Wednesday, November 13, 2013

நினைவிடை தோய்ந்து.....


”உணவு ஒரு மொழி” என்பதனை சற்று முன்னர் BBC யின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடக்கேட்டேன். அது ஒரு பொறியைப்போல மனதில் பெரும் சிந்தனை நெருப்பை தூண்டி விட்டிருந்தது.

ஒரு மொழி பாரம்பரியத்தை பண்பாட்டை, பட்டறிவை,கலையை, ஒரு வாழ்க்கைமுறையை தனக்குள்ளே கொண்டிருப்பது.ஒரு இனத்தின் வரலாறு முழுவதையும் காவி நிற்பது.

உணவு அதனை பரிமாற்றம் செய்கிறது. சமைக்கிற அழகில்; கொடுக்கிற முறையில்; பதார்த்தங்களை சேர்க்கிற வகையில்,மருந்தையும் குணத்தையும் பண்பாட்டையும் அது வெளிப்படுத்தி நிற்கும் போலும்.

புகைப்படங்களுக்கும் இருக்கிறது அப்படி ஒரு தகைமை. ‘காலப் பொறி’ அது.

நேற்றய தினம் நாற்சார வீடொன்றைத்  தேடப்போய் யாரோ ஒரு அன்பருடய புகைப்படப் பக்கத்துக்குள் போய் சேர்ந்தேன். அது கிளப்பி வைத்து விட்டுப் போன ஊர் பற்றிய நினைவுகளை இன்னும் ஒதுக்கி வைக்க முடியவில்லை.

ஊர் போய் பல வருடங்கள் ஆகி விட்டன. அங்கும் இப்போது பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இருந்த போதும் நினைவுகளில் நிற்கும் சில விடயங்கள், மனிதர்கள் எப்போதேனும் மனதில் இருந்து நீங்குவதுண்டா?

மேலுள்ள இந்தப் படத்தை பார்த்த போது எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்தது. அது ஒரு  சிறிய பள்ளிக் கூடம். இவ்வளவு தான் மொத்தமும் அந்தப் பள்ளிக் கூடம். நாங்கள் அந்த வன்னிப்பகுதியின் கிராமப்புறத்துக்கு வந்த போது நான் 4ம் வகுப்பு. என்னை நேரடியாகவே பெரிய பாடசாலையில் சேர்த்து விட்டார்கள். ஆனால் என் தங்கை இந்த மாதிரியான பள்ளிக்கூடத்தில் தான் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றாள். 

காலையில் இவர்கள் பள்ளிக்கு போகும் போது ஊர் மாடுகள் அங்கு முற்றத்தில் படுத்திருக்கும். இவர்கள் போய் மாடுகளைக் கலைத்து விட்டு சாணங்களை அள்ளி முற்றம் மற்றும் வகுப்பறைகளைக் கூட்டி விட்டு படிக்க வேண்டும். இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான் அந்த ஐந்து வகுப்புகளுக்கும்.

இங்கிருந்தும் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றார்கள்.ஆசிரியர்களிடம் அப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்திருந்தது. புளோரா ரீச்சர் மறக்க முடியாதவர். தனக்கென பிள்ளைகள் இல்லாத அவர் இந்தப் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல பார்த்தார்.


மேற்கூறிய இந்த வீட்டைப் பார்த்த போது தென்மராட்சிப்பகுதியும் அந்த மணல் பாங்கான தரையமைப்பும் கூடவே யாழ்ப்பாணம் புலம் பெயர்ந்த 90ன் காலப்பகுதியும் நாம் சரணடைந்த வீடுகளும் அவர்தம் விருந்தோம்பலும் நினைவை நிறைத்தன. ஓர் இரவும் ஒரு பகலும் பீதியுடனும் விழிப்புடனும் மழியில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பயமும் பசியும் நிறைந்த மனிதர்களாய் தென்மராட்சியை அடைந்த போது வீதி தோறும் தம் வாசல் தோறும் வாளி நிறைய தண்ணீரோடும் குளுக்கோஸ் பக்கட்டுகளோடும் தேசிக்காய் கரைசல்களோடும் வீதி தோறும் நின்று பசியாற்றிய தென்மராட்சியின் மனிதம் மனதை நிறைத்தது.


இப்படியான மேற்கூறிய தோற்றத்துடனான கோயிலை அநேகமாக யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் அநேகமாகக் கானலாம். ஒரு விதாமான தெய்வீக அமைதி நிலவும். பிராமண அந்தணர்கள் மிக அக்கறையோடு விக்கிரகத்தை அலங்கரித்து மிக சிரத்தையோடு மந்திரங்கள் கூறி பூசை செய்து வீபூதி பிரசாதம் கொடுப்பார்கள். 

