Sunday, March 27, 2011

நரையின் வழியோடி.......


காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அது தன் கணக்கை சற்றும் பிசகாமல் மெளனமாகச் செய்த படி இருக்கிறது.உயிருள்ள உயிரற்ற என்ற பாகுபாடின்றி அது எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் தன் கோலங்களை படரவிட்டபடி நகர்கிறது.மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்க்கின்றன.சிறியவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.இன்று புதிதாய் முளைத்த கட்டிடங்கள் நாளை பழையவை ஆகின்றன.அனுபவங்கள் நம்மைச் செதுக்க நாமும் உருமாறியபடி இருக்கிறோம். நம் வாழ்க்கைப் பயணமும் நகர்ந்த படி இருக்கிறது.

ஒவ்வொரு மனித வாழ்வும் அனுபவங்களின் தொகுப்பு.அனுபவம் செதுக்கிய சிலைகள்.அதற்கூடே தவழ்ந்து,நடந்து,விழுந்து,ஓடி,பாய்ந்து,வருகிறது அனுபவம் தரும் வாழ்வு.ஒரு முறை இயக்குனர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது. வினா ’எது அழகு?’ அதற்கு அவர் சொன்ன விடை, ’வயது முதிர்ந்த ஒருவர் குழந்தையைப் போல சிரிக்க முடிந்தால் அந்த சிரிப்பின் ஒளி தான் அழகு’.அது கசப்பான அனுபவம் எதுவும் தொட்டு விடாத சிரிப்பல்லவா?

ஒரு விடயத்தை வைத்து ஒருவரை மதிப்பிட்டு விடும் பண்பு நம்மிடம் உண்டு.ஏற்கனவே நம்மிடம் சில அளவுகோல்கள் இருக்கும்.இதனைச் சமூகம் தந்ததா? பண்பாடு தந்ததா?வாழ்க்கை முறை கற்றுத் தந்ததா? சமயம் ஊட்டியதா? எதுவென்று தெரியவில்லை.நல்ல மகிழ்ச்சியாகப் இயல்பாகப் பழகுவார்கள்.கதை மேலும் பெருத்து பிள்ளைகள் எத்தனை என்பதில் சம்பாசனை வந்து நிற்கும்.’பிள்ளை இல்லை’ என்றால் அதற்குப் பிறகு அவர்கள் சொல்லும் ஓ.. வில் பல கருத்து தொனிக்கும்.சம்பாசனையின் போக்கு மாறும். அது போலவே ஒருவர் விவாக ரத்தானவர் என்றறியும் போதும் அங்கு வரும் ஓ... வும் அதன் பின்பான சம்பாசனையும் இன்னொரு விதமாகும்.தனியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அதற்கு வரும் ஓ.. இன்னொரு விதமாகும். இப்படிப் பல.ஆனால் மேலைத் தேயத்தவர்களிடம் இத்தகைய பண்பு இருப்பதில்லை.


அது போல ஒரு ஸ்ரியோ ரைப் தொலைக் காட்சி பார்ப்பதற்கும் இருக்கிறது.சிட்னியின் தொலைக்காட்சி சேவையில் நான் விரும்பிப் பார்க்கும் சணல்கள் ABC,SBS போன்றவை. இவ்வாறு சொன்னவுடன் பலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். ‘ஓ..நீ ’அந்த’ ரைப்பா என்ற கேள்வி கண்ணில் மின்ன என்னை விட்டு விலகுவார்கள். காரணம் பின்னிரவு வேளைகளில் அதில் ஒளிபரப்பாகும் சர்வதேச திரைப்படங்கள்.அதில் வரும் சில செக்ஸ் காட்சிகள். அவற்றைத் தாண்டி பல தமிழர்களால் திரைப்படங்களை ரசிக்க முடிவதில்லை.அவர்கள் அதிலேயே மிகவும் தடங்கல் பட்டு விடுகிறார்கள்.உண்மையில் அதில் வரும் திரைப்படங்களின் கருப் பொருள்,நடிப்பு,தரம்,எல்லாக் கோடுகளையும் தடைகளையும் தாண்டிய கலா சுதந்திரம்,சொல்லும் முறை.. இவற்றை எல்லாம் நம்முடய சினிமா பெற ஒரு சந்ததிக் காலம் போதுமோ தெரியாது.அங்கு சினிமாவின் தரம் அத்தனை உயரத்தில் இருக்கிறது.

சரி, ஏனைய தொலைக்காட்சி சேவைகளான 7,9,10 போன்றவை எதைக் காட்டுகின்றன என்றால் அவை அமெரிக்காவைக் பெரும்பாலும் கொப்பியடிக்கின்றன.கனவுலகில் மக்களை வைத்திருக்கின்றன.பொருள் நுகர்வோரின் வர்த்தக மையமாகத் தொலைக்காட்சி நிலயங்கள் மாறி வருகிறன.(60,70% என்று சொல்லலாம்)அவை ஒரு விதமான மாய உலகில் அவர்களை வைத்திருக்கின்றன.அதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

சில வேளை விரும்பியோ விரும்பாமலோ இந்த வர்த்தக சேவைகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கேற்படும்.அது தப்பித் தவறி ஒரு அமெரிக்க நிகழ்ச்சியாக இருந்தால் அதைப் பார்ப்பதற்கு எனக்கிருக்கிற பொறுமை எவ்வளவு என்பதைப் பரிசோதிக்கும் சோதனைக் களமாக அதைப் பயன் படுத்திக் கொள்வேன்.

அதில் நடிக்கும் பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்கள் தம் வயதை மறைக்க போடும் முக ஒப்பனைகள் - இளமையாகத் தம்மைக் காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் பிரயத் தனங்கள்,அடக்கம் தொனிக்காத அட்டகாசப் புன்னகை ...இவை தான் என் பொறுமையை அளக்கும் தராசுக் கற்கள்.

