேச்சொலியினையும் காணலாம்.

இன்னொருத்தி சாவீட்டில் இப்படி கோவித்துக் கொள்கிறாள்.

”சொருகி வச்ச ஏப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்ததெணை
போட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச்சேவல் ஆச்சுதணை”

இறந்து போன தன் பெற்றோருக்கு தன் நிலையைப் போய் சொல்லும் படி சாவீடொன்றில் ஒரு பெண் இறந்தவரைப் பார்த்து இப்படி ஒரு விண்ணப்பம் வைத்து ஒப்பாரி வைக்கிறாள்

“ என்ர அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச
சோத்தால வாடயில்லை
உங்கட சோகத்தால
வாடுதெண்டு
என்ர அப்பு நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச காசால வாடயில்லை
உங்கட கவலையால வாடுதெண்டு”

இவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை உறவுக்காரர் கூடும் தருணங்களில் நாசுக்காக சொல்லிப் போகும் சமூகப்பாங்கினை இவ்விதமான ஒப்பாரிப்பாடல்களில் சிறப்பாகச் சொல்லக் காணலாம்.

‘மூடிய சமூகமாக வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் மாற்றங்கள் இலகுவாக ஒப்புக்கொள்ளப்படவில்லை.ஆங்கிலேயரால் மாற்றங்கள் வந்த போது அவற்றை வேடிக்கையாகவும் நையாண்டியாகவும் புறந்தள்ள அவை முனைந்தன. இரண்டாம் பதிப்பாக 1933ம் ஆண்டு வெளிவந்த ‘தற்கால நாகரீக வேடிக்கைப்பாக்கள்’ பாகம் மூன்று என்ற நூலில் அதன் ஆக்க கர்த்தா. மண்டைதீவு. பிரம்மஸ்ரீ.அகிலேஸ்வர சர்மா இயற்றிய கீழ் வரும் இப்பாடல் படித்து இன்புறவும் தக்கது. ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பக்.111)

பிள்ளை பெற்ற பெண்களுக்கும்
பிரண்டி வேணும் - இப்போ
பிட்டு அள்ளித் தின்பதற்கும்
கரண்டி வேணும்
முள்ளுக் கொண்டு இறைச்சிகள் குத்தித்
தின்ன வேணும்
முழுவதும் வெள்ளைக் காரர் போல்
மின்ன வேணும்.
தயிர் கடைந்து பழஞ்சோறுண்டார்
அந்தக்காலம் - கோப்பித்
தண்ணீர் பருகித் தியங்குகிறார்
இந்தக் காலம்
வயிரத் தூண் போல் வாழ்ந்திருந்தார்
அந்தக் காலம் - நொய்ந்த
வாழைகள் போல் தோன்றுகிறார்
இந்தக் காலம்
நாட்டிற் கள்ளை வேண்டாம் என்று
தள்ளுகிறார் - இப்போ
நாகரீக விஸ்கிகுடித்துத்
துள்ளுகிறார்
வீட்டிற் காசை அன்னியர் கையில்
கொட்டுகிறார்
விறண்டிப் பெட்டிக்காகத் தீர்வை
கட்டுகிறார்.’

அது போல கோதுமை மாவின் வரவைப் பழிக்கும் இந்தப்பாடலைப் பாருங்கள் அது,

‘வந்தம் மாவும் வழுவி - எங்க
சொந்தம்மாவும் நழுவி
மந்த மாகத் தழுவி - கோ
தம்ப மாவும் வந்திருக்கிறா - அவவும்
நிந்தமல்ல சொந்தம்மாவைப் பார்’

என்கிறது.

