Tuesday, January 27, 2009

நம்பிக்கை

எங்கும் சோகம்,அவலம்,பீதி,ஓலம்.......

ஈழத்தின் சோகம் உலக எல்லை வரைப் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களிலும் பாரிய பாரமாய்க் கனக்கிறது.வீதியில் 2 தமிழர்கள் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி "ஊர் புதினம் ஏதாவது தெரியுமோ?",வேலையில் 2 தமிழர்கள் சந்தித்தால் கேட்கின்ற முதல் கேள்வி,"நெற்றில நியூஸ் பாத்தனீங்களோ? என்ன லேற்றஸ்ட்?"தோழிகள் தொலை பேசி எடுத்தால் கேட்கும் முதல் கேள்வி,"ஊரில உங்கட ஆக்கள் சுகமோ?"அக்காள் கதைத்தால் கேட்பது "என்னவாமடி நடக்கப் போகுது?" தங்கை பதட்டத்தோடு உலகின் ஒரு மூலையில் இருந்து தொலைபேசி எடுத்துக் கேட்பாள்,"அக்கா,எங்கட ஆக்கள் எல்லாம் என்ன பாடோ தெரியாது."களைத்துப் போய் வேலையால் வீடு வந்தால் வயதான பெற்றோர்,வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் வராத நம்பிக்கை மிகுந்த சொற்களை விழிகளில் தேக்கி,"பிள்ளை உந்த கொம்பியூட்டரில ஏதாவது கடசியாப் போட்டிருப்பங்கள் ஒருக்காப் பாத்துச் சொல்லுறியே" கெஞ்சும் இந்த விழிகளுக்கு எல்லாம் என்ன நம்பிக்கையை நான் தர?

எங்கும் அவலத்தின் ஓலம்!மரணத்தின் வாடை!ஆதரவு தேடி அலையும் கரங்கள்!உணவும் மாற்றுடையும் மருந்தும் நிற்க நிழலும் இல்லா நிலை! உலகின் புறக்கணிப்புகள்! எட்டாத தூரத்தில் நாங்கள்! என் இனமே!.... என் சனமே!.........

நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறதோ? வ.ஜ.ஜெ.ஜெயபாலன் கவிதை ஒன்று.

நம்பிக்கை


துனை பிரிந்த குயிலொன்றின்
சோகம் போல
மெல்ல மெல்ல
கசிகிறது ஆற்று வெள்ளம்.

காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் விரால் மீன்கள்.

ஒரு கோடை மாலைப் பொழுது அது.
என்னருகே
வெம்மணலில்
ஆலம் பழக் கோதும்
ஜந்தாறு சிறு வித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கிறேன்.

என்றாலும்,
எங்கோ வெகு தொலைவில்
இனிய குரல்எடுத்து
மாரி தன்னைப் பாடுகிறான்
வன்னிச் சிறான் ஒருவன்.

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

என் இனமே.....என் சனமே.....

Wednesday, January 21, 2009

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்..........

குழந்தைகளைப் பற்றி பதிவு போட்டபின் அவர்களது உலகத்தினை விட்டு வருதல் மிகக் கடினமாக இருக்கிறது.அவர்கள் பற்றிய நினைவுகளொன்று மாறி ஒன்று வந்து கொண்டே இருக்கிறன.(நினைவில் நிற்க வேண்டிய பல விடயங்கள் நினைவில் நிற்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய இன்னோரு விடயம்)பெற்றோர் பெரிதுவந்த சில விடயங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அவர்களது உலகம் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கிறது என்பது என்னை இன்னும் ஆச்சரியப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது!

ஒருமுறை பிறந்த நாள் ஒன்று கூடலின் போது அம்மம்மா பேத்தியை மடியில் வைத்திருந்தார்.பேத்தி, அம்மம்மாவின் கழுத்து மாலையை மிகவும் விருப்போடு விளையாடிக்கொண்டிருந்தார்.அம்மம்மா பேத்தியிடம், "நான் இறந்த பின் இந்த முத்து மாலையை நீ எடுத்துக் கொள்" என்றார். உடனே பேத்தி கேட்டாள்,"நீங்கள் எப்ப அம்மம்மா இறப்பீங்கள்"