செய்கின்ற ஒப்பனையை அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முகத்துக்கு அவர்கள் காட்டும் கரிசனையை கழுத்துப் புறங்களுக்கு அவர்கள் காட்டுவதில்லை.பருவ வயதினர் போடும் ஆடைகளை 60,65 வயதைத் தாண்டியவர்கள் போடும் போது அது கேலிக்குரிய வேடிக்கையாகப் போய் விடுகிறது.80 வயதுப் பெண் என்ன தான் மேக்கப் போட்டாலும் பேசும் போது தள்ளாட்டம் கண்டு விட்ட இயக்கம்,பேச்சு என்பன அவர்களை மேலும் கேலிக்குரிய பொம்மைகளைப் போல அவர்களை ஆக்கி விட்டு விடுகிறது.அவர் மேலும் தன் இள வயதுக் காதலன் என்று ஒருவரை காட்டி தான் இன்னும் எவ்வளவு விரும்பப் படத்தக்க ஒருவராக இருக்கிறார் என்று காட்ட வெளிக்கிடும் போது அது நகைச்சுவையாகப் போய் விடுகிறது.அது அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது என்பது தான் கவலைக்குரியது.

இதற்குக் காரனம் என்ன என்று நினைத்துப் பார்த்த போது தான் பண்பாடு குறுக்கே வந்து நிற்கிறது.கீழைத்தேயப் பண்பாடு குடும்பம் என்ற மையத்தைச் சுற்றி தியாக வாழ்வை மையப் படுத்துகிறது. மேலைத் தேய பண்பாடு தனி அடையாளத்தை முதன்மைப் படுத்தி தன் மகிழ்ச்சியை மையப் படுத்துகிறது.அதனால் அவர்களால் முதுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறதோ என்று தோன்றுகிறது.கீழைத் தேயத்தவர்கள் அதனை வளர்ச்சியின் ஒரு படி நிலையாக; மிக இயல்பாகவும் விருப்புடனும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு குழந்தை குழந்தையாகவே இருந்து விடுவதில்லை.அது வளர்ந்து பாடசாலை போய்,பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து,திருமணம் முடித்து, தானும் குழந்தைகள் பெற்று அவர்களை ஆளாக்கி, மணமுடித்துக் கொடுத்து.... என்று வருகின்ற கால மாற்றங்களுக்கேற்ப அவர்களும் அததற்கான பொறுப்புகளை ஏற்று அவ் அவ வயதுக்குரிய வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க; மேலைத்தேயத்தில் பெரும்பாலானவர்களால் சிற்றின்பக் காலங்களுக்கப்பால் நகர்ந்து போக முடிவதில்லை. மறுமணங்கள், மன அழுத்தங்கள், உறவுச் சிக்கல்கள்,மது பாவனை,மாற்றுத் தந்தையால் முதல் தாரத்துக் குழந்தைகள் பாலியல் இம்சைகளுக்குள்ளாக்கப் படுவதுமாக சிதைந்து போய் விடுகிறது அவர்கள் வாழ்வியல் நெறிகள்.அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி விடுகிறார்கள்.அதனால் அவர்கள் முழுமையாக தாய்மையின் சுகங்களை,பின் நாளில் பேரப்பிள்ளைகளோடு வாழும் சுகங்களை... என்று பலவற்றை இழந்து விடுகிறார்கள்.இறுதியில் பாதி வாழ்வை முழுவாழ்நாளிலுமாக வாழ்ந்து முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.

என் தலையில் சில நரைக் கோடுகள் விழ ஆரம்பித்து விட்டன.:) அவை மகிழ்ச்சிக் குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது.அனுபவம் என்னில் வரைந்த சித்திரம் அது.காலம் எழுதிய என் கணக்கு அது.அது எனக்கொரு அந்தஸ்தைத் தருகிறது.பலருக்கு முன்னால் மதிப்பினை உண்டாக்குகிறது.எனக்கது பிடித்திருக்கிறது. நான் அடுத்த கட்டத்துக்குப் பாஸாகி விட்டேன் என்பதை அது எனக்குத் தெரிவிக்கிறது.பார்க்கும் தோறும் என்னை நானே மதிக்க முடிகிறது. என் பொறுப்புகளை அது எனக்கு உணர்த்துகிறது.

கடந்த வாரம் விக்ரர் என்ற என் வேலை நண்பனோடு வேலை செய்ய வேண்டி இருந்தது.பரஸ்பர ஒத்துழைப்போடு வேலை சுலபமாக முடிந்த ஒரு முடிவுப் பொழுதில் அவன் கேட்ட கேள்வி தான் இத்தனை பெரிய அலட்டலுக்கும் காரணம். அவன் கேட்டது,’நீ ஏன் தலைக்கு டை போட முயற்சிக்கக் கூடாது?’

சொன்ன பதில்,’நான் ஏன் என்னை மறைத்து வேறொருவராக மற்றவருக்கு என்னைக் காட்ட வேண்டும்? இது தான் நண்பனே நான்;மற்றும் என் இருப்பு.’

நானாக நான் இருக்கும் மகிழ்ச்சியை வேறெப்படி நான் சொல்ல? நரை சொல்லும் காலத்தின் ரகசியங்களை;வாழ்க்கையின் வனப்புகளை நான் எதற்கு மறைக்க?

அதிசயப் பிறவியாக என்னைப் பார்த்துப் போனான் அவன்.’அடி லூஸூ’ என்ற தொனி அந்தப் பார்வையில் இருந்தது.

சொல்லுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும்?

Sunday, March 20, 2011

ஒரு சிமிக்கியின் குரல்


ஈழத்தின் கிழக்குக் கடற்கரை மணற்பரப்பில் தூக்கி வீசப்பட்ட கோகினூர் வைரம் ஒன்றை ஈழத்து முற்றத்தினூடாகக் காணக் கிட்டியது. அந்த வைரத்தின் பெயர் ”+ள் விகுதி” பெயரைப் பாருங்கள் வைரத்தின் - அது வீசும் அறிவொளியின் வெளிச்சத்தை - சொல்லே காட்டிக் கொடுத்து விடுகிறது இல்லையா?

