Friday, February 21, 2014

இலக்கிய சந்திப்பு - 17 -


இனிய இலக்கிய உள்ளங்களே!


எல்லோரும் நலம் தானா?

புது வருட பொங்கல் வாழ்த்துக்கள் சகலருக்குமானதாக மலர்க! 2014 கலை இலக்கிய படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் சுபீட்சமான ஆண்டாக பரிணமிப்பதாக!

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோருடனும் முதலில் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். அது நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் திரு. சத்திய நாதன் அவர்களுக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் ”விண்னைத்தாண்டி வருவேனே” என்ற அவரது சிறுகதை மூன்றாம் பரிசினை வென்றிருக்கிறது. 

பேருவகையோடு அந்த மகிழ்வை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுகின்ற அதே வேளை அவருக்கு நம் உயர்திணையின் இலக்கிய சந்திப்பின் சார்பாக நம் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்ந்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறோம். மேலும் மேலும் நாம் வாழும் நிலம் சர்ந்தும் வாழ்வு சார்ந்தும் இலக்கியம் பல பூப்பதாக!

அத்தோடு இன்னொரு தகவல். மார்ச் மாதம் 22ம் திகதி எழுத்தாளர் விழா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடக்க ஏற்பாடாகி இருப்பதாக அறிகிறேன். அந் நிகழ்வுக்காக மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து செல்லும் ஜனரஞ்சக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் செல்வதாகவும் திரும்பி வரும் போது சிட்னிக்கு வருவதாகவும் அறிந்து மகிழ்ந்தோம். அவரை நம் மார்ச் மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது மிக்க பேரன்போடு வர உறுதி அளித்துள்ளார் என்ற செய்தியையும் உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதில் மனம் பெரிதும் மகிழ்கிறது.

கடந்த மார்கழியில் தவிர்க்க முடியாது பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு மேலும் தைத்திங்களில் 26.1.14 அன்று அவுஸ்திரேலிய தினம் காரணமாகவும் நாம் கூடும் பூங்கா அவுஸ்திரேலிய தினத்தால் களை கட்டி இருந்ததன் காரணமாகவும் பாடசாலை விடுமுறை காரணமாகவும் மேலும் ஒரு மாதம் பிற்போடப்பட்டு இம்மாதம் முதலாவதாக நடந்தேற இருக்கிறது.

பலரும் இயற்கை சார்ந்த மூலிகை வாசம் சுமந்து வரும் தென்றல் வருட குருவிகளின் இசைப்பின்னணியில் இலக்கியம் பேசவே பிரியப்படுவதால் தொடர்ந்தும் நம் நிகழ்வுகள் – கட்டிட வசதிகள் இருக்கின்ற பொழுதிலும் – பூங்காவிலேயே இடம் பெறும்.

இம்மாதம் கடந்த மார்கழித்திங்கள் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட நாம் அகத்திய குறுமுனி என நாம் வாஞ்சையோடு அழைக்கும் இலக்கியத்தால் அழகுறும் திரு தனபாலசிங்கம் அவர்களின் சிறப்புரையோடு ஆரம்பமாகிறது.

உங்கள் எல்லோருடய பிரசன்னமும் நிகழ்ச்சியை அழகுறுத்தும் என நான் சொல்லவேண்டியதில்லை.

வந்து இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்க!

உயர்திணை உங்கள் எல்லோரையும் அன்போடு வருக வருக என உள்ளன்போடு அழைக்கிறது. மேலதிக விபரங்களை அழைப்பிதழில் காண்க!

நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

Sunday, February 16, 2014

மூன்று மந்திரங்கள்8.2.14 சனிக்கிழமை.

தமிழ் பாடசாலைக்குப் போகும் இறுதி நாள் என்று அதை நான் அறிந்திருக்கவில்லை.சுமார் 15 மாணவ,மானவிகள் இவ்வருடம்! கற்பிக்கத் தயாராக எடுத்துக் கொண்டு போன பாடம் செம்மொழிகள் எட்டும் அவைகள் என்ன காரணத்துக்காக அப்படி தெரிவுசெய்யப்பட்டன, அம்மொழிகளின் சிறப்புகள் எவை என்பது பற்றியவையாக இருந்தன.

