Showing posts with label திறனாய்வு. Show all posts
Showing posts with label திறனாய்வு. Show all posts

Sunday, October 22, 2023

தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது….

 தாமரைச் செல்வியைக் கொண்டாடுதல் என்பது,

வன்னியைக் கொண்டாடுதல்; அதன் வாழ்வியலைக் கொண்டாடுதல்; மண்ணை, மண்ணின் மகிமையைக் கொண்டாடுதல், அதன் மேல் கட்டமைக்கப் பட்டிருக்கும் வீடுகளை, குடிசைகளை,  அக் குடியிருப்புகளில் வாழும் சமான்ய  மக்களை, மேலும் அங்குள்ள மரங்களை, செடிகொடிகளை,வயல்களை, வெளிகளை, காடுகளை, கழனிகளைக் , குருவிகளை,  கால்நடைகளை, காடுகளில் உலவும் விலங்கினங்களை, வீட்டுப் பிராணிகளை என Flora,Fauna அனைத்தையும் கொண்டாடுதல் என்று அர்த்தம் பெறும்.

வன்னி பிரதேசம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. அவை முல்லையும் மருதமும் கலந்த நிலம். அங்கு சேவலுக்குப் போட்டியாக  மயில்களும் அகவும். காட்டோரம் மான்கள் சுயாதீனமாய் திரியும். பகல் பொழுதில் மாடு மேய்த்து மாலை நேர மம்மல் பொழுதுகளில் யானை விரட்டும் சிறுவர்களுக்கும்; குரங்குகளுக்கு நெளிப்புக் காட்டி குண்டுமணிகளோடு சுள்ளிகள் பொறுக்கும் சிறுமிகளுக்கும் பாலைப் பழங்களையும் வீரைப் பழங்களையும் காட்டு மரங்களே  நல்கும். காட்டுத்தேனும் தேக்கு மரமும் நிறைந்த முல்லை நிலத்தில் எருதுகளோடு கூடவே மேயச் செல்லும் கறவை மாடுகளுக்குக் குளங்களில் தண்ணீர் எப்போதும் குறையாதிருக்கும். அங்கு துள்ளி விழும் விரால் மீன்களோடு சிறுவர்கள் குதித்து நீச்சலடிக்க, வயலுக்குப் பாயும் வாய்க்கால் தண்ணீரில் புலுனிக் கூட்டம் குளித்து சிறகுலர்த்தும்,

சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் குடியிருக்கும் ஏழைக் குடியானவனின் பொட்டல் விழுந்த கிடுகுக் குடிசைகளில் ஈதல் அறம் நிறைந்து கிடக்க, ஒற்றை ஒழுங்கையால் அச்சமற்று நடந்து போவாள் பள்ளி செல்லும் பிள்ளை.

இத்தகையதான இந்த மண் குறித்த அடையாளங்கள் வடக்கு வாழ் தமிழ் மக்களின் மண்ணமைப்பில் இருந்து வேறுபட்டவை. அந்த சுண்ணாம்புக் கற்களும், செம்மண்ணுமான நிலத்தில் கல்வீடுகளும் கிடுகுவேலிகளும் பனைமரக் காடுகளும்,கம்பீரமாய் உயர்ந்து நிற்கும். புகையிலைத் தோட்டங்களும், வெற்றிலைக் கொழுந்துகளும் கிணற்றுப் பாசனமும் மண்ணின் மகிமை பேசும். கல்விக்கும், கட்டுப்பாட்டுக்கும், கடின உழைப்புக்கும், சிக்கன வாழ்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் பெயர்போன வடக்கின் சாயையிலிருந்தும் கூட வன்னி பெருமளவில் வேறு படும்.

அதே நேரம் பெளர்ணமிக் காலங்களில் மீன்கள் பாடும் தேன்நாடாகப் புகழப்படுவது கிழக்கு. அங்கு வாழும் தமிழ் மக்களின் நாட்டார் பாடல்களோடும் வடமோடி தென்மோடிக் கூத்துகளோடும்; தயிரோடு பழம் பிசைந்து; இசைபோலும் மொழிபேசி; விருந்தோம்பி மகிழ்ந்திருக்கும் கிழக்குவாழ் மக்களின் அன்றாட இயல்பிலிருந்தும் கூட வன்னி வேறுபடும். இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த மதங்களை அனுசரிக்கும் மக்கள் அங்கு ஒன்று கூடி அருகருகாகவும் சுமூகமாகவும் வாழும் மாண்பினைக் கொண்டிருக்கிறார்கள். அந்த நெய்தல் நில சமூக சாயையிலிருந்தும் கூட வன்னி முற்றிலுமாக வேறுபட்டது.

அந்த வரிசையில் மலையகத் தமிழ் மக்களை நினைத்துப் பார்க்கிறேன்! இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிப் பிரதேசங்களில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வியலோ இன்னும் ஒரு படி வேறானது. துயர் நிறைந்தது. தேயிலை இரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக குளிருக்கும் கடிக்கும் அட்டைகளுக்கும் ஈடுகொடுத்து அன்றாடம் கடினமாக உழைத்து இன்றும் லயன்களில் வாழும் அவர்கள் வாழ்வின் துயரங்கள் எழுத்தில் வடிக்க வொண்ணாதது!

நாம் – தமிழர்களாக – அவர்களை மொழியாலும் வாழ்வாலும் ’கவனியாது’ விட்டு விட்ட குறையை – காலமகள் தமிழர்களுக்கு ஒருநாள் உரத்த மொழியில் எடுத்துச் சொல்லக் கூடும். அதன் எதிரொலி ஈழத் தமிழர் புலம் பெயர்ந்த தேசங்கள் வரை கேட்கவும் கூடும்.....

இவர்களோடு, இஸ்லாமியத் தமிழ், கொழும்புத்தமிழ், மற்றும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் தமிழியங்களுமாக - இருக்கும் அத்தனை சிறு சிறு நீரோடைகளும் தமிழ் என்ற பொதுவான பெரு நதியில் அதனதன் பண்பு நலன்களோடும்; தனித்துவ தன்மைகளோடும்; சமத்துவமாக, தயக்கமேதுமற்ற தமக்கேயான பெருமிதத்தோடும்; இணக்கப்பாட்டோடும் ( hormony) ஒன்றுகலக்கும் போது தான் ஈழத்தமிழுக்கான முழுமையான இலக்கியமும் அதற்கான இலக்கிய முழுமையும் கிட்டும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால் அது ஒரு பெரும் வண்ணமயமான வெளிச்சத்தை நம் தமிழுக்கு பாய்ச்சும் என்பது நிச்சயம்.

அஃது நிற்க,

இந்த வகையில் புவியியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தனக்கென தனி அடையாளங்கள் கொண்ட வன்னி மண்ணை அதன் அத்தனை சாயல்களோடும் மண் வாசம் மாறாமல் பதிவு செய்தவை தாமரைச் செல்வியின் கதைகள். காலம் இயல்பாக  நமக்கு அவரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இன்றய தொழில்நுட்ப யுகத்தில் நின்று கொண்டு 70களின் வாழ்வியலை கற்பனை பண்ணுவது கூட இன்றுள்ள இளம் சந்ததியினருக்குக் கடினமாக இருக்கக் கூடும். 70களில் தொலைக்காட்சிகளோ, தொலைபேசிகளோ இருக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. வன்னிப் பிரதேசங்களுக்கு மின்சார வசதி கூட அதிக பேரிடம் இருந்திருக்கவில்லை. இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு சாதனம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து தமிழ் சேவையும், ( ஸ்ரீமாவோ ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்ட தென்னிந்திய சஞ்சிகைகளின் முடக்கத்தால் ) எழுச்சி பெற்ற வீரகேசரிப் பிரசுரங்களும் பத்திரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளும் தான்.

இன்று நாம் பெண்விடுதலை பற்றி  நிறையப் பேசுகிறோம்; நிறைய மாறி இருக்கிறோம்; இப்போதும் மாறி வருகிறோம்; இனியும் மாற்றங்கள் வரும் என்று நம்பலாம். ஆனால் தாமரைச் செல்வி வாழ்ந்த ஆரம்ப காலச் சூழலில் ஒரு விவசாய வாழ்க்கைச் சுமைகள் கொண்ட ஒரு பின்புலத்தில் இள வயதில் திருமணமாகிய பின்பும்; இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாகிய பின்பும்; ஏறும் சுமைகளுக்கு மத்தியிலும் அவரது கதைப் புலங்கள் மண்ணின் பதிவுகளாக அதன் அச்சொட்டான இயல்பை பதிவாக்கி இருக்கின்றன என்பது எத்தனை பெரிய சாதனை!

ஆண்களால் இலக்கிய உலகில் கால் பதிக்க இருக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் ஒரு பெண்ணாகக் குடும்ப சுமைகளைச் சுகமாகச் சுமந்து கொண்டு, விவசாய வயல்வெளி வேலைகளுக்கும் உதவிக் கொண்டு, பிள்ளைகளை - அவர்களின் தேவைகளை - படிப்புகளையும் கண்காணித்துக் கொண்டு மூத்த சகோதரியாக தன் தம்பி தங்கைகளையும் கவனித்துக் கொண்டு, இலக்கிய உலகில் தொடர்ச்சியாக வலம் வருவது என்பது அத்தனை சாமான்ய விடயம் அல்ல. இவற்றை எல்லாம் சுமந்த படி சுமார் 50 ஆண்டுகளாக வன்னியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாரிய பணியை பெண்மை நலம் மாறாமல் அவர் அநாயாசமாக செய்து வந்திருக்கிறார்.

அந்த இலக்கிய வடிவங்களில் தெரிவது எல்லாம் வன்னியின் பண்பு நலம்.

அவை வன்னிப் பகுதியின் வயல் வெளிகளைப் போல தமிழ் இலக்கியப் பரப்பில் வன்னி மண்ணுக்கான இலக்கிய அறுவடையாக பரந்து பொலிந்திருக்கின்றன. தனது கட்டுக்கோபான சிந்தனைகளின் ஊடே கண்ணியமும் அக்கறையும் பொறுப்புணர்வும் மீதுர, வன்னியின் வாழ்வை இலக்கியமாக்கி இருப்பவை அவரது எழுத்துக்கள். அவர் வன்னி இலக்கிய வடிவத்திற்கு ஆண்மாவாகவும் உடலாகவும் ஓருருவம் கொடுத்திருக்கிறார். எளிய வாழ்வுக்குரித்தான அம் மக்களை இலக்கியப் பல்லக்கில் ஏற்றி வைத்தவை அவரது எழுத்துக்கள்.  தனித்துவமான வன்னியின் சாயலை தமிழ் இலக்கியத்துக்குக் கொண்டு வந்தவை அவர் கை பிடித்த பேனா. அவை தனித்துவமான ஈழத்து இலக்கியக் கருப் பொருளுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

நிலத்தினடியில் ஆழ வேரூன்றி, உயர எழுந்து, விழுது பரப்பி, ஊரே இருந்து போக நிழல் தந்து, சாப்பிட்ட உணவினை அசைபோட்டபடி இளைப்பாறும் ஊர் மாடுகளுக்கு அதன் அடிமடியிலே இடம் கொடுத்து, பல பறவைகள் சந்ததி சந்ததியாகக் கூடுகட்டி வாழ கிளை தந்து, அவ் ஊர் மக்களின் சுகதுக்கங்களையும், இரகசியங்களையும், புறணிகளையும், காதல் சல்லாபங்களையும், சண்டை சச்சரவுகளையும், அழுகைகளையும் உவகைகளையும் பார்த்த படி ஊர் நடுவே உயர்ந்து நிற்கும் ஒரு பேராலமரம் போலும் அவர் அந்த மண்ணின் விழுமிய சாட்சியாக இருக்கிறார். அவரது படைப்புகள் அவற்றை வழிமொழிந்து நிற்கின்றன.

வன்னி மண்ணின் அமைதிக் காலங்களில் அதன் எழிலையும் அதன் தனித்துவத்தையும் செவ்வனே அவர் பதிவு செய்திருக்கிறார்.  அதே மாதிரி வன்னி மண் போர்களைச் சந்தித்த போர் காலங்களின் போதும்; பின்னர்  இடம்பெயர்ந்து, சரண் புகுந்த, வடதமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த போதும்; போராளிகளின் பாசறையாக; இலங்கை, இந்திய இராணுவம் புகுந்துவிட முடியாத பேரரனாக, அது விளங்கிய போதும்;  அதன் முகத்தையும் சமூகத்திற்கு அவர் தன் எழுத்துக்களால் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

பின்னர் அவலங்கள் நிகழ்ந்த போதும், இழம்புகள் சம்பவித்த போதும் தோல்விகளைக் கண்டபோதும் மண் கொண்ட மாற்றங்கள் அவர் கதைகளில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. இடம்பெயர்ந்த போது இடப்பெயர்வின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறார். புலம்பெயர்ந்த பிறகு புலத்தின் தன்மைகளையும் அவர்  பதிவு செய்திருக்கிறார்.  சுமைகளில் இருந்து உயிர்வாசம் வரையான அவரது படைப்புகள் அதற்குச் சாட்சி.

இந்த சந்தர்ப்பத்தில் காட்டாறு எழுதிய செங்கையாழியானையும் நிலக்கிளி எழுதிய பால மனோகரனையும் ஒரு தடவை நினைத்துக் கொள்கிறேன். தாமரைச் செல்வியின் முதலாவது நாவலான சுமைகளோடு வைத்தெண்ணத்தக்க அவை வன்னியின் வாழ்வை பிரதிநிதித்துவப் படுத்துவன. வன்னியைத் தமிழ் இலக்கியப் பரப்பில் தத்ரூபமாக தூக்கி நிறுத்தியவை அவை!

தாமரைச் செல்வி என்பவர் தனி ஒருவரல்ல; அவர்  வன்னிக்கான இலக்கியப் பிரதிநிதி. வ.ஐ.ச. ஜெயபாலன் 1968ல் எழுதிய கவிதை ஒன்றில் வன்னியை இப்படிப் பதிவு செய்வார். ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் வெளிவந்த அக் கவிதை, இவ்வாறு நகர்கிறது. 

’துணைபிரிந்த குயில் ஒன்றின் 

சோகம் போல; 

மெல்லக் கசிகிறது 

ஆற்று வெள்ளம். 

காற்றாடும் நாணலிடை 

மூச்சுத் திணறி 

முக்குளிக்கும் வரால் மீன்கள். 

ஒரு கோடைகாலத்து மாலைப் பொழுது அது! 


என்னருகே 

வெம்மணலில் 

ஆலம்பழக் கோதும் 

ஐந்தாறு சிறு வித்தும் 

காய்ந்து கிடக்கக் காண்கிறேன். 

என்றாலும் 

எங்கோ வெகு தொலைவில் 

இனிய குரல் எடுத்து 

மாரிதனைப் பாடுகிறான் 

வன்னிச் சிறான் ஒருவன்.’ 

என்று அந்தக் கவிதை வன்னியின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பாடும். அந்த நம்பிக்கையாக – மாரிதனைப் பாடிய வன்னிச் சிறானாக - 70 களில் வன்னி இலக்கியத்திற்குக் கிடைத்தவர் தாமரைச் செல்வி.

தாமரைச்செல்வி தந்தவைகள் கதைகள் தான் என்ற போதும், அதன் கருவில் எப்போதும் ஒட்டிநிற்பவை உண்மைகள்; மண்வாசம் மாறா மெய்மைகள். பொய்யான ஒன்றை அவர் ஒருபோதும் புனையவில்லை. புகழுக்காகவும், பிரபலத்திற்காகவும், பாராட்டுக்களுக்காகவும் அவர் கதைகள் ஒருபோதும் மண்டியிட்டதில்லை. சலுகைகள் அவர் பேனாவைச் சரியச் செய்ததில்லை. புகழ் அவரைப் போதை கொள்ளச் செய்ததில்லை. எப்போதும் சமூகப் பொறுப்போடும் மண்மீதான நேசிப்போடும், ஆத்மார்த்தமான உண்மையோடும் ஒருவித அமைதியோடும் நிதானத்தோடும் பயணிப்பவை அவரது கதைகள்: அவரும் தான்.

வன்னி என்ற பெரும் பரப்பின் ஆத்துமமும் தாமரைச் செல்வியின் ஆத்துமமும் ஒன்று கலக்கும் இடமும் அது தான். அவர் ஒரு காலகட்டத்து வன்னியின் ‘காலம்’.

ஒரு தடவை, அவரோடு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் ‘ உங்கள் கதைகளில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிகளில் பல தசாப்தங்களாகக் குடியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்து போகிறார்கள். ஏன் நீங்கள் அவர்களை உங்கள் கதைகளுக்குப் பிரதான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை? அது ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கிறதே! என்று கேட்டபோது, அதற்கு அவர், ’அது உண்மை தான்; இந்த விடயம் பரந்த அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று. அவர்களுடய வாழ்வும் வலிகளும் பத்திரமாகவும் பவித்திரத்தோடும் கையாளப்பட வேண்டியவை. எனக்கு அவர்களின் மலையக வாழ்வு பற்றியும் இங்கு இடம் பெயர்ந்ததன் பின்னணி பற்றியும் அதிகம் தெரியாது. தெரியாததை என்னால் சொல்லமுடியாது; சொல்லக் கூடாது. ஆனால் அவர்கள் என் கதைகளில் எப்போதும் ’அவர்களாகவே’ வந்துபோவார்கள்’;என்றார்.

அது தான் தாமரைச் செல்வி.

அகத்தியரின் பிள்ளையார் தட்டி விட்ட கமண்டலத்தில் இருந்து பெருகிய காவேரியாக அவரது பேனா மை வன்னியை செழுமைப்படுத்தி, மகிமைப் படுத்தியிருக்கிறது. வயல் நீளத்திற்கும் நீண்டு செல்லும் காலத்தின் நீட்சியில்; அந்த எழுத்தின் பாதையில்; அவர் வன்னியின் ’காலத்தைச்’ சுமந்தபடி ‘வன்னியாச்சியாக’  நடந்து சென்றிருக்கிறார். 

அந்த நடமாட்டம் தென்பகுதிக்கு வந்து சரிந்த பூமியை நிமிர்த்திய அகத்தியரின் நடமாட்டம் போல்வது.

அவரைக் கொண்டாடுதல் என்பது வன்னியைக் கொண்டாடுதல். 


- யசோதா.பத்மநாதன். சிட்னி. 22.10.2023.