பெண்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை

‘ கோலக் குயில் மொழி சேலைப் பழி விழி
வாலைப் பெண்களலங்காரம் - இந்தக்
காலத்திலே மஸ்லின்சேலை உடுத்தியவர்
காட்சி கொடுத்தல் சிங்காரம்
பட்டிணக்காப்புக் கல் அட்டியல் தோட்டுக்கும்
கெட்டகாலம் வந்து போச்சே - இப்போ
கெட்டிக் கொலுசொடு கொத்தமல்லிக் காப்புக்கும்
கஷ்ட காலமாச்சே’

என்றும்,

‘தாவணி பாவாடை எறிந்தார் - இப்போ
சல்லடையாம சில்க் சைஸில் நல்லுடை செய்வார்
பூ மணவார் ‘பெளடர்’ மணப்பார்
புடவை கட்டும் வேடிக்கை புகலுவேன் கேளும்’

என்றும் பெண்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை பதியும் வாய்மொழி இலக்கியங்கள் ஆண்களிடம் இடம்பெற்று வரும் மாற்றத்தை பின் வருமாறு புகலுகிறது.

‘மூக்குத் துவாரமளவிலே மீசை
முறுக்கவேலாது மிலிற்றறி வீசையாம்
பார்க்கச் சிரிப்பு வருகுது கூழைவால்
பட்ட நாய் போலெல்லோ பாருமடி’

நாளாந்த சொல் வழக்கில் தாயை ஆச்சி என்றும் தந்தையை அப்பு அல்லது ஐயா, அப்பா என்றும் மூத்த தமக்கையாரை அக்கா எனவும் வழங்குதல் மரபாய் இருந்தது. ஆனாலும், பேச்சு வாக்கில் “கொப்பர் என்னவாம்?” கோச்சி என்ன செய்யிறா?” கொக்கா வந்திட்டாவே? என்று உரையாடுவது அண்மைக் காலம் வரை இருந்து வரும் பேச்சு முறை. இவை விளையாட்டுப் பாடல்களில் சிறப்பாகத் தொக்கி நிற்பதைச் சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்களில் காணலாம்.

ஒழித்துப் பிடித்து விளையாட்டொன்றின் போது ஒருவருடய கண்ணை ஒருவர் பொத்திக் கொண்டு,

“ கண்னாரே கடையாரே
காக்கணுமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
கோச்சி(ஆச்சி) என்ன காச்சினாள்?
(கண் மூடுப்பட்டவ) கூழ்
கூழுக்கு கறி என்ன?
(கண் மூடுப்பட்டவர்) புழு
(கண்னை அவிழ்த்து விட்டு விட்டு)
பெரிய புழுவாய் பிடிச்சுக் கொண்டோடிவா!

கண் பொத்தி விளையாட்டில் இன்னொரு விதமான பாடலும் பாடப்படுவதுண்டு. அது,

“கண்னாரே கடையாரே
காக்கணமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
உங்களம்மா என்ன காச்சினாள்( சமைத்தாள்)
கூழ் காச்சினாள்
கூழுக்குள் என்ன விழுந்தது?
ஈ விழுந்தது.
ஈ எல்லாம் தட்டி
எறும்பெல்லாம் தட்டி
உனக்கொரு காயும்
எனக்கொரு பழமும்
கொண்டோடி வா”

(ஈயும் எறும்பும் பூச்சியும் புழுவும் இப்பாடல்களில் எடுத்தாளப்பட்டமைக்குக் காரணம் தெரியவில்லை)

 அது போல பெண்களின் கிள்ளுப்பிராண்டி நுள்ளுப் பிராண்டிப் பாடல் இப்படியாய் போகும்.

“கிள்ளுப் பிராண்டி நுள்ளுப் பிராண்டி
கொக்கா(அக்கா) தலையில என்ன பூ?
முருக்கம் பூ.
முருக்கம்பூவத் திண்டவளே
பாதி விளாங்காய் கடிச்சவளே
பாட்டன் கையை
மு-ட-க்- கு-

வித்துவான் வேந்தனாரின் ஊஞ்சல் பாட்டொன்றில் மெத்தப் புழுகாய் (மிகச் சந்தோஷமாய்) என்ற நாட்டார் சொல்வழக்கு கையாளப்படும் பாண்மை ரசிக்கத்தக்கது.