1997ம் ஆண்டு இளவரசி டயானா இறந்த போது எல்டன் ஜோன் பியானோவின் முன்னால் அமர்ந்து கண்ணீரோடு பாடிய ‘குட்பாய் லண்டன் றோஸ்’ பாட்டு மனதைப் பிளிந்ததன் பின் சொற்களின் பாரம் என்னைத் தாக்கியது இந்த ள்+ விகுதியைப் பார்த்ததன் பின்னால் தான்.

ஆம், அது ஒரு வலைப்பூ.கீர்த்தனா என்ற பெண்ணால் 2007ம் ஆண்டு 12 பதிவுகளை மாத்திரம் கொண்டிருக்கும் வலைப்பூ.மே 23 அன்று ‘வணக்கம்’என்ற தலைப்போடு அறிமுகமாகிய அப்பெண் எழுத்தின் பின்னூட்டங்களை அப்படியே இங்கு தருகிறேன். பாருங்கள்.


வணக்கம்


வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்
பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.
பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.

வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.
முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.

நன்றி.
Posted by கீர்த்தனா at 1:01 AM
22 comments:


மு.மயூரன் said...
நீங்கள் வலைப்பதிவிடத்தொடங்கியமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் உற்சாகமாக எழுதுங்கள்.
3:11 AM


சோமி said...
வாழ்த்துக்கள் கீர்த்தனா.

நிரம்ப எழுதுங்கள். வாய்க்காரிகளின் கதைகள் எப்பவும் கலகமும் சுவாரசியமும் நிறைந்தவை.விரைவில் தமிழ்மணம் போன்ற ஏதொவொரு வலைபின்னலில் இணையுங்கள்.
1:01 AM


சினேகிதி said...
வணக்கம் கீர்த்தனா!
நீங்கள் வாய்காரியா :-))நல்ல விசயம்...அப்ப உங்கட வாயைக்காட்டுங்கோ சீ..எழுதுங்கோ.
1:07 AM


கீர்த்தனா said...
நன்றி மயூரன் ,சோமி, சினேகிதி..
(நக்கலா போச்சு ..சினேகிதிக்கு.. :-))
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுவேன்.
2:28 AM


சினேகிதி said...
"+ள்" இதை எப்பிடி உச்சரிக்கிறது?? விகுதி என்றால் என்ன?? நீங்கள் சரியான கெட்டிக்காரியாம் என்று சொல்லினம் அதுக்காக இப்பிடி வந்த உடன புரியாத பாசைல எல்லாம் பயம் காட்டக்கூடாது சரியா :-) கேட்க கேள்விகளுக்கு ஒழுங்காப் பதில் சொல்லுங்கோ:-)
1:30 PM


கீர்த்தனா said...
சினேகிதி…
+ள் என்பதை = சக ள் என்று உச்சரிக்கலாம்.
தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.

உதாரணம் :- வந்தாள் என்பதை வந்து +த்+ ஆள்
என்று பிரிக்கலாம்.இதில் ஆள் என்பது விகுதி. (அள், ஆள் பெரும்பான்மையான பெண்பால் விகுதிகள்)
இந்த ஆள் என்பது ஆ+ள் சேர்ந்து வருவது.
ஆக சக ள் = +ள்
புரிகிறதா???

- நான் ஒன்றும் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் கெட்டிக்காரி.:-)
உங்கட கேள்விக்கு நான் நல்ல பிள்ளையா பதில் சொல்லிட்டன்.

அம்மா மிரட்டுற மாதிரி என்ன மிரட்டகூடாது . சின்ன பிள்ளை பயந்து போயிடுவன் :-) ..
3:21 PM


சுந்தர் / Sundar said...
வாங்க .. வாழ்த்துக்கள்
12:08 AM

U.P.Tharsan said...
//தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.//

எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கு. :-))

வலைப்பூ(வலைப்பதிவு)பதிய தொடங்கியாச்சா! ம்.. வாழ்த்துக்கள்.
8:44 AM


சினேகிதி said...
விளக்கம் எல்லாம் சரிதான் ஆனால் எனக்குத்தான் அதை உங்கட வலைப்பததிவுக்கு பெயரா வைச்சிருக்கிறதுதான் ஏனென்று விளங்காதாம்....
12:54 PM


கீர்த்தனா said...
சினேகிதி...
உங்களுக்கு விளங்குற மாதிரி சொல்ல வேணும் என்டால் ...

நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.

புரிந்ததா??? இதுக்கு மேலயும் புரியாட்டி எல்லா வலைப்பதிவாளர்களையும் உதவிக்கு அழைக்க வேணும்.
:-)
3:03 PM


அபி அப்பா said...
வணக்"கம்"
4:55 PM


மு.மயூரன் said...
கீர்த்தனா,

உங்களுக்கு "ராக்கிங்" நடக்குது.

வலைப்பதிவுலகத்துக்கு புதுசா வாற ஆக்கள பகிடிவதை பண்ணுற குழப்படிக்கார பிள்ளைகளிட குழுவுக்கு சினேகிதிதான் தலைவி எண்ட மாதிரி அறிஞ்சு வச்சிருக்கிறன்.

நீங்க உங்கட அம்மாவையே கூப்பிட்டு பாடமெடுத்தாலும், விளங்காத மாதிரி நடிக்கிறவங்களுக்கு விளங்காது ;-)

பாருங்களேன் உங்கள மூன்று முறை ரொம்ப சீரியசா பதில் சொல்ல வச்சிட்டாங்க.

அடுத்தடுத்து உங்களுக்கு என்ன நடக்கப்போகுதோ....

