Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, July 12, 2026

collage works

 வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? நானும் சில பல சுகங்கள் மற்றும் சுகவீனங்கள், வீட்டு வேலைகள், திருத்தவேலைகள் என்பவற்றோடும் அன்றாட அலுவல்களோடும் நலமே இருக்கிறேன்.

நீங்களும் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னரைப் போல இங்கு இப்போது அதிகம் வருவதில்லை. இன்று பல மாதங்களுக்குப் பிறகு இங்கு வரும் போது  பிறந்த வீட்டுக்கு வருவதைப் போல ஒரு மகிழ்ச்சி.

ஒரு காலத்தில் இந்தப் பக்கம் தான் எனக்கு தாய் மடியைப் போல இருந்தது. முகம் தெரியாத எத்தனை உறவுகளைச் சந்தித்தோம்! எழுத்தின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டோம். இப்போது அவர்கள் எல்லாம் என்னவாகி இருப்பார்கள் ?

வித விதமான சமூக வலைத்தளங்களின் அறிமுகங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கமாக நகர்த்தி விட்டிருக்கக் கூடும்.

என்னைப் போலவே!

இப்போது நான் அதிகம் You tube வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் சில பரீட்சார்த்த முயற்சிகளை நானும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.அதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேன்.

அதில் அண்மைக்காலமாக என்னை ஆட்கொண்ட விடயம் Collage Art என்று சொல்லப் படுகிற விடயம். எக்கச்சக்கமான செய்முறைகளோடு கூடிய வீடியோக்கள் யூரியூப்பில் காணக்கிடைக்கின்றன.

அது ஒருவகை கலை வடிவம் என்று சொல்லப்படுகிறது. செலவு அதிகம் தேவைப்படாது. பழைய சஞ்சிகைகள், கலண்டர் படங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் இலவச விளம்பரங்கள்.... போன்ற இவைகள் தான் மூலதனம்.

நான் மேலதிகமாக Winnie என்று சொல்லப்படும் - உபயோகித்த பொருட்களை விற்கும் - தொண்டு நிறுவனக் கடைக்குப் போய் பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள்,  படங்களோடு இருக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றையும் வாங்கி வருகிறேன்.

அவை பொதுவாக 2 டொலர்கள், 3 டொலர்களுக்குள் வரும்.

இப்படிப் போகிற போது மிக அரிய அருமையான புத்தகங்களைக் கூட கண்டெடுத்து கொண்டுவந்து காட்சிப் பொருளாகவும் பொக்கிஷமாகவும் கூட பேணி வருகிறேன்.

அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் அவசியம் பேச வேண்டும்.

அது நிற்க.

இவ்வாறான படங்களைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு ஏற்ற விதமாக நீங்கள் ஒரு உருவத்தைக் கற்பனை செய்து புதிய வடிவத்தை உருவாக்குவது தான் இதன் அடிப்படை.

மிக ஆரம்பத்தில்செய்த சில உருவங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை ஒரு  பாலர் பள்ளிப் பிள்ளை ஒன்றின் சித்திரங்களைப் போன்றது.

பொதுவாக மிகக் குறைந்தது மூன்று வேறுபட்ட வடிவங்களை ஒன்றாக்கி புதிய கற்பனை வடிவங்களை உருவாக்க வேண்டும். நான் அதிக பட்சம் இரண்டு வடிவங்களைத் தான் ஒன்றாக்கி இருக்கிறேன்.

நீங்களும் ஒரு தடவை இந்த வேடிக்கையான வேலையைச் செய்து தான் பாருங்களேன்.

இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு இருந்தது.

மீண்டும் சந்திப்போம்.




















































Monday, April 27, 2026

நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....

நண்பர்களே!
பல நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். எல்லோரும் நலம் தானே? என்னுடய இரு தசாப்தங்களாகப் பாவனையில் இருந்த கணனி தன் வாழ்வை அண்மையில் நிறுத்திக் கொண்டு விட்டதால் இத்தனை தாமதம். கூடவே நியூசிலாந்துக்கும் போய் வந்ததால் மேலும் சில தாமதங்களும் பின்னடைவுகளும் நேர்ந்து விட்டது. கூடவே படங்களை பதிவேற்றுவதில் மேலும் சில சிரமங்கள்...