ஒரு கட்டத்தில் ஜென் கதைகள் பற்றிய விடயம் சொல்லப்படவேண்டி வந்தது. அதில் நான் படித்த ஜென் கதை ஒன்று நினைவுக்கு வர அந்தக்கதையைப் பகிர்ந்து கொண்டேன். கதைச் சுருக்கம் இது தான். ஒரு பெளத்த துறவி கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டி இருந்தது. மிக இருண்டு போனதால் தங்கிச் செல்ல குடியானவர்களிடம் படுக்க இடம் கேட்கிறார். எல்லோரும் மறுத்து விட்டார்கள். அவர் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குப் போய் மர அடிவாரத்தில் துண்டை விரித்து விட்டுப் படுக்கிறார். கரடு முரடான நிலம் என்பதால் அவருக்கு உறக்கம் வரவில்லை. விழித்திருக்கிறார். அப்போது தான் அவர் இருளில் கானகத்தில் அழகைக் காணும் பேறு பெறுகிறார். இருள் சூழ்ந்த கானகத்தைக் காண்கிறார். பெரு நிலவு மரங்களிடையே ஒளிர்கிறது. காட்டுப்பூக்களின் வாசத்தினைத் தென்றல் ஏந்தி வருகிறது. சில் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன....அவர் மிக ரசித்து இரவு நேரக்கானகத்தைக் கண்டு களிக்கிறார். என்ன அருமையான அழகிய இரவு நேரக்காடு என வியப்பதோடு அந்தக் கதை முடிகிறது.

இந்தக் கதை சொல்கிற செய்தி என்ன என்பதும்; எதிலும் நல்ல விடயத்தை அல்லது நேர்மறையான விடயத்தை நாம் காணப்பழகி விட்டால் நாம் வாழ்க்கையை சுலபமாக சுகமாக வாழ்ந்து முடிக்கலாம் என்ற செய்தியைப் பற்றியும் சொன்னேன்.”எல்லாம் நன்மைக்கே” என்பது இந்த ஜென்கதையின் சாரம். (குடியானவர்கள் இடம் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அழகிய காட்சியை அவர் கண்டிருக்க முடியாதே என்று அவர் குடியானவர்களுக்கு மறு நாள் போய் நன்றி சொன்னாராம்.)

(இந்தக் கதை எனக்கு நல்ல உதாரணமாக அமையும் என்று அப்போது நான் கருதி இருக்கவில்லை)

நேற்றய இரவு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இரவு நிகழ்ச்சி ஒன்று ‘சிந்தனைச் சிதறல்’ என் தோழி ஒருத்தி தான் அதை நடத்துகிறாள். அதில் பேசு பொருளாய் இருந்தது ’மன அழுத்தங்களும் அதனைத் தீர்க்கும் வழி முறைகளும்’ பலரும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

உண்மையில் மனக்கோளாறுகளைக் கடந்து செல்ல தமிழில் சில மந்திரச் சொற்கள் இருக்கின்றன என்றே எனக்குப் பட்டது. மன இறுக்கம் வரக்காரணம் நம்மால் மாற்றங்களை (அது எதில் என்றாலும்- வேலை, வீடு, வாழ்க்கை, உறவுகள்...)எதிர்கொள்ள அல்லது அதனை  ஏற்றுக்கொள்ள இயலாமை தான். ஆனால் இந்த உலக வாழ்க்கையில் “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது வாழ்க்கை நியதி. நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். அதனை யாராலும் மாற்ற முடியாது. இது முதலாவது மந்திரச் சொல்.

அதனை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.வல்லது வாழும் என்பது இந்தப்பிரபஞ்சத்தின் இயற்கை விதித்த சட்டம். நாம் இயக்கம் உள்ளவர்களாகவும் நல்ல வல்லவர்களாகவும் ( இந்தச் சொல் மிக்க கவனமாகக் கையாளப்பட வேண்டியது. மனசாட்சியை விற்று என்று அதற்கு அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கடசியாக இந்த நாடகவேசம் எல்லாம் கலைந்த பின் நாம் நின்மதியாக உறங்கச் செல்ல வேண்டும். இந்த நிம்மதியான உறக்கத்தை எதன் பொருட்டும் குறிப்பாக இந்த வல்லமை என்ற சொல்லின் பொருட்டு விட்டுக்கொடுத்து விடக்கூடாது. அவரவர் பாதை அவரவர் பயணம் இ ல்லையா?  நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை.’போகின்ற’ போது நம் நல்வினையும் தீவினையுமான நமக்கேயான  ‘பயணப்பொதியோடு’ தான் நாம் ஒவ்வொருவரும் பயணப்படப் போகிறோம். அதனைக் கனமில்லாது பார்த்துக் கொள்ள நாம் பார்த்தியதைப் பட்டிருக்கிறோம். அந்தரங்கத்தில் இந்த உண்மையும் தெளிவும் ஒரு பிரார்த்தனை போல எப்போதும் நம்மோடு கூட இருக்கவேண்டும். என் வாழ்நாளில் என்னால் எவ்வுயிர்க்கும் ஒரு கெடுதலும் நேரவில்லை என்று ஒருவனின் அந்தராத்மா சொல்லுமாக இருந்தால் அவன் கையில் பாரப்பொதி எதுவும் இல்லாமல் இவ் உலகப் பயணத்தைக் கடப்பான் மற்றும் ஒவ்வொரு நாளும் நின்மதியாக உறங்கச் செல்வான் என எனக்குத் தோன்றுகிறது. ) வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் நம்மை எப்போதும் புதுப்பித்துக் கொண்டு / வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். கல்வியால்; அறிவால்; பொது உளச்சார்ப்பால்; அதே நேரம் உயிர்களின் பால் அன்போடும்.

’மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது நியதி என நாம்  நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று நியதி இருந்தால் அந்த மாற்றத்தில் நமக்கு எங்கோ ஒரு கதவு திறக்கிறது என்று அர்த்தம். எல்லாம் நன்மைக்கே என்ற சாவியால் அந்தக் கதவை நாம் தேடித்திறக்க வேண்டும். உண்மையாகவே ‘எல்லாம் நன்மைக்கே’ என்பதை நான் மனசார நம்புகிறேன். உடனடியாக அதன் சாரம் நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் காலப்போக்கில் அதில் ஒரு நன்மை உண்டு என்பதை நாம் நிச்சயம் காண்போம்.

நம்மில் அநேகர் மூடிய கதைப்பார்த்து துயர் கொள்வதிலேயே பலகாலங்களைச் செலவளித்து விடுவதால் திறக்கப்பட வேண்டி இருக்கிற மற்றய கதவைக் காண மறந்து போய் விடுகிறார்கள். சுய பச்சாதாபத்திலும் மனப்போராட்டங்களிலும் தேவையற்ற கற்பனக் கொடூரங்களாலும் தம்மைதாமே சீரழித்துக் கொள்கிறார்கள்.

இந்த இடம் தான் மனம் நோய் கொள்ளக் காரணமாய் அமைந்து விடுகிறது. பலவீனம் இருக்கிற இடத்தில் நோய்க்கிருமிகள் இலகுவாகத் தொற்றிக் கொள்ளுகின்றன. மனம் தேங்கிப் போகிறது. ஓட வழி இல்லாது தேவையற்ற சிந்தனைகள் சந்தேகங்கள், மன குரோதங்கள் தேங்கித்தேங்கி அது காலப்போக்கில் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடுகிறது. நோயாக அது பின்னர் உருமாறுகிறது.

ஒரு தேடல் நம்மை உந்தித் தள்ள, நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பல வருடங்களின் முன் ஒரு வசனம் பார்த்தேன். உனக்கு என்ன நேர்ந்திருந்தாலும் சரி; படுக்கையை விட்டெழு; உடைகளை மாற்று; உன்னை அலங்கரி; வெளியே செல். இது மனதுக்கும் கூடப் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றுகிறது. Just get out!

மூன்றாவது மந்திரச் சொல் ஒன்று இருக்கிறது. அது ‘இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை'. காலம் ஆற்றும் சகல காயங்களையும். இதுவும் கடந்து போகும். நாம் நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் இவை நிச்சயம் நடக்கும்.

ஆகவே காயப்பட்ட உள்ளங்கள் எதுவும் இருப்பின் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாமே. :)

இது எனக்கு நான் சொல்லிக் கொள்ளுகிற ஒரு பதிவும் தான்.

அவுஸ்திரேலியப்பொருளாதாரம் கொடுக்கிற பயம் அது.

Ford car company மூடப்பட்டு விட்டது. Holden car company மூடப்பட்டு விட்டது. இப்போது Toyota car company 2017ல் மூடப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவுஸ்திரேலிய பழக்கொம்பனி SPC  மூடப்பட வேண்டிய ஆபத்து வந்து விட்டது என்று ரொனி அபேர்ட்டிடம் நிதி உதவி கேட்டும் அவரின் நிர்வாகம் கொடுக்கத் தயாராக இல்லாத நிலைமை. இந்த தொழில்சாலையை நம்பி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. பெரும் பழத் தோட்டங்கள் அதில் வேலைபார்க்கிற தொழிலாளர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெற்ற பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கூடவே வேலை இல்லாது போகப்போகிறது. மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த Bonds company  யும் இங்குள்ள தொழில் சாலையை மூடி விட்டு சீனாவுக்கு இடம் பெயர்ந்து விட்டது. தொலைபேசிக்கொம்பனிகள் தம் வாடிக்கையாளர் பிரச்சினைகளைப் பேசுவதற்கான அனுமதியை இந்திய, பாகிஸ்தானிய, பிலிப்பைன்ஸ் நாடுகளின் முகவர்களிடம் ஒப்படைத்து விட்டன.