ஒரு மலேசியத் தாயார், எனது காரியாலயத் தோழி,எப்போதும் அவருக்கு அவரது 2வது மகனை இட்டு கவலை.மூத்த மகன் பாடசாலைக் கல்வியில் மிகவும் கெட்டிக்காரன்.ஆனால் 2 வது மகனுக்கு பாடசாலைக் கல்வியில் சற்றேனும் நாட்டமில்லை.ஆனால் தாயாருக்கு உதவி செய்வதிலும்,நண்பர்களோடும் அண்ணனோடும் பொருட்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விளையாட்டுக்களிலும் மிகுந்த பெருந்தன்மை நடந்து கொள்வானாம்.மகன் கல்வியில் நாட்டமில்லாது இருப்பதை இட்டு கவலை கொண்ட தாயார்,ஒரு நாள் " மகனே நீ வளர்ந்து என்னவாக வரப்போகிறாய்" என்று கேட்டார்.உடனே மகன் தயங்காது பதிலளித்தான். "அம்மா, நான் குப்பை லொறி றைவராக வரப்போகிறேன்" (இங்குள்ள குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறிகள் விசித்திரத் தோற்றம் உள்ளதாக இருக்கும்)

இதனை எழுதும் போது என் வட இந்தியத் தோழி தன் பிள்ளைகளைப் பற்றிக் கூறியதை கூறாமல் இருக்க முடியாது. அவரது 3 வயது மகள் ஒரு முறை விழுந்து விட்டாள். உடனே தாயார் தூக்கி நோ பட்ட இடத்தை வருடிக் கொஞ்சி விட்டு "பிள்ளைக்கு இனி மாறி விடும்" என்று சொன்னவுடன் அவர் அழுகையை நிறுத்திக் கொண்டாராம்.இது நடந்து சில நாட்களின் பின்னர் அவரின் கணவரின் தம்பி மோட்டார் சயிக்கிளால் விழுந்து காயப்பட்டு தம் வீட்டுக்கு வந்தாராம்.மகள் தாயாரின் சட்டையை இழுத்துக் கொண்டு வந்து அவரின் முன் நிறுத்தி விட்டு சொன்னாளாம்." அவரது காயப்பட்ட இடங்களைக் கொஞ்சுங்கள் அம்மா.அவருக்கு மாறிவிடும்"

அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒரு மேல் தளத் தொடர் மாடிக் குடியிருப்பில்
வாழ்ந்து வந்தனராம்.அதன் பலகணி வழியாகப் பார்த்தால் பூந்தோட்டங்களால் நிறைந்த இடு காடு தெரியுமாம்.பலர் வருவதும் போவதும் இடு காட்டில் தினசரி நடக்கும். அக்குழந்தை மனதில் அது பூங்கா என்று தோன்றிற்றோ என்னவோ ஒரு நாள் கேட்டானாம்,"நாங்கள் எப்பம்மா அங்கு போவது?"

இந்தியாவில் அவர்கள் இருந்த போது அவரது அக்காவின் குடும்பத்தினர்- மிகவும் வசதியாக இருந்தார்கள்.தந்தை இரானுவத்தில் பெரிய பதவி வகித்தவர்.விடுமுறை நாள் ஒன்றில் வீட்டுக்கு வந்திருந்தாராம்.இரவு நேரம். தாயார் சமையல் அறையில் சப்பாத்தி தட்டிக் கொண்டிருந்தார். அருகில் உதவி செய்யும் பையன் மா உருண்டைகளைச் செய்து சப்பாத்தி செய்ய உதவிக் கொண்டு இருந்தானாம்.ரீ.வி. பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை அழைத்து "மகனே, நீ என்னவாக வர விரும்புகிறாய்" என்று கேட்டார். அதற்கு மகன்,"நான் சப்பாத்தி உருண்டைகளை அந்தப் பையனைப்போல் செய்து கொண்டிருக்கப் போகிறேன்"என்று பதிலளித்தான்.

இதனை எழுதும் போது,மங்கையர் மலர் என்று நினைக்கிறேன், சஞ்சிகையில் பார்த்த சில விடயங்களும் ஞாபகத்தில் வருகின்றன.மகள், ஒரு நாள் காலை கோலம் போடும் போது வாசல் படியில் வந்தமர்ந்தாளாம். படியில் இருக்காதே, வாசல் படியில் சாமி இருக்கிறது என்று சொல்ல, மகள் சொன்னாள்,"நான் சாமியின் மடியில் தானம்மா உட்கார்ந்திருக்கின்றேன்".எவ்வளவு அழகான பதில் இல்லையா?