ஒரு படியாக இன்று முழுநாளும் உட்கார்ந்து என் நண்பர் ஒருவரின் உதவியோடு தமிழ் எழுத்துருவை தரவிறக்கம் செய்து கொண்டு விட்டதால் உடனடியாக ஒரு பரீட்சார்த்தப் பதிவாக இந்தப் பதிவைப் பதிவேற்றுகிறேன்.

விரிவான பதிவோடு விரைவில் வருகிறேன். அதுவரை நியூசிலாந்தில் எடுத்த இந்தப் படங்களையும் காணொளியையும் உங்களுக்குப் பரிசாகத் தந்து செல்கிறேன்.

உங்கள் வரவுக்கு நன்றி.











Sunday, February 1, 2026

Memory lane -1 - பயணித்த பாதையில் பூத்த ஒரு பூ (முன்னுரை)

 வருகை தந்திருக்கும் எல்லோருக்கும் முதலில் எனது உளமார்ந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு எல்லோருக்கும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் உடல் சுகங்களையும் எடுத்து வரும் ஆண்டாக அமையட்டும்.

எனக்கும் அதுவே வேண்டுதலாக இருக்கிறது.

கடந்த வருட இறுதி எனக்கு ஒரு முழுமையான வாழ்வின் இறுதிக் கொண்டாட்டமாக; என் தங்கையின் ஊரில்; அவளின் அன்பில் திக்கு முக்காடி களித்த கோலாகலமான கொண்டாட்டமாக அமைந்தது.

சுவிற்சிலாந்து - ஒரு சுவர்க்க பூமி.- அது குறித்த பயண அனுபவங்கள் ‘memory lane' என்ற தலைப்பில் தொடர் பதிவாக எழுத இருக்கிறேன். அங்கு மாத்திரமன்றி லண்டன், ஜேர்மனிக்குப் போன அனுபவங்களும் புதுமையானவையாக இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துளி தான் இன்றைக்கு உங்களோடு பகிர இருப்பது.

ஏனென்றால் ஊருக்கு வந்து இருவாரங்கள் ஆகி எங்கிருந்து எழுத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணும் தோறும் இந்த ஒரு காட்சி மட்டும் என் நினைவில் இருந்து எழுது எழுது என்று சொல்லிக் கொண்டு அகலாது நிற்கிறது. 

அத்தோடு இன்னொரு விடயமும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றி நினைத்தீர்கள் என்றால் தானாகவே அது குறித்த விடயங்கள் நம்மை வந்தடைகின்றன.

இது விடயத்திலும் எனக்கு அவ்வாறே ஒரு அற்புதமான தகவலும் கிடைத்தது.  ( அடுத்த பதிவில் அது வரும்)

அது தவிர, நான் இப்போது சட்ட ரீதியாக ஒரு ‘மூத்தகுடிமகள்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகையினால் பின்வரும் எழுத்தோட்டங்களைப் பார்த்து நீவீர் தயவுகூர்ந்து முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுவிடவேண்டாம் என்றும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த முதுமையை அங்கீகரித்தல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கிறது. பாட்டியாகும் பாக்கியம்; அரசாங்கத்தின் மூத்த குடிமகளுக்கான அட்டை, பயணங்களில் கிடைக்க இருக்கும் சலுகைகள் என்று அது ஒரு விதமான புதுமையான அனுபவமாக இருக்கிறது.

வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விட்டதைப் போல...

சரி, அது இருக்கட்டும்,  வந்த விடயத்திற்கு வருகிறேன். 

நான் இலண்டன் மாநகருக்கும் சென்றிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அங்கு Victoria & Albert museum  செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அது ஓர் அற்புதமான வாய்ப்பு. 