“தம்பி வந்து பாரடா
தமிழும் ஊஞ்சல் ஆடுறாள்
வெம்பி வெம்பி அழுதவள்
மெத்தப் புழுகாய் ஆடுறாள்”

இன்னுமொரு ஊஞ்சல் பாட்டு ஊரினை மையப் படுத்தி ”கச்சாயிற் புளியிலே ஊஞ்சலும் கட்டி கனகராயன் தோப்பிலே தோட்டமும் செய்து” என வரும்.

குடும்ப உறவுகளில் காதல் ஒரு விலத்தப்பட்ட சமாச்சாரமாகவே யாழ்ப்பாணத்து மக்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இருந்தாலும் காதலும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பெரும்பாலும் கட்டுப்பாடான கிடுகுவேலிக் கலாசாரத்தில் பெண்ணுக்கு விடுதலை கிணற்றடிக்குப் போகும் வேளை தான். குடத்தில் தண்ணீர் எடுத்து வரும் பெண்ணைக் கண்டு விட்ட ஒருவன் பாடுகிறான் இப்படி.

“தண்ணிக் குடமெடுத்து
தனி வழியே போற கண்ணே
தண்ணிக் குடத்தினுள்ளே
தழும்புதடி என்மனசு”

அப்படியே சில காலம் போக சம்மதம் கேட்கும் நாள் வருகிறது. இப்படிச் சொல்கிறான் அவன்

“ சந்தனப் பொட்டடி நானுனக்கு
சாந்து சவ்வாதடி நீ எனக்கு
சந்தனப் பொட்டுக்கும் சாந்து சவ்வாதுக்கும்
சம்மதமோ முத்து வீராயி?

குத்துவிளக்கடி நானுனக்கு
கொவ்வைப் பழமடி நீ எனக்கு
குத்து விளக்குக்கும் கொவ்வைப் பழத்துக்கும்
சம்மதமோ முத்து வீராயி?

காதலிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து குடும்பத்தார் வைக்கும் சட்டதிட்டம் பற்றி கீழ் வரும்  இப்பாடல் சிறப்பாகச் செப்புகிறது.

“கடப்பைக் கடந்து
காலெடுத்து வச்சியெண்டால்
இடுப்பை ஒடித்து வேலி
இலுப்பையின் கீழ் போட்டுடுவேன்
வாசல் கடந்து வழிகண்டு போனியெண்டால்
வேசை மகளே உன்னை
வெட்டுவேன் இரண்டு துண்டாய்”

என்கிறார்கள் குடும்பத்தார்கள். எனினும் ஒரு வழிகண்டு காதலன் வீட்டு வாசல் வரை வந்து விட்டான்.அப்பாவிக் காதலனுக்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அவன் மீது பச்சாதாபப் பட்டு பெண் பாடுகிறாள் இப்படி.

“வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்கு
திட்டமொன்று சொல்ல
திறம் போதாதென் கிளிக்கு”

மேலும்,

“ ஆளரவம் கண்டு ஆக்காண்டி கத்துதையோ
ஆராலும் கண்டாலும்
என் அன்புக் கிளி என்ன செய்யும்?

எனப் பரிதவிக்கிறாள்.

திறம் - திறமை: கிளி- அன்புக்குரியவர்களை ; ஆண் பெண் இரு சாராரையும் கிளி, குஞ்சு, ராசாத்தி, செல்லம் என அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தவர் மத்தியில் உண்டு. அது இங்கும் எடுத்தாளப்பட்டிருப்பது காண்க.

வீட்டில் சந்தேகம் பற்றிக் கொண்டு விட்டது. இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் என்று கேட்கப்படும் கேள்விக்கு பெண் இப்படிச் சொல்கிறாள்.