Saturday, January 17, 2009

குழந்தைகள் உலகம்

என் நண்பர்கள் என்னைப் பற்றி வைக்கின்ற நேர்மையான விமர்சனம் விடயங்களை நான் தத்துவார்த்த ரீதியாகவே பார்க்கின்றேன் என்பதாகும்.அது மிகவும் உண்மை என்பதை இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த பிறகு முழுமையாக உணர்கிறேன்.

வாரத்திற்கு 2 விடயங்களைப் போடலாம் என்று நினைத்து விடயங்களைப் பட்டியல் இட்டபோது இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.என் நண்பர்கள் என்னை மன்னிக்க!எனக்கு ஆர்வம் மிக்க விடயங்கள் ஜனரஞ்சகமாக இருப்பதில்லை என்பது உண்மை தான்.இன்று நீங்கள் சொன்னபடி இருக்க முயற்சிக்கிறேன்.நீங்கள் என்னோடு மிகுந்த பொறுமையாக இருக்க வேண்டியதும் அவசியம் என்பதால் இந்த அறிமுகம் இங்கு அவசியமாயிற்று.

விடயத்திற்கு வருகிறேன்.குழந்தைகள் உலகம் எப்போதும் வசீகரமானவை.சிட்னிக்கு வந்த ஆரம்ப நாட்களில் என் வேலை early child hood center ல் அமைந்திருந்தது.அங்கு 3-5 வயது வரையான மாணவர்கள் வருவார்கள்.அதில் ஒரு மாணவன், லூக் என்று பெயர்.மிகுந்த குழப்படி என்பது எல்லோரது அபிப்பிராயமாகவும் இருந்தது( சக மாணவர்கள் உட்பட).முழுக்க முழுக்க கத்தோலிக்க அவுஸ்திரேலியர்களால் சூளப் பட்ட அந்த வளாகத்தில் நான் வந்து சேர்ந்த முதல் நாளே எனக்கு லூக் கைப் பற்றிய பிரத்தியோக அறிவுரை வழங்கப் பட்டது.எனக்கு அது முதல் வேலை என்பதால் மிகுந்த சிரத்தையோடு அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டேன்.

எனது அறிமுகம் குழந்தைகளிடத்தில் சுவரிஸத்தைத் தூண்டியிருந்ததை உடனடியாகக் காணமுடிந்தது.நிறம்,கூந்தல்...இன்னபிற இத்யாதிகள்.எனினும் வேலையில் எனக்கு சிரமமிருக்கவில்லை.ஒரு வாரத்தில் என் வேலைகளை கற்றுக் கொண்டுவிட முடிந்தது.

அவர்களின் மதிய உணவின் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் தூங்குவது வழக்கம்.ஒரு சிலமாணவர்கள் தூங்குவதில்லை. அவர்களுக்கான விளையாட்டுகளை ஒழுங்கு செய்து வைக்க வேண்டியதும் மேற்பார்வை செய்ய வேண்டியதும் எனது கடமை.

அன்றும் வழமை போல் மேசையில் வண்ணங்கள் தீட்டுவதற்கான உபகரணங்களை ஒழுங்கு செய்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.லூக் அமைதியாக வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான்.அருகில் சில மாணவர்கள் வண்ணக் கழிகளினாலான உருண்டைகளில் உருவங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்குச் சற்றுப் பின்னால் உருவங்களை இணைக்கும் விளையாட்டுக்களை சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்னால் சென்று மற்றக் குழந்தைகளின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த தருணம் ஒன்றில் மேசையில் இருந்து கூப்பாடு எழுந்தது.முறைப்பாடு என்னவென்றால் லூக் வண்ணக் கழிகளால் செய்த உருவத்தை கலைத்து விட்டான் என்பதாகும். லூக்கைப் பார்த்தேன்.லூக் மிக அமைதியாக வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான். முகத்தில் எந்த சலனமும் இல்லை.என்னால் நம்பமுடியவில்லை.

லூக் எல்லாவற்றுக்கும் அடம் பிடிப்பான்.எல்லோரது கவனத்தியும் தூண்டும் விதமாகவும் சக மாணவர்களின் பொருட்களோடு முரண்டு பிடிப்பவனாகவும் இருப்பான்.அவன் வருகிற 3 நாட்களும் இன்னொரு உதவி ஆசிரியை வேலைக்கு வருவது வழக்கம்.மாணவர்கள் அவனைப் பற்றி முறைப்பாடு செய்வதும் அவன் "குழப்படிக்காரரின் கதிரை"யில் இருந்தபின் முகத்தக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு வருவதும்,அவனது பெற்றோரிடம் முறைப்பாடு சொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கும்.