Thursday, September 22, 2022

பண்ணையில் ஒரு மிருகம் - நாவல் குறித்த பார்வை -



8.7.22 அன்று வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர், கவிஞர். பாஸ்கரன் அவர்களது இல்லத்தில் இலக்கியக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. கொரோனாக் கால இடர்களின் பின் சாஸ்வதமாக மேடை, பேச்சு, மைக்  என்ற ஆரவாரங்கள் இல்லாத கலந்துரையாடலில் சுமார் 10பேர் கலந்து கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் நடேசன் அவர்களும் அவர் மனைவியும் மெல்போர்னில் இருந்து வந்திருந்ததால் அவரின் ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல் அப்போது தான் பிறந்த குழந்தையாக ( மே 22 வெளிவந்திருக்கிறது) என் கைக்குக் கிட்டி இருந்தது. அது குறித்து கலந்துரையாடியதன் விரிவாக்கம் இது.

எச்சரிக்கை! பதிவு சற்று விரிந்தது!! 

 84 - 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல்.

இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது.

காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம், முன்னுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 130 பக்கங்களில் 10 அத்தியாயங்களாக விரிகிறது கதை.

கதையை நான் சொல்வது தகாது. அது என் நோக்கமும் அல்ல. அது வாசகர்களின் முன்மொழிவுகள் இல்லாத பார்வைக்கும் ரசனைக்கும் அனுபவிப்புக்கும் உரியது. இருந்த போதும்,  கண்ணுக்குப் புலனாகாமல் உலவி வரும் ‘சமூகமிருகம்’ ஒன்று பற்றியது இந்த ’பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற இந் நாவல் என்று சொல்வது தவறாகா. ஆனால் நிச்சயமாக நான் இந்தக் கதைப்போக்குப் பற்றியும்  அதனை அவர் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்றும் பேசுதல் தகும். 

அதனை மூன்று பிரதான உப தலைப்பில் பார்ப்பது நான் விடயத்தை விட்டு விலகிச் செல்லாதிருக்க உதவும் என்பதால் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன்.

1. அவர் கதையை நகர்த்திப் போகிற பாணி.

2. அதில் எடுத்தாளப்பட்டிருக்கிற ஒரு சூட்சுமத்தளம்.

3. வரலாற்றுப் புள்ளி.

1, கதைப்பாணி:

மழைக்கால இரவொன்றின் குளிர் காலக் கும்மிருட்டில் கைநிறைய மின்னி மின்னிப் பூச்சிகளை அள்ளி கைகளை விரித்தால் பறந்து செல்லும் காட்சியை; அதே கும்மிருட்டில் ஒரே ஒரு வாண வேடிக்கை வானில் மலர்ந்து கீழே கொட்டும் ஒரு காட்சியை; பார்க்கும் போது நம்மை அறியாமல் முகத்தில் இயல்பாக  மலரும் மந்தகாசமான புன்னகை போல கதை நிறையக் கொட்டிக் கிடக்கின்றன உவமைகள். அவை வலிந்து திணிக்கப்பட்ட வாடா மலர்களாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து மணம் வீசும் பூக்களின் புன்னகைகளை ஒத்திருக்கிறன. 

ஒரு குழந்தையின் சிரிப்புப் போல இயல்பாக மலரும் அவை கதையை உந்தித்தள்ளுவதில் பிரதான இடத்தை வகிக்கின்றன. பொதுவாக ஒரு இடத்தைச் சம்பவத்தை விபரிக்க எழுத்தும் சொற்களும் வகிக்க வேண்டிய இடத்தை இங்கு உவமைகளே எடுத்துக் கொண்டுவிட்டதால் ஆசிரியருக்கும் விபரிக்க வேண்டிய தேவை ஏற்படாது கதை முன்நகர்ந்து போய் விடுகிறது. ஒரு ரோச் லைட்டைப் போல ஆசிரியர் உவமைகளைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

அதில் வரும் சில உவமைகள் என்னைச் சங்ககாலத்தின் இலக்கிய அழகியலில் கொண்டு சென்று நிறுத்தின. உதாரணமாக ‘இருட்டில் தனித்தெரியும் குழல்விளக்கைப் போல புன்னகை’ என்கிறார் ஆசிரியர். அது 

‘மாக்கடல் நடுவண் எண்னாட் பக்கத்துப்

பசுவெண் திங்கள் தோன்றியாங்குக்

கதுபயல் விளங்கும் சிறுநுதல்’ (குறு 129) 

என்பதை நினைவூட்டிப் போகிறது. இருட்டில் தெரியும் 8 ம் பிறைபோல கருங்கூந்தலுக்கிடையே அவள் நெற்றி’ என்பது சங்கத்துக் கவிஞன் காட்டும் காட்சி.

நாவலில் ஓரிடத்தில் வயிற்றில் கத்தியால் குத்திய இரத்தக் காயம். அது மேலாடையில் ஊறி  ஆசிரியருக்கு சுதந்திரத்திற்கு முந்திய இந்திய வரை படம் போல இருக்கிறதாம். அது சங்ககாலத்தில் 

‘கலைநிறத்து அழுத்திக்

குருதியோடு பறித்த செங்கோல் வாளி 

மாறுகொண் டன்ன உண்கண்’ (குறு 272)

ஆகத் தெரிகிறது. மானின் மார்பிலே ஆழமாகத் தைக்கப்பட்ட அம்பை வெளியே இழுத்தால் அது எப்படி இரத்தம் தோய்ந்து அதன் முனைப்பகுதி காணப்படுமோ அதனை எடுத்துப் (பக்கம்பக்கமாக) மாறுபட வைத்தது மாதிரி அப்பெண்ணின் கண்கள் காணப்படுகின்றனவாம்.

இன்னோர் இடத்தில் ஒரு காட்சியை ஆசிரியர் விபரிக்கிறார். ஒருவர் ஆட்டினால் குத்துப்பட்டு சரிந்து கிடக்கிறார். ‘ பெரிய மரக்கதிரையில் தலை சாய்த்துக் கைகளைக் கிழே தொங்கவிட்டபடி மேவாய் நெஞ்சில் தொட ஏதோ மங்கலச் சடங்கிற்காக வெட்டியபின் அந்தச் சடங்கு தடைப்பட்டதால் வெட்டிப் பல நாட்களாக, வேலியில் சாய்த்து வைக்கப்பட்ட வாழையாக அந்தக் கதிரையில் அவர்...’ இந்தக்காட்சி மனதில் படமாக எழுந்த போது தவிர்க்கமுடியாமல் ஒரு கலித்தொகைக் காட்சி (10) நினைவுக்கு வந்தது. 

வாடி நிற்கும் மரத்தைக் கவிஞர் சொல்ல வருகிறார். ‘ இளமையில் வறுமை உள்ளவன் மாதிரி தளிர்கள் வாடி இருக்கிறது; கொடுக்கிறதுக்கு மனமில்லாதவர் போல அம்மரம் நிழல் குடுக்காமல் இருக்கிறது; தீங்கு செய்யிறவரின்ர இறுதிக்காலம் புகழ் இல்லாமல்; பார்க்கவும் யாரும் இல்லாமல் கெட்டுப் போன மாதிரி மரம் வெம்பி, வாடி, வதங்கிப் போயிருக்கு’ என்கிற அந்த கலித்தொகைக் காட்சியை நினைவு படுத்துகிறது எழுத்தாளரின் காட்சியமைப்பு.

இவ்வாறு அநேக காட்சிகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. எனினும் அவை அழகுக்காகச் சேர்க்கப்பட்டவையல்ல; அவை கதையை உந்தித் தள்ளும் எத்தனங்களாகப் பயன் பட்டுள்ளன. ஒரு வெட்டுக்கிளியைப் போல கதைகள் துள்ளித் துள்ளி முன்னகர இவைகள் உந்துகோலாகியுள்ளன. இங்குதான் கற்பனை வளமும் அழகியலும் கதையோடு பின்னிப்பிணைந்து வாசகருக்கு சுவையூட்டுகின்றன. அது ஓர் ஓய்வு நாளொன்றில் ஓய்வான மனநிலையோடு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து சுவையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பியோடு  புத்தகம் வாசிக்கும் சுகம் போன்றது. கடனில்லாத ஒரு பெரு வாழ்வு போல; நோயில்லாதிருக்கும் ஒரு உடல்வாகு போல சுகம் தருவது.

இலக்கியம் ஒன்றின் அழகு கதை மட்டும் அல்ல; கதையை ஆசிரியர் நகர்த்திச் செல்லும் அழகு, பாணி, நுட்பம், தமிழை - மொழியை எடுத்தாளும் இலாவகம் ... அவை சிறப்பாக அமைந்து அவைகளில் உங்கள் மனம் இலயித்து ஈடுபடுமானால் அது தானே இலக்கிய சுகம்! வாசிப்புச் சுவை. இல்லையா? இங்கும் வாசிப்புச் சுவைக்கு பஞ்சமிருக்கவில்லை. 

’எதிர்பாராத போது யாரோ முகத்தில் கொதிநீரை நேரெதிரில் நின்று எற்றியது போல வார்த்தைகள் சுட்டன’,’நெருப்புப் பற்றிய வீட்டில் இருந்து வெளியேறும் அவசரம் மனதுக்குள்’, ’சேர்க்கஸ் புலி வனத்துக்குச் சென்றது மாதிரி’, ’நாடியும் நாளமும் பக்கம் பக்கமாக இருந்தாலும் பிரிந்து இருப்பது போல’, ’சிங்கம் ஒன்று தன் இரையைப் பங்கு போட மறுத்து மற்றய சிங்கத்தைப் பார்த்து உறுமுவது போல குறட்டை’, ’போரில் களைத்து இளைப்பாறும் யானைகளைப் போல குடிசைகள்’, ’சூரியன் நிலத்துக்கருகில் வந்து குளித்த குழந்தையின் தலை ஈரத்தைத் துவட்டும் தாயாக ஈரத்தை ஒத்தி எடுத்திருந்தது’, (மழைக்காட்சி ஒன்று) ’வானத்திலே தீபாவளி; (இடியும் மின்னலும்) அது அசுரர்களும் அரக்கர்களும் பூமியில் வந்து ஆடிக்குதித்துக் கொண்டாடுவது போல இருந்தது’, ’எடையைக் குறைக்க அளவாகச் சாப்பிடுவது மாதிரி பேச்சுவார்த்தை’, ’நீர் அள்ளாத கிணற்றில் கிடக்கும் பாசியாக நினைவுகள்’..... இவை நான் ரசித்த சில உதாரணங்கள். இவைகள் எல்லாம் வாசகருக்கு நல்லதொரு இலக்கியத்தரம் வாய்ந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது. தமிழ் மெல்ல புன்னகைக்கிறது. அது ஒரு வசீகரமான இலக்கியப் புன்முறுவல்.

ஆனால் இந்த அழகியலை அவர் ஏன் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை. அவர் பாணியில் சொல்வதானால் கரும்பின் சுவை மேலே மேலே போகப்போகக் குறைவதைப் போல கதையிலும் போகப்போக இந்த ’மின்மினிப்பூச்சிகளும்’ மறைந்து போய் விட்டன. ’இருள்’ சூழ்ந்து விட்டது.

2. சூட்சுமத்தளம்:

இந் நாவலைப் பின்ன ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்ட இன்னொரு உத்தி இந்தச் சூட்சுமத்தளம். இது ஒரு ஆழமான நோக்கிற்குரியது என்பது என் அனுமானம். இது குறித்த ஆழமான பார்வையும் அறிவும் எனக்கில்லை. இருந்த போதும், என் இனிய தோழி கீதா.மதிவாணன் மொழிபெயர்த்த ‘நிலாக்காலக் கதைகள்’ என்ற யப்பானிய 18ம் நூற்றாண்டுப் படைப்பாளி யுடா அஹினாரியை அறிந்த பின் யப்பானிய தத்துவார்த்தங்கள், அவர்களின் சிந்தனை மரபுகள், யென் மற்றும் சூஃபி தத்துவங்கள் பற்றிய மேலோட்டமான பார்வை கிடைத்தபின் பெற்ற விழிப்பு இந்த சூட்சுமத்தளம் பற்றிய என் பார்வை சிறிதளவேனும் விரியக் காரணமாயிற்று. 

தமிழ் மரபு அறங்களைக் கொண்டாடி இருக்கிறது.  ‘அவரவர் கருமமே’ கட்டளைக் கல்’ என்பது குறள் காட்டும் அறவழி. சீன,யப்பானிய அராபிய தத்துவார்த்தங்கள் பூவுலக வாழ்வோடு மட்டும் தம் சிந்தனையை நிறுத்துவனவல்ல. அவை இறப்புக்குப் பின்னாலும் ஆய்வை மேற்கொள்வன. இந்திய தத்துவ ஞானம் போல் அறக்கருத்துக்களைத் தோறணங்களாக அவை தொங்கப் போடுவனவல்ல. மாறாக அவை சமூக ஒழுங்குகளைப் புரட்டிப் போட்டு நம்மை சிந்திக்கத் தூண்டுவன. அதற்கு அவர்களும் 18ம் நூற்றாண்டு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து எழுத்தாளர்களும் கையாண்ட ஒரு யுக்தி தான் இந்த மஜிக் றியாலிசம், மாந்திரிக யதார்த்தம், மற்றும் மாய யதார்த்தம் என அழைக்கப்படுவன என்றறிகிறேன். 

இங்கு பாத்திரங்கள் இறந்த பின்னும் பேசும்; கனவுகளில் வழிகாட்டுதல்களை வழங்கும்; அதற்கும் இதற்கும் ஒத்தனவாக காட்சிகள் காணக்கிடைக்கும், கனவின் தொடர்ச்சியாக நனவுலகில் நிகழ்வுகள் நடக்கும். அவ்வப்போது அந்த உலகுக்கும் இந்த உலகுக்குமான காட்சிப்புலங்கள் ஒன்றுகலந்து விட்டிருக்கும். யுடா அஹினாரி அது போன்றவர். யப்பானிய படைப்பாளிகளால் பெரிதும் மதிக்கப்படுபவர். 

அது மாதிரி முல்லாவையும் காணலாம். பலரும் நினைப்பது மாதிரி அவர் இந்திய தென்னாலிராமன் மாதிரி விகடகவி அல்லர். அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் சமூக ஒழுங்குகளைக் குழப்பிப் போடுதலின் வழியாக மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர். இவ்வாறான சூஃபிகளை ‘இதயத்தின் ஒற்றர்கள்’ என்றும் ‘மனதின் இயக்கத்தை வேவு பார்ப்பவர்கள்’ என்றும் அறியப்படுகிறார்கள்.அவரின் கதை ஒன்று இப்படியாக வரும்.

‘அனுபூதி மரபுகளைஅறிந்துவர போய் வந்தார் முல்லா. வந்தபின் என்ன அறிந்துகொண்டீர்கள் என்று கேட்டனர் சீடர்கள். ‘கரட்’ என்று சொல்லிவிட்டு மெளனமானார் முல்லா. அதனைக் கொஞ்சம் விரித்துச் சொல்லுங்களேன் என்றனர் சீடர்கள். ‘கரட்டின் பயனுள்ள பாகம் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளது.வெளியே தெரியும் பச்சை இலைதழைகளைப் பார்த்து அதனடியில் ஒரேஞ் நிற கிழங்கு இருப்பதை அனுமானிக்க முடியாதிருக்கிறது. அதே நேரம் உரிய நேரத்தில் கிழங்கை வெளியே எடுக்காவிட்டால் அது மோசமடைந்தும் போய் விடும். அதோட அந்தக் கரட்டோட தொடர்புடைய பல கழுதைகளும் இருக்கின்றன’ என்றார் முல்லா. ( என்றார் முல்லா; முல்லா.நஸ்ருதீன் கதைகள், தமிழில் சஃபி, பக் 231)

இந்த அமானுஷ்யங்களும் கரட்டைப் போன்றவை தான். எழுத்தாளக் கமக்காரர்  பேனாவால் கிண்டிக் கிண்டி கரட்களை பிடுங்கிப் போடுகிறார்கள். மரவெள்ளிக் கிழங்கோடு போராடும் நமக்கு கரட்கள் புதிய பார்வைகளை நல்குகின்றன. புதிய பார்வைப் புலங்களும் நவீன காட்சிகளும் அந்த அமானுஷ்ய கண்ணாடி வழியே புலப்படுகின்றன. தமிழ் சூட்சுமத்தளத்தில் ஏறி நிற்கிறது. அது ஒரு புதிய குன்றம். அதிலிருந்து பார்க்கக் கிடைக்கும் தமிழ் / தமிழகப் பண்ணைப் பரப்பும் வெளியும்  சற்று வித்தியாசமானது. புதியது. அதனை ஆசிரியர் மிகுந்த எச்சரிக்கையோடு ஒரு சத்திரசிகிச்சை நிபுணரின் கைத்திறத்தோடு குன்றத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.

முன்னுரையில் சிவகாமி எடுத்துக் காட்டும் புத்தர் பிறக்குமுன் நிகழ்ந்தவை, யேசுவின் வருகைக்கு முன் நிகழ்ந்தவை, முகம்மது நபிக்கு கப்ரியேல் உரைத்தவை எல்லாமும் கூட அமானுஷம் சார்ந்தவையே. உலக இலக்கியங்களும் சமய புத்தகங்களும் அவற்றைக் கொண்டாடி வந்திருக்கின்றன. இந்துசமயப் புராணங்களிலும் நரகாசுரர்களையும் தேவர்களையும் காண்கிறோம். 

ஆனால் இந்த உத்திகளை உலக இலக்கியங்கள் போல தமிழ் இலக்கியங்கள் அதிகம் கொண்டாடவில்லை என்றே நம்புகிறேன். இறந்தோர், மூதாதையர், பேய், பிசாசுகள் என்பன நடமாடும் கதைகளை நாம் வாய்மொழியாகவும் ஆங்காங்கே சில கதைகளாகவும் கண்டறிந்திருந்தாலும் அவை வாழ்வு முழுமைக்கும் நம்மைத் தொடர்வனவல்ல. அவை வாழ்வை கொண்டு நடத்துவனவல்ல. வாழ்வு முழுமைக்கும் நீடித்து வருவனவல்ல. அமானுஷ்யங்களை தமிழ் உலகு வரவேற்பதுமில்லை. அவர்கள் கடவுள்களாகக் காவல் தெய்வங்களாக, குலதெய்வங்களாக உருமாறி விடுவார்கள். ’எல்லைகளை’ அவர்கள் தாண்டுவதில்லை. இதைத் தாண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ அவர்களுக்குத் தமிழில் இல்லை.