அது சரி சிநேகிதி, அது யார் படத்தில இருக்கிற பிள்ளை?
6:00 PM


கொழுவி said...
//நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.//

உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தாராளமாக நீங்கள் இனி வலைப்பதியலாம். வரவேற்கிறோம். எங்கள் சார்பில் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் விசாரணைக் கமிசன் அதிகாரி சிநேகிதிக்கு நன்றி.
6:14 PM


சினேகிதி said...
ஆகா புரளியக் கிளப்ப கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மயூரன் அண்ணா எங்களுக்கு இந்த பகிடிவதை எல்லாம் கேள்விஞானம் மட்டும்தான் அதைப்போய் கீர்த்தனா போல வாய்காரிட்ட எல்லாம் பரிசோதிச்சுப்பார்ப்பனா நான்:-)

படத்தில இருக்கிற பிள்ளை நான்தான்.
10:34 PM


கீர்த்தனா said...
நன்றி மயூரன் என் சார்பு வழக்கறிஞராக களத்தில் இறங்கினதுக்கு.

நீதிபதி கொழுவி அவர்களின் உத்தரவு படி இனி யாராலும் தொந்தரவு வராது என்று நம்புகிறேன்.

:-)
4:18 PM


நாமக்கல் சிபி said...
வாழ்த்தி வரவேற்கிரோம்!

வருக! வருக!
2:13 PM


பகீ said...
வாங்க கீர்த்தனா,

சினேகிதி வலைச்சரத்தில செய்துவைச்ச அறிமுகம்தான் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து விட்டிருக்கு

தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்.

ஊரோடி பகீ
1:02 AM


கானா பிரபா said...
காதோரம் லோலாக்கோட வந்திருக்கிறியள் வாம்மா மயிலு
9:26 AM


poet said...
தமிழ் வலைப் பதிவுகள் பூத்துக் குலுங்குவது யார் யாரது என்று தெரியாமல் ஒரு எல்லயற்ற காட்டின் சுந்த்ந்திரத்தொடு விரிந்து செல்கிறது. புல்லின் பூவும் செடியின் பூவும் ரோஜாபோலவும் மககிழ்ழ் போல்லவும் நாகலிங்க பூவைப்போலலவும் அழ்கின் முழுமை என்பதை கடந்த வ்ருடம் ஆனைமலைக் காடுகளில் வாழ்ந்தபோது மேலூம் உணர்ந்தேஎன். எனது மூடியாத நாவலுக்காக கீர்தனாபோன்ற பல இளளயவர்களளது தளங்களில் இருந்து கற்றுக் கொள்கிறேஎன். வாழ்விம் மூழ்ழுமையான அழகும் அதன் வீடுபட்டதன்மையோடு வேறெங்கும் காணமுடீவதில்லை. இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை. வலைத் தளங்களில் இருந்தும் நாவலுக்கான தேட்டலை ஆரரம்பிக்க்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் பெண்கள் ஆய்வு மையத்தில்ல் கவிஞர் தி.பா கலந்துகொண்ட உரரையாடலின் பின்ன்னர் ஒரு சில்ல நிமடங்கள் பேசசிய கீர்த்தனாவா நீங்க்கள். அப்படியயாயின் ஒன்று சொல்ல வேண்டும். உங்களளல் 2005ல் வெளிவர வேஎண்டிய எனனது நாவல் (1824 - 2004 வரையில்லன பெண்களின் கதைகள் ) பாழாகிப் போனது. கூட்டம் மூடிந்து வண்டிக்கக தரித்தபோத்து தமிழ் நாவல்களின் உருவத்தைத் காரசசாரமாக நிரராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அன்றுபோய் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு தேடத் தொடங்கியதுதான் இன்னும் முடியவ்விலை.அந்தத் தேடலில்தான் +ள் வந்து சேர்ந்தது. இப்ப மீண்டும் பயமாய் இருக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்
3:15 AM


கீர்த்தனா said...
வ.ஐ.ச.ஜெயபாலன்,
//இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை//
உண்மைதான்..!
நன்றி..உங்கள் பின்னூட்டத்திற்க்கு
நான் அதே கீர்த்தனா தான் :-)
2:47 PM


உதயதேவன் said...
கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது
நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்
12:05 PM
உதயதேவன் said...
கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது!

நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்
12:06 PM

‘வாய்க்காறி ஆதங்கம் மேலெழும்ப’ - என்ன ஒரு உயிர் துடிப்பான செறிவான கருத்துக் கொண்ட சொல்வீச்சு!

இத்தனை அழகாய் பதிவுலகத்துக்கு வந்து சேர்ந்த பெண் இவள்.அவரது ஆக்கங்கள் அவரின் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கிறது. அதற்குள் கரப்பான், வறுமை மாடு மனிதன்,ஆண்சிலந்திகள்,பெண்ணின் மடி,கருவறை,ஆண்வண்டின் காதல், பழைய புது இருப்புகள் ஆகிய அப்பெண்னின் ஆக்க வெளிப்பாடுகள் அவரின் ஆளுமைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.

அவ் வலைப்பூ கொண்டிருந்த படம் இன்னும் அழகாய் அப் பெண்னின் ஆழுமையைச் சித்தரித்திருந்தது. ஓம். அது ஒரு பெண்ணின் காதும் அதில் அவள் அணிந்திருக்கும் வளையமும்.அதுவே ஒரு கவிதையாக இருந்தது.அத்தகையதான கவித்துவம் பெயரிலும் வடிவத்திலும் கொண்டமைந்திருந்த அழகிய வலைப் பூ அது.

ஏனோ அது இப்போது இயங்கக் காணோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உண்டு.அதனால் இது பற்றிப் பேசாதிருப்பதே உசிதம் என்று வாளாதிருந்தேன்.நேற்றய தினம் வாசிக்கக் கிடைத்த ஆனந்த விகடனில் வந்த ’சிட்டுக் குருவி’ என்ற தலைப்பிலான கவிதை மீண்டும் என்னை உசுப்பி விட்டது.வாளாதிருப்பதன் நேர்மையீனம் மீண்டும் உசுப்பி விடப் பட்டதன் பின்னணியிலேயே இந்தப் பதிவு இங்கு இடப் படுகிறது.அந்த உசுப்பலின் வரிவடிவங்கள் தான் என் மன மரத்தில் இருந்து இங்கு வார்த்தைகளாகச் சிந்துண்டு கிடக்கின்றன.