ஆனால் அன்று அவன் ஒன்றும் செய்யவில்லை என்று என் மனம் நம்பியது. அன்று அவன் அமைதியாகத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.நான் மிகச் சாதாரணமாகத்தான் சொன்னேன்."இல்லை லூக் அதனைச் செய்யவில்லை என்பதை நான் நன்கறிவேன்.நீங்கள் அவனைப் பற்றிப் பொய்யாக முறைப்பாடு செய்ய வேண்டாம்.நீங்கள் மறுபடி உருவங்களைச் செய்ய ஆரம்பியுங்கள்" என்றுவிட்டு அவர்களுக்குரிய வண்ணக் கதிரைகளில் ஒன்றில் அமர்ந்து மற்றொருவர் செய்யும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சிலநிமிடங்கள் கழித்து லூக் என்னிடம் வந்தான்.அவன் இவ்வாறு என்னிடம் கேட்டான்."யசோ, நீ உண்மையாக நான் அதைச் செய்யவில்லை என்று நம்புகிறாயா" என்று கேட்டான்."ஆம் குழந்தாய். நான் உண்மையாகவே நம்புகிறேன்" என்றேன்(உண்மையில் நான் அவ்வாறு தான் நம்பினேன்)."நான் அதைச் செய்யவில்லை யசோ" என்று விட்டு அவன் அழ ஆரம்பித்தான்.நான் அவனை அணைத்துக் கொண்டேன்.

அதன் பின்பான நாட்களில் நம்பினால் நம்புங்கள் லூக் நான் சொன்னபடி எல்லாம் கேட்டான்.வலிகளால் நிரம்பியிருந்த அந்த சிறு இதயம் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்து நான் நிலையத்தை விட்டு வெளியேறிய அன்று கம்பிக் கடவின் பின்னால் தனியாக நின்று என்னைப் பார்த்துக் கொண்டு நின்றதை என் வாழ் நாளில் என்னால் மறக்க முடியாது.இது நடந்தது 12 வருடங்களின் முன்னால்.இன்றும் அந்த குழந்தை முகம் நினைவில் நிழலாடுகிறது.அவர்களுடய படம் இப்போதும் என்னிடம் உள்ளது.படத்தைத் தளத்தோடு இணைக்கும் வல்லமை வந்த பின் அதனைக் கட்டாயம் இங்கு சேர்க்கிறேன்.

இன்று அவன் பதின்ம வயது பிள்ளையாக இருப்பான்.அவன் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்."நண்டுப் பையா நல்லாரு".

கடந்த வாரம் என் நண்பர் தம்பதிகள் ஆங்கில உபதலைப்பில்லாத ஹிந்தித் திரைப்படமான "tAAre ZameeN Par" என்றொரு திரைப்படத்தை தந்து கட்டாயம் பார்க்குமாறு பரிந்துரைத்தார்கள்.

இதனை வாசிக்கும் எவரேனும் சிறு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருந்தால் தயவு செய்து ஒரு முறை அந்தப் படத்தைப் பாருங்கள்.

அது போதும் எனக்கு.

Wednesday, January 14, 2009

தைத்திருநாள் வாழ்த்துக்கள்

வலைத்தள நண்பர்கள் எல்லோருக்கும் என் மனம் கனிந்த தமிழர் திரு நாள் நல்வாழ்த்துக்கள் உரியதாகுக!

சஞ்சலமுற்றிருக்கும் உள்ளங்கள் எல்லாம் மன அமைதி பெறுவதாக!

நோய் உடல் உபாதிகளால் அவதியுறும் மனிதர்களுக்கெல்லாம் நம்பிக்கை பிறப்பதாக!

கூடு கலைந்த தாயகக் குருவிகளுக்கெல்லாம் விமோசனம் கிட்டுவதாக!

அன்பானவர்களை இழந்த மனங்களெல்லாம் அவை இயல்பென்று மீள்க!

மக்கள் மனங்களெல்லாம் மன நிறைவால் மகிழ்வெய்துவதாக!

மனிப்பதையும் மன்னிக்கப்படுவதையும் இயற்கையின் இயல்புகளையும் இன் நன் நாளில் உணர்வோமாக!

மனிதர்களாய் வாழ மனிதம் வாழ்வதாக!

கண்ணுக்குப் புலப் படாத தர்மமொன்று எங்கோ வாழ்கிறதென்று நம்பிகை கொள்க!!