சொற்களுக்குள்; கமறாவுக்குள்; வீடியோவுக்குள் அடக்க முடியாத - கண்களுக்குள் மட்டும் தேக்கி வைத்திருக்கக் கூடிய; பார்த்து மட்டுமே அனுபவிக்கத் தக்க அரிய அனுபவம் அது!

என்னை அழைத்துச் சென்ற என் தம்பி ஜெயந்தனின் அருமை மகள் பிரதீஷனா பற்றியும் இந்த இடத்தில் நான் அவசியம் சொல்லியாக வேண்டும். 

அந்த இளம் பெண் என்னை ஒரு ராணியை அழைத்துச் செல்வதைப் போல; என்னுடய ஆர்வத்துக்கும், தேடலுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், சிலிர்ப்புகளுக்கும்,  நான் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் என்னோடு ஈடுகட்டி; என் விருப்பத்தை மதித்து, எந்த ஒரு களைப்பையோ, நேரம் போவதையோ கருத்தில் கொள்ளாது, பார்ப்பதை முழுமையாகப் பார்க்க வேண்டும்; எந்த ஒரு இடையூறுமின்றிப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, எனக்கொரு அற்புதமான அனுபவத்தைச் சாத்தியப் படுத்தினாள் அந்த இளம் சிட்டு. அந்த இளம் பெண்ணை என்னால் நிஜமாகவே என்றைக்கும் மறக்க இயலாது. என்னை அவள் ஒரு ராணியைப் போல உணர வைத்தாள்;.பல விதங்களிலும்.

ஜெயந்தன் காயத்ரி தம்பதிகளில் மூத்த மகள் என்று பெருமையோடு நான் சொல்லக் கூடிய அந்தப் பருவ மகளுக்கு எனது தாய்மை நிறைந்த என் அன்பும் ஆசீர்வாதங்களும்!

 ’பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பிய ஓருயிர்’

சரி அது நிற்க! ( சிந்தனையை ஒழுங்கு படுத்துவது சிரமமாக இருக்கிறது. ஆகையினால் எழுத்தும் அங்கும் இங்குமாக ஓடித்திரிகிறது. அது குறித்து என்னைப் பொறுத்தருள்க!)

அந்த நூதன காட்சிச் சாலையில் பார்த்த ஒரு சிற்பம் இது.


இந்தச் சிற்பத்தில் இந்தத் தாடி வைத்த ஆணின் வெட்கம் அல்லது நாணம் எத்துணை அழகாக இருக்கிறது பாருங்கள்!

காதலிக்கும் ஆண்களே!

தாடி வைத்துக் கொள்ளுங்கள்!

( காட்சி தொடரும்....)

Monday, September 8, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே... - 3 -

 ஆண்டவனின் தோட்டத்திலே ... - 1 -

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 2 -

சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா?

அப்பாடா, ஒருபடியாக, இறுதியாக இப்போது இங்கு வந்து சேர்ந்து விட்டேன். :)

இந்தக் கடையில் வாங்கும் பொருட்களினால் எவ்வாறாக நாம் இந்தத் தேசத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் என்பதை ஆங்காங்கே மாட்டி வைக்கப் பட்டிருக்கின்ற இந்த கீழ்கண்ட பிரசுரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

( பத்து டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் நீங்கள் வீடற்ற ஒருவருக்கு ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள். )


( இருபது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒரு குடும்பத்தின் ஒரு நேர உணவுக்கு உதவுகிறீர்கள்)


(முப்பது டொலர்களுக்குப் பொருளொன்றை வாங்குவதன் மூலம் ஒருவர் ஓரிரவு உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறீர்கள். அதற்கு நன்றி. Your purchase has a purpose) 

பார்த்தீர்களா? நாம் மலிவு விலையில் பல அரிய பொருட்களை வாங்குகிறோம் என்பதையும் தாண்டி அது மற்றவர்களுக்கும் இந்தப் பூமிக்கும் எவ்வளவு நன்மையை விளைவிக்கிறது பாருங்கள்.

சரி அது இருக்கட்டும், நான் வந்த வேலையையும் சொல்லவந்ததையும் முதலில் சொல்லி விடுகிறேன்.