கடைகளில் பொருள்களை வாங்குவோர் தொகை வெகுவாகக் குறைந்து விட்டது. கடைகள் பலவும் குறிப்பாக ஆடை அலங்கார கடைகள், தளபாடக்கடைகள்  ஈ விரட்டிக் கொண்டிருக்கின்றன. கவர்ச்சியான சலுகைகளைக் காட்டியும் வாங்குவார் இல்லை. பணப்புளக்கம் போதுமான அளவாக இல்லை. கண் முன்னாலேயே மூடப்படுக்கொண்டு போகிற கடைகளைப் பார்க்கும் போது எதிர்காலப்பயம் மக்களைச் சிக்கனமாக இருக்கவும் சேமிக்கவும் பழக்குகிறது.

சமூக நலத்துறை எதிர்கொள்கிற ஒரு பிரச்சினை வயதானவர்கள் தொகை அதிகரிப்பும் பிறப்பு வீதம் குறைந்து போவதுமாகும். நாட்டின் சிறந்த சுகாதார மருத்துவ வசதிகள் மக்களை நீண்டகாலம் வாழ வைக்கிறது. ஆனால் அவர்கள் வேலைக்குப் போக முடியாத வயதானவர்கள் என்பதால் அரச ஓய்வூதியத்தில் காலம் கழிக்க வேண்டி இருக்கிறது. இதற்கும் அரசு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி இருக்கிற மருத்துவ, பராமரிப்பு வசதிகள் அரசாங்கத்துக்கு மேலதிக செலவாக அமைகிறது. அதனால் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதெல்லை 55 இல் இருந்து 60 ஆகி பின்னர் 65 ஆகி இப்போது 67இ வந்து நிற்கிறது. நாம் எல்லாம் 67 வயது வரை வேலைக்குப் போகவேண்டும். அதற்குப் பிறகு தான் ஓய்வூதியம் பற்றி யோசிக்கலாம்.

அத்தோடு இளம் சந்ததியினர் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை; குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. கடந்த அரசாங்கம் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கென பெரிய பணத்தொகை ஒன்றையும் அறிவித்திருந்தது. அதற்குப் பலன் கிட்டியதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் இளம் சந்ததியினரை அது கவர்ந்திழுத்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் வெகு தெளிவாக இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கும் தாமாக உழைக்கிற பணத்திற்கும், தம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேலைக்கும்  சுற்றுலாக்களுக்கும் அவர்கள் முதலுரிமை கொடுக்கிறார்கள். ஆண் துணையோ பெண் துணையோ வேண்டுமிடத்து ‘Living together" பாணி அவர்களுடய வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக அமைகிறது. அங்கு பொறுப்புகள் இல்லை; சட்டங்களின் அழுத்தங்கள் இல்லை என்பது அங்கு அவர்களுக்கு இருக்கும் மேலதிக அனுகூலம்.

மத்திய நிலப்பகுதியில் வாழ்ந்த விவாசயக் குடிகள் மிகுந்த வரட்சி காரணமாகத் தற்கொலை செய்வது இன்னும் ஒரு சமூக அழுத்தமாக உருமாறி வருகிறது. புகைத்தல், போதைவஸ்து, குடிபோதை போன்றன  இளையோரை நாசம் செய்யும் ஒரு உளவியல் பிரச்சினையாக உருமாறி வருவது ஒரு பக்கமாக நிகழ்கிறது. மென்மையாகவும் கவனமாகவும் கையாளப்பட வேண்டிய நிலைமையில் அது இருக்கிறது. இதற்கிடையே அரசு எதிர் கொள்ளுகிற அகதிகள் பிரச்சினை; அவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டி இருக்கிற பெரு நிதி; ... அதன் காரணமாக  அயல்நாடான இந்தோனேஷியாவோடு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலைமை....  இப்படியாக நாட்டு  நிலைமை.