இந்தக் கோயில் எனக்கு திருநெல்வேலிப்பகுதியில் அமைந்திருக்கிற ஒரு முத்துமாரி அம்மன் கோயிலை நினைவுக்கு கொண்டு வந்தது. பல்கலைக் கழக நாட்கள் அவை. மனம் முதிரா பருவம். செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து இக்கோயிலுக்கு உந்துருளியில் போய் ஆலய வழிபாடு செய்து பின் வளாகத்துக்குப் போவது வழக்கமாக இருந்தது.

அழகும் வனப்பும் இளமையும் கொண்ட பிரம்ச்சார்ய பிராமனர் இங்கு பூசை செய்து வந்தார். கண்ணியத்தோடும் நாணயத்தோடும் நிறைந்த தொழில் நேர்த்தியோடும் சிறப்பாக சலிபேதுமில்லாமல் ஒவ்வொருவருக்காகவும் முழுமையாக முழு மந்திரங்களும் சொல்லி கருமமே கண்ணாய் அந்தக் கோயிலை பரிபாலித்து வந்தார்.

அங்கு நடைபெரும் திருவிழாவில் தண்டிகை அலங்காரம் கண்கொளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு சமமாக வீதியில் அடுத்த பக்கம் இன்னுமொரு கோயிலும் இருந்தது. அங்கிருந்த இளம் பிராமனர் இன்னும் அழகாய் இருந்தார். :)

இவர்கள் இந்தக் கோயில் எல்லாம் இப்போது எப்படி இருக்கும்? இந்த மனிதர்கள் எல்லாம் என்ன ஆகி இருப்பார்கள்? 
இப்படியான வீதி தோறும் எத்தனை தடவை போய் வந்திருப்போம்?


வேலிகளும் வேலிப்பொட்டுகளும் சொல்லும் மனிதர்கள் மனிதர்களோடும் அயலாரோடும் சேர்ந்து வாழ்ந்த வாழ்வொன்றின் வசந்தத்தை! 

இன்னும் அங்கு அந்த வாழ்க்கை இருக்குமோ?இந்த அன்னதான மடம் என் சிறு பிள்ளை நினைவு ஒன்றை மீட்டி வர போதுமாய் இருந்தது. அது என் சிறு பிராயம். மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் இருந்தது இதைப்போல ஒரு மடம். அப்போதெல்லாம் என் அம்மாவின் தங்கை குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான லொறியில் குடும்பமாக அங்கு போன ஒரு தருணத்தில் நாமும் போனோம். லொறியின் பின் புறம் கதிரைகள், பாய்கள் எல்லாம் விரித்து தேவையான பொருட்களும் எல்லாம் ஏற்றி இரண்டு குடும்பங்கள் வவுனியாவில் இருந்து பயணமானோம். அங்கு பாலாவித் தீர்த்தத்தில் குளித்து கோயில் எல்லாம் கும்பிட்டு விட்டு இப்படி ஒரு மடத்தில் சாப்பிட்டோம். சோறும் சாம்பாரும் தான். பந்திப்பாய் விரித்து சாப்பாடு தந்தார்கள்.அத்ந்தச் சாப்பாட்டின் ருசியை இது வரை எந்தச் சாப்பாடும் மிஞ்சவில்லை. அதற்கு அப்படி ஒரு சுவை.


வீடு தோறும், கோயில் தோறும் இருக்கும் இதைப்போல கிணறுகள்.


கிராமங்கள் தோறும் வாசிக சாலைகளும் அதே மாதிரித் தான். அங்கு பத்திரிகைகள் தென்னிந்திய இலங்கைச் சஞ்சிகைகள் எல்லாம் வரும். இளைஞர்கள் கூடிக் கதைக்கும் இடமாகவும் அது இருந்தது.சில சனசமூக நிலையங்களில் ஆரம்பப் பாடசாலை வகுப்புகளும் நடந்த நினைவு.