பொதுவாக இந்தக் கடைக்கு நான் வந்தால் முதலில் என் கண்ணோட்டம் போவது தளபாடங்கள், பின்னர் கைவினைப் பொருட்கள் ( காகிதங்களோடு தொடர்பு பட்டவை ) பின்னர் புத்தகங்கள்.

இங்கு இருக்கும் புத்தகங்களைப் பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். இந்த நாடு கடந்த 100 க்கு மேலான ஆண்டுகளில் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்திருந்தது; அதன் அழகுகள், வரலாறு, விளையாட்டு, கைவினைப் பணிகள், மருத்துவம், கவிதை, இலக்கியம், சிறுவர் வாழ்வு, தோட்டக்கலை, சமையல், தளபாடவகைகள், உலக வரலாறு, பெரியார்கள், கல்வி, பற்றிய பல்வேறு கிடைக்கற்கரிய புத்தகங்கள், மாதாந்த சஞ்சிகைகள், தையல் கலை, மனையியல் கலைகள், பின்னல் கலை குறித்த பல்வேறு புத்தகங்கள் இங்கு 2,3, டொலர்களுக்கும் 4,5 டொலர்களுக்கும் விற்பனைக்கு இருக்கும். குறிப்பாக விக்ரோரிய மகராணி காலத்தைய புத்தகங்களும் அவற்றில் காணப்படும் வண்ணப் படங்களும் புத்தகங்களின் பரிமானங்களும் பேப்பரின் தரமும், அச்சு பதிப்பும், புத்தகக் கட்டும், அதன் உறுதிப்பாடும் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும்.

என்னுடய கைப்பணிகளுக்காகவும் வரலாறில் எனக்கிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவும் வாங்கி வைத்திருக்கிற புத்தகங்கள் ஏராளம். ஆனாலும் அவற்றைத் தேவைக்குத் தானும் வெட்டவோ கிழிக்கவோ மனசு வராது. அதன் தரமும் உள்ளடக்கமும் அத்தனை சிறப்பாக இருக்கிறது.

ஒரு புத்தகத்தின் உயிரினை அதன் ஆத்மாவினை கிழித்து பாவித்து விட்டால் அதனை எங்ஙனம் மீண்டும் காண்போம்? டிஜிட்டல் உலகுக்கு நாம் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளை நாம் கடந்து விட்டாலும் கையில் விரித்து வைத்திருக்கும் ஒரு பழம் பெரும் புத்தகத்தின் வாசமும் அவற்றில் இருக்கும் வாசகங்களும் எங்களோடு இன்னமும் ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டு தானே இருக்கிறது.... ஒரு செய்தியினை சொல்லிக் கொண்டு தானே இருக்கிறது. அதன் குரலை எவ்வாறு மறுதலிப்பது? அதன் குரல்வளையை எவ்வாறு நசிப்பது? 

அரிய; அதிலும் குறிப்பாக விக்ரோரிய ராணியின் சகாப்தத்தில் இருந்த வாழ்வு முறை, நடை உடை பாவனைகள், பவித்த பொருட்கள், பிள்ளைகளின் விளையாட்டுகள், குழந்தைப் பாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றில் காணப்படும் வண்ணப் படங்கள்.....அவற்றின் வடிவழகை; பேப்பரின் தரத்தை; பைண்டிங்கின் கச்சிதத்தை சிதைப்பதென்பதெங்ஙனம்?

இதனாலேயே இவற்றைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒரு வைக்கோல் பட்டைடை நாயின் கணக்காக!

இருந்த போதும் எல்லாவற்றையும் வாங்கிவிடும் அவாவோ குறைந்த பாடில்லை. எப்போது அங்கு போனாலும் புத்தகங்களைப் பார்க்கலாம் என்பதே எனது மனதுக்கு மகிழ்ச்சியான விடயமாக இருக்கும். மிக ருசியான உணவினை வைத்திருந்து இறுதியாகச் சாப்பிடுவது போல மிக இறுதியாகத் தான் புத்தகப் பக்கத்திற்குப் போவேன்.