இங்கு தான் இந்த நாவல் ஒரு வேலை செய்திருக்கிறது. அந்த உலக பாணியை நம்முடய அறசிந்தனையோடும் கர்மவிதியோடும் பொருத்தி இந்தக்கதையை இந் நாவலில் ஆசிரியர் பின்ன முயன்றிருக்கிறார். இந் நாவலில் வரும் அமானுஷ்ய சக்திகளுக்கான நியாயங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்  ‘அறவழியில்’ ஈட்டிக் கொடுக்கிறார் ஆசிரியர். அவை பல்வேறு நிகழ்வுகளின் வழி நிரூபிக்கப்படுகிறது. இந்துக் கடவுளர் ஆயுதங்களோடும் அவரவர் வாகனங்களோடும் நின்று “பயமுறுத்துவது” மாதிரி ஒரு மெய்மை மீதான நாட்டத்துக்கு, மனிதாபிமானம் மீதான நியாயத்துக்கு, தர்மம், அறம் என நாம் நினைக்கும் கோட்பாடுகளுக்குள் நின்று நியாயமான தீர்ப்புகளை இந்த சூட்சுமத்தளம் ஈட்டிக் கொடுக்கிறது.

இது அநிய்யாயங்கள் செய்பவருக்குக் கொடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆங்காங்கே நின்று ’ஐயனாராக’ கத்தியைக் காட்டுகிறது.

அதில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தான். இந்த அமானுஷ்யங்கள் வெகு இயல்பாக கதையோடு இணைந்து போகின்றன.  இந்த இலக்கியப் போக்கு இயல்பாக அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அதை அவரே ஓரிடத்தில் சொல்வதைப் போல ‘மாய யதார்த்தம்’உண்மைக்கும் கற்பனைக்குமிடையே ஒரு இடைவெளியற்ற தன்மையை ஏற்படுத்தி தன்மை நிலையில் எழுதி இருப்பது வெற்றிக்கு அணுக்கமாக அவரைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது.

வாழ்க்கைத் தத்துவங்களோடு இந்தக் கதை அநாயாசமாக விளையாடுகிறது. 

3. வரலாற்றுப் பெறுமானம்

பல விதங்களில் இக்கதைக்கு ஒரு வரலாற்றுப் பெறுமானம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதிலொன்று இந்த ஆசிரியர் இலங்கையர் என்பது. ஒரு மூன்றாம் நபரின் பார்வையாக இந்தக்கதை தமிழகக் கிராமம் ஒன்றை விமர்சனம் செய்கிறது. நேற்றயதினம் 8.7.22 நடந்த ஆசிரியருடனான புத்தகக் கலந்துரையாடலின் போது சொன்ன ஒரு விடயத்தையும் இங்கு சேர்த்துக் கொள்ளல் பொருத்தமாக இருக்கும். ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு,  ’எங்கள் சமூகத்தின் மீது இந் நாவல் காறித் துப்பி இருக்கிறது’ என்று விமர்சித்திருந்தார் என்று தெரிவித்தார். அது சற்றுக் காட்டமான விமர்சனமாக இருந்த போதும்  கண்ணியமாக தன் அபிப்பிராயத்தை ஒரு கணவானின் சொல்லைப் போல முன்வைத்திருக்கிறது இந் நாவல் என்று  சொல்வேன். 

இன்னொன்று ஆசிரியரே தன் உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இப்போது இந்தக் கிராமங்கள் இல்லாது போய் விட்டன. அந்த விவசாயப் பண்ணை நிலங்கள் மீது இன்று கட்டிடங்கள் முளைத்துவிட்டன. விவசாயக்கூலிகள் கட்டிடத் தொழிலாளர்களாக உரு மாற்றமடைந்து விட்டார்கள். வாழ்க்கை குலைத்துப் போடப்பட்டு விட்டது. வாழ்க்கைமுறைகள் வளர்ச்சி என்ற பெயரில் மாற்றமடைந்து விட்டன. 

ஆனாலும் கட்டமைப்பு மாறவில்லை; காலம் மாறினும் கருத்தமைப்பு மாறவில்லை. அந்த ’மிருகம்’ வேறொரு உருக் கொண்டு விட்டது; தொடர்ந்து சூரனைப் போல, நர அசுரனைப் போல மீண்டும் மீண்டும் புத்துருக் கொண்டு வாழ்கிறது.

 யாரேனும் எவரேனும் பழங்காலக் கட்டமைப்பு ஒன்று எப்படி இருந்தது என்பதை ஒரு மூன்றாம் நபராக நின்று பார்க்க விரும்பினால் இந் நாவல் அவர்களுக்கு ஒரு பார்வையைத் தரும். ஒரு view point கிடைக்கும்.

மற்றயது உலக இலக்கிய உத்தி ஒன்றை நம் பாரம்பரிய, பழக்கப்பட்ட அதே சிந்தனைகளின் வழியாக ’உரத்த எச்சரிக்கைக்கு’ பயன்படுத்தியது.

இந்த மூன்று அம்சங்களின் வழியாக இந் நாவல் கவனம் பெறுகிறது என்பது என் அபிப்பிராயம். வெளிப்படையாக, நேரடியாக இக்கதை புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும் உயர்ந்த உலகத் தரத்தில் இந் நாவலை எடைபோட / புரிந்துகொள்ள; உலகசிந்தனை மரபுகள் பற்றிய சிந்தனைப் புரிவை வேண்டி நிற்கிறது இந் நாவல் என்பதையும் சொல்லக் கடமைப்பாடொன்றுளது.

தமிழின் ஆழ இலக்கிய அழகியலிலும் சிந்தனை மரபிலும் வேரூன்றி, சமகால சமூக வாழ்வியல் களத்தில் கால்பரப்பி, அன்னிய இலக்கியபாணி ஒன்றைப் பின்பற்றி, கண்ணியமாக மூன்றாம் கண்ணாக நின்று ஒரு தமிழகக் கிராமம் ஒன்றை கண்முன்னே விரிக்கிறது இந் நாவல்.

தமிழுக்குக் கிடைத்த புதிய சிந்தனைப் புரிவு இது எனினும் தகும்.

( 9.7.22 அன்று எழுதி இன்று 22.9.22 இங்கு பிரசுரமாகிறது ) 


Tuesday, March 16, 2021

இன்றய மொழிபெயர்ப்புச் சூழலில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புகள்

அண்மையில் சமஸ்கிருதக் கவி காளிதாசரை படிக்கவேண்டும் என்றொரு விபரீத ஆசை ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டது. 

முன் ஒரு தடவை தனிநாயகம் அடிகளாரைப் படித்த போது அவர் சொல்லி இருந்த சாகுந்தலத்தின் ஒரு இடம் மறக்கவொண்ணாததாக அடிமனதில் அமர்ந்திருந்ததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். அது என்னவென்றால், சகுந்தலை தன் தந்தையாரைப் பிரிந்து போகிற காட்சி. அதனை விபரிக்க ஒரு உவமையை காளிதாசர் சொல்கிறார். மலபார்கரைகளில் (மலையாளக் கரைகளில் ) செழித்து நிற்கிற சந்தன மரத்தினைப் பற்றிப் படர்ந்திருக்கிற கொடியை அந்த மரத்தில் இருந்து பிரிப்பதைப் போல சகுந்தலை தந்தையை விட்டுப் பிரிந்து போகிறாளாம். 

இது காளிதாசர் உவமை வழி சொல்லும் அழகியல் சார்ந்த புலமை அழகு. இந்தப் புலவனின் அழகே இந்த உவமைகள் தானே! அதனைப் புரிந்து கொள்ளாத மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்  தன் புலமையைக் காட்டும் படியாக அதிலிருக்கிற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தன் கவிதைகளின் வழியாக நமக்குக் கதை சொல்லிக் கொண்டு போகிற ஒரு மொழிபெயர்ப்பை வாசித்தேன். மேலுமொருவரின் மொழிபெயர்ப்போ எனில் ‘சந்தன மரத்தில் இருந்து அதன் பட்டையை உரிப்பதைப் போல சகுந்தலை தந்தையைப் பிரிந்து போகிறாளாம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருந்தது. 

இன்னும் எனக்கு மூலமொழியில் காளிதாசர் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றே தெரியவில்லை......

உண்மையில் ஒருவருடய ஆக்கத்தை மொழிபெயர்க்க முயல்பவர்கள் முதலில் நல்ல ரசிகர்களாக இருக்க வேண்டும். இரண்டாவது அப் படைப்பின் முக்கியத்துவத்தையும், அதன் அழகியலையும், சொல்ல வரும் கருத்தையும் அது எழுந்த கால பண்பாட்டு வாழ்க்கைச் சூழலையும் உள்வாங்கி இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் காலமெடுத்து அதனை அசை போட வேண்டும். அசைபோடுதல் என்று நான் சொல்வதன் தாற்பரியம் என்னவென்றால், அது எழுந்த பண்பாட்டு அரசியல் பொருளாதார சூழலை மட்டுமன்றி அந்த ஆசிரியனைப் பற்றியும்  படிக்க வேண்டும். அறிதல் வேண்டும். அந்தப் படைப்பின் ஆத்மாவைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான்  இரண்டு மொழிகளின் மீதான புலமை அவசியப்படும். 

மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய ஒரு செயல். முடிந்தால் மாத்திரமே செய்ய வேண்டிய ஒன்றும் கூட.  இதனைச் செய்வதால் யாருக்கு அல்லது எதற்கு என்னவிதமான பயன் அல்லது பலன் என்பதை நமக்கு நாமே ஒருதடவை கேள்வி கேட்டு நம்மை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மொழிபெயர்ப்பதற்கான தகுதிப்பாடு நமக்கு இருக்கிறதா என்பதையும் அதன் வழியே  ஒரு தடவை நமக்கு நாமே  உறுதிப்படுத்திக்  கொள்ளுதல் அவசியம்.

‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ புத்தகத்தை மொழிபெயர்த்த கண. முத்தையாவை ஒரு தடவை நினைத்துக் கொள்ளுகிறேன். ‘தன்னை அறியும் விஞ்ஞானம்’ புத்தகத்தை மொழிபெயர்த்த கே. ராமசுப்பிரமணியம் என்பாரை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் அதனை ஒரு தொண்டாக; சமூக பற்றுறுதியோடும் பொறுப்புணர்வோடும் ஒரு வித பக்தியோடும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் தார்ப்பரியத்தையும் அறிந்தவர்களாக அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு தவத்தைப் போல தமிழையும் மூல மொழிச் சிந்தனையையும்  வளம்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இன்றய காலங்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நேரடியாக ஒரு ஆக்கத்தைப் பார்த்துவிட்டு, அதனை அப்படியே மொழியாக்கம் செய்ய முனைகிறார்கள். ஆகையினால் அது உயிரற்ற உடலைப் போல ஆகி விடுகிறது. 

ஆகையினால், மொழிபெயர்ப்புகள் குறித்தும்; யார் அதனை மொழிபெயர்க்கிறார்கள் என்பது குறித்தும்; நாம் ஒரு சிறந்ததும் தெளிவானதுமான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம்.  இல்லையெனில் அது விபரீதமாகப் போய் விடும் ஆபத்து அதில் அதிகம் உண்டு. அது மூல மொழிக்கு நாம் செய்யும் மொழித்துரோகமெனினும் மிகையில்லை.

இந்த ஒரு அவதானச் சூழலில் இருந்து கொண்டுதான், மொழிபெயர்ப்புகளுக்குள் நுழைவது பாதுகாப்பானது. இப்போது விரிந்துகிடக்கிற பரவலான சகலருக்குமான வாய்ப்புச் சூழல்கள் எல்லோரையும் படைப்பாளியாக்கி விடுகிறது; பணமிருந்தால் புகழையும் பிரபலத்தையும் கூட அது கொடுத்து விடுகிறது. நண்பர்களைப் பலவாறாகப் அது பெருக வைக்கிறது. இலகுவாக சமூக வலைத்தளங்கள் அவைகளை ஊதிப் பெருப்பித்து வீங்கச் செய்து இன்னொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டும் சென்று விடுகிறது....

இப்போதைய ’வலை சூழ்’  வாழ்க்கைச் சூழல் அவ்வாறானது. ஆகையால் கவனமாய் ‘நடந்து செல்லுதல்’ அவசியம்.

அது நிற்க,

கடந்த சில மாதங்களின் முன் கனலி என்றொரு சிறந்த இணையப் பத்திரிகையில் கீழ்வரும் இந்த கீதா மதிவாணனின்  மொழிபெயர்ப்புக் கவிதையைப் படித்தேன்.


என் படகு பெரிதாய் எதிலோ மோதியுடைந்து 

ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்ட உணர்வு


ஆனால் எதுவும் நடக்கவில்லை

எதுவுமில்லை... நிசப்தம்... அலைகள்...


எதுவும் நடக்கவில்லையா?

அல்லது எல்லாமே நடந்து முடிந்துவிட்டதா?

இப்போது நாம் அமைதியாய் நின்றிருப்பது

அடுத்த பிறவியிலா?


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் என்பாரின் ( 1881 - 1958 ) இந்தக் கவிதையை ஆங்கில வழியில் இருந்து தமிழுக்கு ’கனலி’ யூடாக எடுத்து வந்த கீதாவின் கவிதை அது.  

( இதனைக் காண இங்கே கனலி அழுத்துங்கள் )

இந்தக் கவிதை வாழ்வுக்கும் இறப்புக்குமான ஓர் உயிரின் இடமாற்றத்தை ( Transformation ) எளிமையாக அறிவிக்கிறது என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.  

( இது போன்றதான கருவை கொண்டதான ஓர் அவுஸ்திரேலிய சிறுகதை ‘ A long wait' இனை கடந்த வருடம் SBS வானொலி மொழிபெயர்த்து ஒலிபரப்பாக்கியது. அதனை சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள் மொழிபெயர்த்து, தன் குரலில், புலமையோடு தருவதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி கேட்கலாம். A long wait  இவைகள் எல்லாம் ஒரு இறப்பின் போதான உயிரின் இடமாற்றத்தை சிந்திக்கும் செயல் நுட்பங்கள். )

ஆனால் அண்மையில் கீதாவின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வேறு சில புது கதைகளைப் பார்த்த பின்னால் மொழிபெயர்ப்புலகில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் இக் கவிதை கச்சிதமாகப் பொருந்திப் போவது போல தோன்றுகிறது.

மிக இலகுவாகவும் எளிமையாகவும் வியக்கத்தக்க வகையிலும் நடந்து முடிந்து விடுகிறது அந்த லாவகம் மிக்க transformation. 

அவரின் மொழிபெயர்ப்பு கதைகளையோ கவிதைகளையோ படித்து முடித்து விட்ட பின்னால் இரண்டு விடயங்கள் மனதில் கூடாரம் போட்டு தங்கியும் தேங்கியும் விடுகின்றன. லாவகமாக அதே நேரம் ஒரு வித எளிமையோடும் ஒரு செயலைச் செய்து முடித்து விட்ட கைவண்ணம் என்பது ஒன்று. மற்றயது தெரிவு செய்த பொருளும் அது வெளிப்படுத்தும் காட்சிப் படிமமும் என்பது மற்றொன்று.

கனலியில் வெளி வந்திருக்கும் கீதாவின் மற்றொரு மொழிபெயர்ப்புக் கவிதை இது.

’ஒரு றோஜாவைப் போல 

ஒவ்வொரு இதழாய் பிய்த்தேன் உன்னை

உள்ளிருக்கும் உன் ஆண்மாவைக் கண்ணுற

என்னால் அதைப் பார்க்கவே இயலவில்லை.


ஆனாலும் சூழ்பரப்பு யாவிலும் எங்கெங்கும்

நிலத்தின் கடலின் நீள்எல்லை வரையிலும்

ஏன் அந்த முடிவிலியிலும் கூட வியாபகம் கொண்டிருந்தது

அளப்பரியதும் உயிர்ப்புமான ஒரு பரிமளம்’


இப்படியாகத் தான் இறுதியாக ஒரு ’பரிமளம்’ அவரின் கைவண்ணத்தில் பிரகாசிக்கிறது. நிஜமாகவே!

கடுமையான வித்துவச் சொற்களைக் கையாளாமலே மிக நேர்த்தியாகவும் நளினமாகவும் அதே நேரம் வசீகரமாகவும் மொழியைக் கையாளும் கலை கைவரப் பெற்றவர் கீதா. உதாரணமாக ‘மேக்வாரியின் நண்பன்’ என்றொரு கதை. மதுச்சாலை உரையாடல்களைக் கொண்டமைந்த, நட்பின் உயர்வை பேசும் அற்புதமான ஒரு கதை. அதில் ஒரு காட்சி விரிகிறது.  ஒரு குடிகாரன் மேசையருகில் வந்து நிற்பதை விபரிக்கும் இடம் அது. ‘.....அந்த மகா மோசமான ஜென்மம் தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் அமைதி காத்தான். அவனது கைகள் மேசையின் விளிம்பை இறுக்கிப் பிடித்திருந்தன. விறைப்பாய் நின்ற கைகளுக்கிடையே தலை தொங்க, அழுக்குத் தரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  பிறகு தலையை நிமிர்த்தி மெல்லிய குரலில் பேசினான்....’ (பக் 147)

சண்டைக்குத் தயாராகும் அந்தக் குடிகார நண்பனை விபரிக்கும் இடம் இது. ‘.......அவன் கடையின் பின்புறம் சென்று, கையிலிருந்த கண்ணாடிக் குவளையை வீசி எறிந்தான். தொப்பியைத் தூக்கி எறிந்தான். கால்சராயை இடுப்புவாரில் இறுக்கிப் பிடித்தான். அது கணுக்காலுக்கு மேலே துக்கிக் கொண்டு நின்றது. மேற்சட்டையின் கைகளை மடித்து விட்டான்......’ (பக். 151)

ஓர் ஆரம்ப கால அவுஸ்திரேலிய ஆங்கில மொழியிலமைந்த ஒரு கதையாடலை; அதன் காட்சிப் படிமங்களை மிக எளிய தமிழில், புரியும் படியான கொச்சையற்ற அழகு மொழியில் பிடித்துவரும் லாவகமும்,காட்சி விபரிப்பும் ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை எடுத்து வரும் ஆற்றலும்  கீதாவின் மிகப்பெரிய பலம். 