நான் படித்த பாடசாலையின் கிணற்றை இது நினைவுக்கு கொண்டு வந்தது. எத்தனை பிள்ளைகள் விழுந்து எழும்பினார்கள். எத்தனை ஆசிரியர்கள் உடனே குதித்து காப்பாற்றினார்கள். சரஸ்வதிப் பூசை நாட்களின் கடசி நாள் கும்பத்தண்னீரை இக்கிணற்ருக்குள் ஊற்ற போகும் போது சோ என பெரு மழை பெய்யும். அந்தணருக்கு பெரிய ஒரு குடை ஒன்றைப் பிடிக்க அவர் கும்பத்தைக் காவிச் செல்வார். நாம் அரைச்சுவர் கட்டிய சுவரோரம் நின்று மழையையும் இக்காட்சியையும் காண்போம். தெய்வீகம் பொலிந்த ஒரு வாசமும் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்திருக்கும். எல்லோரும் பொட்டும் பூவும் சுண்டலுமாய் சந்தோஷமாய் இருப்போம். அன்றய அந்த கடசி நாள் நிகழ்ச்சி முதல் மூன்று பாட வகுப்புகள் வரை நடக்கும். அடுத்த நாள் கலை விழா கோலாகலமாய் நடந்தேறும். சில பள்ளிக் காதல்களும்!


யாழ்ப்பானத்து பாரம்பரிய வீடொன்றை இது நினைவுறுத்திச் சென்றது. எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் மண்டபத்திலும் இப்படியான ஒரு முன்புறம் இருக்கிறது.அங்கு படித்த போது தங்கேஸ்வரி என்றொரு தோழி என்னோடு படித்தாள். அவளின் வீடு கே.கே.எஸ். வீதியில் இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு அருகில் அமைந்திருந்தது. அந்த வீட்டுக்கு கமலாலயம் என்று பெயரும் இருந்தது. அவ்வீட்டுக்கு அவளின் அழைப்பின் பேரில் போயிருக்கிறேன். அவளுடய வீடும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தது. அவளுடய சிறிய தாயாரும் அவர் செய்து தந்த பொன்னாங்காணி சுண்டலும் தங்கேஸ்வரியின் பொன் நிறமும் ஆரோக்கியமும் சுருட்டையும் நீட்டமுமாக அமைந்திருந்த அவளுடய நீண்ட கூந்தலும் கூடவே நினைவுக்கு வருகின்றன. அவள் திருமணமாகி ஸ்வீடன் நாட்டுக்குப் போனதாய் அறிந்தேன். 

இப்ப எப்படி இருக்கக் கூடும் அவள்? சின்னம்மா சுகமாய் இருப்பாவா?மாடுகளுக்கும் தொட்டிகள். நடுவில் உள்ள தொட்டியில் புல்லும் வைக்கோலும் கிளித்து ஈர்க்கில் எடுத்த பனையோலைகளும் போடப்பட்டிருக்கும்.மாடுகளை ஒரு செல்வமாய் - வீட்டின் அங்கத்தவரைப் போல பரிபாலித்தார்கள்.இங்கு வசதிகள், வாய்ப்புகள்! எல்லாம் பளீச் என்று இருக்கும்.குறை என்று சொல்ல ஏதும் இல்லை.

தேடிப்பார்த்தால் இன்னதென்று சொல்ல முடியாத ஒன்று இடறிக் கொண்டு நிற்கும்.

ஒரு விதமான ஏக்கம்! அந்த ஏக்கம் ஊரின்  புழுதி மண்ணில் கலந்து கிடக்கிறது!

கடந்த காலத்துக்குள் மீண்டும் போக முடியுமா?

படங்கள்: நன்றி இணையம். 

(பெரும்பாலான படங்களை எடுத்த பக்கத்துக்கு மீண்டும் போக முடியவில்லை.அந்த அன்பருக்கும் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட அந்தப் புகைப்படங்களுக்கும் என் விசேட நன்றி)
Saturday, November 2, 2013

காருண்யம்கடந்த வாரத்தில் ஓரு நாள்.

ABC 24 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி. அது 24 மணி நேரமும் செய்திகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசை.அன்றய நாளின் நாட்டு நிலவரங்களை எந்த நேரம் போட்டாலும் அறிந்து கொள்ளலாம் என்பதால் என் வசதிக்கு அது ஒரு வாய்ப்பான அலைவரிசை.

அன்றய அவுஸ்திரேலியரின் பரபரப்பான செய்தி ஜோர்டான் நாட்டுக்கு இங்கிருந்து உணவுக்காக ஏற்றுமதியாகும் செம்மறியாடுகள் குரூரமான வகையில் கொலை செய்யப்படுகின்றன என்பது தான். அதனை உயிரோட்டமாக ஆதாரத்தோடு போட்டுக்காட்டி நம் மனங்களை ஒரு தடவை ஸ்தம்பிக்கச் செய்து விட்டது அன்றய செய்தி.

அவற்றை நடத்தியவிதம் பார்த்து மனித குலத்தின் மீது கொலைவெறி எனக்கு!