இன்றைக்கு பூக்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை வாங்குவது எனது நோக்கமாக இருந்த படியால் முதலில் புத்தகம் இருக்கும் பக்கத்திற்குப் போனேன்.

எனது கண்ணுக்கு முதலில் தென்பட்ட புத்தகம் ஒன்றைப் பற்றி இனி நான் சொல்லப் போகிறேன். சொல்வதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு குறிப்பொன்றைச் சொல்ல வேண்டும்.

இந்தப் புத்தகம் பதிப்புரிமை உடையது. எந்த ஒரு வடிவிலும் உரியவர்களின் அனுமதியின்றி பிரசுரிக்கப்படலாகாது என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இருந்த போதும் இதனை நான் வியாபார நிமித்தமோ இலாப நோக்கிலோ இதனைப் பிரசுரிக்காது இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகத்திற்காக இதன் மிகச் சிறியளவிலான படங்களை இங்கு பதிவேற்றுவதனால் அவர்கள் என்னை பொறுத்தருள்வார்கள் என்று நம்புகிறேன்.

புத்தகம் நியூசிலாந்து நாட்டில் 2016ம் ஆண்டு பிரசுரமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க நீர்வர்ணத்தினால் அமைந்த  பூக்களின் படங்களைக் கொண்டமைந்திருக்கின்ற இந்தப் புத்தகத்தின் தலைப்பு Reflections in a monastery garden. ( மடாலயத் தோட்டத்தின் பிரதிபலிப்பு) இதனை அருட்சகோதரி Teresa. Kelleher ocd என்பார் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். மொத்தமாக 63 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவகையான பூக்களின் படங்கள்.தரமான அட்டை வடிவமைப்பும் கூட. 

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இந்த அருட்சகோதரி தான் சிறு பெண்ணாக தன் தாய் தந்தையரோடு இருந்த போது ஒரு கோடை விடுமுறைகளின் போது முதன் முதலாக ஒரு நீல மலரை பறித்தெடுத்துக் கொண்டு புல்வெளியில் படுத்திருந்தபடி இந்தப் பூவின் அழகின் சிருஷ்டியை அதிசயித்ததையும்; இந்த நீல ஆகாயத்தையும், மென்மையான பச்சைப் புல்வெளியையும் மென்மையான இறைவனின் எதிரொலியாகத் தான் கண்டுகொண்டதையும் நினைவுகூர்கிறார்.

மேலும், ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் தாயாரோடும் தன் சகோதரியோடும் தாவரவியல் பூங்காவுக்கு  வழக்கமாக நடை உலா போவது பற்றியும்; அங்கு பழங்காலத்து நேரமறியும் நேரமானி ஒன்று  இருந்தது பற்றியும்; அங்கு, பூக்களின் மத்தியில் பாராயணம் செய்யத்தக்க வாசகம் பொறிக்கப்பட்ட கல் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகிறார். அதில், 

‘ The kiss of the  sun for pardon,
The song of the birds for mirth,
One is nearer God's heart in a garden,
Then anywhere else on earth'

( From 'God's garden By Dorothy. Frances Gurney, 1913) 

இதனை வெண்பா வடிவில் Char GPT இப்படித் தருகிறது.

‘மன்னிக்கும் சூரியனின் முத்தமழை
மகிழும் பறவைகளின் பாடலிசை
தன்னிலே நண்ணரு மாலடியை
தோட்டம் தவமே தரும்’

என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் குறிப்பிட்டு, சில வருடங்களின் பின் குருத்துவம் பெற கார்மல் என்ற குருத்துவப் பாதையில் சென்று சேர்ந்து கொண்டமையையும் அங்கு பைபிளின் பழைய ஏற்பாடு படித்த போது கார்மல் என்பதற்கு ‘அழகின் இருப்பிடம்’ என்று பொருள் என்று தான் அறிந்து கொண்டமையையும் குறிப்பிடுகிறார். 