புதர் காடு, ஓடைக்கரை, மது விடுதி,ரோமக்கத்தரிப்பு நிலையம், தனிமைத் தருணங்கள், போக்கிரிப்பயல், அரைமனம், சகாயவிலை,கொட்டகை, விலவண்டி, தீவனப் பயிர்.... இவ்வாறாக பெருகி வரும் சொற்களுக்கான மூல மொழியாடல் என்னவிதமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதனை தமிழுக்கு மடைதிருப்ப எத்தனை பிரயத்தனங்களை அவர் மேற்கொண்டிருக்கக் கூடும்? எனினும் எத்தனை அநாயாசமாக அதனை இலகு தமிழுக்கு திருப்பி விடுகிறார் என்பது ஆச்சரியம்.

கீதாவின் மொழிபெயர்ப்பினூடாக ஹென்றியை அறிய முயல்கின்ற போது அவருடய பெரும்பாலான கதைகள் ஒரு மனித சுபாவத்தை ஒரு காட்சிப் பின்னணியில் மிகத் துல்லியமாக எடுத்துரைப்பனவாக அமைகின்றன. புறத்தோற்றத்தினாலன்றி கதாபாத்திரங்கள்  அவர்களின் அன்றாட குண இயல்புகள் வழியாகவே ஹென்றியால் கட்டமைக்கப்படுகிறார்கள். உன்னிப்பாக மனித சுபாவத்தை கவனித்து, தன் கதையில் இயல்பாக நடமாட விடும் ஹென்றியின் உச்சபட்ச திறமை கீதாவின் கைவண்ணத்திலும் சிதைவின்றி வந்திருக்கிறது.  பிறைட்டனின் மைத்துணி, பொறுப்பிலி, மேக்வாரியின் நண்பன், ஆசிரியர் செய்த பிழை, சமையல்காரரின் நாய், அவள் பேசவில்லை, ஒற்றைச்சக்கரவண்டி, சீனத்தவனின் ஆவி, மந்தை ஓட்டியின் மனைவி போன்ற கதைகள் ஒவ்வொரு மனிதர்களையும் துல்லியமான காட்சிப்புனைவுகளாக மனித உருவங்களுக்கு அவரவர் தனித்துவமான குணங்களூடாக உயிர் கொடுத்த பாத்திர வார்ப்புகளாக நம் கண்முன்னே உலா வருகிறார்கள். அவர்கள் வேறு மொழி பண்பாட்டு சிந்தனைச் சூழலில் இருப்பவர்களாக இருக்கின்ற போதும்.....அது மொழியை லாவகமாகக் கையாளத்தெரிந்ததால் வந்த விளைவென்றே எனக்குத் தோன்றுகிறது.

 ஹென்றியின் இந்த ஆழுமைப் புலத்தை நன்கு விளங்கிக் கொண்டவராக கீதாவும் இருந்திருக்கிறார் என்பதுவும் அதன் பலத்தை; சிறப்பை தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு அதனை அவர் ரசித்து, விதந்து தன் அநாயாசமான மொழிவீச்சின் வழியாக அந்த குணங்கள் நிரம்பிய உருவங்களை எம் கண்முன்னே உலவ விடுகிறார் என்பதும் கீதாவின் மொழிபெயர்ப்புகளை நாமும் ரசிக்க  இன்னொரு முக்கிய காரணம்.. அது ஒரு பொறுப்புணர்வின் பாற்பட்டது. மூல ஆசிரியனுக்கும் கொடுக்கும் உயர்வான மரியாதை அது!

கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுப்பை படித்த நாளில் இருந்து நான் அவரின் மீது மதிப்பு கொண்ட ரசிகையாகி விட்டேன். அதற்கு அவரது இந்த பொறுப்பு மிக்கதான குண இயல்பே முக்கிய காரணம். 

குணம் என்று இங்கே நான் முக்கியமாகச் சொல்ல வருவது என்னவென்றால் மொழிமீது அவர் கொண்டிருக்கிற விசுவாசம்; மூல படைப்பாளியின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றுறுதியும் ஒருவிதமான விசுவாசம் கலந்த அன்பும் பொறுப்புணர்வும், அதனை தமிழுக்கு தர அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கு அவர் கொடுக்கும் நேரமும் உழைப்பும். ஓர் ஆலயம் தன் பிரசாதத்தை பக்தர்களுக்குக் கொடுப்பதைப் போல ஒருவித பவித்திர உனர்வோடு அதனை தமிழ் இலக்கிய உலகில் அவர் சமர்ப்பிக்கும் அந்தப் பாங்கு....

‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பில் மேலும் சில புதிய சிறுகதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. அத்தனையும் முத்து முத்தான சிறுகதைகள். ஆரம்ப கால அவுஸ்திரேலியர்களின் வாழ்வை; பாடுகளை; உணர்வுச் சித்திரங்களாக்கி ஹென்றி லோஷன் உலவவிட; அதற்கு எந்தவிதமான பாதிப்பும் நேர்ந்து விடாதவாறு பக்குவமாக அதனை அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அதனைத் தமிழுக்குத் தந்து தமிழுக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கீதா.

இருந்த போதும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பை முதற்பதிப்பில் வந்த அதே அளவு கதைகளோடு தந்து விட்டு,  இன்னுமொரு மொழிபெயர்ப்புத் தொகுதியை இதில் பிரத்தியேகமாக இனைக்கப்பட்டுள்ள 7 கதைகளோடு, மேலும் சில கதைகளையும் மொழிபெயர்த்து இன்னொரு புத்தகமாகத் தந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற புத்தகத் தலைப்பு ஹென்றி லோஷனின் ஒரு சிறுகதையின் தலைப்பாக இருந்திருக்கிறது. அதனால்  கீதா அந்தத் தலைப்பை இந்தப் புத்தகத்துக்கு வைத்திருக்கக் கூடும். ஆனால், அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் மொழிபெயர்ப்புகள் என்பதை இந்தத் தலைப்பு எந்த விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; ஹென்றி லொஷன் சிறுகதைகள் என்று அடைப்புக் குறிக்குள் அது இடம்பெற்றிருக்கிற போதும்.... மாறாக, ஹென்றி லோஷன் சிறுகதைகள்  என்று பொதுவாகத் தலைப்பிட்டிருந்தால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

இருந்த போதும், ஹென்றிலோஷனையும் ஆரம்பகாலகட்ட அவுஸ்திரேலிய வாழ்வியலை நமக்கு மிக இலகுவாக அறியத்தந்தமைக்கும் கீதாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதை விட, என் ஆத்மார்த்தமான நன்றியறிதலைச் சொல்லவே நான் பெரிதும் பிரியப்படுகிறேன்.

ஏனென்றால் அவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கு அதன் ஆரம்பகால பங்களிப்பாளராக தன் கடமையை செவ்வனே செய்து நிலையாக தன் இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். 

அவரிடம் இருந்து மேன்மேலும் பல அவுஸ்திரேலிய இலக்கியப் படைப்பாளிகளின் இலக்கியச் செல்வங்கள் அவரின் வழியாகத் தமிழை அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை.

இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன்னர் ‘கனலி’ இணையப் பத்திரிகையில் அவரால் மொழிபெயர்க்கப் பட்ட இந்தக் கவிதையோடு விடைபெறுதல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

( முழு நிலவு வானை வியாபித்து, ஒளியால் பரிபாலித்த படி, பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் குளிர்மை மிக்க திவ்ய ஒளி உலகை ஒளியால் குளிப்பாட்டுகிறது. அதனை ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் தன்மொழியில் தர, அதை கீதா தமிழுக்குத் தருகிறார், இப்படியாக....)


கதவு திறந்திருக்கிறது

சில்வண்டு ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது

நீ நிர்வாணமாகத்தான் வலம் வரப் போகிறாயா 

அவ் வயல்களினூடே?


அழிவில்லாத நீர் போல

எல்லாவற்றினுள்ளும் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாய்

நீ நிர்வானமாகத் தான் திரியப் போகிறாயா 

அக் காற்றினில்?


துளசிச் செடி தூங்கவில்லை

எறும்பு சுறுசுறுப்பாய் இயங்குகிறது

நீ நிர்வானமாகத்தான் உலவப் போகிறாயா

வீட்டில்?

Friday, October 2, 2020

குமிழி - புத்தகப் பார்வை - பொதுசன கண் வழியே...

 


குமிழி - ஈழத்தின் விடுதலை இயக்க (புளொட்) உள்ளக முரண்பாடுகளின் / தோல்வியின் அடிப்படைக் கூறுகளை உள்ளே நின்றபடி சாட்சிப்படிமமாக முன்வைக்கும் ஓர் இலக்கிய வடிவம்.

நாவலுக்குள்ளோ ஆவணத்துக்குள்ளோ சுயசரிதைக்குள்ளோ அகப்பட்டுக் கொள்ளாத ஓரு நளின வார்ப்பு.

அட்டைப்படமும் வடிவமைப்பும் கச்சிதமாய் கோலி வைத்திருக்கிறது அதன் உள்ளடக்கத்தை. குறிப்பாக அட்டையை விரித்து பெரிதாக்கும் போது விரியும் தோற்றம் கனம் ஒன்றை கொண்டிருப்பதை காட்சியாக விரிக்கிறது.

அது கொண்டிருக்கும் உள்ளடக்கம் ஓர் உள்காயம்; ஏமாற்றத்தின் கதை; உள்வலி; ஊமைக்காயம்; போராட்டத்தின் இரத்தவாடை; உள்குலைவு; ஓர் இளம் தமிழ் போராளியின் இலட்சியக் கனவு சிதைக்கப்பட்டதன் சின்னாபின்னக் கூறுகள் சிதறிக்கிடக்கும் இடம்; அதே நேரம் நமக்கே நமக்கான பாடங்களை கற்கக் கூடிய அரிச்சுவடியும் ஆகும்.

மேலும், மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட  இளம் போராளியின் உள்மனக் காயம் ஒன்று இறுதியில் ஈழத்தமிழ் மக்களின் உள்காயமாக பரவி விரியும் ஆற்றலின் பிரவாஹம் இது எனிலும் தகும்.

ஓர் இனத்தின் பாரத்தைத் தூக்கிய தோள்கள் - அதன் பாரத்தை சமூகத்தின் மடியில் இருத்தி இருக்கிறது.

அது ஒரு தோல்வியின் சுமை.

’பிணக் கனம்.’

இது இவ்வாறிருக்க,

இதில் நான் முக்கியமாகக் காண்பது புத்தகம் முன்வைக்கும் சமூகம் மீதான ஒரு விமர்சனம்.’ எங்கட சனம் விடுதலை அடையிறதுக்குத் தகுதி இல்லாத சனம். நாங்கள் உள்ளுக்குள்ள காட்டுமிராண்டித்தனத்தோட தான் இருந்திருக்கிறம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிக்கிட்டு உள்ளுக்க இருந்தவன் , பக்கத்தில நிண்டவன், எதிர்த்து நிண்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளுற கூட்டம். இந்தக் கேட்டுக்க எங்களுக்கு விடுதலை கேக்குது.’

இந்த ’சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம்’ என்பதை இயக்கத்தின் உள்ளேயே ரவி காண்கிறார். 

1. தளத்திற்கும் பின் தளத்திற்கும் இடையே; மற்றும் பயிற்சிமுகாமில் காணப்பட்ட / பேணப்பட்ட அரசியல் சித்தாந்த - நடைமுறை இடைவெளி. (அண்ணன் - தோழர், உணவு,உடைப் பாவனை; அதிகார துஸ்பிரயோகம்; சுயநலப் பேணுகை, உயிர்கள் மீதான எதோச்சதிகாரம்... இன்னபிற..) 

குறிப்பாக வாழைப்பழ பகிர்வு பற்றிய சம்பவம் சமூகத்தை ருசிபார்க்க ஏதுவாயிருந்த அச்சொட்டான உதாரணம். - சமூகத்தின் அங்கத்தவர்களாக அங்கிருந்து உள்ளே வந்தவர்களிடம் காணப்பட்ட இத்தகைய இயல்புகள் எவ்வாறு இயக்கத்தின் போக்கை வழிநடத்திற்று என்பதை புத்தகம் சிறப்பாகப் பேசுகிறது.

2. மக்களுக்கும் இயக்கத்துக்கும் இடையே இருந்த வேறுபட்ட நம்பிக்கைப் பேணுகை.( மக்கள் ஒருநாள் இவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டு ஈழத்தை வென்றெடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையும்  போராளிகளிடம் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதிருந்த வெற்றிடமும்.)

3. தலைமைத்துவத்திடம் இருந்த அறிவு, தூரநோக்கு, ஞான  வெற்றிடம். பண்பற்ற எள்ளல்கள்...

4.பயிற்சிக்கே போதுமான ஆயுதங்கள் காட்டப்படாதிருந்த போதாமை அல்லது இல்லாமை.அல்லது நிரப்பப் படாமை. கேள்வி கேட்க முடியாத இராணுவ சித்தாந்த சிந்தனையும் அதிகார மேலாண்மையும்.

5.வெளிப்படைத் தன்மையும் உண்மையும் அற்றிருந்த; மரணபயம் பின்னிய சுயகம்பிச்சிறை வாழ்வு. மெளனிக்கப்பட்ட சொற்கள் உள்ளடக்கப்பட்ட மனம் கொண்டிருக்கும் அகத்தீ. வாழ்வோடு அடிக்கடி கேட்கும் காணும் நண்பர்களின் மரண ஓலங்களும் மரணங்களும் அவைகளோடு உள்ளேயே  வாழ நேர்ந்த சாபமும்.

6.சாதி, பெண்ணியம் என்பன கையாளப்பட்ட முறைகள்.

7. இயற்கையின் இயல்பான காமத்தை எப்படியாக இளைஞர்கள் கையாண்டார்கள்; காதலை எப்படி மூடிப் புதைத்தார்கள் என்பது குறித்தவை. சின்னச் சின்ன ஆசைகள், தேவைகள் கூட நிறைவேற்றப்படாமை.

8.தன் இனப்போராளியைத் தன் இனமே கொல்லும்  கொலைகளைக் காணும்; கேட்கும் மனநிலைக்கும் பகிரப்பட முடியாதிருக்கும் ; கேள்வி கேட்க முடியாதிருக்கும் இராணுவ சட்டங்களுக்கும் இடையே அல்லாடும் சக போராளியின் உள்மன உழைச்சல்களும் பாரங்களும் குற்ற உணர்வுகளும்.

9. பீதியோடு நம்பிக்கை ஒன்று அவநம்பிக்கையாகி அருகிலிருப்பவரையே நம்ப முடியாது போன அவலம்.

10. மூடுண்ட மெளனம்

என இவ்வாறாக அது பயணிக்கிறது. இவற்றினை ஒத்த பெரும்பாலான சாராம்சங்களை நாம் மூடுண்ட எனக்குத் தெரிந்த நம் வட ஈழ சமூகத்துக்குள்ளும் காணலாம். இன்றும் கூட. 

இவைகள் எல்லாவற்றையும் அவர், ‘அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோஸலிச விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை; வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கெதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக் கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்’ என்ற வரிகளால் நிறுவுகிறார்.

ஒரு போராளியின் உள்காயம் ஒன்று இறுதியாக தமிழ் மக்களின் உள்காயமாக எப்படி பரிமாணம் பெற்றது என்பதை உள்பக்கமாக நின்று சொல்ல விளைகிறது ஆவண அடிப்படை கொண்ட இப் புத்தகம். எனினும் ஆங்காங்கே பிரச்சார நெடிகளும் சுய கருத்துத் திணிப்புகளும் அதிகமாகிப் போகும் தன் பக்க வாதங்களும் அதன் இயல்பான ஓட்டத்தை; மக்கள் தாமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு  தடையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது.

அது சொல்லும் கருத்துகளுக்கு அப்பால் அவற்றைச் சொல்லும் பாணியில் அது கொண்டிருக்கும் வர்ணனைகள் மிக வசீகரமானவை. உடல் களைப்பின் மேல் கோழித்தூக்கம் ஏறிநின்றது என்ற போதிலும் சரி; அவனை இருத்தி வைத்து ஊகங்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; டாக்குத்தனின் மருத்துவம் கஸ்ரோவின் நோயோடு பகிடி விட்டுக் கொண்டிருந்தது என்ற போதிலும் சரி; இருள் நிலத்தில் ஓர் உயிர்குமிழியாய் முகாம் பூத்திருந்தது அதற்குள் வெக்கை இளைப்பாறிக்கொண்டிருக்கும் அது உடற்களைப்பை வருடி விடுவது போலிருக்கும் என்ற போதிலும் சரி; அவன் புன்னகையைக் கோபத்தால் கொன்று போட்டிருந்தான் என்பதிலும் சரி; கையிலிருந்த ரோச் லைட்டில் இருந்து ஒளியைக் கற்றையாக உதறி முற்றத்தில் வீசிவிட்டார். பூக்கள், காய்கள், கனிகள் என தக்காளி, வெண்டி, கத்தரி, மிளகாய் செடி எல்லாம் ஒரு பூந்தோட்டத்தின் அமைவாக தமது குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; மகிழ்ச்சி அவனை உலுப்பி உலுப்பி கதை கேட்டது என்ற போதிலும் சரி; இருளை கடல் இழுத்து போர்த்தி இருந்தது என்ற போதிலும் சரி; கடற்கரை மணலில் எனது பாதங்கள் வேர்களுடன் பரவின என்ற போதிலும் சரி; அந்தச் சொற்கள் என் அப்பாவித்தனத்தின் மீதோ அல்லது அவன் மீதான என் நம்பிக்கையின் மீதோ கூடுகட்டி அமர்ந்திருந்தன என்ற போதிலும் சரி; இலக்கியச் சுவை ஆங்காங்கே ஏறி உட்கார்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனின் விகடமில்லா புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்வதை நிச்சயம் இலக்கிய ரசிகர்கள் வாசித்து இன்புறுவர். வாசிக்க வாசிக்க திகட்டாத அச் சொல்லோவியங்கள் ஆங்காங்கே புத்தகத்துக்கு  கசப்பு மருந்தை மூடி வைத்திருக்கும் இனிப்பாக உதவுகிறது. கவிதைகள் கொஞ்சிக்கொஞ்சி கதைகேட்கும் இடங்கள் அவை.