அது ஏனோ தெரியவில்லை இப்படியான இடம் வருகின்ற பொழுதில் எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வருகிறது. போன பிறப்பில் ஏதேனும் ஒரு வீட்டுப் பிராணியாய் இருந்து எதிர்பாரா சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டு விட்டேனோ என்னமோ.ஆத்மாவில் படிந்து போயிருக்கிற ரணகளம் அது!

மேற்கூறிய அந்த நிகழ்வைப்பார்த்த போது தொழில்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தோனேஷியாவுக்கு இதே காரணத்துக்காக ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடுகளுக்கு இவ்விதமான குரூரங்கள் நடந்ததைக் காட்டிய போதும் அதைப்பார்த்த துர் அதிஷ்டசாலி நான். பின்னர் அந் நாட்டுக்கு இக்காரணம் ஒன்றால் உயிருள்ள ஆடுகளின் ஏற்றுமதியை அவ் அரசு தடை செய்திருந்தது. நாட்டுக்கு நட்டம் என்ற பொழுதிலும். அப்போது ரொம்பவும் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அவுஸ்திரேலியர்களுக்கும்.

இந்தோனேஷியாவோடு நம் நாட்டுக்கு இதனால் பல நட்டங்கள். அயல் நாடு என்பது இன்னொரு பெருங்காரணம். இந் நாட்டுக்கு வருகிற அகதிகள் அங்கு தரித்தே வருகிறார்கள் என்பதால் அந் நாட்டோடு நல்லுறவை வைத்துக் கொள்ளுதல் இந் நாட்டுக்கு மிக முக்கியம்.

அப்படி இருந்த போதிலும் மிகக் கடுமையாக ஆடுகளின் ஏற்றுமதியை கெவின் ரட் / ஜூலியா.கில்லாட் தொழில் கட்சி நிர்வாகம் முற்று முழுதாகத் தடை செய்திருந்தது. (இப்போது வலதுசாரிக்கட்சி வந்ததும் அதை நீக்கிவிட்டது வேறு விடயம்.)

இந்த இந்தோனேஷியாவைப் பற்றி சொல்லும் போது இன்னொரு விடயம் ஞாபகம் வருகிறது. அங்த நாட்டில் யானைகள் அதிகம். தந்தங்களுக்கு அதிக கிராக்கி. அதனால் ஆண் யானைகளை தந்தத்துக்காகக் கொல்வதும் அங்கு அதிகம். அதனால் குடும்பங்களாக வாழும் யானை இனம் கூட்டமாக வருகின்ற போது மனிதர்களைக் கண்டால் ஆண் யானை மாத்திரம் மரங்களின் பின்னால் ஒழிந்து கொள்ளுமாம். அவைகளுக்கு தந்தத்தினால் தான் மனிதர்கள் தம்மைக் கொல்கிறார்கள் என்பது தெரிந்திருப்பதாக BBC தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திருந்தேன் எப்போதோ.

அது இருக்கட்டும்.

மேற்கூறிய நிகழ்ச்சி நடந்து அடுத்த நாள் அலைவரிசை 7 இல் காலை ஒளிபரப்பில் போட்டி போட்டுக் கொண்டு மிருகங்கள் மற்றய இனங்களோடு கொண்டுள்ள உறவுகள் பற்றிய ஒளிப்படங்களைப் போட்டுக் காட்டினார்கள். ஒரு பசு மாடு சிலமாதங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு வாஞ்சையோடு பால் கொடுப்பதையும் ஆதுரத்தோடு நக்கி விடுவதையும் அழகுற ஒன்று சொல்லிற்று. வோறொன்றின் கோடிப்புறத்தில் வாழும் பன்றியும் நாயும் இணைபிரியாத் தோழர்களாக இருப்பதை காட்டிற்று.  புலி ஒன்று ஒரு சிறு குரங்குக் குட்டியை கண்ணும் கருத்துமாய் போற்றி வளர்ப்பதை வேறொன்று சொல்லிற்று.

இவ்வாறு கடந்த வாரம் ஒன்று ஓடி முடிந்திருக்க இன்றய சனிக்கிழமை தீபாவளி.

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.(அதச் சொல்ல மறந்து போச்சு பாருங்க. இன்றய தீபவளி நாள் பிஜி இந்தியர்களுக்கு புது வருடமும் கூட.)

இன்றய நாள் தமிழ் பாடசாலையில் தமிழ் வகுப்பு. என் இந்தியத்தோழி தன் மகள்மார் படித்த தமிழ் புத்தகங்கள் சிலவற்றை எனக்கு பரிசளித்திருந்தாள். அதில் ஒரு பாடம். டயறிக் குறிப்பொன்று. ஒரு சிறுமி ஒரு சம்பவத்தை விபரிக்கிறாள். அது ஒரு கதையைப் போனறு உருவாக வாய்ப்புகளும் இருக்கிற மாதிரியான டயறிக் குறிப்பு.