அந்த வலைப்பூவில் இறுதியாக இடம்பெற்றிருக்கிற கவிதையும் அதற்கு வந்த ஒரு பின்னூட்டமும் அதற்குக் காரணமாகியிருக்கலாமோ என்ற நியாயமான ஐயம் என்னை ஏனோ பதட்டமடைய வைத்துக் கொண்டிருக்கிறது.

அவர் இறுதியாக எழுதி இருக்கிற கவிதை (Wednesday, October 10, 2007 )
பழைய-- புது ...இருப்புக்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கிறது.கவிதை இது தான்.பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு

வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..

கரு முகிலும் வெண்பனியும்

சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட

அதை நாசம் செய்யலாம்..

யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..

மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….

காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து

வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு

பரந்தது....

..காணாமல் போனது..!!

நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும்

துர் வாடை வாயினால்…

எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..

என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..

என் புது இருப்பு..

பூக்கூடைகளில் இருந்து..

ரோஐாக்களையும் .. அல்லிகளையும்

அள்ளியெடுத்தபடியும்..

அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும்

தொடரும்..!!!


இந்தக் கவிதைக்கு வந்த பின்னூட்டம் ஒன்று பகை அரசன் என்ற பெயரோடு வந்திருக்கிறது.இது தான் அது.


ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை
தடை செய்வதற்கு தகுதியில்லாத கவிதை"

இதுவும் ஒரு கவிதை தான்(தெலுங்கு) ...

உங்க கவிதைனால் நீங்க இந்த சமூகத்துக்கும், மக்களுக்கும் என்ன சொல்ல வரீங்கா...
என்ன கவிதை எழுதுகிறீர்கள் யாருக்கும் ஒண்ணும் புரியாமல்...

கேட்டா.. கவிதைன்றது ஊற்று, உணர்ச்சி அப்படி இப்படின்னு எதாவது அசட்டு தனமா சொல்ல வேண்டியது..

தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே கவிதை வரையும் பாக்கியம் கிடைக்கிறது அதில்நீங்களும் ஒருவர்... அதை உருப்படியா செயங்கா..

நாலு கோடி மக்களுக்கு புரியுரமாரி எழுந்துங்க... நாலு பேருக்கு கூட புரியாத மாறி வேண்டாமே...”

------------------------------------------

’உங்களுக்கு ஒரு கவிதை புரியவில்லை என்றால் அது உங்களுக்குரிய கவிதை இல்லை’அன்பரே! அதைத் தாண்டிச் செல்லும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலே சிறந்த மனிதனுக்கழகு.சொற்களால் கொலை எதற்கு? இனிய உளவாக இன்னாதவை எதற்கு? கனியிருக்கக் காய் கவர்வதெதற்கு?

என்ன மனிதர்கள் இவர்கள்?

அதன் பின் அவரிடமிருந்து எந்த பதிவுகளும் அதில் வெளிவரவில்லை.இந்தப் மென்மையான பெண்மனம் இருந்த வலைப்பூ - அது இருந்த சுவடு keerthanakk.blogspot.com என்ற முகவரியில் இருக்கிறது.

இன்னும் மனம் சமாதானம் அடைவதாயில்லை.

இந்தப் பகையரசருக்குச் சொல்வதற்கு எனக்கொரு செய்தி இருக்கிறது.”ஒரு புதிய ஐடியா என்பது மிக மென்மையான ஒரு பொருள்.ஒரு கேலிச் சிரிப்பு அதைக் கொன்று விடும்.ஒரு கொட்டாவி அதைச் சாகடிக்கும்.ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்தி விடும்.ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்தி விடும்.” - இது அண்மையில் வாசித்த ஒரு வாசகம்.

ஒரு கலைஞனுக்குத் தன்னுடய படைப்பும் அது மாதிரித் தான். தான் பெற்றெடுத்த குழந்தையைப் போல.தன் உணர்வுகளால் எழுதியது.அவனைப் பொறுத்தவரை அது அவன் அனுபவங்களால் முழுமை பெற்ற படைப்பு.அதை எத்தனையோ தரம் பார்த்துப் பார்த்து, திருத்தித் திருத்தி இரவும் பகலும் அதைப் பற்றியே நினைத்து நினைத்து அதனை முழுமைப் படுத்தி இருப்பான்.பின் அது பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேடையேறும்.

ஆனால் அது மிக இயல்பாக எந்த ஒரு உணர்வுமின்றி அரக்கத் தனமாகப் புறக்கணிக்கப் படும் போது, அல்லது நிராகரிக்கப் படும் போது, தோளை உலுக்கி விட்டுக் கொண்டு போய்விடுகின்ற போது, குரூரமான பாஷையால் குத்திக் கிழிக்கும் போது இவர்கள் எத்தகைய மனிதத் தன்மை உள்ளவர்கள் என்று தான் சிந்திக்கத் தோன்றுகிறது.

அண்மையில் மழை என்ற வலைப்பூவில் திரு சந்தான கிருஷ்னன் அவர்கள் அதனை மையப் படுத்தி அழகான கவிதை ஒன்றைப் புனைந்திருந்ததைக் காண முடிந்தது.அது இது தான்.

கவிதையின் கண்ணீர்

பிரசுரத்துக்கு மறுக்கப் பட்ட
கவிதைகள் ஒன்று கூடி
குற்றஞ் சாட்டின
வாசிக்கப் படாமல் இருப்பதை விட
எழுதப் படாமல் இருப்பது
சாலச் சிறந்தது.
அவைகளின் கண்ணீரைத்
துடைப்பதற்கேனும்
எழுத வேண்டும் ஒரு கவிதை!