வேப்ப மரம் ஒன்று நம்பிக்கையின் சாயலாய் தோன்றி வெட்டி வீழ்த்தப்பட்ட  மரக்கட்டையாகக் காணும் அவ நம்பிக்கையில் - நிராசையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனநிலையையும் போராளிக் கண்களிடையே கண்டு தெளிகிறோம். அது ஒரு நல்ல உதாரண பிம்பமாக ஆங்காங்கே தலை சிலுப்பி தன் இருப்பை நிலைநிறுத்துகிறது.

தமிழக மக்கள் கொடுத்த ஆதரவு, புகலிடம், முன்னுரிமை, வைத்திருந்த மரியாதை, விருந்தோம்பல், உயர்ந்த எண்ணம் என்பன நெஞ்சை நெகிழ வைப்பன. போராளி இளஞர்களும் அதற்கேற்ப நடந்து கொண்டார்கள் என்பது நெஞ்சை நிறைக்கிறது. மனம் பெருமிதத்தில் பொங்குகிறது.

ஆங்காங்கே இளைஞர்களுக்குள் நடைபெறும் நகைச்சுவைகளோவெனில்  மனசை இலகுபடுத்த வல்ல வீரியம் கொண்டவை. காட்சி வர்ணனைகளும் நகைச்சுவைகளும் அபூர்வமாக இந்த கோட்பாடு, சித்தாந்தம், அரசியல் போன்றவற்றுக்கும் பொருந்திப் போகிறது என்பது அதிசயம். கவிதாம்சமும் தமிழும் சமயோசிதத்தோடு ஆங்காங்கே  லாவண்யமாய் புத்தகம் மீது நடைபோடுகிறன.

இருந்த போதும், உண்மைகள் முரண்டு பிடித்துக் கொண்டு முன் நிற்பதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லாவண்யங்கள் விலகி ஓடி விடுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். உண்மைக்கு அத்தகைய வீரியம் உண்டு. அது எதற்குள்ளும் மறந்தும் மறைந்து விடுவதில்லை. மேலும் இது நம்மவர் கதை. இரத்தமும் சதையும் உயிரும் மனமும் கொண்ட போராளிகளின் வாழ்வா சாவா என்பது பற்றிய; உண்மை கொண்டெழுதிய திகில் சித்திரம். இங்கு ரசிக்க ஏது அவகாசம்? நின்று பார்க்க ஏது திராணி? நிதானிக்க ஏது நேரம்? எல்லோரும் தப்பினார்களா என்பதே தேடலாக மனம் எங்கும் அவர்களே வியாபித்திருக்கையில்....

இதுவரை பெரும்பாலான பொது சனங்களால் அறியப்படாத செய்தி ஒன்றை; உடலின் உள்பக்கம் ஒன்றை; சத்திர சிகிச்சை மேடையில் வைத்து நம் நோய்வாய்ப் பட்ட உடலை நமக்குத் திறந்து காட்டி இருக்கிறது இந்தப் புத்தகம்.  மேலும், அது ஈழத்தமிழ் சமூகத்துக்காக இதுவரை தூக்கிச் சுமந்த பாரங்களை எல்லாம் சமூகத்தின் மடியில் இறக்கி வைத்து இளைப்பாறுகிறது. 

இறுதியாக ஆசிரியர் ரவி யின் தமிழில் சொல்வதாக இருந்தால் ’அலைகொண்ட கடலை உள்ளுக்குள் விழுங்கி இருந்த உயிர் ஒன்று, அதற்குள் மூழ்கடித்திருந்த சொற்களைக் கோர்த்து, அந்த மந்திரக்கயிறைப் பிடித்த படி சுயகம்பிச் சிறைக்குள் இருந்து தன் உடலுக்குள் திரும்பிய கதை இது’.

போராளி அன்ப,

இனியேனும் நீ இளைப்பாறுவாயாக; பாரம் சுமந்தது போதும்; பஞ்சுபோல் பாரமற்று இனி நீ இருப்பாயாக!!

வரலாறு அதனைச் சுமந்து, எதிர்காலம் ’படிக்கக்’ கொடுக்கட்டும்!

📎

இந்தப் புத்தகத்தை எனக்கு அன்பளித்த நீண்டகால சினேகிதி; சகோதரி பாமதிக்கு நன்றி. என் புத்தகத் தட்டில் காத்திரமான கனம் ஒன்று தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

Tuesday, November 26, 2019

தாமரைச் செல்வியின் ‘உயிர்வாசம்’ - முன்னுரை

     
     

ஒரு புது வெளிச்சம்

காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.
வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி.

அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

முன்னர் சொன்னது போல் அகதிகளாக அல்லலுறும் அப்பாவிகளின் அவலங்கள், அழகியல், ஆச்சரியங்கள், அனுபவங்களை கலைத்துவத்தோடு ஓர் இனத்தின் வாழ்க்கைக் கோலமாக வெளிக்கொணரும் இதன் நிதர்சனமான காட்சிக்கோலங்கள் தாயகத் தமிழனுக்கும் புலம்பெயர்ந்த தமிழனுக்கும் இடையே இருக்கும் காலதேச சிந்தனையின் இடைவெளியையும் நுட்பமாகப் பதிவு செய்கிறது.

உயிர்வாசம் - நானறிந்தவரை அவுஸ்திரேலியாவுக்கு வந்த படகு மனிதர்களை  மையப்படுத்தி வெளிவரும் முதல் நாவல். அந்தவகையில் இது அவுஸ்திரேலிய தமிழர் வரலாற்றின் பெரு ஆவணமுமாகும்.

 தேர்ந்த; சுமார் 46 வருடங்களுக்கு மேலான; அனுபவமுள்ள, கதை சொல்லியான; இலங்கையின் சாகித்திய விருது பெற்ற தாமரைச் செல்வி தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். எழுத்தாளர்கள் எங்கு போனாலும் இடறும் கருக்களைச் சேகரிக்கும் ’தொல்லியல் ஆய்வாளர்களுமாவார்’. உண்மை என்னும் உளியால் மனிதாபிமானக் கல்லில் செதுக்கிய சிற்பமாக இந்த உயிர் வாசம் முகிழ, தாமரைச் செல்வி கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதும் ஒரு முக்கிய காரணம். அதன் விளைவாக பலதையும் பாடுகளையும் நேரே கண்ட; சொன்ன, கேட்ட, அறிந்த சம்பவங்கள், அனுபவங்கள் பல வருடங்களாகக் கருக்கொண்டு இங்கே உயிர்வாசமாக ஜனித்திருக்கிறது என்பதை அதில் வரும் மிகைப்படுத்தல்கள் இல்லாத ‘உண்மைகள்’ உணர்த்துகின்றன.

இதில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரம் நாம் நிச்சயம் சந்தித்த ஒருவராக இருக்கும்.

அந்த வகையில் இது ஒரு பிரதான அவுஸ்திரேலியத் தமிழர் வரலாற்றுக் காலகட்டத்துக்கும் மிக முக்கியமான கலைச் செல்வம்.

போரினால் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியத் தமிழரின் இறுதி அலை 2009ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்தது. இறுதிப் போர் அவலங்கள் நிகழ்ந்ததன் பின்பான இக்காலம் இதற்கு முன்பான அவலங்களில் இருந்து வேறுபட்டதும் தனித்துவமானதுமாகும். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவர்களை உலகமும் அரசுகளும் மக்களும் பார்க்கும் பார்வைகள் பல்வேறு விதங்களில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன. அவை கதை மாந்தரில் நிகழ்த்தும் செல்வாக்கினை நாவலின் அடிப்படை வாசமாக எங்கும் நுகரலாம்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கூட இது ஒரு முக்கியமான காலகட்டம். அதனை கூட நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. அவுஸ்திரேலிய மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்
2. அவுஸ்திரேலியத் தமிழரின் நோக்கு நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்
3. அவுஸ்திரேலிய அரசியலில் அகதிகள் பற்றிய கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்

இவைகள் மூன்றும் ஒன்றை ஒன்று சந்திக்கிற ஒரு முக்கியமான ஜலசந்தியில் இக்கதை முகிழ்கிறது. திரள்கிறது. ஒரு புறம் அகதிகளும் மறுபுறம் அவுஸ்திரேலிய அரசும் நிகழ்த்தும் இந்த பாற்கடல் கடைதலில் வந்த அமுதமென இந் நாவல் திரண்டிருக்கிறது.

2009 க்குப் பிற்பான காலப்பகுதியில் ஈழத்தவரைப் போலவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அகதிகளாக அலை அலையாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வந்திறங்கினார்கள். அப்போது ஆட்சியில் இருந்த  தொழில்கட்சியினால் அவர்களுடய வருகையினையும் அதனால் எழுந்த உள்நாட்டு அழுத்தங்களையும் சமாளிக்க முடியவில்லை. பொதுவாக வரிசையாக நின்று சகலதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றும் மக்களால் இந்த அலை அலையான வருகையின் அழுத்தங்களை எதிர்கொள்ள இயலவில்லை.

 பல வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையூடாக தம்மைப் பதிந்து விட்டு இடைத்தங்கல் நாடுகளில் காத்திருக்கும் அகதிகள் மீண்டும் பின் தள்ளப்படுவதையும் ’வரிசையை இடித்துக்’ கொண்டு இடையில் வந்து நிற்கும் இந்த அகதிகளின் விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப் படுவதையும் இம் மக்களால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்களின் அபிப்பிராயங்கள் செல்வாக்குச் செலுத்தும்  இந்த ஜனநாயக ஆட்சி நிலவும் நாட்டில் அப்போது இருந்த தொழில்கட்சியை இறக்கி  லிபரல் கட்சி தன் ஆட்சியை அமைக்கும் வகையில் இந்த அகதிகள் பிரச்சினை வலுவாக மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 2013 செப்.7 இல் நடந்த தேர்தலில் இதனைக் காரணம் காட்டியே ரொனி அபேர்ட் ஆட்சிக்கு வந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை பல மனித நேய அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வழக்குகளைப் பதிவு செய்தும் வந்தாலும் இன்றுவரை லிபரல் ஆட்சியே நிலவுகிறது என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

சுனாமியின் போது இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த மக்கள்; சர்க்கஸ்சின் போது விலங்குகள் துன்புறுத்தப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக வெளிநடப்புச் செய்து சர்க்கஸ் கம்பனியை தன் சொந்த நாட்டுக்கே அனுப்பிவிடச் செய்த பள்ளிச் சிறார்களைக் கொண்ட தேசம்; தியனமென் சதுக்கத்தில் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது, இங்கு படித்துக் கொண்டிருந்த அனைத்து சீன மாணவர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமையை மறுநாளே வழங்கிய அரசாங்கம்; வியற்னாமிய அகதிகள் படகு மூலம் வந்த போது கைகொடுத்து தூக்கி விட்ட அரசு இன்று படகில் வந்த அகதிகள் தொடர்பில் ஈரமின்றி இருப்பதன் பின்னணி இது தான்.

சட்ட விரோதமாக உள்ளே வந்தார்கள் என்பதும்; உயிர்பாதுகாப்பின்றி பொருளாதார சுபீட்சமே நோக்கம் என நம்பவைக்கப்பட்டதும்; அவர்களின் பராமரிப்புச் செலவுக்கு ஒதுக்கப்படும் பணம், நாட்டின் பொருளாதாரத்தில் கனிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதும்; நாட்டின் தேசியபாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் அதனோடு இணைந்து வந்த காரணங்களாகிப் போயின. அதனால் தான் அகதிகளுக்கு அவுஸ்திரேலியா அபயம் அளிக்க வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பின் போது 75%மான மக்கள் ஆம் என்றும்; படகு அகதிகளை ஏற்கவேண்டுமா என்ற கேள்விக்கு மூன்றில் ஒருவர் மட்டும் ஆம் என்றும் பதிலளித்திருந்தனர்.

இது இவ்வாறு இருக்க, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களது மனநிலை எப்படியாக இருக்கிறது என்பதும் அவதானிக்க வேண்டிய ஒன்றுதான்.

அவுஸ்திரேலியப் பெரும்பாண்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்கள் ஏனைய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களை விட சற்றே வேறுபட்டிருப்பதற்கு இரண்டு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. சீதோஷனம் மற்றும் ஆங்கில மொழி பாவனை –இதனால் இந் நாட்டைத் தெரிவு செய்து   இங்கு வந்தவர்கள்.
2. கல்வித்தகைமை வழி வந்தவர்கள்
3.பல தசாப்தங்களுக்கு முன்பே இங்கு வந்து ‘வேரூன்றி’ கல்வி தொழில் வாய்ப்புகளோடு ‘தக்கோன் எனத் திரி’பவர்கள்.

அவர்களால் இப் படகில் வந்த சமான்ய அகதிகளைச் சமனாக நடத்த முடியவில்லை என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டு. இருந்தாலும் மனித நேய அமைப்புகள் வழியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல தமிழர்கள் தம்மால் முடிந்ததை செய்தே வருகிறார்கள் என்பதை இந் நாவல் வழியாகவும் அறியலாம்.

இலங்கையர் என்ற எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களான புதிதாக வந்தவர்கள் கனவுகளோடும் கற்பனைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்து எவ்வாறாக இப்பெரு
தேசத்தின் மக்களதும், இங்குள்ள தமிழர்களதும், சட்டங்களதும், மனோபாவங்களோடு ‘உலகை’ எதிர்கொள்கிறார்கள் என்பதை ’இலங்கையர்’ மனநிலை வழி நின்று முன்வைக்கிறது நாவல்.

அந்த வகையில் இது ஈழத்துக்குரிய நாவலுமாகும்.

ஆகையால், ’இரட்டைக்குழந்தையாக’ ஈன்றெடுக்கப்பட்டு இன்று உங்கள் கையில் தவழும் இந் நாவல் ஒரு வரலாற்றுக் கனம் மிக்க வாழ்வைத் தாங்கி நிற்கிறது.

இந் நாவலை ஆறுதலாக வாசியுங்கள், ரசித்து, நின்று, நிதானித்து, உள்வாங்கி வாசியுங்கள்; நேரங்களை தெரிந்தெடுத்து வாசியுங்கள். வாசித்தவை கிரகிக்கப்பட கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது வரை  நாம் அறிந்திராத படகு வாழ்வும் முகாம் வாழ்வுமான வாழ்க்கைக் கோலங்கள் பல இங்கே பொதித்து வைக்கப்பட்டுள்ளன.  அவைகளை உள்வாங்குங்கள். ‘வாசனைகளை’ நுகருங்கள். அந்தக் கதை மாந்தர்களோடு நீங்களும் பயணியுங்கள்.

ஒரு விடயத்தை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்பது; எங்கள் எண்ணங்களில்; தீர்மானங்களில்; முடிவுகளில்; செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களையும் வலிமையையும் செல்வாக்கையும் செலுத்தும் என்பதும்: எதிர்காலத்தைப் புரட்டிப் போடும் ஒன்றாக ’அந்தப் பார்வை’ எத்தகைய வீரியத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உணரப்பட்டால்,
இந் நாவலை  வாசித்து முடிக்கும் போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக வெளியே வருவீர்கள் என்பதை நான் உறுதிபடக் கூறுவேன்.

மண்ணும் கடலும் வானும் வெளியும் கொண்ட ஒரு பெரும்பரப்பை உள்ளடக்கி, ஒரு காலகட்டத்து அகதித் தமிழனின் உண்மை வாழ்வைச் சுமந்து நிற்கும் ஒரு காலத்தின் பிரசவம் இந்த நாவல். அதே நேரம் மொழிவீச்சுகளுக்குள்ளும் சொல்லடுக்குகளுக்குள்ளும் மறைந்து போகாத எளிமை மிக்கதும் ஆகும். அது உங்களுக்குச் சுட்டிக் காட்ட இருக்கும் ’வெளிச்சப்புள்ளி’ தெளிவானது; வலுவானது; பிரகாசம் மிக்கது. பார்வையையும் பாதையையும் சீர் செய்யும் ஆற்றல் மிக்கது. அதுவே இந் நாவலின் பெரு வெற்றியுமாகும். அந்த வகையில் இதன் சமூகப்பணி மகத்தானது.

இனி நான் உங்களுக்கிடையே ஒரு ’கடவுச் சொல்லாக’ நிற்கவில்லை. எத்தனையோ இலக்கிய ஜம்பவான்கள் இருக்கிற இந்த தமிழ் இலக்கிய உலகில், ஓர் இலக்கியப் பிரியை என்ற ஒரு சிறு தகுதிப்பாடு தவிர்ந்த, வேறெந்த ஆற்றலும் இல்லாத என்னை, தன் நாவலுக்கான அபிப்பிராயத்தைத் தரும் படி கேட்டு, ஒரு சாதாரண ரசிகையை பெருமைப்படுத்திய தாமரைச் செல்விக்கு ஆத்மார்த்தமான என் வணக்கங்களையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் ’காலச் சிற்பியின்’ நேர்மையான எழுத்து காலத்தைக் கடந்தும் வரலாற்றைப் பேசும்; வரலாறும் பேசும்.

உயிர்வாசம் உங்கள் முன்னே விரிந்து மணம் பரப்புகிறது;

நுகர்க!


யசோதா.பத்மநாதன். – சிட்னி.
9.9.19.

Monday, November 11, 2019

ஆசி.கந்தராஜாவின் ’கள்ளக் கணக்கு’ குறித்து....


'ஒரு சிறுகதையில் இருந்து சிறுகதையைக் கழித்து விட்டால் எது மிஞ்சுகிறதோ அதைத் தான் வாசகன் ’வீட்டுக்கு’ எடுத்துச் செல்லுகிறான்’- இந்த சிறுகதை குறித்த அழகிய கூற்று, அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘கள்ளக்கணக்கு’ என்ற தலைப்பிடப்பட்ட எழுத்தாளர் ஆசி. கந்தராஜா அவர்களின் சிறுகதைத் தொகுதியில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதி இருந்தது.

முத்துலிங்கம் அவர்களுடய சிறுகதை ஒன்று ( ‘வேதாகமத்தின் முதல் பாவம்; 9.10.19 பக்: 50 - 59) அண்மையில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகி இருந்தது. உடனே மனம் இந்த சமன்பாட்டை அந்தக் கணக்குக்கு போட்டுப் பார்த்தது.

கச்சித விடை வந்து சேர்ந்தது.