அந்தக் குறிப்பு இது தான். அவள் பாடசாலை முடித்து வீடு திரும்புகிறாள். சில சிறுவர்கள் ஒர் ஓணானை அடிக்கிறார்கள். ஏன் அடிக்கிறீர்கள் என்று இவள் கேட்கிறாள். அவர்கள் அது தம்மைப் பார்த்து முறைப்பதாகச் சொல்லி, இவளைப் புறக்கணித்து விட்டு, அதனை அடித்துக் கொல்கிறார்கள். அவளுக்கு இந்தக் காட்சியை மறக்க முடியவில்லை. ஏன் அதனைக் கொன்றார்கள் என்பதற்கு இவளால் பதிலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் காட்சி அவள் மனதில் ஆழமான சம்பவமாக பதிகிறது. அவளால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியாது என்று முடிகிறது அந்த டயறிக் குறிப்பு. மேலும்  கதை. இன்றய ஒரு பக்கக் கதை மாதிரி.

இதனை வாசித்து அதில் இருக்கிற சில இடங்களை விரித்தும் விபரித்தும் கூறி விட்டு, உங்களுக்கு இப்படியாக ஏதேனும் மறக்க முடியாத படி சம்பவங்கள் ஏதும் நடந்ததா  நடந்திருந்தால் அது பற்றி நாம் உரையாடுவோம்  என்று உரையாடினோம். சும்மா என்றால் தமிழே வாயில் வராது. இப்படி ஒன்றைச் சொன்னால் எப்படியோ தமிழில் அதை அவர்கள் விபரிக்கும் போது அவர்கள் வாயில் இருந்து தடக்கி தடக்கி வரும் வார்த்தைகள் அத்தனை அழகாய் இருக்கும்.

ஒருத்தி தான் வளர்க்கும் கோழிகள் மற்றும் சேவல் பற்றிச் சொன்னாள். மற்றொருத்தி தானும் நாய்குட்டியும் சந்தித்த முதல் நாளை விபரித்தாள். மிகுதிப்பேர் என்ன சொன்னார்கள் என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் நேரமே கிடைக்கவில்லையே! அத்தனை ஆர்வமாய் சொல்ல அத்தனை விடயங்கள் அவர்களிடம் இருந்தது. மிகுதி அடுத்த வாரம் தொடரும் என சொல்லி விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னமாய் அவர்களிடம் காருண்யம் கனிந்திருக்கிறது தெரியுமா?

நாட்டின் சாராம்சம் அவர்களிலும்!!

பெருமையாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது.

கூடவே கவலையாயும் இருக்கிறது. குரூரம் நிரம்பிய இந்த உலகில் இந்தப் பிள்ளைகள் எப்படிப் பிழைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற பயம் தான் அது.

எப்படி பிள்ளைகளை வழி நடத்துவது? தர்மம் என்று சொன்ன வழியூடாகவா?
இன்று வாழும் சமூகத்துக்கு ஈடாக எப்படி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்ப்து பற்றியா?


தார்மீகப் பயம் ஒன்று தொற்றிக் கொண்டிருக்கிறது. தடுமாற்றமாகவும் இருக்கிறது. தாய்மார்கள், தந்தைமார்கள், பெரியவர்கள், அறிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

முன்னர் ஒரு காலம். அப்போது என் கிராமத்து பாடசாலையில் உயர்தர வகுப்பு பரீட்சை எடுத்து விட்டு வீட்டில் இருந்த காலம். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாடசாலையில் தமிழும் சமயமும் சமூகக்கல்வியும் 4ம் வகுப்புக்கும் 8ம் வகுப்புக்கும் படிப்பித்துக் கொண்டிருந்தேன். அதில் கொல்லாமை பற்றிய ஒரு பாடம்.அது சமய பாடத்தில் தானாக இருக்க வேண்டும். அந்தப் பாடத்தால் ஈர்க்கப்பட்ட மாணவி ஒருத்தி வீட்டில் தான் இனி மச்சமாமிசம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்ததால் அவ்வீட்டுக்காரர் எனக்கு கடிதம் ஒன்று கொடுத்தனுப்பி இருந்தார்கள். பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்களைப் போதிக்கும் போது கவனமாக இருக்கும் படி.

அந்தப் பயம் மறு படி இப்போதும். நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன்.

தயவு கூர்ந்து நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்.