Free Pongal Ecards, Pongal Greeting Cards, Pongal Greetings, Cards, ecards, egreetings

Saturday, January 10, 2009

நம்மை நாம் கண்டு கொள்ள

STARTTS என்றொரு அமைப்புச் சிட்னியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.அது யுத்த மன உளைச்சலினாலும் சித்திரவதைகளுக்காலும் மீண்டு வந்தவர்களுக்கான சேவைகளை இலவசமாக அரச சார்பாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அதன் சேவையின் ஒரு பகுதியாக அது கடந்த ஆண்டு பல்லின கலாசார மக்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் மக்களுக்கான சேவையை அவர்களுக்கான மொழியில் வழங்குவதற்கான பயிற்சியை வ்ழங்கியிருந்தது.அது"பண்பாட்டு அதிர்ச்சியும் அதனை எதிர் கொள்ளும் வழிகளும்" என்ற தலைப்பில் அமைந்திருந்தது.அதில் தமிழர்கள் சார்பாகக் கலந்து கொண்டவர்களில் நானுமொருத்தி.

பயிற்சி நாளின் இறுதியில் தரப்பட்ட தகவல் தரவு ஒன்று எம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.ஒரு தகவல் வழங்குனராக இருப்பதற்கு தன்னைத்தான் அறிந்து கொள்வது அவசியம் என்று அவ்வமைப்பு கருதுகிறது.

உண்மையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமென்றே கருதுகிறேன்.இதோ அவை,இந்தக் கேள்விகளோடு உண்மையோடும் நேர்மையோடும் இருப்பீர்களாக!

1. நீங்கள் யார் என்று விபரிக்கக் கூடிய 3 சொற்களைத் தருக.

2. உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களைப் பற்றி விபரிக்கும் 3 சொற்களைத் தருக.

3. உங்களிடம் இருக்கும் 3 சிறந்த குணாம்சங்கள் எவை?

4. உங்களிடம் இருக்கும் 3 கூடாத குணாம்சங்கள் எவை?

5. உங்களிடம் அல்லது உங்கள் வாழ்வில் மாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் எவை?

6. முக்கியமானவற்றை வரிசைப்படுத்துக.

சிறந்த உடல் ஆரோக்கியம்
பொருளாதார வளம்
கல்வி
சுதந்திரம்
எனது அந்தரங்கமான விடையங்கள்
மகிழ்ச்சி
நண்பர்கள்
பிரஜா உரிமை
என் சமூகம்
விடயங்களில் வெற்றி காணுதல்
புதிசாலித்தனம்
சுத்தம்
திருமணம்
பிள்ளைகள்
சமயம்
அங்கீகாரம்
ஒருவரை வாழ வைத்தல்
வேறு...........

7. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் குறிக்கோள் யாது?

இவற்றுக்கு நீங்கள் உண்மையோடு பதில் அளித்தால் உங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

நன்றி STARTTS

Friday, January 2, 2009

நில்:கவனி:முன்னேறு

தினக்குரல் என்றொரு பத்திரிகை இலங்கையில் ஒரு காலத்தில் மிகப் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டு வந்தது உங்களில் எவருக்கேனும் நினைவிருக்கலாம்.அது சொற்பகாலம் வெளிவந்த ஒரு வாரப்பத்திரிகை.அதில்,நில்;கவனி; முன்னேறு என்றொரு அம்சம் வருவது வழக்கம்.அதில் ஒக்ரோபர் மாதம் முப்பதாம் திகதி 1999ம் ஆண்டு வெளிவந்த ஒரு பகுதி புத்தாண்டு காலத்திற்குப் பொருத்தமானது.அதனை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


ஜந்தாண்டுத்திட்டம்


இன்னும் ஜந்தாண்டுக்குப்பிறகு நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.இது வரை அப்படி ஓர் எண்ணம் இல்லாது போனாலும்,இனிமேலாவது அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.திட்டமிட்டால் அதை நோக்கி வளர்வது சுலபம்.

முதலாவது முதலில்

வேலை நெரிசல் ஏற்படும் போதெல்லாம் குழம்பிப்போய் விடாமல் எந்தவேலையை முதலில் முடிக்க வேண்டும் எதை பிறகு முடிக்க வேண்டும் எனத்தீர்மானித்து ஒவ்வொன்றாய் நிறைவேற்ற வேண்டும்.நீங்கள் செய்யவேண்டிய வேலையை மட்டும் நீங்கள் கவனித்து மற்ற வேலைகளை நம்பகமானவர்களிடம் ஒப்படைத்து செய்விக்க வேண்டும்.