விடை வருகிற போது வரும் குதூகலிப்பும் அது சார்ந்த சூழல் விரியும் போது புலப்படும் காட்சிக் கோலங்களும் எழுத்தாளனை தூக்கி நிறுத்திக் கொண்டாட தோன்றும். அது  வாசகன் அனுபவம் செய்யும் ஒரு வித எக்காளக் கிறுக்கு.

இந்தப் புரிதலோடு காலச்சுவடு பதிப்பகத்தாரால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட பேராசிரியர். ஆசி.கந்தராஜாவின் சிறுகதைகளுக்குள் ஒரு ஆறுதலான நாளொன்றில் புக முடிந்தது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் குறித்து பல்வேறு விதமான பார்வைகள் தமிழர் மத்தியில் உண்டு. 30 - 50 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியை புலம்பெயர்ந்தோர் கடத்தி விட்ட போதும்; மனதளவிலும் உணர்வுகளின் அடிப்படையிலும் அவர்கள் இன்னும் ஊரிழையில் இருந்து அறுபடாத வேரினைக் கொண்டிருப்பது என்பது ஒருபுறம் இருக்க, ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற பொது தலைப்பின் கீழ் ஒட்டுமொத்த புலம்பெயர்  இலக்கிய வெளிப்பாடுகளை ஆய்தல் என்பது எத்தனை பொருத்தப்பாடு உடையது என்பதும் கேள்விக்குரியது.

ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாடுகளும் தனக்கென தனியான சில பண்பாட்டு அலகுகளை கொண்டிருக்கிறன. புவியியல் அமைவிடம், தட்பவெப்பம்; மொழி, ஆட்சிமொழியுடனான ஊடாட்டம், பொருளாதாரம், தொழில், அரச ஆதரவு, மக்கள் மனோ பாவம், தமிழர்களின் இவற்றின் மீதான ஊடுருவல்; அவற்றைத் தம் வாழ்க்கைக்கு அமைவாக அமைத்துக் கொண்ட பாங்குகள் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபாடுடையன. அதன் பொருட்டு இனி நாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பொது தலைப்பின் கீழ் நம் இலக்கியங்களை வகைப்படுத்தலைத் தவிர்த்து, இனி அந் அந் நாட்டு தமிழர் இலக்கியமென வகைப்படுத்துதல் பொருத்தப்பாடுடயதாக இருக்கும் என்பது என் கணிப்பு.

கூடவே, இந்த அவுஸ். புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் தமிழக,மலேசிய, சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதும்; அவர்களின் பார்வைப்புலங்கள் தமக்குரியதான பண்பாட்டு வீரியத்தின் தனிப்பட்ட வீச்சுக்களைக் கொண்டிருக்கின்றன என்பதும்; அவைகளும் நுட்பமாகப் பார்த்து பதிவு செய்யப்பட வேண்டியவை என்பதும் முக்கியமானதாகும். இவைகளுள் தீர்க்கப்பட வேண்டி இருக்கும் சில நுட்பமான சிக்கல்களும் அடையாளம் காணப்பட வேண்டியவை. இவைகள் எல்லாம் - அதன் சாதக, பாதகங்கள் உட்பட - ’அவுஸ்திரேலிய புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற வகைப்பாட்டுக்கு தனித்துவமான இயல்பினை தர வல்லன.

ஆசி கந்தராஜாவின் எழுத்துக்களை அந்த வகையில் பார்க்கிற போது, அது பல்வகையான தனித்துவமான பக்கங்களை விரித்து வைக்கிறது. அவருடய பண்பாட்டுப் பின்னணி, கல்விப்புலமை, இந் நாடு அதற்குக் கொடுத்திருக்கிற இடம், அதன் வழி அவருக்கு விரிந்த உலகு, அதனைப் பார்க்கும் அவருக்கு மட்டுமே அமைந்ததான  ‘எழுத்தாளப் பார்வை’ - இவைகள் எடுத்துக் கொண்டு வரும் விடயங்கள் அவுஸ். தமிழுக்கு மட்டுமே உரியதானதாக விளங்கும் அதே வேளை உலகத்தமிழருக்கு புதிய ஒரு பார்வையை நல்குவனவாகவும் உள்ளன.

இதன் பாணி வேறு; பார்வை வேறு; சிந்தனைத்தளம் வேறு; இந்த மனித மூளை தனக்குள் பதித்து வைத்திருக்கிற புலமைப்புலம் வேறு. இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இந்த எழுத்தினை ஆழ்வோன் கண்டு பிடித்த கருவின் உரு வேறு.

இவருடய கதைகள் அவுஸ்திரேலியாவைப் பிரதான  தளமாகக் கொண்டிருப்பினும் அவருடய மனநிலை இலங்கையர் மனநிலை கொண்டது. கால்களை அவுஸ்திரேலியத் தளத்திலே ஊன்றி, மனதளவிலே ஈழத்தமிழ் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரு எழுத்தாள உள்ளம், தனக்குத் தொழில் வழி  பார்க்கக் கிட்டிய உலகப் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் கண்டுணர்ந்து அதனை நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து புனையப்பட்ட கதைகள் அவருடயவை. ஆங்காங்கே புன்னகைப்பன.

எனினும் அவை புன்னகை அல்ல; அது ஒரு சிறு கீற்றே. சிவந்த சீமேந்துத் தரையில் முத்துக்களைச் சிந்தி விட்டால் தெறித்தோடி நின்றபடி மெல்லியதாகப் பிரகாசிக்கும் உண்மையின் எழில் கொண்டது இக்கதைகள். அவைகள் கண்ணைப் பறிக்கும் நியோன் வெளிச்சங்கள் அல்ல; குத்துவிளக்கின் சுடர் கொண்டிருக்கும் ஒளிபோன்றது. அந்த சுடரின் ஒளியை அறிவினதும் உண்மையினதும் எழில் மிக்கது எனவும் மொழிபெயர்க்கலாம்.

அவைகளின் அடிச்சரடாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

முதலாவது கதை யப்பானை காட்டுகிறது; நாம் கற்பனையில் வைத்திருக்கிற ஜப்பானுக்கும் அவர் காட்டும் யப்பானுக்கும் இருக்கும் வேறுபாடு கற்பனைக்கும் நடைமுறைக்கும் இடையே இருக்கிற வேறுபாடு. இரண்டாம் கதை நம் ஊரில் நம் மன உலகில் நிகழ்கிறது. நம் இருப்பினையும் சிந்தனைகளையும் கேள்வி கேட்கிறது. மூன்றாம் கதை ஆபிரிக்காவில் நிகழ்கிறது. அவர்களுடய பண்பாடுகளையும் அதன் வழியான அவர்களுக்கே உரித்தான வாழ்வியல் நியாயங்களையும் தமிழ் பண்பாட்டின் முன்னே அப்பட்டமாகப் பரப்பி வைக்கிறது. அதிலிருக்கும் ஒரு மெல்லதிர்வு தமிழ் பண்பாட்டுக்கு புதிது. தமிழ்  பண்பாட்டின் காவலர்களை; சமூகத்தை மெல்ல யோசிக்கச் செய்யும் அது!

பாரசீகக் காதல் ஒன்றை உள்ளங்கையில் வைக்கும் மற்றய கதை காதலின் இன்னொரு பரிமானத்தை இஸ்லாமிய பண்பாட்டுப் பின்னணியில்; அது திறந்து விடப்பட்ட கலாசாரப் பின்னணியில் படும் தடுமாற்றத்தை முன் வைக்கிறது. லெபனான் / சிரியா சிறுவனின் அகதி வாழ்வு சொல்லும் மற்றய கதை உலகத்தின் இன்னொரு கோணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

விதி போடும் முடிச்சினை மெல்லக் கட்டவிழ்க்கும் இன்னொமொரு கதை நம் பண்பாடு சார்ந்திருக்கிறது. பண்பாட்டு அதிர்ச்சிகளும் வாழ்க்கை போடும் புதிர்களும் அதனைக்கட்டவிழ்க்கும் போது காணும் மனிதக்  கோலங்களும் என பயணித்தலின் வழி வாழ்க்கையின் சூட்சுமமான அர்த்தங்களை விளக்குகிறது.

அது போன்ற அமானுஷ தொடர்பியல் ஒன்றை மனித மிருக உறவு வழி சித்தரிக்கும் கதை அடுத்து வருவது. மனிதர்களோடு மட்டுமன்றி, மிருகங்கள் மற்றும் மரம் செடி கொடி இவைகளோடு ஊடாடும் ஒருவரால் கண்டறியத்தக்க அமானுஷ தொடர்பாடல் ஒன்றை இக்கதை விபரிக்கிறது.

இலங்கை இந்தியத் தமிழ் அடையாளங்களுக்குள் இருக்கும் ஒரு நுண்ணிய இடைவெளியை எடுத்துக் காட்டும் அடுத்த கதையைக் கடந்து போனால் வருவது ஒரு படிமக்கதை. ஷோஷலிச நாட்டு வாழ்வியலையும் அவைகளின் இயலாமைகளையும் சீன தேசத்து வாழ்வியல் ஒன்றின் மூலம் விளக்கியபடி நகரும் கதை அது. இந்த எழுத்தாளரிடம் இருக்கும் ஷோஷலிச சிந்தனைகளை அதனூடே நாம் ஊகிக்க முடிகிறது என்பது கதைகளை மீறி எழுத்தாளன் வெளித்தெரியும் ஒரு நுட்பமான இடமென அடையாளம் காண முடிகிறது. அடுத்ததாக வரும் கதை மனித மனங்களை விமர்சிக்கிறது. மனிதரின் மிருக பக்கம் ஒன்று எவ்வாறு தன்னை தோலுரிக்கிறது என்பதை அது வெளிப்படையாக முன்வைக்கிறது.

‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’ என்பதை உருக்கமாக முன்வைக்கும் கதை அடுத்து வருவது. சூட்சுமம் என்ற அதன் தலைப்பு வெகு கச்சிதம். ’காதலின் அடிப்படை வேதியல் மாற்றமே’ என்பதோடு முடிவுக்கு வருகிறது இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

வாசிக்க சுவாரிசமான இக்கதைகள் உலகப்பண்பாட்டினை தமிழ் கண்வழி விரித்துவைக்கிறது. அதில் அவுஸ்திரேலிய மண்ணின் பங்களிப்பை; அது கொடுத்த வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அந்த வகையில் இது அவுஸ்திரேலிய தமிழரின் தமிழ் இலக்கிய வகைக்கு உரித்தானதுமாகும்.

அந்த வகையில் தான் இவருடய ’கறுத்தக் கொழும்பான்’ என்ற புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன முன்னுரையில் ’எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் புன்னகையை இவரின் எழுத்துக்களிலும் காணமுடிகிறது’ என்ற கூற்றை முற்றாக மறுக்க முடிகிறது.

இது அதுவல்ல;

இது  சிவந்த பளிங்குத் தரையில் சிந்தி விடப்பட்ட உண்மை மிளிரும் அவுஸ்திரேலியத் தமிழ் முத்துக்கள்! 

Monday, February 9, 2015

கீதா. மதிவாணன் காட்டும் ஹென்றி லோஷன் -

அண்மையில் முல்லாவின் கதை ஒன்று வாசித்தேன். கதை இதுதான்.



முல்லா வாழ்ந்து வந்த தேசத்தின் மன்னருக்கு ஒரு கண் மட்டும் பார்வை தெரியும். ஒரு கை மணிக்கட்டும் அவருக்குக் கிடையாது. ஒரு காலும் முடமானவர். இருந்தும், சாமர்கண்ட் நகரத்தில் மயக்கும் அரண்மனைகளையும்; விண்ணை முட்டும் மாட மாளிகைகளையும்; அழகு மிகு கனவுத் தோட்டங்களையும்; ஆடம்பரமான வாசஸ்தலங்களையும் அம் மன்னர் ஸ்தாபித்தார்.

அம் மன்னருக்கு வரும் தலைமுறையினர் எல்லோரும் தான் யாரென்று தெரிந்து கொள்வதற்கு தனது சித்திரம் ஒன்றைத் தீட்டி வைக்க வேண்டுமென்ற தணியாத தாகம் இருந்தது.

காலத்தை வென்று தனது பிரதாபங்களை உலகத்துக்குத் தெரிவிக்கும் சித்திரம் ஒன்றை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மன்னனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அதற்காகச் சீன தேசத்தில் இருந்து ஓவியர் வரவழைக்கப்பட்டார். அவ் ஓவியர் முப்பது நாட்கள் அரும் பாடுபட்டு தனது திறமை எல்லாம் ஒன்றுகூட்டி மன்னரின் அச்சு அசலான பிம்பத்தைத் திரைச்சீலையில் வரைந்திருந்தார்.

மன்னரே உயிருடன் திரைச்சீலையில் இருந்து நம்மைப் பார்க்கிறாரோ என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்தது அவ் ஓவியம்.

முப்பத்து ஓராம் நாள் திரை விலக்கப்பட்டது.

மன்னர் அச் சித்திரத்தை உற்றுப் பார்த்தார்.

’படம் நிஜமாய் இருக்கிறது; ஆனால் அவலட்சணமாய் இருக்கிறது. அந்தப் புழுவை வெளியே தூக்கிப் போட்டு அவன் தலையைக் கொய்து நான் காலூன்றுவதற்கு திரும்ப எடுத்து வாருங்கள்’ என்றார் அரசர்.

அடுத்த ஓவியர் வரவழைக்கப்பட்டார்.

அவரும் கடும் முயற்சியுடன் படம் வரைந்து நடுங்கும் கரங்களுடன் அதை அரசர் முன் சமர்ப்பித்தார்.

அரசர் அச் சித்திரத்தை வியப்புடன் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு பின்னர் தனது தீர்மானத்தைச் சொன்னார்.

‘இந்தப் பிம்பம் அழகாய் இருக்கிறது. ஆனால் நிஜமாய் இல்லை. வெளியே அவனைச் சிரச்சேதம் செய்து தலையை அவன் காலடியில் போடுங்கள் ‘

மூன்றாவது முறை யாரும் தைரியமாக படம் வரைய முன் வரவில்லை.

வழக்கம் போல முல்லா அரசவைக்கு அழைக்கப்பட்டார். வாளுக்கு இரையாகப்போகிறாரா அல்லது தூரிகையைத் தொடப்போகிறாரா, இதில் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு முல்லாவுக்கு ஆணை இடப்பட்டது.

முல்லா தூரிகையைத் தேர்ந்தெடுத்தார். வெளியே பெயர் தெரியாத சில சித்திரக்காரர்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் உதவியுடன் படத்தை வரைந்து முடித்துக் கொண்டார் முல்லா.

படத்திறப்பு விழாவை மேலும் தாமதப்படுத்த முடியாத கட்டம் நெருங்கியது.

அரசர் தன் கரங்களால் படச் சீலையை விலக்கினார்.

அரசர் ஓவியத்தைப் பார்த்தார். பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். புருவத்தை இறுக்கினார். தலையைச் சொறிந்தார். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். வானத்தைப் பார்த்தார். நீண்ட நேரம் ஸூக்காவைப் புகைத்தார். பின் ராஜகளை பொருந்திய தனது முகத்தில் புன்னகையைப் படரவிட்டார்.

’ரொம்ப மோசமில்லை. நான் அழகாய் தோன்றவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நான் முடமென்று யார் கவனித்துச் சொல்லி விட முடியும்?’

நான் அம்பெய்தும் காட்சியை இக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது எனக்கு ஒருகண் பார்வை மட்டும் இருப்பதையோ அல்லது என் மணிக்கட்டு ஊனத்தையோ யாரும் கவனிக்க முடியாது.

இந்த வேடிக்கையான ஓவியக்காரரை தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்.

'அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது’ என்று சந்தோஷமாகக் கூத்தாடினார் அரசர்.

( நன்றி: ‘என்றார் முல்லா’முல்லா நஸ்ருதீன் கதைகள்; மொழிபெயர்ப்பு; சஃபி; டிசம்பர் 2009, உயிர்மை பதிப்பகம்; பக் 191 - 192.)

இந்தக் கதையை வாசித்து முடித்த போது என் மனதில் சட்டென தோன்றிய ஒன்று அண்மையில் நான் படித்து முடித்திருந்த கீதா. மதிவாணனின் ”என்றாவது ஒரு நாள்” என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதி.



அவுஸ்திரேலிய செவ்வியல் புனைகதை எழுத்தாளரான ஹென்றி லோஷனின் (1867 - 1922) தமிழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய தொகுதி  ’என்றாவது ஒரு நாள்’ அகநாழிகை பதிப்பகத்தினால் 166 பக்கங்கள் கொண்டதாக டிசம்பர் 2014 வெளியிடப்பட்டிருக்கிறது.

கீதா. மதிவாணனின் கைவண்ணத்தில் ஹென்றி லோஷன் பற்றிய ஆச்சரியம் மிக்க வரலாற்றுக் குறிப்புகளுடனும் மொழிபெயர்ப்பாளரின் அறிமுகக்குறிப்புகளுடனும் எங்கிருந்து பெறப்பட்டது என்ற ஆவண விபரங்களோடும் சுமார் 22 கதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இக்கதைகளின் களம் ஒரு புதிய வாழ்க்கை முறையின் தொடக்கம் என்பது வரலாற்று உன்மை. இங்கிலாந்தில் ஜோர்ஜ் மன்னர்களின் காலணி ஆதிக்கம், பொருளாதாரச் சரிவு போன்றவற்றால் பெருகிய திருடர்களும் குற்றவாளிகளும் இடமில்லாக் காரணங்களால் நாடு கடத்தப் பட வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரனமாக அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு வந்திறங்கியோர் தான் இவரின் இக்கதை மாந்தர்கள்.

ஹென்றி லோஷனின் பாத்திரங்கள் கீதா சொல்லி இருப்பது போல காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும் அடிமட்டத் தொழிலாளிகளும் சுரங்கக் குழிகளுக்குள் தம் அதிஷ்டத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களும் தான். கதையின் ஓரிடத்தில் ” பெரிய பெரிய மீசையுடனும் கையில் துப்பாக்கியுடனுமான மனிதர்களை கலிஃபோனியாவில் கண்டிருக்கிறேன்.ஆனால் துளைக்கும் பார்வைக்குப் பின்னால் ஒரு இயல்பான பளிச்சிடும் புன்னகை இருக்கும் மனிதர்களை அவுஸ்திரேலியாவில் தான் பார்க்கிறேன். வெய்யிலால் கறுத்து மெலிந்த தோற்றமுடய இக்காடுறை மனிதர்கள் என்றாவது ஒரு நாள் தங்கள் காரியங்களை எளிய முறையில் ஆற்றுவார்கள். அன்று இந்த உலகம் பழைமையின் பிடியில் இருந்து விடுபட்டு நிமிர்ந்தமர்ந்து யோசிக்க ஆரம்பிக்கும்” என்கிறார்.(அவன் ஏன் அப்படிச் செய்தான்; பக்; 98)



உண்மை தான். இந்த மக்கள் ஜனவரி 26, 1788இல் 1500 பேரோடு இங்கு வந்து இறங்கிய போது பூர்வ குடியினரிடம் இருந்து தம்மைக் காக்க வேண்டிய தேவையும் குடியேற்றங்களை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடும் இவர்களுக்கு இருந்தது.