ஒரு மென்மையான கவிஞ மனம் தன் கவிதைக்களுக்காக இப்படி இரங்குகிறது. அதற்குப் பின்னூட்டமிட்ட ஒரு இரசிகர் இப்படி ஒரு கவிதையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்சைப் போல
ரத்தம் கக்கிச் செத்தான் கவிஞன்.

பிரேத பரிசோதனை
செய்து பார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்.
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப் பட்ட கவிதை ஒன்று
புற்றுக் கட்டி வளர்ந்திருந்தது.

இக்கவிதையை வே. இராமசாமி என்பவர் எழுதியிருந்ததாக அவ் வாசகர் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய எழுத்துலக அரசியலுக்கு வலைப்பூக்கள் ஒரு நல்ல மாற்று என்றே தோன்றுகிறது.இங்கு ஆசிரியப் பெருந்தகையோர் யாரும் அவற்றை வெட்டிச் சிதைத்து விட முடியாது. உருமாற்றி தம் வல்லமையைக் காட்டி விட முடியாது.பிற்போட்டு பிற்போட்டு அவனைக் காயப்போட்டு விட முடியாது.நினைத்ததை எழுதவும் பேசவும் பகிரவும் முடிவதால் இது ஒரு நல்ல மாற்றே!ஆனால் மென்மையான ஒரு கவிஞ மனத்தை இப்படியான அனாமதேயங்கள் வந்து குத்திக் கிழித்துக் காயப்படுத்தி குற்றுயிராக்கிப் விட்டுப் போய் விடுகின்றனவே! இதற்கு என்ன செய்வது?இதற்கு மாற்று தம்மைப் பலப்படுத்திக் கொள்வதொன்று தான் என்பதை கீர்த்தா ஏனம்மா மறந்து போனாய்? BE STRONG டி.


மணலுக்குள் தூக்கி வீசப்பட்டு விட்ட கோகினூர் வைரமே எழுந்து வர மாட்டாயா?


போகு முன் இந்தக் கவிதையையும் ஒரு முறை பார்த்து விட்டுப் போங்களேன்!


சிட்டுக் குருவி


ஓர் அடைமழை நாளில்
சிட்டுக் குருவி ஒன்றைச் சந்தித்தேன்.
தொப்புர நனைந்திருந்த அது
ஒரு மரக்கிளையின் இலை மறைவில் அமர்ந்து
நடு நடுங்கிக் கொண்டிருந்தது
உடைந்த அதன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

சிட்டுக் குருவிகள் வேகமாக அழிந்து கொண்டு வருகின்ற
இந்த நாட்களில்
அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.

மருண்ட விழிகளோடு
இறகுக்குள் உயிர் ஒடுங்கி அமர்ந்திருந்த அது
ஒரு முறை வலிய பூட்ஸ் காலின் கீழே
சுருண்டு கதறியதைக்
கண்டேன்.

தானிய மணிகளைக் கொத்திக் கொண்டு
கவண் கண்களுக்குத் தப்பிப் பறந்த
சாகசத்தின் பழங்கதையை
அது மறக்கவே விரும்புகிறது.

நிசப்தமான மனிதர்கள் வாழும்
நிசப்தமான உலகில்
கீச்சு மூச்சுக் கூடாதென்பதை
உடைந்த மூக்கு அதற்குத் தெரிவித்து விட்டது.

மழை குறைந்து நின்றதும்
அது கிளம்பிப் போனது.
அதன் இறக்கைகள் எதிலும் காயங்கள் இல்லை
கால்கள் எதுவும் முடமாகவில்லை
என்றாலும்
அது மெள்ள மெள்ள நடந்து போனது.
அப்போது
சிட்டுக் குருவி என்ற பெயர்
அதை விட்டு விட்டுப்
பறந்து போனது.

(இக்கவிதை ஆனந்த விகடனில் பிரசுரமாகி இருக்கிறது.நன்றி;ஆனந்த விகடன்.23.02,2011; எழுதியவர்; இசை.)

Sunday, March 13, 2011

யாழ்ப்பாணம்; சில நினைவுகள்என்னுடய வலைப்பூவுக்கு வருபவர்கள் மிகச் சொற்பம். ஆனால் வருகிறவர்கள் பெரும்பாலும் கிரமமாக வருவதையிட்டு எனக்கு மிகுந்த மனத் திருப்தி உண்டு.
இந்தியா,இலங்கை,அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற என் தோழர்களைத் தவிர அமெரிக்கா, அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பின்னணியில் இருந்தும் தன்சானியா, யப்பான், கொறியா,தாய்வான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் அன்பர்கள் வருவது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் ஒரு விடயம்.அங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எவ்வளவு பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு விடயம் இல்லையா!

கடந்த வெள்ளிக்கிழமை 11.03.2011 அன்று ஜப்பானில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது இந்த வலைப்பூவைத் தேடி வரும் அன்பர்களையும் நினைத்துக் கொண்டேன்.அவர்கள் நலமாக இருப்பார்களாக!


அது ஒரு புறம் இருக்க,கடந்த வாரம் எங்கள் ஈழத்து முற்றம் என்ற கூட்டு வலைப் பதிவு தமிழ்மணத்தால் இவ்வார நட்சத்திரமாகத் தெரிவு செய்யப் பட்டிருந்ததை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.

அதில் வந்து சேர்ந்த நினைவோடைக் குறிப்புகளும் அனுபவங்களும் பகிர்வுகளும் நிஜமாலுமே நம் ஊரின் நினைவுகளையும் பிரிவின் தாக்கங்களையும் மிகையாகத் தூண்டி விட்டது.ஒரே உணர்வோடு அங்கு கூடி இருந்த உலக ஈழத்துச் சகோதரர்கள்;அவர்களிடையே இருந்த அன்பு,நேசம்,ஒற்றுமை,ஒத்துழைப்பு,ஏக்கம்,சோகம்,பகிர்தல் எல்லாமே அதன் பலத்தில் இருந்து என்னை அசையவே முடியாத படி அந்த ஒரு வாரத்தை அது கட்டிப் போட்டு விட்டது.

