Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Wednesday, January 8, 2025

2025

 2025க்குள் நுழைந்தாயிற்று.

60 களின் ஆரம்பத்திற்குள்ளும்....

அதனால் எனக்கு சில அனுபவங்களும் அவற்றினை எழுதுவதற்கான யோக்கியதைகளும் இருப்பதாக எனக்கு நானே சில தகுதிப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறேன்.

2024 பல உயிரிழப்புகளை; அன்பானவர்களின் பிரிவுகளைத் தந்த ஓராண்டாக அமைந்தது.

பல அனுபவங்களை; வாழ்வின் உண்மைகளை அச்சொட்டாக அனுபவம் செய்த ஆண்டாகவும் அது அமைந்து விட்டது.

அம்மா,

ஈஸ்வரி அன்ரி,

செளந்தரியின் ( என் சினேகிதி) அம்மா

வாமதேவா ஐயா,

கெளரியின் அக்காவின் கணவர்

என இப்படி நீள்கிறது பட்டியல்.

அவ்வப்போது வந்து போகும் உடல் உபாதைகளைத் தள்ளி ஒரு புறமாக வைத்து விட்டு பார்த்தால் மறுவளமாக மனதுக்கு பிடித்த வேலை; விருப்பங்களை; அபிலாஷைகளை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பங்கள், ஒத்துழைக்கவும் பாராட்டவும் அமைந்த அன்பான சக ஆசிரியர்கள், வீதியில் கண்டாலும் புன்னகைத்து வாழ்த்துக் கூறும் பள்ளிக் குழந்தைகள், பாரம் பகிரும் நல்ல தோழமைகள் என வாழ்வில் இனிமைகளும் இல்லாமல் இல்லை.

நேற்றும் இன்றும் கோடைகாலத்தில் அபூர்வமாக மழையும் குளிருமாக இருக்கிறது. இந்த அமைதியான பொழுதும் அமைதியான வீடும் விடுமுறை காலப் பொழுதுகளும் தொலைக்காட்சியில் ஒலிக்கும் பழைய மெல்லிசைப் பாடல்களும் ஒரு விதமான பிரிவுத் துயரைத் தருவதாக இருக்கிறது.

என்றோ ஒரு நாள் நாம் இழந்த எல்லோரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இழப்புகளை நாம் தவிர்க்க முடியாது. அது இவ்வுலக வாழ்வின் நியதி. நாங்கள் எல்லோரும் ஒரு பயணப் பொதியோடும் Expire Date இருக்கிற paasport ஓடும் Holiday spot ஆன இந்த உலகத்துக்குள் பிரவேசித்திருக்கிறோம். இங்கு எங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு சொந்த இல்லம் திரும்புவோம். அதுவே நம் வீடு. நிரந்தர இருப்பிடம். மழை பூமியை நனைத்து மரம்செடி மற்றும் பூமியின் உயிர் வாழிகளை மகிழ்வித்துவிட்டு கடல் நிலைக்கு மீள்கிற மாதிரி!

ஆனால், நமக்கு மீண்டும் வேறொரு இடத்தில் வேறொரு உருவில் வேறொரு ’சுற்றுப் பயணம்’ வாய்க்கலாம். அங்கும் நாம் நேசித்தவர்கள்; நம்மை நேசித்தவர்கள்; வழிப்போக்கர்கள், நண்பர்களைச் சந்திக்கலாம். அவர்கள் ஒரு செல்லப் பிராணியாகவோ அல்லது பூஞ்செடி, பயன் தரு மரம், அயலார், நண்பராகவோ அல்லது வெறொரு பந்த நிமித்தமாக வந்து சேரலாம். அந்த உயிரிகள் - ஆத்மாக்கள் தம்மை தாம் யார் என்று மற்றவர்களோடு அடையாளம் கண்டு கொள்ளாமலே கொடுப்பனவற்றைக் கொடுத்து பெறுவனவற்றை பெறும் வாழ்வாகவும் அது அமையலாம். அப்போது நாம் நம் ‘கொடுக்கல்வாங்கல்களை’ அன்பின் பரிமாற்றங்களைத் திருப்பிக் கொடுத்தும் கொள்ளலாம்.

அதுவரை நினைவுகளோடு வாழ்ந்திருப்போம்.

புதுவருடத்தின் தொடக்கத்தில் அமையும் இந்த முதல் பதிவை ஒரு மகிழ்ச்சி தந்த அனுபவத்தோடு முடிக்கலாம் என்று நம்புகிறேன்.

நேற்றய தினம் ஒரு படத்திற்கு வண்ணம் தீட்டினேன். இந்தப் படப் புத்தகம்   மில்லி. மறோட்டா வினது மரத்தில் வாழும் உயிரிகள் என்ற வண்ணம் தீட்டும் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது.





மனதுக்கு இதம் தரும் எனது மனமருந்து - ’மனதுக்கான மருந்து’ இந்த வண்ணம் தீட்டுதல். அண்மைக்காலமாக ஒரு பூந்தோட்டத்தையும் தயார் செய்து வைத்துள்ளேன். உங்களுக்கு எது மனதுக்கு இதம் தரும் பொழுது போக்கு? 

அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு றீல் பார்த்தேன். ஒரு மூடியுள்ள ஜாரில் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் நிகழும் குறைந்த பட்சம் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தையாவது எழுதி அதில் போட்டு வாருங்கள். வருட இறுதியில் அதனை எடுத்துப் படித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதும்; எவை எவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்ற சுய அடையாளமும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அதனையும் இப்போது ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்களும் அப்படி ஒன்றை ஆரம்பியுங்களேன்!


சிவன் அவர் என் சிந்தையுள் நின்ற அதனால்;

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

அஸ்ஸலாமு அலைக்கும்!

Saturday, June 22, 2024

மனம் சாய்ந்து போனால்......இங்கு வாருங்கள்; இதனைப் பாருங்கள் !!

 



































































நன்றி: இன்ஸ்ரகிறாம்

இதிலிருக்கும் ஏதேனும் சில வரிகள்
உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கிறதா?
விழுந்த மனசை எழுப்பி விட்டதா?
சோர்ந்த மனதுக்கு இதம் சேர்த்ததா?
வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தந்ததா?
வருத்தத்தை தீர்த்து விட்டதா?
காயத்துக்கு ஒத்தடம் தந்ததா?

மொழி, எழுத்து, வாசிப்பு, கல்வி எல்லாம் எதற்காக? இவைகளை ஊன்றுகோலாக்கி எழுந்து கொள்ளத்தானே!

அறிவு! எதற்காக? இவைகளைக் கண்டடயத் தானே!

எதுவாக இருப்பினும் எது தான் நடப்பினும் வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

நாளை ஒன்று புதிதாகப் பிறக்க இருக்கிறது.