திறமை காட்டுங்கள்

வேலை சிறிதோ பெரிதோ அதில் உங்கள் திறமையைக்காட்டுங்கள்.சிறிய வேலையில் தன் திறமையை வெளிக்காட்டாதவர்கள் பெரிய பொறுப்பில் அதனைக் காட்ட முடியாது."என் தகுதிக்கு இது ஒன்று பொருந்தும்!பொருந்தாது" என்று பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது திறமை இன்மையைக் காட்டும்.

இலக்கை நோக்கி

இலக்கு இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது.உங்கள் வாழ்க்கைப்பயணம் ஓர் இலக்கை நோக்கி முன்னேறுவதாக இருக்கட்டும்.போகிற போக்கில் வெற்றி பெறுவதை விட,நீங்கள் விரும்புகிற இலட்சியப்போக்கில் வெற்றி பெறுவது சிறப்பு.

உங்களை நம்பும் உலகம்

இந்த உலகமே ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது.நம்பிக்கையை விதையுங்கள்; வெற்றி விளையும்.

தகுதியும் நினைப்பும்

ஒருவனுக்கிருக்கும் அறிவு அவனுடைய அறிவைப்பற்றி அவனுக்கிருக்கும் நினைப்பு இரண்டும் வெவ்வேறானவை.ஓரளவு அறிவுள்ளவன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என நினைத்துக்கொண்டால் ஆபத்து.
'இறைவா,எப்போதும் என்னுடைய நினைப்பு என் தகுதியை விடக் குறைந்தே இருக்கட்டும்.ஒரு போதும் தகுதிக்கு மிஞ்சிய நினைப்பு என்னை அணுகாமல் காப்பாற்று'என்று பிரார்த்தியுங்கள்.

தன்கையே தனக்குதவி

அவரவர் வேலைகளை எல்லாம் அவரவரே செய்யப்பழக வேண்டும்.இத்தகைய பழக்கம் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு பிறரை நம்பி வாழும் சார்பு நிலையையும் தவிர்க்கும்.லோன்றி மூடியிருப்பதால் அழுக்குத்துணி அணிபவரும்,உணவு விடுதி மூடியிருப்பதால் பாண், பழம் உண்பவரும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.

எதிர்ப்புகள்

எதிர்ப்பே இல்லாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பது அலை ஓய்ந்த பின் கடலில் குளிப்பதைப் போன்றது.காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறதோ அவ்வளவுக்குக் காற்றாடி உயரப்பறக்கும்.தடை இல்லாத பயணத்தில் சுவை இருக்காது என்பதை உணருங்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது மும்முறை தான் கதவைத் தட்டும்.வரும் போது கொக்கு மாதிரிக் கொத்திக்கொள்ள வேண்டும்.

நன்றி;தினமுரசு.24-30.10.1999.

அறிமுக அமிழ்தம்

புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்கள் அனவரையும் சந்திப்பது மணிமேகலா.
உங்கள் வாழ்வு வளம்பெறுவதாகுக! புத்தாண்டில் என்னசெய்வதாகத் தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்?

நான் புத்தாண்டில் வலைத்தளங்களோடு சற்று நேரம் ஒதுக்கிப் பார்க்கலாம் என்று ஆவல் கொண்டிருக்கிறேன்.வலைத்தளங்களின் பாடசாலைக்கு நான் புது மாணவி.உங்களுடய அறிவுரைகள், ஆலோசனைகளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

கடந்த ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இந்த தமிழ் தட்டச்சோடும், தமிழ் தளங்களோடும் சற்றுப் பரீட்சயம் உண்டாயிற்று.இந்த அக்ஷ்ய பாத்திரம், மணிமேகலா, அமிழ்தம் எல்லாம் ஒரு தற்செயல் தான். ஈழத்தின் வடபகுதியோடும், எனக்குப் பிடித்த பெளத்த அறக்கருத்துக்களோடும் தொடர்பு கொண்டிருக்கும் சொற்கள் என்பது சில வேளை அதற்கு ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம்.

மற்றம்படி என்னைப்பற்றிச் சொல்ல பெரிதாய் ஒன்றும் இல்லை. புலம் பெயர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். "உள்ளக்கமலம்" என்றசொல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இன் நாட்களில் மிக அரிதாகக் காணக்கிடைப்பது.

மீண்டும் சந்திப்போம்.நலம் பெற வாழ்க.