தாய்நாட்டின் பலம்;தாய்மண்ணின் வாசம்; அது தந்த வாழ்க்கை; இவை எல்லாம் இலகுவாக நம்மை விட்டு அகன்று போகக் கூடிய ஒன்றல்ல.


அதன் ஒரு விளைவாக யூரியூப்பில் யாழ்ப்பானத்தின் வாழ்க்கையை; அது இன்று எப்படி இருக்கின்றது என்றெல்லாம் கான ஆவலோடு ஓடினேன்.அதிலிருந்து சில வீடியோ கிளிப்புகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


இதில் வருகின்ற பாடல்களோ அல்லது பதிவில் வருகின்ற படத்தில் ஏதாவதொன்றோ உங்கள் நினைவுகளைக் கிளறிவிடப் போதுமானதாக இருக்கும்.

மனதில் ஏதோ ஒரு விதமான ஏக்கத்தையும் கவலையையும் இவை ஏனோ தூண்டி விட்டுச் செல்கின்றன.

எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தோம்! எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம் என்ற நினைவுகளை; அந்த மக்களின் உயிரோட்டமான அன்பு,நேசம்,வாஞ்சை; வாழ்க்கை முறை தருகின்ற எளிமையான,உண்மயான,நின்மதியான வாழ்க்கை இவற்றை எல்லாம் இழந்து போனோமே!என்ற ஏக்கத்தை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

நேரமிருந்தால் இவற்றைக் கேட்டுப் பாருங்கள்.Sunday, March 6, 2011

கள்ளூறும் பொய்கை


அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் அற்ககோல் தொழில்நுட்பம் பயின்ற இரசாயணத்துறையில் முதுகலைமானிப் பட்டம் பெற்ற பங்கஜ் என்பவர் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கின்ற மலைப்புறங்களில் விளைகின்ற வாழைப்பழத்தில் இருந்து வைன் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருப்பதாக ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.மலைப் புறங்களில் செழிப்பாக வளர்கின்ற அந்தக் குறிப்பிட்ட வாழைப்பழங்களுக்கு இனிமையும் சுவையும் அதிகமாகக் காணப்படுவது தான் அதற்குக் காரணமாம்.

அவுஸ்திரேலியாவும் வைன் தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.விருந்துக்கு யார் வீட்டுக்காவது செல்வதாக இருந்தால் அல்லது உணவு விடுதிகளுக்கு இரவு விருந்தொன்றுக்குச் செல்வதாக இருந்தால் வைன் போத்தல்களோடு அவர்கள் செல்வார்கள்.

வைன் உற்பத்தி செய்கின்ற பிராந்தியத்துக்கு ஒரு முறை நானும் சென்றிருந்தேன்.கண்னுக்கெட்டிய தூரம் வரை திராட்சைத் தோட்டங்களும் பல நூற்றுக் கணக்கான வகைகளில் திராட்சை ரசங்கள் ருசி பார்ப்பதற்காகவும் வைக்கப் பட்டிருக்கும்.நாம் அருந்திப் பார்த்து விருப்பமானதைத் தெரிவு செய்யலாம்.

அவர்கள் போத்தலைப் பிடிக்கும் விதம், அதனை கண்ணாடிக் குடுவைக்குள் ஊற்றும் போது ஊற்றுவதில் அவர்கள் காட்டும் பக்குவம், என்று எல்லாவற்றிலும் ஒரு பக்குவம் இருக்கும்.அந்தக் குறிப்பிட்ட வைனைப் பற்றி அதன் தோற்ற வரலாறு குண இயல்புகளை வர்ணிக்கும் போது பார்த்தால், யாரோ ஒரு பாசமுள்ள பெற்றோர் தன் ஒரே மகளைத் திருமணம் பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கு முன் மகளின் இனிய குண இயல்புகளைப் பேசுவது போலவோ; அல்லது குண்டுமணியைத் அல்லது மஞ்சாடியை தராசின் ஒரு பக்கம் போட்டு மறு பக்கத்தில் தங்கத்தை நிறுப்பது போலவோ ஒரு பொறுப்பான பக்குவமும் உன்னிப்பான பார்வையும் இருக்கும்.

வாங்குபவர்களும் ஏதோ யாரோ ஒருவரின் மகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை இறக்கும் தறுவாயில் இருக்கும் தன் ஆத்ம நண்பனுக்கு எப்படியாவது சொல்லி வழியனுப்பி விட வேண்டும் என்ற கணக்காக அதனை வெகு அக்கறையோடு கேட்டுக் கொண்டிருப்பார்.

தொலைக் காட்சியில் வைன் எப்படிப் பருக வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பார்கள்.குவளையை எப்படிப் பிடிக்க வேண்டும்,வைனை அதற்குள் ஊற்றிய பின் அதனை 2,3 தரம் சுளாவுவது எப்படி? உதட்டில் குவளையை பொருத்தி ஒரு மிகச் சிறு மிடறினை எவ்வாறு உட்கொள்வது? பிறகு எப்படி மெல்லியதாகச் சத்தமற்று சப்புக் கொட்டி ருசியை அதன் தரத்தை,அதன் குணத்தை உணர்வது என்றெல்லாம் மிக அக்கறையாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