“ கோழி அடைத்து வைத்தேன்
கொழி அரிசி குத்தி வைத்தேன்
தாழ துலா தாழ்த்தி
தண்ணி நிறைத்து வைத்தேன்

தேங்காய் துருவி வைத்தேன்
தேவைக்கு அரைத்து வைத்தேன்
பாங்காய் சமைப்பதற்கு
 பட்ட கஸ்ரம் இவ்வளவோ?

எனக் கேட்கிறாள். அவள் வீட்டுக்குள் அடைக்கப் பட்டு விட்டாள். காதலனுக்கோ அவளைக் காண வழி இல்லை.அவன் வந்தார் வரத்தாரைப் பார்த்து பாடுகிறான்.

“சிட்டுப் போல நடையழகி
சிறுகுருவித் தலையழகி
பட்டுப் போல மேனியாளை
பாதையிலே பாத்தீங்களோ?

கோரை மயிரழகி
குருவிச்சை பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பாத்தீங்களோ?

பட்டம் போல நெற்றி
பவளம் போல வாயழகி
முத்துப் போல பல்லழகி
முன் போகக் கண்டீரோ?

வாகை மரமேறி
வடக்கே தெற்கே பார்க்கும் போது
தோகை மயில் போல
தோகையாளைக் கண்டீரோ?

குழந்தைகளைக் கொஞ்சுகின்ற பாடல்கள் பல இன்று வழக்கொழிந்து போய் விட்டன. குழந்தைகளையும் தாயையும் பராமரிக்கும் முறை பாரம்பரிய இயற்கை வைத்திய முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. குழந்தை பெற்ற தாயை 5 வகையான இலைகுழைகளைப் போட்டு அவித்த சுடு நீரினால் குளிப்பாட்டுவார்கள். குழந்தைக்கு நாவூறு  படாமல் கறுப்புப் பொட்டுக் காச்சி நெற்றியிலும் கன்னத்திலும் வைப்பார்கள்.

அப்போது பாடுகின்ற பாடலாக

“காக்கா காக்கா மை கொண்டுவா
காலைக் குருவி பழம் கொண்டு வா
கிளியே கிளியே ஓடி வா
கிண்ணத்தில் பால் கொண்டு வா

என்று பாடுவார்கள். அது இன்னொரு விதமாக,

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கு குழந்தைக்கு தேன் கொண்டு வா
கிளியே கிண்னத்தில் பால் கொண்டு வா

எனவும் பாடப்படுவதுண்டு.

குழந்தைக்கு நாள் தோறும் காலையில் நல்லெண்ணை வைத்து அங்கங்களை நன்றாகப் பிடித்து விட்டு அவ் அங்கங்கள் சிறப்பாக வரும்படியாக நீவி காலை இள வெய்யிலில் கிடத்துவார்கள். குறிப்பாக மூக்கு, காது, முன் வாய், கை கால் விரல்கள், இவைகளைப் பிடித்து விடுவதோடு தலை உருண்டையாக வருவதற்காக ஏணை கட்டி ஏணையிலும் போடுவார்கள். குழந்தைகளுக்கு கை கால்களைப் பிடித்து விடும்  போது அவற்றுக்கு சில பாடல்களையும் கதை பேச்சுக்களையும் சொல்லிய படி செய்வார்கள்.

குழந்தை சற்றே வளரும் பருவத்தில் குழந்தையை மடியில் இருத்தி சாய்ந்தாடல் பாடலும் சப்பாணி வெட்டு பாடலும் பாடி அவர்களோடு ஆடுவதும் வழக்கம்.

“சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புராவே சாய்ந்தாடு
பச்சைக் கிளியே சாய்ந்தாடு
பவலக் கொடியே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பக தருவே சாய்ந்தாடு
கண்டே தேனே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு”

என பாடி மகிழ்வர். குழந்தை கை கொட்டுவதை சப்பாணி கொட்டுதல் என்பர். அவ்வாறு செய்கின்றபொழுதுகளில் கால்களையும் கைகளையும் மடக்கி சில பாடல்கள் பாடப்படுவதுமுண்டு. அவை கை கால்களை அசைவிக்கும் பயிற்சி முறைக்காக செய்யப்பட்டு வந்தது. அவற்றுக்கான பாடல்கள் ஒரு கருத்து சார்ந்ததன்றி எதுகைக் மோனை சார்ந்ததாக இருக்கும். உதாரணமாக;

ஆலாப் பற பற
அழகு பற பற
கொக்கு பற பற
கோழி பற பற
குருவி பற பற

என காணும் பட்சிகளைக் காட்டிப் பாடுவது போல இருக்கும்.

இது போல

“ஆத்து வாழை குலை போட
ஆரனும் பெண்டிலும் கூத்தாட
முத்தத்து வாழை குலை போட
முத்தனும் பெண்டிலும் கூத்தாட
வேலியில் வாழை குலை போட
வேலனும் பெண்டிலும் கூத்தாட
பக்கத்து வாழை குலை போட
பத்தனும் பெண்டிலும் கூத்தாட

என்ற விதமாகப் பாடுவார்கள். இவற்றுக்கு கால்களைச் சப்பாணி போல மடித்தும் கைகளை மேலும் கீழும் உயர்த்தியும் அபிநயம் செய்த படி பாடி மகிழ்வர்.

தாய் மார் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடும் பாடல்கள் தனித்திறம் தனித்தரம் வாய்ந்தவை. தொட்டிலுக்குள் நித்திரைக்காக குழந்தையை விட்டு தொட்டிலை ஆட்டிய படி பாடப்படும் பாடல்கள் தாய்மாரின் எண்ணத்துக்கும் கற்பனைக்கும் வளம் சேர்ப்பவை. மனதுக்கு எட்டிய பாங்கில் அப்பாடல்கள் அமைந்திருக்கும்.பொதுவாக எவ்வகைத் தாலாட்டிலும்

“பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
தொட்டிலுமோ பொன்னாலே
தொடு கயிறோ முத்தாலே
முத்தென்ற முத்தோ நீ
முது கடலின் ஆனி முத்தோ
சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தின் ஆனி முத்தோ? போன்ற வரிகளும்

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராடித்து நீயழுதாய்?
கண்மணியே கண்ணுறங்காய்

கண்ணை அடித்தது யார்?
கற்பகத்தைத் தொட்டது யார்?
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்

பாட்டி அடித்தாரோ
பாலூட்டும் கையாலே?
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே?
மாமன் அடித்தானோ
மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
அணைத்தெடுக்கும் கையாலே”

போன்ற விதமாக அமைந்திருக்கும்.

இவ்வாறான பாடல்கள் தனியே யாழ்ப்பணத்துத் தமிழுக்கு மட்டும் உரித்தானவையல்ல என்ற தகவலையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவை பரவலாக வன்னி, கிழக்கு மாகாண தமிழ் வாழ்வியலிலும் கலந்தே இருந்தன. தனியே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கோ அங்குள்ள ஒரு குறுகிய சமூக மக்களுக்கோ சொந்தமானவையல்ல. ஆனாலும் மேலே குறிக்கப்பட்டுள்ள பாடல்களில் பல யாழ்ப்பாணத்து வாசனையை மிகுதியாகக் கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்பது என் அபிப்பிராயம்.

கிழக்கு மாகாணம், வன்னி நிலப்பகுதி மற்ரும் மலையகப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த பாடல்கள் அவ் அவ் மண்சார்ந்த தொழில் சார்ந்த வாழ்வியல் சார்ந்த வகைகளில் பல தனித்துவமான கூறுகளையும் அழகியலையும் சமூக வெளிப்பாடுகளையும் கொண்டமைந்துள்ளன.

சந்தர்ப்பம் வாய்த்தால் அவைகளையும் தனித்தனியாக பதிவேற்ற ஆவல்.