இறைவனின் படைப்பில் அழகின் சாயலை தன் வாழ்வில் எங்ஙனும் காண்பதை நினைவு கூரும் அவர், தன் குருத்துவ வாழ்வில் தன் தேவாலயத்துத் தோட்டத்தை இறைவனின் சிருஷ்டியின் ஓரழகாகப் - பேரெழிலாகக் காண்கிறார். நெடுத்துயர்ந்த மரங்கள், பூப்பூக்கும் செடிகள், செழித்து நிற்கும் சிவப்பு ஓர்க் மரம், லிக்குடைம்பர் ( liquid-amber )என்று சொல்லப்படும் ஒருவித Gum Tree, golden elm என்று சொல்லப்படுகின்ற தங்க நிற இலுப்பை மரம், இவைகள் எல்லாம் இணைந்ததாக அவரது தேவாலயத்தின் தோட்டம் அமைந்திருந்திருக்கிறது.

தேவாலயத்தின் சுவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு இறைவனின் அழகின் சிருஷ்டியை; தன் தேவாலயத் தோட்டத்தில் மலர்ந்திருக்கின்ற தெய்வீகத்தின் தோற்றத்தினை; தன் தூரிகையினால் சுமந்து, இந்த புத்தகத்தின் வழி நம்மோடு பகிர்வதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் இது அவரது கண்வழி அவர் கண்ட இறைவனின்  பேரழகு என்கிறார். ( 2016 - ஈஸ்டர்)

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்வதை விட இந்த வண்ணப் படங்கள் அதன் தாற்பரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும். என் சொற்களுக்கு இங்கு எந்த விதப் பயனுமில!

இந்தப் புத்தகம் நியூசிலாந்தில் இருந்து எப்படி சிட்னிக்கு வந்து, இந்த பழம்பொருள் விற்கும் கடையை அது எவ்வாறு இறுதியாக வந்தடைந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் முதல் பக்கத்தில் அருள் தந்தை ஜோன் கோல்டிங் சப்ளின் என்பார் 2021ம் ஆண்டு டிசெம்பர் மாதம் பதின்மூன்றாம் திகதி முன் பக்கத்தில் எழுதிய குறிப்பொன்று இவான் என்பவருக்கு இப்புத்தகம் பரிசளிக்கப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது.

அந்த அருள் தந்தை எவ்வளவு அழகாக அதனை எழுதியிருக்கிறார் என்று நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த முதல் பக்கத்தை அப்படியே படம் எடுத்துப் போடுகிறேன்.


இனி நான் இடையில் நிற்கவில்லை. அந்தப் புத்தகத்தில் இருக்கும் படங்களில் ஒருசிலவற்றை மட்டும் அதன் சுவை கருதி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ( அருள்சகோதரியாரே! உங்கள் புத்தகத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருள்க!)























மிக அற்பமான விலைக்கு வைக்கப்பட்டிருந்த; விலைமதிக்க முடியாத ஆத்மாவை: இறைவனின் பேரருளினை; அழகின் பெரும் இரகசியத்தைச் சுமந்திருக்கிற இந்தப் புத்தகத்தை; என் கைப்பணி வேலைகளுக்காக எங்ஙனம் நான் தீண்டுவேன்?

அழகில் கடவுளைக் காணும் இந்த அருட்சகோதரர்களும்; அது எடுத்துக் கூறி நிற்கும் தாற்பரியமும்; இந்த அழகும் விலைமதிக்கமுடியாத பெரும் பேறன்றோ!

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆஹாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது!!

இப்போது, திருஞான சம்பந்தர் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.’ ”மாசில் வீணையும்; மாலை, மதியமும்: வீசு தென்றலும்; வீங்கிள வேனிலும்; மூசு வண்டறை; பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே!”

இறுதியில் எல்லா சமயங்களும் ஒன்றைத்தானே போதிக்கின்றன!; எல்லா நதிகளும் இறுதியில் கடலையே சென்றடைகின்றன!

  ஆகையினால் அன்புடையீர், 
Find joy in every Sunrise
Take the scenic route and
Live gently upon Earth!

நாளும் நலமுடன்
வாழ்க! வளமுடன்!!