கைதிகள் நிலச்சுவாந்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாகினர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் குறைந்த கூலிக்கு இவர்கள் வேலையாட்களாக அமர்த்தப்பட்டனர். பெண்கள் பணிப்பெண்களாகவும் மனைவிகளாகவும் ஆசைநாயகிகளாகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்பட்டனர். ஓய்வற்ற பணியும் கால்வயிற்று உணவும் இவர்களை மேலும் கொள்ள்கைக்காரர்களாகவும் திருடர்களாகவும் முரடர்களாகவும் மாற்றியது. இவர்களது இந்த சட்ட விரோத காரியங்களால் இவர்கள் மேலும் காடுகளில் தலைமறைவு வாழ்க்கையை வாழ நிர்பந்தத்தைக் கொடுத்தது. என்ன செய்வதென்று தெரியாது தவித்த இவர்களின் வாழ்வுக்கான உந்துதல்களே ஹென்றி லோஷனின் கதைக்களம் நிகழும் கதை மாந்தர்.

ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவர்கள் இங்கு வந்திறங்கிய போது அபிரோஜினல் பழங்குடியினர் 500 க்குமதிகமான இனக்குழுக்களாகப் பிரிந்து பல்வேறு வகையான மொழிகளைப் பேசி வந்தாலும் அவர்கள் சுவர் சித்திரங்கள் ஊடாகவும் மரப்பட்டைகளில் வரைந்த ஓவியங்கள் மூலமாகவும் பேச்சு மொழியூடாகவுமே தம் பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் வாழ்க்கை முரைகளையும் அடுத்த சந்ததிக்கு கடத்தி வந்தனர். இதனால் அவுஸ்திரேலியாவின் படைப்பிலக்கியம் என்பது ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகான காலத்தில் இருந்தே உருப்பெற்றன.

அதன் காரணமாகவும் அவுஸ்திரேலிய வரலாற்றில் ஹென்றி லோஷனின் கதைகளுக்கு தனியிடமுண்டு.



இவருடய கதைகளில் உலா வருபவை எல்லாம் முற்றிலும் மாறுபட்ட சூழலும் சுற்றுப்புறமும் புதிரான மனிதர்களும் புதிய வாழ்க்கை முறையும் இது வரை அறிந்திராத உயிரினங்கள் பற்றிய பிரக்ஞையும்; பல தடவைகளாக வந்திறங்கிய பல்வேறு ஐரோப்பிய நாட்டு குடியேற்ற வாசிகளின் மொழிக்கலப்பும் பழங்குடி மக்களின் பேச்சு மொழியும்  சேர்ந்து உருவாக்கிய புதிய கொச்சை மொழி வழக்கும் சேர்ந்த ஒரு ஆங்கில பாசையும் கலந்த ஒரு மாறுபட்டதொரு இலக்கிய பின் புலமாகும்.

புதிய பண்பாடு ஒன்று எழுத்து வடிவம் தோன்றாத ஒரு பாரம்பரியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து முகிழ்ந்து தனக்கென ஒரு ஆழுமை மிக்க வடிவத்தை அவுஸ்திரேலிய ஆங்கில இலக்கியத்திற்கு கொடுத்ததென்ற வகையிலும் ஹென்றிலோஷன் சிறப்பிடம் பெறுகிறார்.

 ஹென்றி லோஷனின் தனிப்பட்ட வாழ்க்கையே மிக அல்லல் நிரம்பியதாக இருந்திருக்கிறது. செவிடராக இருந்தார். குடும்பவாழ்க்கை வெற்றிகரமானதாக அமைந்திருக்கவில்லை. வறுமையின் பிடியில் சிக்கி இருந்ததோடு பிள்ளைகளுக்கான ஜீவனாம்சத்தைக் கூட ஒழுங்காக வழங்க இயலாதவராக இருந்தார். பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததோடு கடுமையான மது பாவனைக்கும் உரியவராய் இருந்து மிகுதியான மன அழுத்தத்தோடு பிச்சை எடுப்பவராகவும் தன் வாழ்க்கையை நடாத்தி  தனது 55 வது வயதிலேயே உயிர் நீத்தார்.


இந்த இடத்தில் தான் ஹென்றி லோஷனின் கதை மாந்தர்கள் முக்கியம் பெறுகிறார்கள். அவர்கள் இவரின் உன்னிப்பான அவதானத்துக்கு ஆட்பட்டவர்களாக இருந்தார்கள். இவர் செவிடராக இருந்ததாலோ என்னவோ அவருடய கண்களின் தீட்சன்யம் அபரிதமானதாக விளங்கி இருந்தது. ஒரு பாத்திரத்தின் புறவயமான செயற்பாட்டை மாத்திரம் சித்திரிப்பவராக அல்லாது அப்பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை துல்லியமாக எடை போடக்கூடியவராகவும் அவர்களின் மனதுக்குள் சென்று அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒரு வித நகைச்சுவை இளையோட வெளியே கொண்டு வருபவராகவும் அவர் இருந்தார். அந்த பாத்திர வார்ப்பினூடே அவர் சித்திரிக்கின்ற வஸ்து  அல்லது ஒரு மனித உணர்வு அல்லது குணாம்சம் அதன் இயல்பு நிலை மாறாது மிளிரக் காணலாம். அவை உண்மைகளை விட்டு ஒரு போதும் தூரச் சென்றதில்லை; மிகையுணர்ச்சி வசப்படுவதில்லை; ஆர்ப்பாட்டமான அலங்காரங்களுக்கு அவை ஆட்பட்டனவுமல்ல. யதார்த்தத்தினை அவை எங்கெங்கனும் மிளிர விட்டனவாகவே அவரது ஒவ்வொரு சொற்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதனால் அப்பாத்திரங்கள் அலங்காரமற்ற நம் அக மனங்களில் பசுமரத்தாணி போல பாய்ந்து நிலைபெற்றிருக்கின்றன.

அதனை அவ்வாறு கொண்டு வந்ததில் கீதா. மதி வாணனின் மதி நுட்பமும் செயற்திறனும் தமிழ் மொழி வீச்சும் அவரின் தார்மீக குணாம்சமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன. சுட்டும் விழிச் சுடராய் மிளிர்கின்றன.  ஒரு படைப்பாளி ஒரு வாசகருக்கு வழங்கக் கூடிய அதிக பட்ச பரிசாக இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் விளங்குகின்றன.

முற்றிலும் வேறு பட்ட வாழ்வு; பண்பாடு; வாழ்க்கை முறை. புதுப்பண்பாடு ஒன்று முகிழும்  காலப்பகுதி. கொச்சை மொழிவழக்கும் புரியாத மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் வரி வடிவங்கள்! இத்தனைக்குள்ளாலும் நெளிந்து வளைந்து லாவகமாக  ஆங்கிலச் சொற்கள்  நுழையாத தலைப்பாகை கட்டிய தமிழ்! நுரை பொங்கப் பொங்க ஆறாகப் பெருகி வருகிறது! கீதாவின் மூலமாக ஹென்றி லோஷன் பால் மதிப்பும் மரியாதையும் மேலோங்குகின்றன. அவரை அப்படியே கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதில் - நம் மனதில் அவரைப் பதியச் செய்ததில் தெரிகிறது மொழிபெயர்ப்பின் கைவண்ணம்.


உதாரணத்துக்கு ”பண்ணையில் ஒரு நாள் “ என்ற ஒரு கதையை மாத்திரம்  எடுத்துக் கொள்வோம். கதையின் சாராம்சம் பிளைகளோடும் ஏழ்மையோடும் இடையறாத வேலைகளோடும் அன்றாடம் கஸ்ட ஜீவனம் நடத்தும் மனைவி. அது பற்றிய எண்ணங்கள் கரிசனைகள் ஏதுமற்று நண்பனோடு அதே வீட்டில் உலக செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் கணவன் மற்றும் அந்த நாள் ஒன்றின் நகர்வு.


கதாபாத்திரம் 1; விடலைச் சிறுவன்:-



கதையின் ஆரம்பத்தில் 15 வயது மதிக்கத் தக்க ஒரு விடலைச் சிறுவன் மாடுகளை ஓட்டி வருகிறான்.அவனின் குண இயல்பு பற்றிய பாத்திர வார்ப்பு இவ்வாறாக வளர்ந்து செல்கிறது.

” .... வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த களைத்துப் போன முகத்துடன் கூடிய பெண்மணி மலையடிவாரத்தின் பக்கம் பார்த்துக் கத்தினாள்.
” டா..ஆஅ...மீ..ஈ..ஈ..”
பதில் இல்லை. அவள் மூச்சைப் பலமாக உள்ளிழுத்து மீண்டும் கத்தினாள். ’டா..ஆஅ...மீ..ஈ..ஈ..”...
பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்து கத்தினாள்.
’டா...ஆ..மீ...’
என்ன...ம்..மாஆ? டாம் கீச்சிட்ட குரலில் கேட்டான்.
‘இன்றைக்குள் அந்தப் பசுக்களைக் கொண்டுவந்து சேர்க்கப்போவதில்லையா?
இதோ நான் வந்து கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

டாம் வேலியின் பக்கவாட்டில் பாய்ந்தோடி ஒரு கறவைப்பசுவின் மீது கழியை எறிந்தான். பசு கொஞ்சத் தூரம் முன்னால் ஓடி மரங்களுக்கிடையே புகுந்து நின்று கொண்டு மேய ஆரம்பித்த போது அவன் மற்றொரு கறவைப் பசுவை துரத்தி உள்ளே கொண்டு வந்தான். பசுக்களையும் கன்றுகளையும் அடக்கிக் கொண்டு வர ஒரு மணி நேரம் ஆகிப்போனது.

வளர்ந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியத் தலைமுறையைச் சார்ந்த நெடிய ஒடிசலான பதினைந்து வயது இளந்தாரி அவன். வீட்டுக்கு அடுத்தாற் போலிருந்தது தொழுவம். அதில் கணுக்கால் அளவுக்கு சேறாக இருந்தது. புழுதி படிந்து சோர்ந்து போயிருந்த பசுக்களில் ஒன்றை பட்டிக்குள் கொண்டு வந்து அடைத்தான். சிறு போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாய் அதன் பின்னங்காலை இழுத்துக் கட்டி பசுவை அசையாது நிற்கச் செய்தான்

அங்கு மொத்தம் பதினொரு பசுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைக்கூட பட்டியின் வெளியே வைத்து கறத்தல் எளிதன்று. காரணம் அவற்றின் பால் காம்புகள் ரணமாய் இருந்தன.......

பசுவை அசையாது நிறுத்திய பின் டாம் மிக எச்சரிக்கையுடன் பசுவின் மடிக்காம்புகளில் ரணம் குறைவாக உள்ள ஒரு காம்பைப் பிடித்து வெடுக்கென உருவிவிட்டு பசுவின் பின்னங்கால் தன் மேல் படாது சமர்த்தியமாய் நகர்ந்து கொள்வான். அவனுடய அழுக்கு கைவிரல்கள் நனையுமளவுக்கு ஓரளவு பால் வந்ததும் பால் காம்புகளை அந்தப் பாலாலேயே ஈரமாக்கி விட்டு பசுக்களுக்குச் சிரமமில்லாது கறப்பான்.

சோர்வு தரும் வழக்கமான இச் செயலில் இருந்து அவ்வப்போது விடுபடுவது போல பக்கத்துப் பட்டியில் அடைக்கப்பட்டு அரையுறக்கத்தில் இருக்கும் கன்றின் கண்களின் மீது பாலைப் பீச்சுவான். சில சமயங்களில் பாலை தன் வாய்க்குள் பீச்சிக் கொள்வான். பசு ஒவ்வொரு முறை காலை உதறும் போதும் குச்சி, புல், விதை போன்று ஏதாவது குப்பை பால் வாளிக்குள் விழுந்து விடும். சிறுவன் பாலை நேராக அதன் மீது பாச்சி அதைப் பாத்திரத்தின் அடியில் மூழ்கடித்து விடுவான். கண்னுக்குத் தெரியாத எதுவும் கருத்துக்கும் தெரியாது என்னும் கொள்கை விதிப்படி.

சில நேரங்களில் பசுவின் மடியில் தலையை முட்டி பால்காம்பில் வாயை வைத்து கிறக்கம் மேலிடப்  பாலை உறிஞ்சுவான். அவனுடய முழங்கால்களுக்கிடையில் இருக்கும் பால் வாளி கொஞ்சம் கொஞ்சமாக தழைந்து தரையைத் தொட்டுவிடும். அவனுடய தாய் ‘டாம், இன்றைக்குள் பால் கறந்து விடுவாயா?’ என்று கத்தும் வரையிலோ, அல்லது பசு காலை உதறி அவனை விழிக்கச் செய்யும் வரையிலோ அவன் அரை மயக்கத்தோடு பாலை உறிஞ்சிக்கொண்டிருப்பான்.

கன்று வந்து விட்டால் அதை எதிர் கொள்வது பெரும்பாடு. அவன் பசுவின் காம்பில் இருந்து தலையை எடுத்து விட்டு ஓடிச் சென்று கன்றினைப் பிடித்து வேறெங்காவது கட்டுவான். அது போன்ற சமயத்தில் பசுவின் கால்கட்டு தளர்ந்து  பசு தனது பின்னங்காலைப் பால் பாத்திரத்திற்குள் வைத்து விடுவதுமுண்டு. காலை வெளியே எடுக்கும் போது பாத்திரத்தைக் கவிழ்த்து விடாதிருக்க வேண்டுமே என்று பதறிய படி பட்டிக்கு ஓடி வருவான். சில நேரங்களில் அது நடந்து விடும். சில சமயம் நடக்காதிருக்கும். அது அந்தச் சிறுவனின் பலத்தையும் பட்டியின் வலிமையையும் பசுவின் நிலைப்பாட்டையும் பொறுத்தது. எப்பிடியிருந்தாலும் சிறுவன் கூர் பற்கள் உள்ள தோட்டத்து மண்வெட்டியால் பசுவுக்கு ஒரு அடி போட்டு விட்டு அடுத்ததைப் பிடித்துக் கட்டுவான் (பக்: 136 - 137)

பசு ஒன்று இரண்டு நாட்களாய் கானாமல் போயிருந்தது.அதனிடமிருந்து கிடைக்கவேண்டிய பால் கிடைக்காமல் இருந்தமையும் கூடுதல் வருத்தமளித்தது. சிறுவன் பசுக்களை மேச்சல் வெளிக்கு ஓட்டிவிட முயன்றான்.மேய்ச்சல் வெளிக்குச் செல்லும் பாதையில் இருந்த இரட்டைத்தடுப்பு கட்டை வேலியின் மேல் தடுப்புக் கட்டையை மட்டும் இறக்கினான். கீழ் தடுப்புக்கட்டை மிக இருக்கமாக இருந்தது.அதை இறக்க அதிக உழைப்பு தேவைப்பட்டது.அதனால் அதை அப்படியே விட்டு பசுக்கள் அதைத் தாண்டிச் செல்லும் படி செய்தான்.

அடுத்ததாய் குறுகிய காலத்தில் ஊட்டம் நிறுத்தப்பட்டு விட்ட கன்றுகளுக்கு கையால் பாலூட்டும் வேலையில் இறங்கினான். கறந்தெடுத்த பாலை ஒரு மண்ணெண்ணை டிரம்மிலோ அல்லது எண்ணை உருளையிலோ வைத்துக் கொண்டு தன் இடது கையால் கன்றின் கழுத்தை பாத்திரத்தினுள் அழுத்தி அழுக்குப் படிந்த தன் வலக்கை ஆட்காட்டி விரலை அதன் வாய்க்குள் செலுத்தினான். தாயின் காம்பென்று நினைத்து கன்று பாலை உறிஞ்சிக் குடித்தது. தாயிடம் குடிப்பதைப் போன்ற எண்ணம் எழவும் மடி முட்டும் தன் பழக்கத்தை மாறாமல் செய்து அவன் மணிக்கட்டை பாத்திரத்தின் விளிம்பில் வேகமாக மோதியது. அதன் தாடையில் ஒரு அடியும் வயிற்றில் ஒரு உதையும் விட்டதோடு  அதைப் பாலுக்குள் அழுத்தி மூச்சுத் திணறச் செய்தான். முடிவில் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அடுத்த கன்றைக் கொண்டு வந்தான். வேலைக்குப் பின் கைகள் பிசு பிசுப்புடனும் பாலூட்டிய ஒற்றை விரல் மட்டும் சுத்தமாகவும் இருப்பதைப் பார்க்கும் போது அவன் ஒரு வழுவழுப்பான கையுறை அணிந்திருப்பதைப் போன்றும் அந்தக் கையுறையில் ஒற்றை விரலுக்குரிய பகுதி மட்டும்கிழிந்திருப்பதைப் போலும் தோன்றியது.(பக்;139)

 கதா பாத்திரம் 2படுத்திருக்கிற மாடு:-




“மாடு அசை போட்டுக்கொண்டிருந்தது.அதனுடய மூக்கு மேலும் கீழுமாய் அசைந்து கொண்டிருந்தது. அதன் கண்கள் மூடி இருந்தன. அது தன் கீழ் தாடையை கீழே இறக்கி, ஒரு பக்கமாக நகர்த்தியது. மீண்டும் மேலேற்றி பழைய இடத்துக்கு கொண்டு வந்தது. பார்ப்பதற்கு சுருள் வில் ஒன்று இழு பட்டு மீண்டும் பழைய நிலையை வந்தடைவது போன்றிருந்தது. பிறகு கொஞ்ச நேரம் தாடையை அசையாது வைத்திருந்தது. அது அசை போடுவதை நிறுத்தி விட்டது போலும் என்று  நினைப்போம். ஆனால் இருக்காது. இப்போதுஅதன் வாய்க்குள்ளிருந்து மெலியதாய் ஒரு கவளம் அதன் சுத்தமான வெண்ணிறத் தொண்டை வழியாக உள்ளிறங்கி மறைவதைக் காண முடியும். அது மறுபடியும் அசை போட்டது. கொஞ்ச நேரத்தில் அது சுயநிலை இழந்து அசை போடுவதையும் மறந்து போகும்.அது ஒரு போதும் கண்களைத் திறவாது. அது இளமையாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தது. போதுமான அளவு உண்டிருந்தது. வெய்யில் உணக்கையாக இருந்திருக்க வேண்டும். ஒரு விலங்கு உண்மையில் மகிழ்வாக இருக்க முடியுமென்றால் அன்று அந்தப் பசுவுக்கு அது மிகவும் பொருந்தும்.” - (பண்னையில் ஒரு நாள்; பக்: 139 -140)

வீட்டு நிலை:-

அவர்கள் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஏராளமான நல்ல நார் பட்டைகள் கிடைத்த போதிலும், பால் சேகரிக்கும் அறையின் பக்கவாட்டுச் சுவர்களாயிருந்த மக்கிப் போன மரப்பட்டைகள் மாற்றுவாரின்றி இருந்தன. கொட்டகை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழக்கூடிய நிலையில், ஒரு பக்கமாய் சாய்ந்திருந்தது. மேலும் சாய்ந்து விடாமல், மூன்று வளைந்த கம்பங்களால் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு கூடுதலாய் சில கம்பங்களின் தேவை விரைவிலேயே தேவை என்பதை கொட்டகை உணர்த்திக் கொண்டிருந்தது.