அது முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்ட உலகம். பரீட்சயமில்லாத தனி உலகம்.ஆனாலும் டெசேட் வைன் என்று ஒரு சிவப்பு நிற வைனை வாங்கி வந்தேன். அதனை ருசி பார்த்த போது என் மிகச் சிறு வயதில் வயிற்று உபாதைகளுக்கு அம்மா தரும் கிறேப் வோட்டர் என்ற சுவையும் வாசமும் மிக்க மருந்தை அது நினைவூட்டியது தான் அதனை நான் வாங்குவதற்கான பிரதான காரணம்.(வயிற்று வலி உபாதைகள் இல்லாத போதும் வயிற்றை வலிக்கின்றது என்று சொல்லி அதனை வாங்கிக் குடித்தது இப்போதும் நல்ல ஞாபகம். அம்மருந்து இப்போதும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் அதன் வாசமும் சுவையும் மிக இனிமை.)ஆனாலும் இக் கணம் வரை - மூன்று வருடங்களுக்கும் மேலாக அது பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் வருட முடிவில் வீட்டை மீண்டுமொரு முறைக்கு ஒழுங்காக்கும் போது கைக்கு அது அகப்படும்.அவுஸ்திரேலியர்களைப் போலவே மிகப் பக்குவமாக அதை உருட்டி உருட்டிப் பார்ப்பேன். அதில் எந்த ஒரு விஷேஷமும் எனக்குத் தென் படுவதில்லை. அது என்னைப் பொறுத்தவரை வெறும் போத்தலாகவே இருக்கிறது.தூசினை நல்லதொரு துணியினால் துடைத்து விட்டு அவர்கள் வைத்துத் தந்த அதற்கென விஷேஷமாகத் தயாரிக்கப் பட்டிருந்த பளபளப்பான உயரமான கறுப்பும் தங்க நிற எழுத்துக்களும் கலந்த பையினுள் வைத்து அது தன் இருப்பிடத்தில் மீண்டும் அமர்ந்து கொள்ளும்.ஆனால் மீண்டும் ஒருமுறை ஹன்ரர் என்ற இடத்துக்குப் போன அந்த பசுமையான நினைவுகளை மட்டும் அந்த வைன் போத்தல் எனக்குத் தந்திருக்கும்.

இந்தத் திராட்சைக் கள்ளை திருமணமாகாத இளம் ’கன்னிப்’ பெண்களை திராட்சைப் பழங்கள் இருக்கின்ற பள்ளத்துக்குள் இறக்கிவிட்டு விட்டு அருகில் நின்று இனிமையான வயலின் இசையை மீட்டுவார்களாம். அந்த இசைக்குத் தகுந்த படி அக் கன்னிப் பெண்கள் நடனமாடிய படி திராட்சைப் பழங்களை உளக்கி ரசமாக்குவார்களாம். பிறகு அதனைப் பதப்படுத்தி குடுவைகளில் இட்டு மண்ணுக்குள் புதைத்து விடுவார்களாம். பின்னர் பல வருடங்களின் பின்னால் எடுத்து பருகுவார்களாம்.இதுவும் திராட்சை ரசம் பற்றிய ஒரு செய்தி!

இவை எல்லாம் ஒன்றோடொன்றாக நினைவுக்கு வந்ததற்குக் காரணம் அண்மையில் காணக்கிட்டிய இந்திய வாழைப்பழ வைன் பற்றிய செய்தி தான்.இதனை அறிந்த போது சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது.இது ஒரு ’கள்குளம்’பற்றியது.முழுக்க முழுக்க இயற்கையே அதனை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அத்தனை வளங் கொழித்த ஒரு மலைப்புறத்து பாடல் இது. அந்த மலை நாட்டின் வளத்தைக் கூறும் ஒரு பாடல்.

பங்கஜ் பார்த்த அதே வாழைப்பழம்; அதே மலைப்புறம்;பொய்கையோரம் செழித்து வளர்ந்துள்ளன வாழை மரங்கள்.இங்கே அழகிய கன்னிப் பெண்கள் பழங்களை உழக்கவில்லை; இப்போதையைப் போல் இசை அங்கே ஒலிக்கவில்லை.தாட்டு வைத்துக் காத்திருக்கவில்லை.இன்ஸ்டன் கள்ளு!அதனை இயற்கை எவ்வாறு செய்து விடுகின்றது என்று பாருங்கள்.

தன் பழக் குலைகளில் இருந்து தானாக முற்றிப் பழுத்துக் கொட்டுகின்றன வாழைப்பழங்கள் பொய்கைக்குள். அது போலவே தீங்கனிச் சாறாக முற்றி பழுத்துக் கொட்டுண்ட பலாச்சுளைகளின் இனிய சாறும் பொய்கை நீருள் கலக்கின்றது. இந்தக் கலவையை இயற்கையாகவே சூரிய பகவான் சூடாக்குவதால் அவை நொதித்து ‘ஊழ்படு தேறல்’என்ற கள் ஆகிறது.இவ்வாறு இயற்கையாகவே கள் ஊறுகின்ற சுணை நீரில் தாகத்துக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது குரங்கு.இல்லை இல்லை. தண்ணீர் என்று நினைத்து கள்ளினை உண்டு விடுகின்றது. அதனால் போதை மிக்க மயக்கம் அதற்கு. அதன் நிமித்தமாக மிளகுக் கொடிகள் படர்ந்துயர்ந்திருக்கின்ற சந்தன மரத்தில் ஏற முடியாமல் கள்ளின் போதையில் அக்குரங்குகள் மலர்கள் கொட்டிக் கிடக்கும் மலர் தரையில் மயங்கிக் கிடக்கின்ற மலை நாடே! என்கிறார் கபிலர் என்ற இவ் அகநானூற்றுப் புலவர். இப்பாடல் அகநானூறில் 2வதாக அமைந்திருக்கின்றது.

அந்தப் பாடல் இது தான்.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊளுறு தீங்கனி உண்ணுநர் தடுத்த
சாரற்பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடுஞ் சுணை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாடே”.

வாழைப்பழமும் மலை நாடும் இந்தியாவும் முன்னரே இயற்கையாகக் கண்டு பிடித்த ’ஊழ்படு தேறலைத்’ தானோ இப்போது பல நூற்றாண்டுகள் கழித்து பங்கஜ் கண்டுபிடித்திருக்கின்றார்?