மீடியாக்களில் இப்போது Hot topic எதுவெனில் குவான்ரஸ் விமானநிறுவனம், போஸ்ட் மற்றும் மெடிபாங்க் பிறைவேற் இவைகள் தான். இரண்டு அவுஸ்திரேலியர் சந்தித்துக் கொண்டால் கதைக்கிற அடுத்த சூடான கதைக்களம் இவைகளையும் விற்று விட்ட பின்னர் அரசிடம் பிறகு கைவசம் இருக்கிற தொலைக்காட்சி நிறுவனங்களும் (abc,sbs) போக்கு வரத்து பணியகமும் தான் (வீதி, தொடரூந்து) அதனுடய அடுத்த இலக்காக இருக்கும் என்பது தான். இப்போது தொழிலாளர்களுக்காகப் பேசி வந்த நிறுவனங்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அது இவர்களுடய குரலை இல்லாது செய்து விடுமானால் சமான்ய தொழிலாளர்களுக்காக / மக்களுக்காகப் பேச யாருமில்லாது போய் விடும் அபாயம்.

அதே நேரம் வேலை இல்லாதோர் தொகை ஏற்கனவே  5 % இல் இருந்து 6 % மாக அதிகரித்துள்ள நிலைமையும் பெற்றோல் விலை உயர்வைத்தொடர்ந்து ஏறி இருக்கிற மின்சார எரிவாயு உயர்வும் அன்றாட உணவுப் பொருள்களுக்கான விலை உயர்வும்......

இயற்கையின் அனர்த்தங்கள்! அது கையைத் தாண்டிப்போன விடயம்! விக்ரோரியா மாநிலத்தில் தீ இன்னமும்! ( எங்கள் அன்பு எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இடம்பெயர்ந்து நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருப்பதாக இன்று தகவல் அனுப்பி இருந்தார்.)

எனக்கென்னவோ இப்போதில் இருந்து இன்னமும் 3 - 5 வருடத்துக்குள்ளாக நாமும் இந்த நாடும் ஒரு பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போகிறோம் போலவே உள்ளூர ஒரு பல்லி சொல்கிறது.

இருந்த போதும் சாமான்யர்களான நாம் என்ன செய்ய முடியும்? வெள்ளப்பெருக்கில் இருந்து அல்லது காட்டுத்தீ அபாயத்தில் இருந்து நம்மை நம் உடமைகளை எப்படிக் காப்பாற்றிக் கொள்லலாம் என்பது பற்றி ..... அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் அல்லது அவர்கள் ஏன் தமிழராய் வாழவேண்டும் என்பது பற்றி அல்லது ஓர் இரவுநேரக்களியாட்டத்துக்கு என்ன மாதிரியான உடைகளை உடுக்கலாம் என்பது பற்றி, குடும்பவாழ்க்கையில் ஏற்படுகின்ற உறவுச்சிக்கல்கள் பற்றி, குடும்பம் என்ற கட்டமைப்பு ஏற்புடயதா இல்லையா என்பது பற்றி எல்லாம் பேசலாம்.

ஆனாலும்  எல்லாவற்றையும் எதிர்கொள்ள நமக்கு மூன்று மந்திரங்கள் மாத்திரம்  கைவசம் இருக்கின்றன.

1. மாற்றம் ஒன்றே மாறாதது.
2.எல்லாம் நன்மைக்கே
3. இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை.

இந்த மந்திரத் துடுப்புகளைக்  கொண்டு இடர்பாடு என்ற கடலை கடப்போமாக!

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா!

Saturday, February 1, 2014

சொல்லும் முறைஅந்த ஆள் ஒரு மாடு

அந்த ஆள் ஒரு பசு.

இரண்டு வசனங்களும் குறிக்கிற விடயம் ஒன்று தான். ஆனால் அதனை சொல்லும் முறையில் எத்தனை பாரிய கருத்து வேறுபாடு இருக்கிறது இல்லையா? - எங்கோ பார்த்தேன்.

சொல்லும் முறையில் ரொம்பக் கவனம் தேவையாய் இருக்கிறது.

உதிரியாய் இன்னொன்று. ஆண்கள் ஒரு காதால் கேட்டு இன்னொரு காதால் வெளிவிட்டு விடுகிறார்களாம். பெண்கள் இரு காதுகளாலும் கேட்டு வாய் வழியாக வெளிவிடுகிறார்களாம்.

சுவாரிசமாக இருக்கிறது இல்லையா?

இந்த வாரத்துக்கு அஷ்ய பாத்திரத்தில் இவ்வளவு தான் சாப்பாடு.:)