மண்னெண்ணை உருளைகள் பாதியாக வெட்டப்பட்டு அவை பால் சேகரிக்கும் பாத்திரங்களாகப் பயன் பட்டு வந்தன. அவை அறையிலிருந்த மரப்பட்டையாலான அடுக்குத் தட்டுக்களில் சுவரையொட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. மரத்தட்டு சம தளமாக இல்லாத காரணத்தால் பாத்திரங்களின் அடியில் மரப்பட்டைத் துகளோ, மரச்செதிலோ செருகி வைக்கப் பட்டிருந்தன. பாத்திரங்களின் மேல் சிறு குச்சிகளைக் குறுக்காக வைத்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு அழுக்குப் படிந்த செய்தித்தாளைப் போட்டு மூடியிருந்தனர். அந்தப் பாதுகாப்பு தேவைதான்.

ஏனெனில் கூரையின் மரப்பட்டைகள் விரிசலுற்றும் உளுத்துக் கொட்டிக் கொண்டும் இருந்தன. கூரையில் கோழிகள் அடைவதும் ஒரு காரணம்....”(பக்;137)

கணவரும் நண்பரும்:-

இந்தப் பண்ணையின் முதலாளியான விவசாயியும் அடுத்த வீட்டுக் காரரும் வேலியருகில் பக்கம் பக்கமாய் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். விவசாயியின் கைகள் கட்டை வேலியின் மேல் தடுப்பின் மேல் ஊன்றப்பட்டிருந்தன. தாடை அவருடய கைகளின் மேல் ஊன்ரப்பட்டிருந்தது. விரல்களுக்கு நடுவில் புகைக்குளாய் (சுங்கான்?) வீற்றிருந்தது. பார்வை வேலிக்கப்பால் அமர்ந்து (படுத்து?)அசை போட்டுக்கொண்டிருந்த வெள்ளைப்பசுவின் மேல் படிந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் கைகளும் மேல் தடுப்பின் மேல் ஊன்றப்பட்டிருந்தது. அவருடய தாடையும் அவருடய கைகளின் மேல் ஊன்றப்பட்டிருந்தது. அவர் விரல்களுக்கு நடுவிலும் புகைக்குளாய் வீற்றிருந்தது. அவருடய பார்வையும் வெள்ளைப்பசுவின் மீது படிந்திருந்தது. அவர்கள் அந்தப் பசுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த மூன்று மணி நேரமாக அவர்கள் அதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.(பக்;139)

இப்போது அவர்கள் இருவரும் வேலியை விட்டு விலகி தங்கள் புகைக்குளாயை நிரப்பிக் கொண்டு பலன் கருதி ஊன்றப்பட்டிருந்த சில மரக்குச்சிகளின் பக்கம் சென்று பார்வையிடலாயினர். விவ்சாயி அந்தக் குச்சிகளைப் பழ மரங்கள் என்றார். அந்த இடத்தை தோப்பு என்றார்.அவர்கள் இலக்கின்றி அந்தக் குச்சிகளைச் சுற்றி சுற்றி வந்தனர். மதிய உணவுக்கான நேரம் வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர் தான் தன் வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். ‘இங்கேயே இருந்து கொஞ்சம் சாப்பிடு; அடக்கடவுளே! இதற்காகவா போகிறாய்? எங்கள் வீட்டிலேயே சாப்பிடு’ விவசாயி சொன்னார். நண்பர் ஏற்றார். (பக் 140)

சாப்பாட்டுக்கு முன்பான சூழல்:-


விவசாயியின் மனைவி அவளுடய தட்டைக் கொண்டுவந்து மேசையின் தலைமாட்டில் வைத்தாள். கூடவே கோழிகளை விரட்டியடிக்க ஒரு விளக்குமாறையும் கொண்டுவந்து வைத்தாள். உரையாடலுக்கு மத்தியில் அவள் ஷ்ஷூ, ஷ்ஷூ என்று கோழிகளை விரட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தாள். ”டாமி...கோழிகள் மேய்வது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? விரட்டிவிடு அதை”

கோழிகள் பெரும்பாண்மையான நேரத்தை அந்த வீட்டினுள் தான் கழித்துக் கொண்டிருந்தன. விளக்குமாற்றின் சுற்றெல்லையை அறிந்து வைத்துக் கொண்டு கவனமாக அதிலிருந்து இரண்டு மூன்று அங்குலங்கள் தள்ளியே நடமாடின. சமையலறை மேசையின் மீது பீங்கான் பாத்திரங்களுக்கு மத்தியில் ஒரு கோழியைப் பார்த்தால் அது எந்தப் பாத்திரத்தையும் கீழே உருட்டி விடாத படி கவனமாக அதை விரட்ட வேண்டும்.

உணவு உட்கொண்டு கொண்டு இருக்கும் போது இரண்டு காளைகள் கட்டை வேலியின் தடுப்புக் கட்டை உடைந்திருந்த பக்கம் பரப்பட்டைகளால் அடைக்கப்பட்டிருந்த இடத்தைப் பொத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் கோதுமை வயலில் நுழைந்து விட்டன. ஒன்றிரண்டு கன்றுகள் திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. விவசாயத்தைப் பற்றி அவ்வளவாக ஏதும் அறிந்திராத; எந்தக் கவலையும் இல்லாத ஆஸ்திரேலிய விவசாயி வேலித்தடுப்புக் கட்டைகளைச் சீராக்கும் எண்ணமின்றி, நல்லதாய் ஒரு வீட்டைக்கட்ட வேண்டும் என்ற நினைப்புமின்றி தான் படித்து அறிந்த அன்றய சமூக மற்றும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்.

சாப்பாட்டு நேரத்து உரையாடல்:-




பாத்திரங்கள்: விவசாயி, அவர் மனைவி, பக்கத்து வீட்டுக்காரரும் விவசாயியின் நண்பருமான கார்னி,ஜார்ஜ்,சிறுவர்களான டாமி, ஜேக்கி மற்றும் சில சின்னக் குழந்தைகள். அவர்களுடய உரையாடலுக்கு கோழிகளாலும் குழந்தைகளாலும் தடங்கல்கள் நேருகின்றன.

கார்னி ஜார்ஜ் (உரையாடலைத் தொடர்கிறார்) ; ஆனால் ’முன்னேற்றமும் வறுமையும்’ பற்றிச் சொல்லும் போது  ஹென்றி ஜார்ஜ் சொல்கிறார்...”
விவசாயியின் மனைவி: (கோழிகளைப் பார்த்து) ஷ்ஷூ ஷ்ஷூ
நண்பர்: ‘அவர் சொல்கிறார்”
டாம்: அம்மா ஜேக்கைப் பாருங்கள்
விவசாயியின் மனைவி: (ஜேக்கிடம்) உன்னால் ஒழுங்காக இருக்க முடியவில்லை என்றால் மேசையை விட்டு எழுந்ந்து போ.
நண்பர்: ’அவர் சொல்கிறார் முன்னேற்றமும் ..’
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ
நண்பர்: ‘பின்னோக்கிப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். முதலில் என்ன நடந்ததென்றால்..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ..டாம் அந்தக் கோழி உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?
நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்றால் சீஸ்ரின் கால கட்டத்தில் ..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ.
விவசாயி: பிரெஞ்சுக்கலகத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.
நண்பர்: ஹென்றி ஜோர்ஜ் என்ன சொல்கிறார் என்றால்
டாம்: அம்மா! நான் ஒரு பெரிய கங்காரு அந்தப் பக்கம் போவதைப் பார்த்தேன்.
விவசாயியின் மனைவி: வாயை மூடு. நாக்கை அடக்கிக் கொண்டு உண்பதை மட்டும் செய். இங்கே பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற அறிவில்லையா உனக்கு?
விவசாயி: ’அந்தப் பெரெஞ்சு..’
விவசாயியின் மனைவி: (கோழிகளை நோக்கி) ஷ்ஷூ ஷ் ஷூ. (சட்டென்று ஜேக்கின் பக்கம் திரும்பி) சக்கரை டப்பாவில் இருந்து உன் விரல்களை வெளியிலெடு. இல்லையென்றால் விளாசி விடுவேன்.
நண்பர்: ”ஆனால் பின்னோக்கிப் பார்க்கையில்..”
விவசாயியின் மனைவி: ‘பார்த்தாயா டாம்! தேநீரை சிந்தி விடுவாயென்று நான் தான் சொன்னேனே? மேசையை விட்டு விலகிப் போ”
விவசாயி:’சீஸரின் காலகட்டம் தான் இயற்கையான ஒரே..”
விவசாயியின் மனைவி: ஷ்ஷூ ஷ் ஷூ. அவள் பொறுமையிழந்து எழுந்தாள். விளக்குமாற்றை வீசி ஓர் இளஞ்சேவலை விரட்டினாள். அது பறந்து போய் மேய்ச்சல் களத்தில் தலைகுப்புற விழுந்தது. எழுந்து மறுபடியும் வீட்டை நோக்கி வரத்தொடங்கியது.

                     இப்போது உரையாடல் டீமிங்கின் பக்கம் திரும்பியது.

விவசாயி: சந்தேகமேயில்லை.அவனொரு பைத்தியம் தான்.
விவசாயியின் மனைவி: ‘டீமிங் வின்ஸரின் அந்தப் பாவி!எனக்கு மட்டும் அதிகாரமிருந்திருந்தால் நான் அந்த ஆளை உயிரோடு உலையிலிட்டிருப்பேன். அவன் என்ன செய்தானென்று அவனுக்கே தெரிந்திருக்காது என்று என்னிடம் சொல்லாதீர்கள். நான் அவனை ..”
நண்பர்: ‘ஆனால் அம்மா நீங்கள்...
விவசாயியின் மனிவி: (கோழிகளை நோக்கி) ’ஷ்ஷூ ஷ்ஷூ’
.........
( டீமிங்  - பற்றி தான் தனிப்பட சேகரித்த வரலாற்றுக் குறிப்பை கீதா. மதி வாணன் பிற்குறிப்பாகத் தந்திருக்கிறார்.) 


மொழி பெயர்ப்புக்கு என்று இருக்கும் தார்மீக பொறுப்புகளுடனான கீதாவின் மொழிபெயர்ப்பாற்றலைப் பற்றி சொல்லவும் இவையே போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அடி ஆழம் வரை சென்று உண்மையின் வேர்களையும் மண்செழுமை மாறா வண்ணம் யதார்த்த நிலையோடு பெயர்த்து தமிழுக்கு தரும் சிறப்பு கீதாவுக்கு கைவந்திருக்கிறது.

அவர்கள் அவுஸ்திரேலியாவின் ஆரம்ப கால குடியேற்ற வாசிகள். விரக்தியும் வெறுமையும் பஞ்சமும் பட்டினியும் . பண்ணை வேலைகளும் மந்தை மேய்ப்பும் குதிரையோட்டமும் தெரிந்த வந்தேறுகுடிகள். வளர்ந்த நாடுகளுக்குள் ஒன்ராக இன்று அவுஸ்திரேலியா மிளிர தம் அத்திவாரத்தை போட்டு விட்டுப் போனவர்கள்.

ஹென்றி லோஷன் காட்டுகிற தனித்துவமான குணாம்சங்கள் கொண்ட கதை மாந்தர்களின் இயல்புகளை இன்றய அவுஸ்திரேலியர்களிடம் இன்றும் துல்லியமாக அடையாளம் காணலாம். குடியும் குதிரைப்பந்தயமும் அவர்களிடம் இன்றும் இருக்கும் தனித்துவமான பண்புகள். அவுஸ்திரேலியர்களுக்கேயான கொச்சை ஆங்கிலம் ஐரோப்பிய பாஷைகளும் பழங்குடி மக்களின் பேச்சுகளும்  தழுவிய கலவை தான். குறிப்பாக இளைஞர்களிடம் இருக்கும் தற்துணிவும் பயமற்ற தன்மையும் முரட்டுத்தனமான போக்கும் மக்கள் தம்மோடு கொண்டிருக்கும் எளிமையும் உதவும் மனப்பாண்மையும் கூட அதன் பாற் பட்டதே.

இவற்றை வாசித்து முடித்த போது குறும் படங்கள் பார்த்ததைப் போல; ஒரு கலைப்படத்தை  பார்த்ததை போல; ஒரு செறிவு சார்ந்த பல் வகை கதை மாந்தர்களைச் சந்தித்ததைப் போல; ஒரு காலகட்டத்துக்குள் வாழ்ந்து முடித்ததைப் போல ஒரு திருப்தி.ஹென்றி லோஷனோடு ஒரு ஆத்மார்த்தமான மதிப்பு சார்ந்த நட்பு ஒன்று மலர்ந்திருக்கிறது.

கீதா இவற்றைத் தமிழுக்குத் தந்த போது எனக்கு சற்றே வெற்றிடமாகத் தோன்றிய இடம் ஒன்று உண்டென்றால் அவை படங்கள்!. - கறுப்பு வெள்ளைப் படங்களாகவேனும் சில பாத்திரங்களை; இருப்பிடங்களை; தோற்றப்பாடுகளை ; செயற்பாடுகளைத் தந்திருந்தால் அப்பாத்திரங்கள் மனதில் உயிர் பெற்றே அதே தோற்றப் பொலிவுடன்  நடமாடியிருப்பார்களோ என்று தோன்றிற்று.

கூடவே புத்தகத்தில் கீதா குறிப்பிட்டிருந்தது போல அவுஸ்திரேலிய 10 டொலர் நோட்டில் அவர் உருவப்படம் பொறிக்கப்பட்ட டொலர் நோட்டின்  படம், அவர் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையின்  படம் இவற்றை யும் பிரசுரித்து அவரின் வரலாற்றுப் பெறுமதியையும் அதன் கனம் குறையாமல் படப்பிரசுரம் மூலமாகக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தோன்றிற்று.

கூடவே பாத்திரங்கள், மற்றும் இடங்களைக் குறிப்பிடும் போது வருகிற தமிழ் சொல்லாடல் பற்றிய சிக்கல். உதாரணமாக இலங்கையர் Australia வை ஒஸ்றேலியா என்பார்கள்.இந்தியர் ஆஸ்திரேலியா என்பார்கள். Henry Lawson இலங்கையர் வாயில் நுழைந்து வரும் போது ஹென்றி லோஷன் ஆக இருப்பார். அவரே இந்திய உதடுகளால் உச்சரித்து வெளிவரும் போது ஹென்றி லாஸன் ஆகி விடுவார்.  Tom என்ற பெயரை இலங்கையர் ரொம் என்பர். இந்தியர் டாம் என்பர். இவை உதாரணங்கள் தான். இவ்வாறான உச்சரிப்புச் சிக்கல் வருகின்ற போது அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயரைப் போடுதல் உசிதமோ என்று தோன்றிற்று. அது நாம் கதையோடு கூடுதல் நெருக்கத்தை தரும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

மேலும் இறுதியாக, அட்டைப் படத்தில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி இருக்கலாமோ என்றும் தோன்றிற்று. குறைந்த பட்சம் அவருடய பெயர் சொல்லும் வீதிகள் சிட்னி மாநகரில் உண்டு. குறைந்த பட்சம் வீதியைச் சுட்டி நிற்கும் அந்தப் பெயர் பலகையை வீதியோடு சேர்த்தெடுத்து கூட முகப்பை அலங்கரித்திருக்கலாம். அன்றேல் அவரது உருவச் சிலை!.......

இவற்றை அவரின் அடுத்த புத்தகத்துக்கான என் அபிப்பிராயங்கள் என கீதா எடுத்துக் கொள்வார் என்பதில் எனக்கையமில்லை.

இருந்த போதும் முதல் சொன்ன முல்லாவின் கதையில் வந்த முல்லாவின் ‘உண்மையைக் காட்டும் திறன்’ அந்த சாதுர்யம் கீதாவுக்கும் அப்படியே வாய்த்திருக்கின்றது.

முல்லாவுக்கு அரசன் சொன்னது போலவே ”கீதா மதிவாணனையும் தங்கக் காசுகளால் குளிப்பாட்டுங்கள்”.

’அவருக்கு நிஜத்தை மக்களுக்கு எப்படிக்காட்ட வேண்டுமென்று தெரிந்திருக்கிறது.’

மேலும் மேலும் அவரிடம் இருந்து அவுஸ்திரேலிய புதினங்கள் அதன் வாசம் கெடாமல் தமிழுக்கு அணி சேர்க்கட்டும்!!



அவருடய புத்தகத்தை  இணையத்தினூடாக வாங்க
http://aganazhigaibookstore.com செல்லுங்கள்.

நீங்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் ஏமாற்றப்பட மாட்டீர்கள் என்பதற்கும் ஹென்றி லோஷனை உங்கள் ஆத்மார்த்த நண்பனாய் சுவீகரித்துக்கொள்வீர்கள்  என்பதற்கும்  நான் உத்தரவாதம் தருகிறேன்.